: மத்திய
கிழக்கு
US-sponsored IAEA resolution sets stage for confrontation with Iran
அமெரிக்க ஆதரவு- சர்வதேச அணு சக்தி ஏஜன்சியின் தீர்மானம் ஈரானுடன் மோதலுக்கு
களம் அமைக்கின்றது
By Peter Symonds
16 September 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
புஷ் நிர்வாகத்தின் வலுவான நிர்பந்தத்திற்கு தலை வணங்கி, 35 உறுப்பினர்களைக்
கொண்ட சர்வதேச அணு சக்தி ஏஜன்சியின் (International
Atomic Energy Agency -IAEA) நிர்வாகக் குழு வெள்ளிக் கிழமையன்று ஈரானுக்கு அதன் அணு
சக்தித் திட்டம் தொடர்பாக IAEAயின் அனைத்து
கோரிக்கைகளுடனும் உடன்பட வேண்டுமென்றும் அக்டோபர் 31-க்குள் அதனை
நிறைவேற்றியாக வேண்டும் என்றும் காலக்கெடு விதித்து இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தீர்மானம் ஐ.நா.
பாதுகாப்பு சபை தலையிடுவதற்கு மற்றும் IAEA விதித்துள்ள
கோரிக்கைகளுக்கு ஈரான் ஒத்துழைக்கத் தவறுமானால் அதன் மீது ஐ.நா. பொருளாதார தடைகளை விதிப்பதற்கு
வழிவகை செய்வதோடு, ஈரானுடன் மோதல் போக்கு மிக வேகமாக வளர்ந்து கொண்டு வருவதற்கு வழிவகுத்திருக்கிறது.
ஈராக்கில் சதாம் ஹுசேனின் முன்னாள் ஆட்சிக்கு விதிக்கப்பட்டது போன்ற, நிரூபிக்க
முடியாதவற்றை நிரூபிக்கக் கோரும் முடிவில்லா தீர்மானத்தை சர்வதேச அணு சக்தி அமைப்பு ஈரானுக்கு முன் வைத்திருக்கிறது:
ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் எதுவும் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான பொருட்களுக்குப் பயன்படுத்தப்படவில்லை
என்பதை ஈரானே நிரூபிக்கவேண்டும் என்பதுதான் அது. ஈரான் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே, தன்னுடைய
அணுசக்தி வசதிகள் மின்சார உற்பத்தி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை
விளக்க ஈரானால் எடுக்கப்பட்டு வரும் ஒவ்வொரு அடியையும் பின் தொடர்ந்து, புதிய குற்றச்சாட்டுக்கள் மற்றும் துருவித்துருவி
ஆராய்வதற்கான புதிய சோதனைகளுக்கான கோரிக்கைகள் வந்துள்ளன.
சமீபத்திய குற்ச்சாட்டு ஈரானின் நாட்டன்ஸ்
(Natanz) பகுதியில் முற்றுப்பெறாத யூரேனிய செறிவூட்ட
தொழிற்கூடம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாதிரிகளில் பெருமளவில் செறிவூட்டப்பட்ட நுட்பமான கதிர்வீச்சு
கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பானதாகும். ஏற்கனவே யூரேனிய கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டிருந்த இயந்திரச் சாதனங்கள்
இறக்குமதி செய்யப்பட்டதிலிருந்து இந்த நுட்பமான படிவங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று ஈரானிய அதிகாரிகள் விளக்கம்
அளித்தனர். யூரேனியத்தை செறிவூட்டும் எல்லா நடவடிக்கைகளையும் ஈரான் நிறுத்திவைத்துவிட வேண்டும், யூரேனிய செறிவூட்டத்திற்காக
இறக்குமதி செய்யப்பட்ட எல்லா சாதனங்களையும் பகுதிப் பொருட்களையும் பற்றி முழுமையான அறிவிப்பை அறிக்கையாய்
தரவேண்டும் மற்றும் IAEA ஆய்வாளர்களுக்கு ஈரான் தனது
அணுசக்தி வசதிகள் அனைத்தையும் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் சோதனையிடுவதற்கு அனுமதி வழங்கவேண்டும்
என்றும் IAEA தீர்மானம் கேட்டுக்க்கொள்கின்றது.
அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின்கீழ்
IAEA சோதனைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு மேல்
மிக விரிவான சோதனைகளுக்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தம் ஒன்றில் "உடனடியாகவும், எந்த நிபந்தனையும்
இல்லாமல்" ஈரான் கையெழுத்திடவேண்டும் என்றும் IAEA
வலியுறுத்தியுள்ளது. சிறப்பான கோரிக்கைகளைப் போல, அந்நாட்டின் "அணுசக்தி தொடர்பான நடவடிக்கைகள்
மற்றும் சாதனங்கள் தொடர்பாக நிலுவையிலுள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு" தேவையானதாகக் கருதப்படும்
"ஏனைய அத்தகைய நடவடிக்கைகளுடன்" ஈரான் உடன்பட்டுப்போவதற்கு அழைக்கும் முற்றிலும் கட்டுப்படுத்தும் அனைத்து
விதிகளையும் கூட அத்தீர்மானம் உள்ளடக்கி இருக்கிறது. ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் பற்றி ஒரு
"திட்டவட்டமான முடிவுகளுக்கு வர" IAEA -க்கு
இயலக் கூடிய வகையில் நவம்பரில் ஈரான் அறிக்கை ஒன்றைத் தரவேண்டும் என்று கட்டளையிட்டு முடித்திருக்கின்றது.
IAEA ன் தீர்மானத்தை வாஷிங்டன் மிகவும்
சிறப்பாக வரவேற்றிருப்பதில் வியப்பிற்கு இடமில்லை. மற்றும் அது அந்த தீர்மானத்தில் கண்டுள்ள நிபந்தனைகளை
நிறைவேற்ற ஈரான் தவறுமானால் அது ஈரான் குற்றத்தை ஒப்புக்கொள்வதாக ஆகும் என்று எச்சரித்துள்ளது. ``IAEA
ஆய்வாளர்கள் சோதனைகளை சீர்குலைக்க அவர்கள் விரும்பினால், அது
IAEA நிர்வாகக் குழு
மற்றும் சர்வதேச சமுதாயத்தை ஈரான் சமாதான திட்டங்களுக்காக அணு சக்தியைப் பயன்படுத்தவில்லையென்று முடிவு
செய்யவேண்டிய நிலைக்கு இட்டுச்செல்லும்" என்று IAEAல்
இடம்பெற்றுள்ள அமெரிக்க தூதர் கென்னத் பிரில் அறிவித்தார்.
பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் வாஷிங்டனின் மனநிறைவை மிக
அப்பட்டமாக ராய்டர் நிருபரிடம் தெரிவித்தார். ``இந்த தீர்மானம் உண்மையிலேயே ஈரானின் கழுத்தைச் சுற்றி
தூக்குக் கயிற்றை இறுக்குவதாகும்." ஈரான் ஒத்துழைக்க தவறுமானால் "சமாதான நோக்கங்களுக்காக அணுசக்தி
தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளுகின்ற உரிமையை ஈரான் இழந்துவிடும்`` என்று அவர் எச்சரித்திருக்கிறார்.
குறிப்பாக தற்போது ஈரானின் துறைமுகமான Bushehr
கட்டப்பட்டுவரும் அணு மின்சார நிலையத்திற்கு ரஷ்ய எரிபொருளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும்.
இந்த விமர்சனங்கள் புஷ் நிர்வாகத்தின் நோக்கம் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை
அப்படியே ஈரான் நிறைவேற்ற வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவது அல்ல என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
வாஷிங்டனைப் பொறுத்தவரை ஈரானின் அணுசக்தி திட்டம் முழுவதுமே சட்ட விரோதமானது. அமெரிக்காவின் நண்பரான
ஈரான் மன்னர் ஷா 1979-ம் ஆண்டு பதவியிலிருந்து விரட்டப்பட்டது முதல் தொடர்ந்து வந்த அமெரிக்க நிர்வாகங்கள்
Bushehr
பகுதியில் அணு மின்சாரத் திட்டத்தை நிறைவேற்றி பூர்த்தி செய்ய முடியாதபடி தடுப்பதில் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு
வருகின்றன. இது டெஹ்ரான் அரசாங்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் தொடர்ந்து விரிவான பொருளாதாரத் தடை
நடவடிக்கைகளை எடுத்து வருகின்றதன் ஒரு பகுதியாகும்.
தற்போது ஜெனீவாவில் நடந்து முடிந்திருக்கும்
IAEA நிர்வாகக் குழு
கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்ற நேரத்திலே கூட ஈரான் நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது
என்று உடனடியாக நிர்வாகக் குழு தீர்மானம் நிறைவேற்ற புஷ் நிர்வாகம் வலியுறுத்தி வந்தது. அத்தகைய பிரகடனத்திற்கு
பிரான்சும், ஜேர்மனியும் எதிர்ப்பு தெரிவித்த அதேவேளை, காலக்கெடு நிர்ணயிக்கும் அமெரிக்காவின் புதிய
ஆலோசனையுடன் ஒத்துப்போய், வாஷிங்டனின் ஆத்திரமூட்டல் நகர்வை சக்தி மிக்க வகையில் சட்டபூர்வமாக்கின.
நவம்பர் மாதம் வரை முறையான IAEA
ன் முடிவு தாமப்படுத்தப் பட்டிருக்கின்றது. இந்த தீர்மானத்தை முதலில் தாக்கல்
செய்த ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் கனடாவுடனும்,
IAEA நிர்வாகக் குழுவின் இதர உறுப்பினர்களை தீர்மானத்தை ஆதரிக்குமாறு
மிரட்டிய அமெரிக்கா மற்றும், பிரிட்டனுடனும் பிரான்சும் ஜேர்மனியும் சேர்ந்து கொண்டன.
புஷ் நிர்வாகம் ரஷ்யா மீது தீவிரமான அழுத்தத்தை கொடுத்து வருகின்றது, குறிப்பாக
கடுமையான IAEA
தீர்மானத்திற்கு ஆதரவு தருவதுடன் ஈரானின் அணு திட்டங்கள் எதிலும் ஒத்துழைப்பை
நிறுத்திவிடுமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றது. இன்று வரை மொஸ்கோ வாஷிங்டனின் நிர்பந்தங்களை எதிர்த்தே
வருகின்றது. அமெரிக்காவின் நிர்பந்தங்களுக்கு ரஷ்யா பணியுமானால் அது ரஷ்யாவிற்கு மகத்தான இழப்பாகிவிடும்.
Bushehr
பகுதி அணு மின்சாரத் திட்டத்தில் 300க்கு மேற்பட்ட ரஷ்ய நிறுவனங்கள் சம்மந்தப்பட்டிருக்கின்றன. இத்திட்டத்தின்
மதிப்பீட்டுச் செலவு 800 மில்லியன் டாலர்களாகும். இந்த திட்டத்தை திடீரென்று ரஷ்யா கைவிடுமானால் ஈரானுடனான
அதன் உறவில் விரிசல் ஏற்படும். மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் மொஸ்கோவின் மூலோபாயத்தின் முக்கிய
அம்சமாக ஈரான் உள்ளது. வாஷிங்டனை சமாதானப்படுத்துகின்ற முறையில் ரஷ்யா
IAEA தீர்மானத்தை
ஆதரித்தது, அதே நேரத்தில் ஓரளவிற்கு கால அவகாசமும் பெற்றிருக்கின்றது.
ஈரானின் ஆவேசம்
IAEA தீர்மானம் ஈரானில் கோபாவேசத்தை
கிளறி விட்டிருக்கிறது. IAEA
கூட்டத்தில் கலந்து கொண்ட ஈரான் பிரதிநிதிகள் தங்களது கண்டனத்தை தெரிவிப்பதற்காக கூட்டத்திலிருந்து வெளிநடப்பு
செய்தனர். ஈரானின் தலைமை பிரதிநிதியான அலி அக்பர் சலேஹி தீர்மானத்தை கண்டித்தார். மத்தியகிழக்கில் அமெரிக்காவின்
விரிவான அடிப்படையிலான திட்டத்தின் ஒரு பகுதிதான் இத் தீர்மானம் என்று அவர் குறிப்பிட்டார். வாஷிங்டனின் "பழிவாங்கத்
துடிக்கும் வேட்கையை" மோதல் மற்றும் போரினால் தான் திருப்திப்படுத்த முடியும், "மத்திய கிழக்கு மண்டலம் முழுவதிலும்
மறு வடிவமைப்பு செய்யவும் மீண்டும் அப்பகுதியின் நடவடிக்கைகளை தன் போக்கில் கொண்டு செல்லவும் அவர்கள் திட்டமிட்டு
செயல்பட்டு வருவதால், மற்றொரு நாட்டின் எல்லையைப் பிடிப்பதற்காக படையெடுக்கும் கருத்துடன் (புஷ் நிர்வாகம்
செயல்படுகிறது) என்பதில் எந்த இரகசியமும் இல்லை" என்று சலேகி குறிப்பிட்டார்.
IAEAயுடன் தனக்குள்ள
உறவை ஆழமாக மறு பரிசீலனை செய்வதற்கு ஈரான் நிர்பந்திக்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவதாக சலேகி எச்சரித்தார்.
வார இறுதியில் டெஹ்ரான் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கிக் கொண்டது. ஈரானின்
துணை ஜனாதிபதியும் ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவருமான
Gholamreza Aghazadeh,
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்ளும் எண்ணம் தனது நாட்டிற்கு இல்லையென்றும் அது "அணு
ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் முழுமையான உறுதிப்பாட்டுடன் இருந்தது" என்றும்
அவர் கருத்து தெரிவித்தார். IAEA
வுடன் கூடுதல் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்வது தொடர்பாக ஈரான் தொடர்ந்து
பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் ஆனால், அக்டோபர் 31 இறுதிக்கெடு நிர்ணயிக்கப் பட்டிருப்பதையும் தீர்மானத்தின்
"நச்சுத் தன்மை கொண்ட வாசகத்தை" யும் ஏற்றுக்கொள்வதில் ஈரானுக்கு கடுமையான பிரச்சனைகள் உள்ளன என்று
அவர் குறிப்பிட்டார்.
ஆனால்
IAEA தீர்மானம் ஈரானின்
ஆளும் வட்டாரங்களுக்குள் கடுமையான காரசாரமான வாக்குவாதங்களை கிளப்பி உள்ளது. இஸ்லாமிய ஆட்சியின் வலதுசாரி
பிரிவுகள் வடகொரியாவின் முன்மாதிரியை ஈரான் பின்பற்றவேண்டும் என்றும்,
NPT- யிலிருந்து முற்றிலுமாக வெளியேறவேண்டும் என்றும் வலியுறுத்தி
வருகின்றன. Hoseyn Sharia'atmadari
பத்திரிகையின் தலையங்கத்தில் IAEA-
வில் இந்த தீர்மானத்தை முன்மொழிந்த மூன்று நாடுகளின் தூதர்களையும் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று அந்த
தலையங்கம் கேட்டுக் கொள்கின்றது. அதிகாரிகள் அந்த மூன்று நாடுகளின் தூதர்களையும் வெளியேற்றா விட்டால் ஈரானின்
முஸ்லீம் மக்கள் டெஹ்ரானில் உள்ள அந்நாடுகளின் தூதரகங்களை மூடிவிடுவார்கள் என்று அந்த தலையங்கம் எச்சரிக்கின்றது.
அந்த தலையங்கம் கூறியதாவது: "IAEA-
ன் இயக்குநர்களின் நேற்றைய தீர்மானம், எமது தேசத்தின் அணுசக்தி நடவடிக்கைகள் மீதான அண்மைய வெறுப்பொலிகள்
ஈரானின் இஸ்லாமிய குடியரசை கவிழ்க்கவேண்டும் என்பதை நோக்கமாகக்
கொண்டு திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்ற உண்மையை சந்தேகமில்லாததாக்குகிறது,
NPTயை ஒரு நிர்பந்தம்
கொடுக்கும் கருவியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று (Jomhuri
Eslami) ஜாம் ஹுரி இஸ்லாமி என்ற இன்னொரு
கடுங்கோட்பாட்டு பத்திரிகை ஒரு வாதத்தை எடுத்து வைத்திருக்கின்றது: "இந்த பிரச்சனையில் வடகொரியா தேர்ந்தெடுத்ததுதான்
சரியான வழி என்று ஈரானும் ஒப்புக் கொள்ளவேண்டும். "நாட்டின் அணுசக்தி திட்டங்களை "வாஷிங்டன் விரும்பினாலும்,
விரும்பாவிட்டாலும், முழு வேகத்தோடு" அரசாங்கம் தொடர வேண்டும் என்று அந்தப் பத்திரிகை அரசாங்கத்தைக்
கேட்டுக் கொள்கின்றது.
பத்திரிகை, மிதவாத ஜனாதிபதி முஹம்மது கட்டாமியோடு தொடர்பு உள்ள
Yas No
கூட அந்த தீர்மானத்தை கண்டித்திருக்கிறது. அந்த தீர்மானம் "பாரபட்சமானது, வேறுபாடு காட்டுவது மற்றும் வழக்கத்திற்கு
மாறானது" மற்றும் ஈரான் மக்கள் இதை சகித்து கொள்ளமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கின்றது. அமெரிக்கா
ஈரானை அச்சுறுத்தி வருகிறது என்பதில் அந்த பத்திரிகை உட்பாடின்மையைத் தெரிவிக்காத அதேவேளை, சர்வதேச
அளவில் ஈரானுக்கு நண்பர்கள் உருவாவதற்கு தடையாகவும், ஈரானை தனிமைப்படுத்தும் வகையிலும், இஸ்லாமிய தீவிரவாதிகள்
செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளது.
இது போன்ற கடுமையான விமர்சனங்கள், இராணுவப் படையெடுப்பையும் ஆக்கிரமிப்பையும்
நியாயப்படுத்துவதற்கு வாஷிங்டனால் பயன்படுத்திக் கொள்ளப்பட்ட இல்லாத பேரழிவு ஆயுதங்கள் பற்றிய பொய்களைப்
பொழிந்த அண்டை நாடான ஈராக்கிற்கு நேர்ந்த அதே கதியை எண்ணி டெஹ்ரானும் நியாயபூர்வமாகக் கவலைப்படுவதை
எதிரொலிக்கிறது. எவ்வளவு விரைவாக முடியுமோ? அவ்வளவு விரைவாக ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதுதான்
அமெரிக்கா மேலும் ராஜதந்திர ரீதியாகவும் இராணுவ ஆத்திரமூட்டல் ரீதியாகவும் அச்சுறுத்துவதைத் தடுக்கும் வழியாக
அமையும் என்று ஈரான் நியாயமாக நினைக்க முடியும்.
2002ல் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி புஷ் ஈரானை ஈராக் வடகொரியாவுடன்
இணைத்து "தீய அச்சு'' என்று வர்ணித்தார். அவரது நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள இராணுவ பகுதியினர், "ஈரானில்
ஆட்சி மாற்றம்" அமெரிக்காவின் கொள்கையாக ஆவதற்கு வலியுறுத்தல் செய்து வருகிறார்கள். மத்திய கிழக்கிலும்,
மத்திய ஆசியாவிலும் உயிர்நாடியான பொருளாதார வளமான எண்ணெய் மண்டலங்களையும், மூலோபாய பகுதிகளை தனது
கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கான வாஷிங்டனின் தொலைநோக்கு குறிக்கோள்களை முன்னெடுப்பதற்கான ஒரு
சாக்குபோக்காகத்தான் அதன் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரான் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் நடைபெற்று வருகின்ற விவாதங்களின் தன்மையை வலதுசாரி
பத்திரிகையான ``வாஷிங்டன் டைம்ஸ்``,``ஈரான்:
சுருக்குக் கயிறு நெருக்க அரம்பித்திருக்கிறது`` என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் விவரித்திருக்கின்றது. "சர்வதேச
அளவில் ஈரானை ஒதுக்கிவைப்பதற்கு வகை செய்யும் நிகழ்ச்சிப்போக்கை இயக்கி வைக்கும்"
IAEA தீர்மானத்தை
அந்த தலையங்கம் வரவேற்றிருக்கின்றது. பக்கத்தில் இருந்த சதாம் ஹுசேன் சர்வாதிகாரம் சட்ட விரோதமான
ஆட்சி என்று புரிந்து கொண்டதைப்போல் டெஹ்ரானும் புரிந்துகொள்ளும்" என்று அந்த கட்டுரை குறிப்பிட்டிருக்கின்றது.
ஈரானின் அணு வசதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த முடிவு செய்யுமானால் 1981-ம் ஆண்டு ஒசிரிக்கில் ஈராக்கின்
அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது அது நடந்து கொண்டதைப்போல், வாஷிங்டன் அதைக்
கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்று ஆத்திரமூட்டும் வகையில் அந்த தலையங்கம் கூறிச்செல்கின்றது.
அடுத்த ஏழு வாரங்களில் விளைவுகள் எதுவாகயிருந்தாலும்,
IAEA விதித்துள்ள
இறுதிக்கெடுவை வாஷிங்டன் ஈரானுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்பு மற்றும் மோதல் போக்கிற்கு சாதகமாக அதிக
அளவில் பயன்படுத்திக்கொள்ளும் என்பது இப்போது உத்திரவாதமான ஒரு செயலாக அமைந்துவிட்டது.
Top of page
|