World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

IMF managing director nominated for German president

Who is Horst Köhler?

சர்வதேச நாணய நிதிய நிர்வாக இயக்குநர் ஜேர்மன் ஜனாதிபதி வேட்பாளராக நியமனம்

யார் இந்த ஹோஸ்ட் கோலர்?

By Ute Reissner
19 March 2004

Back to screen version

சர்வதேச நாணய நிதிய நிர்வாக இயக்குநர் ஹோஸ்ட் கோலர் ஜேர்மனி ஜனாதிபதிக்கான முன்னணி வேட்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதை ஈராக்கின் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு பதிலாக ஐரோப்பிய அரசியலின் பிரதிபலிப்பை காட்டுவதாக அமைந்திருக்கிறது. கோலர் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் பூகோள அளவில் அமெரிக்காவிற்கு இணையான மோதல் போக்கை கடைப்பிடிப்பதில் ஐரோப்பிய ஆளும் செல்வந்த தட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதாக உள்ளார்.

உள்நாட்டு அரசியலில், ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) ஜனாதிபதி ஹெகார்ட் ஷுரோடர், ஆரம்பித்துவைத்த நலன்புரி அரசை அழிப்பதில் மிகத்தீவிரமாக கோலர் ஈடுபடுவார். சர்வதேச திட்டங்களில், ஜேர்மனியின் பூகோள நலன்கள் அதிகரிக்க வலியுறுத்தல் செய்வார்.

ஜேர்மன் ஜனாதிபதி, அதிகாரபூர்வமாக அந்த அரசின் தலைவராக இருந்தாலும், கட்டுப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரங்களோடு இவர் வெறும் சடங்குகளுக்குரிய பதவிவகிப்பவர்தான். மே 23ம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்காகவே 1206 அங்கத்தவர்களை கொண்ட தேசிய நாடாளுமன்றம் கூடுகிறது. அதில் கூட்டாட்சி மற்றும் மாநில நாடாளுமன்றங்களின் உறுப்பினர்களும் பழமைவாத எதிர்க்கட்சிகளான கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் / கிறிஸ்தவ சமூக யூனியன் (CDU / CSU) ஆகியவற்றின் பிரதிநிதிகள் கூடுகின்றனர். இந்த பழைமைவாதக் கட்சிகளுக்கு தெளிவான பெரும்பான்மையிருப்பதால் ஹோஸ்ட் கோலர் நிச்சயமாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

தகுந்த வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக பழமைவாத கட்சிகள் மேற்கொண்ட முயற்சி அவர்களிடையே நிலவிய குழப்பத்தையும், ஒற்றுமையின்மையையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியது. கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் ஹம்பேர்க்கில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்று முன்னணியில் இருந்தாலும், கட்சிக்குள் நிலவுகின்ற ஒற்றுமையின்மையைத்தான் வெளிப்படுத்தின. சமூக ஜனநாயகக் கட்சி மாநில அளவிலும் மாநகர மட்டத்திலும் பல்வேறு மோசமான தோல்விகளை சந்தித்தது. அது வாக்குப் பதிவில் 25 சதவீத அளவிற்குத்தான் வாக்குகளைப் பெற்றது.

2006ல் நடைபெறவிருக்கும் அடுத்த தேசிய தேர்தல்களில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் யார் முன்னணி வேட்பாளர் என்பது குறித்து கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுள் நீண்ட அதிகார போராட்டம் நடைபெற்ற பின்னர் கோலர் நியமனம் முடிவு செய்யப்பட்டது. பல போட்டி பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. கட்சித் தலைவி அங்கேலா மேர்கே (Angela Merke) தலைமையில் ஒரு குழுவும் பவேரியா அமைச்சர் தலைவர் எட்முண்ட் ஸ்ரொய்பர் (Edmund Stoiber) தலைமையில் ஒரு குழுவும் இயங்கி வருகிறது. 2002 தேர்தலில் ஷ்ரோடருக்கு சவால் விட்டவர் அவர். மூன்றாவது குழு ஹெஸ்ஸன் மாநில பிரதமர் ரோலன்ட் கொக் (Roland Koch) இனை சுற்றி செயல்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு பெண் வேட்பாளர் மேர்கே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியாது. Stoiber நியமனம் செய்யப்பட்டிருந்தால், அதை மேர்கேயும் ஆதரித்தார், அது ஜனாதிபதி பதவிக்கு அவரது முயற்சிக்கு முட்டுக்கட்டையாகும். மாறாக Wolygange Schauble இனை நாடாளுமன்றத்தில் பழமைவாத தலைவராக மேர்கே மற்றும் ஸ்ரொய்பர் ஏற்றுக் கொண்டாலும் அவர்களது எதிர்கால கூட்டணிக் கட்சியான தாராளவாத கட்சிக்கு (FDP) உடன்பாடு இல்லை.

இறுதியில் இந்த பேரங்கள் மோதல்களுக்கிடையில், சாம்பலில் இருந்து மீண்டும் உயிர் பெற்று பறக்கும் பீனிக்ஸ் பறவையைப் போல், சர்வதேச வங்கியாளரும், நிதித்துறை தலைவருமான ஹோஸ்ட் கோலர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேர்கே அவரது பெயரை முன் மொழிந்தார். இந்த ஆண்டு ஆரம்பத்தில் அவரோடு தொடர்பு கொண்டார்.

கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் தலைவியான மெர்கே தன்னுடைய பொது மேடைகளில் சற்று அநாகரீகமாக நடந்து கொள்பவர். அவரை கட்சிக்குள் நிலவுகின்ற வேறுபட்ட குழுக்களில் கடைசி வரிசையில்தான் மதிப்பீடு செய்கின்றனர். அவரிடம் தெளிவான அரசியல் நிலைபாடு இல்லை. உள்கட்சி பிளவுகள் அதிகமாக உள்ள கட்சியில் தலைவர் பொறுப்பிற்கு அவர்தான் ஏற்றவர் என்று கருதப்பட்டது. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் தீவிர வலதுசாரிகளும், இதர குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்கள் நலன்புரி அரசு பாராம்பரியத்தை கைவிட்டால் தங்களது குட்டி முதலாளித்துவ வாடிக்கையாளர்களிடையே மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று கருதினார்கள்.

எனவே அவர் கோலரை நியமித்ததன் மூலம் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுள் நிலவுகின்ற தீவிர வலதுசாரி மற்றும் நவ-தாராள அணியினரோடு தன்னை இணைத்துக் கொண்டார். அதன் மூலம் ஷ்ரோடருக்கு அடுத்து வருகின்ற அரசாங்கத்தின் தலைமை பதவிக்கு வருவதற்கு முயற்சிக்கக் கூடும்.

கோலர் வெளியுறவுக் கொள்கையில் அனுபவமுள்ள சர்வதேச முன்னணி வங்கியாளர். சர்வதேச நாணய நிதிய நிர்வாக இயக்குநர் என்ற முறையில் நாடுகளின் வாழ்வை சர்வதேச நிதி செல்வந்த தட்டின் முன்னோக்கில் பார்த்து பழக்கப்பட்டவர். தனது நியமனம் பற்றி கேள்விபட்டதும் அவர் பிரேசில், தென் கொரியா மற்றும் ஜப்பான் முதலிய நாடுகளுக்கு விஜயம் செய்துவிட்டு வந்திருந்தார். உலகம் முழுவதிலும் மோசமான சமூகப்பணி வெட்டுக்களை கட்டளையிட்டவர். எடுத்துக்காட்டாக 2004 மார்ச் முதல் தேதியில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரபூர்வமான பத்திரிக்கை குறிப்பு பிரேசில் அரசாங்கம் நீண்ட காலமாக நிலவி வந்த பொருளாதார சீரமைப்பு பிரச்சனைகளை தீர்த்து வைத்து, ஓய்வூதியம் மற்றும் வரி விதிப்பு சீர்திருத்தங்களை கொண்டு வந்திருப்பதாக பாராட்டியிருந்தது.

கோலர் ஜேர்மனியை அதே கண்ணோட்டத்தில்தான் எடுத்துக் கொள்கிறார். சர்வதேச நாணய நிதியத்தின் வழக்கமான அளவு கோல்களின்படி மதிப்பிடுகிறார். அவர் முதலாவதாக கவனத்தில் எடுத்துக் கொள்வது முதலீடுகளுக்கு ஏற்ற இலாபம் முதலீடுகள் சுதந்திரமாக நடமாடுவது, தாராளமான வரிவிதிப்பு முறை மற்றும் வரவு செலவுத்திட்டத்தில் துண்டு விழாத நிலை, (சமூக சேவைகளை வெட்டுவது) இவை தவிர மற்றவையெல்லாம், முதலாளித்துவத்தின் சிறப்புத் தன்மைகள் என்று கருதுபவர்.

கோலர் 1981 முதல் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் உறுப்பினராக இருப்பவர், 2000ல் ஷ்ரோடர் அவரை சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்தார். வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் குறுகிய கட்சிக் கொள்கை அடிப்படையில் தான் செயல்பட போவதில்லை என்று அறிவித்தார். கோலரின் உயர்ந்த தொழில் முறை தகுதிகளை ஷ்ரோடர் புகழ்ந்துரைத்தார்.

ஷ்ரோடரின் ''செயற்திட்டம் 2010'' தற்போது உழைக்கும் மக்களின் சேமநல திட்டங்களை மிகக் கடுமையாக பாதிக்கின்ற ஒன்று அதை ''வரலாற்று'' சிறப்புமிக்கதென்று, கோலர் வர்ணித்தார். IMF தலைவரென்ற முறையில் இது பற்றி கருத்து தெரிவிக்கும்போது "எனது சொந்தக் கருத்து என்னவென்றால் இந்த ஆலோசனைகள் போதுமான அளவிற்கு தீவிரத் தன்மையுடையதாக இல்லை. தொழிலாளர் சமுதாய மற்றும் வரிவிதிப்பு முறைகளில் முழுமையான மாற்றங்கள் செய்யப்படவேண்டும்." என்று கருத்து தெரிவித்தார். ஊதிய விகிதங்கள் தொடர்பாக மத்திய, தலைமை பேரம் பேசுகின்ற முறையால் வேலைவாய்ப்புக்கள் குறைகின்ற நிலைதான் ஏற்படும், என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார். பழைய கட்டுக் கோப்புக்களை திட்டமிட்டு ஒழித்துக் கட்டுகின்ற உறுதிப்பாடு ஜேர்மனியிடம் இல்லையென்று Frankfurter Allgemeine Zeitung பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். 2003 கடைசியில் அவர் அளித்த பேட்டியில் ஜேர்மனி இணைந்த பின்னர் கோலர் அரசாங்கத்தில் தான் பணியாற்றியபோது நடைபெற்ற பெரிய தவறுகளில் தானும் பங்கெடுத்துக் கொண்டதாக, அந்த பேட்டியில் சுய விமர்சனம் செய்திருக்கிறார். அந்த நேரத்தில் பழமைவாத தாராள கூட்டணி சமூக திட்டங்களுக்கு மிதமிஞ்சிய அளவில் தாராள போக்கில் நடந்து கொண்டதாகும். சமுதாய கட்டமைப்பு சீரமைப்புகளில் ஆர்வம் குறைந்ததாக குறிப்பிட்டார்.

அப்போது ஹோஸ்ட் கோலர் துணை நிதியமைச்சராக பணியாற்றி வந்தார். 1990 முதல் 1993 வரை ஜேர்மனியின் சர்வதேச நிதி மற்றும் பணப்புழக்க உறவுகளுக்கு பொறுப்பு வகித்தார். கிழக்கு ஜேர்மன் அரசாங்கத்தை கலைக்கின்ற பொருளாதார மற்றும் பணப் புழக்க ஒப்பந்தங்களை செய்தார். முன்னாள் சோவியத் துருப்புக்களை கிழக்கு ஜேர்மனியிலிருந்து விலக்கிக் கொள்வதற்கு பேரம் நடத்திய ரஷ்ய அதிகாரிகள் கோலர் மிகவும் கண்டிப்பான ஓரளவிற்கு தொற்று நோய் போல் ஒட்டிக் கொள்ளும் தன்மைபடைத்தவரென்று நினைவுபடுத்தினார்.

அதே காலகட்டத்தில் ஜேர்மன் அரசாங்கத்தின் சார்பில், ஐரோப்பிய, பொருளாதார மற்றும் ஐரோப்பிய நாணய ஒன்றியம் (EMU) உடன்பாட்டு பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கி நடத்தி வந்தார். அந்த முடிவுகள் Maastricht ஒப்பந்தமாக உருவாயின. அந்த ஒப்பந்தத்தில் கண்டுள்ள மிக கொடூரமான நெறி முறைகள் ஐரோப்பா முழுவதிலும் சமூக கொள்கைகள் மீது கொடூரமான தாக்குதல்களை தொடுப்பதாக அமைந்திருந்தது. இது தவிர 1990 இற்கும் 1993 இற்கும் இடையில் நடைபெற்ற நான்கு G7 உச்சிமாநாடுகளுக்கு முன்னேற்பாடுகளைச் செய்யும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் அதிபர் ஹெல்முட் கோலின் தனிப்பட்ட பிரதிநிதியாக பணியாற்றி வந்தார்.

கடந்த காலத்தில் ஜேர்மன் ஜனாதிபதி பதவி ஏறத்தாழ பொது நிகழ்ச்சிகளில், கலந்து கொள்ளும் அலங்கார பதவியாகத்தான் கருதப்பட்டது. நீண்டகால அனுபவமிக்க அரசியல் தலைவர்கள், ஏதாவது ஒரு கட்சியிலிருந்து அந்த பதவிக்கு நியமிக்கப்படுவர். அவர்களுக்கு பொது மக்களது கருத்துக்களை மாற்றுகின்ற அதிகாரம் எதுவும் இல்லை. இப்போது ஜனாதிபதியாக இருப்பவர் சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த Johannes Rau இவரும் இதே வகையைச் சார்ந்தவர். அவருக்கு முன்னர் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனைச் சேர்ந்த Roman Herzog அந்தப் பதவியில் இருந்தார்.

கோலர் தேசிய கட்சி அரசியலில் உண்மையான, வரலாறு படைத்தவரல்ல, இரண்டாவது உலகப் போருக்கு பிந்திய எந்த தர நிர்ணயத்தின்படி பார்த்தால் அவர் வழக்கத்திற்கு மாறாக அந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். அவர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்?.

இதற்கு முன்னர் பெரும்பாலும் நாடாளுமன்ற பெரும்பான்மை, அடிப்படையில், ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இதில் ஒரு எடுத்துக்காட்டு 1960 களில் சமூக ஜனநாயகக் கட்சியின் ஒரே கட்சியைச் சேர்ந்த Willy Brandt மற்றும் Herbert wehner இருவருக்குமிடையே நடைபெற்ற ஆதிக்கப் போட்டியாகும். சமூக ஜனநாயகக் கட்சிக்கும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுக்கும் இடையே 1966ல் மிகப் பெரிய கூட்டணி உருவாவதற்கு வழி செய்வதற்காக உடன்படிக்கை, செய்து கொண்டு Lubke ஜனாதிபதி பதவியில் நியமிக்கப்பட்டார். மூன்றாண்டுகளுக்குப் பின்னர் Brandt தனக்கு சாதகமான சமூக ஜனநாயகக் கட்சியை சார்ந்த Gustav Heinemann நியமித்து அதன் மூலம் தாராளவாத கட்சி (FDP) கூட்டணியில் சமூக ஜனநாயகக் கட்சி சிறிய கூட்டணியாக ஆயிற்று.

மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது அடுத்து ஆட்சியை கைப்பற்றவிருக்கும் எதிர் கட்சிகளுக்கிடையே நடைபெற்றுக் கொண்டுள்ள, உள்கட்சி மோதல்கள் மற்றும் அதிகார போட்டிகள் போன்று தோன்றும். ஆனால் பெருபான்மைகளை மாற்றியமைப்பதற்கு மேல் அதிக பிரச்சனைகள் இதில் அடங்கியுள்ளன. இப்படி மாறிக் கொண்டுள்ள நாடாளுமன்ற கூட்டணிக்கிடையே கோலர் இந்த அலங்காரப் பதவிக்கு தகுதியானவர் அல்ல. மிகுந்த அதிகார தோரணையில் பேசுகின்ற வல்லமையுள்ள இவர் பிறரை தன் கருத்தின் பக்கம் ஈர்ப்பதோடு நின்று விடமாட்டார்.

சமூக ஜனநாயகக் கட்சியின் சிதைவு கிறிஸ்தவ ஜனநாயக யூனியனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, ஆகியவை உலக பொருளாதார அபிவிருத்தியில் ஆழமாக வேரூன்றி நிற்பதை கோலர் நியமனம் எடுத்துக் காட்டுகின்றது. தேசிய முதலாளித்துவ அரசியல் முழுமையாக சர்வதேச முதலீட்டு நலன்களுக்கு அடிபணிந்து நடக்கவேண்டும் என்ற புறநிலைரீதியான பூகோளமயமாக்கல் போக்கின் வெளிப்பாடே கோலரின் நியமானமாகும்.

இந்தச் சூழ்நிலையில் ஜேர்மன் ஜனாதிபதி பதவிக்கு மறு விளக்கம் தருவது ஆரம்பித்துள்ளது. 1949ல் இயற்றப்பட்ட ஜேர்மனியின் அரசியல் சட்டம், கட்டுப்படுத்தப்பட்ட நிர்வாக அதிகாரங்களைத்தான் ஜனாதிபதிக்கு திட்டமிட்டு வழங்குகிறது. வைமார் குடியரசுக் காலத்தில் (Weimar Republic) ஜனாதிபதி நாடாளுமன்ற முடிவுகளையும் மீறி அவசர சட்டங்கள் மூலம் குடியரசுத் தலைவர் (Reichspräsident) ஆட்சி நடத்தி வந்த, படிப்பினைகளின் அடிப்படையில் புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. சர்வாதிகாரி ஹிட்லரை அன்றைய ஜனாதிபதி ஹின்டன்பேர்க் பிரதமராக நியமித்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவி வழக்கமான ஜனநாயக நெறிமுறைகளுக்கு மேம்பட்டதாக உயர்த்தப்பட்டது. இது ஹிட்லர் காலத்தில் நடந்தது.

இந்த ஜனாதிபதி பதவியை முதல் நிலை சர்வதேச வங்கியாளருக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது இந்த அனுபவங்களிலிருந்து பின்வாங்கி ஜனாதிபதி பதவியின் அரசியல் தரத்தை உயர்த்துவதாக அமைந்திருக்கிறது. அத்தகைய ஒரு முன்னணி பிரமுகர் அரசியலில் முக்கிய பதவிக்கு வரும்போது நடப்பு அரசியல் சட்டப்படி அவரது அரசியல் அதிகாரங்களை பெருக்கிக் கொள்வதற்கு, வலுப்படுத்துவதற்கு வாய்ப்புகள் நிச்சயம் உள்ளன.

இதில் ஜேர்மன் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை. நாட்டு தலைவர் பதவிக்கு மற்றொருவர் வருவது தொடர்பான நடைமுறைகளில் ஜேர்மன் மக்களுக்கு எந்தவிதமான பங்களிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோலர் வேட்புமனு உள்நாட்டுத் தாக்கங்களுடன் வலுவான, வெளிநாட்டுக் கொள்கை அம்சங்களை உள்ளடக்கியதாகும். ஐரோப்பிய அரசுகள் ஆரம்பத்தில் ஆலோசனை கூறிய நிபுணரை ஏற்றுக்கொள்ள அமெரிக்கா மறுத்துவிட்டதால் பிரதமர் ஷ்ரோடர் 2000ல் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக கோலரை நியமனம் செய்தார். இதில் பின்பற்றப்பட்டு வருகின்ற நடைமுறை என்னவென்றால் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக ஒரு ஐரோப்பிய நாட்டவர் இருப்பார். உலக வங்கித் தலைவராக ஒரு அமெரிக்கர் பதவி வகிப்பார். கோலர் சர்வதேச நாணய நிதியத்தின் பதவியிலிருந்து ஜேர்மனிக்கு அழைக்கப்பட்டிருப்பதை இதர ஐரோப்பிய அரசுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருக்கு அடுத்து அந்தப் பதவிக்கு வருபவர் யார்? என்பது தொடர்பாக ஐரோப்பிய அரசாங்களுக்குள் மோதல்கள் தோன்றி விட்டன.

கோலர் சர்வதேச நிலையிலிருந்து தேசிய அளவிற்கு பதவி மாற்றம் செய்யப்பட்டிருப்பது ஜேர்மனியின் வெளிநாட்டுக் கொள்கையில் ஒரு கடுமையான மாற்றத்தை எதிரொலிப்பதாகும். சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பதவியை ஜேர்மன் உதறித் தள்ளுவது அந்த அமைப்பின் தரத்தை குறைப்பதாக அமையும். இந்த வகையில் பேர்லின் வாஷிங்டனின் முன் மாதிரியைப் பின்பற்றுகிறது. ஈராக் போரின் போது சர்வதேச அமைப்புக்களையும் ஐக்கிய நாடுகள் சபையையும் அமெரிக்கா அலட்சியமாக நடத்தியது.

கோலர் வெளிநாட்டுக் கொள்கைகளில் அனுபவம் மிக்க நிபுணர், அவர் தனிப்பட்ட முறையில் பல அரசாங்கங்களின், நாடுகளின் தலைவர்களை சந்தித்து சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் என்ற அதிகார தோரணையில் பேசிப் பழக்கப்பட்டவர் ஐரோப்பிய ஒருங்கிணைப்பில் நிலவுகின்ற புதிய கொந்தளிப்புக்களை உள்ளடக்கியதாக அவரது நியமனம் அமைந்துள்ளது. ஜேர்மனி ஒன்றுபட்ட நேரத்தில் அந்த நாட்டின் பொருளாதார நிலைப்பாட்டை எடுத்து வைப்பதில் முக்கிய பங்களிப்பு செய்தவர் கோலர் ஐரோப்பிய நாணய கொள்கையில் ஜேர்மனியின் மேலாதிக்க செல்வாக்கை நிலைநாட்டும் வகையில் உருவாக்கப்படுகின்ற நடைமுறைகளுக்கு ஆகின்ற செலவில் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று, ஜேர்மனியின் செல்வாக்கை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டாதவர்.

தற்செயலாக உள்கட்சி நெருக்கடியால் அவரது நியமனம், நடந்தாலும் வரலாற்று அடிப்படையிலான மாற்றங்களில் அடிப்படை அம்சங்களை உள்ளடக்கியதாக அது அமைந்துவிட்டது. நாடுகள் என்ற எல்லைக் கோட்டுக்குள் சமூக சமன்பாட்டை நிலைநாட்டும் கொள்கைகள் தோல்வியடைந்துவிட்டதை கோலர் எடுத்துக்காட்டுகிறார். அந்தத் தோல்வியை கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் உணர்ந்திருக்கிறது என்பதன் அடையாளந்தான் அவரது நியமனம். தேசிய அரசியலுக்கு மேலாக சர்வதேச நிதி சந்தைகள், எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்பதை அவர் முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார். சர்வதேச அடிப்படையில் ஜேர்மனியின் நலன்களை சுதந்திரமாகவும், அதிக அளவில் மூர்க்கமாாகவும், தீவிரமாகவும், வலியுறுத்த வேண்டுமென்ற நிலைப்பாடு உள்ளவர் அவர். தற்போது நடைமுறையிலுள்ள நாடாளுமன்ற நெறிமுறைகளை சிதைத்து மக்களுக்கு அரசியல் அடிப்படையில் உரிமைகள் அனைத்தையும் மறுக்கும் குறிக்கோளை முன்னிலைப்படுத்துபவர் அவர்.

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து மேற்கத்திய ஐரோப்பிய முதலாளித்துவ பொருளாதாரம் மீண்டும் தலைநிமிர்ந்து நிர்ப்பதற்கு காரணமாக இருந்தது. உழைக்கும் மக்களுக்கு வழங்கப்பட்ட சமூக சலுகைகள் ஆகும். இவற்றோடு, ஜேர்மனியின் ஜனநாயக உரிமைகள் தொடர்பான கட்டுக்கோப்பு நேரடியாக முடிச்சுப் போடப்பட்டிருக்கிறது. பூகோளமயமாக்கலால் சீர்திருத்த அடிப்படையில் இயங்கி வந்த தொழிலாளர் அமைப்புக்களான சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற் சங்கங்கள் சிதைந்துவிட்டன. இதன் மூலம் முன்னர் பெற்ற சலுகைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 20-வது நூற்றாண்டின் முதல் பாதியில் நிலவிய ஐரோப்பிய அரசியல் முரண்பாடுகளும், போட்டிகளும் மீண்டும் துயரமிக்க விளைவுகளை உருவாக்கிவிடும் என்ற நிலையை இன்றைய நடப்புக்கள் எடுத்துக்காட்டுகின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved