World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The battle for Najaf and the US crisis in Iraq

நஜாப்பிற்கான போரும் ஈராக்கில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியும்

By Peter Symonds
23 August 2004

Back to screen version

நஜாப்பில் முற்றுகை மேலும் தொடர்வது ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தெளிவாக கோடிட்டுக்காட்டுகிறது. அமெரிக்க இராணுவத்திற்கும் ஷியைட் மத போதகர் மொக்தாதா அல் சதரின் குடிப்படைகளுக்கும் இடையே நடைபெற்றுக்கொண்டுள்ள மோதலின் உடனடி வெளிப்பாடு எதுவாக இருந்தாலும், ஆக்கிரமிப்பு அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டிற்கு கெட்ட கனவாக மாறிவிட்டது. ஈராக்கின் எண்ணெய் வளத்தை சூறையாடி மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்த படையெடுத்து வந்த அமெரிக்கா இன்றைய தினம் உண்மையிலேயே உலக முதலாளித்துவத்திற்கு அந்த பிராந்தியத்தில், மிக ஆழமான ஸ்திரமற்ற தாக்கத்தை ஏற்படுத்துகின்ற பரவலான மக்களது எழுச்சியை சந்தித்துக்கொண்டிருக்கிறது.

புஷ் நிர்வாகம் சொல்வதைப்போல் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆயுதந்தாங்கிய எதிர்ப்பானது, ஒரு சில ''ஹூசைன் விசுவாசிகள்'', ''வெளிநாட்டுப் போராளிகள்'' அல்லது "பயங்கரவாதிகளை" கொண்டிருக்கிறது என்பது அல்ல, ஆனால் பொதுமக்களின் பரந்த தட்டின் அனுதாப ஆதரவோடு ஷியாக்கள் மற்றும் சுன்னிக்கள் ஆகிய இருவரும் ஈடுபட்டிருக்கும் வளர்ந்து வரும் இயக்கமாகும். அல் சதரும் அவரது இதர குடிப்படைகளும் தனிமைப்படுத்தப்பட்டு விட்ட சிறுபான்மையர்கள் அல்ல மாறாக அமெரிக்காவும் அதன் ஈராக் பிரதமர் இயத் அல்லாவி தலைமையில் நடைபெறும் ஐந்தாம்படை ஆட்சியும்தான் இன்றையதினம் ஈராக்கில் கணிசமான ஆதரவின்றி உள்ளது.

அமெரிக்காவை தளமாகக்கொண்ட புரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட் தந்துள்ள மிதமான மதிப்பீட்டின் படியேகூட, ஏப்ரல் முதல் ஜூலைக்கு இடையில் ஈராக்கில் ஆயுதந்தாங்கிய கிளர்ச்சிக்காரர்களின் எண்ணிக்கை 5000-லிருந்து, 20,000- ஆக உயர்ந்துள்ளது. பல போராளிகள், அனைவருமல்ல, வறுமைக்குள்ளான இளைஞர்கள் தட்டிலிருந்து வருபவர்கள், அவர்களுக்கு அமெரிக்க ஆக்கிரமிப்பு கடுமையான பேரழிவைத்தான் கொண்டு வந்திருக்கிறது என்று மெய்ப்பிக்கின்றது. அவர்களுக்கு கல்வியில்லை, வேலையில்லை எனவே அவர்கள் அமெரிக்க இராணுவ இயந்திரத்திற்கு எதிராக போரின் சீரழிவிற்கு தங்களது வாழ்வையே தியாகம் செய்யத் தயாராகிவிட்டார்கள்.

நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவையின் ஆராய்சியாளர் Kenneth Katzman, USA Today-ல் வெளியிட்டுள்ள கருத்தில் ''இறுதித்தாக்குதல் என்பது எப்போதுமே நடக்காது ஏனென்றால் குடிப்படைகள் மற்றொரு நாள் போரிடுவதற்காக பின்வாங்கிச்சென்று விடுகின்றனர். நாம் ஒரு சிறிய பிரிவை எதிர்த்து போரிடவில்லை, ஒரு பொது மக்களையே எதிர்த்துப்போரிட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு போர்க்களத்தில் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது'' என்றார்.

ஆகஸ்ட் 15-ல் வாஷிங்டன் போஸ்ட் பிரசுரித்துள்ள ஓர் அபூர்வமான பேட்டியில் அமெரிக்காவிற்கு எதிரான குடிப்படையைச் சார்ந்த ஒரு உறுப்பினரின் மனித நேயத்தை வெளியிட்டிருக்கிறது. 34- வயதான Ahmed Eisa, ஒரு சிறிய அச்சகத்தில் பணியாற்றினார், அவர் நஜாப்பிலிருந்து தனது மனைவியையும், தனது இரண்டு குழந்தைகளையும் அனுப்பிவிட்டு இமாம் அலி புனித தளத்தில் அல் சதரின் மெஹ்தி இராணுவத்தில் சேர்ந்திருக்கிறார். அவர் பழைய துப்பாக்கி ஒன்றை கையில் ஏந்திய வண்ணம் அந்த செய்திபத்திரிகைக்கு பேட்டியளிக்கும்போது கூறினார்: ''அமெரிக்கர்களிடம் சிறந்த ஆயுதங்கள் உள்ளன என்பதை நான் அறிவேன். அவர்கள் சிறந்த திட்டங்களை தீட்டியிருக்கிறார்கள். 3,000 டாலர் மதிப்புள்ள சீருடைகளை அணிந்திருக்கிறார்கள், எங்களிடம் இருப்பது நாங்கள் அணிந்திருக்கும் உடுப்புக்கள்தான். ஆனால் எனக்கு கோட்பாடுகள் உண்டு. நான் புனித நிலத்தை பாதுகாக்க வேண்டியுள்ளது. நான் பாதுகாக்க வேண்டிய குடும்பம் இருக்கிறது, எனவே அவர்களைவிட வலிமைமிக்க மனிதனாக என்னை உணருகிறேன்.''

அமெரிக்க இராணுவம் சார்பில் குரல்தரவல்ல ஒருவரின்படி, அண்மையில் நடைபெற்ற போரில் நஜாப்பில் நூற்றுக்கணக்கான அல் சதரின் குடிப்படைகள் கொல்லப்பட்டனர், அவர்களது கணக்கில் கொல்லப்பட்ட குடிமக்கள் மற்றும் காயமடைந்தவர்கள் சேர்க்கப்படவில்லை. அப்படியிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அமெரிக்க இராணுவத்தையும், ஈராக் பாதுகாப்பு படைகளையும் எதிர்கொண்டு மெஹ்தி இராணுவத்திற்கு தங்களது ஆதரவை எடுத்துக்காட்டும் வகையில் நகரத்தில் கூட்டமாய் குவிந்துகொண்டுள்ளனர். நஜாப்பில் நடைபெற்றுக்கொண்டுள்ள நேருக்கு நேர் மோதல்கள் தெற்கு ஷியைட் நகரங்களில் மட்டுமல்ல ஈராக்கிலுள்ள பிற சுன்னிகளது சக்திவாய்ந்த பகுதிகளிலும் கண்டனங்களையும், ஆயுதந்தாங்கிய தாக்குதல்களையும் செயலாற்றத் தூண்டியுள்ளது.

என்னதான் புஷ் நிர்வாகம் மறுப்புக்களை தெரிவித்தாலும், ஈராக் அமெரிக்காவின் புதைசேறாக ஆகிவிட்டது. அமெரிக்க ஆக்கிரமிப்பையும், அல்லாவியின் பொம்மை ஆட்சியையும், முட்டுக்கால் இட்டு நிற்கச்செய்வது அடக்கு முறையும், பயங்கர நடவடிக்கைகளும்தான். ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் கோபம் மற்றும் எதிர்ப்பின் புதிய ஊற்றை மட்டுமே உண்டு பண்ணும். பல்லாயிரக்கணக்கான ஈராக் மக்கள் மடிந்திருக்கிறார்கள். இந்த முடிவற்ற களத்தில் பல்லாயிரக்கணக்கான ஈராக்கியர்களும் நூற்றுக்கணக்கான அமெரிக்க மற்றும் கூட்டணி படைவீரர்களும் பில்லியன் கணக்கான டாலர்கள் செலவில் உயிழந்துள்ளனர்.

இரண்டு மாதங்களே பதவியில் இருக்கும் அல்லாவி அவர் உண்மையிலேயே யார் என்பது அம்பலத்திற்கு வந்திருக்கிறது: வாஷிங்டனின் நீண்டகால கைப்பாவை, மற்றும் ஒரு குண்டர், எந்த எதிர்ப்பையும் ஒழித்துக்கட்டுவதற்கு ஈராக்கியர் வேடம்கட்டி போலீஸ்-அரசு நடவடிக்கைகளை எடுப்பதற்காக நியமிக்கப்பட்டவராவர். அல் சதரின் ஆதரவாளர்களை ''சட்டவிரோத குற்றவாளிகள்'' என்று கண்டித்தார், அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவதற்காக அரசாங்கம் ''இரும்புக்கரம் கொண்டு திருப்பித்தாக்கும்'' என்று அல்லாவி அறிவித்தார். படுகொலைக்கு பச்சைக்கொடி காட்டிய அவர், ஈராக் முழுவதும் பரந்தளவில் ஷியைட்டுகள் கிளர்ச்சி தூண்டிவிடப்படாது தடுப்பதற்காக நின்று நிதானித்து செயலாற்ற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

USA Today தனது தலையங்கத்தில் கூறியிருந்தது: ''அமெரிக்காவிற்கு [நஜாப்] நெருக்கடி எந்தவகையில் பார்த்தாலும் தோல்வியைத்தரும் வாய்ப்புத்தான். அல்லாவி கட்டளையிட்டு, அமெரிக்கா நடத்தும் தாக்குதல் இமாம் அலியின் புனித தளத்தை சிதைக்குமானால் அது ஒரு தந்திர வெற்றியை உருவாக்கும், ஆனால் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்திற்கு எதிராக பெரும்பாலான ஷியைட்டுகள் திரும்பும் மூலோபாய இழப்பாக ஆகிவிடும். அல்லாவி பின்வாங்குவாரானால், கோஷ்டிப் போரை தடுத்து நிறுத்துவதற்கு அவரது அரசாங்கம் சக்திவாய்ந்ததல்ல என்று நிரூபிக்கப்பட்டு அல் சதருக்கு பரந்த ஆதரவு பெருகும்.''

லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் தனது தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்ததாவது, ''அவர் (அல்-சதர்) அமெரிக்க ஆதரவு படைகளுக்கு மட்டுமல்லாமல், பேச்சில் கடுமை, செயலில் பலவீனம் என்ற நிலையிலுள்ள பிரதமர் அல்லாவியின் இடைக்கால அரசாங்கத்திற்கும் கெட்ட கனவாக ஆகிவிட்டார்.'' டைம்ஸ் அதற்கு பதில் எதுவும் தரவில்லை, எவ்வாறாயினும், ஈராக்கிய பாதுகாப்பு படைகளுக்கு முட்டுக்கொடுத்து மற்றும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் உருவாகுமானால், அது எதிர்ப்பை முறியடித்து, அமெரிக்க இராணுவம் பின்வாங்கிக் கொள்வதற்கு வகைசெய்யும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. ''இப்படி உற்சாகமற்ற பாதை வெற்றிபெறும் என்ற உறுதியில்லை,'' ''ஆனால் அதன் மாற்றுக்கள் படுமோசமானவையாக இருக்கும்'' என்று அது கருத்து தெரிவித்தது.

பொய்களும், தோல்வியுற்ற கணிப்புக்களும்

இந்த தலையங்கங்கள் அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் வளர்ந்து வருகின்ற நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறது. ஈராக் ஒரு பேரழிவாக முடிந்துவிட்டது இதற்கு அமெரிக்க முதலாளித்துவத்திடம் தீர்வு எதுவுமில்லை. ஒன்றுக்குப் பின் மற்றொன்றாக, இந்தப் படையெடுப்பிற்கு அடிப்படையாக அமைந்த அனைத்து பொய்களும், கணிப்புக்களும் தூள் தூளாகி நொருங்கி விழுந்துவிட்டன.

* படையெடுத்துச்செல்லும் அமெரிக்கா தலைமையிலான படைகளை விடுவிக்க வந்தவர்கள் என்று ஈராக்கியர்கள் கூட்டமாக மகிழ்ச்சிப்பெருக்கோடு வரவேற்பார்கள், என்ற அபத்தமான கூற்று, உடனடியாக வீழ்ச்சியடைந்தது. ஹூசைனின் சர்வாதிகாரம் வீழ்ச்சியடைந்ததில் மிகப்பெரும்பாலோர் வரவேற்றனர், ஆனால் ஆரம்பத்திலிருந்தே, வாஷிங்டனின் நோக்கங்கள் குறித்து அவர்கள் ஆழ்ந்த ஐயப்பாடுகளைக் கொண்டிருந்தனர். அதற்கான காரணங்கள் தெளிவானவை: ஈராக்கின் கடந்தகால காலனித்துவம் பற்றிய கசப்பான நினைவுகளும் ஆழமாக மனதில் பதிந்தவையும், அத்துடன் மத்திய கிழக்கில் இஸ்ரேல் அடக்குமுறைக்கு ஆதரவு தந்தது மற்றும் 1990-91-ல் நடைபெற்ற முதல் வளைகுடா போர் மற்றும் அதற்குப்பின்னர் நடைபெற்ற சம்பவங்களில் அமெரிக்கா பலதசாப்தங்களாக மேற்கொண்ட நடவடிக்கைகள் மீது மக்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு உணர்வு ஆகியவையும் சேர்ந்து கொண்டது.

* போரை நியாயப்படுத்துவதற்கு கூறப்பட்ட அத்தனை சாக்குப்போக்குகளும், பொய்கள் மற்றும் கற்பனைகள் என்று நிரூபிக்கப்பட்டன. எந்தவிதமான பேரழிவுகரமான ஆயுதங்கள் அல்லது அல் கொய்தாவிற்கும் ஹூசேன் ஆட்சிக்கும் தொடர்பு எதுவும் இருந்ததற்கான சான்று இல்லை. இப்போது அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு பரவலாக எதிர்ப்பு உருவாவது அமெரிக்கா ஈராக்கிற்கு ''ஜனநாயகத்தை'' கொண்டுவரும் என்ற கட்டுக்கதையையும் சிதறடித்துவிட்டது. அல்லாவி ''ஹூசைனைவிட மோசமானவர்'' அமெரிக்கர்களின் முகவர் என்ற அல் சதரின் கண்டனங்கள் நியாயம்தான் என்று நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. முந்திய ஈராக் ஆளும் சபையைப் போன்று அல்லாவி ஆட்சி நியமிக்கப்பட்டது ஈராக் மக்களுக்கு சொல்வதற்கு அதில் எதுவும் இல்லை, அமெரிக்க படையெடுப்பை ஆதரிக்கும் பொறுக்கி எடுக்கப்பட்ட விசுவாசிகள் அடங்கியதுதான் அந்த இடைக்கால அரசாங்கம்.

* ஈராக் மக்களை சமாதானப்படுத்துவதற்காக அரசியல் நம்பக சூழ்ச்சிகளையும், கொடூரமான இராணுவ படையும் கலந்து பயன்படுத்த அமெரிக்கா முயன்றது. இரண்டுமே வேலை செய்யவில்லை. ஜூனில் அல்லாவி நிர்வாகத்திடம் போலியான ஆட்சி ஒப்படைக்கப்படுவதால் நிலைமை திரும்பும் என்று வெள்ளை மாளிகை கருதியது. ஆனால் புதிய ஈராக் ''இறையாண்மை'' அமெரிக்க ஆக்கிரமிப்பு நீடிப்பதற்கு ஒரு முகமூடி தான் என்று உடனடியாக நிரூபிக்கப்பட்டது. ஆகஸ்ட் 16- முதல் 19- வரை நடைபெற்ற தேசிய மாநாடு பொம்மை நிர்வாகத்திற்கு ஆதரவை பெருக்குவதற்காக நடந்தது. மாறாக அந்த மாநாடு நஜாப் பற்றிய விவாதங்கள் முக்கிய இடம்பெற்று அல்லாவி தனிமைப்படுத்தப்பட்டார். அமெரிக்க இராணுவ வலிமையால் நிறுவப்பட்டுள்ள ஒரு ஆட்சி, சட்டபூர்வமான தன்மை கொண்டது என்று நிரூபிப்பது இயலாத காரியமாகவும், மில்லியன் கணக்கான சாதாரண மக்களை நம்பவைக்க இயலாததிருப்பதுதான் அமெரிக்கா எதிர்கொள்ளும் கடினமான பிரச்சனையாகும்.

* ஹூசைன் சர்வாதிகாரத்தின் கீழ் நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட ஷியைட்டுக்களில் இருந்து பெரும்பகுதியினர் ஆதரிப்பார்கள், அல்லது குறைந்த பட்சம் சகித்துக்கொள்வார்கள் என்று வாஷிங்டன் கணித்தது. ஆனால் ஷியைட்டுகளும், சுன்னிக்களும் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான பொதுவான போரில் இணைந்து நிற்பது பெருகிவருகிறது. 1991-ல் ஷியைட் கிளர்ச்சியை நசுக்குவதற்கு ஹூசேன் மேற்கொண்ட கொடூரமான முறைகளுக்கு இணையான நடவடிக்கைகளை எடுப்பதில் அமெரிக்க இராணுவம் இப்போது ஈடுபட்டிருப்பதால் நாடு முழுவதிலும் அதற்கு அப்பாலும் அமெரிக்காவிற்கு எதிரான குரோத உணர்வுகளை மேலும் பரந்தளவில் தூண்டிவிடவே செய்கின்றன. ஷியைட்டுக்களின் கிளர்ச்சிக்கு ஈரானை பலிக்கடா ஆக்க அமெரிக்க நிர்வாகமும், ஊடகங்களும் முயன்று வருகின்றன. டெஹ்ரான் போராளிகளையும், ஆயுதங்களையும் ஷியைட்டுக்களுக்கு வழங்கிவருவதாகக் கூறுகின்றனர். ஆனால் ஈரானோடு நெருங்கிய தொடர்பு கொண்ட தாவாக்கட்சியும், ஈராக்கின் இஸ்லாமிய புரட்சிக்கான சுப்ரீம் சபையும் (SCIRI) அல்லாவி ஆட்சியின் ஓர் அங்கமாக உள்ளன.

* மத்திய கிழக்கு முழுவதிலும் அமெரிக்க மேலாதிக்கத்தை சர்ச்சைக்கிடமின்றி ஸ்தாபிப்பதற்கும், செல்வாக்கை மற்றும் பரந்த சக்தியை நிர்வகிப்பதற்குமான நடவடிக்கைகளுக்கு புஷ் நிர்வாகம் ஈராக்கை தளமாக மாற்றுவதற்கு விரும்புகிறது. மாறாக அமெரிக்கா இப்போது உன்னதமான காலனித்துவப் போரில் சிக்கிக்கொண்டது. கிளர்ச்சி செய்யும் மக்களுக்கு எதிராக இந்தப்போர் நடந்து வருவதால் இந்த பிராந்தியம் முழுவதிலுமே மிக ஆழமான ஸ்திரமற்ற நிலை தோன்றியுள்ளது. ஈராக்கில் மக்களது எதிர்ப்பு பெருகிக்கொண்டு வருவதால் அமெரிக்கா சார்ந்திருந்த சர்வாதிகார ஆட்சிகளுக்கு மக்களது எதிர்ப்பு தூண்டிவிடப்படும். இந்த பிராந்திய ஆளும் வட்டாரங்களிடையே நிலவுகின்ற கவலைகளை எதிரொலிக்கின்ற வகையில் பாக்கிஸ்தானும், சவுதி அரேபியாவும் நஜாப் தொடர்பாக பீதிகலந்த அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. நெருக்கடி பற்றி விவாதிப்பதற்காக சென்றவாரம் இஸ்லாமிய மாநாட்டு அமைப்பின் அவசரக் கூட்டத்தை ஈரான் அழைத்துள்ளது மற்றும் ஈராக்கின் பக்கத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறது.

* இந்த ஆக்கிரமிப்பின் கொச்சையான கணிப்பு என்னவென்றால் ஈராக்கின் பரவலான எண்ணெய் இருப்பை பிடித்துக்கொள்வதன் மூலம் பல பிச்சனைகளுக்கு தீர்வு கண்டுவிடலாம் என்று அமெரிக்கா கருதியது. ஈராக் எண்ணெயை விற்பதன் மூலம் அமெரிக்கப்படை எடுப்பிற்கான செலவினத்தை ஈடுகட்டிவிட முடியும், அது அமெரிக்காவின் பெரிய எண்ணெய் கம்பெனிகளுக்கு பொருளாதார நன்மை சேர்க்கும், OPEC- அமைப்பையும் சீர்குலைத்து எண்ணெய் விலையை குறைத்துவிடலாம் என்று அமெரிக்கா கணக்கிட்டது. அமெரிக்க ஆளும் வட்டாரங்களின் இந்த உற்சாகமான நம்பிக்கையை ஊடக பேரரசர் Rupert Murdoch படையெடுப்பிற்கு முன்னர் அப்பட்டமாக எதிரொலித்தார். ''இந்த படையெடுப்பினால் உலகப்பொருளாதாரத்திற்கு மிகப்பெரும் பொருள் கிடைக்கும். ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 20- டாலருக்கு விற்கும்'' என்று உற்சாகம் பொங்க அறிவித்தார். இப்போது எண்ணெய் உற்பத்திகளும் எண்ணெய் குழாய்களும், தாக்குதல்களால் பாதிக்கப்பட, அதைத்தொடர்ந்து கச்சா எண்ணெய் அளிப்பில் நிச்சயமற்ற நிலை தோன்றி இன்றையதினம் ஏறத்தாழ ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 50- டாலர்கள் அளவிற்கு உயர்ந்து கொண்டுபோகிறது. இப்படிப்பட்ட பெரிய விலை உயர்வு அமெரிக்காவில் மட்டுமல்ல உலகப் பொருளாதாரத்திலேயே அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

புஷ் நிர்வாகம் ஈராக்கில் ஒரு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதற்கு ஜனநாயகக் கட்சி முழு உடந்தையாக இருந்ததுடன் சர்வதேச அளவில் உள்ள அரசாங்கங்களும் உடந்தையாக செயல்பட்டன. இப்படி எதிர்ப்பின்றி இந்த ஆக்கிரமிப்பு நடைபெற்றது, ஐ.நா-வின் பங்களிப்பு மூலம் தெளிவாக உணர்த்தப்பட்டது. போருக்கான சாக்குப்போக்குகளையும், சதாம் ஹூசேன் வீழ்ச்சியைத் தொடர்ந்து அமெரிக்க ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்வதிலும் ஐ.நா முன்நின்றது. அமெரிக்காவின் ஏகாதிபத்திய போட்டியாளர்களான பிரான்சும், ஜேர்மனியும் குறிப்பாக தங்களது நலன்களுக்கு, ஈராக்கை அடிமைப்படுத்தி மத்திய கிழக்கில் மேலாதிக்கம் செலுத்தும் வாஷிங்டனின் திட்டங்களால் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக எதிர்ப்புத் தெரிவித்ததால்தான் ஐ.நா பாதுகாப்புச்சபையானது ஆக்கிரமிப்பிற்கு சம்பிரதாய அங்கீகார முத்திரை தரவில்லை.

இதனால் அமெரிக்கா தனது அடிப்படை மூலோபாயத்தை மறு பரிசீலனை செய்வதற்கு பதிலாக தீவிர ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், ஈராக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி விளைவைப் பற்றிப் பொருடபடுத்தாத மேலதிக சாகசங்களையும் புதிய பேரழிவுகளையும்தான் வழங்கியது. சர்வதேச மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள ஆழமான நெருக்கடிதான் ஈராக்கில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பின் உந்துசக்தியாகும். புஷ் நிர்வாகம் எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கையும், மத்திய ஆசியாவையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள திட்டங்களை தீட்டியிருப்பது இறுதியாக ஆய்வில், பூகோளப்பொருளாதாரத்திற்கும் தேசிய அரசுகளுக்குமிடையிலான இலாப நோக்கின் அடிப்படை முரண்பாடுகளை, அதன் போட்டியாளர்கள் மீது அமெரிக்காவின் கட்டற்ற பூகோள மேலாதிக்கத்தை நிறுவுவதன் மூலம் வெல்லும் முயற்சியாக இருக்கிறது.

நஜாப் முற்றுகை ஈராக் மக்களுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கையாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது பூகோள அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளவும் தயங்காது. ஈராக்கையே பொருளாதார, மற்றும் சமுதாய பேரழிவில் தள்ளிவிட்டது, எதிர்ப்புக்கள் அனைத்தையும் அடக்குவதற்கு மிகக்கொடூரமான நடவடிக்கைகளை பயன்படுத்த முயன்றுவருகிறது மற்றும் மற்ற நாடுகளிலும், அமெரிக்கா இதையேதான் செய்யும். இப்படிப்பட்ட வாஷிங்டனின் சூறையாடும் திட்டங்களை முறியடிப்பதற்குரிய ஒரேவழி ஈராக்கிலும், மத்திய கிழக்கிலும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி அமெரிக்காவிலும், மற்றும் சர்வதேச அளவில் எல்லா நாடுகளிலும் உள்ள வர்க்க சகோதர, சகோதரிகளை ஏகாதிபத்தியப்போருக்கும், காலனிய ஒடுக்குமுறைக்கும் அடிப்படைக் காரணமாக உள்ள இலாபநோக்கு முறையை ஒழித்துக்கட்ட சோசலிச முன்நோக்கில் ஐக்கியப்படுத்துவதாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved