World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

A letter from Tom Mackaman

SEP candidate in Illinois thanks supporters of ballot access fight

ரொம் மக்கமனிடமிருந்து ஒரு கடிதம்

இல்லினோய் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் வாக்கு சீட்டில் இடம்பெறுவதற்கான போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி

By Tom Mackaman
12 August 2004

Back to screen version

நவம்பர் தேர்தலில் தான் வாக்குசீட்டில் இடம்பெறுவதை தடுப்பதற்கு, ஜனநாயகக் கட்சி, மேற்கொண்ட முயற்சிகளை கண்டித்து சம்பைன் கவுண்டி கிளர்க் அலுவலகத்திற்கு கடிதங்களை எழுதிய தனிப்பட்டவர்களுக்கு நன்றி தெரிவித்து, இல்லினோய் மாநில சட்டசபைக்கு 103-வது மாவட்டத்திலிருந்து போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் ரொம் மக்கமன் கீழ்க்கண்ட கடிதத்தை எழுதியுள்ளார். 2,009 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் கையெழுத்துக்கள் அடங்கிய முன்மொழிவு மனுக்களை வாக்குசீட்டில் தன்னை இடம்பெறஞ்செய்வதற்காக ரொம் மக்கமன் தாக்கல் செய்தார், அது தேவைப்படும் 1325 கையெழுத்துக்களுக்கு மேற்பட்டதாகும். தாக்கல் செய்யப்பட்டுள்ள கையெழுத்துக்களில் பாதிக்கு மேற்பட்டவை செல்லாதவை என்று ஜனநாயகக் கட்சி அலுவலர்கள் ஆட்சேபனை மனுக்களை தாக்கல் செய்தனர்.

மக்கமன் மனுக்களில் கையெழுத்திட்ட நூற்றுக்கணக்கான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்கு ஜனநாயகக் கட்சி மேற்கொண்ட முயற்சியையும், சோசலிச, போர் எதிர்ப்பு வேட்பாளரை வாக்குப்பதிவிலிருந்து நீக்கிவிட முயன்றதையும் கண்டித்து உலகம் முழுவதிலும் இருந்து உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் 200-க்கு மேற்பட்டவர்கள் மின்னஞ்சலை அனுப்பினார்கள். இந்த நடவடிக்கையை சம்பைன் கவுண்டி அதிகாரிகள் விரிவாக ஆராய்ந்தபோது ஜனநாயகக் கட்சிக்காரர்களின், ஆட்சேபனைக்கு அடிப்படை உண்மை எதுவுமில்லை என்றும் பாரபட்ச மற்றும் ஜனநாயக விரோத நோக்கங்களின் அடிப்படையில் அவர்களது முயற்சி எழுப்பப்பட்டது என்பதும் தெளிவாயிற்று. ஜூலை 29-ல் ஆட்சேபனையை எழுப்பிய ஜனநாயகக் கட்சி அலுவலர் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். ஆகஸ்ட் 2-ல் சம்பைன் கவுண்டி தேர்தல் வாரியம் நவம்பர் 2-ல் வாக்குப்பதிவில் ரொம் மக்கமன் பெயர் இடம்பெறுமென்று கட்டளையிட்டது.

அன்பிற்குரிய ஆதரவாளர்களே,

சோசலிச சமத்துவக் கட்சி என்னுடைய பெயரை இல்லினோய் வாக்குச்சீட்டில் இடம்பெறச் செய்வதற்கான போராட்டத்தில் ஜனநாயகக் கட்சிக்கு எதிராக போராட நேரிட்டு வெற்றி பெற்றதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது ஜனநாயக உரிமைகளுக்கு கிடைத்திருக்கிற ஒரு வெற்றி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்திற்காக நம் கட்சி நடத்திவரும் போராட்டத்தில் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடவடிக்கையாகும்.

நவம்பர் தேர்தலில் SEP பங்கெடுத்துக்கொள்வதற்கும் எனது உரிமையை நிலைநாட்டி வருவதற்கும் சம்பைன் கவுண்டி எழுத்தருக்கு கடிதம் எழுதிய உங்கள் அனைவருக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது நியமன மனுக்களில் கையெழுத்திட்டவர்களின் வாக்குரிமையை பறிப்பதற்கும், மற்றும் இரண்டு பெருநிறுவன மேலாதிக்க கட்சிகளுக்கான சோசலிசக் மாற்றீட்டை தேர்தலிலிருந்தே அகற்றவும் இல்லினோயில் உள்ள ஜனநாயகக் கட்சி எந்திரத்தால் மேற்கொள்ளப்பட்ட அவர்களின் முயற்சியை முறியடிப்பதில் உங்களது குரல்களின் பங்களிப்பு பெரும் வழியை வழங்கியது.

உலக சோசலிச வலைத்தளம் எல்லாப் பகுதிகளிலும் விளக்கம் தந்துகொண்டிருந்ததைப்போல், தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள மிக அவசரமான பிரச்சனையான ஈராக் போர்பற்றி அமெரிக்காவில் அரசியல் விவாதம் நடத்தப்படுவதை அடக்கி ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்டுதான் SEP-ஐ வாக்குச்சீட்டிலிருந்து நீக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரச்சனையில் எந்த விவாதமும் நடத்துவதை இருகட்சி முறையால் சகித்துக்கொள்ள முடியாது, ஏனென்றால் போர்- ஏகாதிபத்திய மற்றும் நவீன-காலனித்துவப்போர்---- அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டின் பொதுக்கருத்துக் கொள்கையை பொதிந்து இருக்கிறது, இவற்றிற்கு இரண்டு பெரிய கட்சிகளும் முற்றிலும் அடிபணிந்து கிடக்கின்றன. வெகுஜன பொதுமக்கள் எதிர்ப்பு தற்பொழுது போருக்கு எதிராக உருவாவது பற்றி கவலைகொண்டு, குடியரசுக் கட்சிக்காரர்களுக்கு சற்றும் குறைவின்றி, அவர்களைப் போன்று ஜனநாயகக் கட்சிக்காரர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் போர்பற்றி எந்த விவாதமும் நடைபெறாது அடக்குவதில் மிக அவசரமாக கவனம் செலுத்தி வந்தனர்.

ஜனநாயகக் கட்சிக்காரர்கள் SEP யை வாய்மூடப்பண்ண முயற்சித்து நாணயமற்ற ஒரு ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டனர், ஏனென்றால் கோடிக்கணக்கான அமெரிக்க மக்களது மத்தியில் எதிரொலிக்கின்ற, உடனடியாக அமெரிக்க துருப்புக்கள் வெளியேற வேண்டும்----- அதேபோல உள்நாட்டு பாதுகாப்புத்துறை, தேசபக்த சட்டம் மற்றும் தொடர்புடைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை இரத்து செய்யக் கோரும் நமது கோரிக்கையைக் கண்டும், மேலும் பாதுகாப்பு மற்றும் சிறந்த ஊதியம் தருகின்ற வேலைவாய்ப்புக்களையும், சுகாதார சேவை, வீட்டுவசதி, மற்றும் கல்வி, ஆகியவற்றை வழங்குவதற்கு நடவடிக்கைகளை சட்டமியற்றலை கோருவதைக் கண்டும் அவர்கள் அஞ்சுகின்றனர்.

அந்த கட்சியுடைய நவீன வரலாற்றில் மிகவும் வலதுசாரி ஜனாதிபதி பிச்சாரத்தை ஜனநாயகக் கட்சிக்காரர்கள் தற்பொழுது மேற்கொண்டிருக்கிறார்கள். போஸ்டனில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி மாநாட்டில் இராணுவவாதம் மற்றும் பின இன பழிப்புவாதம் காட்சியளித்தன, கெர்ரியால் திரும்பத்திரும்ப போர் ஆதரவு அறிக்கை வெளியிடப்பட்டது, போர் எதிர்ப்பு உணர்வுகளை புறக்கணிப்பதற்கு, ஈராக் மக்கள் தங்களது நாட்டின் காலனித்துவத்திற்கு எதிராக நடத்தும் எதிர்ப்புக்கிளர்ச்சியை நசுக்குவதில் தீவிரமாக ஊக்கமளிக்க கெர்ரி நிர்வாகத்தை நம்பலாம் என்று அமெரிக்க ஆளும் செல்வந்தத் தட்டிற்கு, உறுதியளிக்க கணிக்கப்பட்டதாகும்.

இல்லினோயில் நாங்கள் நடத்திய போராட்டத்தின்போது, SEP-க்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அதே ஜனநாயக விரோத நடைமுறைகள்தான் இரு கட்சி ஏகபோகத்தை கண்டிப்பவர்கள் அல்லது போரை விமர்சிப்பவர்கள் அடங்கிய அனைத்து வேட்பாளர்களுக்கும் எதிராகவும் கையாளப்படுகிறது என்பதை நாங்கள் வலியுறுத்தினோம். பசுமைக் கட்சிக்காரர்களோடும், சுயேட்சை வேட்பாளர் ரால்ப் நாடெருடனும் எங்களுக்கு கொள்கை அடிப்படையில் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், இல்லினோயில் வாக்குச்சீட்டில் இருந்து நீக்கிவிடுவதற்கு ஜனநாயகக் கட்சி மேற்கொண்ட முயற்சிகளுக்கெதிராக அவர்களை தற்காத்து நின்றோம்.

சுயேட்சை மற்றும் மூன்றாவது கட்சி வேட்பாளரை தடுத்து நிறுத்துவதற்கு ஜனநாயகக் கட்சி மேற்கொண்டுள்ள முயற்சிகளோடு, கெர்ரி வெளியிட்டுவரும் போர் ஆதரவு அறிவிப்புக்கள் தற்போதுள்ள இரண்டு-அரசியல் கட்சி முறையினுள் பரந்த வெகுஜன உழைக்கும் மக்களது அபிலாசைகளை வெளியிடுவதற்கு எந்தவித வழிவகையும் இல்லை என்பதை திட்டவட்டமாக நிரூபிக்கின்றன. ஏகாதிபத்திய-சார்பு மற்றும் பெரு-நிறுவன சார்பு கொள்கையை கீழ்மட்டத்திலிருந்து ஜனநாயகக் கட்சிக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் மாற்றிவிடலாம் என்பது ''குறைந்த தீங்கு'' அரசியலின் பயனற்ற மற்றும் மாயைத்தனமையைக் கோடிட்டுக்காட்டுவதாக உள்ளது.

ஜனநாயகக் கட்சியிடம் வேண்டுகோள் விடுத்து அல்லது அதை நம்பி ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கமுடியாது என்பதை அது காட்டுகிறது. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்திற்கு போராடுவதற்கும் பொருளாதார வாழ்வை சோசலிச ரீதியல் மறுஒழுங்கு செய்வதற்குமிடையில் உறுதியான தொடர்புள்ளது.

கிழக்கு- மத்திய இல்லினோயில் வாக்குப்பதிவில் நுழைவதற்கு நடைபெற்ற போராட்டத்தை உங்களது கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் இவற்றின் பங்களிப்பு ஒரு சர்வதேச பிரச்சனையாக உருவாக்கிகிவிட்டது. சம்பைன் கவுண்டி எழுத்தர் அலுவலகத்திற்கு அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் கண்டனக்கடிதங்கள் வந்தன. 23- மாநிலங்களிலிருந்து கடிதங்கள் வந்தன, வந்திருந்த கடிதங்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி அமெரிக்காவிற்கு வெளியிலிருந்து----ஆஸ்திரேலியா, இலங்கை, கனடா, ஜேர்மனி, பிரிட்டன், தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து, மற்றும் பிரான்சிலிருந்து வந்தன. சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின், ஆதரவாளர்கள் இந்தியாவில் ஒருமனுவில் கையெழுத்துக்களை சேகரித்து கவுண்டி எழுத்தர் அலுவலகத்திற்கு மின்அஞ்சலில் அனுப்பினர்.

அமெரிக்காவில் ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்படுகின்ற தாக்குதல் உயிர்நாடியான சர்வதேச பிரச்சனை என்று உலகிலுள்ள ஒவ்வொருவரும் மிக ஆழமாக உணருகின்றனர். அது அமெரிக்கா இராணுவ வாதத்தினால் உலகிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தோடு பின்னிப்பிணைந்திருக்கிறது. 2003-ல் ஈராக் போருக்கு எதிராக மில்லியன் கணக்கான மக்கள் கண்டனப் பேரணிகளை நடத்தினர். அவர்கள் அமெரிக்காவின் மற்றும் தங்களது சொந்த அரசுகளின் இராணுவவாதக் கொள்கையை எதிர்ப்பவர்கள், அமெரிக்க அரசாங்கம் இந்தக் குற்றகரமான போரைத் தொடர்வதற்காக அமெரிக்க மக்களது விருப்பினை மீறுவதை அவர்கள் பார்த்தார்கள்.

மடைதிறந்த வெள்ளம்போல் வந்த இந்த கடிதங்கள் சாம்பைன் கவுண்டி அரசியல்வாதிகளுக்கு அவர்களது நடவடிக்கைகள் சர்வதேச அளவில் நெருக்கமாக கவனிக்கப்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டின. ஜனநாயகக் கட்சி SEP-ஐ ஆட்சேபித்தபோது, ஜனநாயகக் கட்சியின் ஜனநாயக விரோத நடைமுறைகளை எதிர்த்த மற்றும் அவற்றை அம்பலப்படுத்திய ஒரு தேசிய மற்றும் சர்வதேச பிரச்சாரத்தை தான் எதிர்கொள்ள வேண்டியிருக்குமென்று அது எதிர்பார்க்கவில்லை.

மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது, ஜனநாயகக் கட்சிக்கும் SEP க்கும் இடையில் நடைபெற்ற மோதல்கள் ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாததாகத் தோன்றும். ஜனநாயகக் கட்சிக்காரர்கள் சக்திவாய்ந்த ஊழல்மிக்க அரசியல் நிர்வாக அமைப்பை தங்கள் கையில் வைத்திருப்பதுடன் கோடிக்கணக்கான டாலர்களையும், அதிகக்கட்டணம் வசூலிக்கிற வழக்கறிஞர்களையும், இல்லினோயை பொறுத்தவரை மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகின்ற அரசு ஊழியர்களையும், தங்கள் வசம் வைத்திருக்கின்றனர்

உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களும், இளைஞர்களும், பெரு வர்த்தக நிறுவனங்களுக்காக பேசி வரும் கட்சிகளால் அரசியல்ரீதியாக வாக்குரிமைபறிக்கப்பட்ட மிகப்பெரும்பாலான மக்களது நலன்களை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் எங்களது கருத்துக்களை எடுத்துவைத்தோம். இத்தகைய கட்சிகளின் வளங்கள் எவ்வளவு இருந்தாலும், அவர்களது கட்சிகள் அதிகரித்த அளவில் மிகக்குறுகலான சமூக அடிதளத்தை சார்ந்திருக்கும் என்பதையும், அவர்களது போர் ஆதரவு மற்றும் பெருநிறுவன ஆதரவு கொள்கைகளின் காரணமாக மிச்சமிருக்கின்ற மக்கள் செல்வாக்கும் அரிக்கப்படும் என்பதையும் நாம் அறிவோம்.

தொழிலாள வர்க்கம் சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைதிட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்பொழுது அது உருவாகின்ற வலிமையை மிகச்சிறிய அளவில் உலகிற்கு எடுத்துக்காட்டுகின்ற வகையில் நமது வெற்றி அமைந்துள்ளது. உங்களது முயற்சிகள் போருக்கு எதிரான போராட்டம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம் சர்வதேச போராட்டமாகத்தான் நடத்தப்பட முடியும் என்று உழைக்கும் மக்களின் பங்கில் ஒரு வளர்ந்து வரும் நனவை விரைவுபடுத்துகிறது மற்றும் எதிரொலிக்கிறது. தனது தேர்தல் பிரச்சாரத்தை சாத்தியமான அளவு ஒரு சர்வதேச பிரச்சாரமாக நீட்டிப்பதை நோக்கங்கொண்டது என்று 2004-ல் தேர்தல் அறிக்கையில் விளக்கியுள்ளது போல், SEP முன்னோக்கை இது மெய்ப்பித்துக்காட்டியுள்ளது.

இந்த ஜனநாயக விரோத தாக்குதலின் தோல்வி முக்கியமாகும், ஆனால் அது தீவிரப்படுத்தப்பட வேண்டிய இந்தப் போராட்டத்தின் ஒரு ஆரம்ப நடவடிக்கை மட்டும்தான். சம்பைன்-அர்பனாவில் ஏற்பட்ட அனுபவம் சமூக சமத்துவத்தையும், அமைதியையும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அர்பணித்துள்ள உண்மையான உழைக்கும் மக்களுடைய பரந்த இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது. நமது வேட்பாளர் இந்தத்தேர்தலில் போட்டியிடுவது உழைக்கும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் குறித்து கடுமையான விவாதங்களை ஊக்குவிக்கவும் அத்தகைய இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான அரசியல் அடித்தளத்தை ஸ்தாபிப்பதற்கும்தான்.

இல்லினோயில் போராட்டத்திற்கு கணிசமான நிதி வள செலவினங்கள் தேவைப்பட்டது, வரும் வாரங்களிலும், மாதங்களிலும், SEP எடுக்க வேண்டியுள்ள பல்வேறு போராட்டங்களுள் இது ஒரே ஒரு போராட்டமாகும், அது பல்வேறு மாநிலங்களில் வாக்குச்சீட்டு தகுதியைப் பெறுவதற்கான முயற்சியிலுள்ளதால், இந்த வாரத்திலிருந்து தேர்தல் தினம்வரை கடுமையாக அரசியல் போராட்டத்தை நடத்தவேண்டியுள்ளது.

அமெரிக்க பெரு நிறுவனங்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடப்பதற்காக நூற்றுக்கணக்கில் மில்லியன் கணக்கான டாலர்களைப் பெறுகின்ற நமது அரசில் எதிரிகளான ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிக்காரர்கள் போலல்லாமல், SEP தனது தேர்தல் பிரச்சாரத்தை நிலைநாட்டுவதற்காக நமது ஆதரவாளர்களின் நன்கொடைகளையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. எனவே நான் உங்களை SEP பிரச்சாரத்திற்கு நன்கொடை வழங்குமாறும், நமது தேர்தல் வேலைதிட்ட அறிக்கைகளை படிப்பதன் மூலமும் அவற்றை விநியோகிப்பதன் மூலமும் எமது போராட்டத்தை ஆதரிக்குமாறும், வாக்குச்சீட்டில் நமது வேட்பாளர்களை இடம்பெறச்செய்வதற்கான மனு முயற்சியில் இணையுமாறும், சோசலிச சமத்துவக் கட்சியில் உறுப்பினராக ஆகுமாறும் வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறேன்.

உங்களது சகோதரன்,

ரொம் மக்கமன்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved