World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : கொரியா

President impeached as South Korean democracy unravels

தென் கொரிய ஜனநாயகம் சிக்கலகற்றும் வேளையில் ஜனாதிபதி பதவி நீக்க விசாரணை

By James Conachy
26 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

தென் கொரிய ஜனாதிபதி Roh Moo-hyun மீது மார்ச் 12-ல் நாடாளுமன்றத்தில் பதவி நீக்க விசாரணை நிறைவேற்றப்பட்டதன் மூலம் அரசியலமைப்பு நெருக்கடியில் அந்நாடு மூழ்கி இருக்கிறது. அடுத்த தேர்தலுக்கு காத்திருந்து போட்டியிட தயார்படுத்தாமல், Roh-ன் எதிர்க்கட்சிகளான கிரான்ட் தேசிய கட்சி (GNP) மற்றும் மில்லினியம் ஜனநாயக கட்சி (MDP) நாடாளுமன்றத்தில் தங்களுக்குள்ள மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையைப் பயன்படுத்தி, ஐந்தாண்டு பதவி முடிவதற்கு 13 மாதங்களுக்கு முன்னரே அவருடைய ஜனாதிபதி பதவியை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கின்றன.

ரொக் தான் பதவி நீக்க விசாரணை நிறைவேற்றப்பட்ட நிலையிலுள்ள முதலாவது கொரிய ஜனாதிபதியாவர். ஏப்ரல் 15-ந் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல்களில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள Uri கட்சியை ''சட்ட வரம்பிற்குட்பட்டும் தான் ஆதரிக்கப்போவதாக பெப்ரவரி 25-ல் ஜனாதிபதி கூறிய கருத்தைத் தொடர்ந்து இந்த சிக்கல் வெடித்தது. GNP அரசியல் கட்சியின் தோற்றம் 1987-வரை அந்நாட்டை ஆட்சி செய்த அமெரிக்க ஆதரவு இராணுவ சர்வாதிகாரங்களில் அடங்கியுள்ளது. இந்த கருத்து கொரியாவின் தேர்தல் சட்டத்தை மீறுவதாகும் என்று GNP குற்றம் சாட்டுகிறது. ஜனாதிபதி உட்பட அரசாங்க அதிகாரிகள், தேர்தல் முடிவுகளைப் பாதிக்கின்ற வகையில் செயல்படக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

MDP முன்னர் Roh-ன் கட்சியாகும். ஒரு காலத்தில் ''GNP -க்கு எதிரானதாக'' கருதப்பட்ட அந்தக் கட்சி, பதவி நீக்க விசாரணை கொண்டு வருவதில் மிக முக்கியமான பங்கை வகித்தது. GNP அவருடைய நிர்வாகத்தில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்துவதற்காக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறியபோது, கட்சி அவற்றை ஆதரித்ததால் அவர் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார். MDP-யில் பிளவு செப்டம்பரில் ஏற்பட்டு, ரோக்கின் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஆதரவு அரங்கை அமைப்பதன் பேரில் ஒரு குழு பிரிந்து சென்று Uri கட்சியை உருவாக்கியுள்ளது. MDP கட்சி அதற்கு பின்னர் GNP-யோடு இணைந்து ஜனாதிபதிக்கு எதிராக திரும்பியுள்ளது.

மார்ச் 3-ல் தேர்தல் குழு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் Roh -ன் கருத்துக்கள் ''தீவிரமான சட்டமீறல் அல்ல'' என்றாலும் ''தேர்தல்களில் ஜனாதிபதி, நடுநிலையோடு நிற்க வேண்டும் என்று வலுவாக வலியுறுத்துவதாகவும்'' குறிப்பிட்டது. MDP கட்சி, Roh பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் தேர்தல்களில் நடுநிலையோடு நடந்து கொள்வதாக அறிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டது. இதை ஏற்க அவர் மறுத்தவுடன், GNP-யும் MDP-யும் இணைந்து பதவி நீக்க விசாரணை கொண்டு வந்தன. தேர்தல்களில் நிதி செலவிடுவதில் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது என்ற நீண்டகாலக் குற்றச்சாட்டும், தேர்தல் சட்டம் மீறப்பட்டிருக்கும் வகையில் தகுதியில்லாத நிர்வாகம் என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. தேசிய சட்டசபையில் உள்ள 273 உறுப்பினர்களில் 193 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இது மூன்றில் இரண்டு பங்கிற்குமேல் அதிகமான ஆதரவாகும்.

வாஷிங்டன் போஸ்டில் ஒரு கொரிய ஆய்வாளர் "ஒரு சிறிய திருட்டிற்காக திருடனை சுட்டுக் கொல்வது போன்றது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இப்போது ரோக் நிர்வாகத்தின் எதிர்காலம் ஒன்பது உறுப்பினர், அரசியலமைப்பு நீதிமன்றத்தின் கையில் உள்ளது. நீதித்துறை படிநிலை அமைப்பின் தலைமை அதிகாரிகளாகிய அவர்கள் ஓட்டுபோட்டு முடிவு செய்ய 180 நாட்களாகும். ஆறு நீதிபதிகள் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கருதினால் தீர்ப்பு வெளியாகி 60 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தேர்தல் நடக்க வேண்டும். அந்தத் தேர்தலில் Roh கலந்து கொள்ள முடியாதபடி தடைவிதிக்கப்படும். அதுவரை ஜனாதிபதியின் செயலாற்றும் அதிகாரம், ஆயுதப் படை ஆணை உட்பட, பிரதமர் கோக்-கன் ஏற்றுக் கொள்வார்.

தங்களது நடவடிக்கைகளுக்கு பொது மக்களது, எதிர்ப்பு இருக்காது என்று எதிர்க்கட்சிகள் மிகத் தவறாக கணக்குப் போட்டுவிட்டார்கள். 17 ஆண்டுகளுக்கு முன்னர் வரை சர்வாதிகாரத்தின் கீழ் வாழ்ந்து வந்த மில்லியன் கணக்கான மக்கள், இந்த பதவி நீக்க விசாரணை நிறைவேறியதும், ஆவேசமாக தெருக்களில் அணிவகுத்து வந்தனர். குறிப்பாக MDP கட்சியின் நடவடிக்கைகள் குறித்து வெறுப்பையும், நம்பிக்கின்மையையும் வெளிப்படுத்தினர்.

Roh - பதவி ஏற்ற முதல் ஆண்டில், அவரது செல்வாக்கு மக்களிடையே சரிந்தது என்றாலும் பதவி நீக்க விசாரணை, ஜனநாயக விரோத முறையில் GNP கட்சியை சார்ந்த முன்னாள் இராணுவ தளபதிகளும், தொழில் நுட்ப நிபுணர்களும் அதிகாரத்தை கைப்பற்றி கொள்ள மேற்கொள்ளும் முயற்சி என்று சட்ட ரீதியாக விளக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் கலந்து கொண்டு ஜனநாயகத்தை பாதுகாக்க அழைப்பு விடுத்தனர். கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒருவர் தீக்குளித்தார். அண்மைய கருத்துக் கணிப்பின்படி ஏப்ரல் 15-ல் நடைபெறவிருக்கும் தேர்தலில் ரோக்கின் ஆதரவான உரி கட்சிக்கு செல்வாக்கு கணிசமாக உயர்ந்துள்ளது. பிசினஸ் வீக் அண்மையில் வெளியிட்டுள்ள வாக்கெடுப்பு கருத்துக்கணிப்பில் உரி கட்சி மக்களிடையே 53.8 சதவீத ஆதரவை பெற்றிருக்கிறது. இது ஒப்பிட்டபொழுது GNP-க்கு 15.7 சதவீதமும், MDP கட்சிக்கு 4.4 சதவீதம் மட்டுமே ஆதரவு இருந்தது. உரி கட்சி உருவாக்கப்பட்டபோது அதற்கு 20 சதவீதத்திற்கும் குறைந்த ஆதரவுதான் இருந்தது.

ஏப்ரல் 15 தேர்தலில் GNP மற்றும் MDP கட்சிகளை வெகுஜனங்கள் பெருமளவில் புறக்கணித்து விடக் கூடும் என்று தோன்றுகிறது. அரசியலமைப்பு நீதிமன்றம் ரோக்கிற்கெதிரான பதவி நீக்க விசாரணை குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளுமா என்பதும் சந்தேகத்திற்குரியது. Kim Jong Cheol ஒரு அரசியலமைப்பு வழக்கறிஞர், "தேசிய சட்ட மன்றம் இந்த வழக்கை தாக்கல் செய்வதற்கு சட்டபூர்வமான சான்று எதுவுமில்லை". என்று For Eastern Economic Review-விற்கு தெரிவித்தார்.

GNP மற்றும் MDP கட்சிகள் நம்பிக்கையற்ற, அதிரடி நடவடிக்கையில் ஈடுபடுபவை. மிக போலியான அடிப்படையற்ற காரணங்களுக்காக பதவி நீக்க விசாரணை தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்ற இரண்டு கட்சிகளும் முன்வந்தது, ரோக் நிர்வாகத்தின் மீது ஆளும் வட்டாரங்களுக்குள் எந்த அளவிற்கு ஆழமான விரோத போக்கு நிலவுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. அவரை கவிழ்ப்பதற்கான திட்டம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட சூழ்நிலைகள், தென் கொரியா அரசாங்கத்தின் மீது புஷ் நிர்வாகம் கடைபிடித்துவரும் அணுகுமுறையின் தாக்கம் ஆகியவற்றோடு, பின்னிப் பிணைந்து நிற்கிறது.

முன்னாள் ஜனாதிபதி Kim Dae-Jung-யை போன்று ரோக், முன்னாள் சர்வாதிகாரத்தில் அதிகாரம் மற்றும் சலுகைகளில் ஓரங்கட்டப்பட்ட கொரிய செல்வந்த தட்டின் பிரிவுகளுக்காக பேசுபவர். இந்த பிரிவு (கன்னை) பாரம்பரியமாக தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்துவதை எதிர்த்து வருகிறது. GNP-யோடு தொடர்புடைய நிதியாதிக்க ஒரு சிலர் ஆட்சியை தூண்டிவிடும் பெரிய சக்தி என்று அமெரிக்காவை கருதுகிறது. கொரியாவின் தேசியவாதத்தில் ஊறிவிட்ட அவர்கள் வட கொரியாவோடு நெருக்கமான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை வைத்துக் கொள்ளவேண்டுமென்றும், அமெரிக்காவை தள்ளி வைக்க வேண்டுமென்றும் கூறி வருகின்றனர்.

2002 தேர்தலில் GNP-யிடம் சரிவை சந்தித்த, ரோக் நாட்டில் பரவலாக கொரிய தொழிலாள வர்க்கத்திடையே நிலவுகின்ற அமெரிக்க-எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு உணர்வுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார்.

1997 - 1998-ல் ஆசிய பொருளாதார நெருக்கடி உருவானதைத் தொடர்ந்து பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் உச்சகட்டமாக சமூக மற்றும் வர்க்க பதட்டங்கள் பெருகின. தென் கொரியாவின் வறுமை அளவு கடந்த ஆறு ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. 20 சதவீத மக்கள் வறுமையில் அல்லது அதன் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஒரு மில்லியன் மக்கள் வேலையில்லாமல் உள்ளதாக அதிகாரபூர்வமாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. 15 முதல் 29 வயது வரையுள்ள இளைஞரிடையே கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 9.1 சதவீத வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது. 1997 - முதல் தாங்கள் சந்தித்துவரும் ஒட்டு மொத்த ஆட் குறைப்பு போன்ற பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகள் உலக நாணய நிதியம் (IMF) கட்டளைப்படி நிறைவேற்றப்பட்டு வந்தாலும் அதற்கு உந்து விசையாக அமெரிக்கா கட்டளையிட்டு வருவதாக சட்டரீதியாக அதன்மீது மில்லியன் கணக்கான கொரிய தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக புஷ் நிர்வாகத்தின் மீது விரோத போக்கை காட்டுகின்றனர். ''சன் சைன் கொள்கை" வட கொரியா நோக்கி Kim-Dae-Jung-வால் பிரகடனப்படுத்தப்பட்டதாக கொரியாவின் எல்லா சமூக வர்க்கங்களாலும் நம்பப்படுகிறது. அந்த கொள்கையை பிரகடனப்படுத்தியதற்காக அவருக்கு நோபல் சமாதான பரிசு வழங்கப்பட்டது. அந்த கொள்கையின் மூலம் 50 ஆண்டுகளுக்கு மேலாக பியோங்யங்குடன் நிலவுகின்ற இராணுவ பதட்டங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்து நாடுகளிடையே நிலவும் மனக்கசப்பை நீக்கும் என்று சாதாரண கொரிய மக்கள் நம்புகின்றனர். கொரியா, சீனா, ரஷ்யா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் வர்த்தக நலன்கள், மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு யூரேஷியாவிற்குமிடையில் பொருளாதார அச்சாணியாக கொரியாவை மாற்றும் என்று நம்புகின்றனர். அத்தகைய எதிர்பார்ப்புக்களை சிதைக்கும் வகையில் வட கொரியாவுடன் மோதல் அணுகுமுறைகளை புஷ் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அந்த சன் சைன் கொள்கையைத் தொடர்ந்து கடைபிடிக்கப்போவதாகவும் வாஷிங்டனிலிருந்து ''சுதந்திரமாக'' செயல்பட போவதாகவும் போர் அச்சுறுதலுக்கெதிரான வெகுஜன உணர்வு கொண்டவர்களை சமாதானப்படுத்துகிற வகையில் ரோக் உறுதியளித்து வருகிறார். குறிப்பாக சில வாரங்களுக்கு முன்னர், இரண்டு கொரிய பள்ளி பெண்களை தங்களது வாகனத்தை ஏற்றி கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்ட இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் விடுதலை செய்யப்பட்டதிற்கெதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் நடத்தப்பட்ட வெகுஜன பேரணிகளில் தன்னை ரோக் அடையாளப்படுத்திக்கொண்டார். வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்று ரோக் உறுதியளித்தார்.

ஈராக் படையெடுப்பு நடைபெற்ற நேரத்தில், ரோக் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது புஷ் நிர்வாகத்தின் இராணுவவாதத்திற்கு பூகோள எதிரப்பின் மற்றொரு வெளிப்பாடு என்று கருதப்பட்டது. சில புள்ளிகள் வித்தியாசத்தில் Roh வெற்றி பெற்றாலும், தென்கொரியர்களில் 60 சதவீதத்திற்கு மேற்பட்டோரில் 30 வயதிற்குக் கீழானோர் அவருக்கு வாக்களித்தனர். எவ்வாறாயினும், அவரது நிர்வாகம், ஆளும் வர்க்கத்தின் கணிசமான பிரிவினரது கண்களுக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லை.

ரோக் நிர்வாகத்தை, புஷ் நிர்வாகம் அமெரிக்கா-எதிர்ப்பு வாய்வீச்சாலும், பியோங்யங்குடன் மேற்கொள்ளும் சமாதான முயற்சியாலும் தீண்டத்தகாத ஆட்சியாக கருதியது. புஷ் நிர்வாகம் வட கொரியாவுடன் மோதலைத் தூண்டிவிடுவதற்கான ஆத்திரமூட்டலில் கவனமாக இருந்த நிலைமையின் கீழ், அமெரிக்க கொள்கைமீது ரோக் அரசாங்கம் அடிப்படையில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாததாக இருந்தது.

இந்த சிறப்புக்கூறு சென்ற ஆண்டு அம்பலத்திற்கு வந்தது. வட கொரியா மீது தனது இராணுவ மற்றும் சிவிலியன் அணுத் திட்டங்களை ஒரு தலைப்பட்சமாகவும் "சரிபார்க்கத்தக்க வகையில்" கைவிட வலியுறுத்தும் வேகத்தை அமெரிக்கா மட்டுப்படுத்திக் கொள்ளும் என்ற நம்பிக்கையில், ஈராக்கை பிடித்துக் கொண்ட அமெரிக்கப் படைகளுக்கு உதவுவதற்காக 3,000 துருப்புக்களை அனுப்ப ரோக் சம்மதித்தார். அண்மைய சுற்று பேச்சு வார்த்தைகளில் வெள்ளை மாளிகை தனது கோரிக்கைகளை திரும்பவும் வலியுறுத்தியது.

இந்த பதவி நீக்க விசாரணையில் அமெரிக்கா நேரடியாக சம்மந்தப்பட்டிருக்கிறது என்பதற்கான சான்று எதுவுமில்லையென்றாலும் GNP-யும், MDP-யும் அவருக்கு எதிராக செயல்பட ஊக்குவித்ததில் முக்கிய அம்சம் அவரை அமெரிக்கா நடத்திய விதம்தான்.

தென் கொரியாவின் செல்வந்த தட்டுக்களின் எந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரிவும் (கன்னையும்) கொரிய தீபகற்பத்தில் போர் நடப்பதை விரும்பவில்லை. அதனால் தென் கொரியாவிற்கு பேரழிகரமான பொருளாதார மற்றும் ராணுவ விளைவுகள் ஏற்படும்-- குறிப்பாக வட கொரிய பீரங்கிகளால் சியோல் அழிக்கப்படுகிற நிலை ஏற்பட்டுவிடலாம். இப்போது நிலவுகின்ற பதட்டங்களிலேயே 2002-லிருந்து 2003-ல் தென் கொரியாவின் வெளிநாட்டு முதலீடுகள் 29 சதவீதம் வீழ்ச்சியடைந்துவிட்டன. ஆனால் இந்த நிலையில் புஷ் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கெர்ரி இருவரும் பியோங்யங்குடன் எந்தவிதமான சமரசத்திற்கும் வழியில்லை என்று வாதிட்டு வருகின்றனர். எனவே GNP அமெரிக்காவுடன் சேர்ந்து கொள்வதே, முன்னோக்கு அடிப்படையில் மிகச் சிறந்த ஆக்கபூர்வமான நடவடிக்கை என்று கருதப்படுகிறது. அப்படி கருதுபவர்களின் நம்பிக்கை என்னவென்றால் அவர்கள் குறைந்தபட்சம் அமெரிக்காவின் போர் விருப்பத்தை, நிதானப்படுத்தி இப்போதுள்ள நிலவரத்தையே நிலைநாட்டி, வடக்கு ஆட்சி முற்றிலுமாக சரணடைய அல்லது வீழ்ச்சியடைய செய்துவிட முடியும் என்பதால்தான்.

ரோக் தென் கொரியாவை அமெரிக்காவிலிருந்து விலக்கிவைக்க மேற்கொள்ளும் முயற்சி ராஜ துரோக நடவடிக்கைக்கு சமமானதென்று GNP-ன் மிகப் பெரும்பாலான வலதுசாரி பிரிவுகள் கருதுகின்றன. மூத்த GNP நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியுமான Won Chung, ஜனாதிபதி பதவி நீக்க விசாரணை நிறைவேற்றப்பட்ட அன்று "கடவுள் எங்களது நாட்டை சிவப்புகளிடமிருந்து காப்பாற்றிவிட்டார். ரோக் எங்களது நாட்டை வட கொரிய கம்யூனிஸ்ட்டுகளை நோக்கி இரகசியமாக இட்டு செல்வதற்கு முயன்று கொண்டிருக்கிறார், அதே நேரத்தில் நமது நெருங்கிய நண்பரான அமெரிக்காவிலிருந்து பிரிந்து செல்ல முயலுகிறார்" என்று வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்குப் பேட்டியளித்தார்.

ரோக் ஆட்சியை எதிர்கட்சிகள் நீக்க முயற்சிப்பதை கொரியாவின் பெரு வர்த்தககர்கள் ஊக்குவித்து வருகின்றனர். ஏழைகளுக்கு அளித்த எந்த உறுதி மொழியையும் Roh நிறைவேற்றவில்லை. பெரிய நிறுவன செல்வந்த தட்டுகள் அவரது ஜனாதிபதி பதவியால் தொழிலாள வர்க்கத்திற்குள் ஏற்படும் தாக்கங்கள் குறித்து கவலையடைந்துள்ளனர். அவரது அரசாங்கம் தொழிலாளர்கள் தருகின்ற நிர்பந்தங்களுக்கு பணிந்துவிடும் என்று கருதுகின்றனர். தனியார்மயமாக்குவதற்கும் கடுமையான தொழிலாளர் சட்டங்களை செயல்படுத்துவதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் வேலை நிறுத்தங்களும் கண்டன பேரணிகளும் உருவாகின, அவற்றை கைவிட வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்தது. 1997-1998 நெருக்கடியில் தொழிலாளர்கள் இழந்த ஊதியத்தையும் சலுகைகளையும் திரும்பப் பெறுவதற்கு தற்போது வேலை நிறுத்தங்கள் நடைபெற்று வருகின்றன. 2002-ல் புதிய சாதனை அளவாக 322 தொழில் தகராறுகள் ஏற்பட்டு 10 சதவீத ஊதிய உயர்வு தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2003-ல் 320 வேலை நிறுத்தங்கள் நடந்தன. 1997-ல் நடந்ததைவிட இது மூன்று மடங்கு அதிகமாகும்.

அடுத்த சில ஆண்டுகளில் சீனாவிலிருந்து சவாலாக தோன்றும் பண்டங்கள் விற்பனைப் போட்டியை சமாளிக்க வேண்டிய சூழ்நிலையில் கொரியாவின் உற்பத்தி ஏற்றுமதி தொழிற்துறைகள் உள்ளன. கொரிய கம்பெனிகள் ஏற்கனவே 1992 முதல் 700,000 உற்பத்தி பணியாளர்களை ஆட்குறைப்பு செய்துவிட்டன, அதே நேரத்தில் சீனாவில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புக்களை உருவாகியுள்ளன. சராசரி கொரிய தொழிலாளியின் ஊதியத்தில் 10-ல் ஒரு பங்குதான் சீன தொழிலாளிக்கு கிடைக்கிறது. உலக உற்பத்தி பிரிவில், தென் கொரிய முதலாளித்துவம் போட்டியிட வேண்டுமென்றால் இதற்கு முன்னர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை திரும்பப் பெற்றாக வேண்டும்.

ரோக் ஜனாதிபதியாக, நீடித்தாலும் அல்லது நீடிக்காவிட்டாலும் பதவி நீக்க விசாரணைக்கு தர்க்க ரீதியான முடிவு ஒன்று உண்டு. இராணுவ ஆட்சியை உதறித்தள்ளி 17 ஆண்டுகளுக்கு பின்னரும், கொரியாவின் ஆளும் செல்வந்தத் தட்டு ஜனநாயக பொறிகள் தங்களது நலன்களுக்கு தடைக்கல்லாக இருப்பதாக முடிவிற்கு வந்திருக்கிறது. GNP புதிய தலைவராகவும் அடுத்த மார்ச் 22-ல் நடக்கும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராகவும் Park Geun-hye தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. Park முன்னாள் சர்வாதிகாரி Park-Chung-Hee-ன் மகள், தந்தையின் ஆட்சியில் நடைபெற்ற கொடூரமான ஒடுக்குமுறைகளை இரக்கமற்ற வகையில் தாங்கி நின்றவர்.

ரோக் பதவி நீக்க விசாரணையின் அரசின் கொள்கையை வலதுசாரி வழியில் அதிரடியாக இட்டுச் செல்வதுதான். தென் கொரியாவை குறிப்பாக வட கொரியாவிற்கெதிராக அமெரிக்காவுடன் அதிகமான நட்புறவு கொள்ளச் செய்வதுதான் நோக்கம். தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலின் தெளிவான பாதையைதான் அது வெளிப்படுத்துகிறது. இதனால் ஜனநாயக உரிமைகளை பறிப்பதற்கு மிகப் பெரும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருவது தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்.

கொரியாவின் முதலாளிகள் சம்மேளனம் பெரு வர்த்தக நிறுவனங்களின் தலைமை அமைப்புகளுக்கு GNP-யுடன் பாரம்பரியமாக தொடர்பு உள்ளது. அந்த பதவி நீக்க விசாரணையை நிறைவேற்றப்பட்டதை பாராட்டிவிட்டு, 300-க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் எல்லாக் கம்பெனிகளிலும் எல்லா தொழிலாளர்களுக்கும் ஊதிய முடக்கம் செய்யுமாறு தனது உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இப்போது பணிமுதிர்வு அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதிய விகிதங்களை, "சாதனை" அடிப்படையில் மாற்றியமைக்க வேண்டுமென்றும், 50 வயதை கடந்து விட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எதுவும் தரக் கூடாது என்றும் அந்த சம்மேளனம் அதன் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

எவ்வறாயினும், கொரிய ஆளும் செல்வந்தத் தட்டின் நிகழ்ச்சி நிரல் மிகவும் கடுமையான எதிர்ப்பைக் கிளறிவிடும். 2002 தேர்தல் மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இவை வாழ்க்கைத் தரத்தின் மீது தொடுக்கப்படுகின்ற தாக்குதல்கள், அரசியல் ஸ்தாபனத்திற்குள்ளே ஜனநாயக உரிமைகளை துச்சமாக மதிக்கின்ற போக்கு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அகந்தைப் போக்கு ஆகியவற்றிற்கு எதிராக மக்களிடையே போர்க்குணமிக்க எதிர்ப்புணர்வு வேகமாக வளர்ந்து வருவதன் அறிகுறிகளாகும். வர்க்க மோதல்கள் வெடிப்பதற்கான கட்டம் வந்துவிட்டது.

Top of page