World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German interior minister proposes African internment camps for refugees

ஆப்பிரிக்காவில் அகதிகளுக்கான தடுப்புக்காவல் முகாமிற்கு ஜேர்மன் உள்துறை அமைச்சர் முன்மொழிவு

By Martin Kreickenbaum
4 August 2004

Back to screen version

பூமிக்கடியில் உள்ள நகர்வுகளை ஒரு விஞ்ஞானி எப்படி நிலநடுக்கக் கருவி (seismograph) மூலம் அளக்கிறாரோ, அதே போன்று ஒரு அரசாங்கத்தின் தன்மையை அளவிடுவது அது சமுதாயத்தில் வசதி குறைந்த தட்டினரை எப்படி நடத்துகிறது என்பது வைத்து தீர்மானிக்க முடியும். என்றாலும், சமீபத்தில் சமூக ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த ஜேர்மன் உள்துறை அமைச்சர் ஒட்டோ சீலி (Otto Schily) அகதிகள் தொடர்பாக தெரிவித்துள்ள ஆலோசனைகள் ஜேர்மன் அரசாங்கத்தின் சமூக எதிர்ப்பு மற்றும் பிற்போக்கு அரசியலை மதிப்பிடுவதற்கு அத்தகைய நுட்பமான கருவிகூட தேவையில்லாதது என்பதைக் காட்டுகிறது.

ஆபிரிக்க கண்டத்திலிருந்து அகதிகளாக வருகின்றவர்கள், அப்பிரிக்காவிலேயே முகாம்களில் காவலில் வைக்கப்படுவதற்கான பிரகடனத்தை ஒட்டோ சீலி திணித்துள்ளார். இதன் பொருள் என்னவென்றால் அந்த அகதிகளது மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்வரை அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதாகும். என்றாலும், இந்தத்திட்டம் முற்றிலும் புதியதல்ல. ஓராண்டிற்கு முன்னர் டோனி பிளேயரின் பிரிட்டிஷ் தொழிற்கட்சி அரசாங்கம் துவக்கத்திலேயே இந்தக்கருத்தை முன்வைத்தது. ஒட்டோ சீலி தீவிரத்துடன் அதை பிரபலப்படுத்திக் கொண்டு வருகிறார். கடந்த தசாப்தங்களுக்கு மேலாகவே ஐரோப்பாவில் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஜேர்மன் அரசாங்கம் தாக்குதல் தொடுப்பதில் முன்னணியில் உள்ளது என்ற உண்மையை பார்க்கும் போது, ஐரோப்பாவில் தஞ்சம் நாடுகின்ற உரிமையையே நேரடியாக தாக்குகின்ற முன்னறிவிப்பாக இது அமையக்கூடும்.

சென்ற மாதம் இத்தாலி கடற்கரையில் ஆப்பிரிக்க அகதிகள் வந்த கப்பல் மூழ்கியதால், அவர்கள் மீட்கப்பட்ட நிகழ்ச்சியை தனது பிரச்சாரத்திற்கு சந்தர்ப்பமாக ஒட்டோ சீலி பயன்படுத்திக்கொண்டார். ஜேர்மன் உதவி அமைப்பான கெப் அனமூர் (Cap Anamur) அந்த முப்பத்தி ஏழு அகதிகளையும் கடலில் இருந்து மீட்டு அவர்களை சிசிலிக்கு கொண்டு வந்தது. ஜேர்மன் குடியேற்றத்துறை இந்த அகதிகள் தஞ்சம் கோரி மனுச்செய்வதற்கு அனுமதியளிக்க மறுத்தது மட்டுமல்லாமல், கெப் அனமூர் தலைவருக்கும், அக்கப்பல் மாலுமிகளுக்கும் எதிராக சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோருக்கு உதவியதாக கிரிமினல் குற்றம்சாட்டப்போவதாக ஒட்டோ சீலி அச்சுறுத்தியுள்ளார்.

உள்துறை அமைச்சின் இந்த அவதூறான குற்றச்சாட்டை --மத்திய தரைக்கடலில் மீட்பு நடவடிக்கைகள் முழுவதுமே ஒரு பகட்டுக் கூத்து என்ற நிலைப்பாட்டை-- தாராளவாத செய்திப் பத்திரிகைகளான Frankfurter Rundschau மற்றும் Süddeutsche Zeitung ஆகியவை வெளிவேடமாய் எடுத்துக்காட்டின. இந்தப் பத்திரிகைகள் தந்துள்ள தகவலின்படி, உயிருக்கு போராடும் நிலையிலுள்ள மக்களை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்பன ''சந்தேகத்துக்குரிய பிரச்சாரம்'' என்று கூறப்படுகிறது. உடனடியாக இத்தாலிய அதிகாரிகள் அகதிகளின் தஞ்சம் கோரும் மனுக்களை தள்ளுபடி செய்திருப்பதை இந்தப் பத்திரிகைகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

இருந்தபோதிலும், இந்த முடிவுவரும் என்பது முன்கூட்டியே தெளிவாகத் தெரிந்துவிட்டது. இத்தாலிய உள்துறை அமைச்சரான Giuseppe pisanu, இந்த அகதிகள் நைஜீரியா, மற்றும் கானா நாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், அவர்கள் சூடானில் இருந்து வரவில்லை என்றும், எனவே அவர்களது தஞ்சம் கோரும் மனுக்கள் எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் ரத்துச்செய்யப்படும் என்றும் அறிவித்தார். சில நாட்களுக்குள் இந்த அகதிகள் நாடு கடத்தப்பட்டனர்.

இந்த சம்பவமானது, ஜேர்மன் உள்துறை அமைச்சருக்கு தஞ்சம் புகுவோர் மீது மேலும் தாக்குதல் நடத்துவதற்கு ஒரு சமிக்கையாக அமைந்துவிட்டது. சென்ற மாதம் ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில் ஒட்டோ சீலியினுடைய கருத்துப் பற்றியும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தஞ்சம் புகுவது மற்றும் புலம்பெயர்தல் தொடர்பான விவகாரங்களுக்குரிய வழிகாட்டி நெறிமுறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் அகதிகள் நுழைய முடியாதபடி ''காவல் முகாம்கள்'' ஸ்தாபிக்கப்படவேண்டும், இந்த தடுப்பு முகாம்கள் அகதிகள் தேர்ந்தெடுக்கும் வழித்தடத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட வேண்டுமென்ற பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கருத்தை சீலி ஏற்றுக்கொண்டார். அப்போது தஞ்சம் புகுவோர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். அதற்கு பதிலாக, அவர்களது மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது அல்லது தள்ளுபடிசெய்யப்படும் வரை அவர்கள் அந்த முகாமில் தங்க வைக்கப்படுவர்.

சீலியினுடைய இந்த முகாம்கள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க வேண்டியதில்லை: முள் வேலியால் தடுக்கப்பட்ட, கடுமையான காவலைக் கொண்டுள்ள தற்காலிக முகாமாக அது இருக்கும். பொருட்கள் மற்றும் மருத்துவ வழங்கல் உட்பட சகலதும் மிகவும் குறைவாகவே கிடைக்கும். வழக்கமான நீதிமன்ற நடைமுறைகளுக்கு அப்பால், முறைகேடுகள் என்பன உள்ளுக்குள்ளேயே விசாரிக்கப்படும்.

சீலியின் ஆலோசனைப்படி, தஞ்சம் கோருகின்ற உரிமை அங்கீகரிக்கப்பட்டாலும், அகதிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழையமுடியாது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஆப்பிரிக்க அரசுகள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, அகதிகளுக்கு பாதுகாப்பான மையங்கள் அமைக்கப்பட்டு, அகதிகள் இந்த மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள். விதிவிலக்கு நிகழ்ச்சி அடிப்படையில் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

''விருப்பு அடிப்படையில் மட்டுமே ஐரோப்பாவிற்குள் ஒன்றுபடுதல் குறித்து பரிசீலிக்கப்படும்'' என்று சீலி அறிவித்தார். சீலியின் இத்திட்டம் கொசோவோ நெருக்கடி காலத்தை முன் மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். அந்த நேரத்தில் ஐரோப்பிய ஒன்றிய அரசுகள் அந்த அகதிகளை தங்கள் எல்லைகளுக்குள் அனுமதிக்காமல், அல்பானியாவிலுள்ள முகாம்களில் தங்க வைத்தது.

ஐரோப்பாவில் தஞ்சம் கிடைக்காதவர்கள் ஆப்பிரிக்காவில் முன்மொழியப்பட்டிருக்கும் முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்று சீலி வாதிடுகிறார். என்றாலும், இது ஒரு திரைமூடலாகும். இத்தகைய முகாம்கள் மத்தியத்தரைக்கடல் பயணத்தையும், ஆபத்தையும் பொருட்படுத்தாது மேற்கொள்ளும் அகதிகளை தடுப்பதற்காக அல்ல. இது தீர்க்கமாக ஐரோப்பாவை அடைந்துவிட்ட அகதிகளுக்காகத்தான் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பு மற்றும் உதவிகள் தேவைப்படுவோர், உடனடியாக ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு முகாமிற்கு மறுபடியும் அனுப்பப்படுவர். தற்போது ஐரோப்பாவில் ஆண்டிற்கு 2,00,000 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் நாடுகடத்தப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகளால் இதைவிட அதிகமான அளவிற்கு வெளிநாட்டவர் நாடு கடத்தப்படுவர்.

இத்தகைய முகாம்களில் தற்போது நடைபெறுவதைவிட கடுமையான நடவடிக்கைகள் அகதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும். தற்போது மிகக்குறைந்த அளவிற்கு அகதிகளுக்கு உதவுகின்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மனித உரிமை அமைப்புக்கள் அவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து கண்காணிப்பு செய்து வருவதுடன், இந்த நடவடிக்கைகள் இனி ஆப்பிரிக்க முகாம்களில் அனுமதிக்கப்படாது என்று கூறுகின்றன. ஐரோப்பிய ஒன்றியமானது, சட்ட - சுதந்திர மண்டலத்தை (law-free zone) உருவாக்கும்போது, அங்குள்ள அகதிகளுக்கு எந்த வகையான சட்ட உதவியும் மறுக்கப்படும். அவர்களது மனுக்கள் தொடர்பாக விரைவான தீர்ப்புக்கள் அமுல்படுத்தப்படும். ஐரோப்பிய ஒன்றியம் விரைவாக அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்வதால், அவர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பிச்சென்று வறுமையையும், அரசாங்க துன்புறுத்தலையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

அத்தோடு, இந்த முகாம்களை அமைப்பதன் மூலம், அகதிகள் தொடர்பான மனித நேயமற்ற கொள்கைகளை கண்டிக்கும் பேரணிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடுக்க முடியும். இத்தாலியில் 37 அகதிகள் மீது மிக விரைவாக விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் நாடுகடத்தப்பட்டதை கண்டித்து சிசிலியில் பெரும் கண்டனப்பேரணி நடைபெற்றதோடு, போலீசாருடன் மோதலும் நடந்தது. ஜேர்மன் ஊடகங்களில் இந்த செய்தி இடம்பெற்றதை ஒப்புநோக்கும்போது, இத்தாலியில் அகதிகளுக்காக ஒரு பரந்த அடிப்படையில் ஒருமைப்பாடு (solidarity) இயக்கம் ஒன்று உருவாகியிருப்பதுடன், அகதிகளை அந்த நாட்டில் இணைத்துக்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையும் அவர்களால் விடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இத்தகைய முகாம்கள் அமைக்கப்பட வேண்டுமென்ற பிரிட்டனின் ஆலோசனையை ஓராண்டிற்கு முன்னர் ஐரோப்பிய கமிஷன் தள்ளுபடி செய்தது என்பதை சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்த நேரத்தில் கமிஷன் சட்டபூர்வ மற்றும் நடைமுறை சிக்கல்கள் ஏற்படும் என்று எதிர்பார்த்ததால், அந்தத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு எந்தவிதமான வளங்களையும் அது வழங்கவில்லை.

இருந்தபோதிலும், 2003 ஜூனில் வெளியிடப்பட்ட மற்றொரு அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தஞ்சம் புகும் கொள்கை தொடர்பாக முன்மொழியப்பட்ட கொள்கைகளில், தற்போது சீலி கூறியுள்ள நெருக்கமான நடவடிக்கைகள் அடங்கியுள்ளது. இந்த அறிக்கையின்படி, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தஞ்சம் புக விரும்பும் அகதிகள் கட்டுப்படுத்தப்படுவார்கள். இந்தக் கட்டுப்பாடுகள் அவர்களது ''தாய் நாடுகளுக்கு நெருங்கியுள்ள பகுதிகளில்'' மட்டுமல்லாமல் மூன்றாவது மற்றும் இடையிலுள்ள நாடுகளிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு, அகதிகள் அங்கு தங்க வைக்கப்படுவர். அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் அடியெடுத்து வைக்கும் முன்னரே அங்கு வைத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பிரிட்டன் இந்த அறிக்கையால் பெருமளவிற்கு உற்சாகம் ஊட்டப்பட்டு தானே சொந்தத்தில் அத்தகைய முகாம்களை அமைக்கும் கருத்தை முன்வைத்தது. எனவே, ஐரோப்பிய ஒன்றியம் அத்தகைய ஆலோசனையை ஏற்றுக்கொள்ளாது தள்ளுபடி செய்யும் என்று கருதுவது தவறானதாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved