World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Delayed conference underscores phony character of Iraqi "democracy"

ஈராக்கிய ''ஜனநாயகத்தின்'' போலித்தன்மையை மாநாட்டின் தாமதம் கோடிட்டுக்காட்டுகிறது

By Peter Symonds
2 August 2004

Back to screen version

ஈராக் தேசிய மாநாட்டை ஒத்திவைப்பது என்ற சென்ற வார முடிவானது வாஷிங்டனின் புதிய காலனி ஆதிக்க ஆக்கிரமிப்பிற்கு ஜனநாயக உடை உடுத்தும் ஐ.நா வின் முயற்சியில் அடங்கியுள்ள மோசடித்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

ஈராக்கில் அமெரிக்க இராணுவம் நிலைபெற்றிருப்பதற்கு தொடர்ந்து வன்முறை எதிர்ப்பு நீடிப்பதன் விளைவாகத்தான் இந்த மாநாடு நடப்பது தாமதமாகியிருப்பதாக சர்வதே ஊடகங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. என்றாலும், உண்மையான காரணம் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கை பரவலாக சட்டவிரோதமானதென ஈராக்கிய மக்களால் கருதப்படுகிறது என்ற உண்மையில் இருக்கிறது மற்றும் இதன்விளைவாக அந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருப்பவர்கள் மற்றும் அதில் பங்கெடுத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கிடையே பிளவுகளும் கருத்துவேறுபாடுகளும் தோன்றியுள்ளன.

ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் சிலரை சேர்த்துகொண்டு பாக்தாத்திலுள்ள அமெரிக்க பொம்மை ஆட்சிக்கு ஓரளவு சட்டபூர்வமான தன்மையை வழங்கவும் ஒரு வழிமுறையாக 1000 பேராளர்கள் கொண்ட தேசிய மாநாட்டை மே மாதம் நடத்த ஐ.நா சிறப்புத்தூதர் லக்தர் பிராஹ்மி ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தார். அந்த ஒன்றுகூடலானது, அமைச்சர்களை மாற்றுவதற்கும், பட்ஜெட்டை நிறைவேற்றுவதற்கும் மூன்றில் இரண்டுபங்கு வாக்கெடுப்பில் சட்டத்தை இரத்து செய்வதற்கும் வரையறைக்குட்பட்ட அதிகாரங்கள் இருக்கும் 100- பேர் அடங்கிய தேசிய சட்டமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்காகும்.

சென்ற வியாழக்கிழமை அந்த 3-நாள் மாநாடு தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது மற்றும் ஜூலை 31 சனிக்கிழமையன்று அந்த மாநாடு நிறைவடைய வேண்டுமென்று திட்டமிடப்பட்டது. ஐ.நா பாதுகாப்பு சபையின் 1546- வது தீர்மானம் பிரதமர் இயாத் அல்லாவி அரசாங்கத்திற்கு போலியான இறையாண்மையை வழங்குவதற்கு கால எல்லையாக ஜூலை 31 நிர்ணயிக்கப்பட்டது. எப்படியிருந்தபோதிலும், சென்றவாரம் இந்த மாநாட்டு முயற்சியில் ஈடுபட்டிருந்த ஐ.நா அதிகாரிகள் -மாநாடு தொடங்குவதற்கு முன்னரேயே முழுசெயல்முறைகளும் பரந்த அளவில் செல்வாக்கிழந்ததால் மாநாட்டை தாமதப்படுத்தினர்.

தற்போது கலைக்கப்பட்டுள்ள ஈராக்கிய ஆளும் குழுவில் (Iraqi Governing Council -IGC) இடம் பெற்றிருந்த அதே அமெரிக்க ஆதரவு குழுவை சார்ந்தவர்கள்தான் தேசிய சட்டமன்றத்தில் தங்களின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்த மாநாட்டு பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதில் அப்பட்டமாக சூழ்ச்சிகளை கையாண்டார்கள். தொடக்கத்திலிருந்தே 100 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் 20 முன்னாள் IGC உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டது.

