World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா "The working class must develop a political strategy to defend jobs and living standards" சோசலிச சமத்துவக் கட்சி துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜிம் லோரன்ஸ், WSWS-SEP மாநாட்டில் உரை நிகழ்த்துகிறார் "தொழிலாள வர்க்கம் வேலைகளையும் வாழ்க்கை தரங்களையும் பாதுகாக்க ஓர் அரசியல் மூலோபாயத்தை வளர்த்தெடுக்க வேண்டும்" 19 March 2004 "2004 அமெரிக்க தேர்தல்: ஒரு சோசலிச பதிலீடு" என்ற தலைப்பில் மிச்சிகன் அன் ஆர்பரில், மார்ச் 13-14 தேதிகளில் உலக சோசலிச வலைத் தளமும், சோசலிச சமத்துவக் கட்சியும் இணைந்து நடாத்தப்பட்ட மாநாட்டில், சோசலிச சமத்துவக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜிம் லோரன்ஸ் நிகழ்த்திய உரையின் கருத்துக்களை இன்று வெளியிடுகின்றோம். ஆரம்ப மாநாட்டிற்கு உலக சோசலிச வலைத் தள சர்வதே ஆசிரியர் குழு தலைவரும், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளருமான டேவிட் நோர்த் அளித்த சுருக்க அறிக்கை மார்ச் 15 அன்றும் (ஆங்கிலத்தில்), ஜனாதிபதி வேட்பாளர் பில் வான் ஒகெனுடைய குறிப்புரை மார்ச் 18 அன்றும் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்டன. வரவிருக்கும் நாட்களில், இந்த முக்கியமான அரசியல் நிகழ்ச்சி பற்றிய செய்தித் திரட்டு, மாநாட்டில் சர்வதேச பிரதிநிதிகளின் உரைக்குறிப்புக்கள், பங்களிப்புக்கள் இவற்றையும் தொடர்ந்து வெளியிடவுள்ளோம். இலாபமுறை, மற்றும் அதன் இரு அரசியல் கட்சிகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்தவேண்டியதன் அவசியத்தை, தொடர்ந்த வேலைகள் அழிப்புக்கள் நடைபெற்று அவை மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் கெளரவமான வாழ்க்கை தரத்திற்கான அடிப்படை உரிமையை பறிப்பதுபோல் வேறு எதுவும் இவ்வளவு கூடுதலான ஆற்றலுடன் நிரூபிக்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில், புஷ்ஷின் கொள்கைகள், பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகள், மற்றும் வோல்ட் ஸ்ரீட் முதலீட்டாளர்கள் செல்வக் கொழிப்பை பெரிதும் பெருக்கியுள்ளன, மிச்சிக்கனிலும் ஒகையோவிலும் மட்டும் 300,000 உட்பட, 3 மில்லியனுக்கும் மேலான வேலைகள் அழிக்கப்பட்டுள்ளன, தங்களுக்கு ஒரு வீடு வாங்குவது பற்றியோ, ஒரு குடும்பம் அமைத்துக் கொள்வது பற்றியோ, நினைத்தும் பார்க்கமுடியாத நிலையில் இள வயதினர் குறைந்த ஊதியத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வயது அதிகமாகியுள்ள தொழிலாளர்கள், இன்னும் நீண்ட, அதிக மணி நேரம் வேலைசெய்தால்தான் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் கொண்டிருந்த வாழ்க்கை தரத்தை காப்பாற்றிக்கொள்ள முடியம் என்றும், ஓரளவு தங்கள் குழந்தைகள், பேரக் குழந்தைகள் ஆகியோர்களுக்கு உதவவும், வானுயர்ந்து செல்லும் கல்வி, பொதுச் சுகாதாரம் வீடு இவற்றின் செலவுகளுக்கு ஈடுகட்டவும் முடியும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஓய்வு ஊதியத் தகர்ப்புக்களும், 401 (K) க்களும், சமூக பாதுகாப்பை தனியார் மயமாக்குதலும், 1930 களுக்கு பின் காணப்படாத பிசாசுகளும், அதாவது வயது முதிர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் உயிர்தப்பி வாழ்வதற்கு தாங்கள் இறக்கும் வரையில் உழைக்கவேண்டும் என்ற நிலையும் ஏற்பட்டு விட்டன. வேலைகள் அழிப்பு ஒரு புதிய நிகழ்வுப்போக்கு அல்ல. மோட்டார் தொழில், சுரங்கம், எஃகு, துணி உற்பத்தி, மற்றும் பல அடிப்படைத் தொழில்களில், மில்லியன் கணக்கில் வேலைகள், 1970 களின் இடைப்பகுதியிலிருந்து பெருநிறுவன அமெரிக்காவால் அழிக்கப்பட்டுவிட்டன. இது Dayton, Detroit, Flint, Pittsburgh உட்பட அமெரிக்காவின் Rust Belt என அழைக்கப்பட்டிருந்த நகரங்கள் உட்பட பல தொழில்நகரங்களை பேரழிவிற்கு ஆளாக்கிவிட்டன. கடந்த 15 ஆண்டுகளில், நாடுகடந்த நிறுவனங்கள் செலவினங்களை குறைக்கும் வகையிலும் மிக மலிவான கூலி உழைப்பு, மிகக் குறைந்த வரிவிகிதம், அதிக இலாபங்கள் ஆகியவற்றிற்காக பூகோளம் முழுவதும் தேடும் வகையிலும், பெரு நிறுவன வேலைக்குறைப்புக்களை உற்பத்தி துறையிலுள்ள தொழிலாளர்களிலிருந்து மில்லியன் கணக்கிலான வெள்ளுடை மற்றும் சிறப்புப் பயிற்சி தொழிலாளர்கள் வரையிலும் நீட்டித்துவிட்டன. புஷ், ஜோன் கெர்ரி இருவருமே அமெரிக்காவை வழிநடத்தும் பெருவர்த்தக, மற்றும் செல்வக் கொழிப்புடைய செல்வந்த தட்டிற்கு முற்றிலும் கடமைப்பட்டிருக்கின்றனர். வேலைகள் அழிப்பு, வாழ்க்கைத்தரங்கள் அழிப்பை தடுப்பதைக் காட்டிலும், அவர்கள் இருவரில் யார் வெற்றி பெற்றாலும் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும். கடந்த மாதம் டேற்றனுக்கு கெர்ரி வருகை புரிந்தபோது, வேலைகள் நெருக்கடி பற்றி எந்த விடையையும் தராதது இதை தெளிவாக்கியது. மாறாக அவர் அரசாங்கம், அமெரிக்க நிறுவனங்களுக்கு உற்பத்தியை குறைவூதிய நாடுகளுக்கு மாற்றாமல், அமெரிக்காவிலேயே வைத்துக் கொண்டால் ஊக்கத்தொகை கொடுக்கவேண்டும் என்ற ஆலோசனையை தெரிவித்துள்ளார். அதாவது இன்னும் கூடுதலான வரிவெட்டுக்களும், கட்டுப்பாட்டு தளர்த்தல் நடவடிக்கைகளும் அதற்கு தொழிலாளர்கள் விலைகொடுப்பதும்தான் இதன் பொருளாகும். தன்னுடைய வேலைகளையும், வாழ்க்கைத்தரத்தையும் பாதுகாப்பதற்கு தொழிலாள வர்க்கம் ஒரு அரசியல் மூலோபாயத்தை வளர்க்கவேண்டும். ஆயினும், அத்தகைய மூலோபாயம் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள புறநிலை பொருளாதார மாற்றத்தை பற்றிய ஒரு புரிதலை கட்டாயம் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் மற்றும் உழைக்கும் மக்களின் நலன்கள் சார்பில் பேசுவதாக கூறிக்கொள்வோர் அனைவருடைய கொள்கைகள், செயற்பாடுகளை பற்றிய விமர்சன ரீதியான மதிப்பீட்டையும் உள்ளடக்கி இருக்கவேண்டும். டேற்றன், ஓகையோ வில் Delco Chassis Plant இல் வேலைக்கு அமர்த்தப்பட்டபோது நான் 1966ல் ஜெனரல் மோட்டார்சில் வேலைபார்க்க தொடங்கினேன்; United Auto Workers Union இல் ஓர் உறுப்பினராகவும் சேர்ந்தேன். பல மில்லியன் கணக்கான தொழிலாளர்களைப் போலவே, விரைவில் தொழிற்சங்க தலைவர்களுடன் மோத நேரிட்டது என்றாலும், உழைக்கும் வர்க்கம் தொழிற்சங்கம் ஊடாக தன்னுடைய நிலைமையை உயர்த்திக்கொள்ளுவதற்குரிய அமைப்பாகத்தான் தொழிற்சங்கங்களை நான் பார்த்தேன். வியட்நாம் போர், மக்கள் உரிமைப் போராட்டங்கள், அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுத்திய வாழ்க்கைத் தரங்களின் சரிவு, ஆகியவற்றினால், தீவிரமாக்கப்பட்ட தொழிலாளர் தலைமுறையைச் சேர்ந்தவன் நான். 1970 ல், 350,000 தொழிலாளர்கள் GM க்கு எதிராக இரண்டு மாதம் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் வெளிநடப்பு செய்தனர். அந்தப் போராட்டம், மற்ற உழைக்கும் மக்கள், சிறு வணிகர்கள் டேற்றனில் இருக்கும் பலருடைய ஆதரவையும் திரட்டியது. அந்த வேலைநிறுத்தம், தொழிலாள வர்க்கத்தின் சக்தி வாய்ந்த இயக்கமாக பிரதிபலித்தபோது, UAW இன்று மற்ற தொழிலாளர்கள் தட்டுக்கள் ஒருபுறமிருக்க, தன்னுடைய சொந்த உறுப்பினர்களைக் கூட திரட்ட முடியாது. Teamster கனரக வாகனம் ஓட்டுபவர்கள், ஜெனரல் எலெக்ட்ரிக் தொழிலாளர்கள், துறைமுக தொழிலாளர்கள், தொலைபேசி தொழிலாளர்கள், கட்டுமானப்பணித் தொழிலாளர்கள், இன்னும் மற்றவர்கள் என்று பங்கு பெற்றிருந்த, ஒரு மகத்தான அலைபோன்று தீவிரமான வேலைநிறுத்தங்களின் ஒரு பகுதியாக இது இருந்தது. இந்த தொழில்துறை போராட்டங்கள், வியட்நாம் போரைத் தூண்டிவிட்டிருந்ததோடு, நிக்சன் நிர்வாகம் போருக்கும் உள்நாட்டு பொருளாதார நெருக்கடிக்கும் தொழிலாளர்கள் விலைகொடுக்கவேண்டும் என்பதையும் ஆதரித்து இருந்த ஜனநாயகக் கட்சியின் மேல் ஏற்பட்ட பெருகிய வெறுப்புடன் இணைத்திருந்தது. பழைய அலபாமா கவர்னர், ஜோர்ஜ் வாலஸ் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலுக்கு ஜனநாயக் கட்சி சார்பில் போட்டியிட்டு, ஆரம்பக் கட்டத்தில் மிச்சிகன் முதல்நிலை தேர்வில் வென்று கணிசமான ஆதரவை 1972ல் பெற்றபோது, என்னுடைய ஜனநாயகக் கட்சியுடனான உறவு முறிந்தது. SEP இன் முன்னோடியான, Workers League அப்பொழுது, ஒரு உழைக்கும் மக்களின் பிரதிநிதிக் கட்சியென கூறிக்கொள்ளும் கட்சி எப்படி ஒரு இனப் பிரிவினைவாதியும், வெளிப்படையாக உழைக்கும் மக்களுக்கு விரோதப்போக்கு காட்டுபவரையும், தன் வேட்பாளராகக் கொள்ளமுடியும் எனக் கேள்வி கேட்டு அறிக்கையாக வெளியிட்டிருந்த துண்டுப்பிரசுரத்தை, நான் இப்பொழுதும் நினைவில் கொண்டுள்ளேன். அதற்கு சிறிது காலத்திற்குள்ளாகவே, நான் வேர்க்கர்ஸ் லீக்கில் சேர்ந்தேன். இருக்கும் இரு கட்சிகளையும் தோற்கடிப்பதற்கு, தொழிற்சங்கங்கள் ஒரு தொழிலாளர் கட்சியை அமைத்து பாடுபடவேண்டும், உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கு கொண்டுவரப்படவேண்டும் என்ற கட்சியின் போராட்டத்தால் நான் கவரப்பட்டேன். இந்தக் கோரிக்கை மிகப் பரந்த ஆதரவை அடைந்தது; உழைக்கும் வர்க்கம் ஜனநாயகக் கட்சிமீது கொண்டிருந்த வெறுப்புணர்வை நன்கு அறிந்திருந்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரின் ஒரு பகுதியினர், தொழிலாளர் கட்சி அமைப்பதை தாங்கள் கூட ஆதரிப்பதாகவும், ஆனால் இன்னும் அதற்கான காலம் கனியவில்லை என்றும் வாதிட்டனர். உண்மையில், UAW மற்றும் AFL-CIO அதிகாரிகள் கூட்டம் ஜனநாயகக் கட்சியுடன் எந்த முறிவும் கூடாது என்ற கருத்தினைத்தான் கொண்டிருந்தனர். இது ஏன் இவ்வாறு இருந்தது? தொழிற்சங்க அமைப்பு, முதலாளித்துவத்தை காக்க விரும்பியது, அதன் ஜனநாயகக் கட்சியுடனான உடன்பாடு, ஒரு சில செல்வந்தருக்காக அன்றி, தொழிலாள வர்க்கத்தினரின் நலன்களின் பேரில் பொருளாதார வாழ்க்கையை தீவிரமாய் மறு ஒழுங்கு செய்யும் வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதிலிருந்து தொழிலாள வர்க்கத்தை தடுத்தது. 1940 களிலிருந்தே, AFL மற்றும் CIO தலைவர்கள் தொழிற்சங்கங்களுக்குள் கம்யூனிச விரோத வேட்டையை நடத்த தொடங்கியதில் இருந்தே, அமெரிக்க தொழிலாளர் அதிகாரத்துவம் சோசலிசத்திற்கு விரோதப்போக்கு என்பதை தங்கள் வழிகாட்டும் நெறியாகக் கொண்டிருந்தனர். அமெரிக்காவில் தொழிலாளர் இயக்கத்தை இது எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் செய்துவிட்டிருந்தது என்பது மட்டுமன்றி, கம்யூனிச விரோத அடிப்படையில்தான் AFL-CIO வியட்நாம் போருக்கு ஆதரவைக் கொடுத்திருந்தது என்பதோடு, CIA உடன் ஒத்துழைத்து இடதுசாரி தொழிற்சங்கங்களை நாசப்படுத்தவும், ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய இடங்களில் எதிர்ப்பு இயக்கங்களையும் கவிழ்க்கவும் முற்பட்டது. ஜனநாயகக் கட்சியுடனான கூட்டைத்தான், தொழிலாளர் அதிகாரத்துவம் முக்கிய கருவியாக கொண்டு, தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களின் கழுத்தை நெரிப்பதற்கும், அவற்றை அமெரிக்க முதலாளித்துவத்திற்கு அடிபணியச் செய்யவும் முடிந்தது. பத்தாண்டுகள் வன்முறையான வர்க்கப் போராட்டம் நடந்திருந்த 1980களில், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்குவதற்கு AFL-CIO கூட்டமைப்பு வேண்டும் என்றே ஒவ்வொரு வேலைநிறுத்தத்தையும் காட்டிக் கொடுத்தது மற்றும் நிர்வாகத்திற்கு, தொழிலாளர் செலவினங்களை குறைப்பதற்கு உதவி செய்தது. UAW மற்றும் AFL-CIO கூட்டு, இரண்டுமே 1980களில் பெருநிறுவனங்களின் நிலைப்பாட்டை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டு, பெருநிறுவன அதிகாரிகளுக்கு அப்பாற்பட்ட நலன்கள் ஏதும் தொழிலாளர்களுக்கு கிடையாது என்ற கருத்துப்படிவத்தை கொண்டுவிட்டனர். தொழிற்சங்க அலுவலர்கள், Chrysler போன்ற நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் குழுவில் இடம் பெற்று இருந்தனர்; பலவகையான தொழிலாளர்-நிர்வாக வடிவமைப்புக்கள் கொண்டுவரப்பட்டு "போட்டித்தன்மையை" அதிகரிக்கும் வகையில் முன்னேறுவதற்கு எனக்கூறப்பட்டு, பல செலவினங்களை குறைக்கும் நடவடிக்கைகளில் துணைநிற்பதற்கும், நிறுவனங்கள் தொழிற்சங்க அலுவலர்களை பயன்படுத்தவும் அனுமதித்தன. நிர்வாகத்தோடு கைகோர்த்துக் கொண்டு UAW வும் மற்ற தொழிற்சங்கங்களும், அமெரிக்க தொழிலாளர்களுடைய உண்மையான விரோதிகள் பெருவர்த்தகம் அல்ல என்றும், வேலையைத் "திருடிக் கொண்டிருக்கும்" ஜப்பானிய, ஐரோப்பிய தொழிலாளர்கள்தாம் என்றும் அமெரிக்க தொழிலாளர்களை நம்பவைக்கும் நோக்கத்துடன் மிகுந்த நச்சுத்தன்மைவாய்ந்த தேசிய வெறியையும், இன வெறியையும் வளர்த்தனர். பொருளாதார தேசியவாதம் வளர்க்கப்பட்டது எதை உருவாக்கியது? நான் முதலில் UAW வில் சேர்ந்தபோது அடிப்படை தொழிலில் 2.25 மில்லியன் தொழிலாளர்கள் இருந்தனர். இன்று அதில் 638,000 உறுப்பினர்கள்தான் உள்ளனர். அமெரிக்கா முழுவதும் 8.2 தனியார்துறை தொழிலாளர்கள்தாம் தொழிற்சங்கங்களில் உள்ளனர் மற்றும் 2.2 மில்லியன் தொழிற்சாலை தொழிலாளர்கள் உள்ளனர், இது 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 60சதவிகிதம் குறைவானதாகும். நாடு முழுவதும் மூடப்பட்ட ஆலைகள் சிதறிக் கிடக்கின்றன. "அமெரிக்க வேலைகளை காப்போம்" என மக்களை திருப்திப்படுத்த அரசியல் வாதிகள் கூச்சலிட்டாலும், UAW, மற்றும் AFL-CIO ஆகியவற்றின் அதிகாரிகள் ஒரு வேலையை கூட காப்பாற்ற முடியவில்லை. உற்பத்தி கூடங்கள் மூடப்படுவது அல்லது மிகப்பெரிய அளவில் பணிமுடக்கங்கள் இவற்றை எதிர்த்து எந்த தீவிரப்போராட்டமும் இல்லை. நம்முடைய தேர்தல் அறிக்கை கூறுகிறது: "பழைய தொழிலாளர் அமைப்புக்களின் நோக்குநிலை- தேசிய தொழில் பாதுகாப்பு, தேசிய தொழிலாளர் சந்தை- பூகோள ரீதியாய் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள உற்பத்தி மற்றும் இதுவரையில்லாத அளவு மூலதனம் இடம் பெயரக்கூடிய தன்மையினால் கீழறுக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்துவக் கருவிகள், அமெரிக்க AFL-CIO உட்பட, தொழிலாளர்களுக்கு நன்மைகள் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் அழுத்தம் கொடுப்பது என்பதிலிருந்து, மூலதனத்தை ஈர்ப்பதற்காக, முதலாளிகளுக்கு சலுகைகள் கொடுப்பதற்காக, தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தலுக்கு மாறியுள்ளது. தேசிய வேலைத்திட்டத்துடன் பிணைந்து இருக்கும் இந்த அமைப்புக்கள், அடிப்படையில் பிற்போக்கான பங்கைத்தான் செய்யமுடியும்." பொருளாதார தேசியவாதத்தை வளர்க்க விரும்பும் தொழிற்சங்க அதிகாரிகளும் மற்றவர்களும், குறிப்பாக டெனிஸ் குஷிநிக் (Dennis Kucinich), ரால்ப் நாடெர் போன்றவர்கள், முதலாளித்துவத்தின் ஒரு அம்சத்தை குறைகூறினாலும், இலாப அமைப்பை முற்றிலுமாக ஆதரிக்கின்றனர். ஆனால் முதலாளித்துவத்தின் இயல்பே தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதுதான். 1950களின் ஆரம்பத்தின்போதே, டிட்ரோயிட்டின் மூன்று பெரிய மோட்டார் நிறுவனங்களும் அதிக அளவு தொழிற்சங்க அமைப்புக்கள் இருந்த பகுதிகளிலிருந்து, எங்கு குறைந்த செலவினங்களுக்கு உழைப்பு கிடைக்கிறதோ அத்தெற்கு பகுதிகளுக்கு தங்கள் அலுவல்களை மாற்ற தலைப்பட்டனர். ஆயினும், இன்றைய தொழில்நுட்பவியல், போக்குவரத்துத்துறை முன்னேற்றம், பெருநிறுவனங்களை, உலகம் முழுவதிலும் எங்கு குறைந்த கூலிக்கு உழைப்பு கிடைக்கிறதோ அங்கு மாற்றுவதற்கு வகை செய்துள்ளன. வேலை அழிப்புக்களுக்கு மூலகாரணம் வர்த்தகமோ அல்லது பூகோளமயமாக்கலோ கூட அல்ல. தனியார் சொத்துக்குவித்தலுக்கு, மனிதத்தேவைகளை அடிபணியவைக்கும் ஒரு பொருளாதார முறையேயாகும். உலகத்தில் பாதி மக்கள் நாளொன்றுக்கு இரண்டு டாலருக்கும் குறைவில் வாழ்க்கை நடத்தும்பொழுது, 597 நபர்கள் $1.9 டிரில்லியனை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தலை அனுமதிக்கும் ஒரு அமைப்பு வரலாற்றளவில் உறுதியாக அழிந்துதான் போகும். உலக வர்த்தக முறையை அகற்றிவிடுவது அல்லது தேசிய அரசு எல்லைகளை கடந்து உற்பத்திமுறை வளர்ந்துள்ளதை முறிப்பதோ, கற்பனாவாதமும் பிற்போக்குத்தனமும் ஆகும். மேலும் அது மைய பிரச்சனையை -மக்களின் சமூக தேவைகளுடன் இலாப அமைப்பு இயைந்து போக முடியாது என்பதை குறிவைக்காமல், வெளியே குறைவூதிய நாடுகளுக்கு வேலைகள் கொடுத்தலை (Outsourcing) தாக்கமுடியும் என்ற பிரமையை முன்னிலைப்படுத்துகிறது. தொழிலாளர்கள் தங்களுடைய சிந்தனை முறையை மாற்றிக்கொண்டு தங்களை சர்வதேச வர்க்கத்தின் பகுதியாகக் காணவேண்டும். பெருநிறுவனங்கள் தங்கள் செயற்பாடுகளை பூகோள ரீதியில் அமைத்துக் கொள்ளுவது போலவே, தொழிலாளர்களும் தங்கள் போராட்டங்களை சர்வதேச அளவில் ஒழுங்கமைக்க கற்றுக் கொள்ள வேண்டும். பாதுகாப்புவாதமும், தேசியவாதமும் இந்தப்போராட்டத்தை ஊடறுத்து தொழிலாளர்களை யார் மோசமான ஊதியங்களையும், நிலைமைகளையும் ஏற்றுக்கொள்வது என்ற பந்தயத்தில்தான் தள்ளிவிடும். அமெரிக்க தொழிலாளர்களால் எடுக்கப்படும் அத்தகைய நிலைப்பாடு, மெக்சிகோ, இந்தியா, சீனா, இன்னும் குறைந்த ஊதியம் பெறும் மற்ற நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் ஊதியங்களையும் வாழ்க்கை தரங்களையும் உயர்த்திக்கொள்ள வலு அளிக்கும். பெரு நிறுவனங்களும் தொழிற்சங்கங்களும் வளர்த்து வரும் "அவர்களுக்கு எதிராக நமக்கு" என்ற மனப்பான்மையை விட்டு ஒழித்து, உலகின் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பான வேலைக்கும் கெளரவமான வாழ்க்கைத் தரம் அமைப்பதற்காக மேற்கொள்ளும் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றிலிருந்து நாம் என்ன படிப்பினைகளை அறிந்து கொள்ள முடியும்? மதம், இனக்குழு, இனம் இவற்றின் எல்லைகளை கடந்து தொழிலாள வர்க்கத்தின் போராட்ட ஐக்கியத்தை ஏற்படுத்தாவிட்டால், ஒரு நலனைக் கூட வென்றெடுக்க முடியாது. 1930 களில் உள்ளிருப்பு போராட்டம், பொது வேலை நிறுத்தங்கள் ஆகியவற்றை அமைத்திருந்த சோசலிச மனப்பான்மை கொண்டிருந்த தொழிலாளர்கள், பெருநிறுவனங்கள் உழைக்கும் வர்க்கத்தை பிரிக்க இனவேறுபாட்டை தூண்டிய முயற்சிகளை நிராகரித்து, கறுப்பு, வெள்ளை தொழிலாளர்கள் ஒன்றுபட பாடுபட்டதுடன், இத்தாலி, கிழக்கு ஐரோப்பாவிலிருந்து குடியேறியிருந்த பல மொழிகள் பேசும் தொழிலாளர்களையும் இணைத்துக்கொண்டு போராடினர். என்னுடைய சித்தப்பாக்களும், மாமன்மார்களும்கூட NAACP [National Association for the Advancement of Colored People] ஆல் 1941ல், மிச்சிகனில் டியர்போர்ன் என்ற இடத்தில் இருந்த போர்ட் ரூஜ் உற்பத்திக்கூடத்தில் (Ford Rouge plant), பெரும்பாலும் வெள்ளையர்களாய் இருந்த மோட்டார் தொழிலாளிகளது வேலைநிறுத்தத்தை உடைக்கும் நோக்கத்துடன், தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள முடிந்ததுதான் தாமதம், முதலாளித்துவத்திற்காக கருங்காலிகளாக மாறாமல் அவர்கள் வெளியேவந்து போராட்டத்தில் இணைந்துகொண்டு, தொழிலாளர்கள் போர்டிற்கு எதிராக வெற்றிபெற முடிந்தது. அந்த உணர்வின் அடிப்படையில், இன்று அமெரிக்கத் தொழிலாளர்கள் உலகம் முழுவதும் இருக்கும் தொழிலாளர்களுடன் இணைந்து, நம்முடைய பொது எதிரியாகிய உலகளாவிய இலாப அமைப்புமுறையை எதிர்த்துப் போராட வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் நலன்களின் அடிப்படையில் பூகோள உற்பத்திமுறை மறு சீரமைக்கப்பட வேண்டும்; சமுதாயத்தின் தொழில்நுட்பவியல், அறிவியல், கலாச்சார சாதனைகள் வியத்தகு முறையில் வாழ்க்கை தரங்களை உயர்த்தவும், ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் சமூக சமத்துவமின்மையை அகற்றிவிடவும், ஏழை, பணக்கார நாடுகள் என்ற வேறுபாடுகளை களைந்திடவும் பயன்படுத்தப்பட வேண்டும். உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள மகத்தான சவால்கள், அவர்கள் தங்களுடைய அரசியல் கருத்துக்களை பரிசீலனை செய்து, பெரு நிறுவனங்கள் தயவிலுள்ள அரசியல்வாதிகளாலும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினராலும் வளர்க்கப்பட்டுவரும், காலத்தினால் பழுதாகிவிட்ட சோசலிசத்திற்கு எதிரான தப்பெண்ணங்களை நிராகரிக்கவேண்டும். கம்யூனிச எதிர்ப்பு கிட்டத்தட்ட பாதி அரசாங்க மதம் போலவே அடைந்த நிலை ஏற்பட்ட ஒரு நாட்டில், வேறு எந்த முன்னேறிய நாட்டிலும் இல்லாத அளவிற்கு மோசமான நிலையில் சமூக சமத்துவமின்மை காணப்படுகிறது என்பதில் ஏதாவது தற்செயல் நிகழ்வுப் பொருத்தம் உள்ளதா? ஆயினும், முதலாளித்துவத்தின் நெருக்கடி, சோசலிசத்திற்கான வலுவான வாதத்தை கொடுக்கிறது. புஷ்ஷோ அல்லது ஜனநாயக கட்சி போட்டியாளரோ, தேர்தலுக்குப்பின் வெள்ளை மாளிகையில் உட்கார்ந்தாலும், இன்னும் பரந்த தொழிலாளர், மாணவர்கள் தட்டுக்கள் அரசியல் போராட்டத்தில் தள்ளப்படுவர். பில் வான் ஒகெனும், நானும் மேற்கொண்டுள்ள பிரச்சாரம், இலாபமுறையினால், மனிதகுலத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பெரும் முட்டுக்கட்டைக்கு ஒரு சோசலிச பதிலீட்டை தயாரித்து அளிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. |