World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Socialist Equality Party US presidential candidate: "A vote for Kerry is a vote for war"

சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர்: ''கெர்ரிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் போருக்கு ஆதரவான வாக்கேயாகும்''

14 April 2004

Back to screen version

ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரி வாஷிங்டன் போஸ்டில் ஏப்ரல் 13-அன்று ''ஈராக்கிற்கு ஒரு மூலோபாயம்'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதற்கு பதிலளிக்கின்ற வகையில சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பில் வான் ஒகென் கீழ்க்கண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

மாஸச்சுசெற்ஸ் (Massachusetts) செனட்டர் ஜோன் கெர்ரி ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ஈராக்கிற்கெதிரான குற்றகரமான ஆக்கிரமிப்பை தொடர்ந்து தீவிரப்படுத்துவார் மற்றும் அமெரிக்க மக்களிடையே வளர்ந்து கொண்டுவருகின்ற போருக்கு எதிரான உணர்வை ஒடுக்குவதற்கு பணியாற்றுவார்.

கெர்ரிக்கு அளிக்கப்படும் வாக்கு போருக்கு ஆதரவான வாக்காகும். இதைத்தான் அவர் செய்வாய்க் கிழமையன்று வாஷிங்டன் போஸ்ட் தலையங்க பக்கத்தில் ''ஈராக்கிற்கு ஓர் மூலோபாயம்'' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐயத்திற்கிடமின்றி அவரே தெளிவுபடுத்தியிருக்கிறார். அவரது சொந்த வார்த்தைகளே, ஜனநாயகக் கட்சிக்காரரை தேர்ந்தெடுப்பதன் மூலம் புஷ் நிர்வாகத்தின் கொள்கைகள் திரும்பப்பெறப்படும் என்ற பொய்யான கூற்றுக்களுக்கு வெகுமதியாக இருக்கிறது.

''நவம்பரில் யார் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது பிரச்சனையல்ல'', நாங்கள் ஈராக்கை ஆக்கிரமித்திருப்பதிலும் அடிமைப்படுத்துவதிலும் ''விடாமுயற்சி செய்து வருவோம்'' என்று கெர்ரி உறுதியளித்திருக்கிறார்.

அவர் இப்படி எழுதிக் கொண்டிருக்கின்றபொழுது அமெரிக்க அரசாங்கம் சாதாரண ஈராக் மக்களை இரத்தக்களரியில் மூழ்கடித்துள்ளனர். நெருக்கமாக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நகரங்களிலும் ஈராக்கிலுள்ள வெகுஜனங்கள் மீதும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. சுன்னிக்களும், ஷியைட்டுகளும் அமெரிக்க காலனித்துவ ஆக்கிரமிப்பிற்கு எதிராக தங்களது வெறுப்பை வெளிப்படுத்திவருவதோடு அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக தங்களது உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள். இந்த நேரத்தில் கெர்ரி அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவது அவரையும், அவரது கட்சியையும் சந்தேகத்திற்கு இடமின்றி போர்குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் அணிகளில் சேர்த்துவிடுகிறது.

''போருக்கு சென்றமை தொடர்பாக எங்களுக்குள் கருத்துவேறுபாடுகள் இருக்கக்கூடும், ஆனால் அரசியலில் உள்ள அனைத்து அமெரிக்கர்களையும் வற்புறுத்துவது வெற்றி பெறவேண்டும் என்ற எமது உறுதிப்பாட்டில் ஐக்கியப்பட்டு இருக்கவேண்டும்'' என கெர்ரி எழுதினார். ''நமது படைகள் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள், அமெரிக்காவை பிளவுபடுத்துவதில் அல்லது அமெரிக்காவின் உறுதிப்பாட்டை குலைப்பதில் அல்லது அமெரிக்கத் துருப்புக்களை முன்கூட்டியே விலக்கிக்கொள்ள செய்வதில் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்'' என எழுதுகிறார்.

ஒரே பந்தியில் எத்தனை பொய்களை அடக்குவது? அமெரிக்க மக்களைப்பற்றி கெர்ரி தந்துள்ள விளக்கம் அவர்களை மிகமோசமாக அவதூறு செய்வதாகும், இதை அவர் அறிந்திருக்கிறார். ஈராக் எண்ணெய் வளத்தை பிடித்துக்கொள்வதை நோக்கமாகக்கொண்ட காலனித்துவ போர் புரிவதில் அமெரிக்கர்கள் ''நம்முடைய தீர்மானத்தில் ஐக்கியப்பட்டு'' நிற்கவில்லை.

இந்த நாட்டில் அரசாங்கத்தின் கொள்கைகள்மீது எந்தவிதமான அனுதாபமும் இல்லாத வெகுஜனங்கள் உள்ளனர். அவர்கள் ஈராக்கிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் அதேபோல அர்த்தமின்றி தியாகம் செய்யும் இளம் அமெரிக்க இராணுவத்தினர் படுகொலையாவது கண்டு வெறுப்படைந்துள்ளனர்.

இந்தப்போருக்கு எதிராக மில்லியன் கணக்கான மக்கள் தெருக்களில் கண்டப்பேரணிகளை நடத்தினர். அண்மையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஈராக்கை பிடித்துக்கொண்டுள்ள அமெரிக்கப்படைகள் தற்போது அங்கிருந்து வெளியேற வேண்டுமென்பதற்கு மக்கள் தொகையில் ஏறக்குறைய பாதியினர் ஆதரிக்கின்றனர்.

''எப்படி போருக்குச் சென்றோம்'' என்பதில்தான் கருத்துவேறுபாடு என்று கெர்ரி தற்போது சுருக்கிக்கொண்டிருக்கிறார். தற்போதைய இந்த வாதம் ஜனநாயகக் கட்சி முதன்மை தேர்தல்களில் அவர் மேற்கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு பொருத்தமற்று உள்ளது. அப்போது அவர் புஷ் நிர்வாகம் ''அமெரிக்க மக்களை தவறான வழியில் வழிநடத்திச் செல்வதாக கண்டனம் செய்தார். தான் போருக்குச் சென்றிருக்கமாட்டேன் என்று உறுதியாகக் கூறினார். அமெரிக்க படையெடுப்பை அங்கீகரிக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதற்கு வாக்கு அளித்தபோது தன்னையே முட்டாளாக்கி விட்டார்கள் என்றும்கூட கோரினார். இவையெல்லாம் போர் எதிர்ப்பு பெரும்பான்மை பெற்றிருக்கும் ஜனநாயகக் கட்சி வாக்காளர் தொகுதியை ஏமாற்றுகின்ற ஒரு முயற்சிதான்.

கெர்ரிக்கு நன்றாகத் தெரிந்த, இவர் தற்போது கூறிவருகின்ற போருக்கு ஆதவரான கருத்துக்களை அப்போது கூறிவந்த கனாக்டிகட் செனட்டரும் ஜனநாயக்கட்சி சார்பில் 2000 தேர்தலில் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவருமான ஜோசப் லிபர்மன் வெகு அபூர்வமாகத்தான், 10 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்றார். பொதுவாக மிகக் குறைவாகவே வாக்குகளை பெற்றார். மிகப்பெரும்பாலான ஜனநாயகக் கட்சி வாக்காளர்கள் வலுவாக எதிர்த்துநிற்கின்ற போர் கொள்கைக்கு ஆதரவாக அவர் நின்றதால் அவரது தேர்தல் பிரச்சாரம் வீழ்ச்சியடைந்தது. இப்போது ஒன்று தெளிவாகத்தெரிகிறது. அமெரிக்க மக்களை ஏமாற்றுகின்ற நடைமுறைதான் முதன்மை தேர்தல்களில் பின்பற்றப்படுகிறது என்பதற்கு கெர்ரி முதன்மை தேர்தல்களில் போர்-எதிர்ப்பு நாடகம் ஆடியதற்கும் இன்றைய தினம் அவரது போர்-ஆதரவு கொள்கை பற்றிய அப்பட்டமான உண்மைக்கும் இடையிலான வேறுபாட்டை விட வேறு எதுவும் அவ்வளவு தெளிவாக அம்பலப்படுத்தி இருக்க முடியாது.

அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஈராக் மக்களிடையே எழுந்துள்ள எதிர்ப்பை ''அதிதீவிர'' செயல் என்று கெர்ரி புறந்தள்ளுவது மற்றொரு வெறுக்கத்தக்க பொய்யாகும். பல்லூஜா, பாக்தாத் மற்றும் இதர நகரங்களில் இரத்தக்களரி தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் அந்த வார்த்தையை கெர்ரி பயன்படுத்தியிருப்பது வெகுஜனங்களை ஒட்டுமொத்தமாக கொன்று குவிக்கப்படுவதை அவர் ஆதரிக்கிறார் என்றாகிறது.

அமெரிக்க ஜெனரல்கள் கூடுதல் துருப்புக்கள் தேவையென்று கோரிக்கை விடுப்பார்களானால் ''அவற்றை நாம் அனுப்பவேண்டும்.'' அவர் மேலும் ''அவர்கள் தங்களது பணியை முடிப்பதில் தேவையற்ற ஆபத்துக்களில் சிக்கிக்கொள்ளாத வகையில் வெற்றி பெறுவதற்கு உதவுகின்ற முறையில் நமது போர்வீரர்களும், கடற்படைவீரர்களும் ஒவ்வொரு சாதனத்தையும், பயன்படுத்திக்கொள்ள வகைசெய்கின்ற வகையில் எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும்'' என ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அறிவிக்கிறார்.

அவரது உள்ளத்தில் இருப்பது என்ன? அமெரிக்க இராணுவம் ஏற்கனவே F-16 போர் ஜெட் விமானங்கள், Apache ஹெலிகாப்படர்கள், Abrams டாங்கிகள், ராக்கெட்டுக்கள் மற்றும் கொத்துக் குண்டுகளை (Cluster bombs) வீசி ஈராக்கியர் மீது தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறது. வியட்நாமில் பயன்படுத்தப்பட்டதைப்போல் B -52 ரக போர் விமானங்கள் மூலம் நகரங்களையே அழிக்கின்றவகையில் குண்டுமழை பொழிய வேண்டும் மற்றும் நச்சுக்குண்டுகளை ஈராக் நகரங்கள் மீது வீசவேண்டுமென்று அவர் சொல்கின்றாரா?

ஈராக் போரை ஆதரித்து அவரது உறுதிமொழியை வழங்குவதற்கு, வாஷிங்டன் ஸ்தாபனத்தின் இணை அதிகாரபூர்வ அமைப்பு என கருதப்படும் போஸ்ட்டை கெர்ரி தேர்ந்தெடுத்திருப்பது, தற்செயலாக நடந்த சம்பவமல்ல, ஜனநாயகக் கட்சி முதன்மை தேர்தல்களில் அவர் முன்னணி வேட்பாளராக வந்த நேரத்தில் போர் எதிர்ப்பு உணர்வோடு கெர்ரி தன்னை ஐக்கியப்படுத்தி கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்ளும் மத்தள முழக்கத்திற்கு இந்த செய்திப்பத்திரிகைதான் தலைமை வகித்தது. அவர் ஒருவர்தான் ''தேர்ந்தெடுக்கப்படக்கூடிய'' வாய்ப்புள்ள வேட்பாளராக கருதப்பட்டதால் அவர் தனது வார்த்தை மொங்கான்களையும் பயன்படுத்தி இதை கோரிவந்தார்.

பெப்ரவரி-15 தலையங்கத்தில் போஸ்ட் குறிப்பிட்டதாவது: ''திரு. கெர்ரி ஈராக்கில் தொடர்ந்து முன்னேறுவதில் அமெரிக்க பணியின் குறிக்கோள்கள்பற்றி அவரது நம்பிக்கை என்ன என்பதை தெளிவுபடுத்திவிட வேண்டும். எத்தகைய இராணுவ மற்றும் உதவி கடப்பாடுகளை தருவதற்கு அவர் தயாராக இருக்கிறார் என்பதையும் தெளிவுபடுத்திவிட வேண்டும். புஷ்ஷிற்கு நம்பகத்தன்மையுள்ள மாற்றுத்திட்டத்தை அவர் தருவதாக இருந்தால் ஈராக்கில் தற்போது அமெரிக்கா சந்தித்துவரும் உண்மையான, ஆபத்தான சவால்களை எப்படி அவர் சமாளிக்கக்கூடும் என்பதை விளக்கியாக வேண்டும்.''

கெர்ரி இதற்கு கடமைப்பட்டுவிட்டார். போரை எதிர்ப்பவர்களுடன் தன்னை விடுவித்து கொள்வதற்காக முடிந்தவரை வலிமையான வாதங்களை எழுப்பினார். போர் எதிர்ப்பு உணர்வே சட்டவிரோதமானது என்று தெளிவாக இழிவுபடுத்தி அறிக்கை வெளியிட்டார்.

முதன்மை தேர்தல்களில் அவர் நாடிய வாக்காளர்களுக்காக இப்போது அவர் பேசவில்லை. அரசியல் கணிப்பில் அவர்கள் ஒன்றுமில்லை. அதற்குமாறாக இப்போது ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஆளும் செல்வந்த தட்டின் கருத்தை நேரடியாக எதிரொலிக்கிறார். அவர்களுக்கு ஈராக்கிலிருந்து படைகளை விலக்கிக்கொள்வது ஒரு வழிமுறையல்ல. மத்திய கிழக்கு எண்ணெய் வளத்தை பாதுகாப்பான முறையில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காகவும், அவர்களது உலக மேலாதிக்க குறிக்கோளை முன்னெடுத்துச் செல்வதற்காகவும் ஈராக் மக்களது எதிர்ப்பை நசுக்குவதில் உறுதியாக நிற்கின்றனர். ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தோல்வியடையுமானால் அவர்களது புவியியல்-மூலோபாய மற்றும் உலகம் தழுவிய இலாப நோக்கங்களுக்கு பேரழிவுகர உட்குறிப்புக்களைக் கொண்டிருக்கும்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளரின் செய்தியின் முக்கிய தாக்குதல் புஷ் நிர்வாகம் முற்றிலும் தகுதியற்றது மற்றும் இவ்வளவு முக்கியமான பணியை ஒப்படைப்பதற்கு சிறிதுகூட தகுதியில்லாத முட்டாள் புஷ் என்பதும் ஆகும். தான், அதற்கு மாறாக என்ன விலைகொடுத்தாலும் ஈராக் மற்றும் அமெரிக்க மக்களது உயிரைக்கூட பொருட்படுத்தாமல் பணியை முடிக்க தயாராக இருப்பதாகவும் கூறுகிறார்.

கெர்ரியின் இந்த அறிக்கை 2004-தேர்தலில் ஒரே ''உண்மையான'' அரசியல் மூலோபாயம் ''புஷ் தவிர வேறுயாராயினும்'' இருக்கலாம் என்று வலியுறுத்திக் கூறிவந்த தாராளவாத மற்றும் ''இடது'' குழுக்கள் மற்றும் வெளியீடுகள் ஆகியவற்றை மிகக்கடுமையாக தண்டிக்கின்ற வகையில் அமைந்திருக்கின்றது. புஷ்ஷிற்கு எதிரான வாக்குகளை பிளவுபடுத்த துணிகின்ற எவரையும் கண்டித்தவர்கள் மற்றும் கடுமையான வர்க்க அடிப்படையிலான கண்டனங்களை ஜனநாயகக் கட்சி மீது தெரிவித்தவர்கள் ''குறுங்குழுவாதிகள்'' என்றும் ''கொள்கைவழி பிடிவாதக்காரர்கள்'' என்றும் வர்ணித்தவர்கள் இப்போது முற்றிலுமாக அம்பலப்படுத்தப்பட்டு வாஷிங்டனின் ஏகாதிபத்திய போர் சதியை ஏற்றுக்கொள்கின்ற கொள்கையற்ற கோழைகளாக ஆகிவிட்டார்கள்.

Nation சஞ்சிகை மற்றும் தீவிரவாதப் போக்கின் குருவான Noam Chomsky போன்றவர்கள், கெர்ரியை ஆதரித்து வருகிறார்கள் மற்றும் ரால்ப் நடேர் தனது ''சுயேட்சை'' வேட்பாளர் பிரச்சாரத்தை ஜனநாயக் கட்சிக்காக விட்டுக்கொடுத்து அமெரிக்க அரசியல் நிர்வாகத்திற்கும் அதன் போர்க்கொள்கைக்கும் மிக முக்கியமான அரசியல் சேவையை செய்து கொண்டிருக்கிறார். ஜனநாயகக் கட்சிக்கு அவர்கள் கொடுத்து வருகின்ற ஆதரவு மற்றும் இரண்டு கட்சி முறைக்கு மாற்றாக சுயாதீனமான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இயக்கம் வளர்வதை எதிர்ப்பது இவற்றுக்கான விளைவுகளுக்கான அரசியல் பொறுப்பை அவர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டாக வேண்டும். நவம்பருக்கு பின்னர் தாங்கள் எதில் சிக்கிக்கொண்டோம் என்பது தெரியாமல் போய்விட்டதே என்று கூற முடியாது.

கெர்ரியின் அறிக்கை மிகக்கடுமையான எச்சரிக்கையை விடுப்பதாகும். இரண்டு கட்சிகளுமே ஈராக் போருக்கு எதிராக உள்ள மிகப்பெரும்பாலான அமெரிக்க மக்களை அரசியல் ரீதியாக வாக்களிக்கும் உரிமையில்லாதவர்களாக்க முயலும். வரவிருக்கும் தேர்தலின் உள்ளடக்கத்தில் ஈராக் ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சனையை எழுப்புவதற்கு இருதரப்பு தடை இடம்பெறலாம். அமெரிக்கத் துருப்புக்கள் விலக்கிக்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக நிற்பவர்களை இரண்டு கட்சிகளுமே தங்களது நாட்டை அமெரிக்கா பிடித்துக்கொண்டதை எதிர்க்கும் ஈராக் ''தீவிரவாதிகள்'' மற்றும் ''பயங்கரவாதிகளுக்கு'' உடந்தையாக செயல்படுபவர்கள் என்று முத்திரை குத்துவார்கள்.

இரு கட்சி முறை மற்றும் ஜனநாயகக் கட்சியிலிருந்து திட்டவட்டமாக முறித்துக்கொள்வதன் மூலமே போருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லமுடியும் என்பதை இதைவிட வேறு எதுவும் தெளிவாக எடுத்துக்காட்ட முடியாது. இராணுவவாதம் மற்றும் சமூக பிற்போக்கு கொள்கைக்கு பொறுப்பை பகிர்ந்துகொள்ளும் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு சோசலிச பதிலீட்டுக்காக போராடும் உழைக்கும் பரந்துபட்ட மக்களின் புதிய வெகுஜன அரசியல் இயக்கம் அவசியமாகிறது.

அத்தகைய ஓர் இயக்கம் தோன்றுவதற்கு தேவையான அரசியல் சூழ்நிலைகளை உருவாக்குவதில் உதவுவதற்காகத்தான், 2004- தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் வேட்பாளர்களும் தலையீடு செய்கின்றனர். அமெரிக்கத் துருப்புக்கள் அனைத்தும் எந்திவிதமான நிபந்தனையும் இன்றி ஈராக்கிலிருந்து உடனடியாக வெளியேறவேண்டும் என்றும் இந்த ஆக்கிரமிப்பு போரை தொடங்குவதற்கு சதித்திட்டம் தீட்டிய அனைவரையும் பொறுப்பேற்கச் செய்யவேண்டும் என்றும் நாங்கள் இடைவிடாது கோரிக்கைகளை எழுப்பிக்கொண்டிருப்போம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved