World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Election statement of German SEP: For the United Socialist States of Europe ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கை: ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக 27 March 2004 கீழ்க்காணும் தேர்தல் அறிக்கை வரவிருக்கும் ஐரோப்பிய தேர்தல்களுக்காக சோசலிச சமத்துவக் கட்சி (Partei fur Soziale Gleichheit-PSG) யினால் வெளியிடப்பட்டுள்ளது. PSG, ஜேர்மனியில், ஜூன் 13ம் தேதி தேர்தல்களுக்காக வேட்பாளர்கள் பட்டியலை முன்வைக்கிறது. இந்த அறிக்கை பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும், பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சர்வதேச ஆதரவளர்களுடன் இணைந்து, ஐரோப்பா முழுவதும் உள்ள நாடுகளில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படும். 1. சோசலிச சமத்துவக் கட்சியின் நோக்கங்கள் ஜூன் 13ம் தேதி நடைபெற உள்ள ஐரோப்பியத் தேர்தல்களில், ஒரு சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் போட்டியிடுகின்றது. எமது தேர்தல் பிரச்சாரம், ஒய்வூதியம் பெறுவோர், வேலையற்றோர், இளைஞர்கள் உள்பட உழைக்கும் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு புதிய கட்சிக்கான அடித்தளத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசியல் சூழ்நிலையைப்பற்றி, மில்லியன் கணக்கான மக்கள் கவலை கொண்டு, இதிலிருந்து மீள்வதற்கு ஒரு வழியை தேடிக்கொண்டிருக்கின்றனர். கடந்த நூற்றாண்டில் தீர்க்கப்படாத அனைத்துப் பிரச்சினைகளும், மீண்டும் தலையெடுத்துள்ளன என்பதைத்தான் ஈராக்கிய போர் வெளிப்படுத்தியுள்ளது. வேலையின்மை பெருகி இருப்பதும், பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடுவதும், ஜனநாயக உரிமைகள் நீக்கப்படுதல், அதிகரித்துவரும் இராணுவவாதத்தின் வளர்ச்சி இவற்றோடு இணைந்து, 1914 -45 வரையிலான நிகழ்ச்சிகளை உலகம் ஒருபோதும் அனுபவித்து இருந்திராதது போல் காணப்படுகின்றன. அனைத்து சமூக ஜனநாயகக் கட்சிகளும் (SPD) தங்களுடைய தடுப்பாணைகளை விடுத்து, சமுதாயத்தை சுரண்டி தங்களை செல்வக் கொழிப்பு உடையதாக செய்து கொண்டிருக்கும் ஒரு சிறிய செல்வந்தத் தட்டின் விருப்பங்களை நிறைவேற்றும் எடுபிடிகளாக மாறிவிட்டன. அவர்களுடைய கொள்கைள், வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகளின் தன்மையிலிருந்து இப்பொழுதெல்லாம் மாறுபட்டிருக்கவில்லை. சமூக ஜனநாயகக் கட்சியின் அரசியல் திவால் தன்மைக்கு எதிராக நாங்கள் அடிப்படையில் வேறுபட்ட கோட்பாட்டினை முன்வைக்கிறோம். எங்களைப் பொறுத்தவரையில், மக்களுடைய தேவைகள் முதலில் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவை ஆகும்; நாம் சமூக சமத்துவம், நீதி ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ள ஒரு சமுதாயத்தை நிறுவ விழைகின்றோம். ஓய்வூதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, வேலைகள், பாதுகாப்பான வருமானம் என்ற சமுதாய தேட்டங்கள் அனைத்தையும் காப்பாற்ற நாம் போராடுகிறோம்; இவையனைத்தும் வெட்டுக்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளன. ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை நாங்கள் எதிர்ப்பதுடன், போரையும் இராணுவ வாதத்தையும் நிராகரிக்கிறோம். சமூக ஜனநாயகத்தின் வேலைத்திட்டத்தை அடிப்படையில் முற்றிலும் எதிர்க்கும் ஓர் அரசியல் வேலைத்திட்டத்தால்தான் இந்த இலக்குகள் அடையப்பட முடியும். * இந்த இலக்குகள், தேசிய கட்டமைப்பிற்குள்ளே அடையப்படமுடியாதது; ஆனால் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உலகந்தழுவிய இயக்கம் ஒன்று அதற்குத் தேவைப்படுகிறது. உலகப் பொருளாதாரம் இணைந்துள்ளதும், ஒன்றை ஒன்று சார்ந்துள்ளதும், சமூக ஜனநாயக சீர்திருத்தவாத அரசியலுக்கான அடித்தளங்களை அகற்றிவிட்டது. தற்கால பொருளாதார வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகடந்த நிறுவனங்கள், சர்வதேச நிதி அமைப்புக்கள் இவற்றை எதிர்கொள்கையில், பழைய தொழிலாளர்கள் அமைப்புக்களின் நோக்குநிலையானது -தேசிய தொழிலை காத்தல், தேசிய உழைப்புச் சந்தை பாதுகாப்பு என்பவை- சக்தியற்றவை என நிரூபிக்கின்றன. இதுதான் எங்கு நோக்கினாலும் காணப்படுகின்ற, வலதுபக்க திருப்பத்தை விளக்குகின்றது. கடந்தகாலத்தில் தொழிலாளர்களுக்கு சலுகைககளை உத்திரவாதம் செய்யும்பொருட்டு முதலாளிகளுக்கும், அரசாங்கங்களுக்கும் அழுத்தம் கொடுத்தன, இப்பொழுது இவை முதலாளிகளுக்கு சலுகைகளை கறந்தெடுக்கும்பொருட்டு தொழிலாளர்களின் மீது அழுத்தம் கொடுத்து, இதன் மூலம் மூலதனத்திற்கு இன்னும் கவர்ச்சிகரமான நிலைமகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அமெரிக்க அரசாங்கம் உலகத்தை தன்னுடைய ஆட்சியின் கீழ் கட்டாயமாகக் கொண்டுவர எடுக்கும் முயற்சியானது, உலகப் பொருளாதாரமும் தேசிய அரசும் இயைந்து இருக்கமுடியாத தன்மையின் மிகக் கூரிய வெளிப்பாடாகும். உலகப் பொருளாதாரம் தேசிய இறையாண்மையை பொறுத்துக் கொள்ளாது. ஈராக்கை வென்று கைப்பற்றல், உலகை புதிதாக மறுபங்கீடு செய்யும் முதல் முயற்சியாகும்; ஒரு புதிய உலக ஒழுங்கை, முதலாளித்துவ கொள்ளை முறை மற்றும் சுரண்டல் இவற்றின் மிகுந்த மிருகத்தனமான வடிவங்களின் அடிப்படையில் நிறுவுவதாகும். ஒரு நாட்டை மூடிவைப்பதும் தேசிய நலன்களை பாதுகாப்பதும் உலகமயமாக்குதலுக்கும், போரின் அபாயத்திற்கும் விடை தரா. அவை பிற்போக்குத்தனமானவை என்பது மட்டும் அன்றி, நடைமுறைப்படுத்த முடியாதவையும் ஆகும். அவை உலக மக்களிடையே உள்ள உறவுகளை நச்சுப்படுத்தி, தேசிய மற்றும் இனவெறி பதட்டங்களை ஊக்குவித்து, வர்த்தகப் போரையும், போரையும் ஏற்படுத்திவிடும். PSG வேறு ஒரு தீர்வை நிலைநிறுத்த முற்படுகிறது: ஏகாதிபத்தியத்திற்கும் போருக்கும் எதிரான போராட்டத்தை சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுடன் தொடர்புபடுத்தும் உழைக்கும் மக்களின் உலகரீதியான இயக்கத்திற்கானதாகும். இது மக்கள் அனைவரையும், தேசிய, இன, மத அடிப்படைகளில் பிரிப்பதை எதிர்க்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு -ஐரோப்பிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு மாற்றாக- நாங்கள் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை முன்வைக்கின்றோம். ஜேர்மனியில் மட்டும் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தாலும், எங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை, ஐரோப்பா முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களுடன் ஈடுபடுத்திக்கொள்கிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு என்னும் ஓர் உலகக் கட்சியின் ஜேர்மன் பகுதி என்னும் முறையில், PSG, அதன் சகோதர அமைப்புக்களான பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகளுடன் (SEP) நெருக்கமாக ஒத்துழைக்கின்றது. அமெரிக்காவில், SEP குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்கு எதிராக தனது சொந்த வேட்பாளர்களை ஜனாதிபதி தேர்தல்களில் நிறுத்தி வைத்துள்ளது. * சமூக வெற்றிகள், ஜனநாயக உரிமைகள் இவற்றின் பாதுகாப்பு, சோசலிசக் கோட்பாடுகளின் படி பொருளாதார வாழ்வு சீரமைக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஜேர்மன் ஜனநாயக குடியரசு மற்றும் சோவியத் ஒன்றியம் முடிவுற்று பத்து ஆண்டுகள் ஆனாலும் கூட, மனிதகுலத்தின் அவசரப் பிரச்சினைகளுக்கு சுதந்திர சந்தைமுறை விடை கொடுக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. சமூக வாழ்வின் ஒவ்வொரு கூறுபாடும், சந்தை விதிகளுக்கும் இலாப அமைப்புமுறைக்கும் கீழ்ப்படுத்துதல், எங்கும் பேரழிவான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஐரோப்பாவிலும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும், முதலாளித்துவ நிலைமகளை அறிமுகப்படுத்தல், சமாதான காலத்தில் காணப்படமுடியாத அளவு, பண்பாட்டு, சமுதாய சரிவை விளைவித்துள்ளன. சமுதாய அடிப்படைக் கட்டுமானம் சிதைந்து கொண்டிருக்கையில், வாய்க்கும் வயிற்றுக்கும் மட்டுமே போதும் வருமானத்தை மில்லியன் கணக்கான மக்கள் கொண்டிருக்கையில், கையளவேயான ஒரு சிறு தன்னலக்குழு கணக்கிலடங்கா செல்வத்தின்மீது கட்டுப்பாட்டினைக் கொண்டுள்ளது. ஆபிரிக்காவிலும், ஆசியாவிலும், முழு நாடுகளும் வறுமையிலும் பெருங்குழப்பத்திலும் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. முக்கியமான முதலாளித்துவ நாடுகளில், கடந்த பல பத்தாண்டுகளின் சமூக வெற்றிகள் அனைத்தும் இடைவிடா தாக்குதல்களுக்கு உட்பட்டுள்ளன. வறியவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி என்றுமில்லா அளவு அதிகமாகிக்கொண்டே போகிறது. தொழிலாள வர்க்கத்தின் நலன்களின் பேரில் முதலாளித்துவமானது சீர்திருத்தம் செய்யப்பட