World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The
real lessons of Fallujah

பல்லூஜாவின் உண்மையான படிப்பினைகள்

By Barry Grey
3 April 2004

Back to screen version

அமெரிக்க துணை இராணுவ பணியாளர்களின் சிதைந்துவிட்ட சடலங்கள் தொடர்பாக, பல்லூஜாவில் ஆத்திரங்கொண்ட ஈராக்கியர்கள் கொண்டாடும் நடவடிக்கைகள் தொடர்பாக புதன் கிழமையன்று உலகம் முழுவதும் மிக பயங்கரமான காட்சிகள் சித்தரிக்கப்பட்டன. ஆனால் அது பயங்கரமான சட்டவிரோத காலனித்துவ போரினால் உருவானது என்பதை மறந்துவிடக்கூடாது. ஆக்கிரமிக்கப்பட்ட மக்கள்மீது திட்டமிட்டு மிதமிஞ்சிய தங்களது இராணுவ வலிமையால் வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் கொடூரமான நடவடிக்கைகளை எடுக்கும்போது, அந்த மக்கள் தங்களது கோபத்தையும், ஆவேச உணர்வுகளையும் அது போன்ற பழிக்கு பழிவாங்கும் செயல்களால் வெளிப்படுத்தியதற்கு வரலாற்றில் நிறைய உதாரணங்கள் உண்டு.

அங்கே சமுதாயம் முழுவதும் மிகக்கொடூரமான நிலைக்கு தள்ளப்படுவதற்கு காரணமாக இருக்கும் ஊடகங்கள், இராணுவத்தலைமை அதிகாரிகள் மற்றும் அமெரிக்க அரசியல் நிர்வாகம் ஆகியவை தற்போது தற்போது தார்மீக ஒழுக்கநெறி பாவனையை உருவாக்கிக்காட்டுவதற்கு எந்த உரிமையுமில்லை. மிகவும் மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையே கொடூரங்கள் நிறைந்தவையாக மாற்றியிருக்கிறார்கள். ஈராக்கை அமெரிக்கா கைப்பற்றிக்கொண்டமையானது எல்லா வகையிலும் ஒரு கிரிமினல் நடவடிக்கைதான். அத்தோடு தொடர்புடைய ஒவ்வொரு செயலும் வெறுக்கத்தக்கது மற்றும் இழிவுபடுத்துவது ஆகும். அமெரிக்க வரலாற்றில் மிகவும் வெட்கக்கேடான அத்தியாயங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.

எட்டு மாதங்களுக்கு முன்னர்தான் அமெரிக்க அரசாங்கம் சதாம் ஹூசைனின் புதல்வர்கள் உதய் மற்றும் குசே ஆகிய இருவரையும் சுட்டுக்கொன்றது என்பதையும், இரண்டு நாட்களுக்குப் பின்னர் துப்பாக்கிக் குண்டு துளைத்த அவர்களது உடல்களைப் பற்றிய வீடியோ படங்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டதையும் நினைவுப்படுத்திக் கொள்ளவேண்டும். அந்த நேரத்தில் அந்தக் கொடூரமான காட்சிபற்றி இயல்பான உணர்வு எதுவும் வெளிப்படவில்லை. இது திட்டமிட்டு அமெரிக்க ஆக்கிரமிப்பின் எதிர்ப்பாளர்களை அச்சுறுத்துவதற்காகவும், உற்சாகம் இழக்கச் செய்வதற்காகவும் மேற்கொள்ளப்பட்டதாகும்.

அரசியல் தலைவர்கள், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியினர், எல்லா வகையான ஊடகங்களின் கிளைகள் "தாராண்மை" போக்கினர் பழமைவாதப்போக்கிற்கு இணையானவர்கள், ஆகிய அனைவருமே உருவாக்கிய போரைத் தொடர்ந்து வந்த மலைபோன்ற பொய்களை திசை தடுமாற விட்டுவிடக்கூடாதென்றும் ஈராக்கில் சமாதானத்தை நிலைநாட்டும் பணியை பூர்த்திசெய்ய வேண்டுமென்றும் கோரிவருகிறார்கள். பல்லூஜா சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு வகைகளில் இரத்தம் சிந்தும் வேட்கைகளை, ஈராக் மக்களை தீவிரமாகக் கொல்லுவதை, அச்சமூட்டும் நடவடிக்கைகளை மற்றும் சிறைவைப்பதை தொடர வலியுறுத்தி வருகின்றனர்.

இப்படிச் செய்வதற்கு பழைய பொய்கள் அம்பலப்படுவதை ஈடுகட்டும் வகையில் புதிய பொய்களை தொடர்ந்து கட்டவிழ்த்து விடுவது அவசியமாகும். ஈராக்போருக்கு ஆயத்தம் நடைபெற்றபோது மிகப்பெரும்பாலான ஈராக் மக்கள் அமெரிக்க படையெடுப்பை வரவேற்பதாக ஒரு பொய் சொல்லப்பட்டது. ஈராக்கியர்கள், சாலைகளின் இருமருங்குகளிலும் திரண்டு நின்று அமெரிக்கப்போர் வீரர்களுக்கு மலர் தூவி பூச்செண்டு கொடுத்து வரவேற்பார்கள் என்று அமெரிக்க மக்களுக்கு சொல்லி வந்தார்கள். இந்தக் கற்பனை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. போரின் ஆரம்ப நாட்களில் ஈராக்போர் வீரர்கள் மிகக்குறைந்த ஆயுதங்களை கொண்டு எதிர்பாராத வகையில் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். பாக்தாத்தை அமெரிக்கா பிடித்துக்கொண்ட சில நாட்களுக்குள் அமெரிக்காவிற்கெதிராக பொதுமக்களது கண்டனங்கள் வெடித்தன.

அதற்குப் பின்னர், புதிய கட்டுக்கதைகளை உருவாக்கினார்கள். இந்த எதிர்ப்பு உணர்வுகள் பயங்கரவாதிகளின் மிக சிறுபான்மையினரின் உணர்வுகள், ''சதாமிஸ்டுகள்'', கிரிமினல்கள் மற்றும் ஜனநாயகத்தின் திருத்த முடியாத எதிரிகளின் உணர்வுகளை பிரதிநிதத்துவம் செய்கிறது என்று கதை கூறினார்கள். பாக்தாத்திற்கு மேற்கிலுள்ள சுன்னிகள் வாழும் முக்கோணப்பகுதி என்றழைக்கப்படும் இடத்தில் நாகரீகத்தின் எதிரிகள் குவிந்து கிடப்பதாகவும் அதில் படுமோசமானவர்கள் பல்லூஜாவில் உள்ளதாகவும் கதை அளந்தார்கள்.

அதிகாரபூர்வமான நிலைப்பாட்டிற்கு முரண்பாடாக பல்வேறு உண்மைகள் வெளிவந்த நேரத்தில் திட்டமிட்டு விளக்க முடியாத அளவிற்கு ஊழல்மலிந்த ஒழுக்கம் சிதைந்த அமெரிக்க பத்திரிகைகள் மூடிமறைத்தன. எடுத்துகாட்டாக நான்கு அமெரிக்கர்கள் பல்லூஜாவில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட அன்று பாக்தாத் தெருக்களில் 10,000- ஷியா முஸ்லீம்கள் அமெரிக்காவிற்கு எதிரான செய்தி பத்திரிகையை அமெரிக்கா மூடியதைத் கண்டித்தும், அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரியும் கண்டனப்பேரணி நடத்தியமை எத்தனை அமெரிக்கர்களுக்கு தெரியும்?

இப்படி அப்பட்டமாக ஈராக்கின் உண்மையான நிலவரத்தை திரித்து தகவல்கள் கொடுத்ததன் நோக்கத்தை அறிந்து கொள்வதில் சிரமமில்லை. தங்களது சொந்த நாட்டிலிருந்து வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவதற்கு போராட்டம் நடத்துபவர்கள், அவர்களின் எதிர்ப்பின் விளைவாக கிரிமினல்கள், நடப்பு மொழியில் சொல்வதென்றால், அவர்களை ''கொல்ல வேண்டும் அல்லது பிடிக்க வேண்டும்'' அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் மீது அமெரிக்கப் படைகள் மேலும் ஒடுக்குமுறைகளை மேற்கொள்வது, கொலைசெய்வது, ஆகியவை நியாயப்படுத்தப்படுகின்றன.

இந்த நாட்டில் நடப்பு போரில் ஆயிரக்கணக்கானோர், ஏன் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஈராக் மக்களது வாழ்வை அமெரிக்கா எந்த அளவிற்கு துச்சமாக மதிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகின்ற வகையில் அமெரிக்க அரசாங்கம் போரில் மடிந்தவர்களது எண்ணிக்கையைக்கூட வெளியிடுவதில் அக்கறைப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது பணிகளை, வீடுகளை கண்ணியமான வாழ்வை இழந்துவிட்டார்கள். மாண்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பலர் மனித தசைகளை வெட்டிச் சிதைக்கும் அவசரத் தேவைக்காக அமெரிக்காவால் போடப்பட்ட படுபயங்கரமான தனிமனிதர்களை பாதிக்கும் குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளால் பாதிக்கப்பட்டவர்களாவர். அமெரிக்கர்களது சாவு எண்ணிக்கை அதிகாரபூர்வமான கணக்கின்படி தற்போதுவரை 600-ஐ எட்டி இருக்கிறது.

பல்லூஜா சம்பவங்களை தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகளும், ஊடகங்களும் கடைப்பிடித்துவரும் தொனியைப் பார்க்கும்போது மிகப்பெருமளவிற்கு இரத்தக்களரி, பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு திட்டமிடுகிறார்கள் என்று தோன்றுகிறது. ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ நிர்வாகி எல். போல் பிரேமர் நான்கு அமெரிக்கர்களை கொன்று அவர்களது சிதைந்த உடல்கள் மீது மகிழ்ச்சிக் கூத்தாடியவர்களை, "பிசாசுகள் மற்றும் கோழைகள்" என்றும் வர்ணித்தார். பாக்தாத்தில் பிரிகேடியர் ஜெனரல் Mark Kimmitt, பல்லூஜா மக்கள் "இழிந்தவர்கள்" என்ற முத்திரையையை "மட்டும் பெறவில்லை" என்றும் கண்டிப்பாகவும் அவர்களை "நிலைகுலையச் செய்கின்ற வகையில்" "துல்லியமாக" அமெரிக்க இராணுவ நடவடிக்கை அமையுமென்றும் குறிப்பிட்டார்.

ரூபேர்ட் முர்டோக்கின் நியூயோர்க் போஸ்ட் எழுதிய தலையங்கம் பல்லூஜா கூட்டத்தினரை "குண்டர்கள்" என்றும் "கொலைவெறி கொண்ட கொடூரமான காட்டுமிராண்டிகள்" என்றும் குறிப்பிட்டது. அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அமெரிக்க சடலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குல்களை வீடியோ மற்றும் நிழற்படங்கள் வெளியிட்டதற்காக அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் கிளர்ச்சிக்காரர்களோடு சேர்ந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியது.

வோல்ஸ்ரீட் ஜேர்னல் தனது தலையங்கத்தில் புதன்கிழமை சம்பவங்களில் கலந்து கொண்டவர்கள் நிழற்படங்களை பார்த்து அவர்களை கைதுசெய்து பகிரங்கமாக பொது இடத்தில் அவர்களை தண்டிக்கவேண்டும் என்று கோரியுள்ளது. இராணுவத்தில் சம்மந்தப்படாத இதுபோன்ற போராளிகளை பிடித்து வந்து இராணுவ நீதிமன்றங்களில் விசாரணை செய்து பகிரங்கமாக அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. தீவிர அமெரிக்க எதிர்ப்பு ஷியா மத போதகர்களையும் அவர்களது தொண்டர்களையும் அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்தப் பத்திரிகை கேட்டுக்கொண்டது.

Journal- ன் ஆன் லைன் பதிப்பு அதன் கட்டுரையாளர் Peggy Noonan- ன் விமர்சனம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. எரிந்துவிட்ட இரண்டு அமெரிக்கர்களின் சடலங்களை பாலத்திற்கு கீழே தொங்கவிட்டு அதைக்கண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்த இளைஞர்கள் கொடூர உணர்வுகளின் மனித வெளிப்பாடுகளென்று வர்ணித்த அந்த விமர்சனம், அமெரிக்க கடற்படைவீரர்கள் அந்த இளைஞர்களை பல்லூஜாவில் புகுந்து கைது செய்யவேண்டும் அல்லது கொல்லவேண்டும் மற்றும் அந்தப்பாலத்தை தகர்த்தெறிய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டது.

வாஷிங்டன் போஸ்டின் தொனி சற்று கட்டுக்கடங்கியதென்றாலும், கருத்து ஒன்றுதான். அமெரிக்க கமாண்டர்கள் "சன்னி கிளர்ச்சிக்கு எதிரான எதிர்த் தாக்குதலை" முடுக்கிவிட வேண்டும் என்று கோரியுள்ளது. ஷியா மதபோதகரான Moqtada Sadr- ன் அமெரிக்காவிற்கு எதிரான போராளி இராணுவத்தை கலைத்துவிட வேண்டுமென்று கோரியது. இந்தப்போரினால் புஷ் நிர்வாகத்தின் நடவடிக்கையோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்ட ஜனநாயகக்கட்சி வேட்பாளர் ஜோன் கெர்ரி -ஐ பாராட்டியது, ''இந்த எதிரிகள் தலைதூக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இணைந்திருக்கிறோம்'' என்று அறிவிக்கப்பட்டது.

போஸ்ட் இன் நிலைப்பாடு என்னவென்றால், ஈராக்கிற்கு மேலும் அமெரிக்கத்துருப்புக்கள் தேவை என்பதுதான். இது ஜனநாயகக் கட்சியின் அணுகுமுறையை ஒட்டியது. இராணுவ வலிமையைப் பயன்படுத்துவதில் மிகுந்த பய உணர்வோடு, வெள்ளைமாளிகை செயல்பட்டுவருகிறது என்ற குற்றச்சாட்டு அடிப்படையில் புஷ் நிர்வாகத்தின் போர்க்கொள்கையை நிபந்தனை எதுவுமில்லாமல் ஆதரிப்பது ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாடாகும்.

அமெரிக்க இராணுவ வன்முறையை தீவிரப்படுத்துவற்கு முன்னேற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் வெள்ளை மாளிகை ஊடகங்களுக்கு, ஈராக் மோதல் தொடர்பான செய்திகளை மேலும் முன்தணிக்கை செய்யவேண்டும் என்று பொது எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது. புதனன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த வெள்ளை மாளிகை அதிகாரி Scott Mcclellan செய்தி நிறுவனங்கள் "தங்களது செய்தி சேகரிப்பில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளவேண்டியது கடமை" யென்று குறிப்பிட்டார்.

பிரிட்டனின் கார்டியன் பத்திரிகையை சேர்ந்த Jonathan Steele வெள்ளிக்கிழமையன்று பிரசுரித்துள்ள ஒரு தகவல் பல்லூஜா நிகழ்ச்சிகள் பற்றிய சில நடுநிலையான தகவல்களில் ஒன்று ஆகும். புதன்கிழமையன்று பொதுமக்களது வெறுப்பு வெடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் வரை, அமெரிக்க கடற்படையினர் மேற்கொண்ட கொடூரமான நடவடிக்கைகளை Steele, Fallujah- விலிருந்து எழுதினார். ''சில நாட்களுக்கு முன்னர் அந்நகர மக்கள் நிருபர்களை தங்களது வீடுகளுக்கு அழைத்துச் சென்றார்கள்", "நான்கு அமெரிக்க பாதுகாப்பு காவலர்கள் மீது இந்த வாரம் தாக்குல்கள் நடப்பற்கு சன்று முன்னர் (அவர்களை கூலிப்படையினர் என்றழைப்பதுதான் பொறுத்தமான சொல்லாகும்) அப்போது ஆழமான வகுப்புவாத ஆவேசம் நிலவியதையும் வெடிக்கும் கட்டத்திற்கு வந்துவிட்டதையும் உணரமுடிந்தது. சென்றவாரம் நான்கு நாட்கள் பகலிலும், இரவு நேரத்திலும் அமெரிக்கர்கள் நடத்திய பல தாக்குதல்களை எங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்பினர்.

''ஹெலிகாப்டர் குண்டு வீச்சு விமானங்களிலிருந்து வீசப்பட்ட ராக்கெட்டுகள் படுக்கையறை சுவர்களை துளைத்துக்கொண்டு சென்றிருக்கின்றன. முன்பகுதி தரைகள் மற்றும் வாசல்களில் குண்டு சிதறல் முத்திரைகள் காணப்படுகின்றன. கார் கதவுகள் ஒன்றோடொன்று இணைந்து கொண்டன. இந்த கொடூர தாக்குதலில் 18- ஈராக்கியர் மாண்டனர். அமெரிக்க தரப்பில் 2-கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். ஓராண்டு ஆக்கிரமிப்பில் பல்லூஜா சந்தித்துள்ள மிகக்கொடூரமான வன்முறைக்காலம் இதுவேயாகும்.

''எனவே இந்த வார எதிர் நடவடிக்கையில் ஆச்சரியத்திற்கு எதுவுமில்லை, அமெரிக்கத் துருப்புக்கள் கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள், பாலஸ்தீன மக்களது ஆத்திர உணர்வைப்போன்று இங்கும் ஆத்திரம் நிலவுகிறது. ஆக்கிரமிப்புப்படைகள் மிதமிஞ்சிய வன்முறையை பயன்படுத்தும்போது இதுதான் நடக்கும்'' என்று Steele எழுதியிருக்கிறார்.

ஈராக்கியர் காட்டிவரும் எதிர்ப்பிற்கு அமெரிக்கர்கள் மேற்கொண்டுவரும் எதிர் நடவடிக்கைகள் "முறைகேடானவை, கொடூரமானவை" என்று Steele வர்ணித்துள்ளார். பல்லூஜாவாசி ஒருவரின் வீட்டில் அமெரிக்க கடற்படை வீரர்கள் இரவில் தூங்கிவிட்டு, விட்டுச் சென்ற குழப்பத்தை Steele வர்ணித்திருக்கிறார். ''பொருட்கள் அடுக்குப் பலகையை கண்டபடி சூறையாடி இருக்கிறார்கள், கணினியைக் காணோம், ஆர்மி ரேஷன்கள் வைத்திருந்த காலிப்பைகள் ஒவ்வொரு அறையிலும் சிதறிக்கிடக்கின்றன. தனது இளம் சகோதரியின் படுக்கை அறையில் அதைப்பார்த்து அவர் குறிப்பாக அதிர்ச்சியடைந்தார்'' என்று Steele எழுதுகிறார்.

Steele தனது கட்டுரையை இவ்வாறு முடிக்கிறார்: ''அமெரிக்கர்கள் சொல்வதைப்போல் பல்லூஜா மக்களில் பலர் முன்னாள் பாத்கட்சி விசுவாசிகளல்ல. ஏராளமான வெளிநாட்டு 'ஜிஹாதிகள்' இருக்கிறார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரத்தையும் அமெரிக்கர்கள் தரவில்லை. அவர்கள் சாதாரண குடும்பங்களைச் சார்ந்தவர்கள். தேசிய பெருமைமிக்கவர்கள், தங்களது வீடுகள் அண்டை அயலார்களால் தாக்கப்படும்போது அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கொல்லப்படும்போது மிகுந்த வேகத்தோடு அதை எதிர்த்து நின்று போராட ஆர்வம் கொள்பவர்கள்''

உண்மையில், கடந்த பத்துஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா தலைமையில் நடைபெற்றுவரும் பழிவாங்கும் நடவடிக்கைகளின் முழு தாக்கத்தை சந்தித்தவர்கள் பல்லூஜா மக்கள். 1991-ல் முதலாவது வளைகுடாப்போரில் பிரிட்டனின் ஜெட் போர்விமானம் ஒன்று அந்த நகரத்தில் குண்டுவீசித் தாக்கியதில் 200- சிவிலியன்கள் மடிந்தனர். நடப்புப்போரில் பாக்தாத் வீழ்ச்சியடைந்த பின்னர் அமெரிக்கப்படைகள் மேற்கொண்ட முதலாவது கொடூரப்படுகொலை இங்குதான் நடந்தது. 2003-ஏப்ரல் 28-ல் நிராயுதபாணிகளான கண்டனக்காரர்கள் கூட்டத்தில் அமெரிக்க துருப்புக்கள் சுட்டதில் 13-பேர் மடிந்தனர். 2-நாட்களுக்குப்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கண்டனப்பேரணியில் துருப்புக்கள் சுட்டதில் மேலும் 3 பல்லூஜாவாசிகள் மாண்டார்கள்.

இந்த கொடூரங்களுக்கு நடுவில் வாஷிங்டன் தூண்டுதலில் 12 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்ட கொடூரமான பொருளாதார தடைகளால் Fallujah மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உணவு, மருந்து பொருட்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் மறுக்கப்பட்டதால் ஈராக் சமுதாயத்தில் எண்ணிறைந்த மக்கள் மடிந்தனர். ஐ.நா- மதிபீடுகளின் படி பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உட்பட ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் மடிந்தனர்.

புதன் அன்று பல்லூஜாவில் கொல்லப்பட்ட நான்கு அமெரிக்கர்களை பொறுத்தவரை அவர்கள் ''சிவிலியன் ஒப்பந்தக்காரர்கள்'' என ஊடகங்கள் வர்ணித்திருப்பது திட்டமிட்டு தவறான கண்ணோட்டத்தை உருவாக்குவதற்கு தரப்பட்டுள்ள தகவலாகும். தனியார் துணை இராணுவ பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அமெரிக்க ஆக்கிரமிப்பு நிர்வாகம் வழங்கியுள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஈராக்கிற்குள் 15,000- கூலிப்படையினர் புகுந்திருக்கிறார்கள். Black Water USA என்ற கம்பெனியின் துணை நிறுவனமான Black Water பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் அந்த 4- பேரும் பணியாற்றி வந்தனர். இப்படிப்பட்ட கூலிப்படையில் சேர்ந்துள்ள மிகப்பெரும்பாலோர் பல்வேறு அமெரிக்க இராணுவப்பணிகளில் பணியாற்றிவந்த முன்னாள் போர்வீரர்கள், ஈராக்கில் பணியாற்றும் போது அவர்கள் தங்களது ஆயுதங்களுடன்தான் நடமாடுவார்கள்.

Black Water நிறுவனம் முன்னாள் Navy SEAL அதிகாரிகளால் உருவாக்கப்பட்டதாகும். வடக்கு கரோலினாவில் வடகிழக்குப் பகுதியில் 6,000- ஏக்கர் சொந்த வளாகத்தில் இந்த நிறுவனம் உள்ளது. எதிர் கிளர்ச்சி நுட்பங்களை பின்பற்றுவதில் தனியார் கூலிப்படையினருக்கும் அமெரிக்க இராணுவ அதிகாரிகளுக்கும் இங்கு பயற்சியளிக்கப்பட்டு வருகிறது. 2002-ல் அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக 35.7-மில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தை Black Water நிறுவனம் பெற்றது. தற்போது பாசிச சர்வாதிகாரி ஜெனரல் ஓகுஸ்டோ பினோசே (Augusto Pinochet) இன் கீழ் பணியாற்றி வந்த சிலி நாட்டு அதிரடிப்படைவீரர்களுக்கு ஈராக்கில் பணியாற்றுவதற்காக பயிற்சியளித்து வருகின்றது.

Fallujah வில் கொல்லப்பட்ட 4 Black Water பணியாளர்களில் ஒருவர் முன்னாள் இராணுவ வீரர் என்றும் மற்றொருவர் முன்னாள் Navy SEAL என்றும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கம்பெனியின்படி, அவர்கள் பல்லூஜா பகுதிக்கு அமெரிக்கத் துருப்புக்கள் உணவு ஏற்றிச்செல்லும் கவச வாகனங்களின் காவலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக அந்தக் கம்பெனி கூறியது. அவர்கள் தங்களது சொந்த SUV (Sport Unity vehicle) -க்கள் இரண்டை புதனன்று ஏன் நகரமையத்திற்கு ஓட்டிச் சென்றார்கள் என்பது விளக்கப்படவில்லை.

நாம் மேலே கூறியவற்றை சுட்டிக்காட்டிய கார்டியன் கட்டுரை ''அமெரிக்கா தனது சொந்த ஈராக்கிய காசா பகுதியை உருவாக்குகிறது'' என ஒரு துணைத் தலைப்பை தாங்கி வந்திருந்தது. அமெரிக்கா ஈராக்கில் எடுத்துவரும் நடவடிக்கையை இஸ்ரேல் காசா பகுதி மற்றும் மேற்குக்கரையில் எடுத்துவரும் நடவடிக்கையோடு ஒப்புநோக்கி ஆராய்ந்திருப்பது பொருத்தமாகும். ஈராக்கிய மக்கள் மீது காட்டுமிராண்டி காலனித்துவ ஆதிக்க மனப்பான்மையோடு வரும் நாட்களிலும், வாரங்களிலும் மிகப்பெருமளவிற்கு மக்களை கொன்று குவிக்கும் முன்மாதிரி தண்டனைகளை வழங்கும் அமெரிக்க நடவடிக்கைகள் சர்வசாதாரணமாக ஆகிவிடக்கூடும்.

அடிக்கடி பகிரங்கமாக பத்திரிகைகளில் கூறப்பட்டுவருவதைப் போன்று, பல தலைமுறைகளுக்கு இல்லாவிட்டால்கூட பல ஆண்டுகளுக்கு இத்தகைய இரத்தம் சிந்தும் நடவடிக்கைகள் நீடிக்கும். இதன் விளைவுகள் மத்திய கிழக்கு மக்களுக்கு மட்டுமல்லாமல் அமெரிக்க மக்களுக்கும் அளவிட முடியாத இழப்பையும், இறுதியாக பேரழிவையும் உருவாக்கிவிடும். இந்த வாரம் பல்லூஜாவில் நடைபெற்ற சம்பவங்கள் அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் போருக்கும் அதன் ஊற்றுக்காலாக விளங்குகின்ற ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக சுதந்திரமான ஒரு இயக்கத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved