World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா India's election commission demands BJP explain its role in Lucknow tragedy லக்னோ துயரத்தில் பிஜேபி-யின் பங்கை விளக்குமாறு இந்திய தேர்தல் கமிஷன் கோருகிறது By Kranti Kumara இந்தியாவின் தேர்தல் கமிஷன், இந்தியாவின் ஆளும் கூட்டணியில் மேலாதிக்க பங்காளியான பாரதீய ஜனதா கட்சிக்கு (BJP) லக்னோவில் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் 22 ஏழைப் பெண்கள், மற்றும் குழந்தைகள், கூட்ட நெரிசலில் மிதிபட்டு மடிந்ததில் அதன் பங்கு பற்றி காரண விளக்கம் கோரி நோட்டீஸ் கொடுத்திருக்கிறது. பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் போட்டியிடும், உத்திரபிரதேச மக்களவை தொகுதியான லக்னோவில், இந்திய மகளிர் பாரம்பரியமாக அணியும் இலவச சேலைகள் பெண்களுக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சியின்போது இந்த துயர சம்பவம் நடந்தது. இந்நிகழ்ச்சியின் வெளிப்பார்வைக்கான நோக்கம் BJP மூத்த தலைவர்களில் ஒருவரும் வாஜ்பாயின் தேர்தல் பிரச்சார மேலாளர் என்று கருதப்பட்டவருமான லால்ஜி தாண்டனின் 70-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக ஆகும். ஏப்ரல் 17-ல் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள ஆணையில் ஒரு வாரத்தில் BJP மத்திய தலைமை தற்போது தேர்தல் பிரச்சாரத்தின்போது நடைமுறையிலுள்ள மாதிரி ஒழுங்கு முறை விதிகளை மீறி நடந்ததாக மேலும் நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்பதற்கு விளக்கம் தருமாறு கேட்டிருக்கிறது. லக்னோ, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு பொறுப்பானவர்கள் மீது குற்றவியல் நடைமுறைப்படி வழக்கு தாக்கல் செய்யுமாறும், தேர்தலில் லஞ்சம் கொடுத்ததாக தாண்டன் மீது வழக்கு தாக்கல் செய்யுமாறும் உத்திர பிரதேச மாநில அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கட்டளையிட்டிருக்கிறது. லக்னோ துயரமும், அதற்குப் பின்னர், தேர்தல் ஆணையம் வெளியிட்ட கட்டளையும் இந்து மேலாதிக்கவாத BJP -ன் தேர்தலுக்கு முந்தைய தன்னம்பிக்கையை அசைத்து விட்டது மற்றும் அரசியல் ரீதியில் சமாதானம் சொல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் ஏப்ரல் 20 முதல் மே 10 வரை ஐந்து கட்டங்களாக நடைபெறப்போகிறது. ஏழை வாக்காளர்களை தன்பக்கம் ஈர்ப்பதற்காகத்தான் இலவச சேலை விநியோகம் நடைபெற்றது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் BJP அதில் தனக்கு எந்த பொறுப்புமில்லை என்று நிலைநாட்ட முயன்று வருகிறது. தன்னைப் பாதுகாக்கும்பொருட்டு, அந்த நிகழ்ச்சியை அதிகாரபூர்வமாக ஏற்பாடு செய்தது Nagrik Sewa Samiti (NSS) என்று கூறி வருகின்றது. இந்த வாதம் போலியானது. NSS, BJP- யோடு இணைக்கப்பட்ட சமூக சேவை அமைப்பு ஆகும். BJPம் பாசிச ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் அல்லது RSSம் தங்களது வெறுக்கத்தக்க அரசியல் முத்திரையின் அங்கங்களாக தங்களது அமைப்புக்களை வளர்ப்பதற்காக பயன்படுத்தி வருகின்ற அமைப்புக்களில் இதுவும் ஒன்று. Birjendra Murari Yadav, NSS அமைப்பின் நிறுவனர், அவர்தான் முன்னின்று லக்னோ, விழாவை நடத்தினார். அவர் BJP உறுப்பினர் மற்றும் தாண்டனின் நெருக்கமான நண்பர் ஆவார். மேலும் தாண்டன், பிரதமர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும்போது, அவரது தொகுதியை பராமரிக்கும் பொறுப்பிலிருந்தவர். அவரே NSS நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தாண்டன், வாஜ்பாயின் தேர்தல் பிரச்சார மேலாளர் என கூறுவது தவறானது என்று கருத்து தெரிவிப்பதன் மூலம், BJP தலைமை அந்த துயர நிகழ்ச்சியிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள முயன்று வருகிறது. சட்ட நுட்ப அடிப்படையில் இது சரியாக இருக்கலாம், ஏனெனில் ஏப்ரல் 14-ந் தேதிதான் அதிகாரபூர்வமாக வாஜ்பாய் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியும். அப்போதுதான் சட்டபூர்வமாக தாண்டனை தனது தேர்தல் ஏஜென்ட் என்று அறிவிக்க முடியும். லக்னோ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், குற்றகரமான வகையில் கவனக் குறைவாக நடந்து கொண்டார்கள் என்பதற்கு அதிக சான்றுகள் கிடைத்திருக்கின்றன. அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட இடம், ஒரு பூங்கா. அதில் 12 அடி நுழைவு வாயில் ஒன்றுமட்டுமே உள்ளது. அந்தப் பூங்காவில் 2,500 பேர்தான் அமர முடியும். அதில் விழா ஏற்பாடு செய்தவர்கள் 15,000 மக்களை குவித்து விட்டனர். அப்போது வெப்பம் 40 பாகை செல்சியஸ்-க்கு மேலே இருந்தது. வந்திருக்கின்ற கூட்டத்திற்கு போதுமான அளவிற்கு சேலையில்லை என்று தெரிந்ததும் கூட்டத்தை நோக்கி, மீதமிருந்த சேலைகளை வீசி எறிய ஆரம்பித்த பொழுது, முட்டி மோதி நெருக்கித் தள்ளுகின்ற நிலை உருவாயிற்று. இந்த துயரத்தால் பொதுமக்களிடையே, ஆவேச உணர்வு ஏற்பட்டதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் ஏழை மக்களது நெருக்கடியை பயன்படுத்தி, வாக்குகளை பெறுவதற்கான இந்த அப்பட்டமான நடைமுறையாலும் தேர்தல் ஆணையம் தலையிட்டது. உண்மையிலேயே லக்னோ துயரத்திற்கு காரணமாக அமைந்தது போன்ற வாக்குகளை விலைக்கு வாங்குகின்ற நடைமுறை மிக சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பொதுவாக தேர்தல் ஆணையம் அதைக் கண்டுகொள்வதில்லை. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், மற்ற BJP தலைவர்களை விட்டுவிட்டு, தாண்டன் மீது மட்டுமே தேர்தல் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யக் கட்டளையிட்டிருப்பது, அவர் வாஜ்பாயின் தேர்தல் ஏஜெண்ட் அல்ல என்ற BJP -ன் நிலைப்பாட்டை, கிளிப்பிள்ளைப் போல் கூறுவதாகும். தேர்தலுக்காக சுரண்டிக்கொள்ளப்படும் வறுமை அரசியல் மோசடிகளில் ஈடுபடுகின்ற அரசியல் குழுக்களுக்கும் வறுமையிலுள்ள இந்திய பொதுமக்களுக்குமிடையே நிலவுகின்ற இடைவெளியை, தாண்டன் அந்த சம்பவம் பற்றி பத்திரிகைகள் வெளியிட்ட கண்டனங்களுக்கு மிகவும் வியப்பளிக்கும் வகையில் பதிலளித்துள்ளமை மிகத் தெளிவாக படம் பிடித்துக்காட்டுகின்றது. "இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லையா? ரயில் விபத்து துயரங்கள் நடக்கின்றன, துப்பாக்கி குண்டுகளுக்கு மக்கள் பலியாகின்றார்கள், இதை ஏன் தேர்ந்தெடுத்து விமர்சிக்கிறார்கள்?" என்று அவர் கேட்டார். இந்த துயர நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை கண்டிப்பதற்கு பதிலாக, வாஜ்பாய் மற்றும் போட்டிக்கட்சியான சமாஜ்வாதிக் கட்சியின் (SP) தலைவர், உத்திரபிரதேச முதலமைச்சரான முலாயம் சிங் யாதவ் இருவரும், தாண்டனுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கின்றனர். முலாயம் சிங் தனது தேர்தல் பிரச்சாரத்தை இடையில் நிறுத்திவிட்டு தாண்டனை சந்திப்பதற்காக விரைந்து வந்தார். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்த்து ஆறுதல் சொல்வதற்குப் பதிலாக தாண்டன் மீது எந்தத் தவறுமில்லை என்று அறிக்கை வெளியிட்டார். பிரதமர் வாஜ்பாய் கூறிய கூற்றின்படி, "தாண்டன் இதை நீண்டகாலமாக செய்துவருகிறார். இந்த முறை கூட்டம் அதிகமாக இருந்ததால் முறையாக, அந்தக் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை." மிகக் கொடூரமான மோசடி ஒன்று லக்னோ சம்பவத்தில் நடந்தது. லக்னோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ரூ.20 "பதிவு" கட்டணம் செலுத்த வேண்டுமென்று கட்டாயப்படுத்தப்பட்டது. ரூ.40 மதிப்புள்ள சேலையையும் ஒருவேளை உணவையும் பெறுவதற்காக இவ்வாறு லக்னோ புறநகர் குடிசைப் பகுதிகளிலிருந்து பெண்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் டைம்ஸ் ஆப் இந்தியா நிருபருக்கு தங்களது அனுபவத்தை எடுத்துரைத்தனர், செலவு அதிகம் என்றாலும் பேருந்தில் நகரத்திற்கு செல்லலாம், உணவும், சேலையும் கிடைக்கும், இது "ஒரு அபூர்வமான விருந்து" என்பதனால் அதனைச்செலுத்த உடன்பட்டனர். மிகவும் அப்பட்டமான ஒரு விமர்சனத்தை அங்கு வசிக்கும் ஒருவர் நிருபரிடம் தெரிவித்தார், "இப்போதுதான் முதல் தடவையாக பணம் செலுத்த வேண்டுமென்று கேள்விப்படுகிறேன். ஏனென்றால் கட்சிகள் நாங்கள் பேரணிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு பணம் தருவதுதான் வாடிக்கை" என்று கூறினார். ராம்லீலா மைதான குடியிருப்பு பகுதிகளில் ஒன்றிலிருந்து வந்தவர்களில் 10 பேர் மடிந்தனர். அவர்களில் பெண்கள் BJP-யோடு இணைக்கப்படுள்ள மகிளா மோர்ச்சா (பெண்கள் அணி) உள்ளூர் தலைவிகளை சபித்தனர். BJP-ல் ஆதிக்கம் செலுத்திவரும் கும்பல் ஆதிக்க மனப்பான்மையை எதிரொலிக்கின்ற வகையில் உள்ளூர் கட்சி அமைப்பாளர்கள், பத்திரிகைகளுக்கு தகவல் கொடுப்பவர்களுக்கு கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை மிரட்டியுள்ளனர். பல மகளிர் அமைப்புக்கள் முஸ்லீம் மகளிர் அரங்கு, அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் (AIDWA) மற்றும் இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பு போன்றவை உட்பட புது தில்லியில் லக்னோ துயரத்தில் BJP-ன் பங்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேர்தல் ஆணையம் பிரதமர் வாஜ்பாயியை தேர்தலில் நிற்பதற்கு தடைவிதிக்க வேண்டுமென அவர்கள் கோரினர். லஞ்சம் கொடுப்பதற்கெதிரான தேர்தல் விதிகளை மீறி அவர் நடந்து வருவதாக குற்றம்சாட்டினர். BJP இதற்கு பதிலளிக்கின்ற வகையில் சேலை விநியோக சாவுகளை "அரசியலாக்கும்" எதிர்க்கட்சிகளைக் கண்டித்தது. இந்திய பத்திரிகைகள் இந்த சம்பவம் தொடர்பாக பொதுவாக, கண்டனங்களை தெரிவித்தாலும், இந்தியாவின் பிரதான செய்திப்பத்திரிக்கைகளில் ஒன்றான இந்துஸ்தான் டைம்ஸ் பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோட்டது. "ஒரு மலிவான சேலைக்காக தனது வாழ்க்கையையே ஆபத்திற்கு உள்ளாக்கிக் கொள்ளும் எந்தப் பெண்ணும் நல்லுணர்வு கொண்டவராக இருக்க முடியாது" என்று எழுதியிருந்தது. BJP பிரச்சாரமும் உண்மையும்இந்த துயர நிகழ்ச்சி BJP -யை நிலை குலையச் செய்துவிட்டது ஏனென்றால் உத்தர பிரதேசம் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது. வாஜ்பாயி BJP-ன் சார்பில் தேர்தலிலும், தேர்தலுக்கு பிந்திய கணிப்புகளிலும் முக்கியமான பங்களிப்பு செய்யவிருப்பவர். இந்த சம்பவம் BJP-ன் "இந்தியா ஒளிர்கிறது" என்ற பிரசாரத்திற்கு பின்னணியாக உள்ள உண்மையை அம்பலப்படுத்திவிட்டது. வாஜ்பாயியின் சொந்த தொகுதி லக்னோ உத்திரப்பிரதேசத்தின் தலைநகர் ஆகும். தற்போது BJP, உத்திரப் பிரதேசத்தில் உள்ள 29 எம்பிக்களை 50 ஆக உயர்த்திக் கொள்ள முடியுமென்று நம்புகிறது. இந்த நம்பிக்கையை அச்சுறுத்துகின்ற வகையில் சேலை விநியோக சாவு நிகழ்ச்சி நடந்துவிட்டன. BJP உத்திரபிரதேசத்தில் தற்போதுள்ள உறுப்பினர் எண்ணிக்கையையும் நிலைநாட்டத் தவறிவிட்டால், நாடாளுமன்றத்தில் NDA பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்புகளுக்கு கடுமையாக சீர்குலைந்து விடும். வாஜ்பாயை சுற்றி அவரது செல்வாக்கை, முன்னிறுத்தி கட்சி வெளியீடுகளிலும், அரசியல் விளம்பரங்களிலும் அவரை முன்னிலைப்படுத்தி வருகிறார்கள். 80 வயதான வாஜ்பாய் அறிவாளி என்றும், தொலை நோக்குள்ள நாட்டுத்தலைவர் என்றும், பல்வேறு பிராந்திய மற்றும் ஜாதி அடிப்படையிலான கட்சிகளை, BJP-ன் சிக்கல் நிறைந்த கூட்டணியில் இணைத்து நிலைநாட்டுவதில் பிரதான பங்களிப்பவர் என்றும் BJP-ன் பிரசாரம் கொண்டாடி வருகின்றது. அண்மை நாட்களில் வாஜ்பாய், தான் தேர்தலுக்கு முன்னரே அரசியல் இருந்து ஒய்வு பெற்றுவிட விரும்பியதாகவும் கட்சித் தலைமையானது இந்தியாவின் மற்றும் கட்சியின் "நன்மை" கருதி தலைமையில் நீடிக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார். வாஜ்பாயையும் உள்துறை அமைச்சர் L.K.அத்வானியையும் ஒப்பு நோக்கி அவர், பிரதமர் பதவிக்கு ஏற்றவர் என்று கூறப்பட்டு வருகிறது. அவர் RSS-ல் ஆயுள் உறுப்பினர் மற்றும் இந்து பிறமத பழிப்புவாதி ஆவார், அவர் "மிதவாதி" என்று அழைக்கப்படுகிறார். அத்வானி 1992-ம் ஆண்டு 16-ம் நூற்றாண்டு பாபர் மசூதியை இடித்துத் தள்ளியதில் முடிவடைந்த, முஸ்லீம்களுக்கெதிரான பாபர் மசூதி கிளர்ச்சியை நடத்தி இந்திய மக்களது மனச்சாட்சியையே குத்திக் கிளறியவர். 1947-ல் வகுப்புவாத அடிப்படையில் துணைக் கண்டம் பிரிக்கப்பட்ட பின்னர், அதற்கடுத்து படுமோசமான இரத்தக்களரி வகுப்பு மோதல்களை உருவாக்குவதில் அவரது கிளர்ச்சி முடிவடைந்தது. தேர்தலுக்கு முன்னர் இந்திய அரசாங்கம், "இந்தியா ஒளிர்கிறது" என்ற பிரச்சார இயக்கத்தை ஆரம்பித்தது. அத்தகைய விளம்பரங்கள் என்ன கூறுகின்றன: "பரபரப்பான காலமாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளன; கிராமங்கள் முன்னேறிக் கொண்டுள்ளன; கண்களில் ஒளி சிமிட்டுகின்றன; பிரகாசமான இத்தகைய ஒளியை இதற்கு முன்னர் நீங்கள் எப்போதும் கண்டதில்லை". இந்திய அரசாங்கம் இந்த விளம்பர இயக்கத்திற்கு பணம் செலவிடுகிறது. ஆனால் BJP மற்றும் NDA -வின் தேர்தல் கூற்றுக்களுக்கு ஏற்றவகையில் இந்தியா பெரிய வல்லரசு நிலைக்கு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்று அந்த விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. 'இந்தியா ஒளிர்கிறது' இயக்கத்திற்கு இதுவரை இந்திய அரசாங்கம் 4 பில்லியன் ரூபாய்களை (ஏறத்தாழ 90 மில்லியன் அமெரிக்க டாலர்களை) செலவிட்டிருக்கிறது. BJP ஏழைகளுக்கு வழங்கப்படும் உணவு தானியங்களுக்கு தரப்படுகின்ற மானியத்தை கொடூரமாக வெட்டியிருப்பதுடன் ஒப்பிடும்போது விளம்பரத்திற்கு செலவிட்ட தொகை மிகவும் அருவருக்கத்தக்கது. இந்திய மக்களது அன்றாட உண்மை வாழ்விற்கும் இந்த கொச்சையான பிரசாரம் சித்தரித்து காட்டுகின்ற கனவு உலகிற்குமிடையில் நிலவுகின்ற மிக வெளிப்படையான வேறுபாடுகளை பார்ப்போம். இந்தியாவில் பெரும்பகுதி எவ்வளவு படுமோசமான நிலையிலுள்ளது என்பதை சில புள்ளி விவரங்கள் விளக்குகின்றன. குறைந்த பட்சம் 400 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 75 விழுக்காடு கிராம ஏழைகள். இந்திய மக்களில் 80 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு 2 அமெரிக்க டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பிறக்கின்ற 1000 குழந்தைகளில் 95 குழந்தைகள் 5-வயது நிறையும் முன்னரே மடிந்து விடுகிறார்கள். ஒரு பில்லியன் மக்களைக் கொண்ட இந்தியாவில் குறைந்தபட்சம் 40 சதவீதம் பேர் கல்வியறிவு இல்லாதவர்கள். பள்ளி செல்லும் பருவமுடைய 200 மில்லியன் குழந்தைகளில் 70 மில்லியன் குழந்தைகள், வறுமையால் அல்லது அருகாமையில் பள்ளிக்கூடம் இல்லாததால் பள்ளிக் கூடங்களுக்கு செல்வதில்லை. 35 முதல் 50 சதவீதம் மக்களுக்கு மின்சார வசதியில்லை. ஐ.நா வளர்ச்சித்திட்ட (UNDP) புள்ளி விவரங்களின்படி மனிதவள மேம்பாடு என்ற வகையில் 175 நாடுகளில் 127-வது இடத்தில் அடிமட்டத்தில் உள்ளது. இந்தியா ஒளிர்கிறது இயக்கம் பூகோளமயமாக்கல் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலை செய்தல் போன்ற நடவடிக்கைகளால் பொருளாதார அடிப்படையில் பயனடைந்துவரும் நகர்ப்புற சிறுபான்மை பகுதியினரை நோக்கியே திருப்பி விடப்பட்டிருக்கின்றன. அந்த விளம்பரங்கள் அன்றாடம் வாழ்க்கை நடத்துவதற்கே அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்ற மிகப் பெரும்பாலான இந்திய மக்களை அலட்சியமாக ஒதுக்கித் தள்ளியுள்ளன. BJP தனது ஆட்சிகாலத்தில் இந்திய தொழிலாளர்கள் மீது திரும்பத் திரும்ப தாக்குதல்களை தொடுத்து வந்திருக்கின்றது. இலாபத்தில் நடந்து கொண்டிருக்கின்ற அரசுத்துறை நிறுவனங்களைக்கூட தனியார் உடமையாக்கி இருக்கிறார்கள். இதன் மூலம் நாடுகடந்த கூட்டு நிறுவனங்கள் மிகக் கொடூரமான முறையில் இந்தியாவை, சுரண்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. சேலை வழங்கும் நிகழ்ச்சியில் நடைபெற்ற துயரத்தையும் BJP/NDA அரசாங்கம் கூறி வருவதையும் ஒப்பு நோக்கி பார்க்கும்போது, அதிர்ச்சியடைந்த பிரதமர் வாஜ்பாய், தனது கருத்தை சற்று மாற்றிக் கொள்ள வேண்டி வந்திருக்கின்றது. "இந்த சம்பவம் நம்மை உலுக்கிவிட்டது இந்தியாவின், மற்றொரு பக்கத்தை பார்க்குமாறு நம்மை நிர்ப்பந்தித்துவிட்டது. அந்தப் பக்கம் ஒளிரவில்லை அது இருண்ட பகுதியில் இருக்கின்றன" என்று வாஜ்பாய் கூறினார். சென்றவார நிகழ்ச்சிகள் மிகத் துயரம் தரும் வகையில் சுட்டிக்காட்டியிருப்பதைப் போல், எவ்வளவுதான் பிரச்சாரம் செய்தாலும், தீரத்தைக் காட்டினாலும், உண்மையை மறைத்துவிட முடியாது. இந்திய மக்கள் பொருளாதார அடிப்படையில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். வறுமை அறிவுரீதியாகவும் சரீர ரீதியாகவும் செல்லரித்துக்கொண்டிருக்கின்றது. |