World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள் :
கிழக்கு
ஐரோப்பா Polish prime minister resigns amid mass opposition to social devastation சமுதாய சீரழிவிற்குப் பொதுமக்கள் எதிர்ப்பின் மத்தியில் போலந்து பிரதமர் பதவிவிலகல் By our reporters போலந்து பொருளாதாரத்தை "சீர்திருத்துவதற்கான" அவரது அரசாங்க திட்டங்களாலும் மற்றும் ஈராக்கில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள போருக்கு ஆதரவு தந்திருப்பதாலும் மிகப்பெருமளவிற்கு மக்களிடையே அதிருப்பதி வளர்ந்து சமுதாய சீரழிவுகள் தோன்றியுள்ளதை அடுத்து, கடந்தவாரம் போலந்து பிரதமர் லெஸ்ஸெக் மில்லர் (Leszek Miller) பதவி விலகினார். ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இந்நாடு இணையவிருக்கும் வேளையில் போலந்து அரசாங்கத்தின் அண்மைய இந்த நெருக்கடி தோன்றியுள்ளது. இந்த ஆண்டு மே முதல் தேதி அன்று, போலந்து சம்பிரதாய முறையில் EU உறுப்பினராகின்றது. ஆயினும், எந்த சூழ்நிலையிலும் இந்த நடவடிக்கையால் போலந்து மக்கள் எதிர்நோக்கியுள்ள இன்றைய சமூக துன்பங்கள் மாறாது. மாறாக பெரும்பாலான போலந்து மக்களுக்கு அந்நாடு EU வில் உறுப்பினராக சேருவது அவர்களது சமூக அந்தஸ்தை படுமோசமாக்குவதை அர்த்தப்படுத்தும். 1989-ல் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் வீழ்ச்சியடைந்த பின்னர், பதவிக்கு வந்த ஒவ்வொரு போலந்து அரசாங்கமும் தொழிற்துறையை, விவசாயத்தை முற்றிலும் தனியார் உடைமையாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டன மற்றும் அதேபோல் சுரங்கம், எஃகு போன்ற பழைய தொழிற்துறைகளை மூடிவிட்டனர். "அதிர்ச்சி வைத்தியம்" (Shock Therapy) என அழைக்கப்பட்ட நடவடிக்கைகளாலும் இதர அரசாங்க கொள்கைகளாலும் பெரும்பாலான மக்களது வாழ்க்கைத்தரமும் வேலை வாய்ப்புக்களும் அழிக்கப்பட்டன. ஊழலும், வேண்டியவர்களுக்கு சலுகைகாட்டும் போக்கும் அரசியல் மற்றும் வர்த்தக வட்டாரங்களில் மிகவும் அருவருக்கத்தக்க அளவிற்கு வளர்ந்து விட்டது. மக்களது ஆத்திரமும், ஏமாற்றமும் தொடர்ந்து அரசாங்கங்கள் தேர்தலில் தோல்வியுறும் நிலையை உருவாக்கின. அத்தகைய அரசாங்கங்களை நடத்திவந்த கட்சிகள் தேர்தல் முடிந்ததும் மறைந்துவிடுவது, அதன் பின்னர் வேறு உருவில், புதிய பெயரில் வடிவெடுப்பது வாடிக்கையாகிவிட்டது. நடப்பு சிறுபான்மை அரசாங்கம் முன்னாள் பிரதமர் லெசெக் மில்லர் தலைமையில் நடந்து வந்தது. அது பழைய ஸ்ராலினிச அரசுக் கட்சியான PZPR மற்றும் தொழிலாளர் மையம் UP ஆகியவற்றை கொண்ட ஜனநாயக இடது கூட்டணியை (SLD) அடிப்படையாகக் கொண்டது. அவை தங்களது ஆட்சிக்காலத்தில் போலந்தை EU வில் நுழைவதற்கு தகுதியுள்ள நாடாக ஆக்குவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வந்தன. அவர்கள் சமூக நலத்திட்டங்களில் பெருமளவு வெட்டுக்களை கொண்டுவந்தனர் மற்றும் தனியார் மயமாக்கினர். அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டதை ஆதரித்தனர். விருப்ப கூட்டணி என்று அழைக்கப்பட்டதன் ஓர் அங்கமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வழியை பின்பற்றி, ஈராக்கிற்கு போலந்து துருப்புக்களை அனுப்பினார்கள். ஆயினும், இதுவரை எதிர்பார்க்கப்பட்ட மறுகட்டுமான ஒப்பந்தங்களில் எதுவும் வெகுமதியாக அவர்களுக்கு கிடைக்கவில்லை. போலந்தின் சமூக நிலைப்பாடு படிப்படியாக சீர்குலைந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் 20-சதவீதத்திற்கு மேல் உள்ளது. இளைஞர்கள் 40-சதவீதத்திற்கு மேல் வேலையில்லாமல் உள்ளனர். வார்சோ பல்கலைக்கழக ஆய்வின்படி, போலந்தில் 40-சதவீத வீடுகள் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. வேலையில்லாத்திண்டாட்ட உதவித்தொகை மிகக்குறைவானவை, மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவருக்குத்தான் வழங்கப்படுகிறது. குறிப்பாக கிராமப்பகுதிகளில் நிலைப்பாடு மிக மோசமாக உள்ளது. தேசிய உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (GDP) விவசாயத்தின் பங்கு 3.3 சதவீதம் அப்படியிருந்தும் 5-பேரில் ஒருவர்தான் விவசாயத்தில் பணியாற்றுகின்றனர். பல்வேறு ஆய்வுகள் எடுத்துக்காட்டியிருப்பது போல் 26-சதவீத விவசாய வர்த்தகம் இனி கட்டுப்படியாகாது. பல விவசாயிகள் தங்களது சொந்த வாழ்விற்காகவே விவசாயத்தை செய்கின்றனர். சிறிய துண்டுகளாக நிலம் பிளவுபட்டுக் கிடக்கிறது. அதனால் முற்றிலும் வறுமையில் உள்ளனர். அடுத்தக்கட்ட பொருளாதார கட்டமைப்பு சீர்திருத்தங்களில் இந்த மக்களது உயிர்வாழ்விற்கான அடிப்படையும் பறிக்கப்பட்டுவிடும். போலந்தின் நிதியமைச்சர் Jerzy Hausner இந்த வகையில் தீவிர கெடுபிடிக்கொள்கை பொதியம் வழியாக நடவடிக்கைகளை மேற்கொண்டார். Hausner திட்டம் என்று அழைக்கப்பட்டதில் 30-க்கும் மேற்பட்ட புதிய சட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றின் மூலம் 2007-வரை 32-பில்லியன் Zloty (6.7 யூரோக்கள்) செலவினங்கள் குறைப்பதற்கு வழிசெய்யப்பட்டன. யூரோ மண்டலத்தில் சேருவதற்காக அந்த நிபந்தனைகளை திருப்திப்படுத்துவது இந்நடவடிக்கைகளின் நோக்கம் ஆகும். இதன் பொருள் என்னவென்றால் நடப்பு பற்றாக்குறையான 4.9- சதவீத GDP ä 3-சதவீதத்திற்கும் கீழாக குறைப்பது ஆகும். இதில் மிகப்பெருமளவிற்கு பாதிக்கப்படுவது ஏற்கனவே குறைந்த பட்ச ஓய்வூதியம் பெறுபவர்கள்தான். 2005-முதல் வருடாந்தர பணவீக்கம் அடிப்படையில் ஓய்வூதியம் உயராது. ஆண்டு விலை வீதம் தொடர்ந்து இரண்டாண்டுகளுக்கு 5-சதவீதம் நீடித்தால் மட்டுமே அடுத்த ஆண்டு ஓய்வூதியம் உயர்த்தப்படும். 25-ஆண்டுகள் பணியாற்றியவர்கள் 65-வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால் அவர்கள் ஓய்வூதியம் பெறுவார்கள். இதுவரை 20-வருட சேவைக்கு ஓய்வூதியம் கிடைத்தது. தகுதியற்ற ஓய்வூதியங்களை பெறுவது சிரமம். முன்கூட்டியே ஓய்வுபெறும் முறை ஒழிக்கப்பட்டுவிட்டது. இது தவிர 2014- முதல் பெண்கள் ஓய்வுபெறும் வயது படிப்படியாக 60-முதல் 65-வரை உயர்த்தப்படுகிறது. இதர சமூக நலனுக்கான எல்லா சலுகைகளும் முடக்கப்படும், பணவீக்கத்திற்கேற்ப சரிசெய்யப்படமாட்டாது. இதில் குறைந்த பட்ச ஊதியத்திற்குத்தான் விதிவிலக்கு. நோய் ஏற்படும் போது அடிப்படை ஊதியத்தில் 80-சதவீதம் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை 70-சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான கிராம தொழிலாளர்களது சமூக காப்பீட்டு சந்தா தொகை உயர்த்தப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் ஏற்கனவே தனியார்மயம் முந்திய சீர்திருத்தங்களில் பாதிக்கப்பட்டு வேலையிழந்தவர்களை மேலும் பாதிக்கும். முன்னாள் நிதியமைச்சர் என்ற முறையில் நன்கு தெரிந்தவரான, போலந்து ரிசேர்வ் வங்கியின் நடப்பு தலைவர் மற்றும் 1990 களின் தொடக்கத்தில் "அதிர்ச்சி வைத்தியத்தின் தந்தை"யான Leszek Balcerowicz, Hausner திட்டம்பற்றி கீழ்க்கண்ட விமர்சனத்தை செய்தார்: ''சரியான வழியில் இது முதல் நடவடிக்கை இந்த திட்டம் தேவை. நான் நோய்க்கு இதைவிடக் கடுமையான மருந்து கொடுத்திருப்பேன்''. மில்லர் பதவி விலகியதைத் தொடர்ந்து, போலந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் க்வாஸ்னீவ்ஸ்கி (Alexander Kwasniewski) இன் முதல் நடவடிக்கை அவருக்குப்பதிலாக இன்னும் "வலுவான நடவடிக்கைகளை" எடுத்து போலந்து நலன்புரி அரசை தொடர்ந்து ஒழித்துக்கட்டுவதை உறுதிப்படுத்தும் உத்திரவாதமான நபரைக் கண்டுபிடிப்பதுதான். க்வாஸ்னீவ்ஸ்கி தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான மாரக் பெல்கா-வை மே 2-ல் மில்லருக்கு பதிலாக முன்மொழிந்திருக்கிறார். 52-வயதான பெல்கா நிதித்துறைப் பேராசிரியர், 1980-களில் சிக்காகோவில் புதிய லிபரல் (Neo-Liberal) மில்டன் ப்ரைட்மனிடம் படித்தவர். இரண்டு சந்தர்ப்பங்களில் போலந்து அரசாங்கத்தில் அவர் நிதியமைச்சராகவும் பணியாற்றி வந்திருக்கிறார். போலந்து பொருளாதார சீரமைப்பு தீவிரத்திட்டங்களில் பெல்கா விட்டுக்கொடுக்க மறுத்த பின்னரே, சென்ற ஆண்டு மில்லர் பெல்கா-வை நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து விலக்கினார். போலந்து அரசாங்கத்தில் அவரது பதவியை விட்ட பின்னரை, பெல்கா ஈராக்கில் அமெரிக்கா தலைமையில் பொருளாதார வர்த்தக சீரமைப்பிற்கான பொறுப்பு வகிக்கும் மத்திய அதிகாரியாக பணியில் இருக்கிறார். ஜனாதிபதி க்வாஸ்னீவ்ஸ்கியால் பெல்கா பொறுப்பில் அமர்த்தப்படல் இரண்டு அறிகுறிகளை தெளிவாக உணர்த்துகின்றன: ஒன்று போலந்து பொருளாதார சீரமைப்பு, பரந்த மக்களை பாதிக்கின்ற வகையில் நீட்டிக்கப்படும். இரண்டாவது, பரந்துபட்ட பொதுமக்கள் எதிர்பபிக்கு முன்னே, போலந்து ஜனாதிபதி ஈராக்கில் அமெரிக்கா மேற்கொண்ட கிரிமினல் போரை ஆதரித்து நிற்கிறார். இதற்கிடையில் SLD அரசாங்கம் மக்களில் மிகப்பெரும்பாலானவரின் எதிர்ப்பை சந்திக்கிறது. எதிர்கால தேர்தலில் அக்கட்சி 11-சதவீத வாக்குகளைத்தான் பெறும் என்று கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கட்டத்தில் புதிய தேர்தலை சந்திக்கும் பரபரப்பை தவிர்ப்பதற்காக மக்கள் செல்வாக்கை இழந்த பெல்காவை நியமிப்பதற்கு SLD ஏற்கனவே சம்மதம் தெரிவித்துவிட்டது. போலந்து கூட்டணி அரசாங்கத்தின் கொள்கைகள் இன்னும் கொடூரமான வலதுசாரி நிர்வாகத்திற்கு வழியமைத்துவிட்டது. எதிர்க்கட்சியான Citizens Platform (PO) மக்கள் கருத்துக்கணிப்பில் 30-சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. Andrzej Lepper தலைமையிலான அதிதீவிரவாத தேசிய Samoobroona 23-சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. அடுத்த தேர்தலில், போலந்து தொழிலாள வர்க்கத்திற்கு மீண்டும் உண்மையான மாற்றுவழி இல்லாத நிலையில் தீவிர பொருளாதார சீரமைப்பை ஆதரிப்போர் அல்லது பிற்போக்கு தேசியவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. |