அல்லாவியின் ஈராக்கிய தேசிய உடன்பாடு (INA); ஈராக்கிய தேசிய காங்கிரஸ் (INC); ஷியாக்களை அடிப்படையாகக் கொண்ட தாவா கட்சி (Dawa Party) மற்றும் ஈராக் இஸ்லாமிய புரட்சி சுப்ரீம் கவுன்சில் (SCIRI); குர்திஸ்தான் தேசபக்தி யூனியன் (PUK) குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சி (KDP) உட்பட இவை அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வாஷிங்டனுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வந்தன மற்றும் அமெரிக்க படையெடுப்பை வலியுறுத்தின.

92- உறுப்பினர்கள் அடங்கிய தயாரிப்புக் குழுவை கட்டுப்படுத்தும் இந்தப் பிரிவு (கன்னை) நிகழ்ச்சி நிரல் மற்றும் பிரதிநிதிகள் தேர்வு உட்பட மாநாட்டு நிர்வாகத்தை தன்கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தலைமை அமைப்பாளர் Fuad Massoum, குர்திஸ்தான் தேசபக்தி யூனியன் (PUK) ஐ நிறுவியவர்களில் ஒருவர் ஆவார். இந்த கமிஷன் உறுப்பினர்கள் இயல்பாகவே மாநாட்டின் ஒரு அங்கமாக ஆவது மட்டுமல்லாமல், அரசியல் கட்சிகள், பல்வேறு இனங்கள், மதக்குழுக்கள், கல்விமான்கள் மற்றும் தொழில் சார்ந்த குழுக்களுக்கு ஒதுக்கப்படும் பதவிகளில் பெரும்பாலானவை மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு கிடைக்கும் வகையில் உறுதி செய்து கொண்டிருக்கின்றனர்.

பெயரளவிற்கு ஜனநாயக முறையில் அமைந்திருக்கும் உள்ளூர் தேர்தல் குழு (காக்கஸ்) தேர்வு முறையையும் கமிஷன் திரித்துவிட்டது. நாட்டில் ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும், உள்ளூர் தேர்தல் குழு முறையில் 500-க்கு மேற்பட்ட பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வகைசெய்யப்பட்டிருந்தது. இந்த உள்ளூர் தேர்தல் குழுக்கள் பெரும்பாலும், ஈராக் மக்களுக்கு எந்தவிதமான நியாயமான உரிமையும் வழங்காமல் ஜனநாயக முறையில் தேர்வு நடத்தப்படுவதாக பாவனைக்காட்டுவதற்கு வடிவமைக்கப்பட்ட விவகாரங்களை மிக கவனமாக நிர்வகிப்பதை அர்த்தப்படுத்தும். இந்த மட்டுப்படுத்தப்பட்ட அரங்குகளும் கூட இப்போது சிக்கலுக்கு உள்ளாகி உள்ளன.

குறைந்த பட்சம் இரண்டு நகரங்களில் --தெற்கில் பாஸ்ரா வடக்கில் கிர்குக்- கடுமையான மோதல்களுக்கு பின்னர் இந்த இரண்டு நகரங்களிலும் உள்ளூர் தேர்தல் குழு கைவிடப்பட்டது. Christian Science Monitor-ல் வெளிவந்திருக்கும் ஒரு தகவலின்படி, கிளர்ச்சியாளர் ஷியா மதபோதகர் மொக்தாதா அல் சதரின் ஆதரவாளர்கள், தாவா கட்சியும் SCIRI- ம் உள்ளூர் தேர்தல் குழு நடைமுறையை திரிப்பதாக குற்றம் சாட்டியபின்னர், பாஸ்ரா உள்ளூர் தேர்தல் குழுவை இரண்டு "மேற்பார்வையாளர்கள்" மூடிவிட்டனர். மீண்டும் அந்த அரங்கை கூட்டுவதற்கு முயற்சி எதுவும் நடத்தப்படவில்லை. மாறாக சென்ற புதன்கிழமையன்று பாக்தாத்தில் பாஸ்ராவுக்கான 43 மாநாட்டு பிரதிநிதிகள் கவனமாகப் பொறுக்கி எடுக்கப்பட்டனர்.

பாக்தாத்தை சேர்ந்த ஷியா தலைவர் Shiikh Fatih Kashiy al- Ghitta அந்த மாநாடு பற்றி எவருக்கும் தகவல் தரப்படவில்லை என்று அந்த பத்திரிகையிடம் கடுமையான புகார் கூறினார். '' மாகாணங்களில் உள்ள இந்த உள்ளூர் தேர்தல் குழுக்கள் சட்டவிரோதமானவை. எவரும் இவை பற்றி கேள்விப்படவில்லை. கட்சிகளே முழுவதையும் அனுபவிக்கும். இந்தக் கட்சிகள் அவை விரும்பியவற்றை பெற்றுக்கொண்டன. அவர்கள் ஆளும் கவுன்சிலையும் தேசிய நாடாளுமன்றத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார்கள், மற்றும் புதிய நாடாளுமன்றத்தை அவர்கள் கட்டுப்படுத்திக்கொள்ளப் போகிறார்கள்'' என்று அவர் கூறினார்.

சென்ற வாரத்தில் 18 மாகாணங்களில் 8 மாகாணங்கள் மட்டுமே தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தன. இந்த நாடகம் தெளிவாக அம்பலத்திற்கு வந்துவிடுமென்று கவலைப்பட்ட ஐ.நா அதிகாரிகள் இதர கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மேலும் அவகாசம் தேவையென்று கோரினர். அல் சதர் போன்ற அமெரிக்க ஆக்கிரமிப்பை பகிரங்கமாக எதிர்க்கின்ற எதிர்ப்பாளர்களையும் பங்கெடுத்துக் கொள்ளச் செய்யும் முயற்சி தோல்வியடைந்தது. அவரது ஆதரவாளர்களும் இதர பல அமைப்புக்களும் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்தன. அல்லாவி ஆட்சியின் அடித்தளத்தை விரிவுபடுத்துவதற்கு பதிலாக, அந்த ஆட்சிக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு எதுவுமில்லை என்பதையே மாநாடு உறுதிப்படுத்தும் என்று ஐ.நா கணித்தது.

தாமதம் ஏற்பட்டால் மாநாட்டின் சட்டபூர்வமான தன்மை பாதிக்கப்படுமென்றும் ஜூலை 31 காலக்கெடுவை மீறினால் அது சட்டவிரோதமாகும் என்றும் வாதிட்டு தொடக்கத்தில் Massoum மற்றும் தயாரிப்புக் குழு ஐ.நா நிர்பந்தத்திற்கு கட்டுப்படவில்லை. மாநாட்டை தங்களுக்கு சாதகமாக உருவாக்கிக்கொண்ட Massoum தனது பணி சீர்குலைவதை விரும்பவில்லை. வியாழனுக்கு பதிலாக சனிக்கிழமையன்று மாநாட்டை தொடக்கி ஒரே நாளில் முடித்துவிடலாம் என்று ஆலோசனை கூறினார்.

எவ்வாறாயினும், அந்த முடிவு விரைவில் மாற்றப்பட்டது. ஈராக் இறையாண்மை என்பதற்கு வேண்டாவெறுப்புடன் ஐ.நா வாஷிங்டனின் மறைமுக ஆதரவோடு ஒரு மாற்றத்தை கட்டாயப்படுத்துவதற்கு தலையிட்டது. ஈராக் ஜனாதிபதி Gazzi al Yawar வெளிப்படையாக வியாழனன்று உண்மையான நிலவரத்தை தயாரிப்புக் குழுவிடம் எடுத்துரைத்தார். ''இது ஐ.நா முடிவல்ல. இது ஒரு ஈராக்கிய முடிவு என்றே நாம் நினைக்கிறோம். ஆனால் நீங்கள் திட்டமிட்டபடி மாநாட்டை நடத்தவேண்டுமென்றால், ஐ.நா விற்கும் ஈராக் அரசாங்கத்திற்கும், இடையிலான இணைப்பு பாலங்கள் அனைத்தும் சிதைக்கப்படும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று அவர் கூறினார்.

