WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
The Democratic convention and the crisis of the
two-party system
ஜனநாயகக் கட்சி மாநாடும் இரு-கட்சி முறையின் நெருக்கடியும்
By the Editorial Board
26 July 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், அமெரிக்க மக்களை எதிர்கொண்டுள்ள
மிக நெருக்கடி நிறைந்த பிரச்சினையான ஈராக் போர் பற்றிய விவாதம் முற்றிலும் தடுக்கப்படவேண்டும் என்று
ஜனநாயகக் கட்சி, செய்தி ஊடகம் மற்றும் அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டில் உள்ள சக்தி வாய்ந்த பிரிவுகள்
கொண்டுள்ள முயற்சிகளின் உச்சக் கட்டமாகத்தான் பாஸ்டனில் திங்களன்று தொடங்கிய ஜனநாயகக் கட்சியின் தேசிய
மாநாடு இருந்தது.
ஜனநாயகக் கட்சியின் ஆரம்பத் தேர்தல்களின்போது, அப்பொழுது முன்னனியில் இருந்த
ஹோவர்ட் டீனுடைய பிரச்சாரத்தை கீழறுக்கும் நோக்குடன் பலருடன் சேர்ந்து செயல்பாடுகள் மேற்கொண்டதன்
விளைவுதான் இப்பொழுது மாசாச்சுசெட்ஸின் செனட் உறுப்பினரான ஜோன் கெர்ரி ஜனநாயகக் கட்சியின் ஜனதிபதியாக
வேட்பாளராகியிருப்பது. பழைய வெர்மான்ட் மாநில கவர்னர் முற்றிலும் மரபுசார்ந்த முதலாளித்துவ அரசியல்வாதி,
தனக்கு ஜனாதிபதி வேட்பு கிடைப்பதற்கு சிறந்த வாய்ப்பாக இருக்கக் கூடியது, ஜனநாயகக் கட்சி வாக்காளர்கள்,
மற்றும் பொது மக்களிடையே போருக்கெதிரான பரந்த உணர்வை தூண்டுவதுதான் என்று அறிந்திருந்தார். ஆனால்
எவ்வளவுதான் குறுகியதும், கொள்கை அற்றது என்றாலும் இத்தகைய முறையீடு மக்களுடைய அதிருப்திக்கு அளித்துவிடக்கூடிய
ஆபத்தான சலுகை என்ற கருத்துத்தான் ஆளும் செல்வந்தத் தட்டிற்குள்ளே கருதப்பட்டது. போரெதிர்ப்பு உணர்வை
ஒதுக்கவும் நசுக்கவும் வேண்டி, பொதுத் தேர்தலில் அப்பிரச்சினை பற்றிய விவாதம் அடிப்படையிலேயே புறக்கணிக்கப்படும்
என்ற கூட்டு முயற்சியை கருத்திற் கொண்டு, டீனுடைய ஜனாதிபதி வேட்புமனுக்கான முயற்சி தகர்க்கப்பட்டது -
டீனே விரைவில் இந்த வழிக்கு உட்பட்டார்.
இவ்விதமான அரசியலில் பங்கு பெறும் வாய்ப்பை குறைக்கும் நடைமுறை, கெர்ரி,
அவருடைய துணை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர், வட கரோலினாவின் ஜோன் எட்வர்ட்ஸ் இருவரும்
அதிகாரபூர்வமாக கட்சியின் ஒப்புதலைப் பெற இருப்பதுடன், முற்றுப் பெறும். இருவருமே பல மில்லியன்களுக்கு
சொந்தக்காரர்கள் என்பதுடன், அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டின் பிரதிநிதிகள் ஆவர். இருவருமே அக்டோபர்
2002ல் புஷ் நிர்வாகம் ஈராக்கின் மீது தாக்குதல் நடத்துவதற்கு தேசியச் சட்ட மன்றத்தில் இசைவு
கொடுத்ததுடன், இருவருமே தேசபக்த சட்டத்திற்கும் (Patriot
Act) ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த நடவடிக்கை, "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற போர்வையில்
CIA, FBI
மற்றும் பல போலீஸ் அமைப்புக்களுக்கு முன்னோடியில்லாத வகையில் அமெரிக்க மக்கள் மீது வேவு பார்க்கும்
அதிகாரங்களை கொடுப்பதுடன், அரசியலமைப்பு முறையில் உறுதியளிக்கப்பட்டுள்ள மக்கள் உரிமைகளையும் மிதித்து
நசுக்குகின்றது.
ஈராக்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர், ஆக்கிரமிப்பு இவற்றைப் பற்றி
எந்த விதமான விவாதமும் கட்சி மேடைகளில் இராது என்பது முடிவாகிவிட்டது; அது புஷ்ஷின் முடிவான அந்நாட்டின்
மீதான தாக்குதலைப் பற்றி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாது என மறுத்துவிட்டது. ஒகையோ சட்டமன்ற
உறுப்பினரான டென்னிஸ் குசிநிக்கும் இவ்விவாதத்திற்கு இடம் கொடுக்க இயலாது என்று உடன்பாடு கொண்டுவிட்டார்.
ஆரம்பத் தேர்தல்களில் போருக்கு எதிராக மிகவும் வெளிப்படையாக பேசியிருந்த குசிநிக், கெர்ரிக்குத் தன் ஆதரவை
கடந்த வார இறுதியில் தெரிவித்ததின் மூலம் போர் பிரச்சினையை குப்பையில் தள்ளி ஒரு வடிவம் கொடுத்தார்.
கட்சியில் பல மட்டத் தலைவர்களும் ஜனநாயக வாக்காளர்களுடைய உணர்விற்கு
காட்டும் இகழ்ச்சியும், ஜனநாயக ரீதியான விவாதங்களை தடுத்துவிடுவதும், ஞாயிறன்று வெளியிடப்பட்ட
New York Times/CBS News
இரண்டும் நடத்திய கருத்துக்கணிப்பில்
அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளது, மாநாட்டின் பிரதிநிதிகளில் பத்தில் ஒன்பது பேர் அமெரிக்கா ஈராக்குடன்
போருக்கு சென்றிருக்கக் கூடாது என்று நினைத்தனர் எனக் காட்டுகிறது.
மாநாட்டிற்கு முன் நிகழ்வுகளின்படி, ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கும், அமெரிக்க
எதிர்ப்பு அங்கு இருப்பதை நசுக்குவதற்கும் தன் ஆதரவை தேவைக்கும் அதிகமாக கெர்ரி வலியுறுத்தி இருந்தார்,
இன்னும் அதிகமான படைகளை அனுப்பாததற்காகவும், காலனிய முயற்சியில் அரைகுறை வேலை செய்வதாகவும்
புஷ்ஷை பிரதானமாக விமர்சித்தார். "பயங்கரவாதத்தின் மீதான போருக்கும்" முன் கூட்டித் தாக்கும் போர்
கொள்கைவழிக்கும் தன்னுடைய ஆதரவை பலமுறையும் பறைசாற்றியிருக்கிறார், இது, தேவையற்ற அரசாங்கங்களை
கவிழ்ப்பதற்கும், வெளிநாடுகளின் வளங்களையும், நிலங்களையும் கைப்பற்றுவதற்கும் இராணுவ பலத்தைப்
பயன்படுத்தும் புஷ் நிர்வாகத்தின் கொள்கையின் மைய அம்சமாக இருக்கிறது.
"பயங்கரவாதத்தின் மீதான போரைப்" பயன்படுத்தி, புஷ்ஷை சூழ்ச்சியால்
வெல்லவும் கெர்ரியை ஒரு வலுவான இராணுவத் தலைவர் மற்றும் "உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு" கடுமையாக
நிற்பவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தவும், இந்த மாநாட்டை பயன்படுத்துவதற்கு அவர்களின் நம்பிக்கையை
ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். அமெரிக்க உளவுத்துறைகள், போலீஸ் மற்றும்
பாதுகாப்பு அமைப்புக்களை ஒருங்கிணைத்து பெரும் வகையில் வலுப்படுத்துவதற்கான 9/11 விசாரணைக் குழுவின் பல
விளைவுகளை கொடுக்கக் கூடியதும், ஜனநாயக விரோதமானதுமான முன்மொழிவுகளையும் அரவணைப்பதற்கு
ஜனநாயகக்கட்சி வேட்பாளர் விரைந்திருக்கிறார்.
New York Times
க்கு வெள்ளியன்று கொடுத்துள்ள ஒரு பேட்டியில்,
"பயங்கரவாதத்தின் மீது இன்னும் திறமையான போரை நான் மேற்கொள்ள முடியும்" என்று கூறிய நிலையில்,
கெர்ரி மாநாட்டில் தான் எடுக்கவிருக்கும் அணுகுமுறையைச் சுருக்கமாகக் கூறியுள்ளார்.
கடுமையான சிக்கனமும் இராணுவவாதமும்
உள்நாட்டுச் சமூக பிரச்சினைகளில், மாநாடு, "இரண்டு அமெரிக்காக்கள்" பற்றிப்
பல வெற்றுச் சொற்றொடர்களை பயன்படுத்தி, புஷ் மிக ஆணவப்போக்குடன் பணக்காரர்களுக்கு வரிக் குறைப்பு
கொடுத்துள்ளதை குறைகூறும் என்று எதிர்பார்க்கலாம்; ஆனால் கெர்ரி பிரச்சாரம் மிகத் தெளிவாக சமுதாய
சீர்திருத்தங்கள் பற்றிய திட்டவட்டமான கருத்துக்களை கூறாமல் அகன்றுள்ளதுடன், பத்திரிகை நிறுவனங்களிலிருந்து
வரும் "வர்க்கப் போர்கள்" பற்றிய சொல் ஜாலங்களை தவிர்த்திடுக என்ற தடை ஆணைகளையும் சிரம் தாழ்த்தி
ஏற்றுள்ளது.
ஜனநாயகக் கட்சியினரின் சமூக கொள்கை பற்றிய குறிப்பு, அதிலும் பெரும்பாலான
மக்களைப் பொறுத்தவரையில் பெருகிவரும் பொருளாதாரக் கஷ்டங்களிடையே, நகர்ப்புறக் கழகத்தின் (Urban
League) முன் கடந்த வாரம் கெர்ரி
பேசியதில் தெரியவந்தது. தன்னுடைய நகரப்புறங்களுக்கான செயற்பட்டியலின் மைய அம்சமாக கூட்டரசு நிதி
உதவியில் இளைஞர் குற்றத்தை ஒடுக்குவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது; இதற்காக வேலைப்
பயிற்சிக்காகவும், போதைப் பொருள் சிகிச்சைக்காகவும் அடையாள செலவாக அடுத்த பத்தாண்டுகளுக்கு 400
மில்லியன் டாலர் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது- கூட்டாட்சியின் ஆண்டு வரவுசெலவுத்திட்ட 1 டிரில்லியன
டாலர்களுக்கும் கூடுதலான தொகை என்ற பெருநிதியில் இது ஒரு துளியேயாகும்.
கெர்ரி இந்த முன்முயற்சியை அறிவித்த அன்றே, தேசிய சட்ட மன்றமானது
மிகப்பெரும்பான்மையுடன், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் இராணுவ நடவடிக்கைகளுக்கான கூடுதல் 25 பில்லியன்
அமெரிக்க டாலர்கள் உள்பட, பென்டகன் கோரியிருந்த செலவுத்தொகையான $417.5 பில்லியனுக்கு, ஒப்புதல்
வாக்கை கொடுத்தது. குடியரசுக் கட்சியினர், முற்றிலும் இணைந்து ஜனநாயகக் கட்சியோடு சேர்ந்து வாக்குக்களை
அளித்ததில் செனட்டில் இத்தீர்மானம் 96- 0 என்ற கணக்கிலும், கீழ் மன்றத்தில் 410 - 12 என்ற வாக்கிலும்
நிறைவேற்றப்பட்டன.
கெர்ரியின் உள்நாட்டு பொருளாதாரக் கொள்கையின் சாரம், இதில்தான் அவருடைய
புஷ் நிர்வாகம் பற்றிய கொள்கையின் மீதான தாக்குதலின் மையமும் - நிதிப் பொறுப்புணர்வுக்கு ஓர் அழைப்பு
விடுதல் என்பதாகும். மிகப்பெரிய வரவுசெலவுத் திட்டப் பற்றாக் குறை நிலைமைகள், மற்றும் மிகப் பெரிய
இராணுவச் செலவுகள் உள்ள நிலையில், இவற்றின் பொருள் சமூக நலன்கள் திட்டத்திற்கான செலவுகள் இன்னும்
குறைக்கப்படும் என்பதுதான்.
இம்மாநாட்டில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இன்னும் வலதுபுறத்திற்கு திரும்புதல்,
கெர்ரியிடமும் ஏனைய ஜனநாயகக் கட்சி அதிகாரிகளிடமிருந்தும் புஷ் நிர்வாகத்தின் மீது நேரடித் தாக்குதல்கள்
நடத்தப்படக் கூடாது என்ற எச்சரிக்கை வந்ததில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. "இது ஜோர்ஜ் புஷ்ஷைத்
தாக்கும் கருத்துடையது அல்ல" என்று ஜனநாயகக் கட்சியின்
தேசிய தலைவரான
Terry McAuliffe
கடந்த வார இறுதியில் அறிவித்தார்.
2000 -ம்
ஆண்டு திருடப்பட்ட தேர்தலும் தடுக்கப்பட்டுவிட்ட தலைப்புக்களில் ஒன்றாகும். புஷ்ஷின் மீது விரோதக்
கருத்துக்களையோ, தற்போதைய அரசாங்கத்தின் சர்வாதிகாரத் தன்மை, முறையற்ற தோற்றம் இவற்றின் மீதான
கோபத்தையோ வெளிப்படுத்தக் கூடாது என்ற படிநிலையாய் அமைந்த கட்சியின் உயர் தலைவர்களின் முயற்சிகளை
ஒட்டி, அமைப்பாளர்கள் பழைய துணை ஜனாதிபதி, கட்சியின் 2000 ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக இருந்த,
அல் கோரின் உரையை ஒலி/ ஒளி பரப்பு வலைப்பின்னல்கள், ஒலி/ஒளி பரப்பாது என்பதை உறுதிப்படுத்தி
இருக்கின்றனர். கட்சியின் பெயரளவுத் தலைவர் மாநாடு பற்றி
NBC, ABC, CBS
மற்றும்
Fox ஆகியவற்றிற்கு
கொடுக்கப்பட்டிருந்த நேரத்தில் இல்லாமல் வேறு ஒரு நேரத்திற்கு நிகழ்ச்சிக்கான நேர ஒதுக்கீடு பற்றி
முடிவெடுத்திருந்தார்.
கொடியசைத்து நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பெரிய கொண்டாட்டமாக திட்டம்
இடப்பட்டுள்ளதில், கெர்ரியின் வியட்நாம் போர்ப் பங்கு முக்கிய இடம் பெறும். பெயரிட விரும்பாத "ஒரு மூத்த
ஜனநாயகக் கட்சியாளர்" நியூ யோர்க் டைம்ஸிடம்: "இன்னும் கூடுதலான பழைய வீரர்களையும், கூடுதலான
நாட்டுப் பற்றையும், நம் நாட்டுப்பாதுகாப்பு பற்றிய உரைகளையும் பார்க்கவும், கேட்கவும் இருக்கிறீர்கள். ஒரு
குடியரசுக் கட்சி மாநாட்டில் இருக்கிறோமா என உங்களுக்குத் தோன்றப்போகிறது." எனத்
தெரிவித்தார்.
செய்தி ஊடகத்தால் "சுதந்திரமான", "மாறி வாக்குப் போடும்
வாக்காளர்களுக்கு" அழைப்பு விடும் வகையில், இந்த வலதுசாரிப்போக்கிற்கு ஒப்பான திருப்பம், இரக்கமற்ற
முறையில் இடது புறத்தில் இருந்து வரும் அரசியல் சவால்களை வாய்மூடப்பண்ணுவதற்கான உந்துதல் ஆகும். ஈராக்
போரைப் பற்றி விமர்சிக்கும் மற்றும் புஷ் நிர்வாகத்திற்கு விரோதமாக உள்ள மில்லியன் கணக்கிலான
தொழிலாளர்கள், இளைஞர்களுடைய விரோதப் போக்கை வெளியிடும் வகையில் பேசும், அனைத்து மூன்றாம் கட்சி,
மற்றும் சுயேச்சை வேட்பாளர்களை வாக்குச் சீட்டில் இருந்து அகற்றும் நாடளாவிய முயற்சியில் ஜனநாயகக் கட்சி
ஈடுபட்டுள்ளது. ரால்ப் நாடெருக்கும், பசுமைக் கட்சிக்கும் வாக்குச் சீட்டுத் தகுதியை மறுப்பதற்கு ஜனநாயகக்
கட்சியினர் திறனுடன் செயல்பட்டு வருகின்றனர்; மேலும் இல்லினோய்சில் சோசலிச சமத்துவக் கட்சியின் மாநிலச்
சட்ட மன்றத்திற்கான வேட்பாளர் டொம் மக்கமனுக்கும் வாக்குச் சீட்டில் இடமில்லாமல் செய்ய ஆணவத்துடன்
ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அரசியல் முறையில் அனைத்து தீவிர மாற்றுக் கருத்துக்களையும் ஒதுக்குதல், போரைப்
பற்றி மட்டுமின்றி, வேலைகள், வாழ்க்கைத் தரம், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் போன்ற
பெரும்பாலான மக்களின் மிக முக்கியமான அக்கறைகளை நசுக்குதல் ஆகிய முயற்சியானது, அமெரிக்காவின் இரண்டு
பெரிய முதலாளித்துவ கட்சிகளும் இயல்பிலேயே, வரலாற்றளவில் மிகப் பெரிய முறையில் தோன்றியுள்ள சமுதாய
அரசியல் நெருக்கடிகளைப் பற்றி தீர்வு காண்பது ஒருபுறம் இருக்க, அவற்றைப் பற்றி கருத்தில் கூடக் கொள்ள
இயலாத நிலைக்கு நிரூபணமாக உள்ளது.
ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குதல்
மாநாட்டை இப்படி ஒத்திகை பார்த்துக் கடுமையான முறையில் தன் கருத்தை மட்டும்
வெளியிடும் வகையில் நடத்துவது, அதனுடைய போக்கிலேயே
இருகட்சி முறையின் நெருக்கடி பற்றிய
மேலும் கூடுதலான வெளிப்பாடாகத்தான் இருக்கிறது. போஸ்டனில் நடத்தப்படும் மாநாடு உண்மையான
போராட்டமோ அல்லது விவாதமோ இல்லாத ஒரு காட்சிச் செயலாகத்தான் உள்ளது. ஒரு வெற்றுச் சடங்கின்
தன்மையைத்தான் அது கொண்டுள்ளது. போரின் பின்னணியில், சமூக, அரசியல் பிளவுகளினால் நைந்து கொண்டிருக்கும்
நிலையில், ஏராளமான சமுதாயப் பிரச்சினைகளின் வேதனையை கொண்டுள்ள முறையில், கூடுதலான முறையில் மிகப்
பெரிய வேறுபட்ட மக்கட் தொகையினரை கொண்டுள்ள நாட்டில், போஸ்டனில் நடைபெறும் பகட்டாரவாரம், அமெரிக்க
சமுதாயத்தின் உண்மைகளுக்கும் இருக்கும் அரசியல் நடைமுறைக்கும் இடையே உள்ள தொடர்பற்ற தன்மையைத்தான்
கோடிட்டுக்காட்டுகிறது.
நிதிஆதிக்க உயர்குழுவினால் ஆதிக்கம் செய்யப்படும் அவர்களின் நலன்களுக்காக அது
பகிரங்கமாகவும் நேரடியாகவும் சேவை செய்யும், பெருநிறுவன ஆதிக்கத்தால் கட்டுப்படுத்தப்படும் செய்தி ஊடகம்
மிக முக்கியமான பங்கை கொண்டுள்ள இந்த அரசியல் முறையானது, எங்கும் நிறைந்துள்ள அதிருப்தி கீழே
கொந்தளித்துக் கொண்டிருக்கும்போது விவாதங்கள் அவற்றின் தடுப்புக்களை அகற்றிச் சீறி வெளியே வரும்படி
செய்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாக சமுதாய பிரச்சினைகள் பற்றிய தீவிரமான விவாதங்களை மேற்கொள்ள
மறுக்கிறது.
மாநாட்டிற்கு முன் எழுதிய தலையங்கத்தில், நியூ யோர்க் டைம்ஸ், இந்த
முழு விவகாரத்தின் பொருள் என்ன? என்ற கேள்வியை எழுப்பவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. மாநாடு ஓர்
அரசியல் முடிசூட்டுவிழா போன்றது என்பதை ஒப்புக் கொண்டு, ஜனநாயகக்கட்சி ஈராக் மீதான படையெடுப்பு
பற்றி ஒரு நிலைப்பாட்டைக் கூடத் தெரிவிக்கவில்லை, உண்மையான விவாதம் அனுமதிக்கப்படமாட்டாது என்பதையும்
ஒப்புக் கொண்டு, இச்செய்தித்தாளானது, ஒளிபரப்பு வலைப்பின்னல்கள் முக்கிய நேரத் தகவல் பற்றி இரவில் ஒரு
மணிநேரம் மட்டுமே இருக்கும் என்ற முடிவைப் பற்றி ஒன்றும் வாதிடுவதற்கில்லை எனத் தெரிவிக்கிறது. ஆயினும் கூட,
நியூ யோர்க் டைம்ஸ் குறைமனதுடன் பின்வருமாறு முடித்தது: "அப்படியும் கூட இந்தச் சடங்கு
ஏற்கப்படவேண்டியதே. பிரதிநிதிகள் அதிகம் ஏதும் செய்வதற்கில்லை; ஆனால் அவர்கள் ஒன்றாக சேர்ந்து
நிற்பதுகூட முக்கியமானதேயாகும்."
இரு பெரிய முதலாளித்துவக் கட்சிகளும், தேசிய மாநாட்டில், முன்கூட்டியே
முடிவுகளை கொள்ளாமல் கொள்கை பற்றி விவாதங்களை நடத்திய முறையை மேற்கொண்டு முப்பது ஆண்டுகளுக்கு
மேல் ஆகிறது. உண்மையான பொருள் விவாதம் இன்றி, முற்றிலும் சடங்காக, வெற்றுத்தனமான முறையில் மாநாடு
நடப்பது, ஒரு குறிப்பிட்ட வகை அரசியல் மற்றும் சமூக செயல்முறையுடன் பிணைந்துள்ளது.
முதலாவது இரண்டு முதலாளித்துவ கட்சிகளும் வலதுபுறம் சாய்வது மற்றும் அமெரிக்க
தாராளவாத கொள்கையின் சரிவு, பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் காலத்துடன் தொடர்புடைய சமூக சீர்திருத்த
கொள்கை ஜனநாயகக் கட்சியால் மறுக்கப்பட்டதில் தெளிவான வெளிப்பாட்டை காண்கிறது.
இந்த இயல்நிகழ்ச்சி இரண்டு கட்சிகளுடைய பரந்த சமூக அடித்தளத்தில் பெரும்
அரிப்பை ஏற்படுத்துவதோடும் மற்றும் நிதி ஆதிக்க மற்றும் பெருநிறுவன செல்வந்தத் தட்டின் அதிகரித்த அளவிலான
அப்பட்டமான ஆதிக்கத்துடனும் கட்டுண்டிருக்கிறது. ஜனநாயகக் கட்சியின் அடித்தளம் எது? அது, நிதிய மற்றும் பெரு
நிறுவன செல்வந்தத்தட்டின் பகுதிகள், தொழிற்சங்க அதிகாரத்துவம், உள்பட நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற
மற்றும் குறுகிய அடுக்கு, மற்றும் கறுப்பர்கள், ஹிஸ்பானியர்கள், மற்ற சிறுபான்மையோரில் பெரும் செல்வம்
உடைய பிரிவுகளை கொண்டிருக்கிறது
நிதி ஆதிக்க ஒருசிலவராட்சியின் மிகக் கொள்ளையடிக்கும் பிரிவுகளின் நலன்களையும்,
தேவைகளையும் இரக்கமின்றி தொடர்ந்து வெளிப்படுத்தும் வலதுசாரி கூறுகளால் குடியரசுக் கட்சி மேலாதிக்கம்
செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடி உக்கிரமடைகையில், இப்பிரிவுகள் முன்னணிக்கு வந்து
என்றுமில்லா வகையில் இன்னும் கூடுதலான ஆதிக்க நிலையை மேற்கொள்கின்றன.
அரசியலில் சிதைந்துமெலிவுறும் நிலை மற்றும் இரண்டு கட்சிகளின் வலதுசாரி வளைவரை
பாதைக்கும் அடியில் சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி உள்ளது. ஒரு மிகச் சிறிய, பெரும் செல்வம் கொழிக்கும்
நிதி ஆதிக்க ஒருசிலவராட்சி, மற்றும் பரந்த உழைக்கும் மக்கள் என்ற திட்டவட்டமான பிரிவு இவற்றுக்கிடையில்
அமெரிக்கா என்றுமிருந்திரா அளவில் தெளிவான பிளவானது இருகட்சிமுறையை பெருகிய அளவில் கந்தல்கந்தலாக்கி
விட்டது மற்றும் இறுக்கமாக்கிவிட்டது. தொழிலாளர் இயக்கத்தின் சரிவு, மற்றும் எவ்விதத்திலும் உழைக்கும்
மக்களுடைய நலன்களை வெளிப்படுத்தும் அமைப்புக்கள் இல்லாத நிலையும் இவ்வழிவகையில் முக்கிய பங்ககை
ஆற்றியுள்ளன.
கரைக்க முடியாத முரண்பாடுகள் நிரம்பியுள்ள முதலாளித்துவ அமைப்பில், ஒரு சமூக
சீர்திருத்தக் கட்சிக்கு இனி இடம் இல்லை. மாறாக, இரண்டு வலது சாரிக் கட்சிகளைத்தான் மக்கள் எதிர்கொள்ள
வேண்டியிருக்கிறது; அவை எந்த அளவு கடுமையான மற்றும் வெடிக்கும் தன்மையிலான ஒருசார்பான உட்பூசல்களையும்கூட
கொண்டிருந்தபோதிலும், அமெரிக்கா உலக அளவில் மேலாதிக்கம் செலுத்த வேணடும் என்பதிலும் உள்நாட்டில்
சமுதாய பிற்போக்கிற்குமான அவர்களது அர்ப்பணிப்பில் ஐக்கியத்தை கொண்டுள்ளன.
முற்றுகை நிலை
சமூக மற்றும் அரசியல் நெருக்கடியின் மிகக் கடுமையான வெளிப்பாடு, அசாதாண
முறையிலும், முன்னோடியில்லாத வகையிலும் ஜனநாயகக் கட்சி மாநாடு நடத்தப்படுவதில் உள்ள பாதுகாப்பு
நடவடிக்கைகளில் காணப்படுகிறது. பொதுவாக அமெரிக்க ஜனநாயகம் செயல்முறையில் எவ்வாறு உள்ளது என்பதைப்
பிறருக்குக் காட்டுவதற்காக நடத்தப்படும் இத்தகைய மாநாடு, இப்பொழுது கிட்டத்தட்ட முற்றுகைக்கு உட்பட்ட
கோட்டையில் நடத்தப்படும் காட்சியைப் போல் உள்ளது. போஸ்டன் நகரத்தின் பல பகுதிகளும் ஒருவரும்
செல்லமுடியாத தடுப்புக்களைக் கொண்டுள்ளன. எஃகு தடுப்புக்கள் போடப்பட்டுள்ளன. மாநாட்டுச் சூழலில் இருந்து
சாதாரண மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான போலீசார், பாதுகாப்புப் பிரிவினர்,
சாதாரண உடையணிந்த மத்திய அரசின் முகவர்கள் ஆகியோரால் நகரம் நிறைந்துள்ளது. நிலத்திற்கடியில்
இரயில்களில் பயணம் செய்யும் மக்களுடைய உடைமைகளும் தொடர்பே இல்லாமல் சோதனைக்கு ஆளாகின்றன.
மாநாட்டு திடலை ஒட்டி எவ்விதமான ஆர்ப்பாட்டங்களும் கூடாது எனத் தடை
விதிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டமாக வளைக்கப்பட்டு, ஓர்வெல் வார்த்தையில் ஒருவேளை
அவ்வாறு கூறியிருந்தால், தனிமைப்படுத்தப்பட்ட "தடையற்ற பேச்சுப் பகுதிகள்" என்ற இடத்திற்குக் கொண்டு
செல்லப்படுகின்றனர்; அங்கு அவர்கள் பேசுவதை ஒருவரும் கேட்க முடியாது.
இதற்கிடையில், தடுப்புக்களுக்கும், அணிவகுத்துள்ள ஆயுதமேந்திய போலீஸ்
குவிப்புக்களுக்கும் பின்னால், அரசியல்வாதிகளும், பெருநிறுவனக் கொழுத்த பூனைகளும் தங்களுடைய பெருநிறுவன
ஆதரவில் நடக்கும் நையப்புடைத்தல்களில் மனம்போன போக்கில் பங்கு கொள்ளுகின்றனர்.
இத்தகைய நடவடிக்கைகள், மாநாட்டின்மீது ஏராளமான கோபமுற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்
பாய்ந்துவிடாமல் பாதுகாப்புக்காக எடுக்கப்படவில்லை. ஆர்ப்பாட்டங்கள் மிகக் குறைந்த அளிவிலும், அரசியலில்
அதிக உத்வேகம் இல்லாமலும் இருக்கும் எனத்தான் எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான எதிர்ப்புக் குழுக்களும்
தாராளவாத-இடதுசாரி அமைப்புக்களும் கெர்ரிக்கு ஆதரவாகத்தான் கூவி, தங்களுடைய செயல்கள் அரசியல் ரீதியாக
விரோதப் போக்குடைய செயல்களாக இருப்பதைக்காட்டிலும், மாநாட்டின் அதிகாரபூர்வமற்ற பிற்சேர்க்கைகளாக
இருக்கும் என்று கூறியுள்ளன.
மிகப்பெரிய போலீஸ் குவிப்பிற்கான பேசப்படாத செயல்பட்டியல் உண்டு
என்பதைத்தான் இது கோடிட்டுக்காட்டியுள்ளது. அதிகாரபூர்வமாக இதற்குக் கூறப்படும் காரணம், 9/11
பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் இருக்கும் ஒரு பொதுவான, நிரந்தரமான தடையற்ற போருக்கு ஒப்பான
சூழலின் அபாயம் எனப்படுகிறது. ஆனால் மாநாட்டை தாக்குவதாகக் குறிப்பிட்டு பயங்கரவாதிகள் குறிப்பிடத்தகுந்த
அச்சுறுத்தலை முன்வைத்துள்ளதாக ஆதாரம் இல்லை.
இதன் நோக்கம், ஒரு அச்சம் நிறைந்த சூழ்நிலையை உருவாக்கி மக்களை போலீஸ்
அரசு நடவடிக்கைகளுக்கு பழக்கப்படுத்துவதாகவும், தேர்தல்கள் நடத்துவது உட்பட ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதையும்,
மக்கள் இயல்பாக ஏற்கவேண்டும் என்பதேயாகும். மாநாடு தொடங்கப்படுவதற்கு முன் வாரங்களில், புஷ்
நிர்வாகம் தேர்தலுக்கு முன்பு பயங்கரவாதத் தாக்குதல் இருக்கும் என்ற தீவிர எச்சரிக்கைகளை விடுத்துள்ளது;
மேலும் அது அத்தகைய காரணத்தைக் காட்டி நவம்பர் தேர்தல்கள் இரத்து செய்யப்படமுடியுமா என்பதைப்பற்றி
உள்விவாதங்கள் நடத்துவதாகவும் செய்தியைக் கசிய விட்டுள்ளது.
போஸ்டனில் போலீஸ் அரசு நடவடிக்கை, வெளி பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை
விடக் கூடுதலான முறையில் அமெரிக்காவின் உள்நாட்டு நெருக்கடியுடன் தொடர்பு உடையது ஆகும். சமூகப் பதட்டங்கள்,
மற்றும் வர்க்கப் பிரிவினைகள் இவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தின் நிழற்படத்தை அது வழங்குகிறது.
மொத்தத்தில் எடுத்துக்கொண்டால், ஜனநாயகக் கட்சி மாநாடு இருகட்சி முறையின்
நெருக்கடிக்கும், சிதைவிற்கும் சான்றாக உள்ளது. இங்கு முக்கியமான சொல் "முறை" என்பதாகும். இரண்டு சுதந்திரமான
கட்சிகளின் நலன்களைக் கொண்டிராமல், இருக்கும் அரசியல் நடைமுறை, இரு உள்ளடக்கப் பகுதிகளைக் கொண்ட
ஒற்றை அரசியல் கட்டமைப்பைத்தான் காட்டுகிறது. இந்த முறை நீண்ட காலமாகவே தொழிலாள வர்க்கத்தின் நலன்களின்
சுயாதீனமான வெளிப்பாட்டை விலக்கியும், முதலாளித்துவ வர்க்கத்தின் அடிப்படை நலன்களையும் ஆட்சியையும்
காத்தும் வருகின்ற வழிவகைகளைத்தான் பராமரித்து வருகின்றது.
இந்த முறை மரண நெருக்கடியில்தான் உள்ளது. அதனால் மக்களுக்கான ஜனநாயக
வாகனம் என்று தன்னை முன்னிறுத்திக்கொள்ள இயலாது. அமெரிக்க சமுதாயத்தின் முரண்பாடுகளை அதனால் கட்டுப்படுத்த
இயலாது. எனவே இன்னும் கூடுதலான முறையில் பாராளுமன்ற முறையில் இருந்து பிறழ்ந்தும், அரசியலமைப்பு நெறிகட்குப்
புறம்பாகவும், அப்பட்டமான, தீய திருப்பத்தை கூடுதலாகக் கொண்டுள்ளதால், இந்நிலை முழுமையாகப்
பார்க்கும்போது, ஒரு போலீஸ் அரசு ஆட்சிக்கு மாறும் மாற்றுக்கால நிலையைக் கொண்டுள்ளது.
இங்குதான் சோசலிச சமத்துவக் கட்சியின் 2004 பிரச்சாரத்தின் முக்கியத்துவம் உள்ளது.
பெரும்பாலான மக்களின், உழைக்கும் மக்களின் தேவையை முன்வைக்கும் ஒரு புரட்சிகரமான சோசலிச
வேலைத்திட்டத்தை SEP
ஒன்றுதான் கொண்டுள்ளது. ஈராக்கிய
போர் நிறுத்தப்படவேண்டும், அமெரிக்கப்படைகள் உடனடியாக ஈராக்கிலிருந்தும் ஆப்கானிஸ்தானில் இருந்தும்
திரும்பப் பெற வேண்டும் என்று எங்கள் கட்சி அழைப்பு விடுக்கிறது. தேசபக்த சட்டம் உடனே கைவிடப்படவேண்டும்,
உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை களையப்படவேண்டும், மற்றும் மக்களுடைய ஜனநாயக உரிமைகளை குறைக்கும் ஏராளமான
நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கவேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சிகரமான மாறுதலைக் கொண்டுவரும்
வேலைத்திட்டத்தை நாங்கள் முன்வைக்கிறோம்; இத்தகைய வாழ்வில் மக்களுக்கு நல்ல ஊதியம் கொடுக்கும் வேலைகள்,
சுகாதாரப் பாதுகாப்பு, நல்ல பள்ளிகள், வசதிகேற்ப கட்டிக்கொள்ளக் கூடிய வீடுகள், பாதுகாப்பான ஓய்வுகால
வாழ்க்கை, ஆகியவை பெருநிறுவன இலாபத்திற்கான மற்றும் தனியார் செல்வக் குவிப்பிற்கான உந்துதலுக்கு மேற்பட்டதாக
வைக்கப்படும்.
தொழிலாளர் அரசாங்கத்திற்காகவும், வறுமையும் வர்க்கச் சுரண்டலும் அகற்றப்பட்டு
சமூக சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உண்மையான ஜனநாயக அமைப்பால் பதிலீடு செய்யும் ஒரு
சோசலிச எதிர்காலத்திற்காகவும் போராடும் பொருட்டு, தொழிலாள வர்க்கம் ஜனநாயகக் கட்சியில் இருந்து
முறித்துக்கொண்டு தன்னுடைய சொந்த வெகுஜனக் கட்சியைக் கட்டி எழுப்புதற்கான தேவையை எங்கள்
வேலைத்திட்டத்தின் மையத்தானமாகக் கொண்டுள்ளோம்;
இந்தப் பிரச்சாரத்தை வெறும் வாக்குகள் சேகரிக்க மட்டுமே நாங்கள் நடாத்தவில்லை;
உழைக்கும் மக்களை எதிர்கொண்டுள்ள உண்மையான பிரச்சினைகள் மீது தீவிர விவாதங்கள் நடத்தப்படவேண்டும் என்பதற்காகவும்,
தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கம் ஒன்று வளர்க்கப்படுவதற்கான அரசியல் அஸ்திவாரங்களை
அமைப்பதற்காகவும் நாங்கள் இப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இருகட்சி முறை, சமூக பிற்போக்கு இவற்றிற்கு ஒரு மாற்று தேவை என்ற கருத்துடையவர்களை
நாங்கள் எங்களுடைய தேர்தல் வேலைத்திட்டம் பற்றிப் படிக்குமாறும், மேலும் சோசலிச சமத்துவக் கட்சியையும்
உலக சோசலிச வலைத் தளத்தையும்
தொடர்பு கொள்ளும்படியும், நம்முடைய
வேட்பாளர்களை வாக்குச்சீட்டில் இடம்பெறச்செய்யும் போராட்டத்தில் சேரும்படியும்
SEP
யில் சேர முடிவெடுத்து அதைக் கட்டி எழுப்ப வருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
Top of page |