World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்Spain: Socialist Party government to send troops to Afghanistan and Haiti ஸ்பெயின்: சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் ஆப்கானிஸ்தான், ஹைட்டிக்கு துருப்புக்களை அனுப்புகிறது By Vicky Short ஸ்பெயின் சோசலிச தொழிலாளர் கட்சி (PSOE) அரசாங்கம் ஆப்கானிஸ்தானுக்கு மேலும் துருப்புக்களை அனுப்பவும், ஹைட்டிக்கு சிவில் காவலர்களையும் போலீஸ் நிபுணர்களையும் அனுப்புவதற்கு உறுதியளித்திருக்கிறது. இந்த நடவடிக்கைகளுக்கு ஸ்பெயின் நாடாளுமன்றம் ஜூலை 6-ல் ஒப்புதல் அளித்தது. ஆப்கானிஸ்தானில் தற்போது சர்வதேச பாதுகாப்பு மற்றும் உதவிப்படையின் (ISAF) ஓர் அங்கமாக ஸ்பெயினை சேர்ந்த 137- துருப்புக்கள் பணியாற்றி வருகின்றனர். இது ஆகஸ்டில் 540-ஆக உயரவிருக்கிறது. செப்டம்பரில் தொடங்கவிருக்கும் தேர்தல் நடைமுறைகளில் உதவுவதற்காக தற்காலிகமாக 400- முதல் 500- துருப்புக்களை கொண்ட மற்றொரு பிரிவை ஸ்பெயின் தற்போதைக்கு மூன்றுமாத காலத்துக்கு அனுப்பவிருக்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு இரண்டு Hercules சி-130- போக்குவரத்து விமானங்களையும், நான்கு ஹெலிகாப்டர்களையும், ஒரு காலாட்படை பிரிவையும் ஒரு கள மருத்துவமனை பிரிவையும் அனுப்புவதற்கு மாட்ரிட் திட்டமிட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் Jose Bono தெரிவித்தார். அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள நேட்டோவின் அதிரடிப்படைப்பிரிவு (NRF) ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பவேண்டுமென்று பிரிட்டனும், அமெரிக்காவும் விடுத்த கோரிக்கைக்கு பிரான்சு எதிர்ப்பு தெரிவித்ததை ஸ்பெயின் ஆதரித்தது. அதிக அளவு பிரெஞ்சுப் படைப்பிரிவுடன் சேர்த்து NRF சென்ற ஆண்டு உருவாக்கப்பட்டது, ஆனால் 2006-அக்டோபர் வரை NRF முழுமையாக செயல்படும் நிலைக்கு வரப்போவதில்லை. இந்தப் படையை ஆப்கானிஸ்தானில் பயன்படுத்துவதற்கு பிரான்சினால் மறுக்கப்பட்டது ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே பதட்டங்களை மோசமாக்கியது. NRF கடுமையான பாதுகாப்பு நெருக்கடி நிலவுகின்ற போதுதான் பயன்படுத்தப்பட வேண்டும், ஆப்கானிஸ்தான் பாணியிலான பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்று பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக் கூறினார். NRF இதற்காக உருவாக்கப்படவில்லை. பழைய விவகாரத்திற்காக அதைப்பயன்படுத்தக்கூடாது என்று மேலும் அவர் குறிப்பிட்டார். இது தவிர ஸ்பெயின் சிவில் காவலர்கள் மற்றும் தேசிய போலீஸ் படைகளில் இருந்து ஹைட்டிக்கு அக்டோபரில் 28- நிபுணர்களை அனுப்புகிறது. அவர்கள் ஐ.நா தலைமையில் பணியாற்றுவார்கள் புதிய ஹைட்டி போலீஸ் படைக்கு பயிற்சி தருவதற்காக அவர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர். தொடக்கத்தில் 110-பேர் செல்வார்கள், பிரெஞ்சு மொழிபேசுகிற அதிக அனுபவம் மிக்க அதிகாரிகள் அனுப்பப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது என ஸ்பெயின் சிவில் காவலர்படை டைரக்டர் Carlos Gomez Arruche தெரிவித்தார். 