World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Egypt's President Mubarak comes to the aid of Bush

எகிப்தின் ஜனாதிபதி முபாரக் புஷ்ஷின் உதவிக்கு வருகிறார்

By Chris Marsden
15 April 2004

Back to screen version

ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு பரவலான எதிர்ப்பு ஏற்பட்டிருப்பதால் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் கடுமையான சிக்கலில் உள்ள ஒரு மனிதராக காணப்படுகிறார். ஈராக் மக்களது, எழுச்சியை கொடூரமான ஒடுக்கு முறைகளால் அடக்கி ஒடுக்குவதில் அவர்களது சம்மதத்தை வென்றெடுக்கும்பொருட்டு தனது மிக நெருக்கமான மற்றும் நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளை தனது பக்கம் வென்று எடுப்பது அவரது முதல் நடவடிக்கையாக இருந்து வருகிறது.

இந்தக் காரணத்தினால், இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன், பிரிட்டனின் டோனி பிளேயர் ஆகியோரது அமெரிக்க விஜயம் மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவம் பெருகிறது. எகிப்து ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கிற்கு ஏப்ரல் 12-ந் தேதி வரவேற்பளிக்கப்பட்டது. ஏப்ரல் 21-ந்தேதி ஜோர்டான் மன்னர் இரண்டாவது அப்துல்லா அமெரிக்காவிற்கு வருகிறார்.

அமெரிக்க நிர்வாகத்தை எதிர்நோக்கியுள்ள நெருக்கடிக்கு முபாரக் தந்துள்ள பதில் அரபு முதலாளித்துவம் முழுவதுமே எந்த அளவிற்கு மிகக்கீழான பங்களிப்பை செய்து வருகின்றன என்பது பற்றிய ஆய்வை வழங்குகிறது. மத்திய கிழக்கில் தனது சூறையாடும் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக, தனது எகிப்திய கூட்டாளியிடமிருந்து இரண்டு உறுதிமொழிகளை புஷ் கோருகிறார். ஈராக் மக்கள் மீது மேற்கொள்ளுகின்ற இரத்தக்களரி ஒடுக்குமுறையை எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும் மற்றும் பாலஸ்தீன இண்டிபடாவை ஒடுக்குவதற்கு ஷரோன் மேற்கொண்டுள்ள முயற்சிகளுடன் தனது வெறுக்கத்தக்க சூழ்ச்சிகளை அங்கீகரிக்க வேண்டும்.

இந்த இரண்டு வகைகளிலும் முபாரக் அவரை ஏமாற்றி விடவில்லை.

டெக்சாஸ், க்ராபோர்ட் தோட்டத்தில் ஜனாதிபதியுடன் விருந்துண்டு மதுபானங்களை அருந்தியதுடன் புஷ்ஷூவுடன் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார். மத்திய கிழக்கு விவகாரங்கள் குறித்து தங்களது பொதுக்கருத்தை வலியுறுத்தும் கூட்டறிக்கையை வெளியிட்டார்.

ஈராக்கில் பலியான மக்கள் இந்த மாதம் மட்டுமே 1000-த்தை நெருங்கி கொண்டிருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இதுவரை ஈராக்கில் 10,000 மக்கள் பலியாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் உலக ஊடகங்களுக்கு முபாரக் தந்துள்ள கருத்து ''ஈராக்கில் நடக்கும் நிலவரங்கள் குறித்து ஜனாதிபதியிடம் எங்களுடைய கடுமையான கவலைகளை நான் தெரிவித்தேன். குறிப்பாக, அந்த பகுதியில் பாதுகாப்பு மற்றும் மனிதநேயம் குறித்தும் தெரிவித்தேன்'' என்று விளக்கினார்.

அதற்குப்பின்னர் முடிந்தவரை ஈராக் இறையாண்மையை திரும்ப ஒப்படைக்கவேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அதேநேரத்தில் எல்லைப்புற ஒருமைப்பாட்டை காக்கவேண்டிய அவசியத்தையும் குறிப்பிட்டார். இது ஜூன் 30-ந்தேதி வாஷிங்டன் தேர்ந்தெடுத்துள்ள பொம்மை நிர்வாகத்திடம் சம்பிரதாய முறையில் அதிகாரத்தை ஒப்படைப்பதை முபாரக் ஏற்றுக்கொள்வதற்கு மாறாக ஒன்றுமில்லை. ஐ.நா-விற்கும் அதன்மூலம் இதர ஏகாதிபத்திய அரசுகளுக்கும் ஈராக் நிர்வாகத்தில் பங்களிப்பு தரவேண்டுமென்று பணிவான எச்சரிக்கையோடு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் அமெரிக்க உடந்தை ஆட்சிக்கு சுதந்திரத்தன்மை எனும் மூடிமறைப்பையும், அதற்கு நியாயம் கற்பிக்கவும் அவர் முயன்றிருக்கிறார்.

அத்தகைய வெற்றுரைகள் குறித்து புஷ் தொந்தரவுக்குள்ளாகவில்லை. ஜனநாயகத்திற்கு மாற்றம் செய்வதற்கான முயற்சியை தடம்புரளச் செய்யவும் ''சட்டவிரோத கும்பல்களுக்கு'' எதிராக அமெரிக்க இராணுவப்படைகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ''அத்தகைய மாற்றம் இடம்பெறுவதற்கு'' உறுதி செய்துதரப்படும் என்றும் புஷ் குறிப்பிட்டார்.

பாலஸ்தீன மக்களிடமிருந்து ஒரு தலைப்பட்சமாக பிரிந்து செல்லும் ஷரோனின் திட்டத்திற்கு புஷ் அங்கீகாரம் தரவேண்டும் என்று முபாரக் பச்சைகொடி காட்டியிருப்பதும் அருவருக்கத்தக்கதாய் உள்ளது. 2005- வாக்கில் பாலஸ்தீன அரசை உருவாக்குவதற்கான அமெரிக்க ஆதரவு சமாதான ''சாலை வரைபடத்தின்'' ஒரு பகுதியாக காசா பகுதியிலிருந்து ஷரோன் தனது குடியிருப்புக்களை விலக்கிக்கொள்ள ஆலோசனை வழங்கியிருப்பது ஒரு சாதகமான அபிவிருத்தி என்று இருதரப்பினருமே அறிவித்தார்கள்.

''காசாவிலிருந்து வெளியேறுவதென்று ஷரோன் முடிவு செய்வாரானால்," அது சாலை வரைபடத்தை மாற்றியமைக்காதிருந்தால், "அது ஒரு சதாகமான அபிவிருத்தி" என்று புஷ் குறிப்பிட்டார் அதேவேளை, ''ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறும் நடவடிக்கை எதுவாக இருந்தாலும் அது மிகவும் பாராட்டத்தக்கது'' என்று முபாரக் குறிப்பிட்டார்.

''இஸ்ரேல் விலக்கிக்கொள்வதென்று முடிவு செய்யுமானால் அந்த முடிவு சாலை வரைபடத்திற்கு மாற்றாக இல்லாவிட்டால் அதில் நாங்கள் இருவரும் உடன்பட்டிருக்கிறோம். அது அந்த சாலை வரைபடத்தின் ஒரு பகுதிதான், எனவே இரண்டு-அரசு தீர்வை நோக்கி நாம் முன்னேறிக்கொண்டே இருக்க முடியும்'' என்று குறிப்பிட்டார்.

அதற்குப்பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், அமைதியான ஈராக்கை கட்டியமைக்க ஒத்துழைக்கவும், பயங்கரவாதத்தை எதிர்த்து போராடவும், மத்திய கிழக்கில் ஜனநாயக சீர்திருத்தங்களை பரப்பவும் அரபு இஸ்ரேல் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முபாரக் உறுதி பூண்டார்.

''காசா மற்றும் மேற்குக்கரையின் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேறுவது சரியான நிலைமைகளில், சாலை வரைபடம் ஜனாதிபதி புஷ்ஷின் தொலைநோக்கையும் செயல்படுத்தும் வகையில் அமையுமானால் அது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்ற நடவடிக்கையாக அமையும்'' என்று அது தெரிவிக்ககிறது.

''சாலை வரைபடம்'' பற்றிய அத்தகைய பேச்சு மற்றும் சம்பிரதாய முறை பாலஸ்தீன அரசை உருவாக்குவதற்கு ஒரு பெயரளவிலான கடப்பாட்டிற்கு ஷரோனின் திட்டங்கள் பொருத்தமாக இருக்கிறதா, அது அரபு வெகுஜனங்களை வேண்டுமென்றே ஏமாற்றவும், பாலஸ்தீனிய மக்களை அப்பட்டமாக காட்டிகொடுக்கும் நடவடிக்கையைக் கொண்டிருக்கிறதா என்பது குறித்து தெளிவான விளக்கமில்லை.

ஷரோன் ''ஒரு தலைபட்சமாக பிரிந்து செல்வது'' நிலத்தை அபகரிக்கும் செயல் என்று மிகச்சரியாக விவரிக்கப்படுகிறது. இதன் விளைவாக மேற்குக்கரை பகுதியில் 60 சதவீதத்தை இஸ்ரேலால் நிரந்தரமாக இணைத்துக்கொள்வதாகும்.

காசா பகுதியிலிருந்து 21 சியோனிச குடியிருப்புக்களை வெளியேற்றுவதற்கு அவர் முன் வந்திருக்கிறார். அது எல்லைகளை விஸ்தரிக்கும் அவரது நோக்கங்ஙகளுக்கான ஒரு மூடி மறைப்பே ஆகும். காசா பகுதியில் 7,500 யூதர்கள்தான் குடியிருக்கின்றனர். அவர்களை சுற்றி 1.3- மில்லியன் பாலஸ்தீனியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தோடு ஒப்புநோக்கும்போது, மேற்குக்கரையில் 240,000 யூதர்கள் வாழ்கின்றனர். கிழக்கு ஜெருசலேத்தையும் சேர்த்துக்கொண்டால் யூதர்கள் எண்ணிக்கை 400,000-மாகிறது. கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்குக்கரையின் பெரும்பகுதியை இணைத்து பெரிய பாதுகாப்பு வேலியை அமைப்பதற்கு ஷரோன் கருதியிருக்கிறார்.

மேற்குகரை பகுதியில் தனிமைபட்டு கிடக்கும் நான்கு குடியிருப்புக்களை நீக்கிவிட அவர் உறுதியளித்திருக்கிறார். Maale Adumim, Hebron கிரியாத் அர்பா மற்றும் மேற்கு கரைக்கு தெற்கிலுள்ள Gush Etzion வடக்கிலுள்ள எரியல், ஜெருசலத்திற்கு வடக்கிலுள்ள Givat Zeev ஆகிய ஆறு பெரிய குடியிருப்புக்களும் ''இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்குமென்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது'' இவை கூட்டாக சேர்ந்தால் இந்த வீடுகளில் 1,20,000 இஸ்ரேலியர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த முயற்சிகள் எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பாலஸ்தீன அரசை உருவாக்க முடியாதபடி செய்யும் நடவடிக்கைகளாகும். அதுதான் ஷரோனின் நோக்கமாகும். இந்த வாரம் Maale Adumim பகுதி யூத குடியிருப்பாளர்களிடையே பேசிய அவர், அவர்களது வீடுகள் "தொடர்ந்து இஸ்ரேலின் ஒரு பாகமாக கட்டி எழுப்பப்படும், எல்லையற்ற காலமாக'' என்று குறிப்பிட்டார்.

அண்மையில் Maariv-விற்கு பேட்டியளித்த அவர் பகிரங்கமாக, ''ஒருதலைப்பட்சமான இந்த திட்டத்தில் பாலஸ்தீன அரசு என்று எதுவுமில்லை. இந்த நிலமை பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்.'' என்றார்.

"மேற்குக்கரையின் பகுதிகளை மற்றும் சமுதாயங்களை இணைத்து அந்தப்பகுதிக்கு வேலி அமைக்கும்போது பாலஸ்தீனர்கள் பல கனவுகளுக்கு (பாலஸ்தீனிய) முற்றுப்புள்ளி வைக்கப்படும்.... எனது திட்டம் அவர்களை கடுமையாக நடத்துவதாகும். பாலஸ்தீனர்களுக்கு அது ஒரு மரண அடி'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக பாலஸ்தீன தலைவர் யாசிர் அராஃபத்தை படுகொலை செய்து விடுவதாக அச்சுறுத்தினார். அவரை ஒரு ''குறிவைக்கப்பட்ட மனிதர்'' என விவரித்தார்.

காசா பகுதியிலிருந்து வெளியேறுவது என்று கூறப்படும் முடிவினால் எந்த வகையிலும் இஸ்ரேலின் பிடி பலவீனமாகாது. எந்தப்பகுதியிலும், எந்தத்துறைமுகத்திலும் பாலஸ்தீனிய கட்டுப்பாடு இருக்காதென்றும் எகிப்துடன் காசா பகுதியின் தென் எல்லையை இஸ்ரேல் ரோந்து சுற்றி கண்காணிக்கும் என்றும் ஷரோன் தெளிவுபடுத்தியிருக்கிறார். காலி செய்யப்படும் சியோனிஸ்டுகளது வீடுகள்கூட அழிக்கப்படாமல் பெயர் குறிப்பிடப்படாத சர்வதேச அமைப்பு ஒன்றிடம் ஒப்படைக்கப்படும். எனவே எந்த நேரத்திலும் அது மீண்டும் ஆக்கிரமிக்கப்படலாம்.

புஷ், ஷரோனின் நோக்கங்களை மிகத்தெளிவாக அறிந்து கொண்டிருப்பவர், எனவேதான் கூட்டாக நடைபெற்ற நிருபர்கள் பேட்டியில், ''பயங்கரவாதிகள் கொல்வதற்கு அலைந்து கொண்டிருப்பார்களானால், எனது முடிவுப்படி என்றைக்கும் பாலஸ்தீனிய அரசு உருவாகாது. எனவே அந்த பிராந்தியத்தின் பரஸ்பர பாதுகாப்பு கவலைகள் தொடர்பாக நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்'' என்று அவர் எச்சரித்தார்.

ஷரோனின் காலனித்துவ கொள்கையை ஆதிரிக்கும் வகையில் கூடுதலாக ஒரு பில்லியன் டாலர்களை நிதியாக வழங்கவும் அவர் சம்மதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் கூட்டறிக்கை ஒன்றிலும், இஸ்ரேலுடன் அவர் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தக் கூட்டறிக்கையில் 1949-ம் ஆண்டு இஸ்ரேலுக்கும் அன்றைய மேற்குக்கரை பகுதியான ஜோர்டானுக்குமிடையிலான எல்லை இஸ்ரேலின் இறுதி எல்லையாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, இஸ்ரேல் ''பயங்கரவாதிகளை பின்தொடர்வதற்கு தான்'' ஏற்கனவே வெளியேறிய பகுதிகளுக்குள்ளும் செல்லலாம் மற்றும் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுக்கு திரும்ப முடியாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டு கூட்டறிக்கை வெளியிடப்படலாம்.

இந்தக் கொடூரமான நோக்கங்களை முழுமையாக அறிந்துள்ள முபாரக் எகிப்து சமாதான முயற்சிகளை மீண்டும் தொடங்குதற்கு தன்னால் முடிந்தளவிற்கு உதவுமென்று உறுதியளித்திருப்பது மட்டுமல்லாமல், பாலஸ்தீனியர்கள் ஆயுதங்களை பெறுவதைத் தடுக்கும் பொருட்டு 1967-போருக்கு முன்னர் எகிப்து நிர்வாகத்திலிருந்த காசா பகுதி எல்லையை கண்காணிக்கவும் முன் வந்திருக்கிறார். ஹமாஸ் போன்ற அதிருப்தி போராளி குழுக்களை இறுக்கி ஒடுக்குவதற்கு பாலஸ்தீனிய பாதுகாப்பு படைகளுக்கு பயிற்சி தரவும் எகிப்து முன் வந்திருக்கிறது.

எகிப்து ஆட்சிக்கு கைமாறாக கிடைப்பதென்ன? முதலில் எகிப்து சேவை செய்வதற்காக வாஷிங்டனால் விலைக்கு வாங்கப்பட்ட நாடு ஒவ்வொரு ஆண்டும் எகிப்துக்கு 2-பில்லியன் டாலர்களை அமெரிக்கா உதவியாக வழங்குகிறது. இஸ்ரேலுக்கு அடுத்து எகிப்துதான் அதிக அளவில் அமெரிக்க உதவியைப் பெறுகின்ற நாடாகும். இஸ்ரேல் 3-பில்லியன் டாலர்களை பெறுகிறது. அவற்றில் அது 2-பில்லியனை நேரடியாக இராணுவத்திற்காக செலவிடுகிறது. (ஜோர்டானின் இரண்டாவது அப்துல்லாஹ் 250-மில்லியன் டாலர்கள் பொருளாதார உதவியையும் 198- மில்லியன் டாலர்கள் இராணுவ நிதியையும் பெறுகிறார்.)

1975-முதல் எகிப்து 50-மில்லியன் டாலர்களுக்குமேல் பெற்றிருக்கிறது என்று மதிப்பிடப்படுகிறது. இதில் பெரும் பகுதி முபாரக்கிற்கும் அவரது கூட்டாளிகளுக்கும் நேரடியாக சென்றுவிடுகிறது.

ஆனால் இந்த நிதியுதவி ஏற்பாடு ஒடுக்கப்பட்ட நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் ஏகாதிபத்திய வல்லரசுகளுக்குமிடையே நிலவுகின்ற அடிப்படை உறவில் ஒரே ஒரு விளக்கிக் காட்டல்தான் நீண்ட காலத்திற்கு முன்னர் அரபு ஆட்சிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகளுக்கான ஒரு பாசாங்கை உருவாக்கின. நாசர் காலத்து அரபு மற்றும் சோசலிச பாசாங்குகள் PLO போன்ற சிதைந்த துண்டுகளை விட்டுச்சென்றுள்ளன. ஆயினும், எகிப்தை சேர்ந்தவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நல்லிணக்கத்திற்கு வந்து விட்டனர். 1976-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சோவியத் எகிப்து நட்புறவுகள் ஒப்பந்தத்தை இரத்து செய்தனர், வெளிவர்த்தகத்தில் அரசாங்கக்கட்டுப்பாடு நீக்கப்பட்டு அமெரிக்க பெரு நிறுவனங்கள் எகிப்தில் நுழைவதற்கு கதவு திறந்துவிடப்பட்டன. இறுதியாக அமெரிக்கா ஏற்பாடு செய்த Camp David பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், 1979-ம் ஆண்டு இஸ்ரேலுடன் இறுதியாக அதிகாரபூர்வமான சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

மத்திய கிழக்கிலுள்ள முதலாளித்துவ ஆட்சிகள் தங்களது செல்வமும், செல்வாக்கும் நிறைந்து வாழ்க்கைக்கு தொழிலாள வர்க்கமும், விவசாயிகளும் பெரிய அச்சுறுத்தலாக அமைவார்கள் என்று பயந்து ஏகாதிபத்திய அரசுகள், மற்றும் பூகோள பெரிய நிறுவனங்களின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிய ஆரம்பித்தார்கள். எப்போதாவது ஒருமுறை அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எதிராக ஆவேச உரைகள் வந்தாலும் எந்த ஒரு அரபு நாட்டு அரசாங்கமும் வாஷிங்டனின் மிகக்கொடூரமான அத்துமீறலுக்கு எதிராகக்கூட, உறுதியான நிலைகளை எடுக்க ஆலோசனை செய்யவில்லை. ஏனென்றால் அதன்மூலம் உருவாகும் மக்களின் சமூக இயக்கம் கட்டுப்பாட்டைமீறி சென்றுவிடக்கூடும் என்று பயப்படுகிறார்கள்.

இந்த பெருந்தொகை பெறுகின்ற அடிவருடிகள் இந்த பிராந்திய இயற்கை வளங்களையும், மக்களையும் மேற்கத்திய பெரிய எண்ணெய் நிறுவனங்கள் சுரண்டுவதற்கு முழுமையாக அனுமதிக்கின்றனர். இதற்காக அவர்கள் பெறுகின்ற தொகை அமெரிக்கா வழங்குகின்ற உதவியைவிட அதிகமாகும், எனவே அவர்கள் கொடுக்கின்ற கரங்களை கடிக்க விரும்பவில்லை. வாஷிங்டனிடமிருந்து அவர்கள் விரும்புவதெல்லாம் இன்றைய ஏற்பாடுகள் நீடிக்கவேண்டும் என்பதுதான். அதற்கு கைமாறாக இந்த சர்வாதிகார போலீஸ்-ராணுவ ஆட்சிகள் தங்களது மக்களுக்கு சுதந்திரமான ஜனநாயக பேச்சுரிமையை மறுத்து வருகின்றதன் மூலம் தங்களது சொந்த மக்களை கண்காணிக்க உறுதியளித்துள்ளன.

ஈராக் ஆக்கிரமிப்புக்கு எதிராக வீரஞ்செறிந்த போராட்டங்களை செய்பவர்களையும், பாலஸ்தீன மக்களது ஜனநாயக அபிலாசைகளை நிறைவேற்ற போராடுபவர்களையும் ஐக்கியப்படுத்தும், இந்தப் பிராந்தியத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்படுத்துவதற்கு எதிரான ஒரு வெற்றிகரமான போராட்டம் -முபாரக் மற்றும் இதர அரபு முதலாளித்துவ ஆட்சிகளின் பகுதிகளிலிருந்து அரசியல் ரீதியாக முறித்துக் கொள்வதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும். ஜனநாயக மற்றும் சோசலிச சமுதாயத்தை உருவாக்குவதற்கான பொதுப் போராட்டத்தில் மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட இயக்கத்தை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved