தென் அமெரிக்கா
Bush pledges more funds for Colombia's dirty war
கொலம்பியாவின் கறைபடிந்த போருக்கு அதிக நிதி தருவதாக புஷ் உறுதிமொழி
By Bill Van Auken
24 November 2004
Back to screen version
ஜனாதிபதி ஜோர்ஜ் டபூள்யூ. புஷ் திங்களன்று கொலம்பியாவில் கடற்கரை நகரமான
காட்டகெனாவில் (Cartagena)
சிறிது நேரம் தங்கியிருந்த நேரத்தைப் பயன்படுத்தி கடந்த 40 ஆண்டுகளாக
கொலம்பியாவில் நடைபெற்று வருகிற உள்நாட்டுப்போரில் மேலும் பில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்க இராணுவ
உதவியாக தருவதற்கான தமது நோக்கத்தை தெரிவித்தார்.
அவரது லத்தீன் அமெரிக்க சுற்றுப்பயணம் முழுவதிலும் அமெரிக்க ஜனாதிபதிக்கு தரப்பட்ட
அசாதாரணமான பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பன அவர் அறிவித்த எதையும் மங்கச் செய்கிற அளவிற்கு அமைந்திருந்தன.
நகரம் முழுவதிலும் ஒரு முற்றுகையிடப்பட்டது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 15,000 இராணுவத்தினர்கள்
பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். அந்த நகரத்திற்கருகிலுள்ள பகுதிகளில் அனைத்து விமான மற்றும் கப்பல் பயணங்களும்
ரத்துச்செய்யப்பட்டன. மற்றும் தெருக்களில் ஆயுதந்தாங்கிய துருப்புக்கள் அணி வகுத்து நின்றனர்.
விமான நிலையத்திலிருந்து ஒரு இராணுவ பயிற்சி நிலையத்திற்கு ஒரு குண்டு துளைக்காத கவச
வண்டியில் புஷ் பயணம் செய்தார். அந்த வண்டி அவரது மூன்றரை மணிநேர விஜயத்திற்காக வாஷிங்டனிலிருந்து சரக்கு விமானத்தில்
கொண்டுவரப்பட்டதாகும். அவர் மக்களோடு எந்தவிதமான தொடர்பும் கொள்ளாது தனிமைப்படுத்தப்பட்டார். அவர்,
கொலம்பியாவின் கடற்படை பயிற்சி நிலையத்தில் ஒரு சிறிய உரை ஆற்றியதுடன், கொலம்பியா ஜனாதிபதி அல்வரோ உரைப்புடனான
(Alvaro Uribe)
சந்திப்பிற்குபின்பு, நிருபர்களின் மூன்று கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்தார்.
''எனது நாட்டில் கொலம்பியாவிற்கு உதவும் திட்டத்திற்கு இரு கட்சிகளும் பரவலான ஆதரவு
தருகின்றன. மற்றும் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தனது ஆதரவை புதுபித்துக் கொள்ளவேண்டுமென்று நான் கேட்பேன்.
அதன் மூலம் இந்த துணிவுமிக்க நாடு 'போதைப்பொருள் பயங்கரவாதிகளுக்கு' எதிரான போரில் வெற்றிபெற முடியும்''
என்று புஷ் தனது தயாரிக்கப்பட்ட உரையிலிருந்து குறிப்பிட்டார்.
2000 ம் ஆண்டு கிளிண்டன் நிர்வாகத்தின் கீழ் தொடக்கி வைக்கப்பட்ட ''கொலம்பியா
திட்டத்தின்படி'' வாஷிங்டன் கொலம்பிய அரசிற்கு இதுவரை மூன்று பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஹெலிக்காப்டர்கள்,
ஆயுதங்கள் மற்றும் இராணுவ பயற்சியை வழங்கியிருக்கிறது. இஸ்ரேல் மற்றும் எகிப்திற்கு அடுத்தப்படியாக அமெரிக்காவின்
மிகப்பெருமளவிலான இராணுவ உதவியைப் பெறுகின்ற மூன்றாவது நாடு கொலம்பியாவாகும். 2005 டிசம்பரில் இந்த
நிதியளிப்பு காலாவதியாகிறது.
கொலம்பியாவிலிருந்து அமெரிக்காவிற்கு கொக்கைன் என்கிற போதைப்பொருள் ஏற்றுமதி
செய்வதை தடுத்து நிறுத்துகின்ற ஒரு கூட்டு முயற்சியின் ஓர் அங்கமாக, அந்த பயிர் விளைவிப்பதை ஒழித்துக்கட்டுகின்ற
ஓரே நோக்கத்திற்காக இராணுவத் தளவாடங்கள் வழங்கப்படுகின்றன என்ற பாசாங்கை தொடக்கத்தில் கிளிண்டன்
நிர்வாகம் நிலைநாட்டி வந்தது. என்றாலும், 2001 செப்டம்பர் 11 ல் அமெரிக்கா மீது தாக்குதல்கள் நடந்ததைத்
தொடர்ந்து, புஷ் நிர்வாகம் கொலம்பியாவின் உள்நாட்டுப்போரை அதன் ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' என்ற
பூகோளப் போரில் இணைத்துக் கொண்டது. போதைப்பொருள் நடமாட்டத்தின் மீது தாக்குதல்களை நடத்துவதற்கும்
கொலம்பியா நாட்டின் கிராமப்புற அடிப்படையிலான கொரில்லாக்களை ஒடுக்குவதற்கும் எந்தவிதமான வேறுபாடும்
இல்லாமல் புஷ் நிர்வாகமும், கொலம்பியா அரசாங்கமும் ''போதைப்பொருள் பயங்கரவாதிகள்'' என்று அவர்களைக்
குறிப்பிடுகிறது.
கொலம்பியா திட்டத்தின் மூலம் ''கணிசமான பயன்களை'' புரிந்ததற்காக அல்வரோ
உரைப்பை புஷ் பாராட்டினார். ''பயிரிடும் ஏக்கரின் பரப்பு கணிசமாக குறைந்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர்கள்
எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சென்ற ஆண்டு ஜூலை முதல்
FARC இயக்கத்தினரும், போதைப்பொருள் பயங்கரவாத அமைப்பின்
டசின் கணக்கான தலைவர்களும், அவர்களுக்கு நிதியளிப்போரும் கொல்லப்பட்டிருக்கின்றனர் அல்லது
கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்'' என்று புஷ் குறிப்பிட்டார்.
இதில் உண்மை என்னவென்றால், அமெரிக்காவிற்குள் வரும் கொக்காய்ன் போதைப்பொருளில்
90 சதவீதமானவை கொலம்பியாவில் உள்ளது, மற்றும் இந்த போதைப்பொருள் நான்காண்டுகளுக்கு முன்னர்
கிடைத்ததைவிட தற்போது அமெரிக்காவில் குறைவாக கிடைக்கிறது என்பதற்கான அறிகுறி எதுவுமில்லை. இந்தப்பயிர்களை
ஒழித்துக்கட்டுவதற்கு விமானம் மூலம் மருந்து தெளிப்பதால் கொலம்பியாவின் தொலை தூரங்களில் பரவலாகவும், மற்றும்
பக்கத்து நாடுகளிலும் கொக்கைய்ன் பரவலாக பயிரிடுகின்ற நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. அங்கெல்லாம் இருந்து
போதைப் பொருட்களைத் தயாரிப்பதற்காக அந்த இலைகள் கொலம்பியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கொலம்பியாவின் புத்துமயோ (Putumayo)
மாகாணத்தின் வழியாக வருகின்ற ஒரு எண்ணெய்க் குழாயை பாதுகாக்கின்ற நோக்கோடு கொரில்லாத் தாக்குதல்களை
முறியடிப்பதற்காக கொலம்பியாவிற்கு திட்டவட்டமான இராணுவ உதவிகளை தருகின்ற திட்டத்தை புஷ் நிர்வாகம்
அதிகரித்திருக்கிறது. இதற்காக ஒரு கொலம்பியா சிறப்பு இராணுவப் படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. அமெரிக்க
சிறப்புப் படைகளின் ஆலோசகர்கள் அதன் நடவடிக்கைகளை இயக்குகின்றனர். இதற்கிடையில், ''சுதந்திர சந்தை''
சீர்திருத்தங்களையும் வாஷிங்டன் முடுக்கிவிட்டிருக்கிறது. அவற்றால் அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்படும் எரிவாயு
பெருநிறுவனங்கள் ஏறத்தாழ கட்டுபாடு எதுவுமில்லாமல் கொலம்பியாவின் எண்ணெய் வயல்களை சுரண்டிக்கொள்வதற்கு
வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
அக்டோபர் 10 ல், அமெரிக்க நாடாளுமன்றம் 2005 பாதுகாப்பு அங்கீகார சட்டத்தை
இயற்றியது. அதில் கொலம்பியாவில் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும் அமெரிக்க இராணுவ படைப்பிரிவின் அளவு 400
லிருந்து, 800 ஆக இரண்டு மடங்கு அளவிற்கு உயர்த்தப்படுவதற்கு ஒரு விதி சேர்க்கப்பட்டது. அத்துடன் அமெரிக்கா
வழங்குகின்ற இராணுவ ஒப்பந்தக்காரர்கள் மற்றும் அதன் கூலிப்படையினரின் எண்ணிக்கை 400 லிருந்து 600 ஆக
உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் படைகளுக்கு உறுதுணையாக சுழற்சி முறையில் பயிற்சிக்காகவும், ''போர்க்களப்
பயிற்சிக்காகவும்'' கொலம்பிய இராணுவ யூனிட்டுக்களும் செயல்படுகின்றன.
கொலம்பியா பத்திரிகையாளருடன் மிகக்குறைந்த நேரம் புஷ் நடத்திய சந்திப்பில், ஒரு
நிருபர் அவரிடம் கொலம்பியாவின் AUC
(கொலம்பியாவின் ஐக்கிய தற்காப்புப் படைகள்) வுடன் இணைந்த அவற்றின் கீழ் செயல்பட்டு வருகின்ற வலதுசாரி
இராணுவப் படைகளோடு அல்வரோ உரைப் அரசாங்கம் நடத்தி வருகின்ற பேச்சுவார்த்தைகளை ஆதரிக்கிறீர்களா? என்று
கேட்டார்.
கொலம்பியாவின் இராணுவத்திற்கும்
AUC க்கும் நீண்டகால நெருக்கமான ஒத்துழைப்பு நிலவி வருகிறது.
வாஷிங்டனிலிருந்து கிடைக்கின்ற கூடுதல் இராணுவ உதவி AUC
பெறுகின்ற அளவு குறைவானதல்ல. சிவிலியன்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள், விவசாய அமைப்பாளர்கள் மற்றும்
அரசாங்கத்திற்கும், கொலம்பியா ஆளும் செல்வந்த தட்டினருக்கும் எதிரிகள் என்று கருதப்படுபவர்கள் ஆகியோர்
படுகொலை செய்யப்படுவதில் இந்த வலதுசாரி இணை இராணுவக் குழுக்கள் பெரும்பங்கு வகிப்பதாக குற்றச்சாட்டுக்கள்
கூறப்பட்டு வருகின்றன.
அல்வரோ உரைப் அரசாங்கம்
AUC தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவர்களில்
பலர் அமெரிக்க நீதிமன்றங்களில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கானவர்கள். அவர்கள் புரிந்த
குற்றங்களுக்கு பொதுமன்னிப்பு தருகின்ற அளவிற்கு ஏற்பாடு செய்து கொண்டு அதற்கு கைமாறாக, அந்த அமைப்பு தனது
இராணுவப் படைகளை அணிதிரட்டுவதை கைவிட்டுவிட வேண்டும் என்று அல்வரோ உரைப் அரசாங்கம் முயன்று வருகிறது. பல
போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் தலைவர்கள் AUC
ன் ஒர் அங்கம் என்று கூறிக்கொண்டு பேச்சுவார்த்தைகளில் கலந்து
கொண்டிருப்பது தண்டனைகளை கடுமையாக குறைத்துக் கொள்வதற்கும் பேரம் பேசவும்தான் என்று விமர்சகர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர். சில மதிப்பீடுகளின்படி, AUC
ம் மற்றும் அதன் பாதுகாப்பிலுள்ள போதைப்பொருள் கடத்துவோரும் கொலம்பியாவிலிருந்து 40 சதவீத கொக்கைய்னை
ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.
2003 ல் அரசாங்கம் AUC
யுடன் சமரச உடன்பாட்டிற்கு வர முயன்றது. இந்தத் தீவிர வலதுசாரிக் குழு 16 கொடூரப் படுகொலைகள், 362
சதிக் கொலைகள் மற்றும் 180 ஆட்கடத்தலை நடத்தியிருக்கிறது.
புஷ், AUC
வுடன் அல்வரோ உரைப் அரசாங்கம் நடத்திவரும் பேச்சு பற்றிய கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்தார். ஆனால்,
அந்தக் கேள்விக்கு பதிலளிக்கும்போது கொலம்பியா அரசாங்கத்தின் ''பயனுள்ள மூலோபாயத்தையும்,
FARC இயக்கத்தை எதிர்த்துப்
போரிடும் அதன் விருப்பத்தையும்'' புகழ்ந்துரைத்தார். இந்தப் பதில் அமெரிக்க அரசாங்கம் போர்க் குற்றங்கள்
தொடர்பாகவும், கொலம்பியா வலதுசாரிகளின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகவும் எந்த அளவிற்கு அலட்சியப்போக்கில்
நடந்துகொள்கிறது என்பதை துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது. வாஷிங்டன் அதிகாரப்பூர்வமாக
AUC ஐ ஒரு பயங்கரவாத
அமைப்பு என்று அறிவித்திருந்தாலும்----- அரசாங்கத்திற்கெதிரான கொரில்லாக்கள் மீதான தாக்குதலை அது இரட்டிப்பாக்க
வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
2002 ல் அல்வரோ உரைப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவருடன் காட்டகெனாவில்
புஷ் ஐந்தாவது முறையாக சந்தித்தார். ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமித்ததை ஆதரித்த ஒரு பெரிய லத்தீன் அமெரிக்க
நாட்டின் தலைவர் கொலம்பியா ஜனாதிபதியாவர். அவர், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையோடு மிக நெருக்கமாக
இணைந்து செயல்படுவதை, கொலம்பிய மக்கள் அவரை சிறிய புஷ் (Bushito)
என்றே அழைக்கின்றனர்.
கடந்த ஏப்ரலில் இருவரும் வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசியபின்பு, ஒரு இருதரப்பு
சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் ஒரு உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக அவர்கள் அறிவித்தனர். அந்த முன்மொழிவு ஒப்பந்தம்
பற்றி திங்களன்று தனது உரையில் திரும்பத்திரும்ப குறிப்பிட்ட அல்வரோ உரைப் ''சட்டபூர்வமான விவசாயப்
பொருளாதாரம் கொலம்பியாவிற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. எங்களது விவசாயிகளுக்கு உண்மையான மாற்றீட்டைக்
கொடுத்து, கொலம்பியாவின் பொருளாதார செழிப்பிற்கு அந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்'' என்று வலியுறுத்திக் கூறினார்.
என்றாலும், புஷ் அந்த நிலுவையிலுள்ள பேரம் குறித்து எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டார்.
அந்த ஒப்பந்தத்தை வலுவாக அங்கீகரிப்பதில் புஷ் தவறிவிட்டது தொடர்பாக அல்வரோ
உரைப் ஆட்சி ஏமாற்றம் அடைந்திருப்பதை கொலம்பியாவின் ஒரு மூத்த தூதரக அதிகாரி எடுத்துரைத்தார். ''போதைப்
பொருட்களுக்கு எதிரான போராட்டத்தில் ஆதரவு தருவதும், ஒத்துழைப்பு விவகாரங்களும் மிகவும் சிறப்பானவை
என்றாலும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஜனாதிபதி அல்வரோ உரைப் விடுத்த வேண்டுகோளைத்
தொடர்ந்து ஒரு வலுவான அறிவிப்பை புஷ் வெளியிடுவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம் என்பதை நான் ஒப்புக்
கொண்டுதான் ஆகவேண்டும்'' என்று அவர் AFP
செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
வாஷிங்டன் லத்தீன் அமெரிக்காவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில்
குவிமையப்படுத்தவில்லை. மாறாக, இந்தப் பிராந்தியத்தில் தனது இராணுவத் தலையீட்டை பெருக்கிக் கொள்வதில் குறியாக
இருக்கின்றது. இதன் நோக்கம் சந்தைகள், மூலோபாய கச்சாப் பொருட்களின் வளங்கள் குறிப்பாக எண்ணெய் வளத்தின்
மீது தனது மேலாதிக்கத்தை வற்புறுத்தி நிலைநாட்டுவதற்கு ஒரு வழியாக இராணுவத் தலையீட்டை அது கடைப்பிடித்து வருகிறது. |