World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காmeaning of the Democratic convention Kerry, Edwards vow to continue war and social reaction ஜனநாயகக் கட்சி மாநாட்டின் பொருள் சமூக பிற்போக்கையும் போரையும் தொடர கெர்ரியும் எட்வர்ட்சும் உறுதி கொள்ளுகின்றனர் By Bill Van Auken ஜனாதிபதிப் பதவிக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளரான பில் வான் ஒகெனால் வெளியிடப்பட்ட அறிக்கை கீழே பிரசுரிக்கப்படுகிறது. வாஷிங்டனின் தற்போதைய கொள்கையான வெளிநாடுகளில் இராணுவத் தாக்குதல்களும் உள்நாட்டில் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதலும் என்ற போக்கில், நவம்பர் மாதத் தேர்தலில் இக்கட்சி வெற்றி பெற்றால் மாறுதல்கள் ஏற்படும் என்ற கூற்றுக்கள் பற்றி, இவ்வாரம் போஸ்டனில் நடந்த ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு மிக வலுவான முறையில் மறுத்தலை வழங்கியுள்ளது. கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரியும் அவருடன் துணை ஜனாதிபதி பதவிக்கு நிற்கும் ஜோன் எட்வர்ட்சும் நிகழ்த்திய உரைகளும் குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்க ஆளும் ஒருசிலவராட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் திறனுக்கு நிலைப்படுத்தியுள்ளமுறையில், ஜனநாயகக் கட்சி கடந்த ஆண்டில் உறுதியான வகையில் வலதுபுறம் நோக்கி பாய்ச்சல் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை தெரிவிக்கிறது. இருவருடைய உரைகளுமே கைதட்டி ஆர்ப்பரித்திருந்த பிரதிநிதிகளுக்கோ அல்லது தொலைக் காட்சியில் பார்ப்பவர்களுக்கோ என்றில்லாமல் நிதி-பெருநிறுவன செல்வந்த தட்டினருக்கும் அவர்களின் செய்தி ஊடக பிரதிநிதிகளுக்கும் செலுத்தப்பட்ட வகையில் இருந்தன. அவர்களுடைய வண்ணப் பூச்சு மிக்க உரைகள் இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு ஒரு கெரி-எட்வர்ட்ஸ் நிர்வாகம் இந்த ஆண்டு கட்சியின் ஆரம்பத் தேர்தல்களில் வெளிப்பட்டிருந்த போரெதிர்ப்பு உணர்வுகளுக்கு எவ்விதச் செல்வாக்கும் கொடுக்க மறுக்கும் என்றும், முந்தைய காலத்தில் ஜனநாயகக் கட்சியினர் என அடையாளம் காட்டுவதற்குக் கொண்டிருந்த "தாராளவாத" சீர்திருத்தவாதக் கொள்கைகள் மீண்டும் எழுச்சி பெற அது எந்த முயற்சியும் கொள்ளாது என்றும் உறுதியளிப்பதை நோக்கமாக கொண்டிருந்தன. இராணுவ வாதத்தை பெருமைப்படுத்தியதும், பெரு வணிகர்களுக்கு தாழ்ந்து நிற்கும் கட்சியின் நிலைமையும் ஜனாதிபதி வேட்பாளருடைய முதல் வாக்கியமான, "நான் ஜோன் கெர்ரி, என்னுடைய பணியை ஏற்றுச் செயல்படுத்த ஆயத்தமாயுள்ளேன்" என்பது சுருக்கமாகத் தெரிவித்தது. தன்னுடைய பிரச்சாரத்தின் தன்மையை ஜனாதிபதிப் பதவிக்காக என்பதை விட புதிய "அமெரிக்க தலைமைப் படைத்தளபதி" என்ற நிலை கொடுக்கப்பட வேண்டும் என்பது போல் அளித்திருந்தார். ஜனநாயகக் கட்சி மாநாட்டை ஒரு இராணுவ ஆட்சிக்கு புதிய சாதாரண பெயரளவுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் ஜனநாயகக் கட்சிக் கூட்டம் என்று அமெரிக்க அரசியல் தோற்றத்தைப் பற்றி தெரியாத ஒருவர் நினைத்திருந்தால் அவர் மன்னிக்கப்படலாம் என்ற முறையில் இது அமைந்தது. மேடையில் ஒரு டஜனுக்கும் மேலான ஓய்வு பெற்ற ஜெனரல்களும், கடற்படைத் தலைமை தளபதிகளும் குழுமியிருந்தனர். படைகளின் கூட்டுத் தளபதிக்குழுவின் முன்னாள் தலைவரான ஜெனரல் ஜோன் ஷாலிகாஷ்விலி பிரதிநிதிகளுக்கு உரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டிருந்தார். NATO வின் முன்னாள் தளபதியும், பழைய ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ஜெனரல் வெஸ்லி கிளார்க் மாநாட்டில் உரையாற்றுகையில் ஆக்கிரோஷமாக: "நான் ஒரு அமெரிக்கப் படைவீரன். நம்முடைய நாடு தாக்கப்பட்டுள்ளது. நாம் போரில் ஈடுபட்டுள்ளோம். நம்முடைய நாட்டை அபாயம் சூழ்ந்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் நாம் ஈடுபட்டுள்ளோம்.... இங்கு இன்றிரவுகூடியிருக்கையில், நம்முடைய படைகள் போரிட்டுக் கொண்டிருக்கின்றன." எனக் கூறினார். உண்மையில், ஜனநாயகக்கட்சியினர் போஸ்டனில் திருவிழா நடத்திக் கொண்டிருக்கையில், ஓர் ஐந்து அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டும் மற்றும் கிட்டத்தட்ட நூறு பேருக்கும் மேல் ஈராக்கில் காயமுற்றும் இருந்தனர். வியாழன் இரவன்று கெர்ரி மேடையிலிருந்து பேசிக் கொண்டு இருக்கையில், அமெரிக்க இராணுவம் பல்லூஜா நகரத்தின் மீதாக விமானத் தாக்குதல்களை மேற்கொண்டு, பல வீடுகளை அழித்தும், டஜன் கணக்கில் ஈராக்கிய ஆடவர், பெண்டிர், குழந்தைகளைக் கொன்றும் குவித்திருந்தனர். கெர்ரி வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதற்கு மிகவும் உகந்த வாதமாக அவர் வியட்நாம் போரில் பழைய வீரர் என்பதும், அவ்விதத்தில் ஈராக்கில் அமெரிக்கப் படைகளை செலுத்தவும், புதிய இராணுவத் தலையீடுகளை வெளிநாடுகளில் மேற்கொள்ளவும் திறமை மிகுந்தவர் என்பதும் முன்வைக்கப்பட்டன. எட்வர்ட்ஸ், கெர்ரி இருவருமே மீண்டும் மீண்டும் வியட்நாமில் வேட்பாளரின் சேவைக்கே திரும்ப திரும்ப வந்தனர். ஓட்டம் பிடித்துக் கொண்டிருந்த ஒரு வியட்நாம் வீரரை கெர்ரி சுட்டுக் கொன்றதை சுட்டிக்காட்டி, எட்வர்ட்ஸ் அறிவித்தார்: "உறுதியான, வலுவான தன்மை. இதைத்தானே தலைமைத் தளபதியிடம் எதிர்பார்க்கிறோம்?" துணை ஜனாதிபதிக்கான வேட்பாளர் தனது ஆரம்ப கட்ட தேர்தல்களில் பயன்படுத்திய "இரண்டு அமெரிக்காக்களை" பற்றிய ஜனரஞ்சக ஈர்ப்புப்பேச்சின் எஞ்சிய துண்டுப் பகுதியை தேசிய ஒற்றுமைக்காக இராணுவ முறையிலான அழைப்பை விடுக்கும் வேலை செய்வதற்கு கூட கையாளவும் செய்தார். "இன்னொரு முக்கிய காரணத்திற்காகவும் நாம் ஒரு வலிமையான, ஒற்றுமையுடன் கூடிய ஒரே அமெரிக்காவாக கட்டாயம் இருக்கவேண்டும், ஏனெனில் நாம் போரில் ஈடுபட்டுள்ளோம்" என்று அவர் குறிப்பிட்டார். "நாம் நம்முடைய இராணுவத்தை வலிமைப்படுத்தி, நவீனமயப்படுத்துவோம்; நம்முடைய சிறப்பு படைகளை இரு மடங்காக அதிகரிப்போம், நாம் கூடுதலான முறையில் புதிய கருவிளையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி, நம்முடைய இராணுவம் உலகிலேயே மிகச் சிறந்த கருவிகளையும் தயாரிப்புக்களையும் கொண்டதாக ஆக்குவோம். இது நம்முடைய இராணுவத்தை இன்னும் வலிமையுடையதாக்கும், இந்தப் புதிய உலகில் எந்த எதிரியையும் எம்மால் தோற்கடிக்க முடியம் என்பதை உறுதியாக்குவோம்" என்று எட்வர்ட்ஸ் கூறினார். இதே போக்கைத்தான் கெர்ரியும், "நம்முடைய நினைவுக் காலத்திலேயே இத்தேர்தல்தான் மிக முக்கியம், ஏனெனில் நாம் போரில் ஈடுபட்டிருக்கும் ஓரு நாடு, அதுவும் உலகளாவிய பயங்கரவாதத்தின் மீதான போர், இதுவரை நாம் பார்த்திராத தன்மையைக் கொண்டிருக்கும் விரோதிக்கு எதிராக..." என்று கூறியவகையில் எதிரொலித்தார். மீண்டும் தன்னுடைய வியட்நாம் பணியையும் உறுதிமொழியையும் குறிப்பிட்டு அவர் கூறினார்: "ஜனாதிபதி என்னும் முறையில், நான் போரில் கற்றுக் கொண்ட படிப்பினைகளின் அடிப்படையில் இப்போரை நடத்துவேன்." ஆனால், வியட்நாமில் கெர்ரி கற்ற படிப்பினைகள் யாவை? மாநாட்டு பேச்சில் வேட்பாளர் அறிவித்தார்: "நான் இந்த நாட்டை ஒரு இளைஞனாகப் பாதுகாத்தேன்; இப்பொழுது ஒரு ஜனாதிபதியாகப் பாதுகாப்பேன். தேவையானால் வலிமையைப் பயன்படுத்த நான் ஒருபோதும் தயங்கமாட்டேன் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்." மேலும் "கூடுதலான வலிமை பெறும் இராணுவத்தை" அமைப்பதற்கு 40,000 வீரர்களை சேர்க்கப்போவதாகவும் அவர் உறுதிமொழி அளித்தார். ஆயினும், வியட்நாமிலிருந்து மூன்று தசாப்தங்களுக்கு முன் அவர் திரும்பிவந்தபோது, அப்போர் அமெரிக்க பாதுகாப்பிற்காக இல்லை என்றும் மனித குலத்திற்கெதிரான ஒரு குற்றம் என்றும் விவரித்திருந்தார். செனட்டர் வெளியுறவுக் குழு விசாரணை ஒன்றில் 1971ம் ஆண்டு சாட்சியமளித்தபோது, அந்தப் போர் "எவ்விதமான காலனித்துவ செல்வாக்கிலிருந்தும் தாங்கள் விடுதலையடைய வேண்டும் என்பதற்காக அம்மக்கள் நடத்தும் போர்" என்று கூறினார். மேலும், "..அமெரிக்காவை அச்சுறுத்துவதற்கு.... வியட்நாமில் ஒன்றும் இல்லை. ஒரு அமெரிக்க உயிர் வியட்நாம், கம்போடியா அல்லது லாவோசில் இழப்பதை நியாயப்படுத்துவதற்கு, அத்தகைய இழப்பு சுதந்திரத்தைக் காப்பதற்கு எனக்கூறுவது... பாசாங்குத்தனத்தின் உயர்கட்டமாகும்" என்றும் அறிவித்திருந்தார். இத்தகைய பாசாங்குத்தனம்தான் போஸ்டன் மாநாட்டின் ஜனநாயகக் கட்சியின் ஒவ்வொரு துளையில் இருந்தும் வெளிப்பட்டது. ஈராக்கின்மீதான போர் ஒரு குற்றச்செயல், கிட்டத்தட்ட 1,000 அமெரிக்க வீரர்களும், பல்லாயிரக்கணக்கான ஈராக்கியர்களும் மடிந்ததும் நியாயப்படுத்த இயலாதவை என்பதும், ஈராக்கிலுள்ள அபு கிறைப் சிறையில் நடத்தப்பட்ட சித்திரவதைகள் வெளிவந்தவை ஒரு தேசிய அவமானம் என்றும் கூட்டத்தில் பேசிய எந்தப் பேச்சாளராலும் ஒரு கருத்தாகக் கூறப்படவில்லை. மாறாக, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள், அவர்கள் போரையும் ஆக்கிரமிப்பையும் முறைமையானவை, தேவை என்ற கருத்தைத்தான் கொண்டிருப்பதாக தெளிவுபடுத்தினார். இப்போரைப்பற்றிய எதிர்ப்பை அவர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது போஸ்டனில் போரெதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும், மாநாடு நடத்தப்படுவதற்கும் எதிராகக் கொள்ளப்பட்டிருந்த அசாதாரண பாதுகாப்பு நடவடிக்கைகள் தெளிவுறுத்தின. மாநாட்டில் ஒரு நபர் ஈராக்கில் ஆக்கிரமிப்பைக் கைவிட வேண்டும் என்று அழைப்பு விடுத்த ஒரு பதாகையை ஏற்ற முற்பட்டபோது, அப்பெண்மணி போலீஸ் அதிகாரிகளால் இழுத்துத் தள்ளப்பட்டு மாநாட்டு அரங்கில் இருந்து அகற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சி, கெர்ரி நிர்வாகம் பின்னர் போரெதிர்ப்பு கருத்திற்கு எத்தகைய போக்கை கொள்ளும் என்பதற்கு நுண்ணறிவுத்திறத்தை வழங்குகிறது. எட்வர்ட்சின் உரையில் இருந்து ஒரு பகுதியைப் பார்த்தால், ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் ஈராக்கிய தலையீட்டில் ஜனயாக நெறியை போலியாகக் காட்டி, புதிய தூண்டுதல் இல்லாத போர்களை கொள்ளை முறையில் மேற்கொண்டபோது ஆற்றிய உரைகளில் இருக்கின்றது போல் தோன்றும்: "ஈராக்கின் அண்டை நாடுகளான சிரியா, ஈரான் போன்றவை ஒரு ஜனநாயக ஈராக் தோன்றுவதற்கு தடையாக நிற்காமல் நாம் உறுதிசெய்வோம். ஈராக்கின் பொருளாதாரத்திற்கு நாம் உதவுவோம்.... இதை நாம் ஈராக்கிய மக்களுக்காகவும், நம்முடைய படைவீரர்களுக்காகவும் செய்வோம். இது சரியாகச் செய்யப்படும் என்பதில் உறுதியாக இருப்போம். ஒரு புதிய ஜனாதிபதி உலகத்தை நம் பக்கம் அழைத்து வருவார், உறுதியான ஈராக் ஏற்பட்டவுடன் மத்திய கிழக்கில் உண்மையான சுதந்திரம், சமாதானம் இவற்றிற்கான வாய்ப்பு, ஒரு பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான இஸ்ரேல் உட்பட நிறுவுதல் என்ற நிலைமையையும் ஏற்படுத்துவார்" இதேபோல், கெர்ரி "பணியை முடிப்போம்" என்ற சபதத்தைக் கூறி, "நாம் ஈராக்கில் என்ன செய்யவேண்டும் என்பதை நான் அறிவேன். எம்முடைய நண்பர்களை நம் பக்கம் அழைத்து, எமது பாரத்தை பகிரச் செய்யும் நம்பிக்கையுடைய ஜனாதிபதி நமக்குத் தேவை" என அறிவித்தார். சுருங்கக் கூறினால், ஒரு ஜனநாயகக் கட்சியின் நிர்வாகம் ஈராக்கிய ஆக்கிரமிப்பை பல ஆண்டுகளுக்கு தொடரும். இது ஒரு "புஷ்ஷின் போர்" அல்ல, அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டின் மிகச்சக்தி வாய்ந்த பிரிவுகள் ஒரு அடிப்படை மூலோபாயத்தைக் கொண்டு தொடுத்துள்ள போராகும். சோவியத் ஒன்றியம் பொறிந்த பின்னர், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருவரிடமும், வாஷிங்டன் தன்னுடைய போட்டியற்ற இராணுவ வலிமையை பயன்படுத்தி உலகப் பொருளாதாரத்தின்மீதும், அதன் முக்கிய சந்தைகள், இருப்புக்கள், அதிலும் முக்கியமாக எண்ணெய் வளம் இவற்றின் மீதான ஆதிக்கத்தைக் கொள்ளவேண்டும் என்பது ஓர் ஒருமித்த கருத்தாக ஏற்பட்டுவிட்டது. அந்த மூலோபாயத்தை செயல்படுத்துவதைத்தான் ஈராக்மீதான போர் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தற்போது நடைபெற்று வரும் அரைகுறை நடவடிக்கையை அகற்றும் நோக்கத்துடன்தான் கெர்ரியும் எட்வர்ட்சும் புஷ் நிர்வாகத்தின்மீது குறைகூறி வருகின்றனர். புஷ் நிர்வாகம் போரை தொடர்வதற்கு திறனின்றி உள்ளது என்றும், தேவையில்லாமல் மதிப்பு மிக்க நட்பு நாடுகளை ஒருதலைப்பட்ச நடவடிக்கை, சிந்தனைமுறை மூலம் பகைத்துக் கொண்டுள்ளது என்றும், அமெரிக்க மக்களிடையேயும் நம்பிக்கைத்தன்மையை இழந்துள்ளது என்று எடுத்துரைக்கும் வகையில் ஆளும் செல்வந்த தட்டிடம் இவர்கள் வாதம் செலுத்தப்படுகிறது. எனவேதான் ஒரு புதிய "தலைமை தளபதி" பணியை சரியாக செய்து முடிப்பதற்குத் தேவை என்று கூறப்படுகிறது. அதுவும் வியட்நாம் போரில் பணிபுரிந்த ஒருவரைத்தவிர எவர் எளிதில் தன்னுடைய இராணுவப் பணியைக் காட்டி, தேவையானால் கட்டாய இராணுவப் பணியை மீண்டும் புகுத்தவேண்டும் என்று கூறுதல் உள்பட, மற்றவர்களிடம் "தியாகங்களை" கோரமுடியும்? ஆனால் தெளிவற்ற முறையில் புஷ்ஷிற்கு எதிராக மக்கள் உணர்வை தூண்டி விடுதல், ஜனநாயகக் கட்சியனரின் மீதுதான் திரும்பவும் தாக்குதலாக வரும். "பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறிவிட்டால், அவ்வாறு இருந்து விடுவதாக ஆகிவிடாது. ஒரு ஜனாதிபதி என்னும் முறையில் அதைப்பற்றிக் கடுமையான கேள்விகள் கேட்டு, தக்க சான்றுகளை கேட்பேன்." என்று கெர்ரி கூறியுள்ளார். ஆயினும்கூட, செனட்டர்கள் என்ற முறையில் அவரோ, எட்வர்ட்சோ, புஷ்ஷிற்கு ஈராக்மீதான தூண்டுதலற்ற போரை தொடுப்பதற்கு அதிகாரம் வழங்கும் முன்பு அத்தகைய விதத்தில் கேள்வி கேட்டு நடந்து கொண்டதாகத் தெரியவில்லை. மேலும் அமெரிக்க தேசபக்த சட்டம் மற்றும் அதன் கடுமையான ஜனநாயக விரோத தாக்குதல்களை ஆதரித்து வாக்குப் போடுவதற்கு முன்பு, அவர்கள் இருவருமே "கடினமான கேள்விகளை" கேட்கும் நோக்கம் கொண்டிருந்தவர்களாக இருந்ததாகவும் தெரியவில்லை. ஒரு கட்டத்தில், புஷ் நிர்வாகத்தை மறைமுகமாகக் கண்டனப்படுத்தும் வகையில், தான் இப்போரை பற்றி "தவறாக வழிநடத்த மாட்டேன்" என்றும் தன்னுடைய துணை ஜனாதிபதி "சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோரே சட்டங்களை திருத்தியெழுதும் வகையில் இரகசியக் கூட்டங்களை நடத்தமாட்டார்", தன்னுடைய தலைமை வழக்குரைஞர் "அமெரிக்க அரசியலமைப்பை நிலைநிறுத்துவார்" என்றும் கெர்ரி கூறினார். இதனுடைய தவிர்க்கமுடியாத உட்குறிப்பு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் அவர்களுடைய உயர் உதவியாளர்கள் சட்ட விதிகளை மீறிய குற்றவாளிகள், தாங்கள் கொண்டிருந்த பதவிப் பிரமாணங்களை மீறியவர்கள், அமெரிக்க அரசியல் அமைப்பை நிலைநிறுத்தாதவர்கள் என்ற பொருளைத்தான் கொடுக்கிறது. ஆயினும்கூட இப்போழுதுள்ள போக்கின் அடிப்படையை மாற்றுவதற்கான திட்டமோ, குற்றவாளிகள் நீதிக்குமுன் நிறுத்தப்படுவர் என்றோ உறுதிமொழி இல்லை. மாறாக, அவர்களுடைய குற்றஞ்சார்ந்த கொள்கைகள் இன்னும் திறமையுடன் செயலாற்றப்படும் என்ற உறுதிமொழிதான் கொடுக்கப்படுகிறது. புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போர்", "உள்நாட்டுப் பாதுகாப்பை வலிமைப்படுத்துதல்" என்ற வார்த்தை ஜாலத்தை ஜனநாயகக் கட்சியும் ஏற்றுள்ளது, கெரி-எட்வர்ட்ஸ் நிர்வாகம் புஷ்ஷின் கொள்கைகள் அடிப்படையில் தொடரப்படும் என்பதை தெளிவாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் குறிப்புக்களாகும். இந்தப் "போரின்" உண்மையை ஆதாரமாகக் கொண்ட தன்மை பற்றியோ அல்லது அது எவ்வாறு இராணுவவெறியை வெளிநாடுகளிலும், உள்நாட்டில் அடக்குமுறையை கொள்ளுவதற்கும் நியாயப்படுத்துவதற்காக அமெரிக்க மக்களிடையே சுமத்தப்பட்டது என்பது பற்றியோ ஆலோசனையாக கூறக்கூட ஜனநாயகக் கட்சியின் மிக "இடது" பிரிவுகள்கூட வினா எழுப்ப துணியவில்லை. குளிர்யுத்த காலத்தில் "கம்யூனிசத் தாக்குதல்" என்று கூறப்பட்ட அச்சுறுத்தல் பயன்படுத்தப்பட்டதற்கு ஒப்ப, எங்கும் படர்ந்துள்ள பயங்கரவாதம், சமூக மற்றும் அரசியல் முரண்பாடுகளால் பிளவுகொண்டுள்ள ஒரு நாட்டை ஒன்றுபடுத்துவதற்கு புதிய சிந்தனைக் கருவியாக, இப்பொழுது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசியல் முறையில் முன்பு நினைத்தும் பார்க்கமுடியாத கொள்கைகளை திணிப்பதற்கும் அச்சத்தையும் அரசியல் திசைவிலகலையும் வளர்ப்பதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இது ஜனநாயகக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தொடரும்; அவர்களுடைய அரங்கு, "புஷ்ஷின் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் போதுமான அளவு இல்லை" என்றுதான் அறிவிக்கிறது. உள்நாட்டுக் கொள்கையை பொறுத்தவரையில் சற்று கூடுதலாகவே சென்று தன்னை ஒரு நிதிமுறையில் பழைமையான கருத்துடையவர் என்று கெர்ரி சித்தரித்துக் காட்டிக்கொண்டார். வரவுசெலவுத் திட்டத்தை சமன் செய்வதற்கு, ஏற்கனவே குறைப்புக்களுக்கு உட்பட்டிருந்த சமூக நலச் செலவினங்களை றேகன் நிர்வாகம் இன்னும் கூடுதலாகக் குறைத்த, Gramm-Rudman சட்டத்திற்கு தான் 1985 ல் ஆதரவு கொடுத்ததை பெரிதாகக் கூறினார். சுகாதார நலன்கள், கல்வி இவற்றிலுள்ள நெருக்கடிகளுக்கு தெளிவற்ற தீர்வுகளைக் கூறி, கெர்ரி தன்னுடைய நிர்வாகம் கூட்டாட்சியின் பற்றாக்குறையை நான்கு ஆண்டுகளில் பாதியாகக் குறைத்துவிடுவதாக வலியுறுத்தி, "தன்னுடைய அரசாங்கம் ஒவ்வொரு குடும்பமும் வருமானத்திற்குள் வாழும் வகை வகுக்கும் முறையில்" ஆட்சி நடத்தும் என்றார். இந்த அரங்கில் அமெரிக்க இராணுவச் செலவினங்களுக்கு பெரும் அதிகரிப்பு இருக்கும் எனக் கூறப்பட்டுள்ள வகையில், அமெரிக்காவில் சமூகப் பாதுகாப்பு வலையில் எஞ்சியுள்ள மிகச்சிறிய சமூக நலன்களையும் அழிப்பதற்கான வழிவகைதான் இது. வேலைகளைப் பொறுத்தவரையில், ஜனநாயகக் கட்சி அளிக்க இருப்பதெல்லாம் பொருளாதார தேசியம் என்னும் வார்த்தை ஜாலம்தான். பெருநிறுவனங்களுக்கு இன்னும் கூடுதலான வரிக் குறைப்புக்கள் கொடுக்க வேண்டும் என்றும் அப்பொழுதுதான் "உற்பத்தித் துறை புத்துயிர்ப்பு" பெறும் என்றும் "முன்பு நம்முடைய சிறந்த அமெரிக்காவில் இருந்தது போல், வேலைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வெகுமதியாக இருக்கும்" என்றும் அவர் அழைப்பு விடுத்தார். அமெரிக்க தொழிலாளிக்கு நியாயமான வழிமுறை அமைத்துக் கொடுத்தால், உலகில் எவரும் அவருக்கு எதிராகப் போட்டியிட முடியாது" என்று வேட்பாளர் அறிவித்தார். இதன் பொருள் என்னவென்றால், தங்களுடைய கொழுத்த இலாபங்களுக்காகவும், குறைவூதியத் தொழிலாளர்களை அமர்த்துவதற்காகவும், தம்முடைய நடவடிக்கைகளை நாட்டுக்கு நாடு எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளக்கூடிய சர்வதேச நிறுவனங்களுக்கு இணைந்து நிற்கும் முறையில் அமெரிக்கத் தொழிலாளர்கள் தம்மைத் தாமே தோல்வியடையச் செய்து கொள்ளும் வகையில் பிறநாட்டுத் தொழிலாளர்களுடன் போட்டியிட்டு நிற்க வேண்டும் என்பதாகும். இந்தக் கொள்கைதான், முதலாளிகள் முதலீடு செய்வதற்காக ஈர்க்கும்பொருட்டு அவர்களுக்கு மேலும் மேலும் சலுகைகள் கொடுக்க தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து வரும், இப்பெருநிறுவனங்களின் முகவர்களாகச் செயல்பட்டுவரும் AFL-CIO இன் தொழிலாளர் அதிகராத்துவத்தினாலும் ஆர்வத்துடன் ஏற்கப்பட்டது. பொருளாதார தேசியத்தின் இத்தாக்கம் தொழிலாளர்களை தங்கள் "சொந்த" முதலாளித்துவ ஆட்சியாளர்களோடு இணையவைத்து வெளிநாடுகளின் போட்டியில் இருந்து காக்க உதவவேண்டும் என்பதாகும்; இத்தகைய முன்னோக்கு பிற இன பழிப்பு வெறியையும் இராணுவ வெறியையும்தான் தூண்டிவிடும். இதைத் தொடர்ந்து இடது என கூறிக்கொள்ளும் Nation போன்ற ஏடுகள் உள்ளன; இவை தங்களை ஏமாற்றிக் கொள்ளுவதுடன், மற்றவர்களையும் போஸ்டனில் நடக்கும் வலதுசாரிக் கூத்து ஓர் அரசியல் கணக்குத்தான் என்றும் ஜனநாயகக் கட்சியினர் இதை ஏற்றதற்கான காரணம் "மையவாதிகள்" போல் தோற்றமளித்து தேர்தலில் வெற்றியடைவதற்காகக் கொண்டுள்ளனர் எனவும் கூறுகின்றன. உண்மையில், மிகக் கவனத்துடன் அரங்கேற்றப்பட்டுள்ள இம்மாநாடு ஜனநாயகக் கட்சியின் அரசியல் சாராம்சத்தைத்தான் கூறுகின்றது. அமெரிக்க ஒருசிலவராட்சியினால் அவர்களுடைய நலன்களை பெருக்கவும், காக்கவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள கட்சியாகும் இது. இத்தன்மைதான் மற்றய பல தந்திரோபாய வேறுபாடுகளைக் கொண்டுள்ள போதிலும், இதை குடியரசுக் கட்சியினரோடு பொருந்த நடக்க வைத்துள்ளது. இதனுடைய உண்மையான சமூக அடித்தளம், இது முன்வைத்துள்ள வேட்பாளர்கள் மூலமே அறியப்படலாம்: நாட்டில் மிகச் செல்வம் கொழிக்கும் குடும்பங்களில் தலையாய இடத்தில் நிற்கும் ஒன்றில் இருந்து கெர்ரி வருகிறார்; எட்வர்ட்ஸின் குடும்பத்தினுடைய செல்வ மதிப்போ மில்லியன்களின் பதின் மடங்குகளில்தான் அளக்கப்பட முடியும். முன்னாள் ஜனாதிபதி கிளின்டன் மாநாட்டின் தன்மையைச் சுட்டிக்காட்டும் வகையில் தான் "உயர்மட்ட ஒரு விகிதத்தைச் சார்ந்தவர்" என அறிமுகப்படுத்திக் கொண்டு, தன்சார்ந்த சமூக வர்க்கத்தின் அடிப்படை நலன்களைக் காப்பதற்கு தந்திரோபாய மாற்றங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார். இவ்விதத்தில், மாநாடும், ஜனநாயகக் கட்சியின் வளர்ச்சியுமே கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்காவில் தடையின்றி உக்கிரமடைந்துவிட்ட சமுதாய-பொருளாதார துருவமுனைப்படலின் வெளிப்பாடாக உள்ளது. நிதிஆதிக்க செல்வந்தத்தட்டிற்கும் சாதாரண உழைக்கும் மக்களுக்கும் இடையே உள்ள மிகப் பெரிய பிளவு அமெரிக்க முதலாளித்துவ ஜனநாயகத்தை சிதைவிற்கு உட்படுத்தியுள்ளது. உண்மையில் "இரண்டு அமெரிக்காதான்" உள்ளன; அவற்றிற்கிடையே உள்ள பிளவானது ஜனநாயக அடிப்படையில் ஒரு குறிப்பிடத்தக்க சமூக அல்லது அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட முடியாத அளவுக்கு ஆழமாக உள்ளது. மாநாடு பிற்போக்குத்தனமாக இருந்தவாறு, ஆளும் செல்வந்தத்தட்டானது கெர்ரியையும், ஜனநாயகக் கட்சியினரையும், மூன்று மாதங்களில் இன்னும் அதிகரித்த வகையில் வலது பாதைக்கு தள்ளும் என்பதில் சந்தேகமில்லை. இதுதான் வாஷிங்டனுடைய அரசியல் ஏற்பாட்டின் குரலாக உள்ள வாஷிங்டன் போஸ்ட் தெளிவாக விளக்கியுள்ள நிலையாகும்; இது வெள்ளியன்று கெர்ரி ஆற்றிய உரையை மிகக் கடுமையான முறையில் திறனாய்ந்து "இழக்கப்பட்ட வாய்ப்பு" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், மற்றும் ஈராக்கின் மீதான படையெடுப்புக்களின் வெற்றியை "புகழ்ந்து" கூறாமல் இருந்ததற்காகவும், புஷ்ஷின் "முன்கூட்டிய போர்" தவறானது என்ற கருத்தைக் கொண்டதற்கும், அவரைச் சாடி எழுதியுள்ளது. "அமெரிக்கப் படைகள் ஈராக்கில் நீண்ட காலத்திற்கு இருக்கவேண்டும் என்ற தேவையின் கசப்பான உண்மையை, திரு கெர்ரி கூறியிருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு போன்றே, பொருளாதாரத்திலும் உண்மையைக் கூறுவதற்கான ஒரு வாய்ப்பை திரு கெர்ரி தவற விட்டு விட்டார்" என்று போஸ்ட் அறிவித்தது. "குழந்தை பெருக்கத் தலைமுறை ஓய்வு பெறுவதனால் விளைந்துள்ள, நிதி நெருக்கடியின் சவாலை ஒப்புக்கொள்ளவும் அவர் தவறி விட்டார்.... மாறாக சமுதாய பாதுகாப்புப் பிரச்சினையை எழுப்பி நலன்களைக் குறைக்க மாட்டேன் என்றுதான் மீண்டும் கூறியுள்ளார்; ஒரு ஜனாதிபதி கெர்ரி என்னும் முறையில் அவர் இந்த உறுதிமொழி பற்றி வருத்தப்பட நேரிடலாம்" என்றும் அது தொடர்ந்திருந்தது. இம்மாதிரியான விமர்சனம் பற்றி தன்னுடைய தீவிர உணர்வை ஏற்கனவே கெர்ரி வெளிப்படுத்தியுள்ளார். ஜனநாயகக் கட்சியின் ஆரம்பத்தேர்தல்களில் போஸ்ட் தான் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தன்னுடைய ஆதரவை ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு கொடுப்பதாக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. அவர் விரைவில் அதற்கேற்பத்தான் நடந்து கொண்டார். போஸ்டனில் ஜனநாயகக் கட்சியினர் முன்வைத்துள்ள கொள்கைகள், சோசலிச சமத்துவக் கட்சியால் விரிவுபடுத்தப்பட்ட அரசியல் முன்னோக்கையும், நாம் 2004 தேர்தல்களில் நிற்க எடுத்த முடிவு பற்றியும் மிகச் சரியானவை என்று மிகச் சக்தி மிக்க வடிவத்தில் நிரூபணம் செய்கின்றன. உழைக்கும் மக்கள் தாங்கள் எதிர்கொண்டுள்ள முக்கியமான பிரச்சினைகளான போர், வேலைகள், ஜனநாயக உரிமைகள், வாழ்க்கைத்தரங்கள், சமூக நிலைமைகள் இவற்றை பற்றியதில், இறுகப்பிடிக்கும் உறைபோல் அசையாத இருகட்சி முறைக்கு உள்ளே ஓர் அடி கூட முன்னேற்றகரமாக எடுத்து வைக்க முடியாது என்பதை மாநாடு மிகுதியாகவே தெளிவாக்கியுள்ளது. இத்தேர்தலில் "புஷ்ஷைத் தவிர வேறு எவரேனும்" என்பது மிகக் கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினை அல்ல. மாறாக, 2005-ல் வெள்ளை மாளிகையை ஜனநாயகக்கட்சியோ அல்லது குடியரசுக் கட்சியோ எது கைப்பற்றினாலும், அமெரிக்காவில் தவிர்க்கமுடியாத வகையில் வெடிக்க இருக்கும் சமுதாய மற்றும் அரசியல் போராட்டங்களுக்கான தயாரிப்பாகவே இருக்கிறது. எமது கட்சியின் பிரச்சாரம் இத்தகைய அவசியமான தயாரிப்பை நோக்கித்தான் இயக்கப்படுகிறது. அது, இந்தப் போராட்டத்திற்குத் தேவைப்படும் சுயாதீன வெகுஜன அரசியல் இயக்கத்தின் தோன்றலுக்கான அடித்தளங்களை இடுவதை நோக்கங்கொண்ட ஒரு பரந்த முறையிலான விவாதத்தை தொழிலாள வர்க்கம், மாணவர்கள், இளைஞர்கள், சொந்த தொழில் புரிவோர் இவர்களுக்குள்ளே முன்னெடுத்து வருகிறது. போருக்கெதிராகவும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் நடத்தப்பெறும் போராட்டம், இருகட்சி முறையிலிருந்து முற்றிலும் முறித்துக் கொண்டு, சோசலிசம், சர்வதேசியம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னோக்கை வளர்த்தெடுப்பதால்தான் முடியும். இந்தப் போராட்டத்தை முன்னோக்கி எடுத்துச்செல்ல விரும்பும் அனைவரையும், நான், என்னையும் என்னுடன் உள்ள துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜிம் லோரன்சையும் எம்முடைய ஏனைய சட்ட மன்ற வேட்பாளர்களுடனும் சேர்த்து வாக்குச் சீட்டில் இடம்பெறச் செய்வதற்கு உதவுமாறும், சோசலிச சமத்துவக் கட்சியில் சேரும் முடிவை எடுக்குமாறும் அழைப்பு விடுக்கிறேன். |