World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்< செவ்வாய் கிரகத்தில் ஆவலைக் கிளறும் புதிய கண்டுபிடிப்புக்கள் By Frank Gaglioti தற்போதைய தேசிய விண்கல மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் (NASA) செவ்வாய் கிரக ஆராய்ச்சிப் பணிகள், அங்கு முன்பு கணிசமான வெப்பம் இருந்திருக்கக் கூடும் என்றும், பெரும் அளவு திரவ வடிவத்தில் தண்ணீர் இருத்திருக்கலாம் என்பதற்கும் நிறையப் புதிய சான்றுகளை ஏற்கனவே கொடுத்து உள்ளது. சுற்றிவரும் சிறு ஊர்தியான ஆப்பர்ச்சுனிடி (Opportunity) கொடுத்துள்ள தகவல்களில்படி, முந்தைய, சாதகமான சூழ்நிலையில் உயிரினம் தோன்றியிருந்திருக்கக் கூடுமோ என்ற சாத்தியக்கூறை எழுப்பியுள்ளது. NASA வின் இணை நிர்வாகி Ed Weiler, மார்ச் 2ம் தேதி, இந்தக் கண்டுபிடிப்புக்களை "மாபெரும் பாய்ச்சல்" என விவரித்துள்ளார். "செவ்வாய் கிரகத்தில் ஒருகாலத்தில், தண்ணீர் அதன் மேற்பரப்பை நனைத்திருந்த இடத்தில் ஆப்பர்ச்சுனிடி தரையிறங்கியுள்ளது. இப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உயிர்வாழ்வதற்குரிய சூழ்நிலை இருந்திருக்கவேண்டும்," என்று அவர் கூறினார். ஜனவரி 31ம் தேதி, Meridiani Planum என்ற பெயருடைய செவ்வாயின் பூமத்தியரேகைக்கு அருகேயுள்ள, இறங்கும் இடத்திலிருந்து ஆப்பர்ச்சுனிடி சுற்றிச் சென்று ஆய்வுகளை நடத்தியது. இந்தப்பகுதி, Gusev Crater என்று அழைக்கப்படும், இதன் சகோதர ஊர்தியான Spirit இறங்கி ஆய்வு நடத்திக்கொண்டிருக்கும் இடத்திலிருந்து கிரகத்தில் கிட்டத்தட்ட பாதி தூரத் தொலைவில் உள்ளது. இந்த இரண்டு இடங்களுமே, மிகப்பழைய காலத்திய hematite அடுக்கு ஒன்றைக் கொண்டிருந்த காரணத்தால் தெரிவுசெய்யப்பட்டது. இவ் அடுக்கு பூமியில் எப்பொழுதும் நீர் இருந்த சூழ்நிலையில் காணப்படும் ஓர் இரும்பு ஆக்சைட் நிறைந்தது என்ற காரணத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த இரண்டு ஆய்வுகளின் நோக்கங்களும் தண்ணீரில் இந்த தாதுப்பொருட்களின் படிமங்கள் இருக்கின்றன என்பதை உறுதி செய்து கொள்ளுவதற்குத்தான். ஒரு நிழற்படக்கருவி, மாதிரி பார்க்கும் கருவிகள், ஒரு உருப்பெருக்கி, நிறமாலை மானிகள் ஆகியவை உள்பட சிறு புவியியல் ஆய்வகத்தில் இருக்கும் நுட்பமான கருவிகள் ஏராளமானவற்றை இரண்டு சுற்றும் ஊர்திகளும் பயன்படுத்துகின்றன. ஓர் அதிகவிசையுடைய பிளக்கும் கருவி, இது சூரியனால் சுட்டெரிக்கப்பட்டுள்ள கற்களின் மேற்பகுதியைத் துளைத்து, பின்னர் மற்றய கருவிகள் இக் கற்களின் இரசாயன அமைப்புக்கள் பற்றி ஆராய உதவும். அகச்சிவப்புக் கதிர் உணரும் கருவி ஒன்று கற்களைத் தூரத்தில் இருந்து அடையாளம் கண்டுபிடிக்க உதவுகிறது. ஆப்பர்ச்சுனிடி ஆரம்பத்தில் அனுப்பியிருந்த நிழற்படங்கள், பாறையின் வெளிப்பகுதியைப் புலப்படுத்தும் வகையில் குவிந்திருந்தன; இதற்கு "El Capitan" என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்த அமைப்பு பூமியின் படிமக் கற்களை ஒத்த அடுக்குகள் போன்ற தோற்றத்தை கொண்டிருப்பதுடன் காற்று அல்லது தண்ணீருடைய தாக்கத்தால் விளைந்திருக்கக் கூடும். ஒரு கவனமான ஆய்வு, திரவநீர் இதன் கூறுபாடுகளின் உருவாக்கத்தில் ஒரு பங்கை கொண்டு இருந்திருக்ககூடும் என்பதையும், குறிப்பாக NASA ஆராய்ச்சியாளர்கள் "புளூபெர்ரிகள்" என்று கூறும் சிறு கல் உருண்டைகள் தோன்றியிருப்பதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் தெரியவருகிறது. நீர் கற்களின்வழியே தொடர்ந்து கசிந்திருப்பதை அடுத்து இத்தகைய அமைப்புக்கள் வந்திருக்கக் கூடும். கரையக்கூடிய தாதுப் படிமங்கள், சிறு பிளவுகளில் விட்டுச் செல்லப்பட்டிருக்கும் என்றும், அவை கற்களில் இடைவெளியைத் தோற்றுவித்திருக்கும் என்றும் விஞ்ஞானிகள் ஊகிக்கின்றனர். El Capitan உடைய வெளிப்பகுதி பகுப்பாய்வு, எப்சம் உப்புக்கள் (Epsom salts) போன்ற கரையக்கூடிய இரசாயனப் பொருட்கள் அடர்த்தியாக இருப்பதையும் கண்டுபிடித்துள்ளன; அந்தப் பகுதிகளில் கிடைத்த கற்களில் 40 சதவிகிதம் இப்படிப்பட்ட தன்மையைக் கொண்டுள்ளது. நாசா அறிவியல் குழு உறுப்பினரான Benton C. Clark III: "பொதுவாக பூமியில் இந்த அளவு பெரிய அடர்த்தியான உப்புக்களை, அவற்றை நீரில் கரைத்தபின்னர், நீரை ஆவியாக்கும் முறையில் வற்றச்செய்வதின் மூலம்தான் பெறமுடியும்" என குறிப்பிடுகின்றார். ஆனால், மிக முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பான ஜரோசைட் தாதுப்பொருள் (Mineral Jarosite) பொதுவாக பூமியில் வெப்ப நீரூற்றுக்களில்தான் காணப்படும். நாசாவின் முக்கிய ஆய்வாளர் ஸ்டீவ் ஸ்குயர்ஸ்: "நீர் நிறைய அருகில் இருந்தால்தான், இந்த தாதுப்பொருள் காணப்படும்." என விளக்குகிறார். இதுவரை சேகரிக்கப்பட்டுள்ள தகவல்கள் மேலெழுந்தவாரியானதாக இருந்தபோதிலும், இவை பகுப்பாய்வின் ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கின்றன. இவற்றிற்கு மாற்றான தத்துவங்கள் தோன்றக்கூடும். சிக்காகோ பல்கலைக்கழக விஞ்ஞானி Thanasis Economou குறிப்பிட்டிருப்பதுபோல், எல்லா விஞ்ஞானிகளுமே இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் செவ்வாயில் முன்பு நீர் இருந்திருக்கிறது என்பதை நிரூபிக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. "புளூபெர்ரிக்கள்" (Blueberries) குளிர்ந்து கொண்டிருந்த எரிகுழம்பின் மூலமும் தோன்றியிருக்கக் கூடும். ஆனால் இந்தக் கண்டுபிடிப்புக்கள், செவ்வாயின் தரைப்பகுதியின் தன்மை பற்றி இதுவரை கிடைத்திராத உள்ளார்ந்த பார்வையை அளிப்பதுடன், குறிப்பாக அதன் உருவாக்கத்தில் நீர் வகித்த பங்கு பற்றியும் தகவல்கள் கொடுக்கின்றன. இன்று செவ்வாய் கிரகம் மிகவும் உயிர்வாழ்க்கைக்கு அனுகூலம் இல்லாத இடமாகும்: அதனுடைய மிக உயர்ந்த வெப்பம் அரிதாகவே உறைநிலைக்கு மேல்போகும் நிலை உள்ளது, அங்குள்ள வாயு மண்டலம் அடர்த்தி குறைந்ததாக இருக்கிறது, அதுவும் பெரும்பாலும் கரியமில வாயு நிறைந்து சிறிதளவு பிராண வாயு மட்டுமேதான் உள்ளது. தண்ணீர் முன்பு திரவ வடிவத்தில் இருந்தது என்றால், கிரகத்தின் இயல்பு பற்றியும், அதன் பரிணாம வளர்ச்சி பற்றியும் புதிரான கேள்விகள் எழுகின்றன. செவ்வாய் பற்றிய தத்துவங்கள் பூமியிலிருந்து நெருங்கி இருப்பதாலும், வடிவத்தில் ஒத்து இருக்கும் தன்மையாலும், நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக விஞ்ஞானிகளுக்கு செவ்வாய்க் கிரகத்தில் நீர் இருக்கலாம் என்பது பற்றிய ஊகங்களை கொள்ள வைத்தன. 1877ல் இத்தாலிய வானியல் ஆராய்ச்சியாளர் Giovanni Schiaparelli செவ்வாயின் மேற்பரப்பில் நேர்கோடுகள் இருப்பதைக் கண்டறிந்தார்; இவை கால்வாய்களாக இருக்கக் கூடும் என்று அவர் கருதினார். ஆனால் அறிவியல் ஆய்வுகள் செவ்வாய்க்கு அனுப்பப்படும் வரை, இத்தகைய தத்துவங்கள் போதுமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. 1977ல், நாசா இரண்டு வைகிங் விண்வெளிக்கலங்களை (Viking Spacecraft) செவ்வாய் கிரகத்தில் இறக்கி, உயிர்ப் பொருட்கள் உள்ளனவா என்பது பற்றி ஆய்வு நடத்தவும், செவ்வாய் மேற்பகுதியில் நுண்ணுயிர் நடவடிக்கைகள் பற்றி ஆய்வு நடத்தவும் முயற்சிகளை மேற்கொண்டது. அந்தப் பரிசோதனைகளின் விளைவாக, செவ்வாயில் உயிரினவாழ்விற்கு எத்தகைய சான்றுகளும் இல்லை என்ற முடிவிற்கு விஞ்ஞானிகள் வந்தனர். ஆனால் வைகிங் ஊர்தி, அதற்கும் முன்பு செவ்வாய்க்கு அருகிலும் அதன் கோள்பாதையிலும் சுற்றிவந்திருந்த மாரினர் விண்கல ஆய்வுகள் அனுப்பியிருந்த நிழற்படங்கள் விரிவாக ஆராயப்பட்டதில், புவியியல் கூறுபாடுகள் சில வெளிப்பட்டிருந்ததால், ஏனைய சாத்தியக்கூறுகளையும் முன்கொண்டு வந்தது. இவ்வடிவங்கள் மூன்று கிலோமீட்டர் அகலமான நதிப்பள்ளத்தாக்குகள் போலவும், கிளைநதிகள் இருந்த தோற்றத்தையும், ஆற்றின் கழிமுகப்பிரதேசம் மற்றும் சமவெளிகள் போன்ற தோற்றங்களையும் கொண்டிருந்தது. சில விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்தின் பரந்த "வெள்ள விளைவுச் சமவெளிகள்" பெரும் பிரளயங்களால் ஏற்பட்டிருக்கக் கூடும் என்றும், மிச்சிகன் ஏரியில் இருப்பதைப் போல் 300 மடங்கு தண்ணீர் கொள்ளளவு இருந்ததைப் பிரதிபலித்திருக்கக் கூடும் என்றும் ஊகித்தனர். 1989ல் நாசாவின் Jet Propulsion ஆய்வுக்கூட விஞ்ஞானியான Tim Parker, வைகிங் ஆய்வின்போது எடுக்கப்பட்ட அளவியல் நிழற்படங்களை பகுப்பாய்வு செய்து, இரண்டு புராதனமான கரைவடிவுகளின் எஞ்சிய பகுதிகளை ஊகமுறையில் கண்டதாகவும், அவற்றிற்கு "தொடர்புகள்" என்று பெயரிட்டதாகவும் தெரிவித்தார். 1991ல் அரிசோனா விஞ்ஞானி விக் பேக்கர் செவ்வாய் ஒரு மடிந்துவிட்ட கிரகம் இல்லை என்றும், அது மாற்றங்களுக்குள்ளால் சென்றுள்ளது என்றும் கூறினார்: அதாவது, முதலில் வெப்பம் அதிகரித்து, நிலத்தடி நீர் உறைநிலையில் இருந்து திரவமாக வெளியேறி பெருங்கடலாக வடபுறம் வந்து, பின்னர் கிரகம் குளிர்ந்தவுடன் உறைந்து மீண்டும் நிலத்தடிநீராக போய்விட்டது என்ற கருத்து ஆகும். அப்பொழுதிலிருந்து விஞ்ஞானிகள் செவ்வாயில் நீர் பற்றி விவாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். 2003TM, Los Almos ஆய்வுக்கூடத்தில் இருந்த விஞ்ஞானிகள், செவ்வாய்க்கிரகத்தில் பெரும் உறைநிலை நீர் அளவு இருப்பதற்கான விஞ்ஞானச் சான்றுகளை வெளியிட்டனர். செவ்வாய் Odyssey விண்வெளிக் கலத்திலிருந்து வந்திருந்த புகைப்படங்களும், ஸ்பெக்ட்ரோமெட்ரிக் தகவல்களும், பரந்த அளவு பனிக்கட்டி படிவங்கள் நீர்த்தொகுப்பில் 50 சதவீதம் அளவிற்குச் சராசரியாக இருந்ததை தெரியப்படுத்தின. இந்நிழற்படங்கள்மூலம், செவ்வாயின் துருவமுனைகளில் பனிமுடிகள் (Icecaps) பரந்தும், பனிக்கட்டிகள் சூரியமண்டலத்திலேயே மிகப்பெரிய பிளவு போன்ற Vallis Marineris போன்ற இடங்களிலும் இன்னும் பல இடங்களில் இருந்ததும் தெரியவந்தது. இப்பொழுதும்கூட பனிக்கட்டிக்கும் செவ்வாயின் மண்ணுக்கும் உள்ள தொடர்புபற்றியும் மற்றும் அதனது நிலப்பகுதியை வடிவமைப்பதில் நீரின் சாத்தியமான பங்குபற்றியும் பெரிதும் தெளிவற்ற நிலை உள்ளது. ஒரு தத்துவத்தின்படி கிரகத்தின் நீர்த்தட்டின் அடர்த்தி, மிகப் பிரமாண்ட முறையில் இருந்து வெப்பக் கிரகிப்பையும் கொண்டு தேவையானால் பனிமுடியின் கீழ் அடுக்குக்களையும் உருகவைக்கக் கூடிய திறன் கொண்டுள்ளது. இதற்கு மாற்றாக, செவ்வாய் கிரகம் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய அச்சில் சற்று பிறழ்ந்ததனால், துருவமுனை பனிப்படலங்கள் கரையத்தொடங்கி, குறுகிய காலத்தில் கிரகம் முழுவதும் படரக்கூடிய போதுமான நீரை சுற்றுச்சூழலில் உருவாக்கியது என்ற கருத்தாய்வும் இருக்கிறது. Los Alamos விண்வெளி விஞ்ஞானி (Bill Feldman) ஜூலை 2003ல் கூறினார்: "இந்த படிமங்களில் காணப்படும் அதிக அளவுத் தன்மையையும், பலவிதமாகப் பிரிந்து உள்ள தன்மை பற்றியும் துல்லியமாக விளக்குவதற்கு நாங்கள் இன்னும் தயாராக இல்லை, எனினும்... ஸ்பெக்ட்ரோமீட்டர் (Spectrometer) பல இடங்களிலும் உறைந்தநீர் நிலமட்டத்தின் அருகே இருப்பதையும் மற்றும் பல இடங்களில் வரண்ட மண்ணிற்கு சில அங்குலங்கள் கீழே ஆழ்ந்து இருப்பதையும் காண்பிக்கிறது. சில தத்துவங்கள் இந்த படிமங்கள் அரை மைல் அல்லது சற்றுகூடக்கூட இருக்கலாம் என்று தெரிவிக்கின்றன; அவ்வாறாயின் அவற்றின் நீரின் மொத்த அளவு, செவ்வாயில் குறைந்திருக்கும் நீரினை அளவிட போதுமானதாக இருக்கலாம்." தற்போதைய NASA ஆய்வுப்பணி, முன்பு நீர் இருந்ததையும், கிரகத்தின் புவியியல் கட்டுமானத்தை வடிவமைப்பதில் நீர் முக்கியமான பங்கு வகித்தது என்பதையும் உறுதிபடுத்துவதுபோலவும் உள்ளது. எதிர்கால ஆய்வுப்பணிகள், இப்பொழுது எழுப்பப்பட்டுள்ள விஞ்ஞானக் கேள்விகளை தீர்க்கும் வகையில் திட்டமிடப்படுள்ளது. செவ்வாய் மேற்பரப்பு ஆய்வு சுற்றுக்கோள் (Mars Reconnaissance Orbiter) என்பது 2005 ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ளது; இது கிரகத்தின் நில அமைப்பு பற்றி விரிவான ஆய்வை மேற்கொள்ளும். மிக சக்தி வாய்ந்த தொலைநோக்கிக் கண்ணாடி (இதுவரை விண்வெளியில் இதுபோன்று மற்ற கிரகத்திற்குப் பெரிய தரத்தில் அனுப்பப்படவில்லை) அதில் பொருத்தப்பட்டு, ஒரு மீட்டர் வரையிலுமான முழு விவரத்தையும் பதிவு செய்யும் திறனைக் கொண்டிருக்கும். Orbiter நிலத்திடி நீர் அடுக்குகளையும், பனிக்கட்டியையும் ஆய்வு செய்யும்; தரையின் மேற்பரப்பிலுள்ள சிறிய அளவிலான தாதுப்பொருட்களையும் ஆராய்ந்து அவற்றின் சேர்க்கை மற்றும் தோற்றங்களை தீர்மானித்து சுற்றுப்புறத்தில் உள்ள நீரினதும் துகள்களினதும் பாதைமாற்றத்தையும், செவ்வாய் கிரகத்தின் நாளாந்த காலநிலையையும் ஆராயும். 2007TM, NASA, மேற்பரப்பை அளவிடக்கூடிய அதிகரித்த தகமைகளை கொண்ட மீண்டும் பூமிக்கு வரக்கூடிய நீண்ட தூர, நீண்ட ஆயுட்காலம் கொண்ட சுற்றிவரும் விஞ்ஞான ஆய்வுக்கூடம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. விஞ்ஞானிகள் Opportunity, Spirit ஊர்திகளிலிருந்து கிடைக்கும் பெருமளவு புள்ளிவிவர குறிப்புகளின் உதவியுடன், இன்னும் சிறந்த முறையில் எவ்வாறு தண்ணீர் செவ்வாயின் மேற்பரப்பை பல வடிவங்களிலும் முன்பு இருந்த நிலையிலிருந்து, இப்பொழுதுள்ள நிலைக்கு மாற்றியது என்பது பற்றியும், இன்னும் கண்டுபிடிக்கப்படாத இடங்களில் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் அறிய முற்படுகின்றனர். எதிர்காலத்தில், செவ்வாய் கிரகத்திற்கு மனிதன் செல்லும் ஆய்வுப் பயணங்கள், இந்த உறைந்துள்ள நீர் கிரகங்களுக்கு இடையே உள்ள ஆய்வாளர்கள் உயிர்வாழப் பயன்படுத்தப்படக்கூடும் என்பதை நிர்ணயிக்கலாம். |