World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு US vetoes UN resolution opposing Arafat's murder அரஃபாத் கொலையை எதிர்க்கும் ஐ.நா. தீர்மானத்தை அமெரிக்கா ரத்து செய்தது By Bill Vann யாசிர் அரஃபாத்தை கொலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐ.நா- பாதுகாப்பு சபை தீர்மானத்தை ரத்து செய்யும் வகையில் செவ்வாய் கிழமையன்று அமெரிக்கா தனது வீட்டோ ரத்து அதிகாரத்தை பயன்படுத்தியதை, அதன் இஸ்ரேலிய சகாக்கள் பாலஸ்தீன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை கொடூரமாக கொலையைச் செய்வதற்கு பச்சைக்கொடி காட்டுவதாகத்தான் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும். ஐ.நா-பாதுகாப்பு சபையில் பிரிட்டன், ஜேர்மனி, மற்றும் பல்கேரியா ஆகிய மூன்று நாடுகளும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத நிலையில், 15-உறுப்பினர்களில் 11-நாடுகள் ஆதரவு தெரிவித்த, தீர்மானம், ''பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள இஸ்ரேல், பாலஸ்தீன நிர்வாகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகின்ற எந்தக் காரியத்தையும் மற்றும் நாடுகடத்துவது போன்ற எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது'' என்று கோரியது. பாலஸ்தீன போராளித்தலைவர்களை இஸ்ரேல் "குறிவைத்து கொலை செய்தல்" மற்றும் பாலஸ்தீனியர்கள் நடத்தி வரும் தற்கொலை குண்டுவெடிப்புக்கள் இரண்டையும் தீர்மானம் கண்டித்தது, "அனைத்தும் மிகப்பெரும் அளவிற்கு துன்பத்தை விளைவித்த பல அப்பாவிகளை பலியாக்கியது." "எல்லாவிதமான பயங்கரவாத நடவடிக்கைகள், ஆத்திரமூட்டல்கள், தூண்டுதல்கள் மற்றும் அழிவு நடவடிக்கைகளை" கைவிட வேண்டும் என்று அத்தீர்மானம் மேலும் வலியுறுத்தியது. ஐ.நா-வில் வாஷிங்டனின் தூதராக பணியாற்றி வரும் ஜோன் நெக்ரோபோண்ட் அந்த தீர்மானம் "ஒரு தலைப்பட்சமானது" என்று தள்ளுபடி செய்தார். "சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு இந்த தீர்மானம் ஆக்கபூர்வமாக எதையும் செய்துவிடப்போவதில்லை" என்று அவர் குறிப்பிட்டார். பதிலாக, "பயங்கரவாதக் குழுக்களின் அச்சுறுத்தல் நடவடிக்கையை நீக்குவதற்கு பாலஸ்தீன நிர்வாகம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தீர்மானம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தனார். கடந்த 30-ஆண்டுகளுக்கு மேலாக, ஐ.நா-பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட, பாலஸ்தீனியர்களது உரிமைகளை வலியுறுத்துகின்ற அல்லது இஸ்ரேலின் ஒடுக்கு முறை வன்முறைச்செயல்களை கண்டிக்கின்ற சுமார் 30-தீர்மானங்களை அமெரிக்க அரசாங்கம் தனது ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி தள்ளுபடி செய்திருக்கின்றது. மிக அண்மைக் காலத்தில் இஸ்ரேல் இராணுவம் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதியில் பணியாற்றிவந்த ஐ.நா-ஊழியர்களை திட்டமிட்டு கொலை செய்வதை கண்டிக்கும் தீர்மானத்தையும் அமெரிக்கா தடுத்து நிறுத்தியது. அடுத்தடுத்து வந்த இஸ்ரேலிய அரசாங்கங்கள், சியோனிச அரசுக்குள் கொட்டப்பட்டு வரும் கோடிக்கணக்கான டாலர்கள் அமெரிக்க நிதி உதவியுடன் இணைந்த இந்த வீட்டோ ரத்து அதிகாரங்களை, பாலஸ்தீனிய எல்லைப்பகுதிகளுக்குள் மற்றும் அதேபோல அண்டை அரபு அரசுகளில் திடீர் ஆயுதத்தாக்குதல்களை மேற்கொள்வதற்கு, புதிய குடியேற்றங்களுக்காக நிலங்களைக் கைப்பற்றுவதற்கு, மற்றும் பாலஸ்தீனத் தலைவர்களையும் காரியாளர்களையும் படுகொலை செய்வதற்கு முன்னரே கையெழுத்திடப்பட்ட ஒரு வெற்றுத்தாளாகப் புரிந்தி கொண்டிருக்கின்றன. கடைசியாக அமெரிக்கா பயன்படுத்தியுள்ள ரத்து அதிகாரம் அவற்றிலிருந்து வேறுபட்டதல்ல, அமெரிக்க அதிகாரிகள் அரஃபாத்தைக் கொலை செய்வதற்கான ஆலோசனைகளோடு, உடன்படவில்லை என்பதைப் பகிரங்கமாக தெரிவித்துள்ளனர், அப்படி அவர்கள் அறிக்கை வெளியிட்டது முற்றிலும் தந்திரோபாய அடிப்படையில், மிகவும் தொலைவல்லாத எதிர்காலத்தில் அத்தகைய கொடூரமான குற்றம் நடக்குமானால், அதை ஆதரிக்க கதவுதிறந்துவிடப்பட்ட நிலையிலாகும். புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கோண்டலிசா ரைஸ், நியூயோர்க் டைம்ஸ்-க்கு அளித்த பேட்டியில் அரஃபாத் சமாதானத்திற்கு தடைக்கல்லாக நிற்கிறார்" என ஷரோன் ஆட்சியின் கருத்துக்களை எதிரொலித்திருக்கிறார். சமாதான நடைமுறைகள் என்று அழைக்கப்படும் நடவடிக்கைகள் முறிவுற்றதற்கும் கடந்த மூன்றாண்டுகளாக அந்தப் பகுதியில் இரத்தக்களரி நடைபெற்று வருகின்றதற்கும் அரஃபாத் தான் தனிப்பட்ட முறையில் பொறுப்பு என்று இஸ்ரேலும், அமெரிக்காவும் கூறி வருவது மேலெழுந்த வாரியாக பார்க்கும் போதே அபத்தமானதாக தோன்றுகின்றது. பாலஸ்தீன ஜனாதிபதியான அரஃபாத் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்திருக்கிறார். இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் அவரது ராமல்லா இல்ல வளாகத்தை சுற்றி வளைத்துக்கொண்டு நிற்கின்றன. சமாதான திட்டம் என்று அழைக்கப்பட்ட நடவடிக்கை பாலஸ்தீன மக்களுக்கு துன்பத்தையும், மரணத்தையும் விளைவித்தது, அமெரிக்க ஆதரவு பெற்ற ஒப்பந்தங்களோடு தன்னை சம்மந்தப் படுத்திக்கொண்டதன் காரணமாக அரஃபாத்தின் செல்வாக்கு பாலஸ்தீன மக்களிடையே சரிந்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், இஸ்ரேல் அவரை தீர்த்துக்கட்டி விடுவதாக அச்சுறுத்தியிருப்பது, பாலஸ்தீன தேசிய போராட்டத்திற்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட அவர், அதன் சின்னமாக கருதப்படுவதற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டுவதாக அமைந்திருக்கின்றது. அராபத்தை இப்போது கொடூரமானவராக சித்தரித்துக்காட்டுதற்குப் பின்னால், மத்தியகிழக்கு முழுவதிலும் நடைபெறுகின்ற மோதல்களுக்கு பாலஸ்தீனியர்கள்தான் காரணம் என்றும் 36-ஆண்டுகளாக மேற்குக்கரை மற்றும் காசா பகுதிகளை இஸ்ரேல் பிடித்துவைத்திருப்பது பயங்கரவாதத்திற்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைதான் என்றும் ஒரு அடிப்படைக் கருத்துரு உள்ளது. இஸ்ரேல் அமைச்சரவை அரஃபாத்தை தீர்த்துக்கட்டுவது பற்றி விவாதித்த மறுநாள், செப்டம்பர்-12-தேதியன்று வெளியிட்ட தலையங்கத்தில், நியூயோர்க் டைம்ஸ் இந்த அணுகுமுறையை எதிரொலிக்கின்ற வகையில் குரல் கொடுத்தது. "இந்தப் பிரச்சனையில் எல்லாக்காலத்திலுமே சில விஷயங்கள் எப்போதுமே மாறுவதில்லை- இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாதம் மற்றும் பாலஸ்தீன தரப்பிலிருந்து தூண்டுதல், இஸ்ரேலால் மேற்குக்கரை மற்றும் காசா பகுதிகளில் தீவிரமாய் யூதர்கள் குடியிருப்பு உருவாக்கப்படல் இவற்றால் சமாதான நடவடிக்கைகள் மண்டியிடும் நிலைக்கு வந்து விட்டன. இரண்டும் ஒன்றல்ல. மற்றொருவர் தனது மனை என்று கருதுகின்ற இடத்தில் கட்டிடம் கட்டுவதையும், பஸ்சில் செல்கின்ற குழுந்தைகளை வெடிகுண்டு வைத்து தகர்ப்பதையும் சரிசமமாக கருதிவிட முடியாது'' நியூயோர்க் டைம்ஸ் பயன்படுத்தியிருக்கின்ற தார்மீக அளவுகோல்களைக் கொண்டு பார்க்கும் போது, "சரிசமமானது" என்று துல்லியமாக கருதுவது எதை? அமெரிக்கா இஸ்ரேலுக்கு மிகப்பெருமளவில் இராணுவத் தளவாடங்களையும், அணு மற்றும் இதர "பேரழிவு ஆயுதங்களை" வழங்கியிருக்கிறது, இதே பெரும் ஆயுதங்களை பாலஸ்தீனியர்கள் கொண்டிருப்பார்களேயானால் சியோனிச குடியேற்றக்காரர்களுக்காக எடுக்கப்பட்ட நிலத்தை மெய்யாகவே திரும்பக் கைப்பற்ற முடியும் அல்லது இஸ்ரேலிடமிருந்து தங்களுக்காக நிலத்தை எடுத்திருக்கக்கூட முடியும். ஆனால், இன்றைய தினம் பாலஸ்தீன மக்களிடம் அத்தகைய ஆயுதபலம் இல்லை என்பதால், டைம்ஸ் ஆசிரியர்களால் அவர்களுக்கு காட்டுகின்ற ஒரே வழி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு கீழ்ப்படிந்து, ஷரோன் இடுகின்ற கட்டளைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகத்தான் தெரிகிறது. இந்த ஆக்கிரமிப்பு வெறுமனே, "மற்றவர்கள் நிலம் என்று கருதும் ஒரு பகுதியில் கட்டிடம் கட்டுதல்" என்ற கருத்துருவே உண்மையில் அதிர்ச்சி தரத்தக்கதாகும். 2000- செப்டம்பருக்கு பின்னர் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் 2400- பாலஸ்தீன மக்களை கொன்று குவித்திருக்கின்றன என்பதை முதலில் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். இதில் இஸ்ரேலின் இரகசிய போலீஸ் அமைப்பான ஷின் பெட் தந்துள்ள தகவலின்படி 551- "பயங்கரவாதிகள்" அதாவது பாலஸ்தீனியர்கள் ஆயுதம் தாங்கியவர்கள், மீதம் பலியானவர்கள் அமெரிக்க இராணுவம் குறிப்பிடுவதைப்போல் போரில் "தற்செயலாக நடந்துவிட்ட சேதத்தில்" அடங்குபவர்கள். இவர்களில் 400-பேர் இளைஞர்கள் மற்றும் 100-பேர் 12 அல்லது அதற்கும் குறைந்த வயதுள்ளவர்கள். கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களில் "80சதவீதம் பேர் ஆயுதம் தாங்கிய நடவடிக்கைகள் எதிலும் தொடர்பு இல்லாதவர்கள்" என்று இஸ்ரேல் மனித உரிமைகள் தகவல் மையம் B'Tselem தெரிவித்திருக்கின்றது. மாண்டவர்கள் தவிர, பல்லாயிரக்கணக்கானோர் காயம் அடைந்திருக்கின்றனர். அவர்களுள் பெரும்பாலானோருக்கு மருத்துவ உதவிகூட கிடைக்கவில்லை. இதற்கிடையில், சாலைத்தடைகளப் பயன்படுத்தல், ஊரடங்கு உத்தரவு, மூடல்கள், வீடுகளை மற்றும் மாடி குடியிருப்புக்களை இடித்துத் தள்ளுவது போன்ற கூட்டுத் தண்டனை, அதேபோல இப்படி தினசரி இஸ்ரேல் துருப்புகள் தாக்குதல் நடத்தி அச்சுறுத்தி வருவதால் பாலஸ்தீனியர்களது வாழ்வே நரகமாகிவிட்டது. சியோனிச குடியிருப்புக்கள், பாலஸ்தீன எல்லைகளை திட்டமிட்டு பிளவுபடுத்தல், இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள், சோதனைச் சாவடிகள் மற்றும் சாலைத்தடைகள் இவற்றால் பொருளாதார வாழ்வு நசுக்கப்பட்டு விட்டது. வர்த்தகம் மற்றும் வளர்ச்சி பற்றிய ஐக்கியநாடுகள் மாநாடு (UNCTAD) அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் நிலவுகின்ற பொருளாதார சீர்குலைவு சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. * சென்ற ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் தலை வீத வருவாய்1999-ல் இருந்ததற்கு பாதிக்கும் குறைவாகிவிட்டது. * மேற்குக்கரை மற்றும் காசா பகுதிகளைச் சேர்ந்த மூன்றில் இரண்டு பங்கு மக்கள், சுமார் 2-மில்லியன் பேர் ஒரு நாளைக்கு 2-அமெரிக்க டாலருக்கும் குறைந்த வருவாயில் மிக கடுமையான வறுமையில் வாழுகின்றனர். * வேலையில்லாத் திண்டாட்டம் 40சதவீதத்திற்கு மேல் உயர்ந்துவிட்டது. * முந்தைய 15-ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி 2000-ம் ஆண்டு முதல் முற்றிலுமாக துடைக்கப்பட்டுவிட்டது. இது ஏதோ அருவமான ஒரு சொத்து சண்டையல்ல. பாலஸ்தீனியர்கள் வாழமுடியாத நிலையை இஸ்ரேல் உருவாக்கி உள்ளது. வாஷிங்டனின் முழு ஆதரவோடு இஸ்ரேல் சட்டவிரோதமாக பாலஸ்தீன எல்லைகளை ஆக்கிரமிப்பு செய்திருப்பதன் பலன்கள்தான் இப்படிப்பட்ட மோசமான நிலவரமாகும். அவர்கள் உருவாக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவை. விரக்தி மற்றும் கோப உணர்வுகள் இஸ்ரேலுக்குள் தற்கொலைக் குண்டு வெடிப்பாளர்களை இயங்கவைப்பது முற்றிலும் புரிந்துகொள்ளக்கூடியதே, ஆயினும், அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள தந்திரோபாயம் எதிர்விளைவையும் பயங்கரத்தையும் கொண்டது. ஷரோன் அரசாங்கம் திட்டமிட்டு மிகமோசமான இந்த பயங்கர நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது, பாலஸ்தீன தலைவர்களைப் படுகொலை செய்தலுக்கு பதில் இன்னொரு குண்டுவெடிப்பாக இருக்கும் என்பதை நன்கு அறிந்து கொண்டே அதனைச் செய்கிறது.அக்குண்டு வெடிப்புக்கள் இஸ்ரேலிய ஆட்சிக்கு பாலஸ்தீனியர்கள் மீது புதிய இராணுவத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான நியாயப்படுத்தலை வழங்குகிறது, இன்னும் நிலங்களைக் கைப்பற்ற வைக்கிறது --பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒஸ்லோ உடன்படிக்கை ஏற்பட்டதன் பின்னர் சியோனிச குடியேற்றக்கார்ர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது-- பாலஸ்தீன மக்களுக்கு என்றுமில்லாத சிறிய அளவுக்கு பகுதிகளை குறைவான எல்லை உடையதாய் ஆக்கி, துண்டு துண்டாக பிரிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர்களை நாடு கடத்துகிறது. ஷரோன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் இறுதி இலக்கு, ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் இருந்து முப்பந்தைந்து லட்சம் பாலஸ்தீன மக்களையும் வெளியேற்றி விட்டு, மத்திய தரைக்கடல் முதல் ஜோர்டான் ஆறுவரை விரிந்துள்ள அகண்ட இஸ்ரேலை உருவாக்குவதற்கு, பெரும் அளவிலான "இன ஒழிப்பு" நடவடிக்கை அவசியமாகும். இறுதி ஆய்வில், அரஃபாத்தை படுகொலை செய்வதற்கான இந்த முன்மொழிவு பாலஸ்தீனியர்களை மக்களாய் அழித்தொழிப்பதை நோக்கங்கொண்ட மூலோபாயத்தை செயல்படுத்துவதை நோக்கிய ஒரு அடி எடுப்பு ஆகும். இந்த கிரிமினல் கொள்கையில் வாஷிங்டன் முற்றிலும் உடைந்தையாக இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தும் வகையில்தான் அமெரிக்கா தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி இருக்கின்றது. |