:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Report highlights unchecked looting of Iraq's oil resources
ஈராக்கினுடைய எண்ணெய் வளம் கட்டுப்பாடில்லாமல் கொள்ளையடிக்கப்படுவதை எடுத்துக்காட்டும்
அறிக்கை
By Rick Kelly
21 July 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட அரசு சார்பற்ற கிறிஸ்தவ உதவி (Christian
Aid) அமைப்பு ஜூன் 28 ல் வெளியிட்ட அறிக்கையில், ஈராக்கின் எண்ணெய் வளத்தை அமெரிக்காவும்
அதன் நட்பு நாடுகளும் கட்டுப்பாடு எதுவுமில்லாமல் சூறையாடிக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. ''ஈராக்
எண்ணெய் மூலம் வந்த பில்லியன்களும் கூட்டணியும்; சந்தேகங்களுக்கு தூபம்போடுகிறது'' என்ற தலைப்பில் வந்த பத்திரிகை
அறிக்கையில், எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைத்த 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மாயமாக மறைந்துவிட்டதை
அம்பலப்படுத்தியுள்ளது.
தற்போது கலைக்கப்பட்டுவிட்ட இடைக்கால கூட்டணி ஆணையம் (CPA)
எண்ணெய் வருவாய் திரட்டப்பட்டது தொடர்பாக துல்லியமான கணக்கை தருவதற்கு உறுதியாக மறுத்துவிட்ட காரணத்தினால்,
அமெரிக்க அதிகாரிகள் ஈராக்கினுடைய எண்ணெயை எவ்வளவிற்கு விற்பனை செய்தார்கள், என்ன விலைக்கு விற்றார்கள்
என்ற விவரம் யாருக்கும் தெரியாத நிலை தோன்றியுள்ளது.
இந்த கிறிஸ்தவ அமைப்பினுடைய அறிக்கை, இடைக்கால கூட்டணி ஆணையம் தனது அசாதாரணமான
அதிகாரங்கள் மூலம் ஈராக்கின் எண்ணெய் வருவாயை உபயோகப்படுத்தியது மற்றும் செலவினங்களின் ஒவ்வொரு
அம்சமும் அவற்றின் கட்டுப்பாட்டில் இருந்ததை விவரித்திருக்கிறது. அத்துடன், ஈராக்கின் எண்ணெய் வளம் இடைக்கால
கூட்டணி ஆணையம் மற்றும் அமெரிக்கத் தலைவர் போல் பிரேமரின் சொந்த சொத்தாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
இடைக்கால கூட்டணி ஆணையம் வெளியிட்டுள்ள வருவாய் பற்றிய விவரங்கள்
''சர்வதேச கணக்கின் தரத்திற்கேற்ப அமைந்திருக்கவில்லை'' என்று கிறிஸ்தவ அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, இடைக்கால கூட்டணி ஆணையம் பிரசுரித்துள்ள புள்ளிவிவரங்களில் கணிசமான முரண்பாடுகள் நிலவுவதையும்
அந்த அறிக்கை எடுத்துக்காட்டுகின்றது.
மே 29 ல், இடைக்கால கூட்டணி ஆணையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஈராக் அபிவிருத்தி
நிதியில் (Development Fund for Iraq - DFI)
ஈராக்கின் எண்ணெய் வருவாய் தொடக்கத்தில் வரவு வைக்கப்பட்டது. 2004 மே மாதத்திற்கு முந்திய 12
மாதங்களில் 10 பில்லியன் டாலர் எண்ணெய் வருவாய் வந்ததாக நிதி அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஆனால், இந்தத்
தொகை முரண்படுகின்ற வகையில், இதற்கு ஒரு நாளைக்கு முன்னர் பிரசுரிக்கப்பட்ட ''இடைக்கால கூட்டணி ஆணைய
நிர்வாகியின் வாராந்த அறிக்கையில்'' அதே காலத்தில் எண்ணெய் வருவாய் 11.5 பில்லியன் டாலர்கள் என்று
குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப்புள்ளி விவரங்கள் எப்படி கணக்கிடப்பட்டன என்பதற்கு குறிப்பு எதுவும்
தரப்படவில்லை.
இந்த கிறிஸ்தவ அமைப்பு எண்ணெய் ஏற்றுமதி மதிப்புபற்றி தனது சொந்த
விசாரணையை நடத்தியதில், ''மிகவும் கவனமான'' மதிப்பீட்டு அடிப்படையில் வருவாய் 11.8 முதல் 13
பில்லியன் டாலர்கள் வரை வந்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. இதன்படி இடைக்கால கூட்டணி ஆணையம்
வருவாயை 3 பில்லியன் டாலர்கள் அளவிற்கு அல்லது மொத்த வருவாயில் 30 சதவீதத்தை
குறைத்துக்காட்டியிருக்கிறது. ''இந்த மீதி பில்லியன் டாலர்களும் காணாமல் போய்விட்டனவா? அப்படிச் சொல்ல
முடியாது'' என்று இந்த அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது.
ஈராக்கில் அமெரிக்கா கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் தொழிற்துறைகள் சர்வதேச
அளவில் பின்பற்றப்பட்டுவரும் ''மீட்டர்'' மூலம் அளவிடும் நடைமுறையை இன்னும் பின்பற்றவில்லை. இந்த
மீட்டர்கள், விற்கப்படும் அளவு மற்றும் எண்ணெய்யின் தரத்தை மதிப்பீடு செய்கின்றன. அமெரிக்கா ஈராக்கின்
எண்ணெய் வளத்தை கைப்பற்றியதும், போரினாலும் பொருளாதாரத்தடை நடவடிக்கைகளாலும் மீட்டர்கள்
செயல்பாடு நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
ஈராக் எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதற்கு வசதியாக அமெரிக்க அதிகாரிகள்
திட்டமிட்டே மீட்டர்கள் திரும்ப செயல்படுவதை தாமதப்படுத்தினார்கள் என்று கூறுவதற்கு வலுவான ஆதார
கருத்துகள் இருக்கிறது. கிறிஸ்தவ உதவி அமைப்பு எண்ணெய் தொழிற்துறை நிபுணர்களை கலந்து ஆலோசித்தபோது,
மீட்டர் முறையினை உபயோகிப்பதில் எந்தவிதமான கடினமும் இல்லை என்றும் அதற்கு கூடுதல் பாதுகாப்பு
நடவடிக்கைகள் தேவையில்லை என்றும் தெரிவித்தனர். அப்படியிருந்தும் மே மாதம் இடைக்கால கூட்டணி ஆணையம்
மீட்டர்களை திருப்பப் பொருத்துவதற்கு இரண்டு ஒப்பந்த அறிக்கைகளை கொடுத்திருப்பதாகவும் அவற்றை பூர்த்தி
செய்வதற்கு 12 முதல் 18 மதாங்கள் ஆகும் என்றும் தெரிவித்தது. அப்படி என்றால் இடைக்கால கூட்டணி
ஆணையத்தின் ஆட்சி முடிந்து ஒராண்டிற்கு அதிகமான காலத்திற்குப் பின்னர், பில்லியன் கணக்கான டாலர்கள்
உபயோகப்படுத்தப்பட்ட பின்னர் தான் மீட்டர்கள் பொருத்தப்படும்.
ஈராக்கின் எண்ணெய் வளத்தை புஷ் நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை
வேறு எவரும் கண்காணிப்பது அல்லது மேற்பார்வையிடுவதை எந்த வகையிலும் அது ஏற்றுக்கொள்ளவில்லை. 2003
மே மாதம் ஐ.நா பாதுகாப்பு சபையில் 1,483 வது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் சர்வதேச
ஆலோசனை மற்றும் கண்காணிப்பு வாரியம் (International
Advisory and Monitoring Board - IAMB) உருவாக்கப்பட்டது. அதில் ஐ.நா,
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் அரபு வளர்ச்சி நிதி ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற்றனர்.
இடைக்கால கூட்டணி ஆணையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள எண்ணெய் வளம் மற்றும் அதில் கிடைக்கும் வருவாய் மற்றும்
செலவினம் ஆகியவற்றை இந்த அமைப்பு கண்காணிக்கும். இருப்பினும், பல மாதங்கள் வரை
IAMB க்கு எந்த வித சலுகைகளும்
விட்டுக்கொடுக்காமல் அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது.
2003 அக்டோபரில்தான், அப்போதைய நெருக்கடியை நீக்குவதற்கு வெள்ளை
மாளிகை மாட்ரிட்டில் நடைபெற்ற நன்கொடையாளர்கள் மாநாட்டில் சர்வதேச ஆதரவு தேவைக்காக
IAMB க்கு சில குறைந்தபட்ச அதிகாரங்களை
கொடுத்தது. இந்த அமைப்பு ஈராக்கின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியை கண்காணித்து, ஈராக் அபிவிருத்தி
நிதிக் கணக்கின் அனைத்து வணிக நடவடிக்கையிலும் தலையிடுசெய்யும்.
இருந்தபோதிலும், வாஷிங்டன் இதற்கு தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால்,
IAMB யின் முதலிரண்டு கூட்டங்கள் 2003 டிசம்பர்
மற்றும் இந்த ஆண்டு பிப்பரவரிவரை தள்ளிவைக்கப்பட்டன. ஏப்ரல் மாதம்தான்
KPMG என்ற கணக்கு நிறுவனம், இடைக்கால கூட்டணி
ஆணையம் ஈராக்கின் எண்ணெய் வருவாயை பயன்படுத்தியது குறித்து கணக்கு பரிசோதனை செய்யும் என்று
அறிவிக்கப்பட்டது. ஜூன் 30 ல் சம்பிரதாய முறையில் இறையாண்மை ஈராக்கிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர்
விரிவான கணக்கு பரிசோதனை எதையும் செய்வதற்கான சாத்தியக்கூறு இல்லை என்பதை அமெரிக்கா தெளிவாகவே
அறிந்திருந்தது.
ஆகவே, இதனை தாமதப்படுத்த வேண்டும் என்பதை உறுதிசெய்து கொள்கின்ற
வகையில் அமெரிக்க அதிகாரிகள் இதுபற்றிய விசாரணையை தடுத்து நிறுத்தினர். ஈராக் வருவாய் கண்காணிப்பு குழு
என்கிற அமைப்பு இதுபற்றிய பூர்வாங்க கண்டுபிடிப்புக்களை இன்னும் வெளியிடப்படாத கணக்கு பரிசோதனை
விபரங்களின் ஒரு ரகசிய பிரதியை பெற்றிருக்கின்றது. அதில், ''KPMG
தனது தணிக்கையாளர்கள் கணக்குகளை பெறுவதிலும், அவற்றை தணிக்கை செய்வதிலும், கடுமையான சிக்கல்களை
சந்தித்து வருவதாக தெரிவித்திருக்கின்றது. ஜூன் 30 ல் காலக்கெடு முடிவதற்கு முன்பு தங்களது பணிகளை
முடிப்பதை தடுக்கும் வகையில் ஒத்துழைப்பு எதுவும் அதற்கு தர மறுக்கப்பட்டிருக்கிறது.
KPMG யின் அதிகாரிகள் ஈராக் அமைச்சுகளுக்கு
செல்லுவதற்கும் இடையூறு செய்யப்படுகின்றது. ஒரேயொரு அமைச்சகத்தைத் தான் அவர்களால் நெருங்க
முடிந்திருப்பதுடன், இடைக்கால கூட்டணி ஆணையம் மற்றும்
அரசு அலுவலகங்கள் அமைந்திருக்கின்ற 'பச்சை மண்டலத்திற்குள்' (green
zone) அவர்கள் நுழைவதை தடுக்கின்ற வகையில் நுழைவுச்சீட்டுகள் தருவதிலும் அதிகாரத்துவம்
தடைசெய்து வருகின்றது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, கணக்குப் பரிசோதனைகள் திட்டமிட்ட வகையில் தகவல்கள் தரப்படுவதில்
தாமதப்படுத்தப்பட்டிருக்கின்றது. இடைக்கால கூட்டணி ஆணையம், ஈராக் பொம்மை ஆட்சியிடம் அதிகாரத்தை
ஒப்படைத்த பின்னர்தான் இந்த விபரங்கள் வெளியிடப்படும். இது தவிர, கிறிஸ்தவ உதவி அமைப்பினது அறிக்கையில்
குறிப்பிட்டிருப்பதைப்போல் ''இடைக்கால கூட்டணி ஆணையத்தின் முடிவுகளை எவரும் கட்டுப்படுத்துவதற்கு தெளிவான
வழிவகைகள் எதுவும் இல்லை''. அதனால், கிரிமினல் அல்லது ஊழல் நடவடிக்கைகளுக்கான ஆதாரம் எதுவும்
கண்டுபிடிக்கப்பட்டாலும் எந்த அமெரிக்க அதிகாரி மீதும் வழக்குத் தொடுக்கப்படுவதற்கு எந்தவிதமான
சாத்தியக்கூறும் இல்லை.
புஷ் நிர்வாகம் நடத்தி வருகின்ற ஆணவமான, நவீன-காலனித்துவ நடவடிக்கைகள்
ஈராக்கிலும், மத்திய கிழக்கிலும் எதிர்காலத்தில் ஏற்படுத்தும் உள்ளார்ந்த பின்விளைவுகள் குறித்து அமெரிக்க
அரசியல் ஸ்தாபனங்களுக்குள்ளேயே கவலைகள் எழுந்துள்ளன. நியூயோர்க் டைம்ஸில் ஈராக்கை இழந்தது யார்?
என்ற தலைப்பில் போல் குருக்மேன் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது: ''ஈராக்கின் எண்ணெயை
திருடுவதற்காகத்தான் அங்கே நாம் சென்றிருக்கிறோம் என்ற சந்தேகம் அரபு உலகில் எழுந்துள்ளது. எனவே அங்கு
நிர்வாகம் நடத்துகின்ற அதிகாரிகள் சுதந்திரமான கணக்கு சோதனையை நடத்துவதை விரைவுபடுத்துவதற்கு
எல்லாவகையிலும் ஊக்குவிப்பு தரவேண்டும். ஈராக்கின் எண்ணெய் வளத்தை பயன்படுத்தி ஹாலிபேர்ட்டன் மற்றும் இதர
அமெரிக்க பெரிய கார்ப்பரேசன்கள் இலாபவேட்டையில் ஈடுபட்டிருகின்றன என்ற குற்றச்சாட்டை தவறு என்று
நிரூபிப்பதற்கு கணக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அந்தக்
குற்றச்சாட்டுக்கள் உண்மையென்றாக ஆகிவிடும். ஆகவே, தெளிவான உண்மையை நாம் கூறுவோம். ஈராக்கை
வலதுசாரி பொருளாதார தத்துவவாதிகளின் விளையாட்டு மைதானமாக்கி, அவர்களது நண்பர்களுக்கும்,
குடும்பத்தார்களுக்கும் ஒரு வேலைவாய்ப்பு அமைப்பாக ஆக்கி, தேர்தல்களில் நன்கொடைகளை தருகின்ற
கம்பெனிகளுக்கு ஒரு இலாபம் தருகின்ற ஒப்பந்த ஆதாரமாக மாற்றியிருக்கின்றது. இதன்மூலம், நிர்வாகம்
பயங்கரவாத இயக்கங்களில் ஆட்கள் சேர்க்கப்படுவதற்கு ஒரு ஊக்குவிப்பாக செயல்பட்டு வருகிறது'' என்று
குறிப்பிட்டுள்ளது.
இங்கு உண்மை என்னவென்றால், ஈராக்கினுடைய எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பது
அமெரிக்கா தலைமையிலான போரின் சாரத்தின் கிரிமினல் தன்மையை கோடிட்டுக்காட்டுகின்றது. புஷ் நிர்வாகம்
மடைதிறந்த வெள்ளம்போல் ஈராக் மீது கற்பனையான குற்றச்சாட்டுக்களை அள்ளிவீசியது. அதனைத் தொடர்ந்து
முடமாக்கப்பட்ட அந்த நாட்டின் மீது சட்ட விரோதமான ஆக்கிரமிப்பு போரை தொடக்கியதோடு, மத்திய
கிழக்கில் ஒரு இராணுவ மற்றும் மூலோபாய தளத்தையும் உருவாக்க நம்பியுள்ளது. அமெரிக்கா ஈராக்கின் எண்ணெய்
வளத்தை தன் கையில் எடுத்துக்கொண்டதுடன், உலகின் மிக முக்கியமான உயிர்நாடியான இரண்டாவது பெரிய
எண்ணெய் வளத்தை தனது போட்டி அரசுகள் கைப்பற்றிவிடாமல் தடுப்பதற்கு முயன்றது. இந்த வகையில் முதல்
நடவடிக்கையாகத்தான், அது உடனடியாக ஈராக்கின் எண்ணெய் வருவாயை பிடித்துகொண்டதாகும்.
ஈராக் எண்ணெய் நிதியை விருப்பப்படி செலவிட்டார்கள்
எவ்வளவு எண்ணெய் வருவாய் வந்தது என்பதை மிக கவனமான மறைத்துவிட்டு, அந்தப்
பணம் எப்படி செலவிடப்பட்டது என்பதற்கும் அமெரிக்கா கணக்கு காட்டவில்லை. ''ஒரு முழு ஆண்டு இடைக்கால
கூட்டணி ஆணையம் ஈராக்கில் பதவியில் இருந்திருக்கின்றது. அவர்கள் ஈராக்கின் சொந்தப் பணமான 20 பில்லியன்
அமெரிக்க டாலர்களை என்ன செய்தார்கள் என்பதை துல்லியமாக கூறவில்லை. இன்றைக்கும் நமக்கு அந்த
விபரங்கள் தெரியவில்லை. ஈராக்கினுடைய எண்ணெய் மூலம் எப்படி வருமானம் சம்பாதிக்கப்பட்டது, அவை எந்த
ஒப்பந்தங்களுக்காக செலவிப்பட்டது, அல்லது எந்த ஒப்பந்தத்தால் செலவிடப்பட்டது, ஈராக் மக்களது
நலன்களுக்காகவா? என்ற விபரங்கள் தெரியவில்லை'' என்று கிறிஸ்தவ உதவி அமைப்பு கூறியுள்ளது.
இடைக்கால கூட்டணி ஆணையம் ஒப்புதல் அளித்து பட்டியலிட்டுள்ள பல திட்டங்கள்
பற்றிய தகவல்கள் மிக சொற்பமாகவும், குழப்பமாகவும் தரப்பட்டுள்ளன. எந்தக் கம்பெனிக்கு எந்தப் பணிக்காக
பணம் தரப்பட்டது என்று திட்டவட்டமாக எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை. ஜூன் மாதம் கிறிஸ்தவ உதவி
அமைப்பிடம் ஓர் மூத்த ஐ.நா தூதர் தந்த புகாரின் படி, ஈராக் அபிவிருத்தி நிதிக்கு ஒட்டுமொத்த பணம்
வந்தது, செலவானது பற்றிய புள்ளிவிபரங்கள் காணப்படுகின்றன. ஆனால், எந்த நோக்கங்களுக்காக அவை
செலவிடப்பட்டன என்ற விபரங்கள் எங்களுக்கு நிச்சயமாக, முழுமையாகத் தெரியாது. அவை 1483 வது ஐ.நா
பாதுகாப்பு சபை தீர்மானப்படி அமைந்ததா என்பதும் எங்களுக்குத் தெரியாது'' என்று கூறினார்.
ஈராக் எண்ணெய் விற்பனையிலிருந்து கிடைத்த தொகையான பணம், பெருமளவில்
அமெரிக்க நிறுவனங்களுக்கு மீள்கட்டமைப்பு ஒப்பந்தங்களுக்காக வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தங்கள்
வழங்கப்பட்ட பின்னரும், பல ஒப்பந்தக்காரர்கள் தொடர்ந்தும் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருப்பதற்கான
அடையாளம் எதுவும் ஈராக்கில் காணப்படவில்லை என்று கிறிஸ்தவ அமைப்பு தெரிவித்திருக்கின்றது. மற்றொரு
சம்பவத்தில், ஆக்கிரமிப்பு அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள பல்வேறு மீள்கட்டுமான திட்டங்கள் குறித்து, ''உள்ளூர்
மக்கள் அந்தப்பணம் தங்களது சொந்தப்பணம் வெளிநாட்டவர் தந்த நன்கொடையல்ல என்பதை தெரிந்து
கொள்ளாத முறையில் செயல்பட்டிருக்கிறார்கள்'' என்று இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஈராக்கின் செல்வத்தை புஷ் நிர்வாகம் சுரண்டிக்கொள்வதுடன், அதனை தான்
உறுதியளித்துள்ள, தனக்கு வேண்டிய ஹாலிபேர்ட்டன் உட்பட பாரிய கம்பெனிகளுக்கு தருவதற்கு முறைகேடாக
பயன்படுத்தி வருகிறது. ஹாலிபேர்ட்டன் நிறுவனத்திற்கு துணை ஜனாதிபதி ரிச்சர்ட் செனி முன்னாள் தலைவராக
இருந்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றம் ஏலத்தில் கலந்து கொள்ளாத எந்த ஒப்பந்தத்தையும் வழங்கக்கூடாது
என்று தடைவிதித்திருந்தும், ஈராக் எண்ணெய் வருவாய் பணத்தை அத்தகைய ஒப்பந்தத்திற்காக ஹாலிபேர்ட்டன்
உட்பட பல கம்பெனிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது.
ஈராக் எண்ணெய் வருவாயின் பெரும்பகுதி அந்த நாட்டின் மீது அமெரிக்காவின் பிடியை
இறுக்கமாக்குவதற்காக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது. ''கூடுதல் பாதுகாப்பிற்காக'' ஈராக் அபிவிருத்தி நிதியில்
இருந்து 1 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டதாக இடைக்கால கூட்டணி ஆணைய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இங்கும் எப்படி? எங்கே? அந்தப் பணம் செலவிடப்பட்ட விபரங்கள் தரப்படவில்லை.
ஜூன் 21 ல் நியூயோர்க் டைம்ஸ், இப்படி பாதுகாப்பிற்கு ஒதுக்கப்பட்ட
பணம் ஈராக் முழுவதிலும் நடமாடுகின்ற அமெரிக்க இராணுவ குழுக்களுக்கு பைகளில் 100 டாலர் நோட்டுக்களாக
நிரப்பப்பட்டு ஈராக் மக்களுக்கு லஞ்சம் கொடுத்து கிளர்ச்சி எதிர்ப்பை சமாளிப்பதற்கு தீவிர முயற்சி
மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. ''இந்த திட்டத்தை அமெரிக்க இராணுவ தளபதிகள்
விரும்புகின்றனர். ஏனெனில் அதன் மூலம் நண்பர்களை விலைக்குவாங்க முடிகிறது'' என்று கூறியுள்ளது. இதுபற்றி
மேலும் ஒரு நிர்வாக அதிகாரி கூறியதை ''டைம்ஸ்'' மேற்கோள் காட்டியுள்ளது. ''தெருவிலே நடமாடுகின்ற
நாம் ஒவ்வொருவரையும் வாடகைக்கு பிடிக்க முடியும். பணத்தை அவர்களது பைகளில் திணித்து அவர்களை நம்
விரும்புகின்ற நிலைக்கு உருவாக்க முடியும். ஈராக்கியர் பணத்தை இப்படித்தான் நாங்கள் செலவிட்டு வருகிறோம்''
என்று கூறியுள்ளார்.
இடைக்கால கூட்டணி ஆணையம் கலைக்கப்பட்ட நேரத்தில் 20 பில்லியன் டாலர்களைக்
கொண்ட ஈராக் அபிவிருத்தி நிதியில் 900 மில்லியன் டாலர்களைத்தவிர மீதிப்பணம் முழுவதையும் அமெரிக்க
அதிகாரிகள் செலவிட்டுள்ளனர். இறையாண்மை ஈராக்கியர்களிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முந்தைய வாரங்கள்
அவசர அவசரமாக கடைசி நேரத்தில் பணம்வாரி இறைக்கப்பட்டதாக ஈராக் வருவாய் கண்காணிப்புக்குழு
தெரிவித்திருக்கின்றது. ''11 மணித்தியாளங்கள் ஆடம்பரம் மற்றும் வானவேடிக்கை செலவு'' என்று அது
வர்ணிக்கப்படுகிறது. செலவினத்திற்கு உறுதியளிக்கப்பட்டுள்ள அனைத்துத் திட்டங்களுக்கும் புதிய ஈராக் ஆட்சிதான்
செலவிட்டாக வேண்டும். ஆகவே இந்த ஆட்சி, தனது நிதிக்காக முற்றிலும் அமெரிக்காவை நம்பியிருக்கிறது.
ஈராக்கினுடைய எண்ணெய் வருவாயை மிக வேகமாக அமெரிக்கா செலவிட்டிருப்பதுடன்,
அதன் மீள்கட்டுமானத்திற்காக அமெரிக்க நாடாளுமன்றம் ஒதுக்கிய பணத்தை கூர்மையாக வேறுபடுத்தி செலவிட்டு
வருகின்றது. சென்ற அக்டோபரில் அமெரிக்க நாடாளுமன்றம் ஈராக் நிவாரணம் மற்றும் சீரமைப்பு நிதி
ஆகியவற்றிற்கு 18.4 பில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்தது. அதில் ஜூன் 22 வரை அமெரிக்கா 2 சதவீதம்
அளவிற்கே ஈராக்கில் செலவிட்டிருக்கிறது. திட்டமிடப்பட்ட 2,300 மீள்கட்டுமான திட்டங்களில் 140 க்கும்
குறைந்த திட்டங்கள்தான் இப்போது நிறைவேற்றப்பட்டு வருகின்றது. செலவிடப்பட்டுள்ள 366 மில்லியன் டாலர்களில்
பாதிக்கு மேற்பட்ட தொகையான 194 மில்லியன் டாலர்கள் ஈராக் போலீசிற்கும், பாதுகாப்பு படைகளுக்கும் செலவிடப்பட்டுள்ளது.
ஆகவே, சந்தேகத்திற்கு இடமின்றி புஷ் நிர்வாகம் ஈராக் மக்களது சமூக நலன்புரி
சேவைகளை அவமதிப்பு செய்யும் வகையில், குடி தண்ணீர், கழிப்பிட வசதி அல்லது சுகாதார சேவைகளுக்கு செலவு
எதுவும் செய்யவில்லை. மின்சார இணைப்பை சீரமைப்பதற்கு 5.4 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தும்
அதில் 109 மில்லியன் டாலர்கள் மட்டுமே செலவிடப்பட்டிருக்கின்றன. தொடக்கத்தில் 250,000 பேருக்கு வேலைவாய்ப்பு
தருவதாக கூறியுள்ளபோதிலும், தற்போது 15,000 பேருக்குத்தான் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிக்கின்றது.
எனவே, ஈராக் மீது அமெரிக்கா தலைமையில் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பினால்,
அந்த நாட்டில் பயங்கரமான பொருளாதார மற்றும் சமூக சீர்குலைவுதான் ஏற்பட்டிருக்கிறது. மிகப்பெரும்பாலான
ஈராக்கியர்கள் ''விடுவிக்கப்படுவதற்கு'' பதிலாக போருக்கு முந்தைய நிலவரத்தை விட படுமோசமான நிலைக்கு
தள்ளப்பட்டிருக்கின்றனர். புஷ் நிர்வாகம் ஈராக் எண்ணெயை கொள்ளையடித்துக் கொண்டிருப்பதுடன், சீரமைப்பு
மற்றும் சமூக சேவைகளுக்கு சொற்ப தொகையையே செலவிட்டு வருகின்றது. ஆகவே, ஈராக் மக்களது நலன்புரி
சேவையை முற்றிலும் புஷ் நிர்வாகம் துச்சமாக மதிப்பதை இந்த சம்பவங்கள் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளன.
Top of page |