லிபியாவுக்கு பிளேயருடைய பயணம்: இது எண்ணெய்க்கா, அது கிடைத்ததா?
By Chris Marsden and Barry Grey
27 March 2004
Back to screen version
அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்கள் ஈராக்கிற்கு எதிரான போர்ப் பிரச்சாரத்தில்
நன்னெறிகள் சம்பந்தமாக நாடகம் ஆடியதை ஏற்றுக்கொண்டவர்கள் வியாழனன்று பிரிட்டன் பிரதமர் டோனி பிளேயர்
லிபியா தலைவர் கேர்னல் மும்மர் கடாஃபியை, லிபியா தலைநகரமான திரிப்போலியின் புறநகர் பகுதியில் சந்தித்துப் பேசியதையும்
ஆராய்வது நல்லது.
வாஷிங்டனும், லண்டனும் சதாம் ஹூசேன் தனது ஆட்சிக் காலத்தில் அப்பாவிக் குடிமக்களை
கொன்று குவித்ததாகவும், விச வாயுவை பயன்படுத்தியதாகவும், இதர குற்றங்களை புரிந்ததாகவும் மிகுந்த நியாயமான
கோப உணர்வோடு அவரை பயங்கரவாதி என்று பட்டம் கட்டினார்கள். நாகரீக சமுதாயத்திலிருந்து அவரை ஒதுக்கி
வைத்தார்கள். இப்படி ஒட்டுமொத்தமாக ''வெகுஜனங்களை கொன்று குவித்தவர்'' என்ற குற்றச்சாட்டை பயன்படுத்திக்கொண்டு
உரத்த குரலில் அதிகாரிகள் பாசாங்கு போர் நடத்தியதுடன், ஈராக்கிடம் பேரழிவுகரமான ஆயுதங்கள் குவியலாக உள்ளன
என்று கூறினார்கள். ஆனால் அவை யாவும் நேர்த்தியான பொய்கள் என்று அம்பலப்படுத்தப்பட்டன.
அமெரிக்காவும், பிரிட்டனும் ஈராக் மீது ஆக்கிரமித்து சதாம் ஹூசேன் ஆட்சியைக் கவிழ்த்து
ஓராண்டிற்குப் பின்னர், கடாஃபியுடன் பிளேயர் கைகுலுக்குகின்ற காட்சி இடம்பெறுகிறது. --மிக அண்மைக்காலம்வரை மேற்கு
நாடுகளுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளை தீவிரமாக ஆதரித்தும், ஐரோப்பாவில் அதுவரை நடந்திராத அளவிற்கு
மிகக்கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர் என்றும், ஸ்கொட்லாந்திலுள்ள லாக்கர் பீ பகுதிக்கு மேல்
பறந்த அமெரிக்க பயணிகள் விமானமான பான் அமெரிக்கன் ஜெட் விமானத்தினை 1988 ல் குண்டு வைத்து தகர்த்தது தன்
பொறுப்பென்றும் ஒப்புக்கொண்டவர்-- அது உலகம் முழுவதிலும் ஒளிபரப்பப்பட்டது. பல தலைமுறைகளாக கடாஃபி கட்டுப்பாடுகள்
எதுவுமற்ற முரட்டுத்தலைவர் என்றும், தீண்டத்தகாதவர் என்றும் முத்திரை குத்தப்பட்டிருந்தார். அவர் தற்போது சமாதான
சக்தியாகவும், ''பயங்கரவாத்திற்கு எதிரான போரில்'' பங்களிப்பு செய்பவராகவும் கருதப்படுகிறார்.
சதாம் ஹூசேன் ஏன் பாவத்திலிருந்து விடுதலை பெற முடியவில்லை. அதே நேரத்தில் கடாஃபி
மீண்டும் வரவேற்கப்பட்டிருப்பது ஏன்? (லிபியா தலைவர் தார்மீகநெறி வழி மாறிவிட்டார் என்று கூறப்படுவது
எதைக்காட்டுகிறது என்றால், ஏகாதிபத்திய அரசியலில் கடிகாரமுள் இரண்டு பக்கமாகவும் திசைமாறிச்செல்லும்
என்பதைத்தான் ஆகும். 1980 களில் வாஷிங்டன் ஆதரவை அனுபவித்த சதாம் ஹூசேன் சுதந்திர உலகின் ஒரு நண்பனாக
ஒரு காலத்தில் கருதப்பட்டார். திடீரென்று ஒரு நாள் நள்ளிரவில் சர்வதேச பூச்சாண்டி மனிதனாக, மனித இனத்தின்
எதிரியாக ஆகிவிட்டார். எப்படி என்றால் பழைய கடாஃபி திடீரென்று சமாதான மற்றும் முற்போக்கு சக்தியாக
மாறிவிட்டதைப் போலவாகும்.)
லிபியாவை பயங்கரவாதிகளோடு தொடர்புபடுத்தி அது தொடர்பாக குற்றம்சாட்டுவது
சதாம் ஹூசேன் மீது குற்றம் சாட்டுவதைவிட எளிதானது. ஆனால் இன்னமும் சில சந்தேகங்கள் நீடிக்கவே செய்கின்றன.
லிபியா 270 பேர் பலியான லாக்கர்பீ விமானத் தகர்ப்பிற்கு பொறுப்பேற்றிருக்கிறது. தனது இரண்டு குடிமக்களை அந்த
வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் என்று ஒப்படைத்திருக்கிறது. நீதிமன்றம் அதில் ஒருவரை தண்டித்திருக்கிறது. லாக்கர் பீ
விமானத் தகர்ப்பில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க லிபியா இணங்கியுள்ளது.
இன்னமும் லிபியாவை மற்றும் அப்துல் பாசட் அல் மெகாரியின் குற்றச்சாட்டை
சந்தேகிப்போர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றாலும் பிரிட்டிஷ் அரசாங்கம் நிச்சயமாக சந்தேகிக்கவில்லை.
கடாஃபி கடந்த காலத்தில் மேற்கத்திய வல்லரசுகள் மீது பயங்கரவாத தாக்குதல்களை
நடத்துவதற்கு திரும்பத்திரும்ப தனது ஆதரவுப் பிரகடனத்தை வெளியிட்டவர். மற்றும் இவர், இன்றைக்கும் பிரிட்டனுடன்
ஆயுதந்தாங்கிய சண்டையில் ஈடுபட்டுள்ள அயர்லாந்து குடியரசு இராணுவத்திற்கு அரசியல் மற்றும் நிதி ஆதரவுகளை தந்து
கொண்டுதான் இருக்கிறார்.
சென்ற ஆகஸ்டில் லிபியா அதிகாரப்பூர்வமாக பயங்கரவாதத்தை துறந்து, ஐ.நா
பாதுகாப்பு சபைக்கு ஒரு கடிதத்தை தாக்கல் செய்து லாக்கர் பீ சம்பவத்திற்கு பொறுப்பை ஏற்றுக்கொண்டது.
கடாஃபி சுத்தமானவர் என்று அறிவிப்பதற்கு அதுவே போதுமானதாக அவர்களுக்கு அமைந்துவிட்டது.
இதோடு ஒப்புநோக்கும் போது செப்டம்பர் 11 தாக்குதல், அல்கொய்தா அல்லது இதர
எந்த இஸ்லாமிய தீவிரவாத குழுவோடும் உள்ள தொடர்புகள் ஆகியவை தொடர்பாக திரும்பத் திரும்ப பாக்தாத்
கூறிவந்த மறுப்புக்கள் செவிடன் காதில் ஊதிய சங்குகளாக ஆகிவிட்டன. எந்தவிதமான சான்றோ அல்லது ஏற்புடைய
அரசியல் காரணமோ இல்லாமல் திரும்பத் திரும்ப வாஷிங்டனும் லண்டனும் குற்றச்சாட்டுக்களை பாக்தாத் மீது
கூறிக்கொண்டே வந்தன.
மக்களைக் கொன்று குவிக்கும் பேரழிவுகரமான ஆயுதங்கள் தொடர்பான பிரச்சனை
தொடர்பாகவும் இதே நிலையைத்தான் நாம் காண முடிந்தது. லிபியா பேரழிவுகரமான ஆயுத திட்டங்களை கைவிடவும்,
20 தொன் கடுகு புகை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் இரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதை கைவிட சம்மதம்
தெரிவித்து 15 வாரங்களுக்கு பின்னர் பிளேயர் விஜயம் செய்திருக்கிறார். இதற்கு மாறாக, ஈராக் மீது 12 ஆண்டுகள்
இடைவிடாது ஆயுத சோதனைகள், தொடர்ந்தும் இராணுவத் தாக்குதல்கள், தண்டிக்கும் பொருளாதாரத் தடைகள்
என்பனவற்றால் அந்த நாடே சீர்குலைந்தது. இதற்கெல்லாம் அப்பால் பரவலாக ஆயுத பறிப்பு சோதனைகள் மற்றும்
பாக்தாத் மீது குண்டுவீச்சுத் தாக்குதல்கள் என்பன நடாத்தப்பட்ட பின்னரும் பேரழிவுகரமான ஆயுதங்கள்
தொடர்பாக எந்தவிதமான தடையமும் கிடைக்கவில்லை.
தனக்கு எதிராக அரசியலில் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்ற கவலை பற்றி
பொருட்படுத்தாமல் பிளேயர் கடாஃபியை சந்தித்திருக்கிறார். தனக்கு எதிராக அபாயகரமான பிரச்சாரம்
நடத்தப்படும் என்பது தெரிந்தே மார்ச் 11 மாட்ரிட் பயங்கரவாத குண்டு வெடிப்புக்களில் பலியான 190 பேரின்
அரசாங்க இறுதிச் சடங்கிற்காக ஸ்பெயினுக்கு சென்றுவிட்டு, திரும்பும் வழியில் திரிப்போலியில் கடாஃபியை
சந்தித்திருக்கிறார். ஆனால் அவரது பயணத்தை தாமதப்படுத்துவதற்கு பதிலாக தனக்கு ஏற்படுகின்ற அரசியல் பாதிப்பை
மாற்றுகின்ற வகையில் மத்திய கிழக்கு நாடுகள் தொடர்பான தனது அமைச்சர் லேடி ஷைன்ஸை லிபியாவிற்கு அனுப்பி,
103 பயணிகள் விமான தகர்ப்பில் பலியான பிரிட்டனை சேர்ந்த பிரச்சார குழுவினருக்கு ஆதரவை பெற்றிருக்கிறார்.
அத்தோடு, 1984 ல் லண்டனில் உள்ள லிபியா தூதரகத்தின் வெளியில் லண்டன் போலிஸ் அதிகாரி பிளட்ச்சரை
சுட்டுக்கொன்றதாக, லிபியா தூதர் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த வெளியுறவு
அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோவையே அனுப்பினார்.
லிபியா ஆட்சியின் கட்டளைகளால் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் மக்களது குடும்பங்களை
சேர்ந்தவர்கள் பிளேயரின் பயணத்தை ஆதரித்தது என்பது, பயங்கரவாத அச்சுறுத்தலை மட்டுப்படுத்த வேண்டுமென்ற
நியாயமான நோக்கத்திலே தவிர பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அல்ல. அத்தோடு இது பிளேயரின் சொந்த
முன்னுரிமை பட்டியலிலும் இல்லை.
கடாஃபியை வாழ்த்திவிட்டு, பிளேயர் ''புதிய உறிவின்'' நம்பிக்கை பற்றியும் பேசினார்.
இதில் அல்கொய்தா புலனாய்வுத் தகவல்பற்றி பரிமாற்றமும் நடந்திருக்கிறது. அதற்கு உறுதியான பயன்தரும் வகையில்
லிபியா கடற்பகுதியில் எரிவாயு துரப்பண பணிகளை மேற்கொள்வதற்கு 550 மில்லியன் பவுன் (1 பில்லியன் டொலர்)
பெறுமதியான ஆங்கிலோ-டச் ஷெல் எண்ணெய் நிறுவனத்துடன் பேரம் ஒன்றும் கையெழுத்தாகியுள்ளது.
லிபியாவில் 30 பில்லியன் பீப்பாய்கள் அளவிற்கு எண்ணெய் வளம் இருப்பதாக
மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றின் மதிப்பு 600 பில்லியன் பவுன்கள் ஆகும். தற்போது லிபியா தினசரி 1.4 மில்லியன்
பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்கிறது. லாக்கர் பீ விமானக் குண்டு தகர்ப்பிற்கு பின்னர் மேற்கத்திய கம்பெனிகள்
இந்த எண்ணெய் வளத்தை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அவை எல்லாம்
மாறிக்கொண்டுள்ளது.
கடாஃபி இரசாயன ஆயுதங்களை துறந்துவிட்டார் என்று பிளேயர் அறிவித்து, அவர்
''பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்'' ஒரு பங்குதாரராகவும் ஆகிவிட்டார் என்பதன் பொருள் என்னவென்றால்
லிபியாவுடன் பிரிட்டன் இலாபகரமான ஆயுத வர்த்தகத்தையும் மேற்கொள்ள முடியும் என்பதாகும்.
இது ஏற்கெனவே துவங்கிவிட்டது. பிரிட்டனின் மிகப்பெரிய ஆயுதங்கள் விற்பனை நிறுவனமான
பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் (BAE)
நிறுவனம், லிபியாவுடன் பெருமளவில் வர்த்தகம் செய்வதற்கான ''பேச்சுவார்த்தைகளில் முன்னேறியுள்ளது'' என்று
அறிவித்துள்ளது. இதற்கு எதிரான ஆயுதங்கள் விற்பனைத்தடை இன்றைக்கும் பெயர் அளவிற்கு செயல்பட்டு வந்தாலும்,
BAE நிறுவனம் ''சிவில் விமானத் தேவைகளான'' விமான
உள்கட்டமைப்பு, விமான பயண நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் நெறிமுறை பிரச்சனைகள் பற்றியே கலந்துரையாடப்பட்டு
வருவதாக வலியுறுத்திக் கூறியது. ஆனால் அத்தகைய ராஜதந்திர காரணங்கள் விரைவில் கைவிடப்படும் என்று பிளேயர்
தெளிவுபடுத்தியுள்ளார்.
இரசாயன ஆயுதங்களை துறந்ததற்காக லிபியாவிற்கு தகுந்த இழப்பீடாக பிரிட்டிஷ்
பாதுகாப்பு அமைச்சகம் லிபியா இராணுவத்தையும், விமானப்படையையும் உருவாக்குவதற்கு உதவும் என்று பிளேயர்
உறுதிமொழி அளித்திருக்கிறார். இதன்மூலம் Sandhurst
ல் உள்ள பிரிட்டன் இராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் லிபியா இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்படும்.
திரிப்போலிக்கு இராணுவ ஆலோசகர்கள் அனுப்பப்படுவார்கள். 1967 ல் கடாஃபி
Sandhurst ல்
மாணவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெருமளவில் ஆயுதங்களை விற்பதற்கான முயற்சியை மேற்கொள்ளும் வாய்ப்பை
பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்று பிளேயர் நம்புகிறார். லிபியா மீதான ஆயுதத்தடைகளை ''அடுத்த சில
மாதங்களில்'' ரத்து செய்வதற்கு பிரிட்டன் கடுமையான முயற்சிகளில் இறங்கி இருப்பதாக ஸ்காட்ஸ்மேன்
பத்திரிகைக்கு ஒரு அரசாங்க அதிகாரி உறுதியான தகவல் தந்திருக்கிறார். லிபியாவில் ''மாறிவிட்ட சூழ்நிலைகளில்
நியாயமான பாதுகாப்பு தேவைகளை தீர்மானிப்பது தொடர்பான'' இராணுவ பிரச்சனைகளுக்கு உதவுவது குறித்து
ஏற்கெனவே ''சிந்திக்க'' துவங்கி விட்டதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
''இதன் பொருள் என்னவென்றால் லிபியாவிற்கு மிகவிரைவில் லண்டன் என்னென்ன ஆயுதங்கள்
வாங்க வேண்டுமென்று என்று ஆலோசனை கூறும்'' என்று ஸ்காட்ஸ்மேன் குறிப்பிட்டிருக்கிறது.
எண்ணெய், எரிவாயு துரப்பணிகள் மற்றும் ஆயுத விற்பனையின் அளவு பில்லியன் மதிப்பாகும்.
அதேபோன்று முற்றுகை இடப்பட்டுள்ள அந்தநாட்டின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் ஒப்பந்தம் வழங்கப்படும்.
பிளேயரின் தற்போதைய லிபியா பயணத்தின் இறுதிப் பயன் அரசியல் நோக்கம் கொண்டது.
கடாஃபி பேரழிவுகரமான ஆயுதங்கள்
திட்டத்தை கைவிட உறுதியளித்திருப்பது என்பது, லண்டனும், வாஷிங்டனும்
பிரகடனப்படுத்திய ''பயங்கரவாத்திற்கு எதிரான போர்'' செயல்பட்டு வருகிறது என்பதை நிரூபித்து காட்டுவதற்கு
ஆகும். அத்துடன், பிற நாடுகள் ஈராக்கில் நடத்தப்பட்டது போன்ற நிலைக்கு உள்ளாகலாம். எனவே அவர்கள் தங்களது
போக்குகளை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது ஈராக்கைப் போன்று பாதிக்கப்படக் கூடும்.
பிளேயர் திரிப்போலியுடன் தனது வர்த்தக மற்றும் இராஜதந்திர தொடர்புகளை மிகுந்த
அவசர உணர்வோடு வலுப்படுத்திக்கொள்ள முயன்றதற்கு முக்கியமான காரணம் இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும்
இதர நாடுகளிலிருந்து எழக்கூடிய போட்டியாகும்.
15 ஆண்டுகள் லிபியா மீது தடைவிதிக்கப்பட்டதற்கு மூலக்காரணமாக அமைந்த அமெரிக்கா,
இதில் பின் தங்கிவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. அமெரிக்க சிறப்புத் தூதர் வில்லியம் பேர்ன்ஸ் மத்திய கிழக்கிற்கான
விஜயத்திற்கு சற்று பின்னர் பிளேயர் திரிப்போலிக்கு உடனடியாக முந்திக் கொண்டு சென்றார்.
1969 ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் கடாஃபி பதவிக்கு வந்த பொழுது, லிபியாவிற்கு
விஜயம் செய்த முதலாவது உயர்மட்ட அதிகாரி பேர்ன்ஸ் ஆகும். அவர், ஜனாதிபதி புஷ்ஷிற்கு
கடிதமொன்றை தந்தார். அந்தக் கடிதத்தில் இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச நிலவரம் விளக்கப்பட்டிருப்பதாக
ஒரு அதிகாரி குறிப்பிட்டார். அமெரிக்கா 20 ஆண்டுகளுக்கு பின்னர் திரிப்போலியில் மறுபடியும் தனது இராஜதந்திர
தொடர்புகளை நிலைநாட்டி வருகிறது.
பேரழிவுகரமான ஆயுதங்கள் பற்றிய திட்டங்களை கைவிட லிபியா சம்மதித்தப்பின்னர், அமெரிக்காவில்
லிபியா அரசியல் தொடர்புகள் பற்றியதிட்டம் உருவாக்கப்பட்டு வருவதாக அரசுத்துறை செயலர் கொலின் பவல் தெரிவித்தார்.
அமெரிக்க குடிமக்கள் லிபியாவில் முதலீடு செய்வதற்கு அனுமதிப்பதற்காக, சர்வதேச
அவசர பொருளாதார அதிகாரங்கள் சட்டக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. இதன்
மூலம் பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னர், அமெரிக்க எண்ணெய்
நிறுவனங்கள், முன்கூட்டியே பேரங்களை நடத்துவதற்கு வகை செய்யப்பட்டிருக்கிறது. 1986 முதல் லிபியாவில் அமெரிக்க
எண்ணெய் நிறுவனங்கள் பணியாற்றவில்லை.
அமெரிக்காவின் மிகப்பெரும் எண்ணெய் நிறுவனங்களான ஒக்சிடன்டல் பெற்றோலியம் மற்றும்
எக்சோன் மொபில் (Occidental Petroleum
and Exxon Mobil)
ஆகியவற்றின் அணுகுமுறை என்ன என்பதை இன்வெஸ்டக் முதலீட்டு வங்கி ஆய்வாளர் புரூஸ் எவர்ஸ் என்பவர் (Bruce
Evers) சுருக்கமாக நியூயோர்க் டைம்ஸ்சிற்கு தெரிவித்தார்.
''புஷ்ஷிற்கு மிகப்பெரும் அழுத்தங்கள் வரும். லிபியாவில் அவர் அமெரிக்கர்களுக்காக சாதித்து காட்டியாக வேண்டும்.
ஒவ்வொரு நாளும் OPEC
உறுப்பினர் வெளியே வந்து இங்கே வாருங்கள், கீழே போங்கள் என்று சொல்வதைப் போன்றதல்ல இது'' என்று குறிப்பிட்டார்.
ஈராக் மற்றும் லிபியா மீது ஒன்றுக்கொன்று முரண்பட்ட வகையில் இவைகள் நடத்தப்பட்டு
வருவதற்கு காரணம் சதாம் ஹூசேன் மற்றும் கேர்னல் கடாஃபி ஆட்சிகளுக்கிடையில் நிலவுகின்ற அடிப்படை
வேறுபாடுகளால் அல்ல. ஈராக் மக்கள் மீது தெரிவிக்கப்பட்ட மனித நேயக் கவலைகள் மற்றும் இதர
''பயங்கரவாதத்திற்கு எதிரான போர்'' பற்றிய வாய்வீச்சு உரைகள் என்பன ஒரு பக்கம் இருந்தாலும், ஈராக்
ஆக்கிரமிக்கப்பட்டதற்குக் காரணம் எண்ணெய் வளம்மிக்க மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநாட்ட
வேண்டும் என்பதற்காகத்தான் ஆகும். அதே அடிப்படை கருத்துகளோடுதான் தற்போது லிபியா மீது நேசம் பாராட்டி
வருகிறார்கள். ஆகவே தனது ஐரோப்பிய ஒன்றிய போட்டி நாடுகளுக்கு முந்தி லண்டன் அடியெடுத்து வைத்திருக்கிறது.
ஆனால் ஈராக் போரில் தான் முதலீடு செய்துள்ள பில்லியன்கணக்கான டொலர்களை திரும்பப் பெறுவதற்கு லிபியாவின்
எண்ணெய் ஒப்பந்தங்களில் பெரும்பங்கை புஷ் நிர்வாகம் கோரும் என்பது தெளிவு. |