World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக் The diplomacy of imperialism: Iraq and US foreign policy Part eight: The end of the Iran-Iraq war ஏகாதிபத்தியத்தின் இராஜதந்திரம்: ஈராக்கும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும் எட்டாம் பகுதி : ஈரான்-ஈராக் போரின் முடிவு By Joseph Kay ஈராக்கின் வரலாறு, அதன் அமெரிக்காவுடனான உறவு பற்றிய தொடர் கட்டுரைகளில் இது எட்டாவது ஆகும். முந்தைய பகுதிகள், மார்ச் 12, 13, 16, 17, 19, 24, 26 தேதிகளில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்டன. ஈரான்-ஈராக் போர்முடிவு பற்றியும், ஈராக்கியச் சமுதாயத்தில் இதன் விளைவுகள் பற்றியும் இக்கட்டுரை ஆராய்கிறது. வேறுவிதமாகக் குறிப்பிடப்படவில்லை எனின், அனைத்து மேற்கோள்களும், தேசியப் பாதுகாப்பு ஆவணங்கள்http://www.gwu.edu/~nsarchiv அல்லது http://nsarchive.chadwyck.com. இவற்றில், காணக்கூடிய இரகசியப்பாதுகாப்பு நீக்கப்பட்டவற்றிலிருந்து எடுக்கப்பட்டவை என்று கொள்ளவேண்டும். ஈரான்-ஈராக் போரில் அமெரிக்கத் தலையீடு முந்தைய கட்டுரைகளில் விவரித்துக் கூறியிருந்தது போல், 1980களில் ஈரான்-ஈராக் போரின்போது அமெரிக்கா, ஈராக்கிடம் நெருக்கமாகத் தொடர்புகொள்ளத் தொடங்கியது. வாஷிங்டன் முழுமையான இராஜதந்திர உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டது, அமெரிக்க உளவுத்துறை, ஈராக்கியப் போர் முயற்சிக்குத் தீவிரமாக உதவத் தொடங்கியது. ஈராக் போரை நடத்துவதற்குப் பெரிய அளவில் செலவினங்கள் ஏற்பட்டாலும் உடனடிக் கடன்கள் மூலம் தனது உதவியை தொடர்வதற்கு அமெரிக்கா உத்தரவாதம் அளித்தது. இந்த நெருங்கிய உறவுகள் அனைத்துமே, சதாம் ஹுசைனுடைய மூரக்கத்தன்மை வாய்ந்திருந்த சர்வாதிகாரம் அதிகரித்தபோதிலும், ஈராக் அடிக்கடி இராசயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதன் மத்தியிலும் வளர்ந்தன. போரின் இறுதி ஆண்டுகளான 1987, 1988 களில் ஈராக்கிற்கு சாதகமாக அமெரிக்கத் தலையீடு நேரடியான இராணுவ தன்மையைக் கொண்டது. ஈரானுடன் உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற கருத்தில் குறுகிய காலத்திற்கு உறவாடியபின், அதுவும் சட்டவிரோதமான ஆயுதங்களை அந்நாட்டிற்கு விற்பனை செய்ததின் மூலம் (ஈரான்-கொன்ட்ரா ஊழல் என்ற பெயரில் இவை 1986 கடைசியில் வெளிவந்தன), றீகன் நிர்வாகம் உறுதியாக ஈராகின் பக்கம் நகர்ந்துவிட்டது. இந்த மாற்றம், ஏனைய சூழ்நிலையில் இதற்கு முற்றிலும் எதிரிடையான விளைவைக் கொடுத்திருக்க கூடிய ஒரு நிகழ்ச்சியை அடுத்து ஏற்பட்டது. அது பாரசீகவளைகுடாவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமெரிக்கக் கப்பல் USS Stark என்பது ஈராக்கினால் தாக்கப்பட்டதாகும். மே 1987இல், ஒரு ஈராக்கிய விமானம் இரண்டு ஏவுகணைகளை Stark மீது செலுத்தி, 37 கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். சதாம் ஹுசைன் மன்னிப்புக் கேட்டு, இது ஒரு தற்செயலாக நடந்த விபத்து என்று குறிப்பிட்டார். றீகன் நிர்வாகம் மன்னிப்பையும், ஈராக்கின் விளக்கத்தையும் ஏற்றுக் கொண்டது. கொல்லப்பட்டிருந்த அமெரிக்கப் படைவீரர்கள் குடும்பத்திற்கு ஈராக்கிய அரசாங்கம் கொடுக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை பற்றி சிறு முரண்பாட்டைத்தவிர இந்நிகழ்ச்சி, அமெரிக்க-ஈராக்கிய உறவுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்த நிகழ்ச்சி, தற்செயலான விபத்து இல்லை என்றும், வேண்டுமென்றே வளைகுடாப்பகுதிகளில் அழுத்தங்கள் அதிகரிக்கப்படவேண்டும் என்பதற்காக ஈராக் கொண்ட முயற்சி என்றும் ஈரான் குற்றம் சாட்டியது. ஈரானின் கூற்றின்படி, இதன் நோக்கம் வாஷிங்டன் கூடுதலான எண்ணெய் குவைத்திலிருந்தும் சவுதி அரேபியாவிலிருந்தும் ஏற்றுமதியை உறுதி செய்வதற்காகக் கட்டாயத்திற்குட்பட நிகழ்த்தப்பட்டது. உண்மையில் தாக்குதல் இந்த விளைவைத்தான் கொடுத்தது. ஓர் அறிக்கையில் அமெரிக்கா ஈரானைப் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளவேண்டும் என்று தான் வலியுறுத்துவதாகவும், ஈரானுக்கு எதிராக ஆயுதங்களை வழங்குவதற்குத் தடை விதிக்கவேண்டும் என்று வற்புறுத்தப் போவதாகவும் ஜனாதிபதி றீகன் கூறினார். இந்நிகழ்ச்சி நடந்து இரு வாரங்களுக்குப்பிறகு, பாதுகாப்புத் துணை மந்திரி ரிச்சர்ட் ஆர்மிடேஜ், கூறினார்: "நாங்கள், ஈராக் தோல்வி அடைவதைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம்." 1 அமெரிக்கத் தலையீட்டின் முக்கிய கூறுபாடு, 1987இன் நடுப்பகுதியில் அது அமெரிக்க எண்ணைய்க் கப்பல்களை குவைத்திற்கு குத்தகைக்கு விடுவதற்கு (இந்த வழக்கம் re-flagging என்று அழைக்கப்பட்டது) அனுமதி கொடுக்கப்பட்டு அவற்றிற்கு அமெரிக்க கடற்படையின் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது. இதன் விளைவு, அமெரிக்க இராணுவம், குவைத்தின் எண்ணெய் ஏற்றமதிகள் ஈரானின் தாக்குதலுக்கு உட்படாமல் பாதுகாப்புக் கொடுக்கும் என்பது ஆகும். வரலாற்று ஆசிரியர் திலீப் ஹிரோ குறிப்பிடுகிறார்: "மூன்று ஆண்டுகள் பாடுபட்டபின், ஈராக் இறுதியாக, தன்னுடைய நட்பு நாடாகிய குவைத் மூலம் போரை சர்வதேசப் போராக மாற்றுவதில் வெற்றிகண்டு, ஒரு பெரும் வல்லரசு உறுதியாக ஈரானை எதிர்த்து நிற்பதற்குச் செய்துவிட்டது." 2 1987, 1988 ஆண்டுகள் முழுவதும் அமெரிக்க தலையீடு நிலையாக வளர்ந்தது. செப்டம்பர் 1987இல், அமெரிக்கக் கடற்படை கடலில் கண்ணிகள் வைத்ததாகக் கூறி ஓரு ஈரானியக் கப்பலைத் தாக்கியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அக்டோபர் மாதம், குவைத் எண்ணெய்க் கப்பல் ஒன்றைத் தாக்கியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடலுள் இருக்கும் இரு ஈரானிய எண்ணெய்க் கிணறுகளை அமெரிக்கா இலக்கு வைத்தது. தாக்கப்பட்ட அந்தக் கப்பல் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது அல்ல; இது எண்ணெய்க் கப்பல் போக்குவரத்துக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்கா கொண்ட முயற்சியில் புதிய கட்டமாகும். அந்தக்கட்டம் வரை, ஈராக் இரசாயன ஆயுதங்களைக் கடுமையாகப் பயன்படுத்தியிருந்தபோதிலும், இந்த நடவடிக்கைகள் தொடர்ந்திருந்தன. மார்ச் 16 1988இல், ஈராக் சைனய்டு மற்றும் நரம்புகளை தாக்கும் வாயுக்களை பெரும்பாலும் குர்திஷ் மக்கள் நிறைந்திருந்த வடக்கு நகரமான ஹலப்ஜாவில் (Halabja) பயன்படுத்தியது. இதில் 4,000 இற்கும் மேற்பட்ட மக்கள், பெரும்பாலானவர்கள் சாதாரணக் குடிமக்கள் கொல்லப்பட்டனர். வெளிவிவகாரத்துறையின் உட்துறை ஆவணங்கள், இரசாயன ஆயுதங்கள் பற்றிய அமெரிக்க நிலைப்பாட்டை வலியுறுத்துகின்றன: அதாவது அவை பொதுவாக எதிர்க்கப்பட வேண்டும், ஆனால் ஈராக் அவற்றைப் பயன்படுத்துவது ஈராக்-அமெரிக்க உறவுகளைப் பாதித்துவிடக்கூடாது என்பதாகும். 1988இன் கடைசிப் பகுதியில், றீகன் நிர்வாகம் தேசியச் சட்டமன்ற உறுப்பினர்கள், இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்காக ஈராக்கின் மீது பொருளாதாரத் தடைகள் சுமத்தப்பட வேண்டும் என்று கொண்டுவர இருந்த தீர்மானத்திற்கான முயற்சிகளை எதிர்த்தது. 1988 நடுப்பகுதியில், ஈராக் முந்தைய ஆண்டுகளில் ஈரானிடம் இழந்திருந்த பகுதிகள் பெரும்பாலானவற்றை மீண்டும் வெற்றி கண்டு அடைந்துவிட்டது. Fao தீபகற்பத்தில் ஈராக் கொண்ட வெற்றி, தெற்கத்திய வளைகுடாப்பகுதியில் ஈரானியக் கப்பல்கள்மீது தொடர்ச்சியான அமெரிக்கத் தாக்குதல்களை நடந்த அதே நேரத்தில் அடையப்பட்டது. 1988 ஏப்ரல் 18 அன்று, பாக்தாதிலிருந்த அமெரிக்க தூதரகத்திலிருந்து அமெரிக்க வெளிவிவகாரத்துறைக்கு அனுப்பப்பட்ட குறிப்பு ஒன்று, அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்றுவது பற்றிய குற்றச்சாட்டுக்களுக்கு, சதாம் ஹுசைன் ஆட்சி கவனஉணர்வுடன் இருப்பதாக குறிப்பிடுகிறது: "நான்கு முக்கிய (ஈராக்கிய) தினசரித் தாள்களில், ஒன்றுதான் அமெரிக்க ஈரானியக் கைகலப்புக்கள் (தெற்கு வளைகுடாப்பகுதியில்) பற்றிக் கூறுகின்றன; பொதுவாக இவை பின்பக்கங்களில்தான் வரும்.... ஈராக் வெளிப்படையாகவே அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்றுகிறது என்ற கருத்து வரும் போது ஈராக் மிகவும்கவனமாக இருப்பதால் இச்செய்தியை மிகைப்படுத்துவது இல்லை; ஆனால் நாம் ஈரானியருக்கு இரத்தம் கொட்டும்படி மூக்கில் அடித்ததால் ஈராக்கிய அதிகாரிகள் பெரும் உவகை அடைந்துள்ளனர்." போரை முடித்த நிகழ்ச்சி, ஈராக்குடனே தொடர்பற்ற ஒன்றாகப் போயிற்று. 1988 ஜூலை 3ம் தேதி, USS Vincennes ஒரு ஈரானியப் பயணிகள் விமானத்தைச் சுட்டுத்தள்ளி 290 பேரைக் கொன்றது. இந்த விமானம் ஒரு போர் விமானம் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்று ஐயுறவுடன் அமெரிக்கா கூறினாலும், ஈரான் இதை அமெரிக்காவின் ஈராக்கிய ஆதரவில் ஒரு புதிய கட்டம் என்று எடுத்துக் கொண்டது. பின்னர் இது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக்குழுவின் போர்நிறுத்தம் பற்றிய தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள வழிவகுத்தது. இரண்டு பெரும் வல்லரசுகளுமே ஈராக்கை ஆதரித்திருந்த நிலைமையை, ஈரான் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. ஈரான் பக்கம் குறுகியகாலம் ஆதரவு கொடுத்திருந்தாலும் சோவியத் யூனியன் ஈராக்கிற்குத் தொடர்ந்து ஆயுதங்களை வழங்கிவந்ததுடன், ஈரானின் செல்வாக்கு வளர்ச்சியுறுதலையும் எதிர்த்தது. "ஈரானிய பயணிகள் விமான அழிவைத் தொடர்ந்து, தெஹ்ரானைப் பொறுத்தவரை இரண்டு அப்பட்டமான மாற்றுக்கள்தாம் இருந்தன: ஒன்று, அமெரிக்காவுடன் மோதலை வளைகுடாப்பகுதி அல்லது வேறு எங்காவது அல்லது இரு இடங்களிலுமே அதிகப்படுத்திக் கொள்ளுவது அல்லது நிபந்தனையற்று பாதுகாப்புக் குழுத்தீர்மானம் 598 ஐ ஏற்பது என்பவையே அவை. அது பிந்தையதைக் தெரிவுசெய்தது.'' என திலீப் ஹிரோ குறிப்பிடுகின்றார்.3 ஈராக்கியச் சமுதாயத்திலும், அரசியலிலும் போரின் விளைவுகள் இரண்டு நாடுகளிலும் போர் பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தி இருந்தது. எட்டு ஆண்டு காலத்தில், கிட்டத்தட்ட 250,000 ஈராக்கியர் கொல்லப்பட்டனர் என்றும், அதையும்விட அதிகமானவர்கள் காயமுற்றனர் என்றும் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஈரானிய இழப்புக்கள் இவற்றையும் விட அதிகமாக இருந்தன. போரைத் ஆரம்பித்தபோது 30 பில்லியன் டொலருக்கும் மேல் வெளிநாட்டு நாணய இருப்புக்களைக் கொண்டிருந்த ஈராக், போர்முடிந்த பின் 80 பில்லியன் டொலர் கடன் சுமையைக் கொண்டிருந்தது. இவை பெரும்பாலும் வளைகுடா முடியரசுகளுக்கும், மேற்கின் பெரிய வல்லரசுகளுக்கும் கொடுக்கப்பட வேண்டியவை ஆகும். ஈரானின் தாக்குதல்களினால், எண்ணெய்த் தொழில் முடங்கிப் போய், எண்ணெயிலிருந்து கிடைக்கும் வருமானம் கணிசமாகக் குறைந்து விட்டது; புதிய எண்ணெய்க் குழாய்கள் துருக்கி வழியாகவும், சவுதி அரேபியா வழியாகவும் உருவாக்கப்பட்ட பின்னரும் இதே நிலைதான் இருந்தது. போர்க்கடனும், மூலதனத்திற்கும் இறக்குமதிகளுக்கும் மேற்கு நாடுகளை கூடுதலாக நம்பி இருக்கவேண்டியிருந்த நிலையும். ஈராக்கிய ஆளும் செல்வந்த தட்டு உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரச்சினைகளில் வலதுசாரிப் போக்கைக் கொள்ளவேண்டிய தன்மையை ஊக்குவித்தது. இந்தப் போக்குகளில், மார்ச் 1988 இலிருந்து அமெரிக்க நலன்கள் பற்றி ஒரு மதிப்பீட்டை, அரசுத் துறையின் தகவல் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. இந்தக் குறிப்பு "ஈராக்கிய வெளியுறவுக் கொள்கை: பிரதான அரசியலின் ஆழ்ந்த ஆய்வு" என்ற தலைப்பைக் கொண்டு, உளவு, ஆய்வுத்துறை துணைச் செயலர் மோர்டன் அப்ரமோவிட்சினால் (Morton Abramowitz) எழுதப்பட்டிருந்தது. அப்ரமோவிட்ச், முந்தைய பத்தாண்டுகளைவிட ஈராக்கியக் கொள்கையின் "மிதவாதப் போக்கை", அதாவது அதன் நலன்கள் அமெரிக்க நலன்களுடைன் இணையப் பெற்றுள்ளதை, இசைவுடன் குறிப்பிடுகிறார். இந்த மாற்றம் 1970களிலிருந்தே தோன்றியதாகவும் 1975 அல்ஜியர்ஸ் ஒப்பந்தத்தையும், 1970இன் கடைசிப் பகுதிகளில் ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நசுக்கப்பட்டதையும் பின்வருமாறு மேற்கோளிட்டுக் கூறுகிறார். "மிதவாத அரேபிய நாடுகளுடன் பாலஸ்தீனியப் பிரச்சினைகள் பற்றி உடன்பாடு கொண்டது, இஸ்ரேலுக்கு எதிர்ப்புக்கு தலைமைவகித்த பாக்தாதின் முன்னைய பங்கிலிருந்து மாறுபட்டமை, ...ஈராக்கின் மற்ற பகுதி நாடுகளுடனான அமைதியான உறவுகள், 1970களின் முற்பகுதியில் அந்நாடுகளுக்குள் இருந்த இடதுசாரி, மற்றும் பிரிவுவாத சக்திகள் ஆகியவற்றிற்குக் கொடுத்த ஆதரவிலிருந்து மாறுபட்டமை" என்று அவர் எழுதியுள்ளார். இந்தப் போர் அமெரிக்காவுடனும், மத்திய கிழக்கில் அதன் நட்பு நாடுகளுடனும் நெருக்கமாக உறவுகொள்ள ஈராக்கைக் கட்டாயப்படுத்தியது. "ஈராக் கூடுதலான முறையில் மேற்குபுறம் (ஆரம்பத்தில் பிரான்ஸ்) சாரத் தலைப்பட்டது; எகிப்துடன் கொண்டிருந்த போக்கு தலைகீழாயிற்று. ஈராக் கூடுதலான முறையில் (நேட்டோ உறுப்பு நாடான) துருக்கியை நம்பியிருக்க வேண்டியதாயிற்று; ஏனெனில் அது ஒன்றின்மூலம்தான் இதன் எண்ணெய் வெளியே கொண்டு செல்லப்படும். சவுதி அரேபியா, துருக்கி வழியாக விரிவாக்கப்பட்டிருந்த எண்ணெய்க் குழாய்கள், அதன் மேற்குச் சார்பு உடைய அண்டை நாடுகளுடன் புதிய மற்றும் முக்கியமான பொருளாதாரத் தொடர்புகளுக்கு நிலைக்கும் தன்மையைக் கொடுத்தன. சோவியத் ஒன்றியத்தினுடனான பாக்தாத்தின் உறவுகள் பழைய திருப்திகரமான நிலைக்குத் திரும்பவில்லை. உள்நாட்டைப் பொறுத்தவரை, பாத் கட்சி கூடுதலான முறையில் சோசலிசத் கொள்கைகளை செயல்படுத்தும் முறைகளை படிப்படியாகத் தொடர்ந்து குறைத்து, அறவே கைவிட்டுவிட்டது. போரின் போக்கின்போது, இது அபிவிருத்திதிட்டங்களைக் குறைக்கவேண்டியிருந்தது. சில தொடரப்பட்டன; ஏனெனில் இந்தச் செலவினங்களில் பாத் கட்சியின் அதிகாரத்துவத்தின் பல பிரிவினர் சில அக்கறைகளைக் கொண்டிருந்ததாலாகும். ஈராக்கிய மக்களின் சமூகக்குறைகளுக்கு விடை காண முடியாத நிலையில், அரசாங்கம் மதத்தை முக்கியமான ஒன்றுபடுத்தும் சக்தி கொண்டதாக வலியுறுத்தியிருந்தது. அரேபியவாதம் என்ற கருத்தை அகற்றி விட்டு, ஈராக்கிய தேசியம், அதிலும் வடக்குப் பகுதியில் இருக்கும் சன்னிப்பிரிவினரின் நலன்களை மையமாகக் கொண்டதை வலியுறுத்தியது. நீண்டகாலப் போர் என்றால், இராணுவ உயர்தட்டுனருக்கு கூடுதலான பங்கு வழங்கப்படுதல் என்றே அர்த்தப்படும். மேலும் உள்நாட்டில் போலீஸ் கருவியும், சர்வாதிகாரத்தின் இணைந்த பகுதியாகையால் வலுப்படுத்தப்படவேண்டும். 1980 களில், பாத் கட்சி மீதான அரசியல் விமர்சனங்கள், அதிலும் அமைதியற்ற நிலையைத் தூண்டிவிடும் வகையில் இருந்தால், மரணதண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டது. சதாம் ஹுசைன் பற்றி துதிபாடல், புகழாரம் சூட்டி மகிழ்தல் என்பவை வளர்க்கப்பட்டது; குறுகிய பாத் கட்சியின் சமூகதளமும் இல்லாதுபோக ஆரம்பித்தது. ஹுசைனின் அதிகாரம், நாட்டிற்குத் தலைமை தாங்குபவர் என்பதிலிருந்தும், அதிகரித்துவந்த தனிமைபட்ட, கொள்ளைக்குணம் உடைய அதிகாரத்துவத்தின் நலன்களை பிரதிநிதத்துவப்படுத்தியதன் மூலமுமே கிடைத்தது. ஈராக்கியப் போர் இயந்திரத்தின் தேவைகளை அளிப்பதற்கும், அரசாங்கக் கடன்களுடைய வட்டிகளைச் செலுத்துவதற்கும் பாத் கட்சி தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை அதிகப்படுத்தியது. ஈராக்கிய இராணுவத்தில் மிக அதிகமாக ஆண்கள் சேரவேண்டியிருந்தால், உற்பத்தியில் இன்னும் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கு உந்தப்பட்டனர். 1987இல் பெப்ருவரி மாதத்தில் வெளியிடப்பட்ட ஆணை ஒன்று முன்பு அரசாங்கத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்புக்களை அகற்றியதுடன், அவர்கள் தொழிற்சங்கங்களில் சேருவதும் தடைசெய்யப்பட்டது. எல்லாத் தொழிலாளர்களும் கூடுதலான நேரம் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இதுபற்றி ஹுசைனே பின்வருமாறு குறிப்பிட்டார்: "இவற்றின் (இந்த நடவடிக்கைகளின்) நோக்கம் தெளிவானது: உற்பத்தியைப் பெருக்குதல் முக்கியமாகும். உதாரணமாக நாம் ஒவ்வொரு நாளும் 12 மணி நேர வேலை செய்யவேண்டும் என்கிறோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் 12 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று நாம் கூறினால், எட்டு மணிதான் உழைப்போம் என்று ஒருவரும் கூறமுடியாது''. பொருளாதார விஷயங்களிலும், அரசியல் கருத்துக்கள் போல் கவனம் செலுத்தப்படவேண்டும்" என்று அதிகாரிகளுக்கு அவர் உத்திரவு இட்டார். அதாவது, சோசலிச கொள்கை என்று காரணம் காட்டி, தொழிலாள வர்க்கத்தைச் சுரண்ட எந்தவிதமான தடையும் இருக்கக் கூடாது.4 "அதிகார நடவடிக்கைகளின் உடனடித் தாக்கம், பல வெளிநாட்டு கடனுதவியோர்களுக்கும் உறுதியளிப்பதாகும்; கடன்வழங்கியோர் ஈராக்கின் நிதியமைச்சர், ஈராக் தன்னுடைய தற்பொழுதைய வர்த்தக கணக்கை 1987இன் முதல் பாதியைச் சமன் செய்துவிட்டதாகக் கூறியதைக் கேட்டு உவகை அடைந்தனர்." என திலீப் ஹிரோ எழுதுகின்றார். 5 இந்த நடவடிக்கைகள் போருக்குப் பின்னரும் தொடர்ந்தன. ஈராக்கிய அரசாங்கம், அரசுடைமை தொழில்களைத் தனியார்மயமாக்க தொடங்கியது; நுகர்பொருட்கள்மீது இருந்த உச்ச விலை வரம்புகள் அகற்றப்பட்டன. CIA இன் ஒரு குறிப்பு ஏப்ரல் 1990ல், கடன்சுமை, "ஈராக் போருக்குப்பின் பொருளாதார மீட்பு காணமுடியாமல் பெரும் தடையாக இருந்து...1982 லிருந்து மிகப்பரந்த அளவில் வெளிநாட்டு கடன்களை பயன்படுத்தியது. மூன்றாம் உலகின் செல்வம் கொழிக்கும் நாடுகளில் ஒன்று, கடன் வழங்கும் நாடுகளில் ஒன்று என்பதிலிருந்து, சிக்கல் நிறைந்த கடன் பெருத்துள்ள நாடாக மாறிவிட்டது" என்று தெரிவிக்கிறது. மேலும், " கடன் நிவாரணத்தை, புதிய கடன்வசதி உட்பட, அதற்குக் கடன் கொடுத்துவர்களிடமிருந்து, ஒருகால் ஈராக் பெறக்கூடும்; அவர்களுக்குப் போருக்குப்பின் ஈராக்கிய சந்தை செழிப்பு பெற்றால் அதில் பங்கு பெறுவதற்கும், கொடுத்த கடன்களைத் திரும்பப் பெறுவதற்கும் வேறு வழி அவற்றிற்கு இல்லை." அதாவது, எண்ணெய் பெறவும் மற்றும் சீரமைப்பு ஒப்பந்தங்களில் போட்டியிடவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஈராக் சலுகைகள் கொடுத்தால், ஈராக் தன்னுடைய கடன்களைச் சமாளிக்க முடியும். 1989 ஜூன் மாதம் சதாம் ஹுசைன், கெல்லாக், பிரெளன், ரூட் நிறுவனம் (பின்னர் ஹாலிபர்ட்டன், வெஸ்டிங்ஹெளஸ் இவற்றை வாங்கியது) தலைவர் உட்பட அமெரிக்க நிறுவனங்களின் சக்திவாய்ந்த தூதுகுழுவை சந்தித்தபோது, அவர்களிடம், ஈராக் அமெரிக்காவுடன் உறுதியான உறவுகளை வளர்க்கும் என்று உறுதியளித்தார்."பாதை எங்களுக்குத் திறந்து விடப்பட்டுள்ளது; நாங்கள் ஒத்துழைக்க விரும்புகிறோம்." என்றார் அவர். வெளிவிவகாரத்துறையால் தயாரிக்கப்பட்ட இந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சிக் குறிப்பு: "எது நடந்தாலும், ...அவர் சொந்த முறையிலேயே "உங்களுடன் ஒத்துழைப்பேன்" என்றும் இந்த முடிவு "மாறுதலுக்கு உட்படாது" என்றும் சதாம் கூறினர். " இதற்குப் பதிலாக அமெரிக்கப் பெரு நிறுவனங்கள், மற்றும் அரசாங்கம் ஈரான்மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும் எனக்கோரியதாக'' தெரிவிக்கின்றது. இறுதியில், அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு உதவும் இம்முயற்சிகள் அமெரிக்க ஆளும் வர்க்கம் தன்னுடைய நலன்களை, ஹுசைன் அனுமதிப்பதைவிடக் கூடுதலான ஆற்றலுடன் தொடர வேண்டும் என்று உறுதியுடன் செயல்படத் தொடங்கியதாலும், சோவியத் ஒன்றியத்தின் சரிவினால் உருவாகிய அழுத்தத்தாலும் தகர்ந்தன. ஈரான்-ஈராக்கியப் போர் முடிவடைந்த பிறகு அமெரிக்கக் கொள்கையில் ஏற்பட்ட மாறுதல்களை இத்தொடரின் அடுத்த மற்றும் கடைசியான கட்டுரையில் ஆராயப்படும். தொடரும்.... |