WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Sri Lanka: Mahinda Rajapakse to head a minority government
இலங்கை: மஹிந்த இராஜபக்ஷ சிறுபான்மை அரசாங்கத்திற்கு தலைமை வகிக்கின்றார்
By Wije Dias
7 April 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அவரது சொந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க) சிரேஷ்ட உறுப்பினரான மஹிந்த இராஜபக்ஷவை நேற்று நாட்டின் புதிய பிரதமராக
பதவிப்பிரமாணம் செய்தார். இந்த நிகழ்வு வழக்கமான ஆரவாரம் மற்றும் பாராட்டுக்களை கொண்டிருந்த
போதிலும், இராஜபக்ஷவின் பதவிப்பிரமாணம் ஆளும் வட்டாரங்களுக்கு இடையிலான கசப்பான பிளவுகளை தீர்க்கப்போவதில்லை.
இந்தப் பிளவுகள், குமாரதுங்க பெப்ரவரி 7 அன்று, தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணி
அரசாங்கத்தை பதவிநீக்க தீர்மானித்ததை அடுத்து உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது.
225 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்தில் இராஜபக்ஷவிற்கு பெரும்பான்மை கிடையாது.
ஏப்பிரல் 2 தேர்தலில், ஸ்ரீ.ல.சு.க, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் பல சிறு கட்சிகள் உள்ளடங்கிய
கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிகளவிலான ஆசனங்களை வென்றது. ஆயினும் பெரும்பான்மையை பெற
இன்னும் எட்டு ஆசனங்கள் பற்றாகுறையாக உள்ளன. ஏனைய கட்சிகளுடனான பேரம்பேசல்கள் இடம்பெறுகின்ற
அதேவேளை, சுதந்திர முன்னணி இன்னமும் மேலதிக ஆதரவை பெறவில்லை. தற்போதைய நிலைமையில் இராஜபக்ஷ
ஒரு பெரும்பான்மை அரசாங்கத்தின் தலைவராக ஆளுமை செய்யமுடியும். இந்த ஸ்திரமற்ற நிலைமை, மேலும்
அரசியல் கொந்தளிப்பிற்கு தவிர்க்கமுடியாத வகையில் வழிவகுக்கும்.
தோல்வியை ஒப்புக்கொண்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஏப்பிரல் 5
பத்திரிகையாளர் மாநாட்டில் பேசும்போது: "பாராளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மையற்ற அரசாங்கத்தை
கொண்டிருந்தால், சகலதும் நிச்சயமற்றதாகவே இருக்கும். அது சமாதான முன்னெடுப்புகளாக இருந்தாலும் சரி
பொருளாதாரமாக இருந்தாலும் சரி அல்லது நிர்வாகமானாலும் சரி," என எச்சரிக்கை செய்தார். ஐக்கிய தேசிய
முன்னணி (ஐ.தே.மு), புதிய அராசாங்கத்திற்கு சலுகை காட்டாது எனவும், "ஒவ்வொரு விடயத்திலும்" அதற்கு
ஆதரவளிப்பதா அல்லது அதை கவிழ்ப்பதா எனத் தீர்மானிக்கும், என அவர் பிரகடனப்படுத்தினார்.
இராஜபக்ஷவை பிரதமராக தெரிவு செய்தமை, சுதந்திர முன்னணியின் பங்காளிகளிடையேயான
பிளவுகளையும் ஸ்ரீ.ல.சு.க வின் உள்ளான பிளவுகளையும் மட்டுமே கோடிட்டுக் காட்டுகிறது. சிங்களப் பேரினவாத
ஜே.வி.பி உடன் ஒரு கூட்டணியை அமைக்கும் குமாரதுங்கவின் முடிவை, ஸ்ரீ.ல.சு.க வில் உள்ள இராஜபக்ஷ தலைமையிலான
பிரிவு கடுமையாக எதிர்த்தது. இராஜபக்ஷ, ஐ.தே.மு உடனான ஒரு சிறந்த கூட்டணியை அமைப்பதன் மூலம் சமாதான
நடவடிக்கைகளுடன் முன்செல்ல விரும்பினார். சுதந்திர முன்னணியின் உடன்படிக்கையின் ஒரு அங்கமாக, எந்தவொரு
சுதந்திர முன்னணியின் அரசாங்கத்திலும், எதிர்க்கட்சித் தலைவரான இராஜபக்ஷ அன்றி, குமாரதுங்கவின் முன்னாள் வெளியுறவு
அமைச்சரான லக்ஷ்மன் கதிர்காமரை பிரதமராக்குவதற்கு ஸ்ரீ.ல.சு.க உடன்பட்டுள்ளது.
கதிர்காமர், ஸ்ரீ.ல.சு.க வின் இராஜபக்ஷ பிரிவினருடனும் மற்றும் குமாரதுங்கவின்
சகோதரரான அனுர பண்டாரநாயக்க தலைமையிலான பிரிவினருடனும் உடன்பாடு கொண்டவராகும். அனுர பண்டாரநாயக்க,
ஜே.வி.பி உடனான உடன்படிக்கையை ஏற்படுத்த கடுமையாக அழுத்தம் கொடுத்தவராகும். கதிர்காமர் ஜே.வி.பி
யால் ஏற்றுக்கொள்ளக் கூடியவராகும். ஏனெனில் அவர், தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக
தடை செய்யும் சர்வதேச பிரச்சாரத்தை வழிநடத்தியவராகும். அதே சமயம், கதிர்காமர் சமாதான
பேச்சுவார்த்தைகளின் பரிந்துரையாளராகும். ஜே.வி.பி யை சேர்த்துக்கொண்டுள்ளதால், அரசாங்கம் மீண்டும்
யுத்தத்திற்கு செல்லும் என்பதையிட்டு பெரு வர்த்தகர்கள் மற்றும் பெரும் வல்லரசுகளும் கவலை கொண்டிருந்தால்
அதை சமரசம் செய்வதற்காக, குமாரதுங்க அவரைப் பயன்படுத்த முடியும்.
ஆனால், இந்த பிரச்சினை தேர்தலுக்கு முன்னதாக தீர்க்கப்பட்டிருக்கவில்லை.
சுதந்திர முன்னணியின் பிரச்சார காலத்திலும், தமது கட்சியில் பிரதமராகத் தெரிவுசெய்யப்படவுள்ளது யார்
என்பதை வெளிப்படுத்த மறுத்தது. தேர்தலை அடுத்தும் அங்கு மேலதிக தாமதம் காணப்பட்டது. பல ஊடக
அறிக்கைகளின்படி, இராஜபக்ஷவின் தீவிரமான எதிர்ப்பை அடுத்து, திங்கட் கிழமை குமாரதுங்க கதிர்காமரை
கைவிட நிர்ப்பந்திக்கப்பட்டார். அனுர பண்டாரநாயக்கவும் பிரதமர் பதவிக்காக ஒரு வெற்றியளிக்காத முயற்சியை
மேற்கொண்டார்.
இந்தப் பிரச்சினைக்குரிய காரணங்கள், ஸ்ரீ.ல.சு.க வின் நிலைப்பாட்டின் பலவீனத்தில்
இருந்து தோன்றுகிறது. ஸ்ரீ.ல.சு.க, ஜே.வி.பி உடன் கூட்டணி அமைத்துக்கொண்டதால் மட்டுமே ஐ.தே.மு வை
தோற்கடிக்க முடிந்தது. அதன் வீழ்ச்சி தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டுள்ளது. சுதந்திர முன்னணி பெற்றுள்ள 105
ஆசனங்களில், ஸ்ரீ.ல.சு.க பெற்றுள்ள மொத்த ஆசனங்கள் 60 வரை குறைந்துள்ளது. மேலும், சுதந்திர முன்னணிக்கு
முழுப் பெரும்பான்மையும் கிடைக்காததால், ஏனைய கட்சிகளின், குறிப்பாக பெளத்த பிக்குகளை வேட்பாளர்களாக
நிறுத்தி ஒன்பது ஆசனங்களை வென்ற, சிங்கள தீவிரவாத ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவைப் பெற
முயற்சிக்கின்றது.
ஒருபுறம், விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும்
தொடங்குவதற்கான சுதந்திர முன்னணியின் வாக்குறுதியை முன்னெடுப்பது, மறுபுறம், பெயரளவிலான சமாதான
பேச்சுவார்த்தைகளை எதிர்க்கும் ஜாதிக ஹெல உறுமய பிக்குகளை சாந்தப்படுத்துவது ஆகிய இரண்டுக்கும் இடையில்,
ஒரு ஆபத்தான சமநிலைப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்க இலாயக்கான ஒரு பிரதமரே குமாரதுங்கவிற்குத்
தேவை. கதிர்காமர் ஒரு தமிழர் என்றவகையில், ஹெல உறுமயவின் பேரினவாத ஆத்திரத்தை தானாகவே தூண்டும்.
ஆகையால் நானே பொறுத்தமானவன் என இராஜபக்ஷ விவாதித்தார். இராஜபக்ஷ பெளத்த பெருந்தலைவர்களுடன்
நெருக்கமான உறவு வைத்திருக்கும் அதேவேளை, சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு பரிந்துரைப்பதுடன் பல தமிழ்
மற்றும் முஸ்லிம் கட்சிகளுடனான உறவுகளை பேணும் ஒரு "நடுநிலைவாதி" என பெயர்பெற்றவராகும்.
இராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்த பின்னர், சிங்களத் தீவிரவாத தேசப்பற்று
தேசிய இயக்கத்திற்கு தலைமை வகிக்கும் ஒரு பிக்குவான எல்லே குணவன்ச, புதிய பிரதமரை மத
சம்பிரதாயங்களின்படி ஆசீர்வதித்தார். இராஜபக்ஷவால், எவ்வளவு காலத்திற்கு எல்லோருக்காவும் எல்லாமும்
செய்ய முடியும் என்பதை விரைவில் காணமுடியும். அவர் தனது சொந்தக் கட்சியினுள் அனுர பண்டாரநாயக்க
கோஷ்டியினதும் மற்றும் சுதந்திர முன்னணியினுள் ஜே.வி.பி யினதும் எதிர்ப்புக்கு முகம்கொடுத்துள்ளார். அவரது
பதவிப்பிரமாண வைபவத்தில் ஜே.வி.பி யின் முன்னணி தலைவர்கள் சமூகமளித்திருக்கவில்லை. மேலும், இராஜபக்ஷவின்
அமைச்சரவையில் பதவிகளை ஏற்றுக்கொள்ள பகிரங்கமாக மறுத்து, ஜே.வி.பி யின் கீழ்மட்ட பாராளுமன்ற
உறுப்பினர்களை முன்வைத்தது.
58 வயதான இராஜபக்ஷ, 1970ல் இருந்து தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில்
அங்கம் வகிக்கின்றார். அவர், தென்பகுதியில் தனது தந்தையார் முன்னாள் பாராளுமன்றப் பிரதிநிதியாக இருந்த,
பெலியத்த தேர்தல் தொகுதியை தன்வசம் கொண்டுள்ளார். அவர், சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக்
கொண்ட தென்பகுதியில் பலமான அடித்தளம் கொண்டுள்ள ஜே.வி.பி யை எப்பொழுதும் எதிர்த்துச் சமாளிக்க
வேண்டிவரும். 1971ல் குமாரதுங்கவின் தாயார் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஸ்ரீ.ல.சு.க தலைமையிலான
கூட்டரசாங்கம் ஜே.வி.பி யின் கிளர்ச்சியை கொடூரமாக நசுக்கிய போது இராஜபக்ஷ அதை ஆதரித்தார். இதை
ஜே.வி.பி மறந்துவிடவில்லை.
1994ல் குமாரதுங்க அவரது பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியில் இருந்தபோது,
இராஜபக்ஷவை தொழில் அமைச்சராக நியமித்தார். தொழிலாள வர்க்கத்துடன் கொடுக்கல் வாங்கல்
செய்வதற்காக "இடதுசாரி" கட்சிகளுடனும் மற்றும் தொழிற்சங்கங்களுடனும் அவருக்கு இருந்த உறவை
சுரண்டிக்கொள்வதே ஜனாதிபதியின் இலக்காகும். இராஜபக்ஷவின் அமைச்சு, தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன்
"தொழிலாளர் சலுகை" பத்திரத்தை வரைந்த போது, அது சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின்
கூர்மையான எதிர்ப்பைத் தூண்டியது. அவை தொழிலாளர்களின் எந்தவொரு தொழில் மற்றும் நிலைமைகளை
பாதுகாப்பதையும் நிறுத்துமாறு கோரின. குமாரதுங்க, இராஜபக்ஷவை மீன்பிடித் தொழில் அமைச்சராக பதவி
இறக்கம் செய்தார் --இந்த முடிவை இராஜபக்ஷ எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டார். 2001 டிசம்பரில் பொதுஜன
ஐக்கிய முன்னணி தோல்வியடைந்ததும் அவர் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகள்
புதிய பிரதமர் எளிதில் கையாளமுடியாத அரசியல் பிரச்சினைகளை
எதிர்கொண்டுள்ளார். அவரது பதவிப் பிரமாணத்தின் பின்னர், அவர் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர்
நிரூபம் சென் உடன் முடிய கதவுகளுக்குள் 45 நிமிடம் கலந்துரையாடினார். உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும்
இல்லாத போதிலும், இராஜபக்ஷ, சமாதானப் பேச்சுவார்த்தைகளை குமாரதுங்க மேற்பார்வை செய்வார்
எனவும், இந்தியா அதில் தலையீடு செய்யும் எனவும் பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார். "கூடிய விரைவில்
இந்தியா தலையிடுவது எமக்குத் தேவை. இலங்கையில் எப்பொழுதும் இந்தியா ஒரு பாத்திரத்தை இட்டு நிரப்புவதை
நான் விரும்புகிறேன்," என அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்குவது எப்படி,
இந்தியா எத்தகைய பாத்திரத்தை இட்டுநிரப்பும் போன்றவை தெளிவின்றி உள்ளன. ஐ.தே.மு அரசாங்கத்தை பதவி
விலக்குவதற்கு முன்னர், குமாரதுங்க, ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஜே.வி.பி.யும் விடுதலைப் புலிகளுக்கு அதிகளவு சலுகை
வழங்குவதாக விக்கிரமசிங்கவை மீண்டும் மீண்டும் கண்டனம் செய்து வந்துள்ளனர். இந்தக் கட்சிகள், தீவின் வடக்கு
கிழக்கிலான ஒரு இடைக்கால நிர்வாக சபைக்காக விடுதலைப் புலிகள் முன்வைத்த பிரேரணைகளை, நடப்பில்
தனிநாட்டை ஸ்தாபிக்கும் நடவடிக்கை என கண்டனம் செய்துவந்துள்ளன. குமாரதுங்கவும் இராஜபக்ஷவும்,
கொழும்பின் நிபந்தனைகளின்படி பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக, விடுதலைப் புலிகள் மீது நெருக்குவாரத்தை
திணிப்பதில் இந்தியாவை பயன்படுத்த எதிர்பார்த்திருக்கின்றனர்.
தன் பங்கிற்கு விடுதலைப் புலிகளும், அவர்களின் கொள்கைகளை மெய்ப்பித்துக்
காட்டுவதற்காக அதன் பிரதிநிதிகள் அடங்கிய கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 22 உறுப்பினர்களை
தேர்தலில் வெற்றிபெறச் செய்துள்ளனர். ஏப்பிரல் 5 வெளியான ஒரு அறிக்கை இதை உறுதியாகக் கூறியது. "இந்த
தேர்தல் முடிவுகள், தமிழர் தாயகம், தமிழ் தேசியம் மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷையாக தமிழர்
சுயாட்சிக்கான உரிமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தும் ஒரு செய்தியை
வெளியிட்டுள்ளது," என அந்த அறிக்கை குறிப்பிட்டது. "தமிழ் தேசியப் பிரச்சினை இந்த அடிப்படையிலேயே
அரசியல் ரீதியில் தீர்க்கப்பட வேண்டும், தவறினால், தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமது
தாயகத்தில் தமிழ் இறைமையை ஸ்தாபிக்கப் போராடுவார்கள்," என அது கொழும்பை எச்சரித்தது.
மார்ச் முற்பகுதியில் விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவின் காரணமாக
சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பது மேலும் சிக்கலானதாகும். விடுதலைப் புலிகளின் கிழக்கு
தளபதியான கருணா என்றழைக்கப்படும் வி.முரளிதரனின் தலைமையில் பிரிந்து சென்ற ஒரு குழு அரசாங்கத்துடன் ஒரு
தனியான யுத்த நிறுத்தத்தைக் கோருகிறது. கருணாவிற்கு சார்பானவர்கள் என சொல்லப்படும் ஐந்து தமிழ்
தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், மொத்தத்தில் எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் ஒரு தனியான
தொகுதிக்காக அழுத்தம் கொடுக்கப் பயன்படுத்தப்படவுள்ளார்கள்.
தீவை ஒரு மலிவு உழைப்பு மேடையாக மாற்றுவதன் பேரில் சமாதான
முன்னெடுப்புகளுக்காக விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் பெரு வர்த்தகர்களின் எதிர்ப்புக்கும் இராஜபக்ஷ
முகம்கொடுக்கின்றார். விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் நீண்டகால பொருளாதார
மறுசீரமைப்பு திட்டங்களுடன் கட்டுண்டுள்ளது. இந்த மறுசீரமைப்புத் திட்டங்கள், அரசாங்கத்தின் தொழில்,
நிலைமைகள், சேவைகள் மற்றும மானியங்கள் மீதான வெட்டுக்களால் பரந்த எதிர்ப்பைத் தூண்டிவிட்டுள்ளது.
சுதந்திர முன்னணி, தனியார்மயமாக்கலை நிறுத்துதல், சம்பள உயர்வு, உர
மானியங்களை மீண்டும் வழங்குதல் மற்றும் மூன்று மாதங்களுக்குள் 125,000 தொழில்களை உருவாக்குதல் போன்ற
ஒரு தொகை வெற்று வாக்குறுதிகளின் மூலம், அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு உணர்வை சுரண்டிக்கொண்டது.
தேர்தல் இடம்பெற்ற சற்றே சில நாட்களின் பின்னர், இந்த வாக்குறுதிகளுக்கு குழிதோண்ட வேண்டிய அழுத்தத்திற்கு
புதிய அரசாங்கம் முகம்கொடுக்க ஆரம்பித்தது.
கடந்த புதன் கிழமை, கொழும்பு பங்குச் சந்தையில் எல்லா பங்கு விலைகளும் 127
புள்ளிகளால் அல்லது 10 வீதத்தால் வீழ்ச்சி கண்டன. சில தரகர்கள், இந்த வாரம் பங்குச் சந்தை 25
சதவீதத்தால் வீழ்ச்சியடையக் கூடும் என எச்சரிக்கை செய்துள்ளனர்.
சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள ஐயப்பாடான வார்த்தைகளை
சுட்டிக்காட்டி, தேர்தலின் பின்னர் ஒரு அறிக்கையை வெளியிட்ட இலங்கை வர்த்தக சம்மேளனம்: "பொருளாதாரக்
கொள்கை, அது திறந்த, மூடிய அல்லது கலப்பானதா என பொருளாதாரத்தின் சகல பகுதிகளையும் பற்றி மிகத்
தெளிவாக வரையப்பட்டிருக்க வேண்டும்," எனக் கோரியது.
இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சபைகளின் சம்மேளனத்தின் தலைவர் நிஹால்
அபேசேகர, சுதந்திர முன்னணி அரசாங்கம் ஐ.தே.மு வின் திறந்த பொருளாதாரக் கொள்கையை தொடர
வேண்டும் என வலியுறுத்தினார். "பின்பற்றப்பட்ட கொள்கைகளில் தொடர்ச்சி இருக்க வேண்டும். பொருளாதாரக்
கொள்கைகளில் ஒரு முழுமையான மாற்றம் இடம்பெற இருந்தால், அது நாட்டை இந்த மட்டத்திற்கு (உயர்
வளர்ச்சி) கொண்டுவருவதற்கு விரிவுபடுத்தப்பட்ட நிதிகள் வீண் போவதற்கு வழிவகுக்கும்," என அவர் எச்சரித்தார்.
இந்த உணர்வுகளை எதிரொலித்த ஏப்பிரல் 4 சண்டே டைம்ஸ் பத்திரிகையின்
வர்த்தக பகுதி ஆசிரியர் தலையங்கம்: "தனியார் துறையும் நிதி உதவி ஏஜன்சிகளும் உழைப்புச் சந்தை மறுசீரமைப்பில்
இன்னமும் முழுமையாக மகிழ்ச்சியடையாததுடன், மேலும் கட்டுப்பாடற்ற தன்மைக்காக நெருக்குகின்றன. நிதி உதவி
ஏஜன்சிகள், செலவுகளைக் கட்டுப்படுத்தவும் மற்றும் மேலதிக சம்பள உயர்வுக்கான கோரிக்கைகளை தடுத்து நிறுத்தவும்
அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கின்றன. இப்போது தேர்தல் முடிவுகள் வழிமாறியுள்ளன. புதிய அரசாங்கம்
இத்தகைய விடயங்களை கையாள்வதில் சிறந்த நிலைமையில் இருக்கும்," என பிரகடனம் செய்துள்ளது.
இராஜபக்ஷ பெரு வர்த்தகர்களின் கோரிக்கைகளின் வழியில் செல்வார் என்பதில்
சந்தேகம் கிடையாது. ஐ.தே.மு வின் அதே பொருளாதாரக் கொள்கைகளை முன்னைய குமாரதுங்கவின் பொதுஜன
ஐக்கிய முன்னணி அரசாங்கமும் அமுல்செய்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, தேர்தல் பிரச்சாரத்தின் போது,
ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஜே.வி.பி யின் தலைவர்கள், கம்பனித் தலைவர்களின் நலன்கள் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளதாக
வாக்குறுதி அளித்தனர். ஆயினும், திறந்த பொருளாதார நடவடிக்கைகளை அமுல்செய்வதற்கான முயற்சிகள்
தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் உடனடியான எதிர்ப்பை தூண்டிவிடும். இவர்கள், ஐ.தே.மு
யை விட "குறைந்த கெடுதி" கொண்டது என்ற பிழையான நம்பிக்கையில் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்துள்ளனர்.
இராஜபக்ஷ தனது அமைச்சரவையை அமைப்பதற்கு முன்னதாகவே, தாமதமின்றி உடனடியாக
ஒரு புதிய அரசியல் நெருக்கடிக்கு வழிவகுக்கும் நிலைமையை எதிர்கொண்டுள்ளார்.
Top of page |