World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Banker's speech points to global problems

வங்கியாளர் உரை சுட்டிகாட்டும் பூகோளப் பிரச்சனைகள்

By Nick Beams
1 April 2004

Back to screen version

சர்வதேச தாவாக்கல் தீர்வு வங்கி (Bank for International Settlements -BIS) பொது மேலாளர் Malcolm Knight சென்றமாதம் ஆற்றிய உரை, அரசுக்கடன் மற்றும் தற்போது நடைமுறையிலுள்ள குறைந்த வட்டிவிகிதம் ஆகியவற்றால் உலகப் பொருளாதாரத்தில் உருவாகவிருக்கும் சில பிரச்சனைகளை சுட்டிக்காட்டியுள்ளது.

பாசல்- இல் உள்ள சுவிஸ் பொருளாதார மற்றும் புள்ளியியல் சங்கத்தின் ஆண்டு மாநாட்டில் அவர் உரையாற்றுகையில், கடந்த ஆறு மாதங்களில் பொதுவாக பிரகாசமான பொருளாதார நிலை ஏற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டி தொடங்கினார். சர்வதேச அளவில் பொருளாதாரம் சீரடையத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவுடன் சீனாவும் சேர்ந்து பொருளாதார வளர்ச்சியின் இரண்டாவது எந்திரமாக ஆகியிருக்கிறது. ஆசியாவில் பூரிப்பிற்கான சான்றுகள் தோன்றியுள்ளன. ஐரோப்பாவில் இன்னமும் நுகர்வோர் செலவினம் பின்தங்கியிருந்தாலும் நம்பிக்கை வலுவடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மேலும் சர்வதேச நிதி நிர்வாகஅமைப்பு ஆர்ஜண்டினா நிதி நெருக்கடி, தகவல் தொழில்நுட்ப குமிழியில் பொறிவு மற்றும் என்ரோன், பார்மலேட் போன்ற பெரிய கார்ப்பொரேஷன்கள் மூடப்பட்டது போன்ற பல்வேறு அதிர்ச்சிகளிலிருந்து மீண்டிருக்கின்றது.

ஆனால் நைட் அதற்குப் பின்னர் இந்த "தெளிவான நம்பிக்கையான சூழ்நிலைகளுக்கு உள்ளே உள்ள" சில கவலைகள் மீது தனது கவனத்தை திருப்பினார். உலகப் பொருளாதார வளர்ச்சியை இயக்குவது மூன்று வலுவான சக்திகள் என்று அவர் சுட்டிக்காட்டினார். சில நாடுகளில் வருவாய் அதிகமாக்கும் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, உலகம் முழுவதிலும் நீக்குப்போக்குள்ள பணகொள்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மற்றும் சீனாவில் முதலீட்டு பூரிப்பு ஏற்பட்டிருக்கிறது. அது "துல்லியமாய் இதற்கு முன்னர் நடைபெற்றிராத" ஒன்றாகும்.

நைட்டின் பார்வையில், பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்கி வருவது எதுவும் உலகப் பொருளாதாரத்தை எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை சமாளிப்பதில் காலவரையற்று நீடித்துக்கொண்டே செல்ல முடியாது. அண்மை ஆண்டுகளில் ஏற்பட்ட பலவீனமான பொருளாதார வளர்ச்சி காலத்தில் ஒட்டுமொத்த தேவைக்கு "பெரும் தூண்டுதலை" வழங்கும் வகையில் பல நாடுகளில் வரிவிதிப்புக் கொள்கைகள் கடைபிடிக்கப்பட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவில் நிதிவருவாய் நிலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP)- 2000-ம் ஆண்டில் ஒரு சதவீத உபரி காணப்பட்டது, இந்த ஆண்டு GDP- ல் அது ஐந்து சதவீத பற்றாக்குறையாக ஆகிவிட்டது. ஐரோப்பாவில் வருவாய் பற்றாக்குறைகள் விரிவடைந்து வருகின்றன. அதே நேரத்தில் ஜப்பானின் வருவாய் பற்றாக்குறை 1998-க்குப் பின்னர் GDP-ல் 5 சதவீதத்திற்கு மேல் சென்று கொண்டிருக்கிறது.

பிரதான மத்திய வங்கிகள் வரலாற்று ரீதியாக மிகக்குறைந்த வட்டி விகிதங்களை நிர்ணயித்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவில் 2000-ன் இறுதியில் 6.5-சதவீதமாக இருந்த வட்டி விகிதம் தற்போது ஒரு சதவீதமாகக் குறைந்துவிட்டது.

சீனாவில் முதலீட்டு பூரிப்பு ஏற்பட்டிருப்பது "புதிய தொழிற் புரட்சியின் ஒரு பரிணாமம் உருவாகி" "மில்லியன் கணக்கான புதிய தொழிலாளர்கள் சர்வதேச பொருளாதாரத்திற்கு" கொண்டுவந்து சேர்க்கப்படும் அதேவேளை, சீனப்பொருளாதாரம் "அளவிற்கு அதிகமாக" வளர்ந்து வருவதற்கான அறிகுறிகளும் தோன்றுகின்றன. சில பகுதிகளில் மிதமிஞ்சிய முதலீட்டு ஆபத்துக்களும் தோன்றியுள்ளன. ''சில பிரிவுகளில் உற்பத்தி கொள்திறன் உருவாக்கப்பட்டிருப்பது என்றைக்கும் இலாபம் தராததாக இருக்கலாம். மற்றும் மிதமிஞ்சிய கொள்திறன் வளருவது எதிர்காலத்தில் முதலீடுகளுக்கான வாய்ப்புக்களை பட்டுப்போகச்செய்து விடும்.''

முதலீட்டாளர்களால் எதிர்பார்ப்புகளில் "திடீரென்று திருத்தங்கள்" செய்யப்படுவது "நிதிச் சந்தைகளில் அதிர்வுகளை" ஏற்படுத்தும் என்று நைட் எச்சரித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் வட்டிவிகிதங்கள் மிகவும் "இயல்பான" மட்டத்திற்கும் அதிகமானதற்கு திரும்பும், மற்றும் அமெரிக்காவின் பணவீக்கம் 2-சதவீத அளவிற்கு உள்ளது, நடுநிலையான 5-சதவீதம் என்று கருதப்படுவதற்கு திரும்ப வேண்டும். தற்போது நடைமுறையிலுள்ள பணப்புழக்க கொள்கையை பங்குப்பத்திர சந்தைகளில் தாறுமாறான ஏற்றத்தாழ்வுகள் உருவாகாமல் இடமாற்றுவது எப்படி என்பதுதான் தற்போதுள்ள சவாலாகும்.

ஆனால் வட்டி விகிதங்கள் காலவரையின்றி மிக்குறைந்த அளவிற்கு வைத்திருக்கப்பட முடியாது, ஏனென்றால் அத்தகைய கொள்கை அதன் சொந்த பிரச்சனைகளை உருவாக்கிவிடுகிறது. மிகக்குறைந்த வட்டி விகிதங்களை கொண்ட குறுகியகால கடன்பொறுப்புகளால் நிதியூட்டப்பட்ட, நீண்டகால அடிப்படையில் எதிர்கால ஆபத்துக்களை சமாளிக்கும் உயர் செயல்திறனின் ஆதாரம் இருந்தது. "ஆபத்து எதுவுமில்லாத நீண்டகால அடிப்படையிலான அரசாங்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்து வருபவர்கள், செயல்திறன் உடையதாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் சரி, எப்படியாவது 'வருமானம் பெற்றாக வேண்டும்' என்ற உந்துதலுக்கு ஆட்பட்டுவிடுகின்றனர். இதன்விளைவாக ஆபத்தான கடன்களில் அதிகமாக முதலீடு செய்து விடுகிறார்கள்."

சர்வதேச நிதிநிறுவனங்கள் உயர் வட்டி விகிதங்களை சமாளிக்கும் தன்மை கொண்டவையாக தோன்றுகின்றன மற்றும் கடந்த காலத்தைவிட தற்போது அதிர்வுகளை ஈர்த்துக்கொள்கின்ற திறன் நிதிநிர்வாகத்தில் அதிகம் உள்ளது. இப்படி "மறு உத்தரவாதம் சொல்வது" இன்றைய நிலவரத்தில் ஆபத்துக்கள் இல்லையென்று அர்த்தப்படுத்தாது என்று நைட் எச்சரித்திருக்கிறார்.

"இதைவிட சற்று உற்சாகம் குறைந்த சித்திரத்தை உருவாக்கிக் காட்டுவதில் சங்கடம் எதுவுமில்லை. எடுத்துக்காட்டாக, திடீரென்று செயல்திறன்மிக்க முதலீட்டாளர்களால் இலாப நோக்கில் முதலீடுகளை திரும்பப்பெறும்போது அதுதாமே வலிமை எளிதில் மாறும்தன்மையதாகி விடுகிறது, அதன் மூலம் மேலும் பரவலான அடிப்படையில் முதலீட்டு சமுதாயத்தினால் திருத்தி அமைக்கப்படுகிற நிலை உருவாகும். தற்போது உயர்ந்த வட்டி விகிதங்கள் நிலவுமானால் அவை சொத்து மதிப்பீடுகளை சிதைந்துவிடும். கடன்களை திருப்பிச் செலுத்தும் செலவின சுமைகள் கம்பனிகளுக்கும், வீடுகளுக்கும் அதிகரித்து நிதி நிர்வாகம் முழுவதும் கடன் தரம் சீர்குலைய வழிவகுக்கும்.''

அமெரிக்க மத்திய ரிசேர்வ் வாரியத்தின் குறைந்த வட்டிவிகித நடைமுறைகள் தொடர்புடைய ஆபத்துக்கள் குறித்து இதர வட்டாரங்களிலும் கவலைகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

எக்கனாமிஸ்ட் இதழ் அதன் அண்மைய தலையங்கத்தில், "முதலீட்டாளர்களுக்கும் வீடுகளை வாங்குபவர்களுக்கும் சொத்துக்களின் மதிப்பு எப்போதுமே உயர்ந்துகொண்டே இருக்க முடியாதென்று எச்சரிக்கை செய்வதன் மூலம், வட்டிவீதங்களில் உயர்வு இன்னொரு ஆபத்தான குமிழியை தவிர்க்க முடியும் என்று கூறியது. நியூயோர்க் டைம்ஸ்-ம் வட்டி விகிதங்களை உயர்த்துவது தொடர்பான நடவடிக்கைகளை தொடக்குமாறு பெடரல் ரிசர்வ் வாரியத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

பெப்ரவரியில் நியூஸ் வீக் பத்திரிகை Morgan Stanlay தலைமை பொருளாதார நிபுணர் Stephen Roach பெடரல் ரிசேர்வ் தலைவர் Alan Gneenspan- க்கு எழுதிய பகிரங்க கடிதத்தை பிரசுரித்திருந்தது. அதில் ரிசேர்வ் வாரியம் தனது அடிப்படை வட்டி விகிதத்தை ஒரு சதவீதத்திலிருந்து 3-சதவீதமாக உயர்த்த வேண்டுமென்றும், "நிதி அங்காடிகளில் ஓரளவிற்கு மாமுல் நிலை தோற்றத்தை மீட்க வேண்டுமென்றும்" கோரியுள்ளார். முதலாவது பெரிய குமிழ் ஏற்பட்டு நான்கு வருடங்களுக்குப் பின்னர் இப்போது "புதிய குமிழ்களுக்கான ஆபத்துக்கள் நிறைந்துவிட்டன" என்றும் Roach கூறியுள்ளார்.

மார்ச் -5ம் தேதி Roach வெளியிட்டுள்ள விமர்சனத்தில், "அமெரிக்காவின் பொருளாதார குமிழிக்கு பிந்தைய மீட்சி மீண்டும் ஒரு புதிய சுற்று சொத்து குமிழிகளுக்கு வித்திட்டுவிடுமோ என்ற கடுமையான ஆபத்து தோன்றியிருக்கிறது. பெடரல் ரிசேர்வ் தனது அசாதாரணமான அணுசரனை நிலைப்பாட்டை விடாப்பிடியாக நிலைநாட்டும்" தீவிர ஆபத்துடன், அது "அனைத்தினதும் மிகவும் பணத்தளர்ச்சி கொண்ட ஆபத்தை முன்வைக்கக் கூடும் என்று Roach கூறியுள்ளார்.

Roach கவலை என்னவென்றால், பெடரல் ரிசேர்வ் விரைவில் வட்டி விகிதங்களை உயர்த்தாவிட்டால் நிதி நெருக்கடி ஏற்படும்போது சமாளிக்கின்ற முயற்சிகளை மேற்கொள்வதற்கு வழியே இருக்காது. நான்காண்டுகளுக்கு முன்னர் நிலைமை அப்படி அல்ல, வட்டி விகிதம் 6.5- சதவீதமாக இருந்தபோது நிதிச் சந்தைகளில் ஏற்பட்ட தாறுமாறான போக்குகளை மட்டுப்படுத்த வட்டிவிகிதங்கள் தொடர்ந்து குறைக்கப்படல் உதவியது.

வட்டி விகிதங்களை முடிவு செய்யும் பெடரல் பகிரங்க சந்தை குழு (FOMC) -வின் ஜனவரி நிகழ்ச்சிக் குறிப்பு இந்தக் கவலைகளை பெடரல் ரிசேர்வ் கவர்னர்கள் பகிர்ந்துகொள்கின்றனர் என்பதை கோடிட்டுக் காட்டுகின்றன.

அளவுக்கு மீறி அனுசரணைக் கொள்கை நிலைப்பாடு என இறுதியில் நிரூபிக்கப்படுவதை பராமரிப்பதில் ஆபத்துக்கள் இருக்கின்றன" என்று உறுப்பினர்கள் ஒப்புக்கொள்கின்ற அதேவேளை, "தற்போதைக்கு" "பொருளாதார மந்தத்தை விரைந்து அகற்றுவதை உத்தரவாதம் செய்யும்பகுதியில் ஆபத்துக்களை எதிர்கொள்வது விரும்பத்தக்கது" என அவர்கள் தீர்மானித்தனர் என்று அக்குறிப்புக்கள் குறிப்பிடுகின்றன. குறைந்த வட்டி விகிதங்களுக்கான தொடர்ச்சியான கடப்பாடானது "நிதி சந்தைகளில் மதிப்பிடல்களுக்கு பங்களிப்பு செய்திருப்பதாகத் தோன்றுவது கீழ்நோக்கிய ஆபத்திற்கு சிறிதே இடம் விடக்கூடியது" என்பதையும் கூட வெளியிட்டிருக்கிறது.

Roach மற்றும் பிறரது வாதம் என்னவென்றால் பெடரல் ரிசேர்வ் நிர்வாகம் "இயல்புநிலை" கொள்கைகளின் பக்கம் அதிக கவனம் செலுத்தவேண்டும் அல்லது எதிர்காலத்தில் ஆபத்தான பிரச்சனைகள் அதிகமாகும். ஆனால் Morgan Stanley மதிப்பீடுகளின் படி இவை சாதாரண நேரங்களிலிருந்து விலகியே இருக்கின்றன. மார்ச் 8-ந்தேதி வெளியிடப்பட்ட விமர்சனத்தில் Roach, அமெரிக்கா தற்போது பொருளாதார மீட்சி என்று அழைக்கப்படும் கட்டத்தில் 27-மாதங்களாக நடைபோட்டு வருகிறது. தனியார் பண்ணைசாராத பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் எண்ணிக்கை சுமார் 8.2-மில்லியன், இது மிக சகஜமான பொருளாதார முன்னேற்ற காலத்திற்கும் சற்று குறைந்தது. இதன் பொருள் என்னவென்றால் கூலிகள், மற்றும் மாத ஊதியம் பெறுபவர்கள் எங்கே இருக்க வேண்டுமோ அதிலிருந்து 400-பில்லியன் டாலர் குறைவாகப் பெறுகின்றனர். இதனால் நுகர்வோர் மிகப்பெருமளவில் செலவிடும் தொகைக்கு கூடுதல் வருமானத்தால் நிதி கிடைக்கவில்லை, மாறாக வரிவெட்டுக்கள் மற்றும் வீட்டு மதிப்பீடுகள் அதிகரிக்கப்படுவதன் மூலம் செலவிடப்படும் நிலைக்கு இது வழிவகுக்கின்றது.

இந்தச் சூழ்நிலைகளின் கீழ் வட்டி வீத உயர்வு ஆனது, Roach ஆலோசனை கூறியுள்ளதைப்போல் 3-சதவீத மட்டத்திற்குக்க கூட, BIS -ஆல் இயல்பாக கருதப்படும் 5 சதவீத மட்ட அளவிற்கு இல்லாவிட்டாலும், அமெரிக்க பொருளாதாரத்தை மற்றும் இறுதியாக எஞ்சிய உலகம் முழுவதையும் பொருளாதார மந்தநிலைக்கு தள்ளும். இந்த ஆலோசனைகள் தெளிவாக்கியிருப்பதைப் போல், கொள்கை வகுப்போர்களை எதிர்கொள்ளும் இந்த நெருக்கடிகள், உலகப்பொருளாதாரமானது ஆழமாக வேரூன்றிவிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது, "இயல்பான" நிலையில் செயல்படவில்லை என்ற உண்மையிலிருந்து ஊற்றெடுக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved