World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ரஷ்யா மற்றும் முந்தைய USSR Threat of civil war hangs over Georgia ஜோர்ஜியா நாட்டில் உள்நாட்டுப் போர் மூளும் அபாயம் எழுகிறது பகுதி 2 By Simon Whelan இது, ஜோர்ஜியா நாட்டிற்குள் காணப்படும் பெருகிய அழுத்தங்கள் பற்றிய இருபகுதிகள் கட்டுரையின் இரண்டாவது முடிவுக் கட்டுரையாகும். முதல் பகுதி ஏப்ரல் 15 அன்று (ஆங்கிலத்தில்) பிரசுரிக்கப்பட்டது. வாஷிங்டனின் குடியரசுக் கட்சி நிர்வாகத்தின் ஆதரவுடன், சாகேஷ்விலி, காஸ்பியன் எண்ணெய் கப்பலில் ஏற்றப்படும் முக்கிய இடங்களில் ஒன்றான படூமி எண்ணெய் நிலையம், மற்றும் துறைமுகத்தின் கட்டுப்பாட்டைத் தன்னுடைய கைக்குள் கொண்டுவரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மார்ச் கடைசியில் பாராளுமன்றத் தேர்தல்கள் தொடங்குவதற்கு சில தினங்கள் முன்பு, அபஷிட்ஜே, சாகேஷ்விலியையும் அவருடைய கோஷ்டியையும் கருங்கடல் பகுதியில் வாக்குளுக்காக பிரச்சாரம் செய்ய மறுத்ததின் மூலம் கிட்டத்தட்ட ஆயுதமேந்திய பூசல் ஜோர்ஜியாவில் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. வாஷிங்டனும், மாஸ்கோவும் தலையிட்டதின் பேரில்தான் இந்த ஆயுதமேந்திய பூசலும், உள்நாட்டுப் போர் ஏற்படும் நிலையும் தவிர்க்கப்பட்டன. ஆனால் இந்தக் கருத்துவேறுபாட்டிற்கு அமைதியான முறையில் நீண்ட காலத் தீர்வு இருப்பதாக காண்பதற்கில்லை. அபஷிட்ஜேக்கு, தன்னுடைய ஆட்சியில் இருந்து பிரிந்து சென்ற பகுதிகளை மீட்கும் சாகேஷ்விலியின் பணி அவரது படைக்கான நிலமானியத்தை முடிவுக்கு கொண்டுவரும் என்பது தெரியும். அவர் ஒன்றில் டிபிலிசிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும் இல்லாவிடில் கொலைசெய்யப்பட்டுவிடலாம் அல்லது சிறையில் அடைக்கப்பட்டுவிடலாம். பலமுறையும் அபஷிட்ஜே, அட்ஜாரியாவில் வாக்குகளில் மோசடியைச் செய்து தன்னுடைய Revival Party உடைய நலனுக்காகப் பயன்படுத்தியுள்ளார். பழைய ஜனாதிபதியான எடுவார்ட் ஷெவர்ட்நாட்சே, இராணுவமுறையில் வலுவற்றிருந்ததால் இப்பகுதியை தேசியவழிக்கு கொண்டு வரமுடியவில்லை. மத்திய தேர்தல் குழுவின் தலைவரான ஷியாபெரஸ்விலி, அஜேரியத் தேர்தல் முறையில் கடுமையான மீறல்கள் உள்ளன என்று அறிவித்திருந்தபோதிலும், சாகேஷ்விலியின் தேசிய இயக்கமும் இந்தப் பிரிந்து சென்றுள்ள குடியரசிலும் பெரும் வெற்றி அடைந்ததாக கூறப்படுகிறது. சாகேஷ்விலி ஒரு வாஷிங்டன் ஆதரவாளராக இருந்து, பொருளாதாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாலும், இராணுவமுறையில் நேட்டோவின் பாலும் திசைமுகப்படுத்தப்பட்டுள்ளார். பழைய ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை சேர்ந்த அபஷிட்ஜே, மாஸ்கோவின் பற்றாளராக இருக்கிறார்; படைத்தலைவர்களில் தீவிரமான போக்கு உடைய சிலர் அமெரிக்கர் இப்பகுதியில் இருப்பதை எதிர்ப்பதுடன் இப்பகுதியை தங்கள் இல்ல கொல்லைப்புறம் போல்தான் நினைக்கின்றனர். BBC இடம், Georgian Foundation for Strategic and Intgernational Studies உடைய தலைவர் அலெக்சாந்தர் ரோண்டேலி பேசியபோது, "ஜோர்ஜியாவில் பூசல்கள் எழலாம், இரத்தம் சிந்தப்படலாம். மிஸ்டர் அபஷிட்ஜே எவ்வளவு முயன்றும் தன்னுடைய அதிகாரத்தை தக்க வைக்க முயற்சி செய்வார் என்றுதான் நினைக்கிறேன். அவருடைய செல்வாக்கு முடிந்துவிட்டது என்பதை அவர் இன்னும் உணரவில்லை" என்றார். அட்ஜேரியனில் வராமல் தடுக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் முறையில், சாகேஷ்விலி, படூமியை முற்றுகையிடுமாறு தன்னுடைய கடற்படைக்கு உத்திரவு இட்டார். ஆனால் அபஷிட்ஜேயின் பணம் காய்க்கும் மரத்தை நெறித்ததின்மூலம், ஜோர்ஜிய ஜனாதிபதி தன்னுடைய நாட்டின் பொருளாதார நலத்தையும், தெற்கு காகசஸ் பகுதியின் பொருளாதார நலத்தையும் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தியூள்ளார். படூமி, ஜோர்ஜியாவின் இரண்டாம் பெரிய கடல்வழித் துறைமுகம் ஆகும்; நிலத்தால் சூழப்பட்டுள்ள ஆர்மினியாவிற்கும், தெற்குப்பகுதிக்கும் இது ஊறு விளைவிக்கும்; ஏனெனில் இவற்றின் எல்லைகள் துருக்கியோடும் அஜெர்பைஜானுடனும் 1991ல் இருந்தே மூடப்பட்டுவிட்டன. இப்படி இருபுறமும் பூசல்கொண்டுள்ள நிலையில், இருகட்சிகளுமே பொருளாதார, ராஜதந்திர அழுத்தங்களுக்கு உட்பட்டதால், சாகேஷ்விலியும் அபஷிட்ஜேயும் படூமியில் சந்தித்தனர். இரு ஆதரவாளர்களுக்கு இடையேயான உரையாடலின் சில பகுதிகள் ஜோர்ஜியா விவகாரங்கள் தொடர்பான ஒரு குறிப்பையும் எவ்வாறு அதன் செல்வந்தத் தட்டினர் தங்கள் வேலையைச் செய்கின்றனர் என்பது பற்றிய ஒரு பார்வையையும் கொடுக்கிறது. அமெரிக்கா மிகையில் சாகேஷ்விலியிடம் பரிவு காட்டுவதின் காரணம் அவர் மிகுந்த அமெரிக்க சார்பு கொண்டிருத்தல், தடையற்ற சந்தை முறைக்கு பெரும் ஆதரவாளர் என்பது மட்டும் இல்லாமல் மற்றவரை மிரட்டி வேலைவாங்கும் ஆற்றலும் உடையவர் ஆவார். தகவல்களின்படி, அபஷிட்ஜே தன்னுடைய உயிருக்கு மன்றாடும் நிலைக்கு தள்ளப்பட்டார். "என்னை கொல்ல ஏற்பாடு செய்யமாட்டேன் என்று உறுதிகொடுங்கள்" என்று சாகேஷ்விலியிடம் அவர் மனமுருகிக் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. சாகேஷ்விலியின் உயர்வு தவிர்க்கமுடியாது என்று ஒப்புக்கொள்ளக் கூடிய அளவிற்கு அபஷிட்ஜே ஒன்றும் பயந்துவிடவில்லை. மார்ச் 31 அன்று அவர் பகுதி தன்னாட்சி உடைய குடியரசில் "அட்ஜேரிய மக்கள் எவருக்கு ஆதரவு கொடுப்பர் என்பதை தீர்மானிக்க" ஒரு வாக்கெடுப்பை நடத்தப்போவதாக அறிவித்தார். அபஷிட்ஜேயின் Revival Union கட்சி, தொடக்கத்தில் கொள்ளவேண்டிய 7 சதவிகிதத்திற்கு கூடுதலான வாக்குகளை பெறாததால் ஜோர்ஜிய பாராளுமன்றத்தில் இடம்பெறவில்லை. ஆனால் டிபிலிசி நிர்வாகம் தேர்தல் முடிவுகளை திரித்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்குப் பதில் கூறும் வகையில் டிபிலிசியில், நீதித்துறை மந்திரி கியோரி பெளஷ்விலி, நாட்டின் அரசியலமைப்பின்படி ஒரு பகுதியில் மட்டும் வாக்கெடுப்பு நடத்துவது செல்லாது என்றும் ஏதேனும் நடத்தப்பட்டது என்றால் அது சட்டவிரோதமானது என்றும் அறிவித்துவிட்டார். பாக்கு-டிபிலிசி-செய்கன் எண்ணெய் குழாய்த்திட்டம் முடியும் வரை, அஜெர்பைஜானிலிருந்து எண்ணெய் இரயில் வழி மூலம், காகசைக் கடந்து படூமின் கருங்கடல் துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து மேலைச் சந்தைகளுக்கு நீர்ப்போக்குவரத்து மூலம் எடுத்துச்செல்லப்படும். 1883ம் ஆண்டு ரோத்சைல்ட்கள் அஜெர்பைஜானின் கிழக்கு காஸ்பியன் கடற்கரையிலிருந்து படூமிக்கு ஒரு இரயில் பாதையை நிறுவ நிதியுதவி அளித்தனர். இது படூமியை வரலாற்றில் முதல் எண்ணெய் துறைமுகமாக ஆக்கியது; அப்பொழுது ஜான் டி. ராக்பெல்லருடைய Standard Oil க்கு இது தீவிரப் போட்டியை எற்படுத்தியது; அந்நிறுவனம் அதுவரை உலக எண்ணெய் தொழிலில் கிட்டத் தட்ட ஏகபோக உரிமையைக் கொண்டிருந்தது. படூமியின் முக்கியத்துவம் அப்பொழுது அந்த அளவில் இருந்ததால், அப்பொழுது இங்கிலாந்தின் வெளியுறவு மந்திரியாக இருந்த ஏகாதிபத்தியவாதி பால்பர் பிரபு 1918ல் "காகசஸ் பகுதியில் எனக்கு இருக்கும் ஒரே அக்கறை, பாக்குவிலிருந்து படூமியைத் தொடர்பு படுத்தும் இரயில் வழிதான். உள்ளூர் மக்கள் ஒருவரை ஒருவர் வெட்டித் துண்டம் போட்டுக்கொண்டாலும் எனக்கு அதைப்பற்றி அக்கறை கிடையாது" என்று கூறியிருந்தார். ஒரு டேனிஷ்-பிரிட்டிஷ் வணிகரான Jan Bonde Nielsen அட்ஜேரியா உண்மையில் விடுதலை அடைவதற்கு, ஜோர்ஜிய விடுதலைக்குப்பின் படூமியில் கருங்கடல் எண்ணெய் நிலையம் அமைக்கப் பண உதவி செய்தார். அபஷிட்ஜேயின் பாதுகாப்பில், அட்ஜேரியா ஒரு கலவையான முதலீட்டாளர்களை ஈர்த்தது; இதில் மோட்டார் கார் உற்பத்தியாளர் ஜோர்ஜ் வான் ஒபெல், அமெரிக்க அரசாங்கம், மாஸ்கோ மேயர் யூரி லுழ்கோவ், ஹிலாரி கிளின்டனுடைய சகோதரர்களில் ஒருவர், மற்றும் தீமை நிறைந்த ரஷிய வணிகர்களில் பலர் என்று அடங்குவர். நீல்சன் கிட்டத்தட்ட $62 மில்லியன் டாலர்களை 1999ல் துறைமுகத்தை சீரமைத்துக் கட்டுவதற்கு உதவிய பின்னர், பெரும்பான்மை உரிமை பெற்றபின் எண்ணெய் அனுப்பும் கட்டணத்தை நான்கு மடங்கு உயர்த்தினார். இன்னும் ஒரு $9 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யவேண்டும் என்ற அவருடைய திட்டங்கள் அரசியல் நிகழ்வுகள் கொந்தளிப்பில் இருப்பதால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அட்ஜேரிய, ஜோர்ஜிய பொருளாதாரங்ஙளுக்கு புதுப்பிக்கப்பட்ட நிலையத்தின் முக்கியத்துவம் ஜோர்ஜிய இன்டர்நேஷனல் ஆயில் கம்பெனியின் கணக்குகளில் இருந்து தெரியவரும். அவர்களுடைய கணக்கின்படி, படூமி 12 மில்லியன் டன்கள் எண்ணையை தன் துறைமுகத்தின் மூலம் வெளியே அனுப்புகிறது; ஜோர்ஜியாவின் மற்ற பகுதிகள் அனைத்தும் சேர்ந்து 7 மில்லியன் டன்கள்தாம் அனுப்புகின்றன. இந்த நிலையம் அட்ஜேரியப் பொருளாதாரம் உறுதித் தன்மை பெறுவதற்கு கொடுக்கும் அளிப்பு, ஜோர்ஜியாவின் மற்ற பகுதிகளில் பொறாமையை தூண்டிவிட்டுள்ளது. அட்ஜேரியாவின் வணிகத்தன்மை நிரம்பிய இடம் இன்றும் உலக முக்கியத்துவம் வாய்ந்தது. வாஷிங்டனுடைய ஆலோசனையின் பேரில் எண்ணெய்ப் போக்குவரத்தை ரஷியா அல்லது ஈரான் மூலம் மேற்கொள்ளாத பெருநிறுவனங்களுக்கு, மேலைச்சந்தைகளுக்கு அதிக அளவு எண்ணெய் ஏற்றுமதிகளை கையாளக்கூடிய இடங்களில் படூமியும் ஒன்றாகும். பாக்கு-டிபிலிசி-செய்கன் (BTC) எண்ணெய்க் குழாய்த் திட்டம் முடிவடையும் நிலையில் இருந்தாலும், படூமியின் எண்ணைய் நிலையத்தில் 6.6 சதவிகிதத்தை கையாளும் ஸ்விஸ் தளத்தை கொண்டுள்ள Mctrustco முதலீட்டாளர்களான Leibundgut போன்றார் காஸ்பியன் நாடுகளில் உயரும் எண்ணெய் உற்பத்தி, படூமி நிலையத்தை முழுத்திறனில் இயங்கவைக்கும் என்ற கருத்தைத்தான் கொண்டுள்ளன. B-T-C எண்ணெய் குழாய்த்திட்டத்தின் பின்னணியில் அமெரிக்க அரசாங்கம் பெரும் சக்தியாக உள்ளபோதிலும், அமெரிக்க மூலதனமும் பெரும் பங்கை அட்ஜேரியாவில் கொண்டுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் Overseas Private Investment Corp, Great Circle Capital LImited எனும் நிறுவனம் ஊடாக படூமி எண்ணெய் நிலையத்தின் உரிமை நிறுவனமான Naftatransல் 11 சதவிகிதப் பங்கை கொண்டுள்ளது. Jan Bonde Nielsen குறைந்தது Naftatrans-ல் குறைந்தது 80 சதவிகித உரிமையாவது கொண்டுள்ளார். சிலநேரங்களில், துயரத்துடன் "அமெரிக்கர்கள் முதலீடுகளை இங்கு கொண்டுள்ளார்கள், ஆனால் எனக்கு அரசியலில் உதவுவதே இல்லை" என்று அபஷிட்ஜே புலம்பியுள்ளார். சாகேஷ்விலி முதலில் வாஷிங்டனை கலந்து கொள்ளாமல் ஜோர்ஜியாவில் எதையும் செய்யமாட்டார் என்பதை அபஷிட்ஜே அறிவார். அட்ஜேரிய எதேச்சாதிகாரி சமீபத்தில் அமெரிக்க தூதரும் ஜோர்ஜியாவை ஆளுபவர்களை நிர்ணயிப்பவரும் ஆகிய ரிச்சார்ட் மைல்ஸை சந்தித்த பிறகு இவ்வாறு கூறினார். வாஷிங்டனும் மாஸ்கோவும், ஜோர்ஜியாவில் இவ்வாறு ஒரு மறைமுகப் போரை நடத்திக் கொண்டு இருக்கின்றன. ஒருபுறத்தின் சாகேஷ்விலி அட்ஜேரியாவை கட்டுப்படுத்தவும், தேவையானால் வலிமையைப் பயன்படுத்திக்கூட பிரிந்து சென்றுள்ள தெற்கு ஒசேடியா மற்றும் அப்காஜியா ஆகியவற்றையும், இறுதியில் மீண்டும் முழு இணைப்பிற்குள் கொண்டுவர அதிக அழுத்தத்தை பெறுகிறார். இது B - T - C எண்ணைய் குழாய்த்திட்டம் திறனுடைய வகையில் செயல்பட இன்றியமையாதது ஆகும். இதற்கு மறுபுறம், மாஸ்கோ ரஷியாவின் பொருளாதாரத்தில் இந்த எண்ணைய் குழாய்த்திட்டம் வந்தால் ஏற்படும் பாதிப்புக்ளை பற்றிய கவலையைக் கொண்டும், அதைவிட அடிப்படையில் அமெரிக்க இராணுவம் பழைய சோவியத் ஒன்றியம், பொதுவாக யூரேசியா இவற்றில் ஊடுருவதலை பற்றியும் கவலை கொண்டுள்ளது. வாஷிங்டன் டிபிலிசியில் அரசாங்கதை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளபோது, ரஷியா ஒரு இராணுவ படைமுகாமை படூமியில் வைத்துள்ளது; மேலும் அது படைவீரர், படைக்கலங்களை இவற்றை அம்மாநிலம் வழியாக மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்ல டிபிலிசியைக் கேட்க வேண்டிய தேவையும் இல்லை. மாஸ்கோ, படூமியையும், மற்ற ஆர்மீனிய, ஜோர்ஜியாவின் மற்றப்பகுதியில் உள்ள ரஷிய தளங்களுக்கு தளவடாங்களை அனுப்பவும் பயன்படுத்துகிறது. ரஷிய அரசாங்கம் சமீபத்தில் நான்கு T-72 பீரங்கிவண்டிகளை அபஷிட்ஜேக்கு வழங்கியுள்ளது. வாஷிங்டன் B-T-C எண்ணெய்க்குழாய் திட்டத்தில் செய்துள்ள முதலீடு, ஜோர்ஜிய பகுதிவழியேயும் செல்லும்; இப்பொழுது அதற்கு கூடுதலான சிக்கல் OPEC அதிகமாக எண்ணெய் விலையை உயர்த்துவதின் மூலமும் வந்துள்ளது. குடியரசுக் கட்சியின் நிர்வாகம், OPEC இல்லாத மற்ற எண்ணெய் ஆதாரங்களை கொள்ளுவதற்கு, அதாவது காஸ்பியன் பகுதி எண்ணெய் வளம் போன்றவற்றை பெற்றால் விலையைக் குறைக்க அது கருவியாகும் என்று கருதுகிறது. உண்மையில், அமெரிக்காவில் பெட்ரோலின் விலை புஷ்ஷின் மறுதேர்தல் பிரச்சாரத்தில் ஒரு பிரச்சினையாக உருவெடுக்கக் கூடும் அபாயத்தில் உள்ளது. 1980களுக்கு பிறகு மிக உயர்ந்த அளவில் பெட்ரோல் விலை கூடியுள்ளது. எண்ணெய் உற்பத்தியை பெருக்குவதில் மிக முக்கியமான முடிவெடுக்கும் நிலை, எண்ணெய் விலை அமெரிக்க டாலரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு நிர்ணயம் பெறும்; சர்வதேச நாணய சந்தையிைல் அமெரிக்க டாலரின் சரிவு OPEC உறுப்பினர்களுக்கு கிடைக்கும் எண்ணெய் வருமானத்தின் உண்மை மதிப்பை குறைத்துவிட்டது. அண்மையில் உற்பத்தி வெட்டு, உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடான செளதி அரேபியாவால் ஆதரிக்கப்பட்டது; வல்லுனர்களின் மதிப்பீட்டின்படி இது சுத்திகரிக்கப்படாத எண்ணைய் விலையை பீப்பாய் ஒன்றிற்கு $40 க்கும் மேலாக உயர்த்தும் என கருதப்படுகிறது. |