World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

Russian-Georgian tensions escalate

ரஷ்யா- ஜோர்ஜியா பதட்டங்கள் முற்றுகின்றன

By Simon Wheelan
13 August 2004

Back to screen version

ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்து சென்றுவிட்ட குடியரசுகளான தெற்கு Ossetia மற்றும் Abkhazia- வில் ரஷ்யப்படைகள் இருப்பதை சவால்விடுமாறு ஜோர்ஜியா அரசாங்கத்தை லண்டனும், வாஷிங்டனும், ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன என்பதற்கு பெருகிவரும் சான்றுகள் உருவாகக்கொண்டுள்ளன. கருங்கடலுக்கும் எண்ணெய்வளம்மிக்க காஸ்பியனுக்கும் இடையில் மூலோபாய முக்கியத்துவமான பகுதியில் அமைந்து, இரண்டு முக்கிய எண்ணெய் எரிவாயு குழாய்கள் இணைப்பு செல்லுகின்ற பகுதியில் அமைந்து, ஜோர்ஜியா, ரஷ்யா, துருக்கி, அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனிய எல்லைகளில் உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி Eduard Shevardnadze- யிடமிருந்து பதவியை பறித்துக்கொண்ட, சென்ற டிசம்பரில் அமெரிக்கா ஆதரவுடன் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பில், ஜோர்ஜியாவின் ஜனாதிபதியாக அமர்த்தப்பட்ட Mikhail Saakashvili, தேவைப்பட்டால் படைபலத்தை பயன்படுத்தி சிதைத்துவிட்ட தனது குடியரசை ஒன்றுபடுத்த கருதியிருப்பதாக தெளிவுபடுத்தியுள்ளார்.

கடற்கரை மண்டலமான Adjaria மற்றும் பிரதான துறைமுகமான Batumi- ல் மே மாதம் மீண்டும் தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டிக்கொண்ட ஜோர்ஜியா, Abkhazia விற்கு எதிராக தனது அச்சுறுத்தல்களை முடுக்கிவிட்டிருக்கிறது. தெற்கு Ossetia எல்லையில் ஜோர்ஜியாவின் துருப்புக்கள் குவிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன, அங்கு ரஷ்யத்துருப்புக்கள் நிலை கொண்டிருக்கின்றன.

ஆகஸ்ட் 12 வியாழன், அதிகாலையில், எல்லையின் ஜோர்ஜியா பகுதியில் இரேடி கிராமம் அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் குறைந்தபட்சம் மூன்றுபேர் கொல்லப்பட்டனர். ஜோர்ஜியா படைகள் முதலில் சுட்டதாகவும், தனது எல்லையில் அதனால் 7-பேர் காயமடைந்ததாகவும் தெற்கு Ossetia சொன்னது. ஆனால் ஒரு ரஷ்ய கேர்னல் தெற்கு Ossetia முதலில் சுட்டதாகக் கூறினார் என்று மேற்கோள் காட்டப்பட்ட செய்திகள் வந்தன என்றாலும் பின்னர் அதை அவர் மாற்றிக்கொண்டார்.

கடந்த வாரங்களில் மாஸ்கோவிற்கும், Tbilisi- க்கு மிடையே பதட்டங்கள் ஆழமாக முற்றிக்கொண்டு வந்ததைத் தொடர்ந்து இந்தச்சாவுகள் நடந்திருக்கின்றன. ஜோர்ஜியா, ரஷ்யா மற்றும் தெற்கு Ossetia படைகள் பிரிந்து சென்றுவிட்ட குடியரசில் ரோந்துபணிகளை மேற்கொண்டிருக்கின்ற 12 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் ஒரு பேரத்தை கைவிடப்போவதாக ஜூலை 20-ல் Saakashvili, அச்சுறுத்தினார். ஆகஸ்ட் 3- செவ்வாயன்று Saakashvili, Abkhazia பகுதிகளில் "சட்டவிரோதமாக" நுழையும் கப்பல்களை தாக்க தமது படைகள் தயாராக இருப்பதாக தொலைக்காட்சியில் அறிவித்தார்.

கடந்த 10-ஆண்டுகளுக்கு முன்னர் அந்தக் கடற்பரப்பில் ஜோர்ஜியா தனது கட்டுப்பாட்டை இழந்தது. அப்படியிருந்தும் Saakashvili விடுத்துள்ள எச்சரிக்கையில் ''நான் இதற்கு முன்னர் கட்டளையிட்டிருப்பதைப்போன்று Abkhazia வில் நுழையும் ஒவ்வொரு கப்பலையும் சுட்டு மூழ்கடிப்பதற்கு நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

அருகாமையிலுள்ள ரஷ்யாவின் சோச்சி உல்லாசப்பகுதிகளில் இருந்து படகுகள் மூலம் ரஷ்யாவின் மக்கள் விடுமுறைக்கால பொழுது போக்கிற்காக கருங்கடல் கரைக்கு வருவது வாடிக்கை இது பிரபலமான சுற்றுலாத்தளம், தனது வார்த்தைகளை ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் கவனிக்கவேண்டும் என்று Saakashvili அச்சுறுத்தியுள்ளார். அதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு ஜோர்ஜிய ரோந்துப்படகு கருங்கடலில் ஒரு சிவிலியன் கப்பல் மீதுசுட்டது.

இந்த அச்சுறுத்தல்கள் Tbilisi- நெருப்போடு விளையாட விரும்புகிறது என்பதை காட்டுவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் எச்சரித்தார். ''ரஷ்ய குடிமக்களது வாழ்விற்கு மிரட்டலோ அல்லது அவர்களை காயப்படுத்தவோ எந்த முயற்சி நடந்தாலும் அதற்குத்தேவையான பதிலடி கிடைக்கும்'' என்று மொஸ்கோ ஒரு அறிக்கையில் எச்சரித்திருக்கிறது.

Saakashvili தனது ஆத்திரமூட்டும் வார்த்தைகளை கூறிய இரண்டு நாட்களுக்குப் பின்னர் வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பவல்-ஐ சந்தித்தார். ரஷ்யாவுடன் எந்த மோதலையும் தவிர்க்க விரும்பியதாக கூறினாலும் ''அமைதியான பதட்டங்களையே'' விரும்பினாலும், Saakashvili மீண்டும் ரஷ்ய சுற்றுலாப்பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். ''Abkhazia ஓய்வு எடுக்கும் இடமல்ல. அது ஒரு போர் மண்டலம் அங்கிருந்து 30000- ஜோர்ஜிய மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்'' என்று அவர் கூறினார்.

Saakashvili தினசரி பவல் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு தேசிய ஆலோசகர் கொன்டலீசா ரைஸ் ஆகியோருடன் தொடர்புகொண்டிருப்பது பற்றி பெருமையடித்துக் கொண்டார். மேற்கு நாடுகளுடன் தனக்குள்ள தொடர்புகளால் துணிச்சல் பெற்றவராக காணப்படுகிறார். அண்மைய மாதங்களில் ஜோர்ஜியா, நேட்டோவுடன் தனது உறவுகளை வலுப்படுத்திக்கொண்டிருக்கிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து ஒரு பில்லியன் டாலர்கள் உதவி பெற்றிருக்கிறது.

காக்கஸ் பகுதியை வடக்கு Ossetia வுடன் ரஷ்யாவிலும் தெற்கு Ossetia வுடன் ஜோர்ஜியாவிலும் இணைக்கின்ற சுரங்கப்பாதையின் தெற்கு Ossetia நுழைவுவாயில் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று Tbilisi கோரியுள்ளது, கள்ளக்கடத்தல் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த கொந்தளிப்பு வெடித்துச்சிதறும் நிலவரத்தை தூண்டிவிடுகின்ற வகையில் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க இராணுவப்படைகள் தற்போது ஜோர்ஜிய இராணுவத்திற்கு பயிற்சி தருவதில் ஈடுபட்டுள்ளன, அதன்மூலம் பிரிந்துவிட்ட குடியரசுகளில் ரஷ்ய இராணுவம் இருப்பதற்கு ஆட்சேபனைகளை கிளப்புமாறு தூண்டிவருகின்றன.

சென்ற மாதம் பிரதமர் டோனி பிளேயருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக லண்டன் விஜயத்தை மேற்கொண்ட Saakashvili, மிக வெளிப்படையாக ஒன்றைக்கூறினார்: "காக்கசஸ் எண்ணெய்க் குழாய் தொடர்பில் மட்டுமல்லாமல், அந்த மண்டலத்திலேயே பிரிட்டன், மேலும் ஈடுபாடு கொண்டுவருகிறது. சென்ற வாரம் பிரிட்டனின் சிறப்புப்படைகள் ஜோர்ஜியா இராணுவத்துடன் சேர்ந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன என்று Saakashvili குறிப்பிட்டார். பிரிட்டன் தற்போது அமெரிக்கா மற்றும் துருக்கிக்கு அடுத்து ஜோர்ஜிய ஆயுதப்படைகளுக்கு மூன்றாவது பெரிய பங்களிப்புச்செய்கின்ற நாடாக உள்ளது என்றும் Saakashvili தெரிவித்தார்.

டைம்ஸ் செய்திப் பத்திரிகை தந்துள்ள தகவலின்படி, ஏறத்தாழ 160- பிரிட்டிஷ் துருப்புக்கள் ஜோர்ஜியா படைகளுக்கு பயிற்சி தருவதில் சம்மந்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. "ஜோர்ஜியன் எக்ஸ்பிரஸ் 2004" என்ற பெயரில் இராணுவ நடவடிக்கைகளுக்கான பயிற்சி ஜூலை 5-முல் 18-வரை Vaziani இராணுவ முகாமில் நடத்தப்பட்டது. அந்தப் பயிற்சியில் போர்வீரர்களுக்கு சோதனை சாவடிகளையும், ரோந்து படைகளையும் நடத்துவதற்கு பயிற்சியளிக்கப்பட்டது இவை ஜோர்ஜிய இராணுவம் அண்மையில் தெற்கு Ossetia வில் நடத்திய ஊடுருவல்களுக்கு அவசியமான பயிற்சியாக இருந்திருக்கிறது

Tbilisi க்கும் லண்டனுக்குமிடையில் நிலவுகின்ற உறவின் தரம் உயர்ந்துகொண்டு வருகிறது என்பதை நிரூபிக்கின்ற வகையில் Saakashvili, தற்போது பிரிட்டனின் தளபதி ஜெனரல் சேர் கேரி ஜோன்சன் இராணுவ உதவியில் ஒருங்கிணைப்பு செய்வதற்காக நிரந்தரமாக ஜோர்ஜிய பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து வருகிறார் என்பதையும் தெரிவித்தார். இந்தப் பயிற்சிகளில் ஜோர்ஜிய அதிரடிப்படைவீரர்கள் காலாட்படைப் பிரிவோடு பயிற்சியில் ஈடுபட்டனர். ஜோர்ஜிய அதிகாரிகளுக்கும் புதிதாக ராணுவத்தில் சேர்ந்துள்ள அதிகாரிகளுக்கும் (NCO) பிரிட்டிஷ் ஆலோசகர்கள் மேலும் பயிற்சிகளை தருவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பென்டகன், ஜோர்ஜியாவில் தனது இராணுவ நடவடிக்கைகளை ஓய்வுபெற்ற அமெரிக்க இராணுவ அதிகாரிகள் குழுவிற்கு ஒப்பந்த அடிப்படையில் தந்துவிட முடிவு செய்தது. அந்த நேரத்தில் மேற்கு நாட்டு தூதர் ஒருவர் கார்டியன் பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கும் போது, ''ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை காத்து நிற்பதற்கும் அதை நிறைவேற்றுவதற்கும் வல்லமையுள்ள இராணுவ பிரிவுகளை உருவாக்குவது நோக்கங்களில் ஒன்று'' என்று குறிப்பிட்டார்.

2002 முதல் ஜோர்ஜியாவில் அமெரிக்க இராணுவம் உள்ளது, அப்போது இராணுவ பயிற்சியாளர்களும், ஆலோசகர்களும் செச்சன்யா வுடன் உள்ள எல்லையில் ஜோர்ஜியாவின் பங்கீசி கோர்ஜ் மலைப்பகுதிகளில் இருந்ததாக கூறப்பட்ட அல்கொய்தா படைகளோடு சண்டையிடுவதற்காக ஜோர்ஜியா வந்தனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved