World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian bomb blasts: the end product of communal politics

இந்திய குண்டு வெடிப்புக்கள்: வகுப்புவாத அரசியலின் இறுதி விளைவுகள்

By Sarath Kumara
1 September 2003

Back to screen version

இந்தியாவின் நிதிபுழக்க மையமான பம்பாயில், சென்ற வாரம் நடைபெற்ற மிகக்கடுமையான இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில் குறைந்த பட்சம் 52-பேர் பலியாகினர் மற்றும் 150-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மும்பை நகரின் பிரதான நகைக்கடை பகுதியான ஜவேரி பஜாரில் இந்துக்களின் மும்பா தேவி கோயிலுக்கு அருகே ஒரு குண்டு வெடித்தது. மற்றொரு குண்டு இந்தியாவின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படுகின்ற பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் பொழுது கட்டப்பட்ட நினைவுச் சின்னமான, சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கின்ற நகரின் முக்கிய இடங்களுள் ஒன்றான கேட்-வே ஆஃப் இந்தியா- அருகில் வெடித்தது.

டாக்சிகளில் வைக்கப்பட்ட இரண்டு குண்டுகளும் சென்ற திங்கட்கிழமையன்று 15-நிமிட இடைவெளியில் இரண்டு டாக்சிகளும் வெடித்துச்சிதறின. இரண்டு பகுதிகளுமே மக்கள் கூட்டம் நிறைந்தவை மற்றும் விளைவு வகைதொகையற்ற பாதிப்பாக இருந்தன. போலீசாரின்படி இரண்டு டாக்சிகளுமே வாயு சிலிண்டர்கள் பொருத்தப்பட்டு இயங்கியவை எனவே குண்டு வெடிப்பின் வீச்சு மிகவேகமாக பரவலாக இருந்தது. டாக்சிகளின் பாகங்கள் 100-மீட்டர்களுக்கு அப்பால் போய் சிதறிவிழுந்தன.

சென்ற டிசம்பர் முதல் மும்பையில் வேறு நான்கு குண்டுவெடிப்புக்கள் நடந்துள்ளன. ஆனால் சென்ற திங்கட்கிழமையன்று நடைபெற்ற குண்டு வெடிப்புக்கள் மிகப்பெரும் அளவில் நாசம் விளைவித்தன. 260-பேர் மாண்ட மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்த 1993-ம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புளுக்கு பின்னர் மும்பை நகரில் இவ்வளவு கொடூரமான குண்டுவெடிப்பு நடைபெற்றதில்லை.

சென்ற வாரகுண்டு வெடிப்புக்களுக்கு யாரும் பொறுப்பு என்று அறிவிக்கப்படவில்லை. போலீசார் உடனடியாக காஷ்மீர் பிரிவினைவாத போராளிகள் குழுக்களான லஷ்கர் இ-தாய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முஹம்மத் மற்றும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இந்திய இஸ்லாமிய மாணவ இயக்கம் (SIM) ஆகியவற்றின் மீது குற்றம் சாட்டினர். ஆனால் அந்த அமைப்புக்களின் ஈடுபாடு தொடர்பாக போலீசார் எந்தவிதமான ஆதாரத்தையும் தரவில்லை. இந்த குண்டுவெடிப்புக்களில் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐந்துபேர் கைது செய்யப்பட்டிருப்பதாக நேற்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்களைப் பற்றி எந்த விபரத்தையும் போலீசார் வெளியிடவில்லை.

இந்த தாக்குதலுக்கு யார் பொறுப்பாக இருந்தாலும் இது மிகவும் ஆழமான பிற்போக்குச்செயலாகும், இந்த நடவடிக்கையை ஆளும் பாரதீய ஜனதா கட்சியும் அதன் இந்து தீவிரவாத கூட்டாளிகளும் வகுப்பு குரோதங்களை வளர்ப்பதற்கு ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றது. மும்பை நகரத்திலேயே ஆயிரக்கணக்கான B.J.P- தொண்டர்களும், ஆதரவாளர்களும் பாசிச சிவசேனை கட்சியின் ஆதரவாளர்களும் சென்ற வியாழக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வகுப்புவாத வன்முறைகள் தொடர்பாக இந்தியாவில் பரவலான கவலை நிலவுகின்றது. ''ஒவ்வொரு விநாடியும் மும்பையில் ஆபத்து ஏற்படும் என்று நான் பயந்து கொண்டே வாழ்கிறேன் அப்படியிருந்தும் எனது வாழ்வை நடத்துவதற்காக நான் இன்றைக்கு வேலைக்குச் செல்கிறேன்'' என்று முஸ்லீம் தையல் தொழிலாளி ஒருவர் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும் போது தெரிவித்தார். அப்படியிருந்தும் அனைத்து மதங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளுக்கு திரண்டு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தம் வழங்க முன்வந்தனர். ''ஜவேரி பஜார் பகுதியில் முஸ்லீம்களும், இந்துக்களும், ஒருவருக்கொருவர் உதவிபுரிந்தனர். எரிந்து கொண்டிருக்கின்ற கார்கள் மற்றும் கடைகளிலிருந்து ரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களை வெளியே இழுத்து மருத்துவமனைகளுக்கு அனுப்புவதில் இரு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து பாடுபட்டனர்'' என்று இந்து நாளேடு செய்தி வெளியிட்டிருக்கின்றது.

இந்த தகவலோடு ஒப்புநோக்கும்போது, இந்தியாவின் துணைப்பிரதமர் எல்.கே.அத்வானி உடனடியாக வகுப்பு மோதல்களை கிளறுகின்ற வகையில் குரோதங்களை உருவாக்குகின்ற வகையில் இந்தியாவின் எதிரியான பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டினார். இஸ்லாமாபாத்தை நேரடியாக மும்பை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டது என்று அவர் குற்றம் சாட்டாவிட்டாலும் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுத்துநிறுத்துவதில் பாகிஸ்தான் போதுமான அளவிற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். ''பாகிஸ்தானின் பயங்கரவாத போர் ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் பஞ்சாபிற்கு எதிராக மட்டும் நடைபெறவில்லை இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டுக்கோப்பையும் இந்திய நாட்டையும் குழப்பத்தில் ஆழ்த்துவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது'' என்று அத்வானி குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதலை கண்டித்து இஸ்லாமாபாத் அதிகாரபூர்வமான அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையை அத்வானி அலட்சியம் செய்தார். 2001-டிசம்பரில் இந்திய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் 20-க்கு மேற்பட்டவர்களை இந்தியாவிடம் ஒப்படைத்து பாகிஸ்தான் "தனது நேர்மையை நிரூபிக்க வேண்டும்" என்று அத்வானி கேட்டுக்கொண்டார். மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லையில் பெருமளவிற்கு படைகளை குவிப்பதை புதுதில்லி மேற்கொண்ட பின்னர், அணு ஆயுதங்களை வைத்துக்கொண்டுள்ள இரண்டு நாடுகளுமே போர் புரிவதற்கான விளிம்பு நிலைக்கு வந்துவிட்டன.

உடனடியாக இரண்டு நாட்டு இராணுவங்களும் மோதிக்கொள்வதற்கான சமிக்கை இல்லாவிட்டாலும், வகுப்புவாத அரசியல் தனது இயல்பான போக்கில் நடைபோட்டுக்கொண்டே இருக்கிறது. மும்பை குண்டுவெடிப்புக்களை தொடர்ந்து இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். "பயங்கரவாத" நடவடிக்கை நீடிக்குமானால் இரு நாடுகளுக்கிடையில் நடத்த திட்டமிட்டுள்ள பேச்சுவார்த்தைகள் நடக்காது என்று அவர் கூறியுள்ளார். காஷ்மீர் போன்ற கொந்தளிப்பு நிறைந்த பகுதிகளில் வழக்கமான நிலையை உருவாக்கவேண்டியது இந்தியாவின் பொறுப்புதான் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் உடனடியாக இதற்கு பதிலளித்தது.

இந்தியாவிற்குள் வகுப்புவாத கொந்தளிப்புக்கள் பெருகுவதற்கு பிஜேபி தான் நேரடியாக பொறுப்பாகும். குஜராத் மாநிலத்திலிருந்து இந்துக்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட குண்டுகள் மும்பையில் வெடித்திருக்கலாம் என்பதற்கு சில அறிகுறிகள் உள்ளன. இரண்டு குண்டு வெடிப்புக்களில் ஒன்று மும்பையின் ஜவேரி பஜாரின் குஜராத்திகள் வாழுகின்ற இடத்திற்கு அருகே வெடித்திருக்கிறது. டிசம்பர் 6, ஜனவரி 28 மற்றும் மார்ச் 4 ஆகிய நாட்களில் நடைபெற்ற மூன்று முந்தைய குண்டு வெடிப்புக்களும் மும்பையில் குஜராத்திகள் வாழும் பகுதிகளில் நடந்திருக்கின்றது.

2002-மார்ச் மாதம் பிஜேபி கும்பல்கள் விஷ்வ ஹிந்து பரிஷத் (V.H.P) மற்றும் பஜ்ரங்தள் ஆதரவாளர்களால் குஜராத்தில் வகுப்புவாத படுகொலைகள் நடத்தப்பட்ட பின்னர், இந்த குண்டு வெடிப்புக்கள் நடைபெற்றுள்ளன. இதன் விளைவாக 2500-முஸ்லீம்கள் பலியானதாக மதிப்பிடப்பட்டிருக்கின்றது. குஜராத்தில் பிஜேபி அரசாங்கத்தின் மறைமுக ஆதரவோடு நடத்தப்பட்ட இந்த வன்முறைகளில் 1,50,000- மக்கள் வீடு இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது. குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி மற்றும் பிஜேபி தலைமையின் ஒரு சில பகுதிகள், மாநிலம் வகுப்புவாத அடிப்படையில் துருவமுனைப்பட்டு நிற்பதை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு, சென்ற ஆண்டு குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற, இந்து பேரினவாத உணர்வுக்கு நேரடியாக வேண்டுகோள் விடுத்தனர்.

18-மாதங்களுக்கு பின்னர், குஜராத் படுகொலைகள் இன்றைக்கும் வகுப்புவாத பதட்டங்களுக்கான மூலாதாரமாக விளங்குகின்றது. அசைக்க முடியாத சாட்சியங்கள் இருந்தும், குஜராத்தில் நடைபெற்ற வன்முறைகள், கற்பழிப்பு, படுகொலைகளில் எவரும் தண்டிக்கப்படவில்லை. போலீசார், நீதிமன்றங்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டிருக்கின்றனர். குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் அல்லது குறிப்பிடத்தக்க புலன் விசாரணை எதுவும் இல்லாமல் போலீசார் ஒட்டுமொத்தமாக கைவிட்டுவிட்டனர். அண்மையில் பெஸ்ட் பேக்கரி வழக்கில் தீவைப்பு நிகழ்ச்சியை நேரில் கண்டவர்கள் தங்களது சாட்சியங்களை இடையில் மறுத்து கூறவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் அந்த அளவிற்கு மிரட்டப்பட்டனர்.

குஜராத்தில் முஸ்லீம்கள் பழிவாங்கப்பட்டதன் காரணமாக பல்வேறு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கு புதிதாக முஸ்லீம் இளைஞர்கள் ஆதரவாளர்களாக மாறியிருக்கக்கூடும் என்று இந்திய பத்திரிகைகளே கூட கருத்து தெரிவித்துள்ளன. "குஜராத் கலவரங்கள் போன்ற சம்பவங்களினால் பீதியுற்ற நிலைகுலைந்து போன இந்திய முஸ்லீம்கள் இந்திய நிர்வாக அமைப்பில் தங்களுக்கு நீதி கிடைக்காது என்று கருதுபவர்களுள் சிலர் இது போன்ற மும்பை குண்டுவெடிப்பு சம்பவங்களில் சம்மந்தப்பட்டிருக்கலாம்" என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் கட்டுரையாளர் ஊகித்து எழுதியிருக்கிறார்.

1992- டிசம்பரில் இந்து கும்பல் ஒன்று அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்துதள்ளியது. அந்த இடத்தில் கோயில் கட்டுவதற்கான இயக்கம் ஒன்றை இந்துக்கள் நடத்திவருவதால் வகுப்புவாத மோதல்கள் அதிகரித்து வருகின்றன. பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் பிஜேபியும் அத்வானி போன்ற தலைவர்களும் நேரடியாக சம்மந்தப்பட்டிருந்தனர். அந்த நேரத்தில் இந்திய துணைக்கண்டம் முழுவதிலும் பரவலான வகுப்பு வன்முறைகள் தூண்டிவிடப்பட்டன மற்றும் அதன் விளைவாக 3,000-பேருக்கு மேல் மாண்டனர்.

மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களுள் மும்பையும் ஒன்று. சிவசேனை தலைமையில் சென்ற இந்து கும்பல்கள் முஸ்லீம்களின் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை தாக்கி தகர்த்தனர். இந்த தாக்குதல்களால் 575-பேர் மாண்டனர் மற்றும் 50,000-பேர் வீடு இழந்து தவித்தனர். இந்த நிகழ்ச்சிகளுக்கு பழிக்குபழி என்ற அடிப்படையில் 1993-ல் முஸ்லீம் தீவிரவாதிகள் மும்பையில் தொடர்குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக அப்போது கூறப்பட்டது.

பிஜேபி தனது அரசியல் அடித்தளத்தை வலுப்படுத்திக்கொள்வதற்காக பிரச்சனையை முழுமையாக பயன்படுத்தி இந்து பேரினவாத உணர்வை உசுப்பிவிட்டது. என்றாலும், பதவிக்கு வந்ததும் வாஜ்பேயி மற்றும் அத்வானி இருவரும் அந்த பிரச்சனையை ''அமுக்கி வாசிக்க'' முயன்றனர், இந்து கோயில் கட்டுவதற்காக மக்களை பிளவுபடுத்தும் பிரச்சனையை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று விட்டுவிட்டனர். இப்படி நீண்டகாலமாக இழுபறி நிலையிலிருந்த ஒரு பிரச்சனை இந்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சித் துறையினர் அண்மையில், அழிக்கப்பட்ட மசூதி இருந்த இடம் முன்னர் இந்துக்களால் பயன்படுத்தப்பட்டு இருந்ததற்கான சான்றை கண்டுபிடித்திருப்பதாகக் கூறி நீதிமன்றத்திற்கு அறிக்கை தந்திருப்பதாக கூறப்படுவதை அடுத்து தற்போது ஒரு முடிவிற்கு வந்திருப்பதாக தோன்றுகிறது.

இந்த அறிக்கையை இந்து பேரினவாத அமைப்புக்கள் பிடித்துக்கொண்டன. ராமர் கோவில் கட்டும் பணிதுவங்க வேண்டும் என்று V.H.P- பொதுச்செயலாளர் பிரவீன் தெகாடியா வெளியிட்டுள்ள அறிவிப்பில்: ''அயோத்தியில் கோயில் கட்டுவதற்கு பொதுமக்களின் ஆதரவை திரட்டுவதற்கான வெகுஜன இயக்கம் தொடங்குவதாக நாங்கள் அறிவித்திருக்கிறோம்'' என்று குறிப்பிட்டிருந்தார். பிஜேபி தலைவரான வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''இந்த தகராறுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு கோயிலை திரும்ப கட்டவேண்டும்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சென்ற வாரம் இந்து நாளிதழுக்கு பேட்டியளித்த ஒரு மூத்த பிஜேபி தலைவர், ''ராமர் கோவில் விவகாரத்தை பயன்படுத்தி நாங்கள் எங்களது இந்து வாக்குகளை திரும்ப பெற்றுவிடுவோம்'' என்று அறிவித்திருக்கிறார். இந்திய மக்களில் மிகப்பெரும்பாலோர் சமுக நிலமைகளால் வாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக்காண திராணியில்லாத பிஜேபி, எதிர்கட்சிகள் உடந்தையாக இருப்பதை பயன்படுத்தி, தனக்கு சரிந்துகொண்டுவரும் அரசியல் ஆதரவை தூக்கி நிறுத்த வகுப்புவாதத்தை தூண்டி விடுவதற்கு மனவுறுத்தல் கொள்ளாதிருக்கிறது.

பிஜேபி வரிசையாய் பல தோல்விகளை சந்தித்த பின்னர், முஸ்லீம்களுக்கு எதிரான விஷப் பிரச்சாரத்தின் மூலம் சென்ற ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலில் வென்றது. இதற்கு காங்கிரசும் இதர எதிர்கட்சிகளும் ஒத்துப்போயின. நவம்பரில் பிஜேபி ஐந்து மாநிலங்களில் தேர்தல்களை சந்திக்க இருக்கின்றது. தில்லி தலைநகரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டிஸ்கார், மற்றும் மிஜோரமில் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன மற்றும் அடுத்த ஆண்டு தேசிய அளவிலான தேர்தல்களும் நடக்க இருக்கின்றன. தேர்தலில் பிஜேபியின் மூலோபாயம் எதுவாக இருக்கும் என்பது ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டு விட்டது. இந்து பேரினவாத உணர்வுகளுக்கு பகிரங்கமாய் வேண்டுகோள் விடுப்பதே அதன் மூலோபாயம் என்பது தெளிவாகிவிட்டது.

இந்த சிக்கலான அரசியல் சூழ்நிலைதான் மும்பையில் குண்டுவெடிப்புக்களை உருவாக்கி இருக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved