World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Paris, Berlin react to Bush's speech

Europe lays down conditions on Iraq

புஷ்ஷின் உரைக்குப் பாரிஸ், பேர்லினின் எதிர் விளைவு

ஐரோப்பா ஈராக்கில் நிபந்தனைகளைப் போடுகிறது.

By Ulrich Rippert
12 September 2003

Back to screen version

கடந்த ஞாயிறன்று ஜனாதிபதி புஷ் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கான பெரும் சர்வதேச ஆதரவை நாடி கோரிக்கை விடுத்ததானது பெரும்பாலான ஐரோப்பியத் தலைநகரங்களில் அதிக உற்சாகமின்றி ஏற்கப்பட்டது.

தாங்கள் முன்பே எச்சரிக்கை விடுத்தும் அதைத் தடுக்க முடியாததால் அழிவிலிருந்து புஷ்ஷைக் காப்பாற்ற படைகளையோ, பணத்தையோ கொடுப்பதற்கில்லை என்று பாரிசிலும், பேர்லினிலும் உள்ள அரசாங்கங்கள் தெளிவாக்கிவிட்டன. அதே நேரத்தில் அமெரிக்கா தக்க சலுகைகளைக் கொடுத்தால் ஈராக்கில் தாங்கள் தலையிடத் தயார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். இரண்டு நாடுகளுமே ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேற வேண்டும் என்றோ, ஈராக்கிய மக்கள் தங்களுடைய விதியைத் தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை பெற்றவர்கள் என்றோ, அழைப்புவிடுக்கவில்லை; மாறாக ஒரு காலனிய முறையிலான அல்லது கைப்பாவையான அரசாங்கத்தை அங்கு நேரடியாகவோ, ஐ.நா மூலமோ அமைத்து தாங்கள் முக்கிய செல்வாக்கை செலுத்தலாம் என்றுதான் கருதுகின்றன.

பசுமைக் கட்சியைச் சேர்ந்த ஜேர்மனிய வெளிநாட்டு அமைச்சர் ஜோஸ்கா பிஷ்சர் (Joscha Fischer), ஜேர்மனியத் தலையீட்டிற்கு இன்றியமையாத நிபந்தனை, ஈராக்கில் நடவடிக்கைகள் பற்றி முற்றிலும் வெளிப்படையாக இருத்தலும் ஐ.நாவின் தடையற்ற அதிகாரமும்தான் என்றார். தற்பொழுது ஜேர்மனி இராணுவப் பங்குபெற்றலுக்கு விருப்பம் இல்லையென்றும் அமெரிக்காவிற்கு 1991 போரின்போது செய்ததைப்போல் இந்த நேரத்தில் நேரடிப்பணம் கொடுக்க முடியாதென்றும் கூறிவிட்டது. "காசோலை இராஜதந்திர" முறைக் காலம் முடிந்துவிட்டது என்றும் அவர் தெளிவாக்கிவிட்டார்.

பழமைவாத செய்திப் பத்திரிகையான லு பிகாரோ விற்கு கடந்த வாரம் அளித்த பேட்டியொன்றில் பிரெஞ்சு வெளிநாட்டு அமைச்சரான டொமினிக் டு வில்பன் தன்னுடைய அமைச்சகத்திலிருந்து வெளிவந்த அறிக்கை ஒன்றை குறிப்பிட்டு ''சரியாக என்ன நடக்கக்கூடும் என்பதைப்பற்றி நாங்கள் முதலிலேயே எச்சரித்தது நடந்த பின்னர்'' இப்பொழுது பிரெஞ்சு அரசாங்கம் ஈராக்கில் தீயணைப்பாளன் பாத்திரத்தை ஆற்ற தயாராக இல்லை என்று குறிப்பிட்டுவிட்டார்.

பிரான்ஸ் அரசாங்கத்தின் நிலைப்பாடு நன்கு அறியப்பட்டதுதான் என்றும் அதை மாற்றிக்கொள்ள தேவையில்லை என்றும் டு வில்பன் தெரிவித்தார். சமீபத்திய பதட்டங்களுக்குப் பின்பும் பாரிஸ் ஒத்துழைக்கத் தயார் என்றும் அத்தகைய ஒத்துழைப்பு தெளிவான நிபந்தனைகளை கொண்டிருக்கும் எனவும் தெரிவித்தார். ஈராக்கில் ஐ.நா வின் அதிகாரம் அதாவது பங்கு பெறும் அனைத்து நாடுகளும் சம அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். போருக்குப் பிந்திதிய ஈராக்கில் வாஷிங்டன்-பிரிட்டிஷ் தலைமையிலான கூட்டணி ஆதிக்கம் செலுத்தும் பங்கு பிரான்சினால் நிராகரிக்கப்படுவதாக அவர் கூறினார்.

அத்துடன் மேலும், டு வில்பன் ஈராக்கில் இவ்வாண்டு முடிவதற்குள் புதிய பொதுத்தேர்தல்கள் நடத்தப்படும் என்ற தெளிவாக வரையறுக்கப்பட்ட திட்டம் உட்பட அங்கு இறையாண்மை ஐ.நா பாதுகாப்பின் கீழ் விரைவில் மீட்கப்பட வேண்டும் எனவும் கோரினார். ''எந்த சமரசமோ, அரைகுறை நடவடிக்கைகளோ'' இல்லாமல் இவை ஏற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஐரோப்பிய நாளிதழ்களில் இருந்தும் ஜனாதிபதி புஷ்ஷின் உரை கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. பிரிட்டனின் இன்டிப்பன்டன்ட் நாழிதளில் புஷ்ஷின் உரையில் பல பகுதிகள் ஆட்சேபனைக்குரியவை என்றும் ''ஈராக்கிற்கும் செப்டம்பர்-11 நிகழ்ச்சிக்குமான தொடர்பு நனவுபூர்வமாக தவறாகப் பிணைக்கப்பட்டது'' என்றது. "அவர்களின் கடமையின் பேரில் போரை எதிர்த்த நாடுகளுக்கு விரிவுரை" அவர் வழங்குகிறார், ஆனால் ''ஆபத்தான ஈராக்கிய எல்லைப் புறங்களில் மற்ற நாடுகள் தங்கள் வீரர்களின் உயிர்களை ஆபத்திற்குட்படுத்த இந்த தொனியில் இணக்குவிக்க முயற்சிப்பது கடினம்'' என்றும் கூறியுள்ளது.

Zurich- லிருந்து வெளிவரும் Tages-Anzeiger, அமெரிக்க ஜனாதிபதியின் உரையில் முக்கியமான அம்சம் என்னவென்றால் எதைக் கூறவேண்டுமோ, அதை அவர் கூறாமல் விட்டதுதான் என குறிப்பிட்டது. ''ஈராக்கிற்கான போருக்குப் பிந்தைய திட்டங்கள் தொடர்பாக தன் அரசாங்கத்தின் பங்கில் தோல்விகளைப் பற்றியோ, வளைகுடாப் பகுதியிலிருந்து வெளியேறும் மூலோபாயம் பற்றியோ, ஜனாதிபதி கோடிட்டுக் காண்பிக்கவில்லை. பேரழிவு ஆயுதங்களின் தேடலின் தோல்வி பற்றியோ, அமெரிக்க இரகசிய உளவுத்துறை போருக்கு முன் கூறியதான தகவல் பற்றியோ, கூறவில்லை..... ''எமது நண்பர்களை'' புதிய திருப்பங்களையொட்டி கடந்த கால வேறுபாடுகளை மறக்க அழைப்பது மட்டும் போதாது'' என்று இப்பத்திரிகை குறிப்பிடுகிறது.

Frankfurter Rundschau அறிக்கையில் புஷ்ஷின் தடுமாற்றங்கள் என்ற தலைப்பில் இதேபோன்ற முறையில் ''அமெரிக்க ஜனாதிபதி ''டெக்சாஸ் பாணியில் தனது தவறை'' தெரிவித்துள்ளார்.'' என எழுதியுள்ளது. இன்னும் கண்டுபிடிக்கப்படவேண்டிய பேரழிவு ஆயுதங்கள் "பிரச்சினை பற்றியோ, தங்கள் நடவடிக்கை பற்றிய ஆழ்ந்த சுய விமர்சனத்தையோ, பேச்சில் காணமுடியவில்லை.'' என அது கூறியுள்ளது.

Neue Westfälische Zeitung என்னும் நாளிதழ் இன்னும் தெளிவான முறையில், கடந்த வாரம் ஈராக்கைப் பற்றிய புதிய ஐ.நா வின் தீர்மானம் தேவை எனும் அமெரிக்க கோரிக்கை பற்றி எழுதியுள்ளது. ''ஐ.நா- பாதுகாப்புக் குழுவிற்கு இப்பொழுது அமெரிக்க மூலோபாய வல்லுநர்களால் தயாரிக்கப்பட்டு குழப்பத்திலிருந்து தன்னை காப்பாற்றி கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு நமெக்கெல்லாம் ஒரு அவமானம் ஆகும். என்ன நேரிடும் என்று கூறமுடியாத ஆபத்துக்களில் சர்வதேச அமைதிப்படையில் பங்குபெற, உலக சமுதாயம் அழைக்கப்படுகிறது; ஆனால் அந்தப் பணியின் நோக்கங்கள் மற்றும் செயல்முறை பற்றி அவற்றிற்கு சிறிதளவு கூட செல்வாக்கு இல்லா சூழ்நிலையின் கீழ் அழைக்கப்படுகிறது.''

இத்தகைய கடுமையான விமர்சனங்கள் இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஈராக்கைப் பற்றியதில் ஆழ்ந்த பிளவுகளையே கொண்டுள்ளது. ஒரு புறத்தில் ஜேர்மன் அதிபர், தங்கள் நெருக்கமான ஒத்துழைப்பு தொடரவேண்டும் என்ற விருப்பத்தை அறிவிக்க பிரெஞ்சு ஜனாதிபதியை டிரெஸ்டனில் (Dresden) கடந்த வாரம் சந்தித்தார். ஐ.நா விற்கு அமெரிக்கா கொடுத்துள்ள வரைவுத் தீர்மானத்தை ''ஜேர்மனியும், பிரான்சும், ஆதரிக்கும் நிலையிலிருந்து மிகமிகத் தொலைவில் இருப்பதாக" கூறி தங்களை அப்பால் நிறுத்திக் கொண்டனர். மறு புறத்தில் பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, போலந்து, ஆகியவை ஈராக்கிற்கு ஏற்கனவே படைகளை அனுப்பி விட்டன. அமெரிக்காவிற்கு சமீபத்தில் சென்று திரும்பிய இத்தாலிய அரசாங்கத் தலைவரும் தற்பொழுது ஐரோப்பிய ஒன்றிய அவைத் தலைவராகவும் இருக்கும் சில்வியா பெர்லுஸ்கோனி அமெரிக்க ஜனாதிபதியின் கொள்கைகளைத் தாராளமாக புகழ்ந்து பேசினார்.

கடந்த வார இறுதியில் ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், உறுப்பினராவதற்கு காத்திருக்கும் நாடுகளின் 10 அமைச்சர்களுடன் கூடி இத்தாலியில் லேக் கார்டாவில் நடத்திய அதிகாரபூர்வமற்ற கூட்டத்தில், பொதுவான அதிகம் தெளிவற்ற பிரகடனங்களில்தான் ஒற்றுமையை காணமுடிந்தது. அவர்களுடைய அறிக்கை ஈராக்கின் நிலப்பரப்பு ஒருமைப்பாட்டைக் காப்பாற்றவும், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் ஈராக்கிய மக்களுக்கு அதிகாரம் மாற்றப்படவும் வேண்டும் என்பதை மிக முக்கியமான நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஜேர்மனியும் பிரான்சும், லேக் கார்டா கூட்ட வரைவு தீர்மானத்தை சிறப்பாக்க முயன்றபோது, லண்டனில் பிளேயர் அரசாங்கம், ஈராக்கிற்கு படைகளை அனுப்புவதைக் கூடுதலாக்க முயற்சியை மேற்கொண்டது. கூட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு போலந்து அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பில் பங்குபெற தன்னுடைய படைகளையும் அனுப்பி வைத்திருந்தது.

ஐ.நா-வில் புதிய தீர்மானத்தை ஒட்டிய தங்களின் தந்திர வேலைகளில், ஜேர்மனியையும் பிரான்சையும் பொறுத்தவரை கலந்து கொள்வதாக இருந்தால் என்பதைவிட, ஈராக்கிய ஆக்கிரமிப்பில் எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் தாங்கள் கலந்து கொள்வோம் என்பதாகவே இருக்கிறது. அமெரிக்காவிற்கு எதிரான குறை கூறுதல்களைத் தவிர நிதானமான அறிவுரைகளும் கூறப்பட்டன. உதாரணமாக கடந்த ஞாயிறன்று ஜேர்மன் அதிபர் Gerhard Schröder அமெரிக்க வரைவை ''சரியான திசை நோக்கிச் செல்வது" ஆனால் முழு அளவில் அல்ல என்று தெரிவித்தார். ''ஈராக்கிய மறுசீரமைப்பில் உதவ'' ஜேர்மனி தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பால் காட்டினார். உதாரணத்திற்கு தங்கள் அரசாங்கம் ஈராக்கிய போலீசிற்கும் இராணுவத்திற்கும் பயிற்சி அளிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். தக்க ஐ.நா தீர்மானத்தால் சர்வதேசப்படை அனுப்பப்படுவதற்கும் கூட அவர் ஆதரவு தெரிவித்தார்.

போருக்குப் பிந்தைய ஈராக்கில் யார் முக்கிய பங்கை ஆற்றுவார்கள் என்பதுதான் பிரச்சனையின் முக்கிய பொருளாகும். ஜேர்மனியும் பிரான்சும், ஈராக்கில் அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரத்தை குறைக்க இராணுவ மற்றும் அரசியல் நெருக்கடியை பயன்படுத்த நினைக்கின்றன. தங்களுடைய செல்வாக்கைப் பெருக்க ஐ.நாவையும் அவை பயன்படுத்துகின்றன. இதையொட்டி ஐரோப்பிய நிறுவனங்களுக்கு ஈராக்கின் எண்ணெய் கிணறுகளுக்கு வழிகிடைக்கவும் சீரமைப்புத் திட்டங்களில் ஐரோப்பிய நிறுவனங்களின் பங்கை உறுதிப்படுத்தவும் அவை முயலுகின்றன. வாஷிங்டனுக்கு படைவீரர்கள் மற்றும் பண வடிவில் சர்வதேச உதவி உடனடியாகத் தேவைப்படுகிறது, ஆனால் அதன் இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரம் மீது எந்த கட்டுப்பாடுகளையும் ஏற்பதற்கு அது தயாரில்லை.

1990களின் தொடக்கம் வரை, ஜேர்மனியும் பிரான்சும், ஈராக்கின் இரு முக்கிய வர்த்தகப் பங்காளிகளாக இருந்தன. 1991 வளைகுடாப் போர் மற்றும் அதன் பின்னர் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றுக்குப் பின்னரே இந்த பொருளாதார உறவுகள் துண்டிக்கப்பட்டு விட்டன. இரு நாடுகளுமே தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி பொருளாதாரத் தடைகள் முறையில் சில பகுதிகளின் மூலம் தங்கள் வர்த்தக உறவை ஈராக்கோடு பெருக்க முயன்று வந்தன. ஆயினும், சமீபத்திய போர் அத்தகைய திட்டங்களை இறுதியாக முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டன. முதலிலேயே அவை போரை ஏன் எதிர்த்தன என்பதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்றாகும்.

அதன் பின்னர், பாரிசும் பேர்லினும், மத்திய கிழக்கு முழுவதையும் பாதிப்பிற்குட்படுத்தும் சக்தி கொண்டதாக ஈராக் அபிவிருத்தி அடைந்து வருவதையிட்டு கவலை கொண்டனர். இரு அரசாங்கங்களும் தற்பொழுது ஈராக்கில் கொள்கையளவில் தலையிடத் தயாராக இருப்பதற்கு இது இன்னொரு காரணமாகும்.

ஈராக்கில் ஜேர்மனியும் பங்கு கொள்ளவெண்டும் என்று அங்கு பல அரசியல்வாதிகளும் அழைப்பு விடுத்துள்ளனர். கன்சர்வேடிவ் எதிர்ப்பின் வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் Wolfgang Schäuble (Christian Democratic Union -CDU) ஜேர்மன் படைகளின் தலையீடு ஒருபோதும் கூடாது என கூறியதற்கு அரசாங்கத்தை எச்சரித்தார். Welt am Sonntag செய்தி இதழிற்கு அவர் கூறியதாவது: ''ஐ.நா அதிகாரத்தின் கீழ் ஈராக்கில் மறுசீரமைப்பு நடத்தப்பட வேண்டும் என்று முழு நம்பிக்கையிருந்தால் அரசாங்கம் கொள்கையளவில் பங்கு பெறுவதை நிராகரிக்கக்கூடாது. அமெரிக்கருடைய தற்போதைய மனமாற்றத்திற்கு நாம் ஆதரவு கொடுக்கவேண்டும்.''

ஜேர்மன் இராணுவ சங்கத்தின் தலைவரான கேர்னல் Bernhard Gertz இதே முறையில்தான் வாதம் செய்தார். ஜேர்மன் படைகள் பின்னர் பங்குபெறும் நிலைமையை அரசாங்கம் தவிர்க்கக் கூடாது என்ற கருத்தை அவர் கூறினார். Focus எனும் இதழிடம், ஐ.நா ஈராக்கில் ஜேர்மனிய கருத்துக்கு உகந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தால் ''அரசாங்கம் தற்போதைய நிலையில் தொடர்ந்திருக்க முடியாது'' என்று அவர் கூறினார்.

தற்போதைய பிரச்சாரமான ஐரோப்பியத் தலையீடு மனிதாபிமான செயல்களுக்கு உதவியாக இருக்கும் என்பதற்கு மாறாக, ஜேர்மனிய மற்றும் பிரெஞ்சுப் படைகள் ஈராக்கில் பயன்படுத்தப்படுவது மத்திய கிழக்கில் உறுதித் தன்மையை ஏற்படுத்த ஒன்றும் செய்யப்போவதில்லை மற்றும் ஈராக்கிய மக்களிடமிருந்து கணிசமான எதிர்ப்பைத்தான் சந்திக்கும். இப்படைகள் காலனித்துவ முறையில் நாட்டை அடக்கி ஆக்கிரமித்து அதன் எண்ணெய் வளச் சுரண்டலை நோக்கங்கொண்ட ஒடுக்குமுறை ஆக்கிரமிப்பு ஆட்சியின் ஒரு பகுதியாக இருக்கும்.

எனவே சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை அறிமுகப்படுத்துகிறோம் என்ற அரசியல்வாதிகளின் அனைத்து வகையான பகட்டு ஆரவாரப் பேச்சு இருப்பினும், உண்மையில் மிருகத்தனமான சர்வாதிகாரத்திற்குத்தான் தயாரிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. செல்வாக்குடைய அமெரிக்க கல்வியுலகத்தைச் சேர்ந்தவரின் கருத்துக்கள் Finacial Times TM திங்களன்று சொற்குழப்பமின்றி வந்தன. ஹார்வர்ட் பல்கலைக்கழக உயர் அலுவலர் Stepnen Walt, புஷ் நிர்வாகம் ஐரோப்பியக் கொள்கைகளுக்கு இடமளித்து ஈராக்கின் உள் நாட்டுப் படைகள் நாட்டின் கட்டுப்பாட்டைச் செலுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார். ''நோக்கம் ஜனநாயகத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதில்லை" என அவர் எழுதினார். தற்போதைய தேவை அடிப்படையில் குறைந்த திறமையோடு செயலாற்றும் திறனைக் கொண்டு ஆட்சியைச் செலுத்த வேண்டும். துரதிஷ்டவசமாக இது சர்வாதிகாரம் நிறைந்த அரசாங்கமாக இருக்கலாம். ஏனெனில் தற்போதைய முக்கிய நோக்கம் ஈராக் சிதையாமல் காப்பாற்றப் படவேண்டும் என்பது தான்''

ஜேர்மனிய- பிரெஞ்சுப் பங்குபெற்றல் இரு நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையேயுள்ள பதட்டத்தையும் குறைக்காது; சொல்லப்போனால் எதிர் விளைவுதான் ஏற்படும். மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் பொருளாதார செல்வாக்கு மற்றும் அதிகாரம் இவற்றுக்கான போராட்டமானது தீவிரமாக்கப்படும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved