World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan election: SEP opposes disenfranchisement of voters in LTTE areas

இலங்கைத் தேர்தல்: தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசங்களில் உள்ள வாக்காளர்களின் வாக்குரிமையை பறிப்பதை சோ.ச.க எதிர்க்கிறது

By Wije Dias
30 March 2004

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க), வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வாழும் வாக்காளர்ளுக்கு வாக்களிப்பு நிலையங்களை நிறுவுவதில்லை, என்ற தேர்தல் ஆணையாளரின் தீர்மானத்தை வன்மையாக கண்டனம் செய்கிறது. இது பிரிக்கப்பட்ட பெரும்பகுதி மக்களின் சிவில் உரிமையை படுமோசமாக மீறுவதாகும். ஒரு மதிப்பீட்டின்படி, விடுவிக்கப்படாத பகுதிகள் என சொல்லப்படும் பிரதேசங்களில் 275,000 தீர்மானகரமான வாக்காளர்கள் --முழுவதும் தமிழர்கள்-- இருப்பதோடு, அவர்கள் ஏப்பிரல் 2ம் திகதி தேர்தலில் இருந்து விளைபயனுள்ள விதத்தில் விலக்கி வைக்கப்படுவர்.

இறுதித் தீர்மானம் மார்ச் 25ம் திகதியே எடுக்கப்பட்டது. இவ்வாறான விடயங்களில் இறுதித் தீர்மானம் எடுக்கும் முழு அதிகாரமும் தேர்தல் ஆணையாளரிடம் இருக்கும் அதேவேளை, அவர், இந்தப் பிரதேசங்களில் உள்ள தமிழ் வாக்காளர்களை வெளித்தள்ளக் கோரிய, சிங்களத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளின் அழுத்தத்திற்கு உள்ளானார். அவர்களின் ஜனநாயக விரோத நிலைப்பாடானது தமிழர் விரோத உணர்வை தூண்டிவிடுவதை இலக்காகக் கொண்டதுடன், அது வெறும் தேர்தல் நோக்கங்களால் தோற்றுவிக்கப்பட்டதாகும்.

இதில் இலாபமடைவது, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீ.ல.சு.க) சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி) சேர்ந்து ஸ்தாபித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே ஆகும் (ஐ.ம.சு.மு). இவ்விரு கட்சிகளும், ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுடனான அதன் பேச்சுவார்த்தைகளுக்கும் எதிராக பல மாதங்களாக ஆர்ப்பாட்டம் செய்துவந்தன. இந்தப் பிரச்சாரமானது, குமாரதுங்க, பெப்பிரவரி 7 அன்று பாராளுமன்றத்தை கலைத்து, தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தை பதவிவிலக்கி, புதிய தேர்தலை விரைவுபடுத்த தீர்மானித்ததை அடுத்து உச்சகட்டத்தை அடைந்தது.

"விடுவிக்கப்படாத பிரதேசங்களை" தேர்தலில் இருந்து நீக்குவதானது, கடந்த பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணியையும் "சமாதான முன்னெடுப்புகளையும்" ஆதரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் (த.தே.கூ) வாக்குகளை குறையச் செய்யும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தாங்களே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என விடுதலைப் புலிகள் ஜனநாயக விரோதமான முறையில் உரிமை கொண்டாடுவதை ஏற்றுக்கொண்டுள்ள, தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் கூட்டமைப்பாகும். விடுதலைப் புலிகள், எந்தவொரு சமாதான கொடுக்கல் வாங்கல்களிலும் சாதகமான சலுகைகளைப் பெறுவதன் பேரில், அடுத்து வரும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான உண்மையான பிரதிநிதிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்த எதிர்பார்த்துள்ளனர்.

மார்ச் 1, இந்தியப் பத்திரிகையான இந்து நாளிதழுக்கு திட்டவட்டமாக கருத்துத் தெரிவித்த குமாரதுங்க, இந்த விடயத்தின் முன்னெடுப்பை சுவீகரித்துக்கொண்டார். "எம்மால் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் தேர்தலை நடத்த முடியாது. எந்த தேர்தல் ஆணையாளரும் அதை அனுமதிக்க மாட்டார்," என அவர் தெரிவித்திருந்தார். "விடுவிக்கப்படாத பிரதேசம்" என்ற வகைப்படுத்தல், 2002 பெப்ரவரியில் ஐ.தே.மு அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்ட பின்னரே உத்தியோகபூர்வமானதாகியது. போர் நிறுத்தத்தின் கீழ், இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டிலான பிரதேசத்துக்கும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கும் இடையில் எல்லைக் கோடுகள் வரையப்பட்டன.

தேர்தல் ஆணையாளர் 2001 தேர்தலின் போது, விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாக்களிப்பு நடவடிக்கையை அனுமதிக்கமாட்டார்கள் என்ற அடிப்படையில், அப்பிரதேசங்களில் வாக்களிப்பு நிலையங்களை நிறுவுவதில்லை என தீர்மானித்தார். ஆனால் இம்முறை, போர் நிறுத்த ஒழுங்குகளை கடைப்பிடிப்பதை காட்டுவதற்காகவும், மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை அதிகரிக்கச் செய்வதற்காகவும் வாக்களிப்பு நிலையங்களை ஏற்படுத்துமாறு விடுதலைப் புலிகளே தேர்தல் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தனர்.

குமாரதுங்க இந்து பத்திரிகைக்கு தெரிவித்த கருத்து, தெளிவாக தேர்தல் ஆணையாளர் மீது அழுத்தம் கொடுப்பதை இலக்காகக் கொண்டிருந்ததோடு, இந்த விடயம் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மார்ச் 5 அன்று நடத்தவிருந்த கூட்டத்தையும் ஆணையாளர் ஒத்திவைத்தார். அதே சமயம், குமாரதுங்கவுக்கு பதிலளிக்க வேண்டிய இராணுவ மற்றும் பொலிஸ் உயர்மட்டத்தினர், வாக்களிப்பு நிலையங்களை பாதுகாப்பதற்கு தமது பாதுகாப்பு அலுவலர்கள் அங்கு இருக்க வேண்டும் என வாதிடுவதன் மூலம், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வாக்கெடுப்பு நடத்துவதை எதிர்த்தனர்.

அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கடைசியாக மார்ச் 12 நடைபெற்றது. அங்கு சோசலிச சமத்துவக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரான பானிணி விஜேசிரிவர்தனவே முதலாவதாக பேசினார். இந்த திட்டம் ஜனநாயக விரோதமானது என கண்டனம் செய்த அவர், தேர்தல் ஆணையாளர் பொலிஸ் மற்றும் இராணுவத்தின் ஆலோசனைப்படி ஒரு பிரதேசத்தில் தேர்தல் நடத்துவதா இல்லையா என தீர்மானிப்பாராயின், அது எதிர்காலத்திற்கு ஒரு ஆபத்தான எடுத்துக்காட்டாக அமையும் எனவும் எச்சரிக்கை செய்தார்.

"வாக்களிப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பை வழங்க இராணுவத்தினரையும் பொலிசாரையும் பயன்படுத்தவேண்டும் என்பது, முதலாளித்துவ அரசியல் மற்றும் தேர்தல் அமைப்பின் சீரழிவின் வெளிப்பாடாகும். அது மக்களின் வாக்களிக்கும் ஜனநாயக உரிமைக்கு தடையாக இருக்கக் கூடாது" என அவர் குறிப்பிட்டார்.

அதே நேரம், சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை என்பதையும் விஜேசிறிவர்தன தெளிவுபடுத்தினார். "அரசியல் எதிரிகளின் ஜனநாயக உரிமைகளை மீறுவதில் பிரபல்யம் பெற்ற விடுதலைப் புலிகளுக்கு சோ.ச.க எந்த வகையிலும் வக்காலத்து வாங்காது. சோ.ச.க, விடுதலைப் புலிகளின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தீவினுள்ளும் மற்றும் தீவிற்கு வெளியிலும் மக்களை அணிதிரட்ட போராடிவந்துள்ளதுடன், தொடர்ந்தும் போராடும்," என அவர் விளக்கினார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் பல்வேறு திணைக்களங்களை சேர்ந்த அதிகாரிகளும், அரசுக்கு சொந்தமான வங்கிகளும், அதே போல் ஆசிரியர்களும் ஏற்கனவே சேவையில் ஈடுபட்டுள்ளார்கள் என சோ.ச.க வேட்பாளர் சுட்டிக்காட்டினார். ஆகவே, தேர்தல் ஆணையாளர் வாக்களிப்பு நிலையங்களுக்கு மட்டும் விஷேட பாதுகாப்பு வழங்க ஆயுதப் படைகளுக்கு அழைப்பு விடுப்பது ஏன்? என அவர் கேள்வி எழுப்பினார். விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் இந்த அனைத்தும் ஐயுறவுக்குறிய விடயங்களாகும்.

அவர்கள் வாழும் இடங்களில் வாக்களிப்பது அந்த மக்களின் அடிப்படை உரிமை. அவர்களது உரிமையை அவர்கள் சுதந்திரமாக நிறைவேற்ற முடியுமா முடியாதா என்பதை அந்த மக்களே தீர்மானிக்க வேண்டும். விடுதலைப் புலிகள் உட்பட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளானாலும் சரி, அல்லது அரச படைகளாகளானாலும் சரி, சுதந்திரமாக வாக்களிப்பதற்கு குறுக்கே நிற்கும் சகல விதமான அச்சுறுத்தல்களையும் எதிர்ப்பதற்கு அந்த மக்களுக்கு உரிமை உண்டு," என விஜேசிறிவர்தன குறிப்பிட்டார்.

பேரினவாத எதிர்ப்பு

சிங்கள தீவிரவாத ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடக செயலாளர் உதய கம்மன்பில்ல விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாக்கெடுப்பை உடனடியாக எதிர்த்தார். ஹெல உறுமய விடுதலைப் புலிகளுடனான எந்தவொரு பேச்சுவார்த்தையையும் எதிர்ப்பதோடு, வெளிப்படையாக சிங்களப் பெரும்பான்மையையும் பெளத்த மத ஆதிக்கத்தையும் கொண்ட இனவாத அரசுக்காக அழைப்புவிடுக்கிறது. இலங்கை அரச படைகள் இல்லாது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் தேர்தலை நடத்துவதானது, விடுதலைப் புலிகளை வாக்கு சீட்டை மோசடி செய்ய அனுமதிப்பதற்கு சமமானது என கம்மன்பில்ல குறிப்பிட்டார்.

இந்த வாதம் முற்றிலும் சிடுமூஞ்சித்தனமானதாகும். விடுதலைப் புலிகள் மாத்திரமன்றி, அனைத்து பிரதானக் கட்சிகளும் குண்டர் நடவடிக்கைகளிலும் அச்சுறுத்தல்களிலும் அபகீர்த்திக்குள்ளானவையாகும். வாக்கு மோசடியும், பயமுறுத்தலும், கலவரமும்தான் காரணமாக இருந்தால், தேர்தல் ஆணையாளர் நாட்டில் எந்த பகுதியிலும் தேர்தல் நடத்த முடியாது. ஹெல உறுமயவும் ஏனைய கட்சிகளும், பல்லாயிரக்கணக்கான தமிழ் வாக்காளர்களின் வாக்குரிமையை பறிப்பதை நியாயப்படுத்துவதற்காக, விடுதலைப் புலிகளின் நடைமுறைகளை ஒரு காரணமாக பயன்படுத்துகின்றன.

இராணுவமும் பொலிசும் இருப்பதால் ஜனநாயக உரிமை உறுதிப்படுத்தப்படும் என்ற வாதம் ஒரு மோசடியானதாகும். இரு தசாப்தகால உள்நாட்டு யுத்த காலகட்டம் பூராவும், பாதுகாப்பு படைகள் தான்தோன்றித்தனமாக தமிழ் சிறுபான்மையினரை கைதுசெய்து சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி அவர்களின் அடிப்படை உரிமைகளை பகிரங்கமாக மிதித்து நசுக்கின. 2001ம் ஆண்டு தேர்தலின் போது, ஜனாதிபதி குமாரதுங்கவின் கீழான இராணுவம், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வசித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வாக்களிப்பதை தடை செய்தது. அரச கட்டுப்பாட்டு பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு மக்கள் செல்ல முற்பட்டபோது இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்த வாக்காளர்களில் ஒருவர், தனது ஜனநாயக உரிமை மீறப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்தார். வழக்கு விசாரணைகளின்போது வடக்கு கிழக்கில் அன்றைய இராணுவ தளபதியாக இருந்த ஜெனரல் லயனல் பலகல்ல அவரது நடவடிக்கைகளுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். சோதனை சாவடிகள் மூடப்பட்டமை, "நடப்பிலுள்ள விடயங்களுக்கு புறம்பான காரணங்களை நோக்கமாகக் கொண்டிருந்தது" என நீதிமன்றம் அடையாளம் கண்டது. "அது அரசியல் காரணங்களுக்காக வாக்காளர்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்துவதை தடுப்பதை நோக்கமாகக் கொண்ட நியாயமற்ற நடவடிக்கை என நீதிமன்றம் முடிவெடுத்தது."

எவ்வாறெனினும், பலகல்லவின் நடவடிக்கைகள் அவர் இராணுவ தளபதியாக பதவி உயர்வு பெற தடையாக இருக்கவில்லை. குமாரதுங்கவின் உதவியுடன் அவர் பதவி உயர்வு பெற்றார். அவர் கடந்த வருடம் ஓய்வு பெறவேண்டியிருந்த போதிலும், ஜனாதிபதி அவரது சேவையை நீடித்தார். 2001ல் இரகசியமாக தமிழ் வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இப்போது 2004 தேர்தலில், எல்லா பிரதான கட்சிகளின் ஆதரவுடனும் வெளிப்படையாகப் பறிக்கப்படுகிறது.

12ம் திகதிய ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்திருந்த ஐ.தே.மு, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாக்களிப்பு நிலையங்கள் நிறுவுவதை எதிர்த்தது. இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவேண்டுமென ஐ.தே.மு செயலாளர் செனரத் கப்புகொட்டுவ அபிப்பிராயம் தெரிவித்தார். ஆனால், நடைமுறையில் இதே தாக்கத்தைத்தான் ஏற்படுத்தும். போக்குவரத்து வசதிகள் மிகக் குறைந்த அளவில் உள்ள நிலையில், வாக்காளர்கள் சில இடங்களில் 100 கிலோ மீட்டர் பயணம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

ஐ.தே.மு பிரதிநிதியும் அவர்களது போட்டியாளர்களைப் போல் அதே சாக்குப் போக்குகளைக் கூறினார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இராணுவமும் பொலிசும் செல்ல போர் நிறுத்த ஒப்பந்தம் அனுமதிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் உண்மை அரசியல் காரணங்களாகும். ஐக்கிய தேசிய முன்னணி, குமாரதுங்கவினதும் அவரது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் இனவாத வாதத்தை முறியடிக்க இலாயக்கற்றது. ஏனெனில் அதுவும் அதன் போட்டியாளர்களைப் போல் சிங்கள பேரினவாதத்தில் புதையுண்டுபோயுள்ளது. வடக்கு கிழக்கு தமிழர்களின் உரிமைகளை பாதுகாத்தால் தெற்கிலே அவர்களது போட்டியாளர்களிடம் வாக்குகளை இழக்க நேரிடும் என ஐ.தே.மு அஞ்சுகிறது.

எந்த இடதுசாரிக் கட்சியும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நவ சமசமாஜக் கட்சி போன்றவை, 12ம் திகதி ஆலோசனைக் கூட்டத்திற்கு பிரதிநிதிகளை அனுப்புவதற்குத் தன்னும் அக்கறை கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஜனநாயக உரைமைகளை பாதுகாக்கத் தவறியமை, அவர்கள் கொழும்பு அரசியல் நிறுவனத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற இனவாத அரசியலுக்குள் மூழ்கிவிட்டதையும், அவர்களின் அரசியல் சீரழிவையும் அம்பலப்படுத்துகிறது.

ஆளும் வர்க்கத்தினதும் அதன் பிரதிநிதிகளதும் சூழ்ச்சிகளுக்கு எதிராக, தமது ஜனநாயக உரிமைகளுக்காக தொழிலாள வர்க்கம் எப்போதும் போராட வேண்டும். 1931ல் டொனமூர் அணைக்குழுவின் சிபார்சின் பேரில் சர்வஜன வாக்குரிமை வழங்கப்படுவதை தமிழ் மற்றும் சிங்கள முதலாளித்துவ அரசியல்வாதிகள் கடுமையாக எதிர்த்தனர். அரசியல் அரங்கத்தில் சாதாரண உழைக்கும் மக்களின் ஈடுபாடு, பிரித்தானிய காலனித்துவவாதிகளுடனான தமது கொடுக்கல் வாங்கல்களை ஆபத்திற்குள்ளாக்கும் என அவர்கள் அஞ்சினர். அனைத்து உழைக்கும் மக்களுக்கும் வாக்குரிமை கோரிய ஒரே கட்சி இலங்கை தொழிற் கட்சியாகும். இதற்கு முன்னர் ஜனத் தொகையில் 4 சதவீதமானவர்களே சொத்து மற்றும் கல்வி அடிப்படையில் வாக்குரிமையை அனுபவித்தனர்.

1948ல் சுதந்திரம் பெற்றதை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) தனது முதல் நடவடிக்கையாக, ஒரு மில்லியன் தமிழ் பேசும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமை உட்பட பிரஜா உரிமையையும் பறித்தது. இந்தத் தீர்மானமும் பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றிருந்தது. அதை எதிர்த்த ஒரே கட்சி ட்ரொட்ஸ்கிச லங்கா சமசமாஜக் கட்சியாகும். அது அச்சமயம் சிங்கள மற்றும் தமிழ் உழைக்கும் மக்களின் உரிமைக்காக போராடியது.

இன்று, வளர்ச்சி கண்டுவரும் சமூகத் துருவப்படுத்தல் நிலைமைகளின் கீழ், கடந்த காலத்தில் தொழிலாளர் வர்க்கம் பெற்றுக்கொண்டவைகள் அனைத்தும் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள தமிழர்களின் வாக்குகளை ஒழிப்பதற்கான தீர்மானம், அரசியல் நிறுவனத்தில் ஜனநாயக உரிமைகளைக் காப்பதில் அக்கறை செலுத்தும் குறிப்பிடத்தக்க பகுதி கூட கிடையாது என்பதை அம்பலப்படுத்துகிறது என சோ.ச.க எச்சரிக்கின்றது.

சோ.ச.க, இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் மற்றும் இனம், மொழி, மதம் அல்லது பால் ரீதியிலான வேறுபாடுகளை ஏற்படுத்தும் ஏனைய திட்டங்களையும் எதிர்க்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. தமிழ் மக்களதும், அதே போல் அனைத்து உழைக்கும் மக்களதும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம், சோசலிசத்திற்கான போராட்டத்துடன் இறுக்கமாக கட்டுண்டுள்ளது. அது ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவுடன் சிங்கள, தமிழ் தொழிலாளர்களால் கூட்டாக முன்னெடுக்கப்பட வேண்டும். சோ.ச.க இந்த வேலைத் திட்டத்திற்காகவே பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved