இஸ்லாமிய தலை அணிக்கு தடை:
ஒரு பிரெஞ்சு ஆசிரியரின் கருத்து
By Antoine Lerougetel
23 March 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
கீழ்க்கண்ட விமர்சனத்தை ஓய்வுபெற்ற பிரெஞ்சு ஆசிரியர் மற்றும் உலக சோசலிச
வலைத் தளத்திற்கு வழக்கமாக கட்டுரைகளை வழங்கி பங்களிப்பவர் எழுதியுள்ளார்.
பல ஆண்டுகள் பிரான்சில் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக நான் பணியாற்றியிருக்கிறேன்.
பெப்ரவரி 18 ல் WSWS
ல் வெளிவந்த மத அடையாள சின்னங்கள் அணிவது தொடர்பான புதிய சட்டம் குறித்து அலக்ஸ் லுபெப்ர் (Alex
Lefebvre) எழுதியுள்ள கட்டுரையில் அவர் தெரிவித்திருந்த
கொள்கைகள் மற்றும் ஆய்வுகளில் நான் உடன்படுகிறேன். (''பள்ளிகளில் முஸ்லீம்களின் தலை அணிக்கு பிரெஞ்சு
நாடாளுமன்றம் விதித்த தடை'' என்ற கட்டுரையை காண்க.
See "France: National Assembly bans
Muslim headscarves in schools")
இந்த ஒடுக்குமுறை சட்டத்திற்கு ஏறத்தாழ எல்லா ஆசிரியர் அமைப்புகளும், இடதுசாரி
கட்சிகளும், பிரான்சிலுள்ள பல ஆசிரியர்களும் எப்படி ஆதரவு தந்தார்கள்? மேலும் எந்த அரசாங்கத்திற்கு எதிராக
ஆசிரியர்களும் மில்லியன் கணக்கான இதர தொழிலாளர்களும் கடந்த பத்தாண்டுகளாகவும், மிகவும் கசப்பான நீண்ட
போராட்டத்தை ஆறு மாதங்களுக்கு முன்னரும் நடத்தி வந்தார்களோ அதே அரசாங்கம் கொண்டு வந்திருக்கும்
இந்தச் சட்டத்தை எப்படி ஆதரித்தார்கள்? இதே அரசாங்கம்தான் பொது மக்களது திரண்ட எதிர்ப்பையும் அலட்சியப்படுத்தி
ஓய்வூதிய உரிமைகளை அழித்து பொதுக்கல்வி சேவையையும் ஒழித்துக்கட்டியது.
யூனியன் சக்ரே என்ற தொழிற்சங்கத்தினர் (union
sacrée) 2002 ஜனாதிபதி தேர்தல்களில், நவ
பாசிஸ்ட்டான
ஜோன் மரி லூப்பென் வெற்றியை இறுதிச்சுற்றில் தடுப்பதற்காக ஜனாதிபதி
சிராக்கிற்கு ஆதரவாக அணிதிரண்டு நின்றார்கள். இப்போது இவர்கள், முஸ்லீம்களுக்கு எதிராக குறிப்பாக முஸ்லீம்
மாணவிகளுக்கு எதிராக, மீண்டும் லூப்பென்னிற்கு பெருமகிழ்ச்சி அளிக்கிற வகையில் ஜனாதிபதிக்கு பின்னால் அணிதிரண்டு
நிற்கிறார்கள். இப்படிச் செய்ததன் மூலம் இந்த சக்திகள் சிராக்கின் நம்பகத்தன்மைக்கு புதிய உற்சாகத்தை
ஊட்டியுள்ளன. புத்தாண்டில் வேலையில்லாத் திண்டாட்ட உதவித் திட்டங்களுக்கு வெட்டு, மற்றும் மார்ச்சில்
நடைபெறவிருக்கும் பிராந்திய தேர்தல்களுக்குப் பின்னர் சுகாதாரம் மற்றும் நோயாளிகள் சலுகைகள் மீதான
தாக்குதல்கள், ஜூனில் ஐரோப்பிய தேர்தல்களுக்கு பின்னால் நடைபெறவிருக்கும் இதுபோன்ற நடவடிக்கைகள்
ஆகியவற்றிலிருந்து மக்களது கவனத்தை திசை திருப்புவதற்காக இது போன்ற சக்திகள் தற்போது சிராக்கிற்கு
பின்னால் அணி வகுத்து நிற்கின்றன.
அலக்ஸ் லுபெப்ர் கட்டுரையில் இரண்டாவது வரியில் பிரெஞ்சு மொழிபெயர்ப்பில்
காணப்பட்ட ஒரு தவறை நான் சரிசெய்தாக வேண்டும். அதில் ''ஆரவார பகட்டு'' என்று உள்ளது. அது
''வெளிப்படையாக தெரியும்'' என்றிருக்க வேண்டும். இது சாதாரண பிரச்சனையல்ல என்பதை நான்
விவரிக்கிறேன்.
பள்ளிகளில் தடைசெய்யப்படவிருக்கும் மத அடையாள சின்னங்களைப் பற்றி எப்படி
விளக்கம் தருவது என்பது தொடர்பாக முன்னாள் அரசாங்க அமைச்சர் பேர்னாட் ஸ்ராசி (Bernard
Stasi) தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷனில் நாடாளுமன்ற
உறுப்பினர்களும் இடம்பெற்றிருந்தனர். பல மாதங்கள் இது பற்றி வாக்குவாதங்கள் நடைபெற்றன. சட்டத்தில்
ஏற்கெனவே இடம் பெற்றிருக்கும் ''பகிரங்கமான மத மாற்றத்திற்கு வகைசெய்யும் அடையாளங்கள்'' அல்லது
''சின்னங்கள் கண்ணுக்குத் தெரிகின்ற வகையில் இடம்பெறக்கூடாது'' என்பது பற்றி விவாதங்கள் நடைபெற்றன.
வெளிப்படையான என்பதற்கும், ''வெளிவேடமான'' என்பதற்கும் இடையில் ''வெளிவேடமான'',
வெளிப்படையான என்ற சொற்களை மாற்றாக தேர்ந்தெடுத்து நாடாளுமன்றம் சட்டம் இயற்றியிருக்கிறது.
இது வரலாற்றின் மத்திய காலத்தில் நடைபெற்ற அறிஞர்களுக்கிடையிலான சொற்
சிலம்பத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. உண்மையிலேயே இப்போது மிக முக்கியமான, உண்மையான
சமூக, அரசியல் மற்றும் வரலாற்றுப் பிரச்சனைகள் என்பன இதில் தொக்கி நிற்கின்றன.
1801 ஆம் ஆண்டில் நெப்போலியனது
Concordat வில்
கத்தோலிக்க, யூத மற்றும் இரண்டு புரட்டஸ்டாண்ட் மதங்கள் அங்கீகரிக்கப்பட்டன. அவரது ஆட்சியிலும், அதற்கு
பின்னர் மன்னர் ஆட்சிகளிலும் மற்றும் இரண்டாவது சாம்ராஜியத்திலும் கத்தோலிக்க திருச்சபையின் அந்தஸ்து மீண்டும்
நிலைநாட்டப்பட்டு கல்வியில் அதற்கு மேலாதிக்க பங்களிப்பு தரப்பட்டது. பத்தொன்பதாவது நூற்றாண்டின் கடைசி
30 ஆண்டுகளில் 1905 வரை நவீன முதலாளித்துவ அரசாங்கத்தில் கத்தோலிக்க மத ஆதிக்கத்தின் பங்களிப்புத்
தொடர்பாக கிளர்ச்சிகள் நடந்தன. அப்போது தாராள மற்றும் தீவிர முதலாளித்துவ வர்க்கம் வளர்ந்து கொண்டு
வந்த தொழிலாளர் இயக்கங்களோடு இணைந்து நின்று கல்வியில் கத்தோலிக்க மதத்தின் பிடியை குறைப்பதற்கு
கடுமையாக முயன்றன. இந்தப் போராட்டத்தின் உச்சகட்டம்தான் 1905 ல் அரசாங்கத்திலிருந்து கத்தோலிக்க
திருச்சபைகளை தனிமைப்படுத்திய சட்டமாகும். அந்த சட்டம் ''குடியரசு எந்த மதத்தையும் அங்கீகரிக்கவோ
அல்லது அதற்கு அலுவலர்களை நியமிக்கவோ அல்லது மானியங்களை வழங்கவோ செய்யாது'' என்று
கட்டளையிட்டது.
நாஜி படையெடுப்பாளர்கள் பிரான்சை ஆக்கிரமித்துக் கொண்டதைத் தொடர்ந்து
அவர்களோடு ஒத்துழைத்த மார்ஷல் பெட்டயின்
(Marshal Pétain) ஆட்சியில் கத்தோலிக்க திருச்சபை
மீண்டும் உறுதியாக தன் பழைய இடத்தில் அமர்ந்து கொண்டது. விடுதலைக்குப் பின்னர் கத்தோலிக் திருச்சபையின்
பங்களிப்பு பெட்டயின் ஆட்சியில் இருந்த அளவிற்கு பெரும்பகுதி அப்படியே நிலைநாட்டப்பட்டது. 1958 ல்
ஐந்தாவது குடியரசில், டு கோல் ஆட்சிக்கு திரும்பியதும் திருச்சபைக்கு கணிசமான இடத்தை மீண்டும் தந்தார்.
ஸ்ராசி கமிஷன் சுட்டிக்காட்டியிருப்பது ''1959 டிசம்பர் 31 திகதி சட்டம் ஒப்பந்தத்தில் செயல்பட்டுவரும்
தனியார் பள்ளிகளுக்கான விதிகளை நிர்ணயம் செய்கிறது. இதில் பெரும்பாலும் கத்தோலிக்கப் பள்ளிகள் அவற்றின்
திட்டவட்டமான தன்மைகள் அங்கீகரிக்கப்பட்டு அரசியல் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது'' என்ற வாசகம்
இடம்பெற்றிருக்கிறது.
மூன்றாவது அல்லது நான்காவது அல்லது நடப்பு ஐந்தாவது குடியரசில், 1905 ல்
பிரான்சின் கிழக்குப் பகுதியான அல்சாஸ் மொசல் (Alsace
Moselle) ஜேர்மன் ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது,
குடியரசின் நிலைப்பாட்டிற்கேற்ப திருச்சபையையும், அரசாங்கத்தையும் பிரித்துவைக்கின்ற நடவடிக்கை அங்கே
பொருந்தாமல் இருந்தது. Concordat
படி, திருச்சபைகள் தமது மதத்தை போதிக்கலாம். முழுமையாக கத்தோலிக்க மதத்தை அந்த மண்டலத்தில்
அரசாங்கப் பள்ளிகளில் போதிக்கலாம் என்ற உரிமை வழங்குகிறது.
பிரெஞ்சு மக்களில் 18 வீதமானர்வர்களின் கல்வியை கத்தோலிக்க திருச்சபை தனது
கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. பொதுக்கல்வி சேவைக்கு அரசாங்கத்தின் நிதி
ஒதுக்கீடுகள் குறைந்து கொண்டே வருவதால், இதன் அளவு இப்போது வளர்ந்து கொண்டே வருகிறது.
இப்போது சட்டத்தில் விளக்கப்பட்டுள்ள ''வெளிப்படையாகத்'' தெரியும் சின்னம்
என்பதில் எந்த சின்னங்களை அனுமதிக்கலாம் என்பதற்கான வரம்பு குறைக்கப்படுகிறது. இப்போது மாணவ
மாணவிகள் கிருஸ்துவ சிலுவையை அல்லது தாவீதின் நட்சத்திரங்களை காதணிகளாக அல்லது கையணிகளாக
பயன்படுத்துவதை இச்சட்டம் அனுமதிக்கிறது. முஸ்லீம் பெண்கள் அணிகின்ற தலை அணி அல்லது முக்காடு என்பன முந்திய
தர நிர்ணயத்தின்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் இப்போது புதிய ''வெளிவேடமாக'' என்ற சொல்லை
வழங்கியதால் அது தடுக்கப்படுகிறது.
எனது அனுபவத்தில், அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் இந்த பரபரப்பை
கிளப்பிவிடுவதற்கு முன்னர் முஸ்லீம் மாணவிகள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தலை அணியுடன் பள்ளிக் கூடங்களில்
படித்தார்கள். உண்மையிலேயே என்னுடைய வகுப்புக்களில் மிக சீரியசாக கல்வி கற்கின்றவர்களில் முஸ்லீம்
மாணவிகளும் இடம்பெற்றிருந்தனர்.
ஆக, விளக்கத்தை தெளிவாக சொல்லாமல்
Stasi கமிஷனும்,
அரசாங்கக் கட்சியான UMP
யின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சோசலிஸ்ட் கட்சி
MP க்களும், கம்யூனிஸ்ட் கட்சி
MP க்களில் பெரும்பாலோரும், நாடாளுமன்றத்திற்கு அப்பால்
ஆசிரியர் சங்கங்களின் ஆதரவோடும், லூத் ஊவ்றியர் (Lutte
Ouvrière) கட்சியின் தலைமையிலான தீவிர இடதுசாரி
சந்தர்ப்பவாதிகளும் இந்த நடவடிக்கையை ஆதரித்திருக்கின்றனர். முஸ்லீம் மாணவிகள் தங்களது தலை முடியை
மறைப்பதற்காக பர்தா அல்லது தலை அணியை அணிவதற்கெதிராக அவர்களுக்கு பாரபட்சம் காட்டுகின்ற வகையில்
இந்தச் சட்டம் வந்திருக்கிறது. இதில் மிக கெட்டிக்காரத்தனமாக ஒரு ஆணவப் போக்கை அவர்கள் கடைப்பிடித்து
எல்லா மதங்களையும் சமமாக நடத்துவதாக கூறிக்கொள்கின்றனர். முஸ்லீம்கள் பாத்திமாவை கைகளில்
மெடல்களாகவோ அல்லது காதனிகளாகவோ அணியலாம் என்று மிகுந்த ஆணவத்தோடு ஆலோசனை கூறிவருகின்றனர்.
அத்துடன், பிரான்சிலுள்ள ஒரு சிறிய சீக்கிய சமூகத்தின் நம்பிக்கையின்படி, அவர்களது
ஆண் குழந்தைகளுக்கு தலைப்பாகைகள் அணிவது கட்டாயமாகும். இந்தக் கட்டளையில் அவர்கள் தங்களது வழக்கத்தை
கைவிடவேண்டும். அல்லது கல்வியை கைவிடவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பல பிரெஞ்சு மக்களுக்கு
சீக்கிய சமூகம் இருப்பதே அவர்களது எதிர்ப்பிற்குப் பின்னர்தான் தெரியும்.
இப்படி குடியேறிய சமூகங்களிடையே ஏற்படுகின்ற அரசியல் தாக்கம் கல்வி அமைச்சர்
லூக் பெரியின் (Luc Ferry)
சிந்தனைகளை கிளறிவிட்டுள்ளது. எந்தப் பொருளும் மத சின்னமாக ஆகக்கூடும் என்றும் குறிப்பிட்டு, தாடி
''இஸ்லாமிய'' சின்னமென்றால் அதற்கு பள்ளிகளில் தடைவிதிக்க முடியுமா? என்பது பற்றயெல்லாம் விவாதித்துவிட்டு
தலை அணிக்கு பதிலாக எத்தகைய அளவுள்ள அடையாளச் சின்னங்களை அணியலாம் என்று அமைச்சர் கூறினார்.
சீக்கிய சிறுவர்கள் கண்ணுக்குத்தெரியாத முடிவலைகளை (hair
net) அணியலாம் என்ற ஆலோசனையையும் கூறினார்.
நமது மாணவ மாணவிகளின் தனிப்பட்ட விருப்பங்களில் அரசாங்கம் தலையிடுகின்ற
சூழ்நிலையானது, திட்டவட்டமாக வரலாற்றின் மத்திய காலத்தில் பழிவாங்கும் தன்மையைப் போன்று
அமைந்துவிட்டது. ஜனாதிபதி சிராக் மற்றும் பிரதமர் ராஃப்ரின் ஆகிய இருவரும் நிலவரத்தை கட்டுப்படுத்தும்
நோக்குடன், இந்தச் சட்டம் குறித்து மேலும் விவாதங்களில் ஈடுபட வேண்டாம் என்று கட்டளையிட வேண்டிய
அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களும், சில சிவில் உரிமை பாதுகாப்பு அணியினரும்
பெரும்பாலும், ஆனால் முற்றிலுமாக இல்லாவிட்டாலும் அடிப்படைவாதிகளும், முன்னின்று தெருக்களில் அணிவகுத்து
வந்தனர்.
மிகப்பெரும்பாலான சோசலிஸ்ட்
MP க்கள்
வெளிப்படையாகத் தெரியும், மத அடையாளச் சின்னங்களுக்கு தடை விதிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அப்படி
செய்வதென்றால் ஒட்டுமொத்தமாக மதத் தொடர்புகளை வெளிப்படுத்தும் அடையாளச் சின்னங்களுக்கு
தடைவிதிப்பதாக அமைந்துவிடும். இத்தகைய போக்குகள், ''மதச்சார்பின்மை'' ''அடிப்படைவாதம்''
என்பனவற்றிற்கு அரசாங்க முத்திரை குத்தி பள்ளிகளை நடத்துபவர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு கடுமையான
தண்டனை வழங்கும் அதிகாரங்களை தந்துவிடும். உண்மையான மதச்சார்பின்மை எல்லாவிதமான மத வெளிப்பாட்டு
சின்னங்களுக்கும் தடைவிதிப்பதாக அமைந்துவிடும். ஆகவே எல்லா மத நம்பிக்கை உள்ளவர்களையும் இது பாதிக்கும்.
கிருஸ்துவ மற்றும் யூத அதிகாரிகள் இந்த ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளது..
சில வலதுசாரி அரசியல்வாதிகள் மத சின்னங்களுடன் பள்ளிகளில் எல்லாவிதமான
அரசியல் சார்புள்ள உடைகளுக்கும் சேகுவரா படம் தீட்டப்பட்ட டி.சர்ட்டுக்களுக்கும் தடைவிதிக்க கோரினர்.
இறுதியாக வெளிவேடமான என்ற வார்த்தை சேர்க்கப்பட்டதைத்
தொடர்ந்து முஸ்லீம் பெண் குழந்தைகள் பழிவாங்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் யூத அல்லது
கிருஸ்துவ அதிகாரிகள் பாதிக்கப்படவில்லை. சீக்கிய சமுதாயம் இந்த மோதல்களுக்கு இடையே சிக்கிக்கொண்டது.
மக்களில் இன அல்லது மத வேறுபாடுகள் அல்லது கருத்துக்கள் அடைப்படையில் எந்த பிரிவினருக்கும் எதிராக
பாரபட்ச நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அது எல்லா உரிமைகள் மீதும் தொடுக்கப்படுகின்ற
தாக்குதல்களாக அமைந்துவிடும். ஆகவே இது ஒரு எச்சிரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது.
முதலாளித்துவம், தொழிலாள வர்க்கத்தின் இடைவிடாத, தொடர்ந்த
கோரிக்கையான கல்வி பெறுவதற்கான கோரிக்கைக்கு 19 ம் நூற்றாண்டு முதல் சலுகைகளை வழங்கிய
அதேவேளை, அரசாங்க கல்வியை தனது சமூக மற்றும் அரசியல் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்தது.
ஜக்கோபனிசம் (jacobinisme)
என்று அறியப்படும் மிகவும் மையப்படுத்தப்பட்ட அரசு மற்றும்
அரசாங்க கட்டுப்பாட்டின் காரணமாக பிரான்சில் இது மிகவும் வெளிப்படையாக இருந்தது. பிரெஞ்சு அரசுக் கல்வி
இந்த ஜக்கோபனிசத்தின் மிகவும் நேர்த்தியான வெளிப்பாடாக இருந்து வருகிறது மற்றும் தொடர்ந்தும்
இருக்கிறது. அதை மதச்சார்பின்ைம (Laicite)
என்ற பெயரின் கீழ் பேணப்பட்டு வருகிறது.
தற்போது நடைபெற்றுவரும் வாக்கு வாதங்கள் மற்றும் ஊடகங்கள் தெரிவிக்கும்
பரபரப்புக்களின் மத்தியில், லூத் உவ்றியர் கட்சி (Lutte
Ouvrière) முஸ்லீம் பெண் குழந்தைகள் தலை அணிகளை
அணிவதற்கு தடைவிதிப்பதை தீவிரமாக ஆதரிக்கிறது. ஆரம்பத்தில் சில குழப்பப்போக்கு நிலவினாலும்
இக்கட்சி
சட்டத்திற்கு ஆதரவாக இருந்து வருகின்றது. இதற்கு முன்னர்
இக்கட்சி ஒத்துழைக்க மறுக்கும் ஆசிரியர்களை சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்டுப்படுத்த வேண்டுமென்று
கூறிவந்தது. ''தேசியக் கல்வி சேவை ஒரு விதியை கொண்டுவர முடியும். பள்ளி வளாகங்களுக்குள் மிகக்குறைந்த
எண்ணிக்கையில் இருந்தாலும் தலை அணி அணிவதற்கு தடைவிதிக்க வேண்டும். எல்லா ஆசிரியர்களும் இந்தத் தடையை
செயல்படுத்தியாக வேண்டும். ஆசிரியர்களுக்கு இதை கட்டாய கடமையாக்கும் நெறிமுறைகள் வெளிப்படையாக
கொண்டுவரப்பட வேண்டும்'' என்று இக்கட்சி 2003 அக்டோபரில் அறிக்கை வெளியிட்டது. (அழுத்தம்
சேர்க்கப்பட்டது)
மேலும் இக்கட்சியினர், மகளிருக்கு ஆதரவான இயக்கத்திற்கு (Ni
putes ni soumises) விமர்சனம் அற்ற ஆதரவு
தெரிவித்து வருகின்றது. குறிப்பாக இளம் தொழிலாள வர்க்கப் பெண்களுக்கு எதிராக, பணியாற்றும் இடங்களில்
கடைபிடிக்கப்பட்டுவரும் ஒடுக்குமுறைகளை கண்டித்து இந்த அமைப்பு பிரச்சாரம் செய்து வருகின்றது.
வெளிநாடுகளிலிருந்து குடியேறிய பல இளைஞர்களை இடதுசாரி கட்சிகள் அனைத்துமே கைவிட்டுவிட்டதால் பழமைவாத
இஸ்லாத்தின் கரங்களில் அவர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர் என்று
Ni putes ni soumises
இயக்கத்தின் பேச்சாளர் பெடலா அமரா என்பவர் (Fadela
Amara) மார்ச் 6 ல் சர்வதேச மகளிர் தினத்தில்
தெரிவித்தார். அப்போது சிராக், ராஃப்ரின் வீட்டுவசதி, நீதித்துறை செயலாளர் நிக்கோல் ஹைட்ஜி
(Nicole Guedj)
மற்றும் லூத் ஊவ்றியர் கட்சியின் பேச்சாளர் ஆர்லத் லாகியே
(Arlette Laguiller)
ஆகியோர் இந் நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொண்டனர்.
''அவர்களது அரசியல் சார்புகள் எதுவாக இருந்தாலும் பெண்கள் அணிதிரண்டு வருவது
குறித்து மகிழ்ச்சியடைகிறேன்'' என்று பெடலா அமரா மேலும் தெரிவித்தார். அவரது இயக்கம் இஸ்லாமிய தலை
அணிக்கு தடைவிதிக்கும் சிராக்கின் சட்டத்தை ஆதரிக்கிறது. அத்துடன், பெண் விடுதலை இயக்க ஆதரவாளர்களும்
மற்றும் ''தீவிர இடதுசாரி'' லூத் ஊவ்றியர் அணியினரும், வலதுசாரி ராஃப்ரின் அரசாங்கத்தோடு கை கோர்த்து
நிற்கின்றனர்.
நான் எனது பணிக்காலத்தில் பெரும்பகுதி குடியேறிய மக்களின் முதலாவது,
இரண்டாவது தலைமுறை குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். 2004 செப்டம்பரில்
செயல்படத் துவங்குகிற இந்தச் சட்டத்தில் நான் மிகவும் கடுமையான கருத்துக் கொண்டிருக்கிறேன். இது முஸ்லீம்
மக்களுக்கு எதிரான ஒரு தாக்குதல் ஆகும். அத்துடன், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிர்வாகிகள் மாணவர்களை
கண்காணிக்கும் பொறுப்பில் அமர்த்தப்படுகின்றனர். சமூக, கலாச்சார மற்றும் மத வேறுபாடுகளை
உணர்வுபூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அணுகுகின்ற ஆசிரியர்களது ஆற்றல்கள் இதன் மூலம் குறைக்கப்படுகின்றன.
இது மாணவர்களிடையே பாரபட்ச உணர்வையும், சகிப்புத் தன்மையில்லாத மனப்போக்கையும் உருவாக்குகிறது.
இனவெறி அல்லது பாசிச மனப்பான்மை கொண்ட மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் அதிக சகிப்புத்தன்மையுள்ள
ஆசிரியர்களை தவறான வழிக்கு அழைத்து செல்வதாக அமைந்திருக்கிறது. இது பெட்டைன் (Pétain)
ஆட்சியில் யூதர்கள் அல்லது நாசி எதிர்ப்பாளர்கள் என்று சந்தேகிக்கப்படுகிற மாணவர்கள் பற்றி, ஆசிரியர்கள்
கல்வித்துறைக்கு அறிக்கை தரவேண்டுமென்று தரப்பட்ட சுற்றறிக்கைகளை எனக்கு நினைவுபடுத்துகிறது.
மார்ச் 11 ல் லிபிரேசன் பத்திரிகை, ஓ-ரென் (Haut-Rhin)
பகுதியிலுள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஒரு மாணவி பர்தா அணிந்து வந்தார் என்பதற்காக ஆசிரியர்கள்
வேலைநிறுத்தம் செய்ததை விவரிக்கிறது. இது எனக்கு மிக மோசமான அச்சத்தை உறுதிப்படுத்துகிறது.
''நேற்று காலை 8 மணிக்கு அந்த மாணவி பர்தா அணிந்து வந்தார். சில
நிமிடங்களுக்கு பின்னர் 400 வேறு மாணவர்களுடன் மிகப்பெரும்பாலான ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
பள்ளிக்கூடத்தின் நுழைவு வாயிலில் திரண்டிருந்த மிகப்பெரும்பாலான மாணவர்கள் தங்களது ஆசிரியர்களின் நடவடிக்கையை
ஆதரித்தனர். ஒரு மாணவர் தனது பையிலிருந்து ஒரு அட்டையை எடுத்தார். அதில் நீ தலை அணியை நீக்குகிறாயா?
ஆம் என்றால் உள்ளேவா இல்லையென்றால் வெளியே போ என்று சற்று கொச்சையாக எழுதப்பட்டிருந்தது'' என்று
மேலும் இப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
''அந்த மாணவியின் குடும்பத்திற்கும் எங்களது மேல் அதிகாரிகளுக்குமிடையில் எந்தவிதமான
ஆலோசனையும் நடைபெறாமல் இப்பிரச்சனையில் சமரசம் உருவாக்கப்பட்டது. சட்டத்தில் காணப்பட்டுள்ள தவறான
சொல்லான 'bandana"
அனைவரையும் ஏமாற்றிவிட்டது. குழப்பத்தை நாங்கள் தவிர்க்க முடியவில்லை. இந்தத் தலை அணி தொடர்பாக மாணவர்களிடையே
குழப்பம் நிலவுகிறது. சில மாணவர்கள் எல்லா வகையான தலைப்பாகைகளுடனும் வரலாமென்று கருதுகின்றனர்''
என்று இதுபற்றி ஒரு ஆசிரியர் கூறியுள்ளார்.
இத்தகைய அபிவிருத்திகள் மக்களது கவனத்தை திசைதிருப்புவதாக அமைந்திருக்கிறது.
ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பதவிகளை அரசாங்கம் நீக்கியுள்ளதுடன், கல்வி மற்றும் ஆராய்ச்சிக்களுக்கான நிதி
ஒதுக்கீடுகளையும் குறைத்துள்ளது. தற்போது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள்
தொடக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கவனத்தை திசைதிருப்புகின்ற இது போன்ற நடவடிக்கைகள் மிகவும்
பிற்போக்கு சக்திகளுக்குத்தான் உதவுவதாக அமையும்.
அலெக்ஸ் லுபெப்ரின் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல், ''ஜனநாயக உரிமைகள் மற்றும்
சோசலிசத்திற்கான போராட்டத்தில், உழைக்கும் மக்களின் அரசியல் அபிவிருத்தி மற்றும் கல்வி தொடர்பாக
பாடம் புகட்டுவதன் மூலந்தான் மத துவேஷங்களில் இருந்து வெளியேற முடியும். மாறாக இதை அரசாங்கத்தின் மேலிருந்த
விடப்படும் கட்டளைகளால் நீக்கிவிட முடியாது. ஏனெனில் ஆட்சியிலுள்ள செல்வந்த தட்டின் நலன்களுக்காகவே இந்தக்
கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன''.
Top of page |