World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil
: செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Former FBI translator says Rice lied about government knowledge of terrorist threats

What did Bush and Rice know of the September 11 plot?

முன்னாள் FBI மொழிபெயர்ப்பாளர், பயங்கரவாத அச்சுறுத்தல் பற்றி அரசாங்கம் அறிந்தது பற்றி ரைஸ் பொய் கூறியுள்ளார் என்கிறார்

புஷ்ஷும் ரைஸும் செப்டம்பர் 11 சதித்திட்டம் பற்றி என்ன அறிந்திருந்தனர்?

By Patrick Martin
6 April 2004

Back to screen version

ரிச்சார்ட் கிளார்க்கின் புத்தகமும் சாட்சியமும் மேலோங்கி நின்றிருந்த வாரத்தின் ஒரு கட்டத்தில், ஜனாதிபதி புஷ் பெரும் எரிச்சலுடன்: "இவைதான் உண்மையில் நிகழ்ந்தவை. அமெரிக்காவிற்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் பற்றி எனக்கு ஜோர்ஜ் டெனட் முறையாக அவ்வப்பொழுது குறிப்புக்கள் கொடுத்துவந்திருந்தார். என்னுடைய நிர்வாகத்திற்கு பயங்கரவாதிகள் செப்டம்பர் 11 நியூயோர்க் நகரைத் தாக்கப் போகிறார்கள் என தகவல் கிடைத்திருந்தால், உறுதியாக நடவடிக்கை எடுத்திருப்போம்." என அறிவித்தார்.

கிட்டத்தட்ட வார்த்தைக்கு வார்த்தை இதேபோல்தான், பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பெல்டும் தன்னுடைய 9/11 விசாரணைக் குழுவில் சாட்சியம் அளிக்கும்போதும் திருப்பிக்கூறியிருந்தார். "கிட்டத்தட்ட, செப்டம்பர் 11க்கு முன் ஆறுமாத காலம் வரையிலும் எங்களுக்கு, பயங்கரவாதிகள் வர்த்தக விமானங்களைக் கடத்தி அவற்றை பென்டகனுக்கோ, உலக வர்த்தக மையத்திற்கோ செலுத்தும் நோக்கம் கொண்டிருந்ததாக குறிப்புக்கள் ஏதும் வரவில்லை" என்று அவர் கூறினார்.

இந்த விநோதமான சட்டமுறையிலான சொற்றொடர் பல கேள்விகளை எழுப்புகின்றன: பயங்கரவாதிகள் வேறு ஏதேனும் நகரத்தைத் தாக்கப்போவதாகவோ அல்லது வேறுவிதத்தில் நியூயோர்க்கை தாக்கப்போவதாக நிர்வாகத்திற்கு தகவல் வந்திருந்ததா? விமானக் கடத்தல் வழி தவிர வேறு ஏதேனும் வகைப்பட்ட தாக்குதலைப் பற்றி அவர்களுக்கு தகவல் வந்திருந்ததா? அல்லது அவர்கள் வர்த்தக விமானங்கள் கடத்தப்படக்கூடும், ஆனால் அவை ஆயுதங்கள்போல் பயன்படுத்தப்படமாட்டா என்று கூறப்பட்டிருந்ததா?

விமானங்கள் கடத்தப்படும் என்றோ, கட்டிடங்களை தாக்க ஏவுகணைகள் போல் அவை பயன்படுத்தப்படக்கூடும் என்றோ, புஷ் நிர்வாகத்தில் எவரும் கற்பனைகூட செய்திருக்க மாட்டார்கள் என்று 2002ல் ரைஸ் கூறியது பரந்த அளவில் மேற்கோளிடப்பட்டது. CIA மற்றும் தேசிய பாதுகாப்பு குழுவின் ஆய்வுகள் 1995-96 லிருந்து விமானங்கள் ஆயுதங்களாக பயன்படுத்தப்படக்கூடும் என்று கூறியது பெரிய அளவில் தெரியவந்தவுடன், 9/11 குழுவிற்கு ஒரு தனிப்பட்ட கடிதம் ஒன்றில், அவ்வாறு கூறவில்லையென்று தெரிவித்துள்ளார்.

மீண்டும் தன்னுடைய கருத்தை மாற்றிக்கொள்ளும் வகையில், ரைஸ், Washington Post க்கு எழுதிய பொதுக்கட்டுரை ஒன்றில், மார்ச் 23 அன்று: "சிலர் கூறியுள்ளது ஒரு புறம் இருக்க, பயங்கரவாதிகள் விமானங்களை, ஏவுகணைகள் போல் பயன்படுத்தி நாட்டை தாக்குவதற்கு தயார் செய்துகொண்டு வருகின்றனர் என்பது பற்றி உளவுத் தகவல் எதுவும் எங்களுக்கு கிட்டவில்லை." என தெரிவிக்கிறார்.

இப்பொழுது, நேரில் பார்த்த சாட்சி ஒருவர், மூத்த அமெரிக்க அதிகாரிகளுக்கு செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு முன்பு அல்கொய்தாவினர் விமானங்களை ஆயுதங்களாக பயன்படுத்த உள்ளனர் என்ற குறிப்பான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டது என்பதைக்கூற முன்வந்துள்ளார்.

பிரிட்டனின் நாளேடான Indepedent க்குக் கொடுத்து ஏப்ரல்2 அன்று வெளிவந்த பேட்டி ஒன்றில், ஒரு பழைய FBI மொழிபெயர்ப்பாளர், உயர்ந்த அளவு பாதுகாப்பு விலக்கு உடையவர், தான் அத்தகைய எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டது பற்றி 9/11 குழுவின் இரகசியக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக கூறியிருக்கிறார்.

33-வயதான துருக்கிய-அமெரிக்க பெண்மணியான சிபெல் எட்மண்ட்ஸ், துருக்கிய, பாரசீக, அஜெர்பைஜானி மொழிகளில் நல்ல தேர்ச்சி உடையவர், செப்டம்பர் 13, 2001 ல் FBI யினால், சில ஆவணங்களை மொழிபெயர்க்கவும், பதிவுநாடாக்களில் இருந்த உரையாடல்கள் சிலவற்றை எழுத்துவடிவில் கொடுப்பதற்காகவும் வேலையில் அமர்த்தப்பட்டார். "விமானத்தை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தும் திட்டம் சில மாதங்களுள் நடைபெறக்கூடும் என்றும் பயங்கரவாதிகள் தத்தம் பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர் என்று கருத்துரைக்கும், 2001 வசந்த காலத்திலும் கோடை காலத்திலும் FBI க்குள்ளே பரிமாறிக்கொள்ளப்படும்" தகவலைக் கேட்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கப்பெற்றிருந்ததாகவும் அப்பெண்மணி கருத்துக் கூறியுள்ளார் என்று Independent தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளது.

எட்மண்ட்ஸ் குறிப்பிட்டதை அப்பத்திரிகை மேற்கோள் காட்டியது: "நான் குறிப்பிட்ட விசாரணை கோப்புக்களை பற்றிய விவரங்களை, குறிப்பிட்ட தேதிகள், குறிப்பிட்ட இலக்குத் தகவல், விசாரணை பொறுப்புடைய குறிப்பிட்ட மேலாளர்கள் ஆகியவற்றை பற்றி குழுவிடம் தெரிவித்துள்ளேன். இது வதந்தி அல்ல. இவை பதிவான சான்றுகளாக ஆவணங்களில் உள்ளன. வெகு எளிதில் இவற்றின் ஆதாரம் புலப்படும்."

ரைஸ் இத்தகைய தகவல் தங்களுக்கு வரவில்லை என அறிக்கை விட்டிருப்பது "ஒரு அப்பட்டமான பொய் ஆகும்." என்று எட்மண்ட்ஸ் கூறியுள்ளார்.

குழுவின் முன், தான் பெப்ரவரி 11 அன்று வாஷிங்டனில் சாட்சியம் அளித்ததாக எட்மண்ட்ஸ் தெரிவிக்கிறார். Independent உடைய கூற்றின்படி, புஷ் நிர்வாகம் இவ் அம்மையாருக்கு எதிராக "அரசாங்க இரகசிய காப்பு உரிமைகளை ஒட்டி" ஏதும் கூறக்கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved