:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
The Negroponte nomination: a warning to the people of Iraq
நெக்ரோபொன்ட் நியமனம்: ஈராக்கிய மக்களுக்கு ஓர் எச்சரிக்கை
By Bill Van Auken
21 April 2004
Back to screen version
திங்களன்று பாக்தாத்தில் அமெரிக்காவின் புதிய தூதராக ஜோன் நெக்ரோபொன்ட் நியமிக்கப்பட்டிருப்பதன்
மூலம் புஷ் நிர்வாகம், ஈராக்கிய மக்களுக்கு எதிராக நீண்ட மற்றும் கறைபடிந்த அடக்குமுறை போரை நடத்த சந்தேகத்திற்கிடமின்றி
சமிக்கை காட்டிவிட்டது.
வெள்ளை மாளிகையில் இந்த நியமனத்தை அறிவித்ததும், புஷ் நெக்ரோபொன்ட்டை ''மகத்தான
அனுபவமும், ஆற்றலும் உள்ள ஒரு மனிதர்'' என்று விவரித்தார். தற்போது அமெரிக்க தூதராக ஐக்கிய நாடுகள் சபையில்
பணியாற்றி வரும் அவரை, ''சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பரப்பும் நமது நோக்கங்களை அமெரிக்காவின்
சார்பில் உலகிற்கு மிக நன்றாக பரப்புவதில் உண்மையிலேயே நல்ல பணி செய்திருக்கிறார்'' என்று குறிப்பிட்டார்.
நெக்ரோபொன்டின் இராஜதந்திர நற்சான்றுகளைப் பாராட்டி மற்றும் ஈராக்கில் பெரும்
பகுதி பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொள்வதை அமெரிக்க நிர்வாகம் சார்ந்திருக்கிறது என்பதன் குறிகாட்டலாக
அவரைத் தேர்ந்தெடுத்தமை அமைந்துள்ளது என அறிவித்து ஊடகங்கள் மிகப்பெரும்பாலும் இந்த நிலைப்பாட்டையே எதிரொலித்தன;
நெக்ரோபொன்ட் நியமனம், பாரசீக வளைகுடாவில் அமெரிக்க கொள்கை தொடர்பாக நடைபெற்றுவருகின்ற அரசு
துறைக்கும் பென்டகனுக்கும் இடையிலான இடைவிடாதபோரில் அரசு துறையின் வெற்றி என்று சில செய்திகள் கருத்துரைத்தன.
இந்த கருத்துகளில் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்ற உண்மை என்னவென்றால்
நெக்ரோபொன்டின் உண்மையான பணியை விவரிக்கையில் ஒரு இறையாண்மை அரசுடன் ஒரு இராஜதந்திரி அணுகுவது பற்றி
விவாவதிப்பதல்ல. மாறாக அவர் ஒரு ஏகாதிபத்திய ஆளுநர், இராணுவ ஆக்கிரமிப்பு நாட்டில் கட்டுத்திட்டமில்லாத அதிகாரங்களுடன்
செயல்பட போகிறார். அவர் வழிநடத்தப்போகின்ற அந்த தூதரகத்தில் அவரது கட்டளைக்கு பணியாற்ற உலகிலேயே என்றுமிராத
அளவு மிகப்பெருமளவிற்கு 4,000- அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். தொடக்கத்தில் சதாம் ஹூசைனின் முன்னாள்
அரண்மனைகளுள் ஒன்றில் தூதரகம் செயல்படும், அது அமெரிக்க காலனித்துவ நிர்வாகமாக இருக்கும்.
ஊடக சுழல் வீச்சு சுட்டிக்காட்டுவதைப்போல், அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஐ.நா ஒரு
முகமூடியாக செயல்படுவதற்கு நெக்ரோபொன்ட் தனது ஐ.நா தொடர்புகளை பயன்படுத்திக்கொள்வார். மற்றும்
ஈராக்கில் ஐ.நா நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக குறைந்தபட்சம் அடையாள இராணுவப்படைகள்
நிறுத்தப்படுவதற்கு வகைசெய்வார்.
ஜூலை முதல் தேதி இன்னும் விளக்கப்படாதிருக்கும் ஈராக் அமைப்பு ஒன்றிற்கு
''இறையாண்மையை ஒப்படைக்கும்'' புஷ் நிர்வாகத்தின் நோக்கம் அறிவிக்கப்பட்டிருக்கின்ற நேரத்தில்
நெக்ரோபொன்டின் நியமனம் வெளிவந்திருக்கிறது. தற்போது அமெரிக்க ஆக்கிரமிப்பு தலைமை நிர்வாகியாக
பணியாற்றிவரும் போல் பிரேமர் தெளிவாக ஒன்றை இந்த வாரம் அறிவித்தார். அமெரிக்க இராணுவம் புதிதாக
ஆள்எடுத்து, பயிற்சி தந்த ஈராக் பாதுகாப்புப்படை பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. நாடு
முழுவதிலும் அண்மைய வாரங்களில் தோன்றிய தேசியவாத எழுச்சியின் காரணமாக பெரும்பாலான போலீஸ் படைகள்
மறைந்து விட்டன, போலீஸ் நிலையங்களையும், ஆயுதங்களையும் கிளர்ச்சிக்காரர்களிடம் ஒப்படைத்துவிட்டு, ஏராளமான
ஈராக் துருப்புக்கள் போராட்டத்தை கைவிட்டனர், அல்லது போரிட மறுத்தனர். பிரேமர் தெளிவாக
கூறியிருப்பதைப்போல் தற்போது ஈராக்கிலுள்ள 135,000 அமெரிக்க துருப்புக்கள் காலவரையின்றி தொடர்ந்து
இருக்கும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நாட்டில் அவர்கள்தான் உண்மையான இறையாண்மையை பயன்படுத்துவர்.
பென்டகனிலிருந்து அதிகாரம் அரசுத்துறைக்கு மாறுகிறது என்ற பேச்சு போலியானது.
ஜூலை முதல் தேதிக்குப்பின்னர் ஆக்கிரமிப்பு ஆட்சி கடைபிடிக்கப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பான இரண்டு
முரண்பாடான நகல் அறிக்கைகளை ஜனாதிபதியின் கட்டளைப்படி தயாரித்திருப்பதாக வாஷிங்டன் போஸ்ட்
செவ்வாயன்று தகவல் தந்துள்ளது.
''அரசுத்துறை கூற்று அமெரிக்காவின் கொள்கை தொடர்பான எல்லா அம்சங்களிலும்,
தூதரும் அவரது ஊழியர்களும் அதிகாரம் வகிப்பார்கள் என்று அழைப்பு விடுக்கும் அதேவேளை, பென்டகன் கூற்று முக்கிய
பொறுப்புக்கள் மிகப்பெருமளவிலான அமெரிக்க உதவிப் பொதிகள் தமது அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும்'' என்று அந்த
செய்தித்தாள் தெரிவிக்கிறது.
இறுதியாக எந்தத்திட்டம் நிலைநாட்டப்பட்டாலும், நெக்ரோபொன்ட் ஈராக்கில் அமெரிக்க
கொள்கையை செயல்படுத்துவதிலும் விரிவுபடுத்துவதிலும், சந்தேகத்திற்கிடமின்றி முக்கிய பங்களிப்பு செய்வார். அவருக்கு
கொடுத்துள்ள பணிக்கு மத்திய கிழக்கில் நேரடி அனுபவமில்லை. அவர் ஐந்து மொழிகளைப் பேசுபவர் என்று
கூறப்படுகிறது, அவற்றில் அரபு மொழி உள்ளடங்காது.
எவ்வாறாயினும், அவர் பெற்றுள்ள அனுபவம், அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக
வளர்ந்துவரும் ஈராக் மக்களது எதிர்ப்பை நேரடியாக அடக்குவதற்கு அவரை தயார்படுத்தும். பொதுமக்களை கொன்று
குவிப்பதில், இரகசிய நடவடிக்கைகள் மற்றும் கொலைப் படைகள் விவகாரங்களில் அவருக்கு மிக நெருக்கமான அனுபவம்
உள்ளது. நெக்ரோபொன்டின் ''அனுபவமும் ஆற்றலும்'' புஷ் பயபக்தியுடன் கூறுவதைப்போல் சுதந்திரத்தையும்
சமாதானத்தையும் பரப்புவதில் அடங்கியிருக்கவில்லை, மாறாக வியட்நாமில் தொடங்கி மத்திய அமெரிக்கா வரை மற்றும்
மற்றைய இடங்களில் இரத்தக்களரி அடக்குமுறைகளை ஏற்பாடு செய்வதில் அனுபவம் அடங்கி இருக்கிறது.
சில ஊடகச்செய்திகள் நெக்ரோபொன்டின் தகுதிகளில் அவர் ''பெரிய தூதரகத்தை
நடத்துகின்ற'' அனுபவத்தை குறிப்பிட்டிருக்கின்றன. இது தொடர்பாக மிகவும் வளர்ச்சிக்குரிய அவரது அனுபவம்
ஹொண்டுராஸில் உள்ள Tegucigalpa-வில்
அமெரிக்கத்தூதராக இருந்தபோது, றேகன் நிர்வாகம் நிகரகுவாவில்
சாண்டினிட்சா ஆட்சிக்கு எதிராகவும், எல் சல்வடாரில் பொதுமக்கள்
எழுச்சிக்கு எதிராகவும் இரத்தக்களரி உச்சக்கட்ட கறைப்படிந்த போரை நடத்திக் கொண்டிருந்தபொழுது, அவர் ஆற்றிய
பாத்திரமாகும்.
வாஷிங்டன் மேலாதிக்கம் செலுத்தும் ''வாழைப்பழ குடியரசு'', ஹொண்டுராஸில்
20-வது நூற்றாண்டு முழுவதிலும்
United Furit Company-
ம் நாட்டின் இராணுவமும், மற்றும் அமெரிக்க தூதரகமும்தான் கூட்டணி ஆட்சி நடத்தின.
எவ்வாறாயினும், 1980-களில் நெக்ரோபொன்ட் பராமரிப்பின் கீழ் நிலவரம் திடீரென்று
மாறியது. சாண்டினிஸ்ட்டாவிற்கு எதிராக சிஐஏ ஏற்பாடு செய்த கொண்ட்ரா போரில் ஹொண்டுராஸ் பெரிய தளமாக
ஆயிற்று, அந்தப்போரில் 50,000-பேர் பலியானார்கள்.
1981-முதல் 1985-வரை நெக்ரோபொன்ட் ஹொண்டுராஸில் தூதராக
பணியாற்றிவந்தார். அவரது பணிகளில் கொன்ட்ரா கூலிப்படையினருக்கு சட்டவிரோதமாக நிதியை வழங்குவது, மற்றும்
ஹொண்டுராஸ் இராணுவப்படைகளை மிகப்பெருமளவில் படைபலம் உள்ளதாய் கட்டி எழுப்புவது, தளங்களை உருவாக்குவது,
விமானத்தளங்கள் மற்றும் அளிப்புக் கிடங்குகளை (Supply
dump) நாடுமுழுவதும் அமைப்பது போன்ற பணிகளை
மேற்பார்வையிடுவது அடங்கும்.
இப்படி அமைக்கப்பட்ட தளங்களில் ஒன்று
El Aguacate விமானத்தளம், இது ஹொண்டுராஸில் பணியாற்றும்
பல்லாயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்களுக்கு சுழற்சி முறையில் ''பயிற்சி'' தருவதற்காக என்ற பெயரில்
அமைக்கப்பட்டது. உண்மையில் இந்தத் தளம் கொன்ட்ராக்களுக்கு நிரந்தர வசதியாகப் பயன்பட்டது மற்றும் அமெரிக்க
நாடாளுமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை மீறி இந்த வலதுசாரி கூலிப்படையினருக்கு நிதியுதவி வழங்குவதற்கு
பயன்படுத்தப்பட்டது.
1999ம் ஆண்டு அந்த இடத்தில் பெரிய எண்ணிக்கையில் புதைக்கப்பட்ட புதைகுழிகள் கண்டு
பிடிக்கப்பட்டன, அவற்றுடன் இரத்தக்கறை படிந்த மறியல் கூடுகளும் இருந்தன.
ஹொண்டுராஸில் நெக்ரோபொன்ட் தூதராக பணியாற்றியபோது அந்நாட்டிற்கு இராணுவ
உதவி 20-மடங்கு உயர்வதை மேற்பார்வையிட்டார். அவற்றை தீவிரமாக பாதுகாத்து மத்திய அமெரிக்காவில் ஜனநாயகத்திற்கு
ஒரு முன்மாதிரி என்று விவரித்தார்.
அவருக்கு முன்னர்
அமெரிக்கத் தூதகராக பணியாற்றி வந்தவர், ஹொண்டுராஸ் பாதுகாப்பு படைகள்
''சட்டத்திற்கு அப்பாற்பட்ட தந்திரோபாயங்களில் ஈடுபட்டு வருவதாகவும், தாங்கள் நாசவேலை அச்சுறுத்தல் என்று
கருதுவதை கட்டுப்படுத்த, எதிரிகளை கொலை செய்துவருவதாகவும், தலைமறைவாக ஆக்குவதாகவும்'' அவரை
எச்சரித்தார். 1995ம் ஆண்டு Baltimore Sun
விரிவாக விசாரணை செய்து தகவல்களை பிரசுரித்தபோது பெறப்பட்ட ஒரு குறிப்புப் புத்தகத்தில் அந்தக் குறிப்பு
இடம்பெற்றது.
நெக்ரோபொன்ட் அமெரிக்கத் தூதராக பொறுப்பேற்ற பின்னர் திட்டமிட்டு மனித
உரிமைகள் மீறல் தொடர்பான செய்திகள் எதுவும் வெளிவர முடியாபடி அடக்கினார். அவர் பதவி ஏற்றபின்னர் மனித
உரிமைகள் மீறல் அதிகரித்து வந்தது. அந்த நாட்டில் அரசியல் கைதிகள் சித்திரவதை அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு
புறம்பாக கொலை செய்தல் போன்ற நடவடிக்கைகள் எதுவும் நடக்கவில்லை என்று ஒன்றின்பின் ஒன்றாக அறிக்கைகளை
விட்டுக்கொண்டே இருந்தார். "மாணவர், தொழிலாளர், விவசாயிகள் மற்றும் இதர குழுக்களுக்கு முழுமையான
செயல்பாட்டு உரிமை உண்டு" என்றும் அறிக்கைகளை வெளியிட்டார்.
இதே காலத்தில் நூற்றுக்கணக்கானோர் கடத்திச் செல்லப்பட்டு அவர்கள் ''காணாமல்''
போய்விட்டார்கள். இவர்களில் தொழிற்சங்கத் தலைவர்கள், மாணவர் அமைப்பாளர்கள் மற்றும் இராணுவ ஆதிக்க
ஆட்சிக்கெதிரான எதிர்ப்பாளர்களும் அடங்குவர். ஹோண்டுராஸ் ஆயுதப்படைகளின் தலைவரது நேரடி கட்டளைப்படி
கைதிகள் வழக்கமாக சித்திரவதை செய்யப்பட்டனர்.
இந்த கறைபடிந்த நடவடிக்கைகளின் பெரும்பகுதியை மேற்கொண்ட பிரிவு
Battalion-316-
என்று அழைக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பின் உறுப்பினர்கள் அமெரிக்காவில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும்
ஹொண்டுராஸில் இருந்த சிஐஏ அவர்களுக்கு ஆலோசனை கூறியது. ஹொண்டுராஸ் ஆட்சியின் மனித உரிமைகள் சான்று
தொடர்பாக புகழ்ந்துரைக்கும் நெக்ரோபொன்டுக்கு இந்தக் கொடூரமான கொலைகாரர்களுடன் நெருக்கமான பழக்கம்
இருந்தது.
அவர் கொலைகள் மற்றும் சித்திரவதை தொடர்பான செய்திகளை வெளிவராது தடுப்பதற்கு
பணியாற்றிவந்தார் மற்றும் எதிர்ப்புத் தெரிவிக்கும் ஹொண்டுராஸ் அதிகாரிகளை அவர்கள் ''கம்யூனிசத்திற்கு'' உதவுகிறார்கள்
என்று குற்றம் சாட்டி மிரட்டினார். ஹொண்டுராஸ் இராணுவ புலனாய்வுப் பிரிவுத்தலைவர் அந்நாட்டிலிருந்து தப்பி ஓடி
தஞ்சம் புகுந்து பகிரங்கமாக Battalion
316- ''கொலைப் படையின்'' நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை செய்தபோது நெக்ரோபொன்ட் அவரது சாட்சியத்தை
ஆதாரமற்றது என்று தள்ளுபடி செய்தார்.
அவர் ஐ.நா-விற்கு அமெரிக்கத்தூதராக நியமிக்கப்பட்ட நேரத்தில், நெக்ரோபொன்ட்
CNN- க்கு
ஒரு பேட்டியளித்தார். அதில் அவர் கூறினார்: ''வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இந்த ஆட்சிகளில் சில அமெரிக்கர்கள்
விரும்புகிற அளவிற்கு சாதகமாக நடந்து கொள்ளாமல் இருக்கக்கூடும். அவர்கள் சர்வாதிகாரிகளாக அல்லது சர்வாதிகாரத்திற்கு
தயாராகின்ற நிலையில் இருந்திருக்கலாம். அந்நேரத்தில் நீங்கள் அந்தப்பகுதியில் ஜனநாயகத்தை ஆதரிக்க விரும்பி
இருந்திருக்கலாம். ஆனால் அங்கு நடைபெற்ற கொந்தளிப்பால் ஒருவேளை அதைச்செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம்.''
ஈராக்கில் நடைபெற்றுவரும் ''கொந்தளிப்பு'' சந்தேகத்திற்கு இடமின்றி, அது போன்ற ஏன், அதைவிட விரும்பத்தகாத
நடவடிக்கைகள் நெக்ரோபொன்டின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படலாம்.
அமெரிக்காவின் இரகசிய நடவடிக்கைகள் மற்றும் மக்களைக் கொன்று குவிப்பதில்
நெக்ரோபொன்டின் முதல் அறிமுகம் ஹொண்டுராஸாக இருக்கவில்லை. அவர் தேசிய பாதுகாப்பு ஸ்தாபன ஏணியில் ஒரு
அரசியல் விவகார அதிகாரியாக சைகோனில் அமெரிக்கத் தூதகரத்தில் 1964-முதல் 1968-வரை பணியாற்றினார், அந்தப்பதவி
CIA அதிகாரிகளுக்கு
ஒரு முகமூடியாக பயன்பட்டது.
1969-முதல் 1971-வரை ஹனோய் அரசாங்கத்துடன் பாரிஸில் நடைபெற்ற சமரச
பேச்சுவார்த்தைகளில் ஹென்றி கிஸிங்கரின் உதவியாளராக அவர் பணியாற்றினார். அப்போது வியட்நாமில் கிஸிங்கர்
அளவிற்கதிகமான சலுகைகளை வியட்நாமியருக்கு தந்துவிட்டதாக கண்டனம் செய்தார். தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு
கிஸிங்கர் தலைவராக இருந்தபோது 1971-முதல் 1973-வரை வியட்நாம் நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார். ஆக
மில்லியன் கணக்கான வியட்நாமியர்களை கொன்ற அமெரிக்கப்போரில் நேரடியாக பங்களிப்பு செய்த ஒன்பது ஆண்டுகள்
அனுபவமுள்ளவர் நெக்ரோபொன்ட்.
இந்த வரலாற்று பின்னணி இருப்பினும், ஐ.நா-பதவிக்கு நெக்ரோபொன்டின் நியமனம்
எளிதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2001-செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றவுடன் அவரது
நியமனம் செனட் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. புஷ்ஷின் ''பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு'' ஆதரவு
காட்டவேண்டுமென்ற ஆர்வத்தில் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் உறுத்தல் எதுவுமில்லாமல், மத்திய அமெரிக்க
(Central America)
மக்களுக்கு எதிராக நேரடியாக பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதில்
சம்மந்தப்பட்டிருந்த ஒரு தனி மனிதனின் நியமனத்தை ஏற்றுக்கொண்டனர்.
அதேபோன்று பாக்தாத் பதவிக்கும் அவர் எளிதாக ஒப்புதலை பெறுவார் என்பதில்
சந்தேகத்திற்கு இடமில்லை. அவரை மிக உற்சாகமாக ஆதரிப்பவர்களில் ஒருவர்
Richard Holbrooke.
இவர் கிளிண்டன் நிர்வாகத்தில் ஐ.நா-வில் அமெரிக்கத்தூதராக பணியாற்றி வந்ததோடு, கெர்ரி நிர்வாகத்தில்
அரசுத்துறை செயலராக நியமிக்கப்படலாம் என்று கருதப்படுபவர் ஆவார். |