முடியும் என்று கூறிக்கெள்வதன் மூலம், சமூக ஜனநாயகமானது முதலாளித்துவத்தை பாதுகாப்பதை எப்பொழுதும் நியாயப்படுத்தியே வந்திருக்கிறது. இக்கூற்றில் ஒன்றுகூட நடைமுறையில் காணப்படவில்லை. இன்று, ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சி (SPD), மற்றும் ஏனைய ஐரோப்பிய சமூக ஜனநாயகக் கட்சிகளும் சமூக வெற்றிகள் மீதும், ஜனநாயக உரிமைகள் மீதும் தாக்குதல்களை நடத்துவதில் தலைமை தாங்குகின்றன, அவற்றின் பழமைவாத எதிராளிகளிடம் இருந்து வேறுபாடின்றி உள்ளனர். PSG பொருளாதார வாழ்வில் ஒரு சோசலிச மாற்றத்திற்காக நிற்கிறது. அம்மாற்றம், சமுதாய தேவைகளால் கட்டாயம் தீர்மானிக்கப்படவேண்டுமே அன்றி, செல்வம் படைத்த ஒரு முதலாளித்துவ சிறுபான்மையினரின் இலாப நோக்கினால் தீர்மானிக்கப்படக் கூடாது. தற்கால தொழில்நுட்பவியல் ஏற்படுத்தியுள்ள மகத்தான முன்னேற்றமானது, சமுதாயத்தின் அடிப்படை பிரச்சனைகளான வறுமை, பிற்போக்குத்தன்மை, சுற்றுச்சூழல் அழிப்பு இவற்றை தீர்ப்பதற்கான அனைத்து நிலைமைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஆயினும், இதற்கு அது தோற்றுவித்துள்ள முன்நிபந்தனைகள் அவை நனவுபூர்வமாக பொது நலனுக்குப் பயன்படுத்தப்படவேண்டுமே ஒழிய, இலாபத்தை அதிகப்படுத்தும் குழப்ப கொள்கைக்கு உபயோகப்படுத்தக்கூடா. இதை அடைய, தற்கால பொருளாதாரத்தின் நெம்புகோல்களான வங்கிகளும், பெருநிறுவனங்களும், சமூக உடமைகளாக்கப்பட்டு, ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கட்டாயம் கொண்டுவரப்படவேண்டும். சோவியத் ஒன்றியத்தின் பொறிவிலிருந்து எடுக்கப்பட்டுள்ள படிப்பினைகளை, PSG அடிப்படையாகக் கொண்டுள்ளது. திட்டமிடும் கோட்பாடு அங்கு தோல்வியுறவில்லை; ஒரு தேசிய கட்டமைப்புக்குள், சர்வாதிகார முறைகளைக் கையாண்டு, சோசலிச சமுதாயத்தை நிறுவுவதாகக் கூறிக்கொண்ட ஒரு சலுகைமிக்க அதிகாரத்துவத்தால் செய்யப்பட்ட முயற்சிதான் தோல்வி அடைந்தது. தொழிலாளர்களுடைய ஜனநாயகமும், உலகப் பொருளாதாரத்தின் வளங்கள் கிடைக்கப்பெறலும், ஒரு சோசலிசச் சமுதாயத்தை அமைப்பதற்கு இன்றியமையாத முன்நிபந்தனகளாகும். PSG சோவியத் ஒன்றியம் முடிந்தபின் இத்தகைய கருத்தை முன்வைக்கவில்லை; அதன் வரலாறு முழுவதும் இதைத்தான் கூறியுள்ளது. இது இடது எதிர்ப்பு மரபுகளில் நிற்கிறது; அது 1923 லிருந்து லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தையும் அதன் தேசியப் பார்வையையும் எதிர்த்து வந்திருந்தது. * சோசலிச வேலைத் திட்டத்தை அடைவதற்கு, பரந்த உழைக்கும் மக்களின் அரசியல் ரீதியாய் நனவுடைய ஒரு இயக்கம் தேவைப்படுகிறது. அதிகாரத்துவத்தின் மேலாதிக்கத்துடன் சோசலிசம் இயைந்து போகமுடியாது. உண்மையான சமூக முன்னேற்றம், பரந்த மக்கட்தொகையினர் சமூக உறவுகளை ஒழுங்கு செய்வதில் செயலூக்கத்துடன் சம்பந்தப்பட்டால்தான் மற்றும் இவற்றை ஜனநாயகரீதியாக கட்டுப்படுத்தினால்தான் சாத்தியமாகும். இதற்கு மாறாக, ஸ்ராலினிசமும் சமூக ஜனநாயகமும், தொழிலாளர் இயக்கத்தின், வரலாற்று ரீதியான படைப்பாற்றலையும், முதன்மை அதிகாரத்தையும், மூச்சுத் திணறடிக்கும் அதிகாரத்துவ எந்திரங்களில் ஒரு மரபைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. சமூக சீர்திருத்தக் காலங்களில்கூட, சமூக ஜனநாயகக் கட்சிகள், அரசியல் அளவில் தங்கள் கட்சி உறுப்பினர்களையே செயல் வலிமை இல்லாமல் செய்து விட்டன. இன்று அவற்றிடம், சர்வாதிகார கருவிகளை கொண்டுள்ள கட்சித் தலைவர்கள்தான் இருக்கின்றனர், எந்த ஜனநாயக பொறுப்புக் கூறலுக்கம் தாங்கள் அப்பாற்பட்டவர்கள் என்ற நினைப்பில்தான் இருக்கின்றனர். தொழிலாளர் இயக்கத்தின் மீதான, சமூக ஜனநாயகத்தின் இந்த செயலிழக்கப்பண்ணும் தன்மையை அகற்றவேண்டும் என்பதுதான் PSG உடைய இலக்கு ஆகும். சீர்திருத்தவாத கட்சிகள் தங்களைச் சீர்திருத்திக் கொள்ள அழுத்தம் கொடுக்க வேண்டும் அல்லது அவற்றின் முன்னேற்றப் பகுதியெனக் கூறப்படுபவற்றை துண்டிக்க வேண்டும் என்று கூறப்படும் கருத்துருக்களை நாங்கள் நிராகரிக்கிறோம். அத்தகைய இலக்கு அவர்களுக்கு ஒரு இடதுசாரி போர்வையை அளித்து அவர்களுடைய சோர்வுறச்செய்யும் பாதிப்புக்களை செயற்கையாக நீடித்துவிடும். இப்பொழுதுள்ள நடைமுறைக் கட்சிகளின் கொள்கைகள் தங்களை முட்டுச்சந்திற்கு கொண்டுவந்துவிட்டன, அதிலிருந்து வெளியேற வழியில்லை என்ற நிலையை மில்லியன் கணக்கான மக்கள் ஐரோப்பாவில் உணர்ந்துள்ளனர். அவர்கள் கணக்கிலடங்காத எதிர்ப்புக்கள், வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றின் மூலம் தங்கள் வெறுப்புத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், இந்தப் பரந்த எதிர்ப்பை, திறமையான அரசியல் இயக்கமாக இணைப்பதற்கு ஒரு தெளிவான அரசியல் முன்னோக்கால்தான் முடியும். அதற்கு இப்பொழுதைய நெருக்கடிகளுக்கான காரணங்கள், அவற்றின் உந்து சக்திகள் மற்றும் இருபதாம் நூற்றாண்டு வரலாற்றுப் படிப்பினைகள் நன்கு அறியப்பட்டிருக்கவேண்டும் என்பது முன் நிபந்தனையாகும். எங்களுடைய தேர்தல் பிரச்சாரம், இந்தப் பிரச்சினைகள் பற்றிய விரிவான விவாதங்கள் மேற்கொள்ளப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாங்கள் எங்களுடைய நோக்கங்களுடன் உடன்படுவோரை, PSG உடைய தேர்தல் பிரச்சாரத்தின் நோக்கங்களுக்கு ஆதரவு தருமாறு அழைப்பு விடுக்கின்றோம். எங்களுடைய தேர்தல் அறிக்கையை நன்கு பிரச்சாரம் செய்யவும், பொதுக் கூட்டங்கள் நடத்தி PSG வேட்பாளர்களையும் விவாதிக்கவைத்து, தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதி அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். 2. ஈராக்கியப் போரின் படிப்பினைகள் ஈராக்கியப் போர், எதிர்பாராமல் திடீரென இரண்டு கருத்துக்களை மக்கள் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது: அமெரிக்கா சர்வதேச உறுதித் தன்மையின் காரணியாக இருந்ததிலிருந்து, உறுதியற்ற தன்மையின் மிகப் பெரிய காரணியாகிவிட்டது; ஐரோப்பிய அரசாங்கங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தீவிரமாக எதிர்ப்பதற்கு முற்றிலும் இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பொதுவாகப் போருக்குப் பிந்தைய சர்வதேச அமைப்புகளும், சர்வதேச சட்டங்களும் அமெரிக்க முயற்சிகளின் விளைவுகளே ஆகும். அமெரிக்கா தன்னலமற்று ஒன்றும் செயல்பட்டு விடவில்லை. மேலை நாடுகளை சமாதானப்படுத்தியது, அமெரிக்க மூலதனம் விரிவிடையவும், பனிப்போரில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக மேற்கத்திய முகாமை வலுப்படுத்தவும் உதவியாக இருந்தன. ஆயினும் கூட, சர்வதேச உறவுகளில் இது ஒரு குறிப்பிட்ட உறுதியையும், முன்கூட்டியே எதிர்வுகூறக்கூடிய தன்மையையும் கொடுத்திருந்தது. ஈராக்கிற்கெதிரான போர் தொடங்கியதும், இந்த சர்வதேச அமைப்புக்களையும், ஒழுங்கு முறைகளையும் தான் மதிக்கத்தயாரக இல்லை என்பதை அமெரிக்கா பிழைக்கு இடமின்றி தெளிவுபடுத்தியுள்ளது. தன்னுடைய நலன்களை தொடர்வதற்காக, இது தன்னுடைய இராணுவ வலிமையைத்தான் நம்பியிருக்கிறது. அதேநேரத்தில், ஈராக்கை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதல், ஒரு முதல்படி என்பதையும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் கூறியிருக்கிறது. இப்பகுதி முழுவதும் மறுசீரமைக்கவும், ஒரு புதிய உலக ஒழுங்கை தன்னுடைய அமெரிக்க மூலதனத்திற்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளுதலும் அதனுடைய இறுதி இலக்கு ஆகும். அதுதான் புதிய அமெரிக்க, தவிர்க்கும் போர் பற்றிய கொள்கை வழியின் அடிப்படை உள்ளடக்கம் ஆகும். இதற்கு விடையிறுக்கும் வகையாக, ஐரோப்பா தன்னுடைய படைவலிமையை பெருக்கிக் கொள்கிறது. ஈராக்கியப் போர் பற்றி அவை எந்தக் கண்ணோட்டம் கொண்டிருந்தாலும், அவை தங்களுக்குத் தனியே ஆயுதத் தயாரிப்புத் தொழில் தேவை என்றும், தங்களுடைய தனி இராணுவ வலிமை பெருகவேண்டும் என்றும், அவற்றின் விளைவாக அவர்கள் தங்களுடைய சொந்த தவிர்க்கக்கூடிய போர்கள் மூலம் உலக நிகழ்வுகளில் தலையிடலாம் என்றும் கருதுகின்றன. எனவே, 21ம் நூற்றாண்டின் தொடக்கம், கூடுதலான முறையில் 20ம் நூற்றாண்டை ஒத்திருக்கும் முறையில் வந்துள்ளது; அப்பொழுது ஐரோப்பாவையும், உலகின் பெரும் பகுதிகளையும் இரண்டு உலகப் போர்கள் பேரழிவிற்கு உட்படுத்தின. இந்த இரண்டு உலகப் போர்களுக்கான காரணமும், உலகம் முழுவதையும் சூழ்ந்துள்ள பொருளாதார முறையுடன் தேசிய அரசுகள் இயைந்து செல்ல முடியாமற் போனதுதான். அக்காலத்தின் முக்கிய மார்க்சிசவாதிகள் இதை நன்கு உணர்ந்திருந்தனர். முதல் உலகப் போரின் ஆரம்பத்தில், லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார்: "போரின் புறநிலை அர்த்தம், உலகப் பொருளாதாரம் என்ற பெயரில், இப்பொழுதுள்ள தேசியப் பொருளாதார மையங்களை அழித்தலைக் கொண்டிருக்கிறது. இதற்குப் பதிலளிக்கும் வகையில், ஏகாதிபத்தியம் உற்பத்தி ஆற்றல் கொண்ட மனித குலம் அனைத்தையும் திட்டமிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்தப் பணியை தீர்க்க முயற்சிப்பதில்லை, மாறாக வெற்றிபெற்ற நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்தால் உலகப் பொருளாதாரம் சுரண்டப்படுவதின் அடிப்படையில் தீர்க்க முற்சிக்கின்றது, அந்நாடு உலக வல்லரசாக விளங்க முயற்சிக்கின்றதே ஒழிய, வெறும் வல்லரசு என்பதுடன் திருப்தி அடைவதில்லை." உலகப் பொருளாதாரத்திற்கும், தேசிய அரசிற்கும் இடையேயான முரண்பாட்டை தீர்க்க இரண்டு சாத்தியங்கள்தான் உள்ளன: முதலாளித்துவ வழியில் -மிகச் சக்திவாய்ந்த ஏகாதிபத்தியத்தின் தலைமையில் பலாத்காரம் மூலம் உலகை மறு ஒழுங்கு செய்தல்- இரண்டாவது சோசலிச வழியில் -சோசலிச அடிப்படையில் அனைத்து மக்களின் திட்டமிட்ட ஒத்துழைப்பின் மூலம் தேசிய அரசு அமைப்பு முறையை கடந்து வரல். 1914ம் ஆண்டில், கண்டத்தில் மிகப் பலமான பொருளாதார அரசு என்ற முறையில் ஐரோப்பவை புது முறையில் அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, ஜேர்மனி கண்டம் முழுவதையும் இரத்தவெள்ளப் பெருக்கு ஓடுமாறு செய்துவிட்டது. மற்றொரு முறை ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியால் காட்டப்பட்டது. வெற்றிபெற்ற போல்ஷிவிக்குகள், போரிலிருந்து உடனடியாக விலகி, ஐரோப்பிய தொழிலாளர்கள் அனைவரது மத்தியிலும் பெரும்புகழைக் கொண்டனர். ஆனால் சோவியத் ஒன்றியம் தனிமைப்படுத்தப்பட்டு, ஸ்ராலினுடைய ஆட்சியின்கீழ் இழிவுற்றது. இதுவும், ஜேர்மன் தொழிலாளர்களுடைய இயக்கத்தின் தோல்விகளும், 1939ல் ஜேர்மனியை இரண்டாம் முறையாக ஐரோப்பாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபடவைத்தது; அதனால் முன்னைவிடப் பேரழிவு கொடுத்த விளைவுகள்தாம் ஏற்பட்டன. வெற்றிபெற்ற சக்தியான அமெரிக்காவின் தலைமையில், இரண்டாம் உலகப் போரின் அழிவுகளின் மீது ஒரு புதிய, ஒப்பீட்டளவில் உறுதியான உலக ஒழுங்கு பின்னர் தோன்றியது. ஆனால் இது உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய அரசுக்கும் இடையிலான அடிப்படை முரண்பாடுகளைக் கடக்க முடியவில்லை. நீண்ட காலத்திற்கு ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையே இருந்த பூசல்கள், சோவியத் ஒன்றியத்துடனான பனிப்போரை ஒட்டி வெளிவராமல் சுமுக முறையில் இருந்தன. ஆனால் USSR சிதைந்தவுடன், அவை மீண்டும், கூடுதலான வன்முறையுடன் வெளிப்பட்டுள்ளன. ஈராக்கியப் போர் இம்முறையில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது. அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடி ஈராக் போருக்கான உடனடிப் பொறுப்பு, ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷைச் சுற்றியிருக்கும் வலதுசாரி குழுவால் கொள்ளப்படவேண்டும் என்றாலும், இதன் சமூக, பொருளாதார வேர்கள் இன்னும் ஆழ்ந்த நிலையில் பரந்துள்ளன. அமெரிக்க மற்றும் சர்வதேச முதலாளித்துவத்தின் அடிப்படை நெருக்கடிகளுக்கு ஆளும் செல்வந்தத் தட்டு எதிர்வினை புரிந்துள்ளது. வெள்ளை மாளிகையில் வேறு ஒருவரைக் கொண்டு வரபப்போவதால், இந்த அமெரிக்க கொள்கையின் திசை அடிப்படையில் மாறப்போவதில்லை என்பதைக் கிட்டத்தட்ட ஜனநாயகக் கட்சியினர் அனைவரும் ஒருமனத்துடன் போருக்கு ஆதரவு கொடுப்பதிலிருந்து தெரிந்து கொள்ள முடியும். இராணுவ பலத்தைக் கொண்டு தன்னுடைய சரிந்து கொண்டிருக்கும் பொருளாதார நிலைமையை கடக்கவேண்டும் என்ற அமெரிக்க முதலாளித்துவத்தின் முயற்சிதான் போருக்குப் பின்னணியில் உள்ள காரணமாகும். அமெரிக்கா, பனிப்போருக்குப் பின்னர் நிலைத்துள்ள ஒரே மிகு உயர் இராணுவ வல்லரசாக எழுச்சி பெற்றுள்ளது. உலகெங்கிலும் இராணுவத்திற்காக செலவிடப்படும் தொகையில், 40சதவீதம் அமெரிக்க இராணுவத்தால் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் நீண்ட காலமாக உலகப் பொருளாதாரத்தில் அதன் நிலைமை சரிவைக் கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், அமெரிக்கா உலகின் முக்கியமான தொழில்துறைப் பொருட்களின் மூன்றில் ஒரு பங்கிலிருந்து இரு பங்குவரை உற்பத்தி செய்து வந்திருக்கிறது; அதன்பின் ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கிழக்கு ஆசியா, சீனா ஆகியவை முக்கிய போட்டியாளர்களாக தோன்றிவிட்டனர். அதேநேரத்தில், அமெரிக்கா எப்பொழுதும் இல்லாத அளவு கூடுதலாக உலகப் பொருளாதார ஆதாரங்களை நம்பியுள்ள நிலையில் இருக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு வர்த்தக பற்றாக்குறை 400 பில்லியன் டாலர்களும், வெளிநாட்டுக் கடன் கிட்டத்தட்ட 3 டிரில்லியன் டாலர்களும், வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை 500 பில்லியன் டாலர்களும் அமெரிக்க முதலாளித்துவத்தின் அதிகரித்த அளவிலான ஒட்டுண்ணித்தன்மைக்கு சான்றுகளாக உள்ளன. ஒரு புதிய மூலதன வரத்து குறையுமேயானால், மாரடைப்பு போன்று அச்சுறுத்துகின்ற நிலை உள்ளது. புஷ் நிர்வாகம் ஈராக்கியப் போரில் மூன்று இலக்குகளைத் தொடர்ந்தது: உலகில் இரண்டாம் பெரிய எண்ணெய் இருப்புக்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதல்; மத்திய கிழக்கில், ஐரோப்பிய, ஆசிய போட்டியாளர்களுக்கு எதிராக முக்கிய மூலோபாய நலன்களை கொடுக்கும் வகையில் இராணுவத் தளங்களை நிறுவுதல்; உள்நாட்டில் வளர்ந்துவரும் சமூக, அரசியல் பதட்டங்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புதல் என்பவையே அவை. இந்த அழுத்தங்கள் மிகப்பெரிய தீவிரத்தை அடைந்து விட்டன. ஏறத்தாழ உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத அளவிற்கு, செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி அமெரிக்காவில் பரந்து காணப்படுகிறது. சமுதாயத்தின் உயர்தட்டு, 1990களில் பங்குச்சந்தை பூரிப்பை ஒட்டி மாபெரும் செல்வக் குவிப்பைக் கொண்டது; அதேநேரத்தில், சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் வறுமை, பசி, வீடின்மை ஆகியவை பெருகி, பொதுக்கல்வி முறை சரிந்து கொண்டும், 44 மில்லியன் மக்கள் எந்த விதமான சுகாதார காப்பும் இன்றியும் இருக்கும் நிலை உள்ளது. அமெரிக்க சமுதாயத்தின் செல்வக் கொழிப்புடைய 1 சதவிகிதத்தினர் இன்று நாள் ஒன்றுக்கு, கீழ்மட்டத்தில் உள்ள 20 சதவிகிதத்தினரைவிட 75 மடங்கு அதிகம் சம்பாதிக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளில், அவர்களுடைய நிகர வருமானம் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது, மிக வறியவர்களுடைய வருமானம் 7 சதவிகிதம் குறைந்துவிட்டது. அமெரிக்க தொழிலாள வர்க்கம் ஒரு பெரிய இராட்சத சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு இருப்பதை ஒத்த நிலையில் இருக்கிறது; இது அமெரிக்க அரசியல் வாழ்வில் விழித்துக் கொண்டால், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மிகத் தீவிரமான எதிராளியாகப் பிரதிநிதித்துவம் செய்யும். அதை, பெருநிதியத்தின் மேலாதிக்கத்தில் இருக்கும் குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியினர் என்ற இருகட்சி முறையினால் கட்டுப்படுத்துவது கடினமாகிக் கொண்டு வருகிறது. இதனால்தான் இடைவிடாது பொது மக்களின் கவனத்தினை வெளியுறவுக் கொள்கையின் தீரச்செயல்களில் திசைதிருப்பும் முறைகளும், அதேபோல ஜனநாயக உரிமைகளை படிமுறைரீதியாக நசுக்குவதும் நடைபெற்று வருகின்றன. "பயங்கரவாதத்தின்மீதான போர்" என்ற பெயரில் இந்த இரண்டு கூறுபாடுகளும் நிறைந்துள்ளன. ஐரோப்பிய சங்கடம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரோஷமான நடவடிக்கைகள், ஐரோப்பிய அரசாங்கங்களை தீர்வுகாணமுடியாத சங்கடங்களை எதிர்கொள்ளவைத்துள்ளது. அமெரிக்காவை பின்தொடர்ந்தால், அமெரிக்காவிற்குக் கீழ்ப்பணிந்து நிற்கும் நிலைதான் அவர்களுடைய பங்கு என்று போய்விடும். அவர்கள் அமெரிக்காவை எதிர்த்தாலோ, ஐரோப்பாவை பிரித்து, நீண்டகால பார்வையில் அது மிகப்பெரிய அழிவுதரும் இராணுவ மோதல்களில் கொண்டுபோய்விடும். இரண்டு விதத்திலும், சமூக மற்றும் அரசியல் உட்பதட்டங்கள் தீவிரமாகிவிடும். இந்தச் சங்கடமும், ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே இருந்த போட்டிகளும், ஈராக்கியப் போரின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் பெரும் பிளவை ஏற்படுத்தியது. ஐரோப்பாவில் பிரான்ஸ்-ஜேர்மனி கூட்டின் வலிமைக்கு எதிர் எடையாக, நீண்டகாலமாகத் தன்னுடைய அமெரிக்காவுடனான "சிறப்பு உறவுகளைக்" கருதியிருந்த பிரிட்டன், அமெரிக்காவின் கால்களில் விழுந்தது. ஸ்பெயினும் இதையே செய்தது; ஐரோப்பிய ஒன்றியத்தில் மே மாதம் சேர்ந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் இத்தாலியும் இதையே செய்தன. மிகுந்த வலதுசாரித் தன்மை கொண்டிருந்து, மக்களிடையே ஆதரவு கொண்டிராத இந்நாட்டு அரசாங்கங்கள் அனைத்தும், தங்கள் மக்களிடமிருந்தும், அமெரிக்காவை ஒரு பாதுகாப்பு சக்தியாகக் கருதின. பிரான்சும், ஜேர்மனியும் ஆரம்பத்தில் போர்த்திட்டங்களை எதிர்த்தன, ஏனெனில் தங்களுடைய நலன்கள் மத்திய கிழக்கில் பாதிக்கப்படுமோ என்று அவை அஞ்சின. ஆனால், முதலில் இருந்தே இந்த நிராகரிப்பு அரைகுறையாகத்தான் இருந்தது. உதாரணமாக, ஜேர்மன் அரசாங்கம், ஜேர்மன் வான்வழியையும், அந்நாட்டிலிருந்த அமெரிக்கத் தளங்களையும் பயன்படுத்தக்கூடாது என்று கூறும் கருத்தை ஒருபோதும் நினைக்கவில்லை. பாக்தாத் வீழ்ச்சியுற்ற உடனேயே, பேர்லினும் பாரிசும் தங்களுடைய எதிர்ப்புக்களைக் கைவிட்டு விட்டன. போருக்கு எதிராக மில்லியன் கணக்கில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபொழுது, அவ்வரசாங்கங்கள் ஐ.நா.வில் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமிப்பதற்கு ஆதரவு தெரிவித்து வாக்குகளை அளித்தன. வாஷிங்டனும், லண்டனும் போருக்குத் தயார்செய்வதற்காக ஒரு குற்றஞ் சார்ந்த முறையில் செயல்பட்ட விவரங்களைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியே வந்துகொண்டிருந்தபோதிலும், "பழைய நண்பர்கள் இடையே கருத்து வேறுபாடு" என்ற போரைப் பற்றிய கருத்துவேறுபாடுகள் உதறித் தள்ளப்பட்டன -- இவற்றில் மிகுந்த இறுமாப்புடன் பேரழிவு ஆயுதங்கள் பற்றிக் கூறிய பொய்களிலிருந்து, ஐ.நா. தலைமைச் செயலாளரையே வேவு பார்த்த நிகழ்ச்சி வரை பலவும் அடங்கியுள்ளன. NATO படைகளை ஈராக்கிற்கு அனுப்புவதுபற்றிக்கூட நடுவில் தீவிரமாக ஆலோசனைக்கு உட்பட்டிருந்தது. இந்த இழிவான நிபந்தனையற்ற சரணாகதிக்குப் பல காரணங்கள் உள்ளன. ஒருபுறம், பேர்லினும் பாரிசும், வாஷிங்டனுடன் மோதுவதற்கு தயாரிப்பு நிலையில் அவர்கள் இல்லை என்ற உண்மையை எதிர்நோக்க வேண்டியதாயிற்று. அமெரிக்கா தன்னுடைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திப் பழைய கண்டத்தில், ஐரோப்பாவைப் பிரித்து, போருக்கு எதிர்ப்புத் தெரிவித்த நாடுகளைத் தனிமைப்படுத்த இரக்கமற்ற முயற்சியைக் கொண்டது. அதேநேரத்தில், ஐரோப்பா முழுவதும் வெளிப்பட்டிருந்த போர் எதிர்ப்பு இயக்கம், உச்சக் கட்டமாக, உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய ஆர்ப்பாட்டமாக 2003, பெப்ரவரி 15-16 தேதிகளில் நடைபெற்றதில் தங்களை இணைத்துக் கொண்டு காட்டிக் கொள்ளவும் விரும்பவில்லை. இந்த ஆர்ப்பாட்டங்களில்கூட ஜேர்மன், பிரான்ஸ் இவற்றின் அரசாங்கங்களுடைய கொள்கைகளை பற்றிய கற்பனைக் கருத்துக்கள் இருந்திருக்குமேயாயின், அவை ஐரோப்பிய அரசாங்கங்களின் சமூக விரோதக் கொள்கைகள் ஒரு பெரும் மக்கள் இயக்கமாக வந்துவிடும் திறன் கொண்டிருந்தது என்பதுதான். இந்த அழுத்தத்தில், பேர்லினும் பாரிசும், வாஷிங்டனுடனான தங்கள் வேறுபாடுகளைக் களைந்துவிடுவது நல்லது என நினைத்தனர். இந்த அனுபவம் போருக்கான எதிர்ப்பு, தங்களுடைய ஏகாதிபத்திய நோக்கங்களைத் தொடரும் ஐரோப்பிய அரசாங்கங்களிடத்தில் விட்டுவிடுவதற்கு இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. சமூகப் பிரச்சினையுடன், போர்பற்றிய பிரச்சினையும் பிரித்துக் கூறமுடியாத முறையில் தொடர்பு உடையது ஆகும். போரின் வேர்களுக்கு, அதாவது, முதலாளித்துவ சமூக ஒழுங்கிற்கு எதிராக நடத்தப்படும் இயக்கம்தான், போரினால் விளையக்கூடிய அபாயத்தை வெற்றிகரமாக எதிர் கொள்ள முடியும். வாஷிங்டன், பாரிஸ் மற்றும் பேர்லின் இவற்றிற்கிடையே உள்ள அழுத்தங்கள் சற்றுக் குறைந்து விட்டன என்பதால், பழைய பூசல்கள் அனைத்தும் கடக்கப்பட்டுவிட்டன என்று பொருள் கிடையாது. சந்தைகள், முதலீடுகள், மூலப் பொருட்கள், தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம் ஆகியவை பற்றிய போட்டிகள், கூரிய முறையில் பெருகிவருகின்றன. ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே உள்ள வர்த்தகப்பூசல்கள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. இவையனைத்தும், தவிர்க்கமுடியாத, புதிய, கூடுதலான, வன்முறைகளுக்குத்தான் இட்டுச்செல்கின்றன. 3. ஐரோப்பிய ஒன்றியம் -- மிகச் சக்திவாய்ந்த வணிக நலன்களின் கருவி அமெரிக்காவைப் போலவே, ஐரோப்பாவும், சோவியத் ஒன்றியத்தின் சரிவிற்குப் பின்னர் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப்பின், ஐரோப்பிய ஒன்றிணைப்பிற்கான வழிவகை இரண்டு முன் நிபந்தனைகளைக் கொண்டிருந்தது: அவை அட்லான்டிக் கடந்த கூட்டும், பனிப்போரும் ஆகும். பனிப்போரில் தனக்கு உறுதியான தடுப்பைத் தருவதற்காக, பொருளாதார, அரசியல் வகைகளில், மேற்கு ஐரோப்பாவை ஒன்றுபடுத்தும் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. பொருளாதார சீரமைப்பு மூலமும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே போட்டிகளைக் கடந்து செல்வதன் மூலமும் முதல் உலகப் போருக்குப்பின் இடம்பெற்ற புரட்சிகர எழுச்சி ஏற்பட்டது போல் நிகழ்வது தடுக்கப்பட இருந்தது. ஒன்றிணைப்பு செயல்முறை பெரிதும் வணிகநலன்களின் மிகுந்த ஆதிக்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், நீண்ட காலத்திற்கு இது மிகக் கடுமையான சமூக மற்றும் பிராந்திய நலன்களை சமன்படுத்துவதற்கும் தொடர்பைக் கொண்டிருந்தது. விவசாய நிதிகள், வட்டார நிதிகள், மற்றும் பிரஸ்ஸல்ஸில் இருந்து அளிக்கப்பட்ட பெருந்தொகைகள், மிக மோசமான சமூக திரித்தல்களைக் குறைத்துச் சமன் செய்யப் பயன்பட்டன. சோவியத் ஒன்றியம், வார்சா உடன்படிக்கை, இவற்றின் முடிவு. இந்த நிலைமைகளை மாற்றி விட்டன. அப்பொழுதிலிருந்து, அமெரிக்காவிற்குள்ளும், ஐரோப்பாவிற்குள்ளும் அழுத்தங்கள் தீவிரமடைந்துள்ளன. ஐரோப்பிய நிறுவனங்களின் பங்கு பெரிதும் மாறிவிட்டது. பிரஸ்ஸல்ஸ் குழு, கட்டுப்பாடுகளை அகற்றுதல், தாராளமயமாக்குதல், தொழிலாளர்களின் உரிமைகளை அகற்றுதல் ஆகியவற்றின் மறு பெயராயிற்று. சமூக, வட்டார இடைவெளியைச் சமன் படுத்துவதற்குப் பதிலாக, இக்குழு அவற்றைத் தீவிரமாக்கியது. 40,000 பேரைக் கொண்டுள்ள மாபெரும் அதிகாரத்துவம், எந்தவிதமான ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டிராமல், கணக்கிலடங்கா செல்வாக்குகளைத் திணிப்பவரின் இரகசிய வேண்டுகோளுக்குக் கட்டுப்பட்டிருக்கும் இந்த அமைப்பு, ஐரோப்பியப் பெருநாடுகள், மிகச் செல்வாக்குப் படைத்த வணிக நலன்களுக்குத்தான் வெளிப்படையான கருவியாக இயங்குகிறது. ஐரோப்பிய அரசியல் அமைப்பிற்கான சட்டவரைவு, இந்நிலைகளை முறைப்படுத்த வேண்டும் என்று இருந்தது. ஆனால் அதில் பொருளாதார, சமூகக் கொள்கைகளின் அனைத்துக் கூறுபாடுகளும், வணிக நலன்களுக்குக் கீழ்ப்படுத்தப் பட்டுள்ளன. "சுதந்திரம், பாதுகாப்பு, நீதி" இவற்றை, "சுதந்திரமான மற்றும் உருச்சிதைக்கப்படாத ஒரு உள்நாட்டுச் சந்தை" உடன் தொடர்பு படுத்தியுள்ளது. 4ம் விதியின்படி, "பொருட்கள், பணிகள், மூலதனம்" இவை தடையின்றி இயங்குதல், "ஓர் அடிப்படை சுதந்திரம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், நிதிக் கொள்கையில், யூரோ பகுதியில் "முழு அதிகாரத்தைக் கொண்டிருக்கும்" என்றும், பொருளார, வேலைவாய்ப்பு, சமூக கொள்கைகளையும் ஒருங்கிணைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது, சமூகப் பாதுகாப்பு நலன்கள் மீதான பரந்தவகைத் தாக்குதல் என்பதோடு, வரிவிதிப்பில் பெரும் சலுகைகளையும், பொருளாதார ஊக்குவிப்பு நலன்களையும் வணிகத்திற்குக் கொடுக்கும் பட்டயம் ஆகும். அரசியலமைப்பு வரைவு, இராணுவம், போலீ்ஸ் அமைப்புக்களின் பங்கைப் பற்றிக் கூறுகையில், அவை "சட்டம், ஒழுங்கு, உள்நாட்டுப் பாதுகாப்பு இவற்றைப் பராமரிக்கத்தான்" உள்ளன எனக்கூறுகிறது. அதற்குப் பிறகுதான் ஓரளவு குடிமை உரிமைகள் பட்டியல் இடப்பட்டுக் கூறப்படுகின்றன. இதுவரை, உறுப்பினர் நாடுகளிடையே உள்ள எதிரிடை நலன்களின் காரணமாக இந்த வரைவு இன்னும் ஏற்கப்படவில்லை. அதற்கும் மேலாக, அமெரிக்காவுடன் ஈராக்கியப் போரில் சேர்ந்துள்ள நாடுகள், ஜேர்மனி, பிரான்ஸ் இவற்றின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தப் பட்டுவிடுவோமோ என்றும் அச்சம் கொண்டுள்ளன. ஆனால், பொருளாதார, சமூக கொள்கை நோக்கங்களைப் பற்றி உடன்பாடு நிலவுகிறது. அரசியலமைப்பை பற்றிய எதிர்க்கருத்துக்கள் இருந்தபோதிலும், ஐரோப்பாவில் சமூக துருவமுனைப்படல் பெருகிக் கொண்டுதான் வருகிறது. ஐரோப்பிய பொதுநல மாதிரி என்று பெரிதும் புகழப்பட்டிருந்த வடிவமைப்பு இப்போது இல்லை. சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி ஐரோப்பிய ஒன்றியத்தில் தற்பொழுது 20 மில்லியன் ஆண்களும், பெண்களும் வேலை கிடைக்காமல் இருக்கின்றனர். அதேநேரத்தில், இந்த வேலையின்மை சீரான முறையிலும் பங்கிடப்பட்டு இருக்கவில்லை. ஐ.ஒ. புள்ளிவிவர அலுவலகம் கொடுத்துள்ள குறிப்பின்படி, வேலையின்மை விகிதம் லக்சம்பர்க்கில் 3.7 சதவீதத்திலிருந்து, ஸ்பெயினில் 11.4 சதவிகிதம் வரை மாறிக் காணப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் மே மாதம் முழு உறுப்பினர் தகுதியுடன் அனுமதிக்கப்பட்ட நாடுகளில், போலந்தில் மிக அதிகமாக 19.2 சதவிகிதம், அதாவது 3.3 மில்லியன் வேலை கிடைக்காதவர்கள் உள்ளனர். 25 வயதிற்குக் குறைந்த இளைஞர்கள்தான் மிகக் கடுமையான பாதிப்பிற்கு உட்பட்டவர்கள் ஆவர். ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும் 15 சதவீதம் இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர்; இப்பொழுதுள்ள உறுப்பு நாடுகளில் ஸ்பெயின்தான் இளைஞரிடையே மிக அதிக வேலையின்மை விகிதம் என்ற 23 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. போலந்தில் இளைஞர் வேலையின்மை விகிதம் 41 சதவிகிதமாக இருக்கிறது. பெருகியுள்ள வேலையின்மையுடன் பெருகியுள்ள வறுமையும் கூடவேதான் வருகிறது. ஐரோப்பிய குழு கடைசியாகக் கொடுத்துள்ள சமூக அறிக்கையின்படி, 1998ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐந்தில் ஒரு பங்கினர், மொத்த வருமானத்தில் 8 சதவிகிதம் மட்டுமே பெறுகின்றனர்; மிக செல்வந்தர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் 36சதவீதத்தைப் பெறுகின்றனர். அதே ஆண்டில் கிட்டத்தட்ட 68 மில்லியன் மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டனர்; குறிப்பாக இளைஞர்களும், முதியவர்களும் மட்டும் இன்றி இளவயதுப் பெண்களும் இதில் உட்படுவர். இந்தக் கணக்கில், ஆறு ஆண்டுகளாக செயல்படுத்தப்படும் "சீர்திருத்தங்களின்" விளைவுகள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அக்காலக்கட்டம், ஊதியங்களில் பெறும் குறைப்பு, ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைநேரங்கள், சமூக நலனின் செலவுகள் ஆகியவற்றை கண்ணுற்றது. வரிவிதிப்புக்களைக் குறைத்தல், வெட்டுக்கள் என்றால் பொது நல முதலீட்டுத் திட்டங்கள், மறுபயிற்சி அளித்தல், கூடுதலான கல்வி கொடுத்தல், தொழிற்பயிற்சி அளித்தல், அரசால் தோற்றுவிக்கப்படும் வேலைகளின் வடிவங்கள் ஆகியவை குறைக்கப்படுவது நோக்கமாக வந்து விட்டது என்ற பொருள் ஆகும். வேண்டுமென்றே திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பொருளாதாரக் கொள்கைதான், ஓய்வூதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவை எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குக் காரணமே ஒழிய, மக்கட்தொகை அல்ல. அரசாங்கமே ஊக்குவிக்கும் பாதுகாப்பற்ற வேலைகளின் வளர்ச்சி, குறைந்த ஊதியம், பகுதி நேரவேலை, போலியான தானே வேலைகொள்ளுதல், ஊதியங்கள் சரிவு, பெருகும் வேலையின்மை ஆகியவை, சமூக காப்பீட்டுச் செலவினங்கள் பகிர்ந்துகொள்ளப்படுவதன் அடிப்படையை தகர்த்துவிட்டன. உயர்ந்த வருமானம் பெறுவோர், சொத்துக்கள் மற்ற வகைகளில் வருமானம் பெறுபவர்கள், நலம்சார் அரசின் திட்டத்திற்கு நிதியளிப்பதில் பங்குபெறாமல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; அதேநேரத்தில், சிறிய அளவில் தாங்களே பணிபுரிவோரும், வேலை கிடைக்காதவர்களும் நலம்சார் அமைப்பிற்கு பணம் அளிக்க இயலாது. இவ்விதத்தில், அரசாங்கம் ஒரு தீயவட்டத்தை ஏற்படுத்தி, இன்னும் கூடுதலான முறையில் ஓய்வூதியங்கள் மற்றும் நலத்திட்டங்களைத் தாக்குவதற்குக் காரணங்களைக் கூறும் நிலைமைகளை ஏற்படுத்திவருகிறது. ஜனநாயக உரிமைகளின்மீதான தாக்குதல் சமூக உரிமைகளின்மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதுடன், அடிப்படை ஜனநாயக உரிமைகள்மீதான தாக்குதல்களும் இணைந்து நடத்தப்படுகின்றன. அமெரிக்காவில் 2001, செப்டம்பர் 11ல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள், ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு அடிப்படை உரிமைகள்மீது நேரடியான தாக்குதல்களை நடத்துவதற்கு ஒரு போலிக்காரணத்தை கொடுத்தன. ஜேர்மனியில் மட்டும், பாராளுமன்றத்தின் மூலம் பயங்கரவாதத்தை எதிர்ப்பது தொடர்பாக, 100க்கும் மேற்பட்ட திருத்துதல் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்பது அதிகாரபூர்வமான காரணமாகக் கூறப்பட்டாலும், பெரும்பாலான சட்ட மாறுதல்கள் எல்லா மக்களுக்கும் எதிராகக் கொண்டு வரப்பட்டவை ஆகும்; இவை சமூக எதிர்ப்பு, அரசியல் அதிருப்திக் கருத்துக்கள் இவற்றை அடக்குவதற்கும் பயன்படுத்தப்பட முடியும். அரசின் அதிகாரக் கருவிகளான உளவுத்துறைகள், போலீஸ், எல்லைப்புறப் பாதுகாப்புப் படைகள் அனைத்தும் விரிவு செய்யப்பட்டு, அவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் கணக்கு பதிவு செய்யப்படுதல், தகவல்கள் சேகரிப்பை பயன்படுத்துதல் மூலமும் புள்ளிவிவர பாதுகாப்பை மட்டுப்படுத்துல் மூலமும் பெரும்பாலன மக்கள் வாடிக்கையாக கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஜனநாயக உரிமைகளின்மீதான தாக்குதல் புகலிடம் கோருவோர், குடிபெயர்ந்தோர் ஆகியோர் மீதும் மனிதத் தன்மையற்ற முறையைக் கையாள்வதில் முன்னெடுக்கப்படுகிறது. ஐரோப்பாவிற்குள் நுழையும் முயற்சியில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக் கணக்கான மக்கள் உயிரை இழக்கின்றனர். வெளியேற்று முகாம்களில் விசாரணையின்றிக் காவலில் வைத்திருத்தல், கொடுஞ்சிறை முகாமில் அடைத்து வைத்தல், குடும்பங்களைப் பிரித்தல், மற்றும் பலவித அரசியல், சமூகச் சட்ட நெறிகள் மிகத் தவறாகப் பயன்படுத்தப்படல், ஆகியவை ஐரோப்பாவில் அன்றாட நடவடிக்கைகள் ஆகிவிட்டன. ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு ஐரோப்பாவில் விரிவுபடுத்தப்படல் ஐரோப்பிய ஒன்றியம் (ஐ.ஒ) 15 லிருந்து 25 உறுப்பினர் நாடுகளுக்கு விரிவு செய்யப்படல், மே 1-ல் தொடங்க உள்ளது, சமூக நெருக்கடியை தீவிரப்படுத்தத்தான் உதவுகிறது. செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே உள்ள பெருத்த வேறுபாடு, இந்த வேறுபாடுகளைக் களைந்து, நிலைமையைச் சமன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படாத நிலையில், முந்தையை விரிவாக்க சுற்றுக்களில் நடைபெற்றதைப்போலவே, அதிகமாகத்தான் வளரும். கிழக்கு ஐரோப்பாவில் உள்ள மிகக் குறைந்த ஊதியம், பணக்கார நாடுகளில் சமூகத்தரத்தை இன்னும் கீழேகொண்டுவரும் முயற்சிகளுக்கு உந்துதல் கொடுத்து நெம்புகோல் போல அமையும். ஐரோப்பிய ஒன்றியத்தின் (ஐ.ஒ) மொத்த மக்கட்தொகை, ஏறத்தாழ 20 சதவிகிதம் உயர்ந்தி 451 மில்லியனை எட்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் உட்சந்தை, 23சதவீதம் கூடுதலாக வளரும். இதற்கு மாறாக, விரிவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்நாட்டு மொத்த உற்பத்தி, 5 சதவிகிதம்தான் அதிகமாகும். இவை ஒன்றாகச் சேர்த்துக் கருதப்படும் பொழுது, புதிதாக இணையும் நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி, இந்தப் பத்து நாடுகளும் ஐந்து மடங்கு கூடுதலான மக்கட்தொகையைக் கொண்டிருந்தபோதிலும், ஹாலந்திற்கு இணையாகும். அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பழைய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடையதைவிடப் பாதிக்கும் குறைவாக உள்ளது. ஐ.ஒ. விரிவாக்கப்படுவதை அடுத்து, பிரஸ்ஸல்ஸால் தயாரித்து வெளியிடப்படும் மிகப் பளபளப்பான துண்டுப் பிரசுரங்கள் வரவிருக்கும் பொருளாதார, பண்பாட்டு வாழ்வின் ஏற்றம் எத்தகைய மேன்மை உடையதாகக் கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் என்பதைப்பற்றிக் கூறுகின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஐ.ஒ. புதிய உறுப்பு நாடுகளுக்கு, ஆண்டு ஒன்றுக்கு 20 பில்லியன் யூரோக்களை ஆதரவாக வழங்க உள்ளது. இந்த நாடுகளில் இருக்கும் சமூக, பொருளாதார நெருக்கடிகளின் பார்வையில் இந்தத் தொகை கடலில் கரைத்த பெருங்காயத்திற்கு ஒப்பாகும். இதை, ஜேர்மனிய இணைப்பின்போது மேற்கொள்ளப்பட்ட செலவினங்களிலிருந்து அறியமுடியும். 1991 லிருந்து ஜேர்மனியக் கருவூலம் 50 பில்லியன் யூரோக்களை ஆண்டு ஒன்றுக்கு அதன் கிழக்குப்பாதிக்குக் கொடுத்துவந்துள்ளது; அப்பகுதியில் மொத்தம் மக்கட்தொகை 17 மில்லியனாக இருந்தது. அந்த அளவு மிகக் கணிசமான முறையில் இப்பொழுது வர இருக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மக்கட்தொகையானது 75 மில்லியனை விடக் குறைவாகும். அந்த அளவு ஆதரவு கொடுத்திருந்தபோதிலும், கிழக்கு ஜேர்மனியில் வேலையின்மை இப்பொழுது மேற்கு ஜேர்மனியைவிட இருமடங்கு அதிகமாகும். அதே நேரத்தில், கிழக்குப் பக்கம், ஐ.ஒ விரிவாக்கம், மேற்குப்புற ஐரோப்பிய நாடுகளில் ஏழ்மையான பகுதிகளின் பொருளாதாரத்தைத் தாக்கும்; அவை இனி ஐ.ஒ. பிராந்திய நிதியங்களிலிருந்து குறைவாகவே உதவித்தொகையைப் பெறும். விரிவாக்கத்திற்கு முன்பு, ஐ.ஒ குழு, புதிய உறுப்பு நாடுகளில் இருக்கும் சமூக முரண்பாடுகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஏராளமான அளவுகோல்கள், நிபந்தனைகள், கட்டாயமாகச் செயல்படுத்தப்படவேண்டியவை என பட்டியல் இட்டு, பழைய கிழக்கு முகாம் நாடுகளில் "தடையற்ற சந்தைமுறைக்கு நட்புமுறையில்" சாதகமான சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும் என நிர்ணயித்துள்ளது. இதனால் நாட்டுச் செலவினங்களில் சமூகப் பணிகளுக்கான செலவினங்கள் குறைக்கப்படும், அரசாங்க உடமை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுதல், மற்றும் முழு தொழில், விவசாயத் துறைகள் இலாபமற்றவை எனக் கருதப்படுபவை மூடப்படும் போன்ற நிலைகள் உருவாகும். இவற்றை ஒட்டி, சமூகத்தின் பரந்த அடுக்குகளுக்கு பேரழிவு தரக்கூடிய விளைவுகள் ஏற்படும். வெளிநாட்டு முதலீடு, ஐ.ஒ. உதவித்தொகைகள், சில சிறுநகரங்களைச் செழிப்புடையதாக ஆக்கினாலும், நாட்டின் மற்ற பகுதிகள் கூடுதலான வறுமை நிலைக்கும், நம்பிக்கை இழந்த நிலைக்கும் தள்ளப்பட்டுவிடும். இது குறிப்பாகப் போலந்து நாட்டில் தெளிவாகக் காணப்படுகிறது; இங்கு மக்கட்தொகை 39 மில்லியன் ஆகும், இது, சேரவிருக்கும் ஏனைய 9 நாடுகளுடைய மக்கட்தொகையைவிட அதிகமாகும். 1980 களின் இறுதியில், நாட்டின் கனரகத் தொழில் (எஃகு மற்றும் துறைமுகம்), சுரங்கம், ஆற்றல் பகுதிகள் "அதிர்ச்சி வைத்திய முறையினால்" திவாலான நிலையில் இருந்திருந்தன. தொழில் துறை உற்பத்தி 1988 - 1992 க்கு இடையே 50சதவீதம் சரிந்திருந்தது. இதேநேரத்தில், அரசாங்கம் நடத்திவந்த தொழில்களில் உழைப்பவர்களின் ஊதியத்தில் கட்டுப்பாடு கொண்டுவந்தது, அவர்களுடைய உண்மை ஊதிய மதிப்பை 25சதவீதம் வீழ்ச்சியை விளைவித்தது. இப்பொழுது ஐ.ஒ. தனியார்மயமாக்குதலை விரைவுபடுத்தவேண்டும் என்று கூறி, எஞ்சியுள்ள இலாபம் காணாத ஆலைகள் மூடப்படவேண்டும் என்றும் என்றும் கோருகிறது. கிராமப்புறப் பகுதிகளிலும் நிலைமை இதேபோன்ற வெடிப்புத்தன்மையைத்தான் கொண்டிருக்கிறது. போலந்தில் கிட்டத்தட்ட 20 சதவிகித மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்; இத்துறையில் உற்பத்தித்திறன் மிகக் குறைவானது ஆகும். ஐ.ஒ. மதிப்பீடுகளின்படி, தற்பொழுதுள்ள 2 மில்லியன் விவசாயிகளில் 100,000 பேர்தான் ஐ.ஒ. விரிவாக்க முறையிலிருந்து மீள இயலும். இணைப்பில் சேர்ந்தபின்னர், போலந்து நாட்டின் விவசாயிகள், இப்பொழுது மேற்குப் பகுதியில் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் உதவித்தொகைகளில் 40 சதவிகிதத்தைத்தான் பெறமுடியும். இந்தப் பணமும் செல்வம் கொழிக்கும் விவசாயிகளுக்கு, எல்லைப் புறங்களில் இருக்கும் விவசாய நிறுவனங்களுக்கு, தொழில்துறை வழிவகைகளைக் கையாளும் அமைப்புக்குக்களுக்கு மட்டும் செல்லும். மேலும், மேலைப்புற, மலிவான உணவுப் பொருட்கள், வணிகத்தடைகள் அகற்றப்பட்ட பின்னர், கிழக்குச் சந்தைகளில் வெள்ளம் போல வந்து குவியும் -- அதாவது போலந்து விவசாய நலன்கள் மிகப்பெரிய முறையில் தகர்வதைத் தடுப்பதற்கு எதுவுமில்லை என்பதுதான் பொருளாகும். கிழக்கு பக்கத்தை நோக்கிய விரிவினால், குறிப்பாக ஜேர்மன் வணிகம், நிறைந்த நலன்களைக் கொள்ளும் தொடர்பை பெற்றுள்ளது. அது ஏற்கனவே கிழக்கை தன்னுடைய பொருட்களுக்கு சந்தையாகவும், நன்கு பயற்சிபெற்றுள்ள, ஆனால் குறை ஊதியத் தொழிலாளர்களுக்கான சந்தையாகவும் பயன்படுத்துகிறது. கிழக்கு ஐரோப்பாவின் புதிய உறுப்பு நாடுகளுக்கு ஜேர்மனிய ஏற்றுமதியின் பங்கு கிட்டத்தட்ட அமெரிக்காவுடையதற்கு (ஏறத்தாழ 10சதவீதம்) சமமாகும். இந்த நாடுகளுடன் மொத்த ஜேர்மன் வணிகம், ஐ.ஒ வின் மொத்தத்தில் 40சதவீதம் ஆகும். ஜேர்மனிய நிறுவனங்கள் கணிசமாக கிழக்கு ஐரோப்பாவில் முதலீடு செய்துள்ளன. போலந்து, செக் குடியரசு, ஹங்கரி இவற்றில் முழுமையாக 350,000 தொழிலாளிகள் ஜேர்மனிய நிறுவனங்களால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். ஒரு ஜேர்மனிய நிறுவனம், Siemens, 95 துணை நிறுவனங்களை கொண்டு 25,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. 1991ல் Volkswagen செக் குடியரசின் கார் உற்பத்தி நிறுவனமான Skoda வை விலைக்கு வாங்கி விட்டது. புதிதாக இணையவுள்ள நாடுகளில் ஒரு பயிற்சி பெற்ற தொழிலாளருக்கான மொத்த உழைப்பு செலவினங்கள், ஜேர்மனியில் ஒரு தொழிலாளருக்கான மொத்த உழைப்பு செலவினங்களில் எட்டில் ஒரு பங்குதான் இருக்கும். இது மிக உயர்ந்த அளவு வேலையின்மை இருப்பதால் மட்டுமில்லாமல், உறுப்பு நாடுகளில் இருக்கும் மக்கள் தடையற்று எங்கும் வேலைதேடுவது, உறுப்பினர் நாடுகள் அந்தஸ்து கிடைத்து ஏழாண்டு காலத்திற்குப் பிறகுதான் முடியும் என்ற புது விதி இயற்றப்பட்டுள்ளதாலும் ஆகும். 4. ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியம் PSG, ஐரோப்பிய ஒன்றியம், அதன் நிறுவன அமைப்புக்கள், அது திட்டமிட்டுள்ள அரசியல் அமைப்பு மற்றும் அதேபோல ஐ.ஒ. வின் கட்டுப்பாட்டின் கீழ் கிழக்கத்திய விரிவாக்கத்தை நிராகரிக்கிறது. "அளவுக்கும் கூடிய செலவினங்களை" ஏற்படுத்தும் என்பதால் ஐரோப்பாவை கீழை நாடுகளுக்கு மூடவும், துருக்கி போன்ற நாடுகள் நுழைவதை நிராகரிப்பதற்கும் ஐ.ஒ. கொண்டுள்ள நிலையுடன், நாங்கள் நிராகரிப்பது தொடர்பு அற்றது ஆகும். ஐரோப்பிய எல்லைகள் கடக்கப்படுவதற்கும், கண்டத்தின் மிகப்பெரிய தொழில்நுட்பம், பண்பாட்டு, சடப்பொருள் ஆதார வளங்கள் கூட்டாகச் செயல்படுத்தப்படுவது, வறுமையும், பின்தங்கிய நிலையும் குறுகிய காலத்தில் அகற்றப்பட்டு வாழ்க்கைத்தர உயர்வு பெறுவதற்கு, நல்ல முன் நிபந்தனைகள் ஆகும். ஆயினும், இந்த நலன்கள் பெருவணிகத்தின் இலாபமுறைகளால் தீர்மானிக்கப்படும் ஒன்றிணைப்பு நிகழ்ச்சிப்போக்காக இருக்கும் வரையில் முதலில் கூறிய நன்மைகள் அடையப்படமுடியாதவை ஆகும். இப்பொழுதுள்ள வடிவமைப்பில், ஒன்றியம் மூலதனத்திற்குத்தான் தடையற்ற இயக்கத்தையும், இடம் பெயர்தலையும் கொடுக்கிறது; இந்நிலையில் ஐரோப்பிய மக்களில் பரந்த தட்டுக்கள் மிகப்பெரிய ஊதிய வேறுபாடுகள், வாழ்க்கைத்தர வேறுபாடுகள் ஆகியவற்றால் பிரிக்கப்பட்டு, குடியேறுவோர் பெரும் வேறுபடுத்தலுக்கு உட்படுவர் என்பதோடு, ஜனநாயக உரிமைகளும் பெரிதும் அகற்றப்பட்டுவிடும். ஒரு முன்னேற்றகரமான ஐரோப்பிய ஒன்றிணைப்பு என்பது ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் என்ற வடிவமைப்பில்தான் அடையப்படமுடியும். இதற்கு ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் அரசியல் அளவில் ஒன்றுபடுத்தப்படல் என்பது முன்நிபந்தனையாகும். கிழக்கு ஐரோப்பாவிலும், துருக்கியிலும் உள்ள உழைக்கும் மக்கள், ஐ.ஓ.வின் போக்கை நிர்ணயிக்கும் இந்த பெரு வணிக நலன்களுக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கிய கூட்டாளி ஆவர். PSG அனைத்துவகையான தேசியவாதத்தையும் பிராந்தியவாதத்தையும் நிராகரிக்கிறது. தேசிய இறைமைக்கான கோரிக்கை அல்லது பிராந்திய தன்னாட்சி, அது ஸ்கொட்லாந்து ஆயினும், காட்டலோனியாவானாலும், படுவாவாக இருந்தாலும், பிரஸ்ஸல்ஸ் ஆணைகளுக்கு தக்க விடையில்லை. அத்தகைய கோரிக்கைகள் பல சிறிய கூண்டுகளுக்கு பதிலாகப் பெரிய சிறையில் தள்ளப்படுதலுக்குத்தான் ஒப்பாகும். அவை மக்களை தேசிய, இனக்குழு மற்றும் மத வழிகளில் பிளவுபடுத்தி அவர்களை நசுக்குவதற்குத்தான் வசதியளிக்கும். அத்தகைய கோரிக்கைகள் தவிர்க்கமுடியாமல் கண்டத்தை துண்டுபோடும் முயற்சிகளை, யூகோஸ்லாவியா பிரிவினைக்குட்பட்ட பின்னர் எழுந்த வளர்ச்சிகளின் கொடுமையைத்தான், அதாவது கொலைவெறி தூண்டும் தேசியம், இனவழிச் சிறுபான்மையினரை வெளியேற்றுதல், பொருளாதாரச் சரிவு ஆகியவற்றைத்தான் தூண்டிவிடும். PSG புதிய தடைகளையும் எல்லைகளையும் அவை பொருளாதார முறையாயினும், அரசியல் முறையாயினும், இவற்றை தோற்றுவிக்க கருதும் அத்தகைய நடவடிக்ககைகளை நிராகரிக்கிறது. ஐரோப்பாவை சோசலிச ரீதியில் மறு ஒழுங்கமைப்புச் செய்வதற்கு நாங்கள் கீழ்க்காணும் திட்டத்தை முன்வைக்கிறோம்: * சமூக சமத்துவம், நீதிக்காக வேலை பார்க்கும் உரிமை, ஓய்வூதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி ஆகியவை அடிப்படை சமூக உரிமைகள் ஆகும். அவற்றிற்கு பெரு வணிக நலன்களைவிட முன்னுரிமை அளிக்கப்படுதல் வேண்டும். மிகப் பெரிய அளவில் பொதுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதுதான், வேலையில்லாத் திண்டாட்டத்தை தீர்க்க உதவும்; இதன்மூலம், சமூகத்திற்கு முக்கியமான பகுதிகளான கல்வி, முதியோரை பாதுகாத்தல், பண்பாட்டு வளர்ச்சி, அடிப்படைக் கட்டுமானத்தின் வளர்ச்சி- குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில் செயல்படுத்தப்பட மில்லியன் கணக்கில் வேலைகள் தோற்றுவிக்கப்படும். ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசாங்கம் ஓய்வூதியத்திட்டம் கொடுத்து வயதான காலத்தில் கவலையற்ற வாழ்விற்கு உறுதி அளிக்கவேண்டும், மற்றும் விரிவான சுகாதாரப் பாதுகாப்பு, மற்றும் பல்கலைக்கழகம் உட்பட இலவசக்கல்வி கொடுக்கப்படவேண்டும். வழக்கமான வாதத்தின்படி, பொதுக் கருவூலம் காலியாக உள்ளது, இத்தகைய திட்டங்களுக்கு பணம் இல்லை என்பதாகும். உண்மையில், வழிவகைகள் உள்ளன; அவை மிகவும் நியாயம் அற்ற முறையில் பங்கிட்டுக் கொடுக்கப்படுகின்றன. ஒரு பரந்த சமூக வேலைத்திட்டம் என்பது அறிவார்ந்த ரீதியில் பொருளாதாரத்தை முதலாளிகளின் மிக சக்திவாய்ந்த குழுக்களின் இலாப நலன்களுக்கு என்றில்லாமல், பொது நலன்களுக்கு பயன்படும் முறையில் ஒழுங்கமைக்க வேண்டும் என்று கோருகிறது. பெருவணிக, பெருநிதி அமைப்புக்கள் கட்டாயம் தேசிய மயமாக்கப்பட்டு, ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படவேண்டும். தப்பிப் பிழைப்பதற்குப் போராடும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள், எளிய கடன்வசதி பெற உறுதியளிக்கப்பட்டு, அவை தங்களுடைய தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வகை செய்யப்படவேண்டும். சமூக தேவைகளுக்கு நிதியூட்டுவதற்காக உயர்ந்த வருமானங்கள், மூலதனம் மற்றும் சொத்து இவற்றிலிருந்து வருமானம் இவை அதிக அளவு வரிவிதிப்பின் கீழ் கொண்டுவரப்படவேண்டும். * புலம்பெயர்ந்தோர் உரிமைகளுக்காவும் ஜனநாயகத்திற்காகவும் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு மற்றும் அனைவருக்கும் அரசியல் சமத்துவம் என்பது ஒரு சோசலிச ஐரோப்பாவிற்கான போராட்டத்தின் மையக் கூறுபாடு ஆகும். "பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்" என்ற பெயரில், ஜனநாயக உரிமைகளின் மீது வைக்கப்படும் கட்டுப்பாடுகள் நிராகரிக்கப்படவேண்டும்; பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைகளின் எங்கும் வலிமை என்ற நிலை பின்தள்ளப்படவேண்டும். ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம், தாக்குதல்களை விரட்டுவதோடு மட்டும் நின்றுவிடாது. சமூகச் செல்வம் ஒரு சிலரிடம் குவிந்து, பெரும்பான்மையான மக்கள், தங்கள் வேலைகள் பற்றி எதுவும் செய்திடமுடியாத நிலையும், செய்தி ஊடகச் செயல்பாடுகள், பத்திரிகைகள் ஆகியவை பெருவணிகத்தின் ஏகபோக உரிமைக்கு உட்பட்டிருக்கும் நிலையும், பண்பாடு, கல்வி ஆகியவை மிகச்சிறிய செல்வந்தத் தட்டின் சலுகையாக இருக்கும் வரை, உண்மையான ஜனநாயகம் பற்றிய பேச்சுக்கள் அர்த்தமற்றவை ஆகும். பண்பாடு, கலைப் பயிற்சிகளுக்காக கொடுக்கப்படும் தொகைகளின் உதவித் தொகையில் வெட்டு என்பது சமூகத்திற்கு பெரிதும் அழிவைத்தான் தரும். இராணுவவாதம், மிருகத்தனமாக நடந்துகொள்ளுதல், தற்பெருமை இவற்றைறைப் பெருமைப்படுத்துதலுக்கும் கடந்த கால உயர் பண்பாட்டுக் கூறுபாடுகளை நிராகரித்தலுக்கும் மறுக்க முடியாத தொடர்பு உண்டு. ஐரோப்பிய தொழிலாள வர்க்கம், கண்டத்தில் இருக்கும் மில்லியன் கணக்கான அகதிகள், புலம்பெயர்ந்தோர் இவர்களுக்கான பொறுப்புக்களையும் எடுத்துக்கொள்ளாவிடின், தங்களுடைய ஜனநாயக உரிமைகளையும் காப்பாற்றிக்கொள்ள முடியாது. புலம்பெயர்ந்தோரை வேட்டையாடி விரட்டும் முயற்சியின் பின்னால், தொழிலாள வர்க்கத்தை இனக்குழு, இன, மதப் பிரிவுகளின் அடிப்படையில் பிளவுபடுத்தும் முயற்சி இருக்கிறது, இதன் மூலம் வர்க்கம் மொத்தமாகவும் நசுக்குவதற்கு முயற்சி இருக்கிறது. அகதிகளும் புலம்பெயர்ந்தோரும், தொழிலாள வர்க்கத்தின் கணிசமான பங்கைப் பிரதிநிதத்துவம் செய்கின்றனர் மற்றும் அவர்கள் வரவிருக்கும் போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றுவர். * இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் முன்வைக்கப்பட்டிருக்கும் ஆபத்திற்கு எதிராக உழைக்கும் மக்கள் தங்களுடைய சுதந்திரமான விடையைக் காணவேண்டும். வாஷிங்டனுடன், சமீபத்தில் ஐரோப்பிய அரசாங்கங்கள் காட்டும் சமரசப் பேச்சுக்களுக்கு தங்களை அனுமதித்து ஏமாந்துவிடக்கூடாது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பு, மனிதகுலம் முழுவதையும் பெரும் அழிவில் ஆழ்த்திவிட அச்சுறுத்துகின்றது. சமாதானத்திற்கு அது ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாகத்தான் இருக்கிறது. NATO உடனடியாகக் கலைக்கப்பட்டு, அனைத்து அமெரிக்க தளங்களும் ஐரோப்பிய பகுதியிலிருந்து மூடப்படவேண்டும் என்ற கருத்திற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். வாஷிங்டனுடன் ஐரோப்பிய அரசாங்கங்கள் சமாதானம் தேவை என்று முயலும்பொழுது, அவை தவிர்க்கமுடியாமல் தங்களுடைய ஏகாதிபத்திய செயல்திட்டங்களையும் தீவிரமாய் பின்பற்றுகின்றன. இந்த நோக்கத்துடன், அவை ஐரோப்பிய தாக்குதல் படை ஒன்றை அமைத்து வருவதோடு, தனியான ஐரோப்பிய ஆயுதத் தொழிற்சாலையையும் ஆரம்பிக்க இருக்கின்றது. இத்தகைய அபிவிருந்திகளை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம், பால்கன், ஆப்கானிஸ்தான், ஆபிரிக்கா ஆகியவற்றிலிருந்து ஐரோப்பிய படைகளை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று கோருகிறாம். ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுககளுக்கான போராட்டம், ஏகாதிபத்தியம், போர் இவற்றுக்கு எதிர்ப்பு ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்தவையாக உள்ளன, மற்றும் அவை தொழிலாள வர்க்கத்தின் பொறுப்பாகத்தான் உள்ளன. உலகம் முழுவதும் ஏகாதிபத்தியத்தினாலும் அடக்கு முறைகளினாலும் நசுக்கப்பட்டுள்ள மக்களுக்கு அது ஆதரவு கொடுத்து, இஸ்லாமியம் போன்ற பின்னோக்கித் திருப்பும் கருத்தியல்களின் செல்வாக்கை குறைக்கவும் உதவும். குறிப்பாக, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை ஈர்க்கும் ஒரு துருவமுனையாக இருக்கும், மற்றும் அவர்கள், அமெரிக்க அரசியலில் இரும்புத் தளை போல் உள்ள இருகட்சி முறையைக் கடந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர்களை ஒரு சுதந்திரமான சக்தியாக வளர்ப்பதற்கும் உதவும். 5. பழைய தொழிலாளர்கள் அமைப்புக்களின் திவாலான தன்மை முதலாளித்துவத்தின் சர்வதேச நெருக்கடிக்கு, முதலாளித்துவ வர்க்கத்தின் முகாமிற்குள் முற்றிலும் செல்வதன் மூலம் சமூக ஜனநாயகமும் சீர்திருத்தவாத தொழிற்சங்க அதிகாரத்துவமும் விடையிறுக்கின்றன. போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், சமூக ஜனநாயகம் தன்னுடைய பணியை, தொழிலாளர்களின் முதலாளித்துவ எதிர்ப்பு மனோநிலையை மாற்றி அவர்களை சீர்திருத்தங்கள் மூலம் சந்தைக்கு சமரசப்படுத்துவதுதான் என்பதில் இருந்து, இப்பொழுது அவை, பழைய சீர்திருத்தங்களை கைவிட்டாவது முதலாளித்துவத்தை காப்பாற்றவேண்டும் என்று செயல்படுகின்றன. 1998ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் 15 நாடுகளில் 11ல், சமூக ஜனநாயக அரசாங்கங்கள் ஆட்சிசெய்து வந்தன. அவர்களுடைய தேர்தல் வெற்றிகள் பெரும்பாலும் அவர்களுக்கு முன்பிருந்த பழமைவாத அரசாங்கங்கள் பற்றிய ஏமாற்றங்களின் விளைவாகவே இருக்கும். ஆனால் இந்த சமூக ஜனநாயக அரசாங்கங்கள் முந்தையவற்றையும் விட மாறுபட்ட கொள்கை கொண்டன என்றால், அவை இன்னும் கூடுதலான வலதுசாரிக் கொள்ளகைகளைத்தான் கொண்டிருந்தன. டோனி பிளேயருடைய "புதிய லேபர்", மார்க்கரெட் தாட்சருடைய திட்டங்களை ஏற்றது. "செயல் பட்டியல் 2010" என்ற பெயரில் ஹெகார்ட் ஷ்ரோடர், 19ம் நூற்றாண்டில் அதிபர் பிஸ்மார்க் ஆரம்பித்த சமூக பாதுகாப்பு வடிவங்களில் இருந்து மிகப் பரந்த தாக்குதல்களை ஜேர்மனிய நலம்சார் அரசின் மீது கொண்டுள்ளார். சமூக ஜனநாயகக் கட்சியின் இந்த முயற்சிக்கு பசுமைக்கட்சி தன் ஆதரவைக் கொடுத்துள்ளது. பசுமைக் கட்சியினர் வலதுபுறம் பாய்ந்து சென்றுள்ளது சமூக ஜனநாயகக் கட்சி சென்றதை விட வியத்தகு முறையில் உள்ளது. 1968 எதிர்ப்பு இயக்கத்தில் எஞ்சிய பகுதியாக வெளிப்பட்டு, தொடக்கத்தில் இக்கட்சியினர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அடிப்படை மட்டத்திலும் ஜனநாயகம், சமாதானம், சற்று வரம்புள்ள சமூக நீதி ஆகியவற்றை பாதுகாக்க அழைப்பு விடுத்தனர். ஆயினும் அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுடன் எந்தவிதமமாகவும் இனம்காட்டிக் கொள்ளுதலை தவிர்த்தனர். இன்று, அவர்களுடைய நிலை, மத்தியதர வர்க்கத்தின் குறுகிய தட்டு சமூக ஏணியில் மேலே ஏறுவதற்கு ஒப்பாகத்தான் உள்ளது. சமூக முன்னேற்றங்கள் வேண்டும் என்று கீழ்மட்டத்திலிருந்து வரும் குரல்களை அவர்கள் விரோத மனப்பான்மையுடன் காண்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில், நலம்சார் அரசால் "சீர்திருத்தம்" என்பது விரைவில் அடையப்படமுடியாதது ஆகும். முந்தைய ஆண்டுகளின் சமாதானப் பிரியர்களான இவர்கள் இப்பொழுது திறமையுடன்கூடிய இராணுவத்தையும், ஜேர்மன் படைகள் உலகெங்கிலும் குறுக்கீடு செய்யவேண்டும் என்றும் விரும்புகின்றனர். சமூக ஜனநாயகம் மற்றும் பசுமைக் கட்சியினரின் கொள்கைகள், அரசாங்கத்தில் இருக்கும்பொழுது வலதுசாரிகள் அதிகாரத்திற்கு மீண்டும் வருவதற்கு வகை செய்தன. இத்தாலியில், சில்வியோ பெர்லுஸ்கோனி 1994 ல் ஓய்வூதியங்களில் வெட்டுக் கொண்டுவந்ததற்கு எதிராக நிகழ்ந்த மக்கள் ஆர்ப்பாட்டங்களின் விளைவாக பதவியை விட்டு விலகுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். இப்பொழுது அவர் மீண்டும் ஐந்து ஆண்டுகால மைய-இடது ஆட்சியிடம் மக்கள் கொண்ட ஏமாற்றத்தின் விளைவாக பதவிக்கு வந்துவிட்டார். பிரான்சில் லியோனல் ஜோஸ்பன் இதே பணியைத்தான் ஜாக் சிராக்கிற்குச் செய்தார். தீவிர வலதுசாரிச் சக்திகள், பல ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்களின் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டுள்ளனர் -- இத்தாலியின் வடக்குக் கூட்டில் புதிய-பாசிஸ்டுகள், ஆஸ்திரியாவில் ஹைடருடைய சுதந்திரக் கட்சி, டென்மார்க்கில் டேனிஷ் மக்கள் கட்சி ஆகியவை மக்கள்தள ஆதரவின்றி, ஆளும் செல்வந்தத் தட்டின் உதவியால் ஊடகங்கள் மூலம் பெயர்பெற்று வந்தன. இந்தவிதத்தில், பில்லியனரும், செய்தி ஊடகப் பேரரசரும், சட்டவிரோதக் குழுக்களுடன் தொடர்பு உடையவருமான பெர்லுஸ்கோனி பதவிக்கு வந்தது, அத்தகைய விதிகளை ஒட்டியே ஒழிய, விதிவிலக்காக அல்ல. இந்த வலதுசாரிக் கூறுகள் இடதிலிருந்து அறைகூவலை சந்திக்காமல் இருப்பதால் பதவியில் ஒட்டிக்கொண்டு உள்ளனர். இத்தகைய அனுபவங்களைக் கண்டும், பழைய, திவாலாகிவிட்ட தொழிற்சங்க அமைப்புக்களை "குறைந்த தீமைக்காரர்கள்" என்று எவரேனும் கருதுவர் ஆயின், அவை தொழிலாளர்கள் நலனுக்கு உகந்ததாகச் செயல்படும் என்றோ, அவற்றினிடமிருந்து தெருக்களில் இருந்து வரும் அழுத்தத்தினால் முன்னேற்றகரமான அடுக்குகள் வெளிவருமென்று எவரேனும் நினைத்தால், அவர்கள் உழைக்கும் வர்க்கத்திற்கு பெருங்கெடுதலைத்தான் செய்கின்றனர். கடந்த ஆண்டுகளில் ஏராளமான அனுபவங்கள் அத்தகைய நினைப்புக்கள் ஏமாற்றத்தைத்தான் கொடுக்கும் என்று காட்டியுள்ளதோடு, அவை தொழிலாளர்களை முதலாளித்துவ ஒழுங்குகளில் பிணைத்து வைக்கவே பயன்படும் என்பது அறியப்படவேண்டும். இந்த "இடது கன்னை" என்று அழைக்கப்படுபவற்றை உள்ளிருந்தோ, சற்று புறத்தே இருந்தோ கூட்ட வேண்டும் என்பது நம் பணி அல்ல; மாறாக தொழிலாள வர்க்கத்திற்கு, அதுவும் நெடுங்காலமாக அரசியலில் அதிகாரமற்றுக் கிடப்பதற்கு, ஒரு சுதந்திரமான பங்கை, அரசியல் குரலை அளிக்க வேண்டும். இதற்கு சுதந்திரமான வகையில் தொழிலாள வர்க்கம் அரசியல் நிகழ்வுகளில் தலையிடக்கூடியதாகச் செய்யும் ஒரு புதிய கட்சியைக் கட்டுவதற்காக அழைக்கின்றது. 6. சோசலிச சமத்துவக் கட்சியும் தீவிர "இடதும்" இத்தகைய நோக்குநிலை PSG-ஐ மற்றய இடதுசாரிக் கட்சிகளில் இருந்து பிரித்துக் காட்டுகின்றது. அவற்றில் பல, தங்களை சோசலிஸ்ட் என்று கூறிக்கொண்டாலும், தொழிற்சங்க மற்றும் சீர்திருத்தவாதக் கட்சிகளின் அதிகாரத்துவங்களுக்கு அழுத்தம் கொடுப்பதுதான் தங்கள் வேலை என அவற்றின் இலக்குகளை மட்டுப்படுத்திக் கொள்கின்றன. இத்தகைய அமைப்புக்களிலிருந்து முற்றிலும் முறித்துக் கொண்டு வருவது, ஒரு பரந்த சோசலிச இயக்கத்தின் வளர்ச்சிக்கு முன்தேவை என்று PSG கருதுகிறது. தீவிர "இடது" அமைப்புக்கள், தலைமையிடத்தின் கொள்கைகளை பகுத்து ஆராயாமல் தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு துதி பாடி, புகழ் சேர்க்க விரும்புகின்றன. 1960 களிலும், 1970 களிலும் செயல்படுத்தப்பட்ட சீர்திருத்த பாணியிலான கொள்கைகளை கொண்டுவரமுடியும் என்ற பிரமையைத்தான் ஊக்குவிக்கின்றன; எந்த சமூக ஜனநாயக அரசியல்வாதியும் சிறிதே மாறுபட்ட கருத்தை கூறினாலும் அவர்கள் களிப்படைகிறார்கள். இத்தகைய குழு அமைப்புக்கள், புதிய சோசலிச முன்னோக்கிற்கு பெரும் தடைகள் ஆகும்; சமீபத்திய தொடர் அனுபவங்கள் பல இதை உறுதி செய்துள்ளன. ஐந்து ஆண்டுகளக, Rifondazione Communista (Refounfded Communists, PRC), இத்தாலியில் தொழிலாள வர்க்கத்தின் போர்க்குண மனோபாவத்திற்கும் மைய - இடது அரசாங்கத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை போக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பாராளுமன்றத்திற்கு வெளியே ஆதரவு தேடியும், அரசாங்கத்தை பேச்சளவில் கடுமையாக குறைகூறினாலும், PRC கட்சியானது, கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுப்பதற்கு, அரசாங்கத்திற்குப் போதுமான பெரும்பான்மை கொடுப்பதற்கும் மற்றும் இதன் விளைவாக மாஸ்ச்ட்ரிச் நிபந்தனைகளுக்குத் தேவையான, ஒற்றை ஐரோப்பிய நாணய முறையில் இணைந்துகொள்ளுவதற்குத் தேவையான, அளவுகோல்களை இத்தாலி பெறுவதற்கும் உறுதி அளிக்கிறது. ஆயினும், இதுபல அமைப்புக்களையும் ஐரோப்பிய இடதுகளுக்கு ஒரு முன்மாதிரியாக காட்டிக்கொள்ளும் PRC -ன் அணிகளில் இணைந்து கொள்வதைத் தடுக்க முடியவில்லை; இதற்கிடையில், PRC அடுத்த பொதுத் தேர்தலில் மைய-இடது கூட்டணியில் அது சேரும் என்று தெளிவாக்கியிருப்பதுடன், வெற்றிபெற்றால் மந்திரிப் பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் எனக் கூறியுள்ளது. ஜேர்மனியில் ஜனநாயக சோசலிச கட்சி (Party of Democratic Socialism -PDS) இடம் பல இடதுசாரி அமைப்புகளும் இதே முறையைத்தான் கொண்டுள்ளன. ஒருகாலத்தில் கிழக்கு ஜேர்மனியை ஆண்டிருந்த இக்கட்சியின் ஸ்ராலினிச வேர்கள் ஒருபுறம் இருக்க, "முதலாளித்துவத்தின் கீழ் அடக்கப்படுபவர்கள், சுரண்டப்படுபவர்கள், சலுகை குறைவாக இருப்பவர்கள் ஆகியோருக்கு ஒரு கொள்கையை இக்கட்சி வளர்த்துள்ளது" என அது கூறிக்கொள்ளுகிறது. PDS இக்கருத்தை மாற்ற பலவற்றையும் செய்து வந்துள்ளது, SPD உடன் இணைந்து பேர்லின் நகராட்சியில் கடுமையான வெட்டுத் திட்டங்களை திணித்துள்ளது. பிரிட்டனில், பல இடதுசாரி அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து ஒரு புதிய குழுவை "Respect" என்ற பெயரில், நீண்டகால தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் கலோவே (George Galloway) ஐ சுற்றி அமைத்துள்ளன. அரபு ஆட்சிகளுடனான தொடர்பினால், இவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஈராக்கிற்கு எதிரான போரை இவர் எதிர்த்தார். தன்னுடைய சொந்த அரசியலை "சோசலிஸ்ட்" என்றுகூட அழைத்தலை இப்பொழுது தனிப்பட்ட முறையில் எதிர்க்கும், இழிவான சந்தர்ப்பவாதியாவார் பிரான்சில் தங்களை இரு அமைப்புக்கள் தவறாக ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எனக் கூறிக் கொள்கின்றன; Lutte Ouvriere (LO), Ligue Communiste Revolutionnaire (LCR) என்பவையே அவை; இந்த நிலைப்பாட்டைத்தான் அக்கட்சிகளும் கொண்டுள்ளன. பிரெஞ்சு சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின்பால் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டபின்னர், அவை சமீபத்திய தேர்தல்களில் கணிசமான ஆதரவை வென்றுள்ளன. இவை இணைந்து 10 சதவீத வாக்குகளை 2002 ஜனாதிபதி தேர்தல்களின் முதல் சுற்றில் பெற்றன; ஆனால் ஒரு சுதந்திரமான முன்னோக்கு வேண்டும் என்ற பொறுப்பை எடுத்துக் கொள்ள அவை தயாராக இல்லை. இரண்டாம் சுற்றில், மில்லியன் கணக்கான மக்கள் தெருவிற்கு வந்து புதிய பாசிஸ்ட் லு பென்னுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தியபொழுது, LCR, கோலிச சிராக்கிற்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்தபோது, LO முற்றிலும் நடுநிலையை கொண்டது. இரண்டு அமைப்புக்களுமே, தேர்தல் புறக்கணிப்பு வேண்டும் என்ற அழைப்பையும் நிராகரித்தன; இவ்வாறு செய்திருந்தால் தேர்தலுக்கு சட்டநெறி இல்லாமல் போய், தொழிலாள வர்க்கத்தை வருங்காலப் போராட்டங்களுக்கு தயாராக்கி இருக்கும். PSG நீண்டகால மார்க்சிச மரபை தன் அடிப்படையாகக் கொண்டுள்ளது; இதன் மையத்தானத்தில் அரசியல், பண்பாட்டு ரீதியாக தொழிலாள வர்க்கத்தின் விடுதலை தான் உள்ளது. மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ரோசா லுக்சம்பேர்க், முதல் உலகப் போரின் தொடக்கத்தில் சமூக ஜனநாயகம் இழிந்ததையும் அது முதலாளித்துவமுறைக்கு நிபந்தனையற்ற சரண் அடைந்ததையும் எதிர்த்திருந்த கார்ல் லீப்னெக்ட், மற்றும் இடது எதிர்ப்பு, ஸ்ராலினின் குற்றங்களை எதிர்த்து, 1938ல் நான்காம் அகிலத்தை நிறுவியதுடன் மீண்டும் சர்வதேச தொழிலாளர் இயக்கத்திற்கு புத்துயிர் அளித்த இடது எதிர்ப்பிற்கு தலைமை வகித்த லியோன் ட்ரொட்ஸ்கி ஆகியோருடைய உணர்வுகளில் தலைமுறைகளை பயிற்றுவித்த சமூக ஜனநாயகத்தின் ஆரம்ப வருடங்களை இம்மரபு உள்ளடக்கியிருக்கிறது. சமூக ஜனநாயகமும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொழிலாளர் இயக்கத்தில் தங்கள் மேலாதிக்கத்தை கொண்டிருந்தவரை, மார்க்சிச மரபைத் தனிமைப்படுத்த முடிந்தது. ஆயினும், இந்த அமைப்புக்கள் அரசியல் அளவில் திவாலாகிவிட்ட தன்மை, ஒரு புதிய வரலாற்றுச் சகாப்தத்தை திறந்துவிட்டுள்ளது; இதில் நான்காம் அகிலம் பெருகிவரும் ஆதரவாளர்களை காணும். அது உலக சோசலிச வலைத் தளத்துடன், அதற்கு ஒரு பரந்த வாசகர் வட்டத்தை உலகெங்கிலும் உருவாக்கியுள்ள ஒரு கருவியைக் கொண்டுள்ளது என்பதோடு, மார்க்சிசத்தின் உண்மையான குரல் என்று அதிகரித்த அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. |