World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Fighting in Najaf exposes an unpopular, isolated Iraqi regime

நஜாப்பில் நடக்கும் சண்டை செல்வாக்கற்ற, தனிமைப்படுத்தப்பட்ட ஈராக் ஆட்சியை அம்பலப்படுத்துகிறது

By Peter Symonds
17 August 2004

Use this version to print | Send this link by email | Email the author

தற்போது ஈராக் நகரான நஜாப்பில் நடைபெற்று வருகின்ற போர் எந்த அளவிற்கு ஈராக்கின் இடைக்கால பிரதமர் இயட் அல்லாவியின் இடைக்கால அராசங்கம் தனிமைபடுத்தப்பட்டு நிற்கிறது மற்றும் வாஷிங்டனை சார்ந்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கிளர்ச்சியாளர், ஷியா மதபோதகர் மொக்தாதா அல் சதரின் செல்வாக்கு வளர்ந்து வருவது கண்கூடாகத் தெரிய வந்துள்ள அதேவேளை, ஞாயிறன்று தொடங்கிய ஐ.நா ஏற்பாடு செய்த மூன்று நாள் தேசிய மாநாட்டில் அல்லாவி மிக ஆவேசமான கண்டனங்களை எதிர் கொள்ள வேண்டிவந்தது. மாநாட்டு பிரதிநிதிகள் பழைய நஜாப் நகரிலும் அல் சதரின் குடிப்படைகள் சூழ்ந்துகொண்டுள்ள இமாம் அலியின் புனிதத்தலத்திலும், அமெரிக்கத் தாக்குதல்களை நிறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

இந்த மாநாடு வாஷிங்டன் ஆதரவோடு ஏற்பாடு செய்யப்பட்டது, அல்லாவியின் ஆட்சிக்கும், அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கும் ஆதரவுள்ளது என்பதைக் காட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடாகும். அதன் 1000- பிரதிநிதிகள் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஐ.நா, அந்த மாநாட்டில் 300- பேர் கலந்துகொள்ளச் செய்வதற்கு ஏற்பாடு செய்வதற்காக அதனைத் தள்ளிவைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்ட அளவுக்கு அது பிரதிநிதித்துவம் இல்லாதது என்பது வெளிப்படையானதாக இருந்தது. அல் சதரின் ஆதரவாளர்களும் இதர பல ஈராக்கிய அமைப்புக்களும் அந்த மாநாட்டை மோசடி என்று வர்ணித்து அதில் கலந்து கொள்ள மறுத்துவிட்டன.

அந்த மாநாடு முற்றுகையிடப்பட்டது போன்ற சூழ்நிலையில், மத்திய பாக்தாத்திலுள்ள பசுமை மண்டலத்தில் நடைபெற்றது. அந்த மண்டலத்தை அமெரிக்க டாங்கிகள் காவல் புரிகின்றன, சுற்றுப்புறப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது மற்றும் பத்திரிகையாளர்கள் தலைக்கான கவச தொப்பிகளையும், பாதுகாப்பு சட்டைகளையும் அணிந்து கொண்டு அந்தக் கட்டிடத்திற்குள் நுழையுமாறு கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கின்றனர். இவ்வளவு விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், ஞாயிறன்று அந்த மாநாட்டு கட்டிடத்தை பல மோட்டார் குண்டுகள் அதிரச்செய்தன.

ஐ.நா மற்றும் அமெரிக்க அதிகாரிகளால் "ஜனநாயகத்தை நோக்கி ஒரு அடியெடுப்பு" என்று அபத்தமாக பாராட்டப்பட்டாலும், இந்த நாடக மாநாட்டின் நோக்கம் அரசாங்கக் கொள்கையை ஆராய்வதற்கும், ஜனவரியில் தேசிய தேர்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு தேசிய நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான். அப்படியிருந்தும் நஜாப் நிகழ்ச்சிகளும் நாட்டின் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு நிலவும் எதிர்ப்பும் தான் அந்த மாநாட்டின் முதல் இரண்டு நாட்களை ஆக்கிரமித்துக் கொண்டன. இந்த அரிதாக செய்யப்பட்ட சூழ்நிலையிலும் நஜாப்பில் அமெரிக்காவும், அதன் அரசியல் அடி வருடிகளும் முன்னேற்பாடு செய்துவருகின்ற இரத்தக்களரி தொடர்பான சாதாரண ஈராக்கிய மக்களின் ஆவேசம் மாநாட்டிலேயே உணரப்பட்டது.

ஞாயிறன்று ஈராக்கிற்கான ஐ.நா சிறப்புத்தூதர் Ashraj Jehangir Qazi தமது உரையை முடித்ததும் டஜன் கணக்கான மாநாட்டுப் பிரதிநிதிகள் துள்ளிக் குதித்து எழுந்துநின்று "நஜாப்புக்கு ஆதரவு" என முழக்கமிட்டனர் மற்றும் தங்களது முஷ்டிகளை உயர்த்தி ''விமானத்தாக்குதல்களும், குண்டுவீச்சும் நடத்துகின்றவரை நாம் மாநாடு நடத்த முடியாது'' என்று கூச்சலிட்டனர். அதற்குப் பின்னர் பேசிய ஒவ்வொரு பேச்சாளரும் அல்லாவி சண்டையை நிறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர் மற்றும் 100 பிரதிநிதிகள் மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்வதாக அச்சுறுத்தினர்.

ஷியைட் அரசியல் குழுவைச்சார்ந்த Fallah Hassan: ''நஜாப்பில் நடந்து கொண்டிருப்பதற்கு ஈராக் அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும். நஜாப்பிலுள்ள எங்களது மக்களை தாக்குவதற்காக அது அமெரிக்கப் படைகளை கொண்டு வந்திருக்கிறது. நஜாப்பிலும், ஈராக்கின் பல பகுதிகளிலும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. எங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் 24- மணி நேரத்திற்குள் மாநாட்டிலிருந்து விலகிக்கொள்வோம்." எனக் கூறினார்.

இறுதியில் கண்டனம் தெரிவித்தவர்கள் கீழே இறங்கி வந்தனர், தனது போராளி குடிப்படையினரை ஆயுதங்களை துறக்கவைப்பதற்கும் "அரசியல் நிகழ்ச்சிப்போக்கில்" பங்கெடுப்பதற்கும் அல் சதரை சம்மதிக்கவைக்க நஜாப்பிற்கு 50- பிரதிநிகளை அனுப்ப சம்மதித்தனர். வேறு வார்த்தைகளில் சொன்னால், அமெரிக்கா திணித்துள்ள ஆட்சியையும் அதன் அமைப்புக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அல் சதரை அவர்கள் கேட்பார்கள். இதைப்பற்றி கருத்து தெரிவித்த Fallah Hassan இந்த ஆலோசனை "வெறும் கண்துடைப்பு" என்று வர்ணித்தார், என்றாலும் அவரது ஆதரவாளர்களுடன் மாநாட்டில் இருந்தார்.

என்றாலும் அந்தத்தீர்மானம் அல்லாவி விரும்பியபடி அமையவில்லை. நஜாப்பில் சென்றவாரம் நடைபெற்ற கடுமையான சண்டைக்கு நடுவில், தான் "இந்த சட்டவிரோத குற்றவாளிகளுக்கு தக்க பாடம் புகட்டுவதாக" அறிவித்து அல் சதரின் மெஹ்தி இராணுவப்படையை நசுக்க அமெரிக்க இராணுவத்திற்கு பச்சை விளக்கு காட்டினார். வெள்ளியன்றும் சனிக்கிழமையன்றும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் விரைவில் முறிந்தன, ஒரேயடியான தாக்குதலுக்கு களம் அமைத்தது. தற்காலிகமாவது அமெரிக்க இராணுவம் நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு செயலாற்ற தூண்டுமாறு இப்பொழுது அல்லாவி நிர்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறார், அதேவேளை மாநாட்டின் பேராளர்கள் இன்று நஜாப் பயணமாகிறார்கள்.

தேசிய மாநாட்டில் எழுந்த விமர்சனங்கள், அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு பரந்த எதிர்ப்பும் அல் சதர் மற்றும் ஏனைய எதிர்ப்புக் குழுக்களுக்குமான ஆதரவின் ஒரு மங்கலான எதிரொலிப்பாகும். அல்லாவி, பசுமை மண்டலத்தில் அமெரிக்க டாங்கிகளின் பின்னே மறைந்து கொண்டுள்ள அதேவேளை, கடந்த வாரம் முழுவதும் அல் சதருக்காக ஏனைய நகரங்களிலிருந்தும் மாநகர்களிலிருந்தும் ஆதரவு நஜாப்பிற்கு வந்து கொண்டிருக்கிறது.

ஆயுதம் ஏந்திய அல்-சதர் விசுவாசிகள் பாக்தாதிலுள்ள ஏழ்மை நிறைந்த சதர் நகரத்து ஷியைட் புறநகர் பகுதியிலிருந்து வந்தனர். பல்லூஜாவிலிருந்து 40 டிரக் வண்டிகள் நிறைய உணவு, தண்ணீர் மற்றும் மருந்துப் பொருட்கள் வந்தன. பேச்சாளர் Ghalib Yusuf al-Eisawe விளக்கினார்: நஜாப் மக்களுக்காக உண்மையான சகோதரத்துவத்தை வெளிப்படுத்தவும் இங்குள்ள மக்களுக்கு ஆதரவு தரவும் நாங்கள் இங்கே வந்தோம்." இவண்டிகளுக்கு பல்லூஜா போலீசால் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஏனைய ஆதரவாளர்கள் தெற்கு ஈராக் நகர்களிலிருந்து வந்து சேர்ந்தனர்.

திங்களன்று, அல் சதரையும் புனிதத் தலத்தையும் காப்பதற்கு மனிதக் கேடயங்களாக செயல்படுவதற்கு உறுதி எடுத்துக்கொள்வதற்கு, சுமார் 2000 தொண்டர்கள் இமாம் அலி மசூதி முற்றத்தில் திரண்டனர். "அல்லாவி நீ கோழை, நீ அமெரிக்கர்களின் ஏஜண்ட், அல்லாவி நீ எமக்குத் தேவையில்லை" என்று அவர்கள் முழக்கமிட்டனர். வட நகரமான கிர்குக் நகரிலிருந்து வந்த ஒரு துருக்கியரான Ugel Abdel Hussein ரியூட்டர் செய்தி நிறுவனத்திடம், "நஜாப்பிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேறும்வரை நாங்கள் புனிதத்தலத்தை விட்டு அகலமாட்டோம்" என்றார். நாங்கள் கொல்வோம்." பாதில் ஹமீது, "டாங்கிகளின் முன்னே தரையில் நான் படுப்பேன், அல்லது சதரையும் நஜாப்பையும் காப்பாற்ற நான் அமெரிக்கர்களை கொல்வேன்" என்று அறிவித்தார்.

மூத்த குடிப்படை கொமாண்டர் ஷேக் அகமது ஷெய்பானி ஊடகத்திடம் கூறினார்: "இவர்கள் அமெரிக்கர்களைத் தடுக்கக்ககூடியவர்கள் ஏனென்றால் இவர்கள் குடிமக்கள். அவர்கள் அங்கிருப்பதால் அமெரிக்கர்கள் இமாம் அலி புனிதத்தலத்தை தாக்கமாட்டார்கள்... அவர்கள் சில சலுகைகளைப் பெறக்கூடும் வகையில் எங்களை பலவீனப்படுத்த, அதற்கு முயற்சிக்க அமெரிக்கர்கள் எங்கள் மீது இராணுவ அழுததத்தை பிரயோகிக்கிறார்கள். அது நடக்காது. நாங்கள் போராடத்தயாராக இருக்கிறோம் மற்றும் நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்" என்றார்.

அல் ஜெசீரா தொலைக்காட்சி அலைவரிசைக்கு சனிக்கிழமையன்று தந்த கூற்றுக்களில், அல்லாவி அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் அல் சதர் வலியுறுத்திக் கூறினார். ''இது ஈராக் மக்களது விருப்பமாகும். நான் அவர்களுக்காக இங்கிருந்து போரிட்டுக்கொண்டிருக்கிறேன்" என்றார் அவர். "அமெரிக்கர்கள் ஊக்குவித்திருக்கும் அரசாங்கம் இது. அவர்களது தேசிய கூட்டம் என்று கூறப்படுவதில் பங்கெடுத்துக்கொள்ள நான் மறுத்துவிட்டேன், எனவேதான் எங்களை குறிவைத்திருக்கிறார்கள். ஆக்கிரமிப்பு நீடிக்கின்ற வரை நான் எந்த அரசியல் விவாதங்களிலும் கலந்து கொள்ள மாட்டேன்'' என்றார்.

இன்று நஜாப்பில் நடக்கும் பேச்சுவார்த்தைகளின் முடிவு எதுவாகயிருந்தாலும், அல் சதர் நிபந்தனை எதுவுமில்லாமல் சரணடைவதைத் தவிர வேறு எதையும் வாஷிங்டன் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அல் சதரின் எண்ணிக்கை குறைந்த ஆயுதபலமற்ற போராளிகள் மற்றும் ஆதரவாளர்களை ஒரு தலைப்பட்சமாக கொன்று குவிப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக, இமாம் அலியின் புனிதத்தலத்தைச் சுற்றி 500- மீட்டருக்குள் பழைய நகரில் தனது டாங்கிகளை அமெரிக்க இராணுவம் கொண்டுவந்திருக்கிறது. மசூதி மற்றும் கல்லறையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற கடுமையான மோதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவத்தினரும் எண்ணிறைந்த போராளி குடிப்படையினரும் சிவிலியன்களும் மடிந்திருக்கின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஷியைட்டுக்கள் உயர்வாக மதிக்கும் இமாம் அலியின் புனிதத்தலத்தின் மீது தாக்குதல் நடத்துவதை இன்றுவரை அமெரிக்க இராணுவம் தவிர்த்தே வந்திருக்கிறது. அந்த பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டால் ஈராக்க்கிலும், மத்திய கிழக்கு முழுவதிலும் அதனால் ஏற்படுகின்ற வெடித்துச் சிதறும் அரசியல் சிக்கல்களின் தன்மை குறித்து கவலையடைந்துள்ள வாஷிங்டன் அத்தைகய தாக்குதல் எதுவும் நடந்தால் அதற்கு ஈராக் முகமூடியை போடுவதற்கு முயன்றுவருகிறது. அல்லாவி சென்ற வாரக்கடைசியில், இமாம் அலி மசூதியையும் பழைய நகரையும் ஈராக் பாதுகாப்புப்படைகள் தாக்கி பிடிக்கும் என்று கடமை தவறாமல் அதை அறிவித்தார்.

அதன் திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்கனவே இடைக்கால அரசாங்கம் சங்கடங்களைச் சந்தித்திருக்கிறது. Detroit Free Press பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையில், நூற்றுக்கு மேற்பட்ட ஈராக் தேசிய காவலர்களும், ஒரு பட்டாலியன் ஈராக் போர்வீரர்களும் ஏற்கனவே போரிட மறுத்துவிட்டனர். பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தந்துள்ள தகவலின்படி, ''ஒரு முழு பட்டாலியனை சேர்ந்தவர்களும், தங்ளது துப்பாக்கிகளை தூக்கியெறிந்து விட்டார்கள் என்று எங்களுக்கு ஒரு அறிக்கை வந்திருக்கிறது. இதை நாங்கள் எதிர்பார்த்தோம், மீண்டும் மீண்டும் இதை எதிர்பார்க்கிறோம்'' என்று கூறினார்.

இராணுவ முன்னேற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன. அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. உள்ளூர் மக்கள் வெளியேறி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ஒரு ஆபத்தான சமிக்கை என்னவென்றால் ஞாயிறன்று எல்லாப் பத்திரிகையாளர்களையும் அந்த நகரத்தைவிட்டு வெளியேறுமாறு ஈராக்கிய போலீசார் கட்டளையிட்டுள்ளனர். அதிகாரிகள் இந்த நடவடிக்கையை அவர்களது (பத்திரிகையாளர்கள்) சொந்தப் பாதுகாப்பிற்குத்தான் என்று சொன்னாலும், அமெரிக்க இராணுவம் நஜாப் நகரில் புரியவிருக்கும் குற்றங்களுக்கு நேரடி சாட்சியம் எதுவும் இருப்பதை அது விரும்பவில்லை என்பதை ஈராக் போலீசாரின் செயல் தெளிவுபடுத்துகிறது.

பிரிட்டனிலிருந்து பிரசுரிக்கப்படும் டெலிகிராப் செய்திப்பத்திரிகை தந்துள்ள தகவலின்படி இரண்டு மணிநேரத்திற்குள் நகரத்தைவிட்டு வெளியேறவேண்டும் அல்லது கைது செய்யப்படுவார்கள் என்று பத்திரிகையாளர்களுக்கு பகிரங்கமாக அறிவிப்புச் செய்யப்பட்டது. 30-க்கு மேற்பட்ட நிருபர்கள் தங்கியிருக்கும் Sea ஓட்டல் மீது அந்த இரண்டு மணி நேரம் முடிந்ததும் துப்பாக்கிக்குண்டுகள் தாக்கின. அதற்குப்பின்னர் போலீசார் அந்த ஓட்டலுக்கு வந்து அங்கிருந்தவர்களை கைது செய்ய முயன்றனர். திரும்பத்திரும்ப மிரட்டப்பட்டதாகவும், தொந்தரவு கொடுக்கப்பட்டதாகவும் கூறிய பத்திரிகையாளர்களின் தூதுக்குழு ஒன்றை, அந்த நகர கவர்னர் சந்திக்க மறுத்துவிட்டார். இன்டிபெண்டட் பத்திரிகை தந்துள்ள தகவலின்படி, நேற்று அந்த ஓட்டலில் ஒரு போலீஸ் லெப்டினென்ட் விடுத்த அறிக்கையில் அந்தக் கட்டிடத்தை சுற்றிலும் துப்பாக்கி ஏந்தியவர்கள் நின்று கொண்டிருப்பதாகவும், அங்கிருந்து வெளியேறும் எவரையும் சுட்டுக்கொன்று விடுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

நஜாப் படுகொலைகளால் ஏற்படும் அரசியல் தாக்கங்கள் குறித்து நிலவுகின்ற கவலைகளின் ஒரு அறிகுறிதான் பத்திரிகையாளர்கள் நடமாட்டத்தின் மீதான பதட்டமாக இருந்தது. சில மணி நேரத்திற்குள் இமாம் அலியின் சமாதியையும், அதைச்சுற்றியுள்ள பழைய நகரின் பெரும் பகுதியையும் தரைமட்டமாக்கிவிடுகின்ற இராணுவ வல்லமை பென்டகனிடம் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எந்தத் தாக்குதல் நடந்தாலும் அது ஈராக் முகமூடியோடு நடந்தாலும், அல்லது இல்லாவிட்டாலும் இது ஒரு கண்டனப் புயலையும், எதிர்ப்பையும் ஈராக் முழுவதிலும் அந்த பிராந்தியத்திலும் உருவாக்கிவிடும்.

நஜாப்பில் நடைபெற்ற அமெரிக்க தாக்குதல்கள் பாக்தாத்திலும், பல்லூஜா, சமாரா, அமாரா, Baquba போன்ற இதர நகரங்களிலும் ஏற்கனவே சண்டையை கிளப்பிவிட்டிருக்கிறது. பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் அமைச்சரக கட்டிடங்கள் வெளிநாட்டவர் வழக்கமாக தங்குகின்ற ஷெரட்டன் மற்றும் பாலஸ்தீன் ஓட்டல்களில் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. சதர் நகரில் ஒரு அமெரிக்க டாங்கி தாக்கப்பட்டு தீப்பிடித்து எரிந்தது, உள்ளிருந்தவர்கள் தப்பி ஓட நிர்பந்திக்கப்பட்டனர். கிறிஸ்டியன் சைன்ஸ் மானிட்டர் பத்திரிகைக்கு பேட்டியளித்த உள்ளூர் போராளி தளபதி ஒருவர், ''அமெரிக்கர்கள் நஜாப் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்திக்கொண்டிருப்பார்களானால் பாக்தாத்தில் அவர்கள் வாழ்வையே நரகமாக்கிவிடுவோம்'' என்று எச்சரித்தார்.

See Also :

நஜாப்பில் அமெரிக்க அட்டூழியம்

Top of page