2005-ல் கடலோர காவற் பணிகளுக்காக மேலும் படைப்பிரிவுகளை அனுப்ப திட்டமிட்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டு வரலாற்றிலேயே முதல் தடவையாக காங்கிரஸ் ஒரு வெளிநாட்டிற்கு துருப்புக்களை அனுப்ப முடிவு செய்திருக்கிறது. ஓரிரு சிறிய தேசியவாதக்கட்சிகள் மற்றும் இடதுசாரி பசுமைக்கட்சி போக்குகள்தான் எதிர்த்து வாக்களித்தனர். பிரதமர் Jose Luis Zapatero ஆப்கானிஸ்தானுக்கும், ஹைட்டிக்கும் கூடுதலாக துருப்புக்கள் அனுப்படுவதை நியாயப்படுத்தினார். ஏனெனில் ஐ.நா என்கிற "சர்வதேச சமுதாய ஆதரவு பெற்ற பன்னாட்டு முயற்சிகளின்" ஒரு பங்காக இவை இருந்தன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இதுவரை அரசாங்கங்களின் முடிவைப் பொறுத்து ஸ்பெயின் நாட்டு இராணுவம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டது, ஆனால் இன்றைய நிர்வாகத்தினர் "வேறுபட்ட நடைமுறைகளை" பின்பற்ற விரும்புகின்றனர், நாடாளுமன்றத்தை கலந்தாலோசிக்க விரும்புகின்றனர் என்று காங்கிரசிற்கு அளித்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த வகையில் அரசாங்கத் தலைவர் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான சீர்திருத்தத்தை அறிவித்தார். அதன்படி எதிர்காலத்தில் துருப்புக்கள் அனுப்பப்படுவது நாடாளுமன்றத்தின் விவாதத்திற்கு உட்படுத்தப்படும். மார்ச் 14-ல் நடைபெற்ற தேர்தலில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் முன்னர் Zapatero வலதுசாரி பாப்புலர் கட்சி (PP) அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தனது முடிவைப்பற்றி விவாதம் எதுவும் நடத்தாமல் ஈராக்கிற்கு துருப்புக்களை அனுப்பியதற்காக கண்டனம் தெரிவித்தார். தேர்தலில் தோல்வியடைந்த (PP) பிரதமர் ஜோஸ் மரியா அஜ்னார் மார்ச் 11-ல் மாட்ரிட்- ல் நடைபெற்ற குண்டுவீச்சுத்தாக்குதல்கள் நடைபெறுமளவிற்கு ஆத்திரமூட்டினார் என்று குற்றம் சாட்டப்பட்டது. ஈராக்கிற்கு எதிரான போரை அவர் ஆதரித்தன் மூலம் 190-பேர் மாண்டனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. PSOE நாடாளுமன்ற விவாதம் நடத்தவேண்டும் என்று அழைப்புவிடுத்திருப்பதன் தெளிவான உட்குறிப்பு என்னவென்றால் துருப்புக்களை அனுப்புவதை எதிர்ப்பதற்கான வழிமுறையாக அதைப்பயன்படுத்தலாம் என்பதாக இருந்தது. ஸ்பெயின் நாட்டு மக்களால் வெளிப்படுத்தப்பட்ட ஆழ்ந்த போர் எதிர்ப்பு உணர்வின்விளைவாக பொதுத்தேர்தலில் PP அரசாங்கம் ஆட்சியிலிருந்து பலவந்தமாய் நீக்கப்பட்டபொழுது, இந்த மேம்போக்கான போர் எதிர்ப்பு நிலைப்பாடு PSOE- க்கு வெற்றி ஈட்டித்தந்தது.ஈராக்கிலிருந்து ஸ்பெயின் நாட்டுத்துருப்புக்களை விலக்கிக்கொள்வதற்கு Zapatero கட்டாயப் படுத்தப்பட்டார். ஆனால் இப்போது அவர் ஆப்கானிஸ்தானுக்கும், ஹைட்டிக்கும் துருப்புக்களை அனுப்புவதற்கு சட்டபூர்வ முகமூடியை உருவாக்கிவிட்டார். அப்படிச் செய்யும் போது மிகுந்த இறுமாப்போடு, ''ஆழ்ந்த ஜனநாயகக் கொள்கைகளால் உந்தப்பட்டு அரசாங்கம் ஸ்பெயின் நாட்டு மக்களது விருப்பிற்குப் புறம்பாக அல்லது எதிராக செயல்படாது, செயல்பட முடியாது, செயல்பட விரும்பவில்லை'' என்று அறிவித்தார். ஆப்கானிஸ்தானில் ஸ்பெயின் நாட்டுத்துருப்புக்கள் 1000-க்கு மேல் அனுப்பப்படுவது ஏறத்தாழ ஈராக்கிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட அளவிற்கு ஆப்கானிஸ்தானுக்கு துருப்புக்களை அனுப்புவது - ஒரு வகையில் அமெரிக்காவிற்கு இழப்பீடு தருவதாக அமையும் என்ற கருத்தை மறுப்பதற்கு அமைச்சர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த முடிவிற்கு தான் பலர் வந்திருக்கின்றனர். Zapateroவின் PSOE அரசாங்கம் ஆப்கானிஸ்தானுக்கு துருப்புக்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியிருப்பதும் கூட அஜ்னார் பதவிவிலகுவதற்கு முன்னர் தந்த உறுதிமொழியை நிறைவேற்றுகிற வகையில்தான் என்று பார்க்கப்படுகிறது. ஸ்பெயின் நாட்டுத்துருப்புக்கள் ஈராக்கிலிருந்து விலக்கி கொள்ளப்பட்டதை மிகக்கடுமையாக பகை உணர்வோடு புஷ் நிர்வாகம் கண்டித்தது, அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு அடிபணிந்துவிட்டதாக குற்றம் சாட்டியது. ஈராக்கிலிருந்து விலக்கிக்கொள்ளப்படும் துருப்புக்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவதன் மூலம் அங்குள்ள அமெரிக்கத்துருப்புக்களை ஈராக்கிற்கு அனுப்புவதற்கு உதவமுடியுமென்றும் அந்த நேரத்தில் இரண்டு அரசாங்கங்களுக்குமிடையே இரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக அப்போதே அது பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. அந்த நேரத்தில் ஸ்பெயின் அரசாங்கம் ஆப்கானிஸ்தானுக்கு தனது துருப்புக்களை இரட்டிப்பாக்கி அனுப்பி ஈராக்கிலிருந்து விலக்கிக்கொண்டதை ஈடுகட்டுவதாக உண்மையிலேயே அப்போது குறிகாட்டி இருந்தது. வாஷிங்டனை சமாதானப்படுத்தும் முயற்சி மட்டுமே இதில் சம்மந்தப்பட்டிருக்கவில்லை என்றாலும், உலகின் எண்ணெய் வளமிக்க மூலோபாய மண்டலங்களை பிடிப்பதில் நடைபெற்று வரும் பலருடனான ஏகாதிபத்தியப் போட்டியில் தன்னை தனித்து விட்டுவிடக்கூடாது என்பதில் ஸ்பெயின் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறது. ஈராக்கிலிருந்து துருப்புக்களை திரும்ப பெற்றுவிட்ட அரசாங்கம் ஆப்கானிஸ்தானுக்கும், ஹைட்டிக்கும் துருப்புக்களை அனுப்புவது மோசடியான நடவடிக்கை என்ற குற்றச்சாட்டுக்களுக்கு தங்களது முதுகை மறைத்துக்கொள்ள பதிலளித்த வெளியுறவு அமைச்சர் Miguel Anel Moratinos நாடாளுமன்றக்குழுவில் உரையாற்றும்போது, ''அல்கொய்தா விடுத்துள்ள அச்சுறுத்தலை புறக்கணித்துவிட முடியாது" மற்றும் "ஆப்கானிஸ்தானில் சர்வதேச தலையீட்டின் சட்டபூர்வமான தன்மையை சந்தேகிக்க முடியாது'' என்று குறிப்பிட்டார். Zapatero-வின் சார்பில் குரல்தரவல்ல பேச்சாளரான Javier Valen zuela ஈராக் படையெடுப்பை ஐ.நா பாதுகாப்பு சபை அங்கீகரிக்கவில்லை, ஆனால் ஆப்கானிஸ்தானிலும், ஹைட்டியிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு ஐ.நா ஒப்புதல் வழங்கியுள்ளது என்று கூறினார். இந்த மாதம் ஸ்பெயின், வெளிவிவகாரங்களில் பங்களிப்பு செய்வதற்கான மற்றொரு மிகமுக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. மாட்ரிட்டில் புதிய நேட்டோ தலைமை ஆணையக மையம் திறக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பாவிலுள்ள நேட்டோ தரைப்படைகளுக்கான ஆணையகத்தின் புதிய மையம், பிரதானமாக தென்மேற்கு ஐரோப்பாவிற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த புவிசார் பொறுப்புக்களை உடைய மையத்தை மாற்றீடு செய்தது. |