அந்தக்கூட்டம் முடிந்ததும் Massoum மாநாடு ஆகஸ்ட் 15 வரை தாமதமாகும் என்று அறிவித்தார். ஐ.நா அதிகாரிகளாலும் அமெரிக்க அரசுத்துறை செயலாளர் கொலின் பவலாலும் அந்த முடிவு வரவேற்கப்பட்டது. அந்த முடிவு ஜனவரியில் நடைபெறவிருக்கும் தேசிய தேர்தலை பாதிக்காது என்று கொலின் பவல் குறிப்பிட்டார். ஆனால் தேசிய மாநாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முறையே, தேசிய தேர்தல் முடிவு அமெரிக்காவின் நலன்களுக்கு விரோதமாக அமையுமானால் விசாரணை எதுவுமின்றி தேர்தலையே தள்ளிவைத்தல் அல்லது தன்னிச்சையாக இரத்து செய்தல் ஆளாகக் கூடிய வகையில், தேசிய தேர்தல்களும் கூட ஒத்திகையாக இருக்கும் விவகாரம்தான் என்று தெளிவாகக் காட்டுகிறது.

மாநாடு நடைபெறும் காலம் எப்போதுமே புஷ் நிர்வாகத்தின் தேவைகளை ஒட்டியே முடிவு செய்யப்படுகிறது. ஒரு ஈராக் செய்தி பத்திரிகை ஆசிரியரான Wamidh Nadmi, நியூயோர்க் டைம்ஸ்-க்கு சுட்டிக்காட்டியுள்ள விமர்சனத்தில், அந்த மாநாடு ''அமெரிக்க மக்களுக்கு ஈராக் மக்களிடம் அதிகாரம் மாறிவிட்டது என்று சொல்லி வாதிடுவதற்காகத்தான்... இந்த வாதம் புஷ்ஷிற்கு அவருடைய தேர்தலில் உதவலாம், ஆனால் ஈராக்கில் மாற்றம் மிகச்சிறிதுதான். நாங்கள் இந்த அமெரிக்க தீர்வின் ஓர் அங்கமாக இருக்க விரும்பவில்லை'' என்று கூறியிருக்கிறார்

ஆகஸ்ட் 15-ல் தேசியமாநாடு தொடங்குமானால் அது மக்கள் பிரதிநிதிகளை கொண்டதாக அமையுமென்று கருதிவிட முடியாது. இதற்கிடையில் இந்த இரண்டுவார அவகாசத்தை பயன்படுத்தி ஐ.நா அதிகாரிகள் மாகாண பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கவும் ஆட்சியின் எதிர்ப்பாளர்கள் சிலரை சேர்த்துக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதில் ஐயம் இல்லை. என்றாலும், இதில் என்ன நடக்காது என்றால், அமெரிக்க ஆக்கிரமிப்பை மிகப்பெருமளவில் எதிர்த்து நிற்கின்ற ஈராக்கிய மக்களின் உண்மையான குரல் இந்த நிகழ்ச்சிகளில் அனுமதிக்கப்படாது.

மாநாட்டிற்கு முந்தைய அரசியல் சூழ்ச்சி நடவடிக்கைகள் அனைத்துமே, கடுமையான பாதுகாப்பிற்கு உட்பட்ட பசுமை மண்டலத்தில் உள்ள ஈராக்கின் ஆளும் செல்வந்த தட்டின் ஒரு குறுகிய அடுக்கினுள்ளேதான் நடக்கும். அந்த சுவர்களுக்கு அப்பால் அமெரிக்காவிற்கும், அல்லாவி ஆட்சிக்கும் செல்வாக்கு மட்டுப்படுத்தப்பட்டதுதான். ஆக்கிரமிப்பிற்கு ஆதரவான அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் சாதாரண ஈராக் மக்களால் துச்சமாக மதிக்கப்படுகின்றனர் மற்றும் நிரந்தரமாக அவர்களது வாழ்விற்காக பயந்து நடுங்கிக்கொண்டிருக்கின்றனர்.

முன்னணி மத்திய கிழக்கு பத்திரிகையாளரான றொபேர்ட் பிஸ்க் ஈராக்கின் உண்மையான நிலவரத்தை ''தலைநகரில்தான் அரசாங்கம் ஆளுகிறது'' என்ற தலைப்பில் அண்மையில் அவர் எழுதிய கட்டுரையில் சித்தரித்துக்காட்டினார். அல் சதரின் பிரதிநிதிகளை சந்திப்பதற்காக அவர் பாக்காத்திலிருந்து பயணம் செய்ததை எழுதியிருக்கிறார்: ''நேற்று பாக்தாத்திற்கு தெற்கே ஒவ்வொரு மைலுக்கப்பாலும் இதே கதையைத்தான் பார்த்தேன். காலியான போலீஸ் நிலையங்கள், வைவிடப்பட்ட ஈராக் இராணுவ மற்றும் போலீஸ் சோதனைச்சாவடிகள், Hillah- விற்கும் நஜாப்பிற்கும் இடையிலான பிரதான நெடுஞ்சாலையில் எரிந்து கிடக்கும் அமெரிக்க எரிபொருள் டாங்கர்கள் மற்றும் ராக்கெட்டுகளால் நொருக்கப்பட்ட வாகனங்களை காணமுடிந்தது. அது ஆப்கனிஸ்தான் Mark-2 ஆக இருந்தது."

நஜப்-ல், அல் சதரின் மோதி இராணுவம் பழைய நகரை தன்கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை பிஸ்க் கண்டார். ''எனக்கு வியப்பு ஏற்படவில்லை. அமெரிக்கப் படைகள் தினசரி பல கொரில்லா தாக்குதல்களுக்கு இரையாவதால் பகல் நேரத்தில் நெடுஞ்சாலை 8-ல் நடமாட முடியவில்லை அல்லது உண்மையிலேயே பாக்தாத்திற்கு மேற்கில் பல்லூஜா மற்றும் ரமாதி வழியாக செல்லமுடியவில்லை. ஈராக் நெடுக அவர்களது ஹெலிகாப்டர்கள் 100- கி.மீட்டர்களுக்கு மேல் உயரத்தில் பறக்க முடியவில்லை. ராக்கெட் தாக்குதல்கள் அச்சத்தில் அவை தாழப்பறக்கின்றன. ஒரே ஒரு A1M1 ஆப்ராம்ஸ் டாங்கி பாக்தாத் புறநகரில் ஒரு சாலைவழி பாலத்தில் காணப்பட்டது. நேற்று மற்றொரு அமெரிக்க வாகனத்தை நான் பார்த்தேன். மெஹ்தி இராணுவம் ஏற்றுக்கொண்ட நஜாப் சாலையில் ஒரு ரோந்துவாகனத்தை பார்த்தேன் தொலைதூரத்தில் 3 Apache ஹெலிகாப்டர்கள் யுப்ரடீஸை நோக்கி சென்று கொண்டிருந்தன........

''இதுதான் அல்லாவி அரசாங்கத்திற்கான, ஷியாக்களின் கிளர்ச்சி எழுச்சி சுன்னிக்கள் மேற்கொண்ட கிளர்ச்சி எழுச்சியின் சிறிய வடிவமாக இருந்தாலும் கூட தருகின்ற கஷ்டமாகும். ஆனால் நேற்றைய எனது பயணம் சான்றாக -நீண்ட காலத்திற்கு முன்னரே அமெரிக்காவின் கட்டுப்பாட்டை ஏற்காத தெற்கு சுன்னி நகரங்கள் ஊடாக, ஷியா புனித நினைவிடங்களை சுற்றிலும் பல சதுர மைல்களுக்கு தங்களது சொந்த இராணுவ கட்டுப்பாடுகளையே நிலைநாட்டி வருகின்ற புனித இடங்கள் வரை, இவை எதைக்காட்டுகின்றன என்றால், அல்லாவி ஒரு நாடு இல்லாமல் தலைநகரை மட்டுமே தனது கட்டுப்பட்டில் வைத்திருக்கிறார் என்பதைத்தான்.''

அது இறுதியில் எப்போது நடந்தாலும், அந்த தேசிய மாநாடு அமெரிக்க அரசியலிலும் அதன் சட்டவிரோதமான ஆக்கிரமிப்புக்கும் ஒரு பகடைக் காயாகவே பயன்படுத்தப்பட்டுவரும் மற்றும் சமரசம் செய்து வரும் ஆட்சிக்கு சட்டபூர்வமான தன்மையை தந்துவிட முடியாது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved