World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காStruggle against war and the 2004 US elections போருக்கு எதிரான போராட்டமும் 2004 அமெரிக்க தேர்தல்களும் By David North ஏப்ரல் 17ம் தேதி அன் ஆர்பரில், மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் மிட்வெஸ்ட் உறுப்பினர் கூட்டத்தில், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவரும், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளருமான டேவிட் நோர்த்தின் ஆரம்ப உரையை கீழே பிரசுரிக்கின்றோம். இங்கு அன் ஆர்பரில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் பற்றி விவாதிக்க நாம் சந்தித்துப் பேசி ஒரு மாதம்தான் ஆகியுள்ளது. மார்ச் 13, 14 தேதிகளில் 2004 தேர்தல்களில் நாம் தலையிடுவதற்கான அரசியல் மற்றும் வேலைத்திட்ட அடிப்படையை பரிசீலனை செய்ய இரண்டு நாட்கள் செலவிட்டோம். நாம் இங்கு சந்தித்ததிலிருந்து பல விஷயங்கள் நிகழ்ந்துள்ளன - எல்லாவற்றிற்கும் மேலாக ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்துள்ளமைக்கு எதிராக ஓர் உண்மையான நாடுதழுவிய எழுச்சி அங்கு வெடித்துள்ளது. இந்த எழுச்சியை, ஒரு சில குண்டர்கள் மற்றும் சதாம் ஹுசைனுடைய ஆதரவளர்கள் முதலியோரின் வேலையென இழிவுபடுத்துவதற்கான செய்தி ஊடகத்தால் மேற்கொள்ளப்படும் நம்பிக்கையற்ற வீண்முயற்சிகள், காணக்கூடிய யதார்த்தத்தின் முன் அற்பமான அருவருக்கத்தக்க பொய்யுரைகளாக உள்ளன. தன்னிடத்தில் உள்ள பெரும் ஆயுதக்கிடங்கிலிருந்து மிகப்பெரிய முறையில் அமெரிக்கா, ஆதிகால ஆயுதங்களைக் கொண்டுள்ள எதிராளிகளை தாக்கிய பின்னரும்கூட, கிட்டத்தட்ட மூன்று வாரப் போருக்கு பின்னரும் அமெரிக்க இராணுவத்தால் எழுச்சியை அடக்கமுடியவில்லை. அமெரிக்க இராணுவம், உளவுத்துறை வட்டங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள, வலதுசாரி பகுப்பாய்வாளர் குழு ஒன்றினால் நடத்தப்படும், Stratfor என்ற வலைத் தளம், சமீபத்தில் ஈராக்கிய இராணுவ நிலைமை பற்றிய பகுப்பாய்வு ஒன்றை வெளியிட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை வாரங்களுக்கு முன்பு அது கீழ்க்கண்ட கருத்தைக் கூறியது: "தற்போதைய போக்கு அதிகரித்தால், அமெரிக்கா அதை அழிவிற்கு இட்டுச்செல்லக்கூடிய ஒரு தீவிரமான இராணுவ சவாலை எதிர்நோக்க வேண்டியிருக்கும். பரந்த தளமுடைய ஷியாக்களின் எழுச்சியையும், சுன்னி கிளர்ச்சியை நசுக்கவும் போதுமான படைகளை அமெரிக்கா கொண்டிருக்கவில்லை. தற்போதுள்ள எழுச்சியின் புவியியல் தன்மையே இருக்கும் அமெரிக்க படைகளின் திறனுக்கோ அல்லது நடைமுறையின் சாத்தியக்கூறுகளைக் கொண்டு அனுப்பப்படும் கூடுதலான படைகளின் திறனுக்கோ அடக்குவதற்கு அப்பாற்பட்ட நிலையில் உள்ளது. சில நகரங்களிலிருந்து அமெரிக்கா தன்னுடைய படைகளை திரும்ப பெற்றுக் கொண்டுவிட்டது. இவை அனைத்தின் தர்க்கரீதியான விளைவு (Enclave strategy) சூழ் மூலோபாயம் எனப்படும் முறையில் அமெரிக்கா தொடர்ச்சியான கோட்டைகள் உடைய பகுதிகளில் ஈராக்கிய தேசியவாதிகளை தவிர ஈராக்கிய மக்களை ஒதுக்கிய நிலையில் அதன் படைகளை கொண்டு மற்ற இடங்களை கொரில்லாக்களுக்கு விட்டுக் கொடுக்க கருதலாம். இது, அமெரிக்கா ஈராக்கில் ஏன் இருக்க முற்படுகிறது என்ற வினாவை எழுப்பலாம்; ஏனென்றால் இப்படைகள் ஒரு திறமையுடன் செயல்பட்டு நாட்டிற்குள்ளேயோ, வெளியேயோ இயங்க முடியாதவையாக உள்ளன. கடந்த வாரம், இந்த பெருங்குழப்பநிலை பெருகிய தன்மையை காட்டியது. பொருட்கள் செல்லும் பாதைகள் தாக்குதலுக்கு உட்பட்டன, ஈராக்கில் உள்ள படைகளை சுற்றுமுறையில் மாற்றவேண்டும் என்று அமெரிக்கா கொண்டிருந்த முடிவு மாற்றப்பட்டது; அது இராணுவம் ஒரு மிகக்கடினமான நிலையை எதிர்நோக்கியுள்ளது என்ற முக்கியமான உட்குறிப்பை தருகிறது. செய்தி ஊடகம் ஏப்ரல் 2004ல் இராணுவம் எத்தகைய ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் பத்திரிகை தகவல்களை வெளியிடும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று திட்டவட்டமாக கருதுகிறேன். செய்தி ஊடகத்திற்குள் இத்தகைய எதிர்விளைவு முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமின்றி, கணிக்க கூடியதுமாக உள்ளது. இன்னும் கூடுதலான அளவிற்கு இரத்தம் சிந்தப்பட வேண்டும் என்ற பரந்த அழைப்புக்கள் அதிகமாக இருக்கின்றன. இத்தன்மையின் பொருத்தமான வெளிப்பாடுகள்தான் வாஷிங்டன் போஸ்ட்டின் ஜோர்ஜ் வில்லால் எழுதப்பட்ட பல கட்டுரைகள் ஆகும். முதலில், ஏப்ரல் 7, 2004 அன்று, "ஆட்சி மாற்றம், ஆக்கிரமிப்பு, நாட்டைக் கட்டி எழுப்பல் --ஒரே சொல்லில், பேரரசு-- என்பது குருதிதோய்ந்த விவகாரமாகும். இப்பொழுது அமெரிக்கர்கள் ஈராக்கியர்களின் ஆயுதங்களைக் களையவும் ஈராக்கின் நகர்ப்புற போராளிகளை தோற்கடிக்கவும் தேவையான வன்முறையை கையாள தங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்." ஒரு வாரம் கடந்த பின்னர், ஏப்ரல் 14ம் தேதி, அவர் எழுதினார்: "பல்லுஜாவிற்குப் பின்னர், தேர்ச்சியான கடற்படைவீரர்களுக்கும் மற்றவர்களுக்கும் செய்யவேண்டிய முதல் காரியம், தங்களுடைய அடிப்படை தொழிலான பயங்கரமான சக்தியை காட்டவேண்டியதுதான்." தன்னுடைய பங்கிற்கான விஷத்தை அளிக்கும் முறையில் "முடிவுகாணும் இறுதிப் போராட்டக்களம் பற்றிய மறு சிந்தனை" என்ற தலைப்பில் "மிகத்துல்லியமான ஆனால் குறைந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய" அணு ஆயுதங்கள் "அமெரிக்க உயிர்களை காப்பாற்றும் பொருட்டு" பயன்படுத்தவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. இது அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டிற்குள் எத்தகைய சிந்தனையோட்டம் இருக்கிறது என்பதைப் பற்றி விளக்குகிறது. பல்லுஜாவில் நூற்றுக் கணக்கான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது தெரிந்த உண்மையாகும். கடந்த மூன்று வாரங்களில் நாடு முழுவதும் எவ்வளவு மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியாது; எவரும் ஒரு மதிப்பீட்டை இது பற்றித் தரவில்லை; ஆனால் உயிரிழப்புக்கள் மிக மிகக் கணிசமானவை என்பது மட்டும் தெளிவு. அமெரிக்கா விமானங்களை பயன்படுத்தி ஏவுகணைகளையும் குண்டுகளையும் கொண்டு பல்லுஜாவைத் தாக்கியுள்ளது. நாம் இந்த வினாவை எழுப்புவது நியாயமே: ஈராக்கில் நடைபெறுவது 1940களின் நிகழ்வுகளை நினைவிற்கு கொண்டுவரவில்லையா- பிரான்ஸ், ஒல்லாந்து, போலந்து, சோவியத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் இவற்றில் நாஜிக்கள் பழிவாங்கும் வகையில் எதிர்ப்புக்களுக்கு பதிலடி கொடுத்ததும், வார்சோவில் எதிர்ப்பு பிரிவினரை சுட்டுக் கொன்றதும், எழுச்சி செய்தவர்களை அடக்கியதும் நினைவிற்கு வருகின்றன அல்லவா? செக்கோஸ்லோவாக்கியாவில் ஒரு பிரிவினர், இப்பொழுது ஈராக்கில் அமெரிக்க ஆதரவு ஆட்சியாளராக இருக்கும் போல் ப்ரீமர் இருந்த நிலையில், நாஜித்தலைவர் Reinhardt Heydrich ஐ பிராக்கில் படுகொலைசெய்ய முற்பட்ட முயற்சியில் வெற்றியடைந்ததற்கு, பாசிஸ்டுகளின் பதில் மக்கட்கூட்டத்தையே அழித்ததும், Lidice நகரத்தையே நிர்மூலமாக்கியதும்தான் என்பது நினைவிற்கு வரவில்லையா? இந்தப்போர் அமெரிக்காவில் முக்கிய தாக்கத்தை கொண்டுள்ளது. ஈராக் ஆக்கிரமிப்பிற்கு திட்டமிட்டு, ஆதரவு கொடுத்து அதிலிருந்து நலன்களை பெறுபவர்களுக்கும், அதை எதிர்ப்பவர்களுக்கும் இடையே ஆழ்ந்த, கடக்கப்படமுடியாத பிளவு ஒன்று ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஒழுக்கநெறியில் துருவப்படுத்தல் ஆரம்பமாகிவிட்டன. இந்தப் பிளவில் வருங்காலத்தை பற்றிய கடுமையான, வெடிப்புடன்கூடிய சமூக போராட்டம் எதிர்பார்க்கப்படுகிறது; இறுதிப் பகுப்பாய்வில், இது எதிர்க்கும் வர்க்க நலன்களில் வேரூன்றியுள்ளது. இந்தப் போரை தோற்றுவித்தவர்களுக்கும், அதற்காக வக்காலத்து வாங்குபவர்களுக்கும் இடையே ஒருமித்த கருத்திற்கு இடமில்லை. இவர்கள் வெவ்வேறு ஒழுக்கநெறி உலகில் இருக்கின்றனர். ஆனால் நாம் இங்கு கூடியிருப்பது ஒழுக்கநெறி பற்றிய விவாதத்திற்கல்ல, அரசியல் பற்றிய விவாதத்திற்காகும். ஒரு மாதம் முன்பு நாம் இங்கு கூடிய பின்னர் நடந்த நிகழ்வுகளுக்கு ஜனநாயகக் கட்சியின் எதிர்விளைவு என்ன என்பதுதான் எமக்கு குறிப்பிட்ட முக்கியத்துவத்தை கொடுக்கிறது. நாம் எதிர்பார்த்ததுபோல், ஜனநாயகக் கட்சி ஈராக் போருக்கான எதிர்ப்புடன் உள்ள எந்த தொடர்பையும் முற்றிலும் நிராகரித்துவிட்டது. நாம் கடந்த மாதம் கூடியபோது, முதலாளித்துவத்தின் இரு-கட்சி முறையோடு உழைக்கும் வர்க்கம் அரசியல்ரீதியாக முறித்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்தை வலியுறுத்திக் கூறினோம். நம்முடைய தேர்தல் அறிக்கையின் வரைவு, மாநாட்டிற்கு முன்னரே தயாரிக்கப்பட்டது மற்றும் மாநாட்டின் ஆரம்ப அறிக்கையில், 2004 தேர்தலில் பெரும் பிரச்சினை ஜனாதிபதி புஷ் தோற்கடிக்கப்படுதல், அரசியல் கொள்கைகளும் வேலைத்திட்டங்களும், மிக இழிந்த நடைமுறை தேர்தல் கணக்குகளுக்காக தாழ்த்தப்பட வேண்டும் என்பதுபோன்ற வாதங்களை SEP நிராகரிக்கிறது என்பதும் வலியுறுத்தப்பட்டது. ஹோவர்ட் டீனுடைய பிரச்சாரம் தடம் புரண்டதும் ஜோன் கெர்ரியின் வேட்பு மொழிவு உறுதிப்படுத்தப்பட்டதும் மேற்கூறிய அவர்களின் வாதத்தின் திவாலான தன்மையை நன்கு அம்பலப்படுத்தியுள்ளன. கடந்த மாதம், மாநாட்டின் ஆரம்ப அறிக்கை, எல்லாவற்றிக்கும் மேலாக ஆளும் செல்வந்தத்தட்டு ஜனாதிபதி தேர்தல் எந்த விதத்திலும் ஈராக்கிய போர் மற்றும் ஆக்கிரமிப்பு பற்றிய மக்கள் கருத்துக்கூறும் வாக்கெடுப்பாக அமைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தது என்பதை விளக்கியது. என்னுடைய அறிக்கையிலிருந்தே மேற்கோளிட அனுமதியுங்கள்: "அரசியல் அமைப்பு முறைக்கு எந்த ஆபத்தையும் கொடுக்காத தன்மையை டீன் பிரதிபலித்து, ஒரு பழமைபாதுகாப்பு வாதியாக இருந்தாலும், அவருடைய வேட்பாளர் தன்மை, உலகெங்கிலும் இத்தேர்தல் ஈராக்கின்மீதான போர் பற்றிய மக்கள் வாக்களிப்பு என்ற நிலையை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதால், அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு வரவுள்ள காலங்களில் ஆபத்து நிறைந்த உட்குறிப்புக்களை கொண்டுள்ளது...... டீனுடைய விருப்பங்கள் பிரச்சினை அல்ல, ஆனால் அவருடைய வேட்புத்தன்மை அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு எதிர்ப்பிற்கு ஒரு சட்டநெறித் தன்மையை கொடுத்து ஊக்கி விடும் என்பதுதான்." ஆரம்ப தேர்தல் கட்டம் முழுவதும், தேர்தல் பிரச்சாரத்தில் போர் எதிர்ப்பும், ஈராக்கிய ஆக்கிரமிப்பும் ஒரு பிரச்சினையாக வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதை உறுதியளிக்கும் வகையில் இயக்கப்பட்ட செய்கையாகும். ஒருமாதத்திற்கு முன்பிருந்ததைவிட இப்பொழுது, அது ஏன் அவ்வளவு முக்கியத்துவம் பெற்றது என்பது தெளிவாகிறது. அரசியல் தீவிரம் 2003-2004 இலையுதிர் மற்றும் குளிர் காலங்கள் முழுவதும் போர் எதிர்ப்பு உணர்வால் தூண்டப்பட்டது என்ற உண்மை இருப்பினும், போரை வெளிப்படையாக ஆதரித்திருந்த வேட்பாளரான செனட்டர் ஜோசப் லிபர்மன் அனைத்து ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்குள்ளேயே மிகவும் செல்வாக்கற்று இருந்த போதிலும், வழிவகையின் இறுதி விளைவு போர் எதிர்ப்புத் தளம் முழுவதுமே கிட்டத்தட்ட வாக்குரிமையை இழந்துவிட்ட நிலையாகத்தான் போய்விட்டது. அதிகாரபூர்வமான கருத்துக் கணிப்புக்கள் அமெரிக்க மக்களில் பாதிப்பேருக்கும் மேலாக வெளிப்டையாக போரை எதிர்ப்பவர்கள் என்று காட்டுகின்றன. ஆனால் இந்த எதிர்ப்பு, இருக்கும் இருகட்சி முறை நிர்ணயிக்கும் அரசியலுக்குள் எவ்விதத்திலும் வெளிப்படவில்லை; இது, வேறு எதுவும் இல்லாவிடினும், முற்றிலும் ஜனநாயகமற்ற தன்மையைத்தான் புலப்படுத்துகின்றது. ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஊகிக்கப்படும் ஜோன் கெர்ரி, எத்தகைய நிலைப்பாட்டை கொண்டுள்ளார் என்பதை காண்போம். மார்ச் மாதம் வாஷிங்டன் போஸ்ட், ஈராக் ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்புடன் எந்த உறவையும் தான் வைத்திருக்கவில்லை என நிரூபிக்கும்படி அவருக்குச் சவால் விட்டது. இதற்குப் பதில் அளிக்கும் வகையில், ஏப்ரல் 13ம் தேதி வாஷிங்டன் போஸ்டில் ஒரு அறிக்கையை விடுத்தார். அதில் அவர் கூறுவதாவது: "நாம் எப்படி போருக்குச் சென்றோம் என்பதில் கருத்துவேறுபாடுகள் இருந்தபோதிலும், இப்பொழுது வெற்றிபெற வேண்டும் என்பதில் அனைத்துக் கட்சி கருத்துடைய அமெரிக்கர்களும் இப்பொழுது ஒருமித்த கருத்தை கொண்டுள்ளனர். நம்முடைய படைகளை தாக்கிக் கொண்டிருக்கும் பயங்கரவாதிகள், அவர்கள் அமெரிக்காவை பிரிக்க முடியாது என்றும், அமெரிக்க உறுதியை குலைக்க முடியாது என்றும், அமெரிக்கப் படைகள் முன்கூட்டியே திருப்பப் பெறவேண்டும் என கட்டாயப்படுத்தவோ முடியாது என்றும் அறிந்து கொள்ளவேண்டும். எமது நாடு, ஓர் உறுதியான, அமைதியான, பன்முகத் தன்மை சமூகத்தை ஈராக்கியர்கள் அமைக்கவேண்டும் என்பதற்கு உதவ ஒப்புக்கொண்டுள்ளது. நவம்பர் மாதம் யார் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அந்தப் பணியை நாங்கள் பாதுகாப்போம். ஆனால் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்துவதற்கும், தோல்வி நிலையை குறைக்கவும் நம்முடைய இருப்புக்கள் முழுவதையும் நாம் பயன்படுத்தவேண்டும். நம்முடைய இராணுவத்தலைவர்கள் கூடுதலான படைகளைக் கேட்டால், நாம் கூடுதலான படைகளை அங்கு அனுப்பவேண்டும்." இதைவிட தெளிவாக வேறு எதுவும் கூறப்படவேண்டியதில்லை. கெர்ரியை ஆதரிப்பவர்கள், இந்த தேர்தலில் புஷ் தோற்கடிக்கப்படுவதற்குத்தான் என்று வாதிடுபவர்கள், அவர்கள் முன்னோக்கு வெற்றி பெற்றால் அரசியல் நிலையைப் பற்றி தங்களுக்கு வியப்பு வருகிறது என்று கூற முடியாது. அவர்கள் கெர்ரி இப்பொழுது தெளிவாகக் கூறியுள்ள நிலைப்பாட்டிற்குத்தான் உறுதி கொள்ளுகின்றனர் --அதாவது, போரும், ஈராக்கிய ஆக்கிரமிப்பும் அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு உகந்தவை, இந்தப் போர் ஆதரிக்கப்பட வேண்டும், அந்நாட்டில் எதிர்ப்புக்களை முறியடிப்பதற்காக இராணுவம் கேட்கும் கூடுதல் படைகள் அனுப்பப்படவேண்டும். இந்தத் தேர்தலை ஆளும் செல்வந்தத் தட்டு தன்னுடைய பூகோள மூலோபாயத்தை சாணைதீட்டும் ஒரு வழிவகையாக கருதுவதுடன், அதை ஒட்டிய தந்திரோபாய இணக்கங்களை செய்துகொள்ளவும், அதன் நலன்களை பாதுகாப்பதற்கு அது அவசியம் என்று கருதினால், ஒருவேளை அதற்கு தேவையானால் இப்பொழுது வெள்ளை மாளிகையில் இருப்பவரை மாற்றவும் செய்ய ஒரு கருவியாகதான் கருதுகிறது. புஷ் நிர்வாகத்தின் திறமையற்ற தன்மையும், புகழற்ற நிலையும் வெளிப்படையாக வளரும்போது, அதன் உட்பிளவுகள் இன்னும் கடுமையாகிவிட்ட நிலையில், செல்வந்தத் தட்டினரிடையே நிர்வாகத்தின் செயல்பாடு பற்றி அதிருப்தி தீவிரமாகிவிட்ட நிலையில், கெர்ரி ஏற்கத்தக்க மாற்றாக கருதப்படக்கூடும். ஈராக் படையெடுப்பிற்கும் ஆக்கிரமிப்பிற்கும் ஐயப்பாட்டிற்கிடமில்லாத ஆதரவு கொடுப்பதுதான் வெள்ளை மாளிகையில் நுழைவதற்கான அனுமதிக் கட்டணமாகும். இப்போர் தொடர்ந்து நடப்பது, அமெரிக்க மக்கள் எதிர்பார்ப்பது அல்லது ஒப்புக் கொள்ளுவதைவிட பெரும் செலவினங்களைக் கொடுப்பதுடன் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தும் என்பதை ஆளும் வர்க்கம் நன்கு அறியும். இந்தச் சூழ்நிலையின் துல்லியமான தன்மையில்தான், தன்னுடைய போலி முற்போக்கு, தாராளவாத கொள்கை தோற்றத்தை, ஜனநாயகக் கட்சி ஏகாதிபத்திய அரசியலுக்கு கொடுக்கும் போக்கு வெளிப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான மனிதர் தான்தான் என்பதை ஆளும் வர்க்கத்திற்கு முற்றிலும் நம்பவைக்கும் தன்மையைத்தான் கெர்ரியின் பிரச்சாரம் நோக்குநிலை கொண்டிருக்கிறது. ஜனநாயகக் கட்சியின் ஊகிக்கக் கூடிய வேட்பாளராக ஆனதிலிருந்து, இவர் தன்னுடைய போரெதிர்ப்பு நண்பர்களை முற்றிலும் துறந்து, டீனுடன் திறமையுடன் போட்டியிடுவதற்காக ஆரம்ப தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். தற்போது ஆளும்வர்க்கத்தின் "உள்ளங்களையும் சிந்தனைகளையும்" கைப்பற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரும் போரின் வெற்றியையும், ஈராக்கிய ஆக்கிரமிப்பையும் விரும்புகின்றனர் என்று கெர்ரி கூறுவது பெரும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். அது ஒரு வெறும் பொய் அல்ல. போருக்கு எதிர்ப்பு என்பது அமெரிக்காவில் முறைமையான அரசியல் என்று கருதப்படுவதற்கு புறத்தே வைக்கப்படுகிறது என்பதுதான் அதற்குப் பொருளாகும். இத்தகைய அறிக்கைகள், போரின் அரசியல் உட்குறிப்புக்களின் பின்னணியில் ஆராயப்படவேண்டியவையாகும். அமெரிக்கா போரில் குதித்தபோது, புஷ் நிர்வாகமோ, ஜனநாயகக் கட்சியினரோ, செய்தி ஊடகமோ இந்தப் பொறுப்பற்ற முடிவின் முழு விளைவுகளையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஏகாதிபத்திய போரின் குருதி சிந்தும் தர்க்கத்தின்படிதான் நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. ஈராக்கிற்குள், ஆக்கிரமிப்பின் வெற்றி ஈராக்கிய மற்றும் மத்திய கிழக்கு மக்கள் மீதான தாக்குதலில் கூடுதலான வன்முறையை தேவையாகக் கொண்டுள்ளது. இராணுவத்திற்கு கூடுதலான மக்களை தயாராக வைத்திருக்காமல், அமெரிக்காவிற்குள்ளேயே, இப்போரை நடத்துவதற்காக தேவைப்படும் மனித வளங்கள், கண்டுபிடிக்கப்பட முடியாது; அதுதான் இராணுவசேவை வரைவு திட்டத்தை திரும்ப அறிமுகப்படுத்துவதற்கான அர்த்தமாகும். எல்லா இடங்களிலும் மக்களை இராணுவசேவை வரைவு திட்டத்திற்கு ஈர்க்கும் முயற்சித் தயாரிப்புக்கள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 11ல் நியூயோர்க் டைமஸ் எழுதியது: "இப்பொழுதுள்ள இராணுவப்படைகள் மிகவும் உழன்று பணியாற்றுவதற்கு உதவும் வகையில், அமெரிக்க மக்கள் தியாகம் செய்யவேண்டியதன் தேவையை உணர்ந்தால், புஷ் கட்டாய இராணுவசேவை வரைவு திட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கலாம்." இன்றைய வாஷிங்டன் போஸ்டில் வந்துள்ள தலையங்கம் ஒன்றில் கீழ்க்கண்ட பத்தி ஒன்று உள்ளது. படைகள் பெரும் களைப்பிற்கு உட்பட்டிருக்கிறது என்ற குறிப்பிற்குப்பின், போஸ்ட் எழுதுகிறது: "செப்டம்பர் 11, 2001ல் பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர் ஒன்றில் நிர்வாகம் நுழைந்தது; ஆனால் அதற்கு ஏற்றவாறு படைகளின் எண்ணிக்கையை மாற்றிக்கொள்ளவில்லை. உலக நிகழ்வுகள், இன்னும் கூடுதலான வீரர்களை தீவிர பணிக்கும், இருப்புநிலைக்கும் கடமையை செய்வதற்கு தேவையென, நிர்வாகத்திற்கு உந்துதல் கொடுக்குமேயாயின், தேர்ந்தெடுக்கப்படுதலும், அவர்களை தக்கவைத்துக் கொள்ளுதலும் கஷ்டத்திற்கு உட்படும்; கடந்த பல ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் தன் திறமையை நிரூபித்துள்ள இந்த அமைப்பு ஊறுக்கு உட்படும். ஈராக்கிலும், மற்றும் ஆபத்து நிறைந்த உலகத்திலும், வர இருக்கும் ஆண்டுகளில் நாம் எதிர்நோக்கக் கூடிய சூழ்நிலையைச் சந்திப்பதற்கு எந்த அளவு படைப் பெருக்கம் தேவை என்பதைப்பற்றிய தீவிர சிந்தனையை மேற்கொள்ளுவதற்கான நேரம் வந்துவிட்டது." இதன் பொருள் மிகவும் தெளிவாக உள்ளது: கட்டாய இராணுவ சேவை மீண்டும் வருகிறது. பணித் தேர்வு அமைப்பு (Selective Service System) தன்னுடைய வலைத் தளத்தில் ஓர் அறவிப்பை கொடுத்துள்ளது; அதன்படி மீண்டும் கட்டாய இராணுவ சேவை கொண்டுவரும் திட்டம் இல்லையென்றாலும், தேர்வுக் குழு 18 வயதிற்கு மேற்பட்ட எல்லா அமெரிக்கர்களையும் பதிவு செய்கிறது; தேவை ஏற்பட்டால் அதற்கு இடப்படும் உத்தரவை அது நிறைவேற்ற தயாராக உள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன்: குடியரசுக் கட்சியினர், மற்றும் செனி, வேறு சில புஷ் நிர்வாக உயர்மட்ட அலுவலர்கள் இராணுவத்தில் பணியாற்றியதில்லை என்பதை கெர்ரி ஒரு தாக்குதலுக்கான குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் எடுத்துக்கொண்டது வெறும் பொருளற்றது என நான் நினைக்கவில்லை. போருக்கு ஆதரவு, கட்டாய இராணுவசேவைக்கான ஊக்கம், அனைவரையும் இந்த "உயர் நோக்கத்திற்காக" அழைப்பு விடுதல் என்ற புதிய தேசபக்தி உரைகளை காணப்போகிறோம். கட்டாய இராணுவசேவைக்கான சட்ட வரைவிற்கான ஆதரவைத் தேடும் வகையில் பொதுப் பிரச்சாரத்திற்கான சிந்தனைவகை அஸ்திவாரங்கள் போடப்படுகின்றன. உதாரணமாக, வியட்நாம் போரை பல ஆண்டுகள் முன்னர் எதிர்த்திருந்த போல் பேர்மன், இப்பொழுது இராணுவமுறையின் சிறப்புக்களை திடீரென்று கண்டுபிடித்து, தான் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில் ஈராக்கில் நடந்த சம்பவங்களையும் "பயங்கரவாதத்தின்மீதான போரையும்" நெறிப்படுத்தும் வகையில் அவை இஸ்லாமிய சர்வாதிகாரத்தை எதிர்க்கும் தேவையான போராட்டத்திற்கு இன்றியமையாதவை என நியாயப்படுத்த முற்பட்டுள்ளார். அறிவார்ந்த முறையில் வெற்றுத்தன்மையையும், நேர்மையற்ற வாதங்களும்தான் இப்பொழுது வெளிவந்து சிறிதும் வெட்கமில்லாத வகையில் புதிய ஏகாதிபத்திய கொள்கைக்கு அடிப்படை கொடுக்க பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. புஷ் நிர்வாகத்துடன் எத்தகைய தீவிர தந்திரோபாய வேறுபாடுகள் இருந்தபோதிலும், ஜனநாயகக் கட்சி, அடிப்படையில் நிதி, வர்க்க நலன்களில் குடியரசுக் கட்சியினின்றும் மாறுபட்டிருக்காத சமுதாய தளத்துடன் தன்னை பிணைத்துக் கொண்டுள்ளது. ஜனநாயகக் கட்சியின் மிகச் செல்வாக்கு வாய்ந்த தளம், ஆளும் செல்வந்தத்தட்டின் சில பகுதிகள், மற்றும் பெரும் ஊதியம் வாங்கும் உத்தியோகம் பார்ப்பவர்களில் செல்வம் கொழிக்கும் பகுதியினர் ஆவர், அத்தகைய பிரிவைச் சார்ந்தவர்கள் அமெரிக்க இன்று பின்பற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் இருந்து பெரும் நலன்களை பெறுபவர்கள் ஆவர். சமீபத்திய பத்தாண்டுகள் உண்மையான உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியால் விளைந்த தன்மையை கொண்டிருக்கவில்லை; மாறாக, மலிவுப் பண்ணடங்களை தக்க வைத்துக் கொள்ளும் வகை, ஊதிய அளவு குறைக்கப்பட்ட நிலை, உழைக்கும் மக்களை மிகப் பெரிய அளவில் சுரண்டும் நிலைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றை நிலைக்களனாக கொண்டு, ஆளும் செல்வந்தத் தட்டின் பகுதிகள், புதிய பணக்காரக் கூட்டம் இவை மாபெரும் செல்வக் குவிப்பில் ஈடுபடுதலுக்கு, அதிலும் கடந்த 20 ஆண்டுகளில், வகை செய்த செயற்பாடுகள் ஆகும். கடந்த மாதத்தில் நிகழ்ந்த மிக துரிதமான மாற்றங்கள் - ஈராக்கில் போர், ஆக்கிரமிப்பினால் முன்னுக்கு கொண்டுவரப்பட்ட எதிர்ப்பு, ஜனநாயகக் கட்சி பெரும் வேகத்தில் தன்னை இப்பிரச்சினையில் இணைத்துக் கொண்டமை ஆகியவை இந்த ஆண்டில் வரவிருக்கும் நிகழ்வுகள் எத்தன்மையான வெடிப்புத் தன்மையை கொண்டிருக்கும் எனபதற்கான ஆபத்தான அடையாளங்கள் ஆகும். இன்னும் ஏழு மாதங்களில் தேர்தலை சந்திக்க உள்ளோம் என்பதை நினைவிற் கொள்ளுங்கள். அரசியல் சூழ்நிலையில் மாற்றம், மற்றும் புரட்சிகர சூழ்நிலைக்கு முந்தைய நிலைமையின் கூறுபாடுகளில் ஒன்று, அரசியல் நனவில் இந்த வளர்ச்சிகள் கொடுக்கும் பெரும் குலுங்கவைக்கும் அதிர்வு ஆகும். இலையுதிர்காலத்திலும் குளிர்காலத்திலும், போரை எதிர்த்தவர்களில் பலர் ஜனநாயகக் கட்சி இதற்குத் தீர்வு காணும் என எதிர்பார்த்தனர். லிபர்மானை தவிர அனைத்து வேட்பாளர்களும் போரின் எதிர்ப்பாளர்கள் என்று தோற்றம் காட்டிய வகையில், ஆரம்ப கட்ட தேர்தல்களில் வாக்கு அளித்தவர்கள் ஒரு பெருமித உணர்வில் நிறைந்து நின்று புஷ்ஷிற்கான எதிர்ப்பு, இந்த நிர்வாகத்துடன் தொடர்புடைய கொள்கைகள் நிராகரிக்கப்பட வழிகோலும் என நம்பினர். நிலைமை அதில் இருந்து மிக அப்பால் வந்துவிட்டது! ஜனநாயகக் கட்சி இந்தக் கொள்கைகள் அனைத்தையும் தன்னுடையதாக தழுவிக்கொண்டுவிட்டது. அதேநேரத்தில், 9/11 சம்பவங்களைப் பற்றிய விசாரணை, இருகட்சி முறையை கொண்டு, தேசபக்தி சட்டத்தை முறைப்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் ஒரு கருவியாகிக் கொண்டிருக்கிறது; இவை அனைத்துமே பயங்கரவாதத்தின்மீதான போர் என்ற பெயரில் நிகழ்கின்றன. செப்டம்பர் 11 வெளிப்படுத்திய உண்மைப் பிரச்சினை பற்றி ஆய்வு நடத்தப்படவில்லை, அதாவது போர் பற்றிய செயல்பட்டியலை மத்தியகிழக்கில் முன்னெடுத்ததற்கு இந்த சம்பவம் பயன்படுத்தப்பட்டவிதம் ஆகும். திகைப்பூட்டுகிறவாறு, சிஐஏ மற்றும் எப்பிஐ உடைய விமர்சனமானது அமெரிக்க ஐக்கிய அரசுகளில் ஜனநாயக உரிமைகளை அழிப்பதில் மிக வலிந்து தாக்கத் தவறின என்பதாகும். வாரங்களும், மாதங்களும் செல்லும் அளவில், தொழிலாள வர்க்கத்தின் கூடுதலான பிரிவுகளுக்கும் மாணவர்களுக்கும் அவர்களின் பிரச்சினைகள் ஒன்றுகூட தீர்வு காணப்படவில்லை என்பது தெளிவாகும். இருகட்சி முறை அவர்களின் சொந்த அரசியல் மற்றும் சமூகத்தேவைகள் கவனிக்கப்படும் ஒரு கட்டமைப்பை வழங்கவில்லை. இந்த அரசியல் நெருக்கடி பெருகிய முறையில் உறுதியற்ற பொருளாதார நிலைமையைத்தான் தோற்றுவிக்கிறது என்பது, தொழிற்துறையில் சரிவு என்பது மட்டுமின்றி பணவீக்கம் குறிப்பிடத்தக்க முறையில் வளர்ந்துள்ளது என்பவற்றின் மூலமும் பண்பிடப்படுகிறது. மிகச் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, அதிகாரபூர்வமான பணவீக்கம் 5 சதவிகிதம் என சொல்லப்பட்டாலும், பெட்ரோல், உணவுப்பொருட்கள் விலையை பார்க்கும்போது, நிலைமை மிகக் கடுமையாக இருக்கிறது என்பதும் தெரியவரும். நியூயோர்க் டைம்ஸ் சில உணவுப் பண்டங்களின் விலை கடந்த மாதத்தில் இருமடங்காகி விட்டதாக அறிவிக்கிறது. பால் விலை ஒருமாத காலத்தில் 30 சதவிகிதம் கூடியுள்ளது. உழைக்கும் மக்கள் கார்களில் பணிக்குச் சென்றுவரச் செலவிடவேண்டிய தொகையைக் காணும்போது, அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தில் பெரும் சரிவுதான் ஏற்படும் என்பது தெரியவரும். எந்தக் கேள்விக்கும் இடமின்றி, வாழ்க்கைத் தரத்தின் மீதான தாக்குதல்கள் ஒரு தீவிரமான சிந்தனைவிளைவை தொழிலாள வர்க்கத்தின் பரந்த பகுதிகளிடையே ஏற்படுத்தும். நம்முடைய மனித ஆற்றல், ஏனைய வளங்கள் தொடர்பாக தற்போது மட்டுப்படுத்தப்பட்ட நிலை இருந்தபோதிலும், நம்முடைய பிரச்சாரத்தை நாம் வலுப்படுத்த இருப்பது ஒரு முன்னோக்கு மற்றும் பகுப்பாய்வு இவற்றின் அடித்தளத்தில்தான்- அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் தீவிரமாகிக் கொண்டிருக்கும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளின் விளைபயன்கள் பற்றிய ஒரு நுண்ணறிவுத்திறத்தின் அடிப்படையில் ஆகும். எமது பகுப்பாய்வின் வலிமையை வலியுறுத்தும் வகையில், அதுவும் ஜனநாயகக் கட்சிக்கு கொள்கை அடிப்படையிலான எதிர்ப்பின் எந்தவித சீரிய முன்னோக்கு எதையும் தெளிவாகப் பேச இயலாத, முன்னய தீவிரவாதபோக்கினர், பசுமைக் கட்சியினர் மற்றும் ஏனைய குட்டி முதலாளித்துவக் குழுக்கள் ஆகியோருக்கு எதிரான எமது ஆய்வின் பலம் ஏற்கனவே மிகத் தெளிவாகி வருகின்றது. தங்களுடைய விருப்பம், ஈராக்மீதான போரை அதன் முடிவிற்கு வரும் வரை தாங்கள் தொடருவோம் என்று மிகவும் பகிரங்கமாகக் கூறுபவர்களின் முகாமில், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தன்னுடைய முதுமையை கழிக்க திட்டம் கொண்டுள்ள, பிரபல எதிர்ப்பாளர் என்று அறியப்பட்டிருந்த திருவாளர் சோம்ஸ்கி, ஜோன் கெர்ரிக்கு தன்னுடைய ஆதரவை கொடுக்கும் நிலையைக் காண்கிறோம். இதைத் தொடர்ந்து பரிதாபத்திற்குரிய காட்சி திருவாளர் நாடெர், மிகவும் சக்திமிக்க வகையில் ஜோர்ஜ் புஷ்-ஐ தோற்கடித்தல் மற்றும் ஜோன் கெர்ரி தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தல் என்ற வகையில் தன்னுடைய வேட்பாளர் தன்மையை நியாயப்படுத்திக் கொள்ளுவதாகும். இந்த இருகட்சிகளுடனும் சமரசற்ற எதிர்ப்பு என்ற அடிப்படையில் நம்முடைய பிரச்சாரம் தொடர்கிறது. ஜனநாயகக் கட்சியினரோ அல்லது குடியரசுக் கட்சியினரோ நம்மைப் பொறுத்தவரையில் "குறைந்த தீமைகள்" அல்ல. இந்த விஷங்களில் ஒன்றை தேர்ந்தெடுங்கள் என்று நாம் தொழிலாளர்களிடம் கூறத்தயாராக இல்லை. ஆளும் வர்க்கத்தை பொறுத்தவரையில், இந்த தேர்தல் அவர்களுக்கு, அவர்களுடைய பொருளாதார மற்றும் அரசியல் செயல்பட்டியலை இன்னும் சக்திமிக்க வகையில் செயற்படுத்த எத்தகைய தந்திரோபாய ஒழுங்குபடுத்தலை செய்யும் ஒரு வழிமுறைதான். மொத்தத்தில், ஒரு கட்டாய இராணுவச் சேவை திட்டம் கூட அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றால், ஒரு பழைய வியட்நாம் போர்வீரரை, ஆனால் இப்பொழுது போரை ஆதரிப்பவரை -ஜனாதிபதி கெர்ரியாக உள்ளே கொண்டுவருவது நல்லது என்பது அவர்கள் கருத்து: இதற்கு அனைத்து வகையான தாராண்மைவாதிகள் மற்றும் Nation போன்ற பழைய தீவிரவாதப் போக்கினரின் ஆதரவும் உள்ளது. நாம் கடந்தமாதம் முன்வைத்த முன்னோக்கு மெய்ப்பித்துக்காட்டப்பட்டுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் மட்டுமே தொழிலாள வர்க்கம், இளைஞர் ஆகியோருக்கு, பெருவர்த்தகத்தின் இருகட்சிகளின் ஏகாதிபத்தியக் கொள்கைகளுக்கு கொள்கை அடிப்படையிலான பதிலீட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. |