World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா:
ஐக்கிய அமெரிக்கா
US antiwar protesters face $10,000 fines for travel to Iraq ஈராக் சென்றதற்காக அமெரிக்க போர் எதிர்ப்பாளர்களுக்கு 10,000 டொலர்கள் அபராதம் By Jeremy Johnson கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஈராக்கின் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் முக்கியமான சிவிலியன் கட்டமைப்புக்கள் மீது குண்டு வீசித் தாக்குல்கள் நடத்தப்படுவதைக் கண்டிக்கும் வகையில், ஈராக் சென்று கண்டனம் செய்த அமெரிக்க குடிமக்கள் மீது புஷ் நிர்வாகம் வழக்குத் தொடரத் துவங்கியுள்ளது. லண்டன் மற்றும் சிக்காகோ நகர்களில் இயங்கிவரும் மனித உரிமைக் குழுக்களின் சார்பில் 30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 பேர்கள் இந்தக் கண்டனங்களில் கலந்து கொண்டனர். இவர்களில் 20 அமெரிக்கர்களும் அடங்குவர். ஈராக் செல்வதற்கு அமெரிக்கா விதித்திருந்த தடையை மீறி அங்கு சென்ற அமெரிக்கர்களில் பலர் 10,000 டொலர்கள் வரை அபராதம் செலுத்த வேண்டுமென அமெரிக்க நீதித்துறையின் வெளிநாட்டு சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகம் தனித்தனியாக நோட்டீஸ் கொடுத்திருக்கிறது. முதலாவது வளைகுடாப் போர் துவங்குவதற்கு முன்னர் இந்தப் பயணத்தடை விதிக்கப்பட்டதுடன், அப்போது ஈராக்கிற்கு எதிராக மிகக் கொடூரமான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது. இதனை ஐ.நா. சபையும் ஏற்றுக்கொண்டது. ஈராக் மீது அமெரிக்கா 12 ஆண்டுகளில் இரண்டு போர்களை அதன் தலைமையில் நடத்தியுள்ளது. இதன் காரணமாக 5,00,000 ஈராக் குழந்தைகளும் மற்றும் பல்லாயிரக்கணக்கானவர்களும் மாண்டுள்ளனர்.. இப்படிப் பயணத் தடைகளை மீறும் ஒவ்வொரு முறையும் ''நிர்வாக அடிப்படையில்'' 2,75,000 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம். இதற்கு எதிராக அப்பீலுக்கும் வழி இல்லை அல்லது விசாரணையும் நடக்காது. அல்லது கிரிமினல் வழக்குத் தொடரப்பட்டால் 1 மில்லியன் டொலர் வரை அபராதமும் மற்றும் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இப்படி அபராதம் விதிக்கப்பட்ட புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 62 வயது பெண்மணியான பெயித் பிப்பிங்கரும் (Faith Fippinger) 26 வயதான ரக்கோர்டுகள் விற்கும் கடை உரிமையாளரான ரியான் கிளான்சியும் (Ryan Clancy) பகிரங்கமாக அபராதம் கட்ட மறுத்துவிட்டனர். பிப்பிங்கர் ஆகஸ்டு 11 அன்று CNN தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். ''அமெரிக்கா மக்களை கொன்று குவிக்கும் பயங்கர ஆயுதங்களைத் தொடர்ந்து குவித்துக் கொண்டிருப்பதற்கு எனது பங்களிப்பாக எதையும் தரமாட்டேன். எனக்குத் தெரிந்தவரை அமெரிக்கா பிற எல்லா நாடுகளையும் சேர்த்தாலும் மிகப்பெரும் அளவிற்கு மிஞ்சுகிற வகையில் பயங்கர ஆயுதங்களைக் குவித்துக் கொண்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் ஆயுதப் குவிப்பை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது'' என்று அவர் குறிப்பிட்டார். பார்வை குறைந்த குழந்தைகளுக்கான ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அவர் பிப்ரவரி 20 ந் தேதி ஈராக் வந்து சேர்ந்தார். அங்கு அவர் தனது நேரத்தில் பெரும் பகுதியை பாக்தாத்திற்கு 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டோரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகிலுள்ள ஒரு ஈராக் குடும்பத்துடன் வாழ்ந்தார். அருகாமையில் உள்ள டோரா மின்சார உற்பத்தி நிலையத்திற்கு அந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து எரிபொருள் வழக்கப்படுகிறது. பாக்தாத் நகரின் மூன்றில் ஒரு பகுதிக்கு அந்த மின்சார உற்பத்தி நிலையம் மின்சாரம் வழங்கி வருகிறது. முதலாவது வளைகுடாப் போரின்போது இந்த இரண்டு பகுதிகளுமே, அமெரிக்கா நடத்திய குண்டுத் வீச்சுத் தாக்குதல்களில் நாசமடைந்தன. குண்டுவீச்சுத் தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை நிறைந்த ஒரு பாக்தாத் மருத்துவ மனையில் தொண்டு செய்தவற்கு அவர் முன்வந்தார். பாக்தாத்தில் அமெரிக்கப்படைகள் புகுந்த பின்னர் மற்றவர்கள் வெளியேறிவிட்டனர். ஆனால் மருத்துவத்துறையில் எந்தப் பயிற்சியும் இல்லாத பிப்பிங்கர் மட்டுமே மருத்துவமனையில் தொடர்ந்தும் சேவை செய்து கொண்டிருந்தார். சில நேரங்களில் அவர் காயமடைந்தவர்களை தூக்கிப்பிடித்துக் கொள்வார். மயக்க மருந்து கூட பற்றாக்குறையாக இருந்ததினால், சில நேரங்களில் மயக்க மருந்து கொடுக்காமலேயே காயம்பட்ட பகுதிகளை வெட்டி எடுத்தார்கள்.. அந்த உறுப்புகளை பிப்பிங்கர் வெளியில் எடுத்துப் போடுவார். குண்டு வீச்சுத் தாக்குதலில் தனது 6 குழந்தைகளையும் பலிகொடுத்துவிட்ட ஈராக்கைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி இறப்பதையும் பார்த்துக்கொண்டு நின்றார் என பிப்பிங்கர் கூறினார். இந்தச் சேவைக்காக தற்போது பிப்பிங்கர் மீது ''ஈராக் அரசாங்கத்திற்கு தனது சேவைகளை வழங்கியதாக'' குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். சென்ற மே மாதம் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்குப் அவர் பேட்டி கொடுத்தபோது ''நாங்கள் சதாம் ஹூசேனுக்கு ஆதரவு காட்டுவதற்காக அங்கு செல்லவில்லை. அது எங்கள் நோக்கமும் அல்ல. பல போர்களைச் சந்தித்து, பல ஆண்டுகளாக நீடிக்கும் பொருளாதாரத் தடைகளில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி ஈராக் மக்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் சென்றோம். அந்த மக்கள் மிகவும் சோர்ந்து போன நிலையில் உள்ளனர். அவர்களது நாடு சீரழிக்கப்பட்டுவிட்டது'' என்று அவர் கூறினார். அமெரிக்கா, பிரிட்டன் குண்டுவீசித் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த நேரத்திலும், மே 4 ந் தேதி நாட்டுக்குத் திரும்பிய பின்னரும், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையான அவர், ABC யின் ''குட் மார்னிங் அமெரிக்கா'', தேசிய பொது வானொலி, சிட்னி டெய்லி டெலிகிராப்', சான்பிரான்சிஸ்கோ கிரானிக்கில், ஐரிஷ் டைம்ஸ், லண்டன் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய பல்வேறு வானொலி மற்றும் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். ரியான் கிளான்சி பாக்தாத்திற்கு தென் மேற்கில் உள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த உணவுக் கிடங்கு அருகில் மூன்று வாரங்கள் வாழ்ந்ததுடன், அங்கிருந்த குழந்தைகளோடு அவர் பணியாற்றினார். அவர் குழந்தைகளுக்கு பொருளாதாரத் தடையின் கீழ் தடைவிதிக்கப்பட்டிருந்த பென்சில்களையும், காகிதங்களையும் கொண்டு வந்தார். குழந்தைகள் தங்களது வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தாங்களே வரைந்து கொள்வதற்காக இதனைக் கொண்டு வந்ததுடன், அங்கிருந்த இளைஞர்களோடு சேர்ந்து தெருக்களில் கால்பந்து விளையாடினார். அவர் அங்கு தங்கியிருந்த காலத்தில் CBS நியூசைச் சார்ந்த டொன் ராதர் மற்றும் வோல் ஸ்ரீட் ஜெர்னல் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர். குண்டு வீச்சுத் தாக்குதல்கள் துவங்குவதற்கு சற்று முன்னர் அவர் ஜோர்தான் சென்றார். தேவையான ரொக்கப்பணத்தை எடுத்துக்கொண்டு விரைவாக ஈராக் திரும்பிவர அவர் விரும்பியபோதும், திரும்ப ஈராக்கிற்குள் நுழைவதற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். ஒருவாரத்திற்கு பின்னர் அவர் அமெரிக்கா திரும்பியபோது, சுங்க அதிகாரிகள் நீண்ட நேரம் அவரை துருவித் துருவி விசாரணை செய்தனர். அவரிடம் இருந்த ஒவ்வொரு துண்டுக் காகிதத்தையும் புகைப்படப் பிரதி எடுத்தனர். இது நடந்து சில மாதங்களுக்குப் பின்னர், அமெரிக்காவில் வர்த்தக விமானங்களில் (சிவில்) பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளவர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றிருப்பதைத் தெரிந்து கொண்டார். தனிப்பட்ட முறையில் விதிக்கப்படுகிற அபராதங்களுடன் சேர்த்து அமெரிக்க நீதித்துறையானது, ஜூன் 20 ந் தேதி வாய்ஸ் இன் தி வைல்டர்நெஸ் அமைப்பிற்கு விதிக்கப்பட்ட 20,000 டொலர் அபராதத்தை வசூலிப்பதற்காக பெடரல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கிறது. அனுமதி இல்லாமல் ஈராக்கிற்குள் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை 1998 ஆம் ஆண்டு அந்த அமைப்பு இரண்டு முறை மீறியது என்பதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டபோதும், அபராதத்தைக் கட்ட அந்த அமைப்பு மறுத்துவிட்டது. உலக சோசலிச வலைத் தளம் ரியான் கிளான்சியைப் பேட்டிக்கண்டது. நீதித்துறை அவர் மீது எடுத்துள்ள நடவடிக்கை பற்றி கேள்வி கேட்டபோது அவர் கூறியதாவது: ''ஒருவாரத்திற்கு முன்னர் திங்களன்று (ஆகஸ்ட் 4) தொலைபேசி மூலம் முதல் தடவையாக எனக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதைத் தெரிந்து கொண்டேன். நான் அபராதம் செலுத்தாவிட்டால், என் மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்படுமென அவர்கள் எச்சரித்துள்ளனர். அத்தகைய கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் மூலம் எனக்கு 1 மில்லியன் டொலர் வரை அபராதமும் மற்றும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் கிடைக்கும் என எச்சரித்தனர். நான் அபராதம் கட்டினால் என் மீது மீண்டும் கிரிமினல் குற்றச்சாட்டுகள் கூறப்பட மாட்டாது மற்றும் வழக்குத் தொடரமாட்டார்கள் என்று அவர்கள் என்றைக்கும் உறுதிமொழி தரவில்லை'' என்று கூறினார். ''என் மீதான குற்றச்சாட்டு பட்டியலை அனுப்புமாறும், தண்டனைகள் மற்ற விவரங்களைத் தருமாறும் நான் கேட்டேன். ஆனால் எனக்கு அவர்கள் தந்த பதில் ஒரு பக்க பேக்ஸ், வழக்கு எண் மற்றும் தொலைபேசி எண் மட்டுமே ஆகும்'' என அவர் விளக்கினார். ''அவர்கள் கைப்பட எதையும் எழுதி அனுப்பமாட்டார்கள். அப்படி அனுப்பினால் அதை நான் பத்திரிகைகளுக்குத் தந்துவிடுவேன் என்பது அவர்களுக்குத் தெரியும்'' எனவும் தெரிவித்தார். மில்வாக்கி (Milwaukee) பகுதியைச் சேர்ந்த அவரிடம் அரசு அதிகாரிகள் தனது கடையின் சொத்துக்களைப் பறிமுதல் செய்துவிட்டு திவாலாக்கி விடுவதாக அச்சுறுத்தியதாகவும் தெரிவித்தார். ''நான் கிரிமினல் குற்றச்சாட்டுக்களை சந்திக்க விரும்புகிறேன் என்று கூறாவிட்டாலும், நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைத்ததை இளைஞன் என்ற முறையில் வரவேற்க முடியும். எனக்கு என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து கவலை கொண்டிருக்கிறேன். இந்த நாட்டில் இப்படியும் நடக்குமா என்பது குறித்து நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். அவர்கள் 62 வயதான ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியைக் குறிவைத்துக் தாக்குகிறார்களே'' என்று கிளான்சி உலக சோசலிச வலைத் தளத்திற்கு கூறினார். ''என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் என்னவெனில், நான் எதிரிகளுக்கு உதவுகிறேன், ஆறுதல் தருகிறேன் என்பதாகும். ஆனால் நான் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் உதவியும், ஆறுதலும் தந்தேன். இந்தக் குழந்தைகள் எந்த வகையிலும் எதிரிகள் அல்ல. நான் தானியக் கிடங்கில் தங்கி இருந்ததே அதன் மீது தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்கும், அப்படித் தாக்கப்பட்டால் மேலும் பலர் பட்டினி கிடக்க வேண்டிவரும் என்பதாலும் தான்'' என்று மேலும் கிளான்சி கூறினார். ஈராக் போருக்கு எதிராக பகிரங்கமாக கருத்துத் தெரிவிப்போரை தனிமைப்படுத்தி கடுமையான அபராதங்களை விதித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். ''ஈராக்கிற்கு பயணம் செய்த மற்றவர்கள் இறுதியில் போரை ஆதரிப்பவர்களாக மாறிவிட்டனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை. சில செனட்சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈராக்கிற்கு பயணம் செய்திருக்கின்றனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டால், அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால், நானும் அவர்களுக்கு நடுவில் சேர்ந்து கொள்வேன்'' என்று கிளான்சி குறிப்பிட்டார். ஆகஸ்ட் 7 அன்று புஷ் நிர்வாகத்தின் கொள்கையின் மற்றொரு வேதனையை லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் வெளியிட்டிருக்கிறது. சாதாரண மக்கள் ஈராக் சிவிலியன்களை காப்பாற்றினார்கள் என்பதற்காக பெரிய அளவிற்கு அபராதங்களை புஷ் நிர்வாகம் விதித்து வருகிறது. கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் என்று அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரத்தில் புஷ் அண்மையில் ஒரு நிர்வாக கட்டளையை பிறப்பித்திருக்கிறார். தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள ஈராக்கின் எண்ணெய் வளத்தை, அமெரிக்காவின் தனிநபர்கள் மற்றும் பெரிய கம்பெனிகள் பயன்படுத்தும்போது, அவர்கள் நடவடிக்கைகளால் எழும் சிவில் மற்றும் கிரிமினல் செயல்கள் மீது வழக்குத் தொடர்வதற்கு தடைவிதித்து இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி புஷ் 13303 நிர்வாக கட்டளையை பிறப்பித்துள்ளார். அந்தக் கட்டளையின் பொருள் என்னவென்றால், ஈராக் எண்ணெய் விற்பனை மற்றும் ஈராக் பெட்ரோலியப் பொருட்கள் தொடர்பாக எவரும், எந்த நீதி மன்றத்திலும் அமெரிக்கர்கள் மீது அல்லது அமெரிக்க நீதி மன்றத்தின் மீது வழக்குத் தொடர்வதற்கு தடை செய்கின்றது. அப்படி ஏதாவது நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டால் அதுவும் சட்டப்படி செல்லுபடியாகாது. லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகையால் கலந்தாலோசிக்கப்பட்ட சட்ட நிபுணர்கள், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் குற்றவியல்ரீதியாக கவனக் குறைவால் எண்ணெய் கசியவிடல் தொடங்கி அனைத்து மனித உரிமை மீறல்கள் வரையிலான நடவடிக்கைகளுக்காக விசாரணை செய்வதிலிருந்து சட்டப்படி விலக்கு அளிப்பதாக இந்த நிர்வாகக் கட்டளை அமைந்திருக்கிறது என்று வலியுறுத்தினர். பல மாதங்களுக்கு முன்னரே சதாம் ஹூசேன் ஆட்சி வீழ்ந்துவிட்டது. அப்படியிருந்தும் அமெரிக்க மக்கள், அமெரிக்க வெளியுறவுத் துறையின் முன் அனுமதியின்றி பயணம் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்னும் நீடிக்கிறது. உண்மையிலேயே ஜூலை 31 அன்று ஜோர்ஜ் புஷ் அவசர நிலை பிரகடனத்தை மேலும் ஓராண்டு நீட்டித்துள்ளார். 1990 ஆகஸ்ட் 9 ந் தேதி அவரது தந்தையால், முதலாவதாக ''ஈராக்கிற்கான தேசிய அவசரநிலை பிரகடனம்'' செய்யப்பட்டது. அப்போதுதான் பொருளாதார தடைக்கான நிர்வாகக் கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது. 58 வயதான எழுத்தாளர் சூடித் கற்போவாதாரா (Judith Karpova) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைப்பகுயில் பெய்த் பிப்பிங்கருடன் குண்டு வீச்சு துவங்குவதற்கு முன்னர் தங்கியிருந்தார். அவரை உலக சோசலிச வலைத் தளம் பேட்டிகண்டது. அந்த பெண் எழுத்தாளர் மீதும் அமெரிக்க நீதித்துறை விசாரணை நடத்திவருகிறது.. ஆனால் இன்னும் அவருக்கு அபராதம் விதிக்கப்படவில்லை. இன்னும் நீடித்துவரும் பொருளாதாரத்தடை நடவடிக்கைகள் தொடர்பாக கற்போவா கருத்து தெரிவிக்கும் போது ''அத்தகைய பொருளாதாரத்தடை நடவடிக்கைகள் மேலும் குற்றவியல் சார்பு நடவடிக்கைகளாகவே அமைந்துள்ளன.. ஈராக் மக்களது உணர்வை சிதைப்பதற்காக இன்னமும் அமெரிக்கா முயன்று வருகிறது. பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை எடுத்தாவது நீர்த்துப்போன யூரேனியத்தை பயன்படுத்திப் பார்த்தார்கள். ஈராக்கின் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தி ஈராக் மக்களை அடிபணியச் செய்வதற்காக அதிர்ச்சியூட்டி நிலைகுலையச் செய்தார்கள். இன்னமும் எங்காவது துப்பாக்கிகளால் சுடுபவர்கள் பதுங்கி உள்ளார்கள் என்று அமெரிக்கர்கள் நினைத்தால் அந்தப் பகுதியைச் சுற்றி கெடுபிடி செய்து தண்ணீர் வழங்குவதையும், இதர சேவைகளையும் வெட்டி விடுகிறார்கள். இதனால் மேலும் பல குழந்தைகள் மடிகிறார்கள். ஆனால் மக்களது உணர்வுகளை இதுபோன்ற நடவடிக்கைகளால் சிதைத்து விடமுடியாது என்று திருமதி கற்போவா கருத்து தெரிவித்தார். பெய்த் பிப்பிங்கர் மற்றும் ரியான் கிளான்சி ஆகியோரின் ஆதரவாளர்களை அந்த இருவர் மீதான வழக்குகளையும் கைவிடுமாறு கருவூலத்துறையைக் கோருமாறு திருமதி கற்போவா வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறார். கண்டனக் கடிதங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். US Department of the Treasury |