World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Why is Israel threatening to murder Arafat?

அரஃபாத்தைக் கொன்று விடுவதாக இஸ்ரேல் அரசு அச்சுறுத்துவது ஏன்?

By the Editorial Board
16 September 2003

Use this version to print | Send this link by email | Email the author

பாலஸ்தீனிய தேசிய நிர்வாகத்தின் தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட யாசிர் அரஃபாத்தைக் கொன்றுவிடுவதற்கான அதன் எண்ணத்தை பிரதமர் ஏரியல் ஷரோனின் இஸ்ரேல் அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பு கட்டுப்படுத்தப்படவியலாத ஏதோ ஒரு கபினெட் அமைச்சர் வெளியிட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பு அல்ல. ஷரோனின் மிக நெருங்கிய சகாவும், அவருக்குப் பின்னர் பதவிக்கு வருவார் என அடிக்கடி குறிப்பிட்டப்படுபவருமான இஸ்ரேலின் துணைப் பிரதமர் எகுட் ஒல்மெர்ட் இதை அறிவித்திருக்கிறார். இந்த அச்சுறுத்தல் திட்டமிட்டே ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக வெளியிடப்பட்டிருக்கின்றது.

உத்தேசிக்கப்பட்டுள்ள குற்றத்தின் கடுமையான தன்மையை கவனமாக ஆராய்ந்தாக வேண்டும். 35 ஆண்டுகளாக உலக அங்கில் பிரதானமான தலைவராக அரஃபாத் இருந்து வருகிறார். அவரது அரசியல் குறித்து ஒருவர் என்னதான் நினைத்தாலும்-- உலக சோசலிச வலை தளம் அவருடைய தேசிய கண்ணோட்டத்திலிருந்து நிச்சயமாக வேறுபடுகிறது--ஆனால் அவர் பாலஸ்தீனிய மக்களது தேசிய உணர்வுத் துடிப்புக்களில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. அவர் அவரது இளமைக்கால வாழ்வு முழுவதையும் அதற்காகவே அர்ப்பணித்தவர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர், இதே மனிதர்தான் கேடுக்கு இட்டுச்சென்ற சமாதான உடன்படிக்கையில், அது பிரதான அரசுகளின் நோக்கங்களுக்கு பயன்பட்டபொழுது, அதில் கையெழுத்திடுவதற்காக வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டார் மற்றும் அவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசும் வழ்ங்கப்பட்டது.

அத்தகைய மனிதரை கொன்று விடுவதற்கான திட்டங்களை பகிரங்கமாக அறிவித்ததன் நோக்கம் என்ன?

"சமாதானத்திற்கும் சமரச ஏற்பாட்டிற்கும்" சகித்துக் கொள்ள முடியாத "தடையாக" 74 வயதுடைய பாலஸ்தீன தலைவர் அரஃபாத் செயல்பட்டு வருவதால் அவரைக் கொலை செய்ய வேண்டியது அவசியமாகி விட்டது என்று இஸ்ரேல் அரசாங்கம் கூறி இருக்கின்றது. இதே இஸ்ரேல் ஆட்சிதான் முடிவற்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றது, முன்னனி பாலஸ்தீன தலைவர்களை கொலை செய்வது முதல் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்குவது, ஒட்டுமொத்தமாக பாலஸ்தீன மக்களைக் தண்டிப்பது, நகரங்களை முற்றிலுமாக மூடிவிட்டு மக்களைத் தவிக்க வைப்பது, நெரிசல் நிறைந்த குடியிருப்புப் பகுதிகளில் குண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்துவது மற்றும் பாலஸ்தீன நிலப்பரப்புக்களை எந்தவிதமான இடையூறும் இல்லாமல் பிடித்துக் கொண்டே வருவதுவரையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அரஃபாத் தமது பொம்மையாக செயல்படத் தவறிவிட்டார், தனது மக்கள் மீதே உள்நாட்டுப் போரைத் தொடக்குவதற்கு தயக்கம் காட்டி வருகிறார் என்பதுதான் ஷெரோன் அரசாங்கத்தின் புகாராகும்.

இப்படி ஒழுக்கச்சிதைவான கொலை முயற்சிக்கு அழைப்பு விடுவதில் ஆழமான அரசியல் தர்க்க அடிப்படை ஒன்று இருக்கின்றது. இஸ்ரேல் அரசாங்கம் திட்டவட்டமான அரசியல் மூலோபாயத்தை கடைப்பிடித்து வருகின்றது. அது பாலஸ்தீன தேசிய இயக்கத்தை சீர்குலைப்பதும், இயன்றவரை காசா மற்றும் மேற்குக் கரைப் பகுதியில் பாலஸ்தீன மக்களின் மனைகளை அபகரித்துக் கொள்வது மற்றும் பாலஸ்தீன நாடு உருவாக இயலாதபடி செய்வது ஆகிய நோக்கத்தைக் கொண்டிருக்கிறது.

காலத்தால் செல்லரித்துப்போன தந்திரத்தை இப்போது இஸ்ரேல் அரசாங்கம் மிக உயர்ந்த அளவிற்கு கடைப்பிடித்து வருகின்றது. திட்டமிட்டு வேண்டுமென்று பாலஸ்தீன மக்களை ஆத்திரமூட்டுவது, அதன் மூலம் பாலஸ்தீன மக்கள் வன்முறையில் இறங்குவார்களானால், அதனைச்சாக்காக கொண்டு இஸ்ரேல், தனது படைகள் மூலம் ஆக்கிரமிப்பு செய்வதை மற்றும் எல்லைகளை விரிவுபடுத்துவதை நியாயப்படுத்துவது.

அரஃபாத் கொல்லப்படுவது, பொது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கிவிடுவதோடு, இஸ்ரேலுக்கு உள்ளேயே மேலும் பயங்கரவாத நடவடிக்கைகளை உருவாக்கும் என்று விடுக்கப்பட்டு வரும் எச்சரிக்கைகளை ஷரோன் அரசாங்கம் பொருட்படுத்தவில்லை, அலட்சியம் செய்து வருகின்றது. ஏனென்றால் அத்தகைய மோதல் போக்கை இஸ்ரேல் வரவேற்கின்றது. பாலஸ்தீன மக்களிடையே திடீரென்று ஆத்திரப் போக்கு, வெடித்துக் கிளம்புமானால் அதன் மூலம் சமரசப் பேச்சு அடிப்படையில் உடன்பாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இல்லாமல் போய்விடும், நீண்டகாலமாக இஸ்ரேல் அரசாங்கம் திட்டமிட்டுக் கொண்டு வரும் "அகன்ற இஸ்ரேலை" அமைப்பதற்கு ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து மில்லியன் கணக்கான பாலஸ்தீன மக்களை பலவந்தமாக வெளியேற்றிவிடமுடியும் என்று இஸ்ரேல் அரசாங்கம் கருதுகின்றது.

இந்த ஆட்சி ஆத்திரமூட்டுவதிலும் அதன் மூலம் உருவாகும் வன்முறைகளை பயன்படுத்தி தன்னை வளர்த்துக் கொள்வதிலும் நிபுணத்துவம் நிறைந்ததாகும். ஷரோனது கடந்த காலத்தை நினைவுபடுத்திப் பார்த்தால்கூட, அவர் தனது வலதுசாரி ஆதரவாளர்கள் துணையோடு அரசியல் இயக்கம் ஒன்றை முன்னின்று நடத்தியவர்தான். அரஃபாத்துடன் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் யிட்சாக் ராபின் கொலைக்கு அவரது வலதுசாரித் தொண்டர்களில் ஒருவர்தான் பொறுப்பாவார். 2000-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இரத்தக் களரிக்கு வித்திட்டவர் அவர்தான். மோதல் போக்கைக் கிளப்பி விடுவதற்காக மலைக்கோவில் (டெம்பிள் மவுண்ட்) பகுதிக்கு அவர் சென்று இஸ்ரேலும் பாலஸ்தீன மக்களும் சமாதான உடன்படிக்கை செய்து கொள்வதற்கு எந்தவித கலந்துரையாடலும் செய்ய முடியாத ஓர் நிலையை உருவாக்கினார்.

அரஃபாத்தை கொலை செய்வது இறுதிக்கட்ட ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக அமையும். அதன் மூலம் வன்முறைப் போக்குகள் வெடிக்கும், அந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக இஸ்ரேல் ஆட்சி பாலஸ்தீன மக்கள் மீது முழு அளவிற்கு தாக்குதலில் ஈடுபடும்.

இந்த அச்சுறுத்தலில் மனோதத்துவ அடிப்படையிலான போர்முறை அம்சம் ஒன்று உண்டு. பாலஸ்தீன மக்களுக்கு செய்தியை விடுக்கின்ற வகையில் இந்த அச்சுறுத்தல் அமைந்திருக்கின்றது: இஸ்ரேலை எதிர்த்து நிற்பது பயனற்றது என்று. பாலஸ்தீன மக்கள் ஏற்கனவே ஆக்கிரமிப்பிற்கு இலக்கானவர்கள், சாலைத் தடைகள், நிரந்தரத் தொந்தரவுகள், இழிவுபடுத்தம் நடவடிக்கைகள் இவற்றின் மூலம், பாலஸ்தீன மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பற்ற நிலைமையில், நம்பிக்கை எதுவும் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக எந்தவிதமான குற்றங்களைப் புரிந்தாலும், அதை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று இஸ்ரேல் அரசாங்கம் தனது நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறது.

இஸ்ரேல் அரசின் இவ்வகைச் சிந்தனையை , ஜெருசலேம் போஸ்ட் என்ற இஸ்ரேலில் மிகப் பெரிய அளவில் விற்பனையாகின்ற ஆங்கில நாளேடு, தனது தலையங்கத்தில் வெளிப்படுத்தி இருக்கிறது. "அர ஃபாத்தைக் கொன்றுவிடு" என்று செப்டம்பர் 11 அன்று தலைப்பிட்டு தலையங்கம் எழுதி உள்ளது. ஹிட்லர் பாணியில் அந்தத் தலையங்கம் எழுதப்பட்டிருக்கின்றது. அரஃபாத்தைக் கொன்று விடுவதால் மத்தய கிழக்குப் பகுதி முழுவதிலும் மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதிகள் முழுவதிலும் கொந்தளிப்புகள் உருவாகும் என்ற எச்சரிக்கையை அந்தப் பத்திரிகை சிறிதும் பொருட்படுத்தவில்லை.

"இஸ்ரேல் கரங்களில் அரஃபாத் மடிவது அரபு மக்களிடையே இஸ்ரேலுக்கு எதிரான தீவிரப் போக்குகளை உருவாக்காது, அதற்கு நேர்மாறான விளைவுகள்தான் ஏற்படும். தற்போது நமக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டுள்ள ஜிஹாத் நடவடிக்கைகளுக்கு தூபம் போட்டுக் கொண்டிருப்பது, இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்வதற்குத் திட்டவட்டமான நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுக்கப்படுகின்றது என்ற கண்ணோட்டம்தான்..... அரஃபாத்தை கொல்வதன் மூலம் வேறு எந்த நடவடிக்கையையும் விட, பயங்கரவாதம் என்ற கருவி ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதை நிரூபித்துக் காட்டுவதாக அமையும். இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன அரசை உருவாக்குவதற்காக இப்படி பயங்கரவாத நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது."

ஜெருசலேம் போஸ்டின் இந்த அதிர்ச்சியூட்டும் முடிவிற்கு அடிப்படையான கொள்கை என்ன என்பதை ஆராய்வது பயனுள்ளதாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனாதிபதியை கொலை செய்வது "பயங்கரவாதம் என்ற கருவி ஏற்கமுடியாதது" என்பதை நிரூபிக்கும் ஒரு வழிமுறை என்றால், இந்த வாசகம் பாசிசத்தின் சாயலையும் மொழியையும் சாராம்சமாகக் கொண்டுள்ளது. இஸ்ரேலின் வலதுசாரி அணியினர் எந்த அளவிற்கு நாஜிக்கள் கொள்கைகள்பால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அந்த பத்திரிகையின் தலையங்க வாசகம் அம்பலப்படுத்துகிறது.

இன்றைய சியோனிசமும் இஸ்ரேல் அரசும் தாங்கள் நிலைபெற்றிருப்பதற்கு முகாந்திரமாக எடுத்துக் கொண்டது, யூதர்களுக்கு எதிராக நாஜிக்கள் நடத்திய இனப்படுகொலைகளைத்தான். இந்த கருத்தியல் நியாயப்படுத்தலின் விசித்திரமான தாக்கம் இஸ்ரேலிய அரசின் நடத்தையிலும் மனோவியலிலும் கொண்டிருக்கிறது என்பதை இஸ்ரேலின் வரலாற்று ஆசிரியர் டாம் டெஹேவ் குறிப்பிட்டிருக்கிறார்."ஏழாவது மில்லியன்: இஸ்ரேலியரும் இனப்படுகொலைகளும்" என்ற அவரது நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

"வலுவான இஸ்ரேல் இருந்தால்தான் அதுபோன்ற இனப்பேரழிவுகளைத் தவிர்க்க முடியும் என்பது இஸ்ரேலிய மக்களின் அனுமானம் ஆகும். இரண்டாம் உலகப் போரின் போது, யூத மக்களைக் காப்பாற்றுவதற்காக உலகம் தவறிவிட்டது. எனவே இன்றைய தினம் உலகம் இஸ்ரேலுக்கு தார்மீக நெறிமுறை கட்டளைகளைப் பற்றி நினைவுபடுத்துவதற்கு தகுதியற்றதாகிவிட்டது. இதில் மனித உரிமைகளை மதிப்பதும் அடங்கும். இனஅழிப்பு தவிர்க்க முடியாதது என்பது சியோனிச கொள்கைவழி பெற்ற அம்சமாகும். யூதர் அதில் பாதிக்கப்பட்டவர் என்று அடையாளம் காட்டப்படுவது இஸ்ரேல் மக்களை எந்த முடிவிற்கு இட்டு வந்திருக்கிறது என்றால், தாங்கள் நீடித்திருப்பதே இராணுவ வலிமையை முற்றிலும் நம்பி இருத்தலால்தான் என்று கருதும் அளவிற்கு ஆகும்..."

செகேவ் விளக்கம் தந்துள்ள இந்தப் போக்கை கொச்சையாக வர்ணிக்கின்ற வகையில் குறிப்பாக ஜெருசலேம் போஸ்ட் பத்திரிக்கை "அரஃபாத்தைக் கொன்றுவிடு" என்ற தனது தலையங்கத்தில் எழுதி இருக்கின்றது. "இந்த உலகம் நமக்கு உதவி செய்யாது, நாம்தான் நமக்கு உதவி செய்து கொள்ள வேண்டும். எத்தனை ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் தலைவர்களைக் கொல்ல முடியுமோ அந்த அளவிற்கு நம்மால் முடிந்தவரை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக கொன்றுவிட வேண்டும். இதில் தற்செயலாக ஏற்படும் சேதங்களைக் குறைக்க வேண்டும். ஆனால் போரில் தற்செயலாக அப்பாவி மக்கள் பலியாகிறார்கள் என்பதற்காக, நாம் நமது நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள முடியாது. மேலும் நாம் யாசிர் அரஃபாத்தை கொன்றாக வேண்டும், ஏனென்றால் உலகம் நமக்கு எந்த மாற்றீட்டையும் விட்டு வைக்கவில்லை."

இன அழிப்பு தவிர்க்க முடியாதது மற்றும் உலகம் எப்படிப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதற்கு நாஜிக்கள் முன்மாதிரியாக செயல்பட்டனர் என்ற கருத்துருவிற்கு அடிப்படையாக ஒரு கொலை வெறித் தர்க்கம் அடங்கி இருக்கின்றது. இஸ்ரேலை நிறுவிய வலதுசாரி சக்திகள் மத்தியில், அந்த தலைமுறையைச் சார்ந்த ஷரோன் போன்ற வலதுசாரி சக்திகள், நாஜிக்கள் புரிந்த குற்றங்களில் இருந்து ஏதாவது படிப்பினை பெறமுடியும் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டுவிட்டனர். பிரதானமாக, போதுமான அளவிற்கு ஒரு நாடு பலாத்தாகரத்தைப் பயன்படுத்தும்போது எதுவும் சாத்தியம் என்று இந்த இஸ்ரேலிய வலதுசாரி சக்திகள் எடுத்துக் கொண்டுவிட்டன.

பல தலைமுறைகளாக, யூத மக்கள் அடையாளப்படுத்திக் கொண்ட சர்வதேச கண்ணோட்டத்திலும் மனித நேய அடிப்படை, சோசலிச குறிக்கோள்கள், பரந்த சுதந்திர மனப்பான்மை ஆகிய இந்த மனப்போக்குகளை தீவிர வலதுசாரிகள் ஏற்கவில்லை, இவை யூத மக்களை வலதுசாரியினரின் தாக்குதலுக்கு இலக்காக்கின.

நாஜிக்களின் குற்றங்களுக்கு ஒரு பதிலாக கொடூரமான வரலாற்றுத் துயரமான இன அழிப்பு அடிப்படையில், இஸ்ரேல் நாடு சட்டபூர்வமாக அங்கீகாரத்தைப் பெற்றது. ஆனால் அதே இஸ்ரேல் அரசு கடூழியச் சிறைமுகாம்கள் மற்றும் வார்சோ சேரிகள் அடிப்படையில் தனது கொள்கையை வகுத்துக் கொண்டிருக்கிறது.

நாஜிக்கள் மேற்கொண்ட மிருகவெறித் தாக்குதலுக்கு திட்டவட்டமான நோக்கம் உண்டு. நாஜிக்கள் பிடித்துக் கொண்ட பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் மரண முகாம்களில் வைக்கப்பட்டிருப்பவர்களுக்கும் எந்தவிதமான உதவியும் கிடைக்காது, அவர்களது எதிர்ப்பு பயனற்றது என்று உணர்த்துவதற்காகத்தான், நாஜிக்கள் அவ்வாறு கொடுமை புரிந்தார்கள்.

அதே முறைகளை பாலஸ்தீன மக்களை அச்சுறுத்தவும் உற்சாகம் இழக்கச் செய்யவும் இஸ்ரேல் இப்போது பயன்படுத்தி வருவது தற்செயலாக நடந்துவிட்ட ஒரு விபத்து அல்ல. இஸ்ரேல் மற்றொரு கொடூரமான வரலாற்றுக் குற்றத்தைப் புரிவதில், தாங்கள் அறிந்து கொள்ளாமலே உடந்தையாக இருந்து விட்ட குற்றத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில், இஸ்ரேலிய தொழிலாளர்களும், இளைஞர்களும் உறுதியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும். இஸ்ரேல் அரசைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்.

உலக சமுதாயம் என்று அழைக்கப்படுகிற தரப்பினரால், ஷரோன் ஆட்சியின் கிரிமினல் அணுகுமுறைகளுக்கு உதவியும் ஒத்தாசையும் கிடைத்து வருகிறது. முதலாவதாக வாஷிங்டன் இஸ்ரேலுக்கு கொள்கை அடிப்படையில் அனைத்து ஆதரவையும் வழங்கி வருகிறது. அதுமட்டுமல்ல, இலக்கு நிர்ணயித்துக் கொலை செய்யும் இஸ்ரேலின் கொள்கைக்கு வாஷிங்டன் ஆதரவு காட்டி வருகிறது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிராக எந்த செயல் நடந்தாலும் அதைப் "பயங்கரவாதம்" என்று வாஷிங்டன் முத்திரை குத்துகிறது. இஸ்ரேலிய ஆட்சி எடுக்கும் ஒவ்வொரு ஒடுக்குமுறை நடவடிக்கையையும் வாஷிங்டன் மன்னித்து விட்டுவிடுகின்றது.

அரஃபாத்தை கொன்றுவிடுவதாக இஸ்ரேல் விடுத்திருக்கும் அச்சுறுத்தலை, பகிரங்கமாக புஷ் நிர்வாகம் எதிர்த்து இருப்பது சந்தர்ப்பவாத அடிப்படையிலேயே தவிர, கொள்கை அடிப்படையில் அல்ல. அரஃபாத்தை ஒன்றுமில்லாதவராக ஆக்கிவிட்டது, எனவே அது அவர் கொலை செய்யப்படுகிற நேரம் தொடர்பாக வார்த்தைகளில் விளையாடிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. வாஷிங்டன் சட்டவிரோதமாக, ஈராக்கைப் பிடித்துக் கொண்டிருப்பதற்கு சர்வதேச ஆதரவைப்பெறுகின்ற முயற்சிகள் சீர்குலைந்துவிடக்கூடும் என்று வாஷிங்டன் பயந்துகொண்டிருக்கிறது. மேலும் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு புஷ் நிர்வாகமே தனது வெளிநாட்டுக் கொள்கையின் கருவியாக கொலையை ஆக்கிவிட்டது, அதன் வாடிக்கையாளர் நாடான இஸ்ரேலை மேலும் ஊக்கப்படுத்துகிறது.

இதுவரை வாஷிங்டனில் கருத்துத் தெரிவித்துள்ள எவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனத் தலைவரை கொலைசெய்வதன் மூலம், இஸ்ரேல் தற்போது தாக்குப் பிடித்துக் கொண்டு நிற்கும் அமெரிக்காவின் பல பில்லியன் டாலர்கள் உதவிகளுக்கு எந்தவிதமான சீர்குலைவும் ஏற்படும் என்று எவருமே இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை.

இஸ்ரேல் அரஃபாத்தை கொன்றுவிடப்போவதாக வெளியிட்ட அறிவிப்பிற்கு ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம், அரபு லீக் அமைப்பு மற்றும் அது போன்ற அமைப்புக்கள் திட்டவட்டமான எச்சரிக்கை விடுக்கும் கண்டன அறிக்கைகள் எதையும் வெளியிடவில்லை. மிதமாக ஒப்புக்கு எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அரசாங்கங்கள் வழக்கமான பாணியில் கொலை மிரட்டலை பயங்கரமான தவறு என்ற பாணியிலேயே கண்டித்திருக்கின்றனவே தவிர அது ஒரு கொடூரமான குற்றம் என்று சரியான வகையில் வர்ணிக்கவில்லை.

இத்தகைய அச்சுறுத்தலை ஒரு நாடு விடுக்கின்ற அளவிற்கு சர்வதேச அரசியல் சூழ்நிலை மிகத் தாழ்ந்துவிட்டது என்பதைத்தான் இந்நடவடிக்கை காட்டுகின்றது. எந்த சர்வதேச அமைப்பும் அல்லது அரசாங்கமும் இஸ்ரேல் சியோனிச அரசு கொலைகாரர்கள் தான் பொறுப்பாவார்கள் என்றோ, அதற்குப் பொறுப்பான ஷரோன் அல்லது இதர இஸ்ரேல் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு அடி எடுத்து வைக்கும்போது அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றோ அறிக்கை வெளியிடவில்லை.

சியோனிசத்தின் பிற்போக்குத்தனமான முன்னோக்கு மிகவும் கொச்சையாக வெளிப்படுத்துகின்ற வகையில், அரஃபாத்தை கொலை செய்யப்போவதாக பகிரங்கமாக அறிவிப்பில் வெளிப்பாட்டைக் கண்டிருக்கிறது. மத்திய கிழக்கில் தன்னுடைய எல்லைவிரிவாக்க நோக்கங்களை நிறைவேற்றுகின்ற வகையில், ஷரோன் ஆட்சி இரத்தக்களறி கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. புதிய சுயாதீனமான அரசியல் இயக்கம் ஒன்று உருவாகி யூதர்கள் மற்றும் அரபு மக்களை ஜனநாயக, மதச்சார்பில்லா மற்றும் சோசலிச அடிப்படையில் போராடுவதற்கு ஐக்கியப்படுத்தினால்தான் இந்த இரத்தக்களரிக் கொந்தளிப்பை தடுத்து நிறுத்த முடியும்.

இதற்கிடையில், யாசிர் அரஃபாத்தை தற்காத்து நிற்க சர்வதேச அளவில் வெகுஜன எதிர்ப்புக்களை ஒழுங்கமைக்க வேண்டும் மற்றும் இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஒழுக்கச் சிதைவுள்ள அச்சுறுத்தல்களை கண்டனம் செய்ய வேண்டும்.

See Also:

ஹமாஸ் தலைவரை இஸ்ரேல் படுகொலை செய்தது

பயங்கரவாதமும் இஸ்ரேலின் தோற்றமும் - பகுதி1

பயங்கரவாதமும் இஸ்ரேலின் தோற்றமும் - பகுதி 2

பி.எல்.ஓ வின் அரசியல் தோல்வியும் ஹமாஸ் இன் தோற்றமும்
பகுதி1|பகுதி2|பகுதி3

Top of page