ஸ்பெயின்:
ஈராக்கிலிருந்து துருப்புக்களை விலக்கிக்கொள்வதாக புதிய பிரதமர் கூறுகிறார்
By Mike Ingram and Vicky Short
20 April 2004
Back to screen
version
சோசலிச கட்சி (PSOE)
பிரதமராக Jose Luis Rodriguez Zapatero
பதவியேற்று சில மணி நேரத்திற்குள் ஏப்ரல் 18-ல் தொலைக்காட்சி அறிக்கையில் ஈராக்கிலுள்ள ஸ்பெயின் துருப்புக்கள்
''சாத்தியமான வகையில் விரைவாக'' வெளியேறுவதற்கு கட்டளையிடப்பட்டிருப்பதாக அறிவித்தார்.
தனது பாதுகாப்பு அமைச்சருக்கு
Zapatero ''ஈராக்கில் இருக்கும் ஸ்பெயின் துருப்புக்கள் முடிந்தவரை
மிகக்குறுகிய காலத்திற்குள் திரும்பி வருவதற்கு சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு'' கட்டளையிட்டிருப்பதாகக்
கூறினார்.
Zapatero இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டவுடன்
இதற்கு முன்னர் வெகுஜன போர் எதிர்ப்பு பேரணிகள் நடைபெற்ற Puerta del Sol
சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளில் தயாரிக்கப்பட்ட பதாகைகளுடன் வந்து, ''ஈராக்கில் அமைதி, நீதி
விடுவிக்க வந்தவர்களிடமிருந்து ஈராக்கிற்கு விடுதலை பெற்றுத்தர வேண்டுமென்றும்", "சட்ட விரோதமான போர், இறப்பு,
அழித்தல், குழப்பம், சூறையாடல்: ஈராக்கில் அமைதி ஏற்படவேண்டிய தருணம் இது'' என்று அறிவிக்கும் முழக்கங்கள்
அடங்கிய பதாகைகளை ஏந்தி வந்தனர். "நேட்டோ வேண்டாம்", தளங்களை காலிசெய்", "துருப்புக்களை விலக்கு"'
மற்றும் "PP, [மக்கள் கட்சி-Popular Party]
நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம்." ''ஈராக்கிலிருந்து எங்களது துருப்புக்களை
விலக்கிக்கொண்டோம்'' என்பது போன்ற முழக்கங்களை அவர்கள் எழுப்பினார்கள்.
கிட்டத்தட்ட 200 பேர்கள் கொல்லப்பட்டு 1599 பேர் காயமடைந்த, கடந்த மாதம்
மாட்ரிட்டில் நடந்த பயங்கரவாத குண்டுவெடிப்புக்களை தொடர்ந்து, மக்கள் கட்சி பிரதமர் ஜோஸ் மரியா அஸ்னர்
கூறிய பொய்கள் மக்களுக்கு ஆத்திரமூட்டியதாலும் போருக்கு எதிரான உணர்வுகளின் பெரும் அலையினால் சென்றமாதம்
நடைபெற்ற தேர்தலில் PSOE
மகத்தான வெற்றிபெற்றது.
தனது அரசாங்கத்தின் சொந்த ''பயங்கரவாதத்திற்கு எதிரான போரை'' நியாயப்படுத்தவும்,
ஸ்பெயினின் மிகப்பெரும்பாலான மக்கள் ஈராக் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தேர்தல், போர் பற்றிய
பொதுவாக்கெடுப்பாக மாறிவிடாது தடுப்பதற்காகவும், இந்த குண்டுவெடிப்புக்களுக்கு
Basque பிரிவினவாத
ETA- தான்
காரணம் என்று பழிபோட அஸ்னர் முயன்றார். ஈராக் போரில் ஸ்பெயினின் பங்களிப்பிற்கு பதிலடி நடவடிக்கையாக குண்டு
வெடிப்புக்களுக்கு தாங்கள்தான் பொறுப்பு என்று இஸ்லாமிய போராளிகள் அறிவித்திருந்தனர் என்று செய்திகள் வெளிப்பட்டதால்,
PP தலைமை
அலுவலகத்திற்கு வெளியே, உண்மைவெளியே வரவேண்டும் என்று கோரி தன்னிச்சையான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
48 மணிநேரத்திற்குள் பொதுமக்கள் அனைவரும் திரண்டு நின்று அஸ்னர் அரசிற்கு எதிரான வெறுப்பையும், கோபத்தையும்
வாக்குச் சாவடிகளில் காண்பித்ததால் அரசாங்கத்திலிருந்து PP
கட்சி வெளியேற்றப்பட்டது.
42-சதவீத வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்ற
Zapatero, இடைக்கால ஈராக்கிய நிர்வாகத்தை ஜூன் 30ல்
ஒப்படைப்பதாக அமெரிக்கா கட்டளையிட்ட காலக்கெடுவை அடுத்து, ஐக்கியநாடுகள் சபைக்கு பெரும் பங்கு
வழங்கப்படவில்லையானால், உடனடியாக ஈராக்கிலிருந்து தனது அரசாங்கம் துருப்புக்களை விலக்கிக்கொள்ளும் என
அறிவித்தார்.
ஆயினும், ஞாயிறன்று Zapatero
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்ட்ட அவரது உரையில் அமெரிக்காவிற்கும் ஏனைய கூட்டணிப் படையினருக்கும் விடுத்த அவரது
வேண்டுகோள் செவிடர் காதில் விழுந்தது போல் ஆனது என்பதைத் தெளிவுபடுத்தினார்.
''எங்களுக்கு கிடைத்திருக்கின்ற தகவல், மற்றும் கடந்த வாரங்களில் நாங்கள் திரட்டியுள்ள
தகவல்கள், ஐ.நா ஸ்பெயினுக்கு திருப்தியளிக்கின்ற தீர்மானத்தை ஏற்கும் என்று முன்னரே காணமுடியாதிருக்கிறது" என்று
Zapatero
குறிப்பிட்டார். ''இந்த மோதலில் சம்மந்தப்பட்டிருக்கும் பிரதான செயற்பாட்டாளர்களால் தரப்படும் பகிரங்க
அறிக்கைகள், எனது வேண்டுகோளை ஏற்று சென்ற மாதம் பாதுகாப்புத்துறை நடத்திய கருத்துப்பரிவர்த்தனைகள்
ஆகியவற்றைக்கொண்டு பார்க்கும்போது, ஸ்பெயின் நாட்டுமக்கள் கோருகின்ற காலக்கெடுவிற்குள் அல்லது அவர்களால்
கோரப்படும் வழியில் ஈராக்கில் உள்ள அரசியல் மற்றும் இராணுவ சூழ்நிலையில் கணிசமான ஒரு மாறுபாட்டை முன்கூற
முடியாது'' என்று Zapatero
தொலைக்காட்சி பேட்டியில் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஜோர்ஜ் W.புஷ்
ஈராக் மக்களது ஜனநாயக சுய-ஆட்சி ஜூன் 30-ந்தேதி தொடங்குமென்று இறுதிநாள் குறித்திருந்தாலும் இடைக்கால
அரசாங்கம் என்பது வாஷிங்டனது கட்டளையை செயற்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க அடிவருடிகளின் கூட்டத்தை
தவிர வேறொன்றுமில்லை. புதிய பொம்மை ஆட்சியை நிறுவுவதில் உதவுவதில் ஐ.நா ஈடுபடுவதற்கான முடிவால் ஒரு சிறிய
மாற்றம் கூட ஏற்படப்போவதில்லை. ஈராக்கின் எண்ணெய் வளத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் கையகப்படுத்தி
கொள்வதற்கு ஐ.நா- ஒரு திரைச் சீலையாகத்தான் பயன்படும்.
ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஈராக்கில் நாடுதழுவிய கிளர்ச்சி
தோன்றியிருக்கிறது. பல்லூஜா மற்றும் நஜாப் நகரங்களை சுற்றிவளைத்துக் கொண்டு, அமெரிக்கா எதிர்ப்பு இயக்கத்தை
இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்க முயற்சி செய்வதால் நூற்றுக்கணக்கான ஈராக் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள்
கொல்லப்பட்டு வருகின்றனர்.
நஜாப் நிலவரம் குறிப்பாக ஸ்பெயின் நாட்டு அரசாங்கத்திற்கு கவலையளிப்பதாக உள்ளது.
அதன் 1,300 துருப்புக்களில் மிகப்பெரும்பாலோர் அங்கு உள்ளனர். பல வாரங்களாக, அமெரிக்கத் துருப்புக்கள் இந்த
நகரை சுற்றிவளைத்துக் கொண்டிருக்கின்றன. அங்கு அல்சதரும் அவரது பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களும்
ஷியாக்களுக்கு உலகிலேயே மிகப்புனிதமான இடம் என்று கருதப்படும் இமாம் அலி சமாதி அருகே மிகுந்த பாதுகாப்போடு
உள்ளன.
நஜாப்பிற்கு எதிராக மற்றொரு கொடூரமான தாக்குதலை நடத்துவற்கு அமெரிக்கா
திட்டமிட்டு வருகிற நேரத்தில், Zapatero
ஸ்பெயின் துருப்புக்கள் ஈராக் புதைசேற்றில் ஆழமாக ஈடுபடுகின்ற சூழ்நிலை
ஏற்பட்டு உள்நாட்டில் மக்களது எதிர்ப்பை மேலும் கொளுந்துவிட்டு எரியச்செய்யும் என்று கருதுகிறார்.
தனது முந்திய பிரதமர் ஜோஸ் மரியா அஸ்னர் போரை ஆதரிக்க முடிவு செய்ததை
ஸ்பெயின் நாட்டு மக்கள் எதிர்க்கின்றனர் என்பதை தெரிந்துகொண்டு தேர்தலில் துருப்புக்களை விலக்கிக்கொள்வதாக
தான், அளித்த உறுதிமொழியை நிறைவேற்றப்போவதாக
Zapatero அறிவித்தார்.
''ஆழமான ஜனநாயக தீர்மானங்களால் உந்தப்பட்டு செயல்பட்டு வருகின்ற அரசாங்கம்
மக்களது விருப்பத்திற்கு விரோதமாக மற்றும் புறம்பாக செயல்பட விரும்பவில்லை'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆயினும், PSOE
அரசாங்கம் இதரவழிகளில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாக செயல்படுமென்று தெளிவுபடுத்தியுள்ளது. ஜூன் 30-
கடைசித் தேதிக்கு ஈராக்கை தயாரிப்பதற்கு ஐ.நா- அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தால் செய்யப்படும் முயற்சிகளை
தான் ஆதரிக்கப்போவதாக Zapatero
குறிப்பிட்டார். ஈராக்கிலிருந்து தனது படைகளை திரும்ப அழைத்துக்கொண்டதற்கு பதிலாக ஆப்கானிஸ்தானுக்கு தனது
படைகளை இரட்டிப்பாக்க முன்வந்திருப்பதாய் அரசாங்கமும் கூட சுட்டிக்காட்டி இருக்கிறது.
ஈராக்கில் இராணுவமல்லாத ஒத்துழைப்பு ஸ்பெயின் ஈடுபடுவது குறித்து பேச்சுவார்த்தை
நடத்துவதற்காக வெளியுறவு அமைச்சர் Miguel Angel
Moratinos வாஷிங்டன் சென்று அரசுத்துறை செயலர் கொலின் பவல்
மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கோண்டலீசா ரைஸ் ஆகியோரைச் சந்திக்கிறார்.
ஜூன்-13-ல் நடைபெறவிருக்கின்ற ஐரோப்பிய தேர்தல்களுக்கு முன்னர் ஈராக்கிலிருந்து
ஸ்பெயின் துருப்புக்கள் வெளியேற வேண்டும் என்று அவர்கள் விரும்புவதாக அரசாங்க அதிகாரிகளால் மேலும் கருத்து
வெளிப்படுத்தப்பட்டது. மக்கள் கருத்துக் கணிப்பு Zapatero
அறிவிப்பிற்கு அபரிமிதமான மக்கள் ஆதரவு இருப்பதாக பதிவுசெய்தது.
Zapatero -வின் முடிவிற்கு பாப்புலர்
கட்சியைத்தவிர நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் வேறு எல்லாக்கட்சிகளும் ஆதரித்தன. அஸ்னர்
உரையாற்றும்போது ஸ்பெயின் துருப்புக்களை ஈராக்கிலிருந்து விலக்கிக் கொள்வது பயங்கரவாதிகளுக்கு வெற்றி தருவதாகும்
என்றார். "அது பயங்கரவாதிகள் தங்களது நோக்கத்தில் வெற்றிபெற்றுவிட்டதாக கருதும் ஒரு செய்தியாக இருக்கும்.''
"பயங்கரவாதிகள் பெறவேண்டிய ஒரே செய்தி அவர்கள் முறியடிக்கப்பட போகிறார்கள் எனபதுதான்'' என்று
பாக்ஸ் நியூஸ் சன்டேக்கு பேட்டியளிக்கும்போது அஸ்னர் கூறினார்.
ஸ்பெயின் பத்திரிகைகள் பொதுவாக படைகளை விலக்கிக்கொள்ளும் முடிவை வரவேற்றன.
El pais
ஈராக்கில் ''லெபனான்'' போன்ற நிலவரம் உருவாகியிருப்பதாக வர்ணித்தது.
Catalan
செய்திப்பத்திரிகையான La Vanguardia
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடவடிக்கைகள் மத்திய கிழக்கு முற்றிலும் ஸ்திரமற்ற நிலைமையையே உறுதிப்படுத்துகின்றன
என்று குற்றஞ்சாட்டின.
Zapatero முடிவு அஸ்னர் ஸ்பெயின் நாட்டின்
ஐரோப்பிய உறவுகளை பாதிக்கிற வகையில் வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகள் வைத்திருந்ததை திருத்துவதாக
அமைந்திருக்கிறது என்று கருதப்படுகிறது. ஈராக் தாக்குதலில் அமெரிக்காவிற்கு அவர் தந்த ஆதரவு (ஐரோப்பிய ஒன்றிய)
உறுப்பினர்களுக்கிடையே ஒரு பிளவை" ஏற்படுத்தியது அவர் "தனது நாட்டை தன்னைத்தானே மெச்சிக்கொள்ளும் முக்கியத்துவம்
வாய்ந்ததாக ஆக்கினார். அதன்விளைவாக, பெரும்பாலும் பொருத்தமற்ற அட்லாண்டிற்கு அப்பாற்பட்ட புரோக்கராகவே
ஸ்பெயின் மாற்றப்பட்டுவிட்டது" என்று பிரிட்டன் பைனான்சியல் டைம்ஸ்க்கு அஸ்னர் கருத்தை தெரிவித்துள்ளார்.
"EU- ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஸ்பெயினின் உறவுகளை மீண்டும் நிலைநாட்டுவதே
திரு. சப்பாத்தெரோ (Zapatero) வின் அதிமுன்னுரிமை நடவடிக்கையாக
இருக்க வேண்டும்" என்று அது தொடர்ந்து கூறியது.
அதன் பங்கை பொறுத்தவரை, புஷ் நிர்வாகம்
Zapatero அறிவிப்பின்
முக்கியத்துவத்தை அமுக்கி வாசிக்கவே முயன்றது. அஸ்னார்-ஐ பதவியிலிருந்து விரட்டிய மக்கள் ''கோழைகள்'' என்றும்
''பயங்கரவாதிகளுக்கு விட்டுக்கொடுத்துச் செல்பவர்கள்'' என்றும் வர்ணித்த, தேர்தல்களின் போது அந்நாட்டு மக்களுக்கு
எதிராக அமெரிக்க பத்திரிகைகளில் வெளிவந்த ஆவேச மற்றும் அவதூறு கண்டனங்கள் எதுவுமில்லை.
தற்போது ஈராக்கில் நிலவரம் மோசமடைந்து கொண்டிருப்பதையும் ஐ.நா-வுடன்
பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருப்பதையும் எடுத்துக்கொண்டால், இந்த சூழ்நிலையில் அமெரிக்க நிர்வாகம் சுடுசொற்களை
வீசி விமர்சனம் செய்வதற்கு ஏற்ற தருணமல்ல என்று கருதுகிறது. அதற்குப் பதிலாக அமெரிக்க அதிகாரி
Ken Lisaius கருத்து தெரிவிக்கும்போது, ''பயங்கரவாதத்திற்கு
எதிரான போர் புரிவதிலும், ஈராக் மக்களுக்கு சுதந்திரம் பெற்றுத்தருவதிலும் ஒவ்வொரு நாடும் அதன் சொந்த முடிவை
மேற்கொள்ளவேண்டும்'' என்றார். அமெரிக்கா தனது ''நேட்டோ சகாவான ஸ்பெயினுடன் நெருக்கமான உறவுகொண்டு
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் புரியும்'' என்று தெரிவித்தார்.
அதேபோன்று, பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேயர் அரசாங்கம் ஸ்பெயின் படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டது
பற்றி வருத்தம் தெரிவித்தாலும், ''நாங்கள் ஸ்பெயின் அரசாங்கத்தின் முடிவை மதிக்கிறோம்'' என்று அறிவித்தது.
அப்படியிருந்தாலும் அந்த முடிவு புஷ் நிர்வாகத்திற்கு பேரிடியாகும். ஏனென்றால் அது ஸ்பெயினை
முக்கிய சகாவாக கருதியது. குடியரசுக்கட்சி, செனட்டர்
John Warnar இந்த முடிவு ''தொந்தரவளிப்பது'' என்று கூறினார்.
''இராணுவ நிலவரம் இதை ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவிற்கு இருந்தாலும் இந்த முடிவினால் மற்ற நட்பு நாடுகளும் இதில்
சேருவதற்கு நிர்பந்தத்திற்கு உள்ளாகும்'' என்று நிருபர்களிடம் அவர் குறிப்பிட்டார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, திவானியாவிலும், நஜாபிலும் உள்ள ஸ்பெயின் துருப்புகளுக்கு
எதிராக நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் என்று அல்- சதர் கேட்டுக்கொண்டதை அல் ஜெசீரா
தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அவரது பேச்சாளர் Qais
al Jazaali வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''ஈராக் மக்களுக்கு எதிராக
ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பார்களானால் அவர்கள் வெளியேறிச் செல்லுகிற வரை ஸ்பெயின் துருப்புக்களுக்கு
முழு பாதுகாப்பு அளிக்கப்படும். ஸ்பெயினை போன்று ஈராக்கிற்கு கூட்டணியின் பாகமாக படைகள அனுப்பிய மற்ற நாடுகளும்
தங்களது படையினரின் உயிரைப் பாதுகாக்கும்பொருட்டு படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்."
ஸ்பெயின் நாட்டுப் போர்வீரர்களோடு ஒத்துழைத்து செயல்பட்டு வரும் ஹோண்டுராஸ், எல்
சல்வடோர், டொமினிக்கன் குடியரசு மற்றும் நிகராகுவா அரசாங்கங்களாலும் ஒரு முடிவு விரைவில் எடுக்கப்படுமென்று
எதிர்பார்க்கப்படுகிறது. |