World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Martial law declared as unrest deepens in rural China

சீனாவின் கிராமப் பகுதியில் கொந்தளிப்புநிலை ஆழமாவதால் இராணுவச் சட்டம் பிரகடனம்

By John Chan
15 November 2004

Use this version to print | Send this link by email | Email the author

அக்டோபர் 27 ல் ஆயிரக்கணக்கான ஹுய் (Hui) முஸ்லீம்களுக்கும், ஹான் (Han) சீனர்களுக்குமிடையே நடைபெற்ற வன்முறை இன மோதல்களுக்கு பதிலளிக்கின்ற வகையில் மத்திய ஹெனன் மாகாணத்திலுள்ள Zhongmou கவுண்டியில் சீன அதிகாரிகள் இராணுவச் சட்டத்தை கொண்டு வந்திருக்கின்றனர். இந்த மோதலில் ஏழு பேர்கள் இறந்துள்ளாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், நியூயோர்க் டைம்ஸ் 18 போலீஸ் அதிகாரிகள் உட்பட 148 பேர் கொல்லப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கிறது. இம்மோதலில் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன மற்றும் குறைந்தபட்சம் 18 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர்களுக்காக பெய்ஜிங்கில் நடத்தப்பட்ட ஒரு பள்ளியில் ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோ இந்த ஆட்சியில் ஸ்திரமற்ற இனப்பிளவுகளின் ஆபத்துப்பற்றி வலியுறுத்தியும் மற்றும் சீனாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது பற்றியும் பேசி ஆறு நாட்களுக்குப் பின்னர் இந்த மோதல் நடந்திருக்கிறது.

அந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கின்றனர் மற்றும் தொலைப்பேசித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. ''நவம்பர் முதல் தேதி திங்களன்று நகரிலிருந்து ஆறு மைல்களுக்கு அப்பால் உள்ள [கலவரம் நடந்த] Langchenggang பகுதிக்கு செல்லும் சாலைகளில் போலீஸ் அதிகாரிகள் அணிவகுத்து நின்றனர். அவர்கள் சோதனைச் சாவடிகளில் கார்களை நிறுத்தினர் மற்றும் சில வாகனங்களை திருப்பி அனுப்பினர். அந்தப் பகுதிக்கு வந்த குறைந்தபட்சம் நான்கு வெளிநாட்டு பத்திரிகை நிருபர்கள் காவலில் வைக்கப்பட்டனர்'' என்று அசோசியேடட் செய்தி ஸ்தாபனம் தகவல் தந்திருக்கிறது.

அந்தக் கலவரத்தை நேரில் கண்ட ஒருவர் Kyodo News என்ற ஜப்பானிய பத்திரிகைக்கு பேட்டியளித்தபோது, அந்த மோதலுக்கு காரணம் ஒரு சாலை விபத்துத்தான் என்றும், அதில் ஒரு ஹூய் டாக்சி டிரைவர், ஒரு 6 வயது ஹான் பெண் குழந்தையை மோதி கொன்றுவிட்டார் என்றும் தெரிவித்தார். ''அந்த இளம் பிள்ளையின் உறவினர்களும் சக கிராம மக்களும் இழப்பீடு கோருவதற்காக டாக்சி டிரைவரின் கிராமத்திற்கு திரண்டு சென்றனர்'' அப்போது நிலவரம் முற்றி கிராம மக்கள் ஒருவரை ஒருவர் தடிகளாலும் இதர ஆயுதங்களாலும் தாக்கி கொண்டனர் என்று அக்டோபர் 31 ல் நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதர பகுதிகளில் இருந்து 17 டிரக்குகளில் ஏற்கெனவே சண்டையில் சம்மந்தப்பட்டுள்ள ஹூய் மக்களுக்கு உதவுவதற்காக வந்துகொண்டிருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்ததும் உள்ளூர் போலீசார் இராணுவ ஆயுத போலீஸை அழைத்தனர்.

சீன மக்கள் தொகையான 1.4 பில்லியனில் 92 சதவீதம்பேர் ஹான் இனத்தவர்கள். மீதமிருக்கும் மக்கள் 55 இனங்களை கொண்ட சிறுபான்மை வகுப்பினர். ஹூய் முஸ்லீம்கள் 9.8 மில்லியன் பேர் இருக்கிறார்கள்-- சீனாவில் நான்காவது பெரிய இனக்குழு இது--- இவர்கள் மத்திய கிழக்கு வர்த்தகர் மரபுவழி வந்தவர்கள் அல்லது பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இஸ்லாமியத்தை தழுவிய ஹான் சீன இனத்தவர்கள். ஹூய் இனத்தவர்கள் பெரும்பாலும் மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பொதுவாக ஹான் மக்களோடு ஒருங்கிணைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

என்றாலும் Langchenggang சம்பவங்கள், கொந்தளிப்பு நிலை உருவாகி வருவதை கோடிட்டிக் காட்டுகின்றன. சீனாவில் 900 மில்லியன் கிராம மக்களின் சமூக நிலைமைகள் மோசமடைந்து வருவதானது இன மோதல்களை தூண்டிவிட்டுள்ளது. இதில் பெரும்பாலும் இனச் சிறுபான்மை மோதலாகும். சீனாவில் ''சோசலிசத்தை கட்டியெழுப்புகிறோம்'' என்ற கூற்றையோ அல்லது ஒரு சமத்துவ சமுதாயத்தை கொண்டு வருகிறோம் என்ற நிலைப்பாட்டையோ நிலைநாட்டுகிற வல்லமையை ஸ்ராலினிச அதிகாரத்துவம் இழந்துவிட்டது. 25 ஆண்டுகளாக சுதந்திர சந்தை நடவடிக்கைகளை அதிகாரத்துவம் மேற்கொண்டு வருவதால், கிராமப் புறங்களைச் சேர்ந்த மில்லியன் கணக்கான சீன மக்கள் வறுமையில் சிக்கியுள்ளனர். அத்துடன் பலர் தங்களது நிலத்தைவிட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.

மேற்கு மாகாணமான ஷிங்யாங்கில் (Xingjiang) பெய்ஜிங் ஆட்சியாளர்கள் சமூக அல்லது ஜனநாயக அபிலாசைகள் எதையும் நிறைவேற்றத் தவறிவிட்டதால், பொது மக்களிடையே பிரிவினைவாத போக்கு தூண்டிவிடப்பட்டுள்ளது. உக்குர் (Uighur) முஸ்லீம் மக்களில் சில பிரிவினர் சீனாவிலிருந்து சுதந்திரத்தை கோரி வருகின்றனர்.

1949 புரட்சிக்குப் பின்னர் மக்கள் குடியரசில் ஹான் பெரும்பான்மையினருக்கு சரிசமமாக ஹூய் போன்ற இதர முஸ்லீம் சிறுபான்மையினர் நடத்தப்படுவார்கள் என்று தந்த உறுதிமொழிகளை சிதைப்பதாக பெய்ஜிங்கின் பதில் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. உக்குர் மக்களுக்கெதிராக எடுக்கப்பட்ட கொடூரமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு திரட்டுவதற்காக, ஸ்ராலினிச ஆட்சி ஹான் பேரினவாதத்தையும் முஸ்லீம்களுக்கெதிரான சந்தேகங்களையும் ஊட்டி வளர்த்தது.

எடுத்துக்காட்டாக 2000 டிசம்பரில், கிழக்கு ஷாங்டோங் (Shangdong) மாகாணத்தில் ஒரு ஹான் கசாப்புக்கடைக்காரர் ஆத்திரமூட்டும் வகையில் ''முஸ்லீம் பன்றி'' என்று விளம்பரப்படுத்தியதற்கு எதிராக எழுந்த ஆர்ப்பாட்டத்தில், பாதுகாப்புப் படைகளால் ஐந்து ஹூய் முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.

இன்றைய அரசியல் மற்றும் சமூகக் கட்டுக்கோப்பில் தனக்கு இடமில்லை என்று ஒரு சமுதாயம் கருதுவதை எதிரொலிக்கிற வகையில்தான் அண்மையில் ஹூய் இன மக்கள் வாழும் கிராமங்களில் வன்முறைகள் நடந்திருக்கின்றன. ஒட்டுமொத்தமாக கிராம ஏழை மக்கள் பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொள்வதுடன், அரசு உருவாக்குகின்ற பாரபட்ச போக்குகளையும், தொந்தரவுகளையும் அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது.

சீனாவின் கிராமப்புறங்களில் இனச் சிறுபான்மையினரின் கிளர்ச்சியானது ----பொதுவாக மிகப்பெருமளவில் ஒடுக்கப்பட்ட தட்டின் மக்கள் மற்றும் வறுமையான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்--- பெரிய கொந்தளிப்புக்களில் அடிக்கடி அமைந்துவிடுவதும் உண்டு. எடுத்துக்காட்டாக, 19 ம் நூற்றாண்டு துவக்கத்தில் பாரிய விவசாயிகள் போர் அல்லது தைபிங் கிளர்ச்சியும், 1850 களில் மஞ்சு அரசுப் பரம்பரைக்கெதிராக ஹூய் மக்களுடைய கிளர்ச்சிகளும் நடைபெற்றன.

1988 ஜூலையில், திபெத்தின் தலைநகரான லாசாவில் பல்வேறு ஆர்பாட்டங்கள் வெடித்துச் சிதறின. அப்போது திபெத் கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக பணியாற்றிவந்த இன்றைய ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோ கொடூரமான ஒடுக்குமுறைகளை மேற்கொள்ள கட்டளையிட்டார். அப்போது நூற்றுக்கணக்கான திபெத் மக்கள் கொல்லப்பட்டனர். 2500 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதற்கு ஓராண்டிற்கு பின்னர், பெய்ஜிங்கிலும் இதர பிரதான நகங்களிலும் அரசாங்கத்திற்கெதிரான வெகுஜன கண்டனங்கள் உருவாகின. 1989 ஜூன் 4 ல் தியானமென் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களையும், இளைஞர்களையும் சீன இராணுவம் கொன்று குவித்ததைப் பாராட்டிய முதல் மாகாண தலைவர்கள் வரிசையில் ஹூ ஜிந்தாவோ இடம்பெற்றிருந்தார்.

1989 ல் அரசியல் கொந்தளிப்பு பெரும்பாலும் நகர எல்லைகளுக்குள்ளேயே நடைபெற்றது. அதற்குப்பின்னர் அந்த நிலவரம் மாறிவிட்டது. வரிவிதிப்பு, அரசாங்க ஊழல், அடிப்படை சேவைகள் கிடைக்காத நிலை ஆகியவற்றின் காரணமாக மில்லியன் கணக்கான விவசாயிகள் கிராமப்புறங்களிலிருந்து வெளியேறி நகரப்பகுதிகளில் மிகக் கொடூரமாக சுரண்டப்படும் மலிவுக் கூலித் தொழிலாளர்களாக இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. படுவேகமாக வளர்ந்து வந்த ரியல் எஸ்டேட் காரணமாக அல்லது தொழிற்துறை திட்டங்களால் இடைவிடாது நிலம் கட்டாயம் எடுத்துக்கொள்ளுதல் நடைபெற்றதைத் தொடர்ந்து பல விவசாயிகள் தங்களது நிலத்திலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டனர். இதில் பலருக்கு முறையான இழப்பீடுகள் தரப்படவில்லை.

எனவே ஆட்சியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு அதன் கொள்கைகளுக்கு விரோதப் போக்கு கொண்டிருக்கிற சீன விவசாயிகள் நாடு முழுவதிலும் தீவிரமான கண்டனப் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

சிச்சுன் (Sichuan) மாகாணத்தில் டாடு (Dadu) ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய நீர் மின்சாரத்திட்ட கட்டுமானத்தை கைவிட வேண்டுமென்று அரசாங்கத்தை வலியுறுத்தி கடந்த அக்டோபர் 29 ல் 100,000 விவசாயிகள் கண்டனப்பேரணி நடத்தினர். அந்த நீர்மின்சார உற்பத்தி அணையைக் கட்டுவதற்காக விவசாயிகள் தங்களது நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வசதிகுறைவான மலைப்பாங்கான பகுதிகளில் போதுமான இழப்பீடுகள் இல்லாமல் குடியேற்றப்பட்டனர். கண்டனப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் சுமார் 10,000 போலீசாரோடு மோதினர். நவம்பர் 4 ல் அந்தப்பகுதிக்கு விஜயம் செய்த மாகாண கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் Zheng Xuezhong பல மணிநேரம் அந்த விவசாயிகளால் சுற்றி வளைக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். அடுத்த நாள், அந்தப் பிராந்தியத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மேலதிக 10,000 துருப்புக்கள் அனுப்பப்பட்டன.

ஹனியான் நகரத்தையும், அணையையும் ஜனாதிபதி ஹூ ஜிந்தவோ பிரதமர் வென் ஜியாபோ மற்றும் மாகாணத் தலைமைகள் உயர்ந்த இழப்பீடுகள் தருவதாக உறுதியளிக்கும் வகையில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்தும் சுற்றி முற்றுகையிட்டனர். என்றாலும், பெய்ஜிங் தலைவர்கள் அந்தக் கண்டனப்பேரணிக்கு தலைமை ஏற்றவர்கள் மீது ''கடுமையாக தண்டிக்கப்போவதாக'' தெளிவாக அறிவித்துள்ளனர்.

அண்மை வாரங்களில் நடைபெற்ற மிகக்கடுமையான சம்பவம் மூன்று பள்ளத்தாக்குகள் அணை கட்டப்படுவதற்கெதிராக அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் நடத்திய ஒரு கலவரமாகும். சிச்சுன் மாகாணத்தில் சொங்கிங் பகுதியிலுள்ள வான்சூ மாவட்டத்தில் Three Gorges என்ற அணை கட்டப்பட்டு வருகிறது. அப்போது ஒரு அரசாங்க அதிகாரி ஒரு கிராப்புறத்திற்கு குடியேறிய தொழிலாளியை கொடூரமாக தாக்கியதால் இந்தக்கலவரம் வெடித்தது.

Three Gorges அணைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கல்லூரி பேராசிரியரான ஷாங் ஜியன்விங் நவம்பர் 3 ல் Financial Times க்கு பேட்டியளித்தபோது ''தாக்கியவர் உண்மையிலேயே ஒரு அரசாங்க அதிகாரியா அல்லது பொதுமக்கள் அவரை அரசாங்க அதிகாரி என்று தவறாக எடுத்துக் கொண்டார்களா என்பது முக்கியமல்ல, ஆனால் அரசிற்கும், அதன் மக்களுக்குமிடையே உறவுகள் சீர்குலைந்து கொண்டு வருகின்றன என்பதுதான் முக்கியம். அந்த சீர்குலைவைத்தான் இந்த மோதல்கள் எடுத்துக்காட்டுகிறது'' என்று குறிப்பிட்டார்.

அதிகாரிகளிடையே வளர்ந்து வரும் அச்சம்

சீனாவில் கலவரங்களும், கண்டனப் பேரணிகளும் பெருகிக்கொண்டு வருவது பெய்ஜிங்கில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. வளர்ந்து வரும் அதிருப்தியை எப்படி போக்குவது என்பது குறித்து அதிகார ஸ்தாபனங்களுக்கிடையே தீவிர விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

நவம்பர் 4 ல் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள தகவலின்படி, சென்ற ஆண்டு இதுபோன்ற சம்பவங்கள் 15 சதவீதம் உயர்ந்து 58,000 வேறுபட்ட சம்பவங்கள் நடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமான மதிப்பீடுகள் தெரிவித்தன. இதில் 3 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் சம்பந்தப்பட்டிருந்தனர். இந்த மதிப்பீடு மிகக்குறைவான ஒன்று என்று நம்பப்படுகின்றது. அரசியல் மற்றும் பொருளாதார சீன ஒப்பாய்வு (Comparative) நிலைய இயக்குநரான கொசன்கே வாஷிங்டன் போஸ்ட்க்கு பேட்டியளிக்கும்போது, தமது ஆராய்ச்சி நிலையத்தைப் போன்ற அமைப்புக்களும் பொதுவாக அரசாங்கமும் இந்த பிரச்சனை குறித்து இரவு பகலாக ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார். ''இந்த பிரச்சனையின் முக்கியத்துவத்தையும், அவசரத் தன்மையையும் நாங்கள் அனைவரும் அறிந்திருக்கிறோம்'' என்று குறிப்பிட்டார்

நவம்பர் 6 ல் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் Strait Times வெளியிட்டுள்ள தகவலின்படி, பெய்ஜிங்கில் உள்ள சீன அரசியல் சிந்தனையாளர் குழுக்கள் வெகுஜன கொந்தளிப்புக்கள் ஏற்படும் போது எத்தகைய நிலவரம் உருவாகும் என்பதை கம்பியூட்டர்களில் மாதிரிகளை உருவாக்கி ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த தொழில்நுட்ப நடைமுறையைப் பயன்படுத்திய சீன அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நூ வென்யாங் தெரிவித்துள்ள வாதத்தின்படி, 1989 ஜனவரியில் சீனத் தலைமையானது சரியாக செயல்பட்டிருக்குமானால் தியானமென் சதுக்கத்தை ஆக்கிரமித்துக் கொள்ளுகின்ற அளவிற்கு அந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற பெரும் எடுப்பிலான கண்டனப் பேரணிகளை தவிர்த்திருக்க முடியும். அத்தோடு, சீனாவில் நிலவுகின்ற சமூக ஏற்றத்தாழ்வு ஒரு பெரிய கொந்தளிப்பை தூண்டி விடுகின்ற அளவிற்கு மிகப்பெருமளவில் வளர்ந்து கொண்டிருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

மக்கள் தங்களது மனக்குறைகளை எடுத்துரைப்பதற்கு அதிக அளவில் வழிவகைகளை செய்தால் மட்டுமே சமூக கொந்தளிப்புக்களை ஆட்சி கட்டுப்படுத்த முடியும் என்று சீன ஆளும் செல்வந்த தட்டினரில் ஒரு பிரிவினர் வாதிடுகின்றனர். சமூக ஏற்றத்தாழ்வுகள் பற்றி ஆய்வு நடத்துவதில் ஒரு நிபுணரான ஹூ ஜியாங்டூ நவம்பர் 4 ல் South China Morning Post என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இப்போது சீனா ஒரு குறுக்குப் பாதையில் நின்று கொண்டிருக்கின்றது, அங்கு பிரச்சனையான ''விவசாயிகள், வேலையிழந்த தொழிலாளர்கள் மற்றும் இனக் கொந்தளிப்புக்கள் போன்ற அனைத்தும் ஒன்றாக கலந்துவிட்டன.'' ஆகவே இந்தச் சூழ்நிலையில் ''மேலும் கூடுதலாக சீர்திருத்தம் எடுக்கப்படவேண்டும்'' என்று அவர் எச்சரிக்கிறார்.

1989 மே - ஜூனில் என்ன நடந்தது என்றால் சீன ஆட்சியானது மாணவர்கள் மற்றும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளுக்கு ஒரு குறிப்பிட்ட மட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளை வழங்கியதன் மூலம் கொந்தளிப்பை நீர்த்துபோகச்செய்ய முயன்றது. என்றாலும் தொழிலாள வர்க்கம் இந்த இயக்கத்தில் பிரதான சக்தியாக செயல்பட்டதால் நிலவரம் முற்றிக்கொண்டே போனது. அரசாங்கத்தின் சுதந்திர சந்தைக் கொள்கைகளால் உருவான ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக அது தனது சொந்த சமூக கோரிக்கைகளை முன்வைத்தது. இறுதியாக பெய்ஜிங் ஆட்சி தனது நிலைப்பாட்டை காப்பாற்றிக் கொள்வதற்காகவும், பெருகிவரும் முதலாளித்துவ செல்வந்த தட்டினரின் நலன்களை காப்பதற்காகவும் இராணுவத்தின் பக்கம் திரும்பியது.

இந்த அனுபவத்தின் காரணமாக ஹூ ஜிந்தாவோ தலைமையிலான புதிய சீனத் தலைமை முந்தைய தலைமையைப் போல் எந்த எதிர்ப்பும் கடுமையாக வெளியிடப்படுவதற்கு அனுமதி வழங்க தயங்குகின்றது. அதற்குக் காரணம் அத்தகைய அனுமதி வழங்கப்பட்டால் அது ஒட்டுமொத்தமாக ஆட்சிக்கு சவாலான ஒரு இயக்கமாக வளர்ந்துவிடுமென்ற அச்சமாகும்.

பெய்ஜிங்கில் நிலவுகின்ற இந்தக் கவலைகளை சர்வதேச அளவிலும் பகிர்ந்து கொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக அமெரிக்காவிலிருந்து செயல்பட்டு வருகின்ற Stratfor சிந்தனைக்குழு, நவம்பர் முதலாம் தேதியன்று எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தது. அண்மையில் நடைபெற்று வருகின்ற சம்பவங்களில் ''கடுமையான உள் பிரச்சனைகள்'' உள்ளன என்பதை பெய்ஜிங் ஆட்சிக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறது என்று அக்குழு குறிப்பிட்டிருந்தது. ஒடுக்குமுறை கடுமையாக இருக்கும் என்றாலும் சீனாவில் கொந்தளிப்பை அனுமதிப்பது அதன் ''எல்லைகளுக்கப்பாலும்'' மிகக்கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். எனவே ஒடுக்குமுறை அவசியமென்று அது வாதிடுகிறது.

''பெய்ஜிங் ஒரு பாறைக்கும் மற்றும் கெட்டியான ஒரு பரப்பிற்கும் இடையேயுள்ளது. ஜனாதிபதி ஹூ-வின் கட்டுப்பாடற்ற பொருளாதாரத்திட்டம் ஆபத்தானது. மற்றும் பொருளாதார வளர்ச்சி நெறிமுறைபடுத்தப்பட்டாக வேண்டும் என்ற மூலக்கூற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து சீனப் பொருளாதாரம் மிகப்பெருமளவிற்கு மந்த நிலைக்குச் சென்றாலும் அல்லது ஒட்டுமொத்தமாக வீழ்ச்சியடைந்தாலும், கிராமப்புறங்களில் வன்முறைகள் பெருமளவில் வளரும் என்று எதிர்பார்க்க முடியும். அதன் மூலம் மேலும் பெய்ஜிங்கின் ஆதிக்கம் கீழறுக்கப்படும். தீயானமென் சதுக்க சம்பவங்கள் திரும்ப நடப்பதை ஹூ- விரும்பவில்லை. அவர் ஒரு மிதமான போக்கில் செல்ல உறுதியுடன் உள்ளார். குறைந்தபட்சம் தற்போது செல்ல விரும்புகிறார்......எவ்வாறாயினும் கொந்தளிப்புக்கள் நீடிக்குமானால்...... ஹூ-விற்கு மிகக்கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, நேரடியாக சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் நாட்டின் ஸ்திரத் தன்மையை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுப்பதைத்தவிர வேறுவழியில்லை'' என்று இந்தக் குழு தெரிவித்துள்ளது.

இத்தகைய விமர்சனங்கள் என்பன அமெரிக்காவும், சர்வதேச முதலாளித்துவ செல்வந்த தட்டினரும் பெய்ஜிங் ஆட்சியையும் அதன் போலீஸ்-அரசு ஒடுக்குமுறையையும் எந்த அளவிற்கு சார்ந்திருக்கிறார்கள் என்பதை எதிரொலிக்கின்றன. சீனா மலிவுத் தொழிலாளர்களை வழங்குவதில் ஒரு வளமான உயிர்நாடியாகவும் பூகோள பெருநிறுவனங்களின் ஒரு உற்பத்தி அரங்காகவும் ஆகியுள்ளது. ஆதலால், சீனத் தொழிலாள வர்க்கம் ஜனநாயகத்திற்காகவும் சமூக சமத்துவத்திற்காகவும் எந்த வெகுஜன போராட்டத்தை நடத்தினாலும் அது நேரடியாக உலக முதலாளித்துவத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும்.

Top of page