World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Rome conference on EU constitution reveals intra-European conflicts

ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலமைப்பு பற்றிய ரோம் மாநாடு, ஐரோப்பிய உள்முரண்பாடுகளை எடுத்துக்காட்டுகின்றது

By Peter Schwarz
14 October 2003

Use this version to print | Send this link by email | Email the author

அரங்க வடிவமைப்பே அனைத்தையும் தெரிவித்தது. இத்தாலிய அரசாங்கத்தின் தலைவர், சில்வியோ பெர்லுஸ்கோனி, அக்டோபர் 4ம் திகதி ஆறாவது ஐரோப்பிய அரசுகளுக்கிடையேயான மாநாட்டின் அரங்கமாக ரோமின் EUR மாவட்டத்தை தேர்ந்தெடுத்து, அதை ஆடம்பரம், வனப்பு, பாசிசத்தின் நினைவுகள் இவை கலந்த கற்பனை வண்ணத்தைக் குழைத்து அழகுபடுத்தியிருந்தார்.

நகரின் மையப்பகுதிக்கும் கடலுக்கும் இடையே அமைந்துள்ள ''Espsizione Universale di Roma" (EUR) முசோலினியின் பெருமை நிறைந்த கட்டிடங்களில் ஒன்றாகும். 1942 உலகக்கண்காட்சி அங்கு நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் உலகப்போரினாலும், பாசிசத்தலைவரின் அவமதிப்பான முடிவினாலும் அது கட்டி முடிக்கப்படவில்லை. அப்போதிலிருந்து, இப்போது வரை, தொல்சீர் ரோமானிய வனப்பையும், வருங்கால கூறுபாடுகளின் ஒயிலையும், ஒரளவு இணைத்த தற்காலிக அமைப்பாக இயங்கி வருகிறது. ஒளிப்பூச்சு உடைய நார் பாய்களால் தயாரிக்கப்பட்ட , செயற்கை சலவைக் கற்களாலான தூண்களினாலும் பெர்லுஸ்கோனி அதை அலங்கரித்திருந்தார். மாநாட்டு சுவர்களில் மிகப்பெரிய பிளாஸ்டிக் துணிப்பாய்கள், பழைய ரோமானிய சீரிய நிலை, மறுமலர்ச்சிக்கால சிறப்புக்களை இணைத்த காட்சிகளைச் சித்தரித்தன. "ஒரு விதமான பேரரசு டிஸ்னிலாந்து" என ஒரு வருணனையாளர் குறிப்பிட்டார். குதிரைமேல் கைகளை விரித்தவாறுள்ள il Duce வின் (முசோலினியின்) சிலை நாட்டுத்தலைவர்களுக்கு மதிப்பளிப்பதற்காக புதுப்பிக்கப்பட்டிருந்தது.

உச்சிமாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த 300,000 ஆர்ப்பாட்டக்காரர்கள், கூட்டம் நடக்கும் இடத்திற்கருகில் வரமுடியாமல் தடுத்து நிறுத்த மிகப்பெரிய போலீஸ் படை குவித்துவைக்கப்பட்டிருந்தது.

இப்பொழுதுள்ள 15 நாடுகளின் அரசாங்க தலைவர்களுடன் பத்து புதிய உறுப்புநாடுகளின் தலைவர்கள் மற்றும் 3 புதிய உறுப்பினர் உரிமை கோரும் நாடுகளின் தலைவர்கள் உள்ளடங்கலான மாநாட்டு மத்தியாக ஐரோப்பிய அரசியலமைப்பின் நகல் இருந்தது. இரண்டு ஆண்டுகள் முயற்சிக்கு பின்னர், ஒரு "ஐரோப்பிய பேரவை" யினால், பழைய பிரெஞ்சு ஜனாதிபதி Valéry Giscard d'Estaing இன் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்ட அரசியல் அமைப்பின் வரைவும், பெர்லுஸ்கோனி தோற்றுவித்துள்ள மாநாட்டின் பின்னணி போலவே, ஏமாற்றுவித்தைகள், நப்பாசைகள் போன்றவற்றின் கலவையாக விளங்கியது.

பேரவை என்ற சொல்கூட ஒரு மோசடிதான். தற்காலத்திற்கு, உண்மையான ஜனநாயக அரசியலமைப்புக்களை தயாரித்த அமெரிக்க, பிரெஞ்சுப் புரட்சிக்காலங்களின் மாநாடுகளை நினைவுபடுத்துகிறது. அந்த மாநாடுகள் பரந்த முறையில் மக்கள் இயக்கங்களை நம்பி இருந்தபோது, ஐரோப்பிய மாநாடு, பெரும்பாலும் மூடிய கதவுகளுக்கள்ளே நடத்தப்படுகிறது. இதன் 105 உறுப்பினர்களுக்கும் ஜனநாயக சட்டபூர்வத்தன்மை கிடையாது. இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல, மாறாக தேசிய, ஐரோப்பிய பாராளுமன்றங்களாலும், தேசிய அரசாங்கங்களாலும், ஐரோப்பிய ஒன்றியக் குழுவினாலும் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களாவர். மாநாட்டின் பணி தொடங்கியவுடன், ஜேர்மனியின் வெளிநாட்டு மந்திரி ஜோஸ்கா பிஷ்ஷர் (Joschka Fischer) ஜேர்மனிய நலன்களுக்குக் கூடுதலான நலன்களை சேர்க்கும் வகையில், தன்னையே உறுப்பினராக நியமித்துக்கொண்டார். மாநாட்டுத்தலைவர் Giscard d'Estaing, ஒரு சர்வாதிகாரிபோல் பிரான்சின் நலன்களைப் புரட்டுவகையில் பாதுகாக்கும் முறையில் நடந்து கொள்கிறார் என்று அடிக்கடி கோபத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

உதாரணமாக, வழமையாக ஐரோப்பிய ஒற்றுமைக்கு ஆர்வத்துடன் நிற்கும் லக்சம்பேர்க்கின் பிரதம மந்திரியான Jean Claude Juncker, ஜேர்மனிய வார இதழான Der Spiegelக்கு ஜூன் மாதம் பின்வருமாறு கூறினார்: "நான் ஐரோப்பிய அரசியலில் 20 ஆண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன். இதுபோல் வெளிப்படையற்றதும், ஜனநாயகமுறையில் எண்ணங்கள் போட்டியிட்டு கொள்கைகள் வகுக்கும் செயல்முறை முழுமையாக மறைக்கப்படுவதுமான நடைமுறையை கண்டதேயில்லை. இம்மாநாடு பெரிய ஜனநாயகக் காட்சி என பறைசாற்றப்பட்டது. நான் இதைப்போன்ற ஒரு இருண்ட அறையை பார்த்ததே கிடையாது."

இம்மாநாட்டின் முக்கியபணி, ஐரோப்பிய அரசாங்கங்களுக்கடையே வளர்ந்து வரும் முரண்பாடுகளினால் ஊனமுற்றுவிடுமோ என்ற அச்சத்தையும், பொதுமக்களிடையே வளர்ந்துவரும் சீற்றத்திலிருந்தும் ஐரோப்பிய நிறுவனங்களை காத்து ஒரு சட்டப்பாதுகாப்பை அளிப்பதாகும். இதில் வருங்காலத்திற்காக கண்ணோட்டம் ஏதும் வரையப்படவில்லை. மாறாக "இப்பொழுதுள்ள சட்டத்தை, தொகுத்தல், முறைப்படுத்துதல், எளிமைப்படுத்துதல், பகுத்தறிவிற்கு உட்படுத்துதல் என்பவையே அடங்கும்" என்று சர்வதேச சட்ட வல்லுனர் டானியல் தெளரெர் Neue Surcher Zeitung பத்திரிகைக்கு கூறியுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பிய அரசாங்கங்களுக்கிடையேயான, நீசிலில் (Nice) நடந்த மாநாடு கடும் உள்முரண்பாடுகளின் விளைவாகத் தோல்வியடைந்ததை அடுத்து இம்மாநாடு உயிர்பிக்கப்பட்டுள்ளது. 2004ல் உறுப்பினர் எண்ணிக்கை 15லிருந்த 25 ஆனாலும் EU திறமையுடன் செயல்படும் வகையில், ஐரோப்பிய அமைப்புகளை இணைப்பதை அம்மாநாடு இலக்காகக் கொண்டிருந்தது. ஜேர்மனிக்கும், பிரான்சிற்கும் இடையே விளைந்த முரண்பாடுகளாலும், பெரிய நாடுகள் தங்களை ஆதிக்கத்திற்கு உட்படுத்திவிடுமோ என்று சிறிய நாடுகள் பயந்ததாலும், அத்திட்டம் தோல்வியுற்றது.

இந்த மாநாடு, நீசிலில் வெற்றி அடையமுடியாததை வேறுவழிகளில் அடையவாவது வேண்டும் என கூட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் பிரான்ஸ், ஜேர்மனியின் நலன்களை கருத்திற்கொண்டு அமைக்கப்பட்ட இவ்வரசியலமைப்பு, மத்திய ஐரோப்பிய அமைப்புகளை வலுப்படுத்தவும் சிறிய நாடுகளுக்கு குறைந்த உரிமைகள் கொடுப்பதையே இலக்காகக் கொண்டுள்ளது. ஆனால், ரோமில் நடைபெற்ற மாநாடு ஐரோப்பிய நாடுகளுக்கிடையே முரண்பாடுகள் நீசிலில் இருந்ததைவிடக் கூர்மையாகி விட்டதைத்தான் காட்டுகிறது.

ஜேர்மனியும், பிரான்சும் இப்பொழுது இணைந்து செயல்பட்டு, ஒரளவு பெனிலுக்ஸ் நாடுகளின் (பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க் நாடுகளின்) ஆதரவைப் பெற்றாலும், இத்தாலி, பிரிட்டன், ஆஸ்திரியா, பின்லாந்தின் தலைமையில் சில சிறிய நாடுகளின் கூட்டு ஆகியவை புதிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன், தங்கள் உரிமைகள் குறைக்கப்படுவதை ஆவேசத்துடன் நிராகரிக்கின்றன. நடுத்தர அளவு உடைய இரு நாடுகளான ஸ்பெயினும், போலந்தும், நீசில் முடிவெடுக்கப்பட்டதுபோல், தாங்களும் நான்கு பெரிய நாடுகளுக்கு சமமான வாக்குத்தரத்தை தொடர்ந்து பெற்றிருக்கவேண்டும் என வற்புறுத்தியுள்ளன.

கீழேயுள்ளவை முக்கிய நெருக்கடிக்கு உட்பட்டுள்ளன:

வரைவு அரசியலமைப்பு, ஐரோப்பிய ஒன்றியக்குழு, இரண்டரை ஆண்டு வரை காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும், தலைவர் ஒருவரால் கண்காணிக்கப்படும். அவருடைய பதவிக்காலம் ஒரு முறை நீட்டிக்கப்படலாம் எனவும் கருதுகிறது. குழுவில் அனைத்து உறுப்பு நாடுகளுடைய அரசாங்க மற்றும் நாட்டுத்தலைவர்களும் இருப்பதோடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பைக் கொண்டிருக்கும். இதுவரை, குழுத்தலைமை ஆறுமாத காலத்திற்கு ஒருவர் என, அனைத்து உறுப்பு நாடுகளாலும், சுழற்சி முறையில் இருந்தது. பெரியநாடுகள் ஐரோப்பிய ஒன்றிய தலைவரை தங்கள் நாடுகளிலிருந்தே பிரத்தியேகமாக தேர்ந்தெடுத்துவிடுமோ என்ற பயத்தில் சிறிய நாடுகள் புதிய சீரமைப்பை நிராகரித்துள்ளன.

மேலும் ஒரு ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு மந்திரி என்ற பதவி தோற்றுவிக்கப்பட்டு, இந்நபர் ஐரோப்பிய குழுவின் (EU-Commission) உறுப்பினராகவும் இருந்து, ஐரோப்பிய ஒன்றியக்குழுவிற்கு (Council of the European Union) பொறுப்பாக இருக்கவேண்டும். முன்னர் இவ்விரு பணிகளும் தனித்தனியே ஒப்படைக்கப்பட்டிருந்தன. இந்த வெளிநாட்டு மந்திரிப்பதவி குறித்து, குறிப்பாக பிரிட்டனுக்கு தனிக்கருத்துக்கள் உள்ளன. லண்டன் தன்னுடைய வெளியுறவுக் கொள்கையை தன் நாட்டுக்கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்துக்கொள்ள விரும்புகிறது.

குழுவில் வாக்குகளின் பலம் தொடர்பாகவும் கடும் எதிர்ப்பு உட்பட்டுள்ளது. அரசியல் அமைப்பின்படி, "ஒரு தகுதியான பெரும்பான்மை" என்பது, ஐரோப்பி ஒன்றியத்தின் 60% மக்களை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பான்மையான நாடுகள் உடன்படுமானால் ஒரு முடிவு எடுக்கலாம் என்பதாகும். ஸ்பெயினும், போலந்தும் இதைப்பற்றிச் சீற்றம் கொண்டுள்ளன. ஏனெனில் நீஸ் மாநாட்டில் பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, ஜேர்மனி ஆகியவை 29 வாக்குகளை கொண்டிருந்தபோது, ஸ்பெயினும், போலந்தும் ஒவ்வொன்றும் தலா 27 வாக்குகளை கொண்டிருந்தன. புதிய விதிகள் இவற்றின் செல்வாக்கை குறைத்துவிடும். ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதம் ஜேர்மனியில் உள்ளதால் பேர்லினால் எளிதாக பெரும்பான்மை ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும். இது போலந்துடைய மக்கட்தொகையைவிட இரு மடங்கு ஆகும்.

கொள்கையளவில், பிரிட்டன் இப்புதிய விதிகளுக்கு உடன்படுகிறது, ஆனால், குழுவிற்கு குறுகிய அதிகாரம் மட்டுமே கொடுக்கப்படவேண்டும் எனவும், வரிவிதிப்பு பாதுகாப்பு, வெளிநாட்டுக்கொள்கை போன்றவை, உறுப்புநாடுகளின் பொறுப்பிலேயே இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

அரசியலமைப்பு வரைவின்படி, குழு உறுப்பினர் தொகை 15 வாக்களிக்கும் உரிமையுடைய உறுப்பினர்களை கொண்டிருக்கும். இப்பொழுது, ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நிர்வாகக் குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை 20 ஆகும். ஐந்து பெரிய நாடுகள் ஒவ்வொன்றும் இரு ஆணையர்களை (குழு உறுப்பினர்களை) அனுப்பி வைக்கின்றனர்; சிறிய நாடுகள், ஒரு உறுப்பினரை அனுப்பிவைக்கின்றன. புதிய விதிகளின்படி, பெரிய நாடுகள் ஒவ்வொன்றும் ஒரு உறுப்பினரை அனுப்பிவைக்கும் உரிமையைக் கொண்டுள்ளன; சிறிய நாடுகள் நிரந்தர உறுப்பினர் உரிமை பெறாமல், மாறி மாறித்தான் உறுப்பினரை அனுப்பமுடியும். இது பெரும்பாலான சிறிய நாடுகளால் ஏற்கப்படவில்லை.

சில உறுப்புநாடுகள் அரசியல் அமைப்பின் முன்னுரை, ஐரோப்பாவின் "கிறிஸ்தவ மரபுச் செல்வத்தை" வெளிப்படையாக கூற வேண்டும் எனக்கோரியுள்ளனர். இது பின்னர் துருக்கி அங்கத்துவ நாடாகச்சேர தடையை உருவாக்கும்.

ரோமில், ஐரோப்பிய பாதுகாப்புக்கொள்கை ஒன்றில்தான் சமாதானமான உடன்பாடு ஏற்பட்டது. பிரான்சும், ஓரளவு ஜேர்மனியும் ஐரோப்பிய இராணுவ அமைப்பு ஏற்படுத்துவதை, "பல-முனை உலகம்" ("multi-polar world,") இற்கான பங்களிப்பு எனவும், அமெரிக்காவிற்குச் சமமான பெரும் வல்லரசாக ஐரோப்பா உருவாக அமையும் என கருதுகின்றன. ஸ்பெயின், இத்தாலி, போலந்து போன்ற நாடுகளுடைய ஆதரவுடன், பிரிட்டன் அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொள்ளவே வலியுறுத்துகிறது. பிரிட்டனின் ஆட்சேபனைகள் இருந்ததால், நேட்டோ (NATO) விடமிருந்து ஐரோப்பிய ஒன்றியம் இராணுவரீதியில் விடுதலையுற்று இருக்க வேண்டும் என்ற முயற்சிகள் பலமுறை தோல்வியுற்றன.

இந்த வேறுபாடுகள் தொடர்ந்து இருக்கின்றன; ஆனால் சில முக்கியமான விஷயங்களில் லண்டன், பாரீசுக்கும், பேர்லினுக்கும் விட்டுக்கொடுத்தது. ஐரோப்பிய ஒன்றியம், தனித்த இராணுவ நடவடிக்கைகளுக்காக பொதுத் திட்டமிடுதலுக்கும், தலைமைத்திறனை வளர்க்கவும் முயற்சிகள் எடுக்க டோனி பிளேயர் ஒப்புக்கொண்டார். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்புநாடுகளுக்கிடையே, தனிக்குழுக்கள் நெருங்கிய இராணுவ ஒத்துழைப்புக்காண்பது, இனி பிரிட்டனின் தடுப்பதிகாரத்தால் (veto) நின்றுவிடாது எனத் தெரிகிறது. மேலும், ஐரோப்பிய ஆயுதங்கள் ஆராய்ச்சி, உற்பத்தியை ஒருங்கிணைக்கும், ஐரோப்பிய ஆயுதங்கள் நிறுவனம் அமைப்பதற்கான திட்டங்கள் வெற்றிபெறும் வாய்ப்பு மிகுந்துள்ளது.

ரோமில் கூடிய ஐரோப்பிய பாதுகாப்பு மந்திரிகள், பொஸ்னியாவிலுள்ள SFOR (Stabilisation Force -உறுதிப்படுத்தும் அமைப்பின்) அதிகாரக்கட்டுப்பாட்டை அமெரிக்கா இசைந்தால் 2004ல் NATO விடமிருந்து ஏற்க உடன்பட்டுள்ளன.

கருத்துவேறுபாடுள்ள பிரச்சினைகளில், ரோம் எவ்விதமான ஒருமித்த முடிவையும் கொண்டுவர முடியவில்லை; இவ்வாண்டு முடிவிற்குள் பலமுறை சந்திக்க உள்ள வெளிநாட்டு மந்திரிகளால் அவை தெளிவாக்கப்படும். முதலில் திட்டமிட்டபடி, இவ்வாண்டு இறுதிக்குள் அரசியலமைப்பின் இறுதி வரைவு வந்துவிடும் எனக்கொண்டாலும் இது அநேகமாக முடியாதது. தனித்தனியே நாடுகள் உடன்பட்டாலும்கூட, 25 பாராளுமன்றங்களில் அவை ஏற்கப்படவேண்டும் என இருப்பதால், அது நடைமுறைக்கு வராமலேயே போகலாம். சில நாடுகளில், சர்வஜனவாக்களிப்பு நடாத்துவதற்கான திட்டங்கள் உள்ளன.

பிரான்ஸும் ஜேர்மனியும் வரைவின் எதிர்ப்பாளர்களை பொருளாதாரத்தடைகள் வருமென வெளிப்படையாகவே அச்சுறுத்தியுள்ளன. பிரான்சின் ஜனாதிபதி சிராக், "அரசியல் அமைப்பை தடுத்து நிறுத்த எவருக்கு உரிமை உள்ளது என்பது எனக்குத்தெரியாது" என்று ரோமில் அவர் கூறினார். 2004ல் ஆரம்பமாகவுள்ள ஏழை உறுப்புநாடுகளுக்கு கொடுக்கப்பட இருக்கும் நிதி உதவி பற்றிய பேரங்கள், அரசியலமைப்பை ஏற்பதில் தாமதம் வந்தால் கூடுதலான தடைகளுக்கு உள்ளாக நேரிடலாம் என்றும் அவர் எச்சரித்தார். எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட உள்ள "நீண்ட சித்திரவதைப் பட்டியல்" பற்றி ஜேர்மனிய பிரதிநிதிகள் செய்தி ஊடகத்திற்கு குறிப்பிட்டதுடன், ஜேர்மனிதான் ஐரோப்பிய ஒன்றியத்திற்கே அதிக பண உதவி செய்வதையும் வலியுறுத்திக் கூறினார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தில், பிரான்ஸ்-ஜேர்மன் கூட்டின் ஆதிக்கம் பற்றிய அச்சம் நியாயமானதுதான். ஆனால், மற்ற அரசாங்கங்கள் அத்தகைய ஆதிக்கத்திற்கு காட்டும் எதிர்ப்பு முற்போக்கான பாதையில் செல்லவில்லை. இது, போலந்து, ஸ்பெயின் அரசாங்கங்கள் சிறிதும் தயக்கமின்றி, புஷ் நிர்வாகத்தை ஆரத்தழுவி, ஈராக்கிற்கெதிரான போரில் அமெரிக்காவை ஆதரித்ததிலிருந்தே நன்கு வெளிப்படுத்தப்பட்டது. போலந்தில் ஐரோப்பிய ஒன்றிய அரசியல் அமைப்பிற்கெதிரான உணர்வு வெறித்தனமான தேசியவாதப் போக்கில் ஒலிக்கிறது.

தாராளவாத குடிமக்களின் பிரபல்யமான பாராளுமன்ற குழுத்தலைவர், ஜான் ரொகிடா (Jan Rokita), அமைச்சர் குழுவில், போலந்தின் வாக்கு பற்றி மிகைப்படுத்திய சித்திரத்தை, அது ஒரு தேசத்தின் விதி என்றும், "நீஸ் (தீர்மானம்) அல்லது மரணம்" என்ற பரிதாபத்திற்குரிய போர் முழக்கத்தையும் வெளியிட்டார். அவருடைய சக ஊழியரான, வலதுசாரி சட்டம் நீதிக்கட்சியின் Vladimir Kaczynski அரசியல் அமைப்பு ஏற்கப்பட்டாலும் இன்றைய போலந்தின் சூழ்நிலையில் இரண்டாம் உலக போர்க்கால போலந்தோடு ஒப்பிட்டார். அப்பொழுது ஹிட்லர்-ஸ்ராலின் ஒப்பந்தம், நாட்டின் விதியை மூடிமுத்திரையிட்டுவிட்டது. தீவிர வலதுசாரி சமூபிரொனாக் கட்சியின் (Samoobrona party) தலைவர் Andrzej Lepper உம் அதே பாட்டைத்தான் பாடுகிறார். 50 ஆண்டுகளுக்கு முன், பீரங்கிகளைக்கொண்டு சாதிக்கமுடியாததை, இப்பொழுது ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றியத்தின் வழியாக செயல்படுத்த முயல்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சி, உறவுகளின் நிலைமைக்கு ஒரு உதாரணமக உள்ளது. ரோம் மாநாடு தொடங்குவதற்கு சற்று முன்னர், போலந்து இராணுவ வீரர்கள் ஈராக்கில் 2003ல் தயாரிக்கப்பட்ட பிரெஞ்சு ரோலந்து ஏவுகணைகளை (French Roland rockets) கண்டுபிடித்ததாக வார்சோவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. இதன் உட்குறிப்பு அமெரிக்க அரசாங்கத்திற்கு கோபமூட்டும் வழியில், போருக்குமுன் ஆயுதம் வழங்குவதின் மீதான தடையை பிரான்ஸ் நேரடியாக மீறி சதாம் ஹுசேனுக்கு போராயுதம் அளித்தது என்பதாகும். ஜனாதிபதி சிராக், போலந்தின் பிரதம மந்திரி Leszek Miller இடம் ரோமில், அந்தக் குறிப்பிட்ட ஏவுகணை 15 ஆண்டுகளாக உற்பத்தி செய்யப்படவில்லை என்றும், அதில் முத்திரையிடப்பட்டுள்ள தேதி காலாவதி நாளைக்குறிக்கிறது, உற்பத்தி செய்யப்பட்ட தினத்தை அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.

ஐரோப்பாவில் தேசிய போக்குகள் அதிகரிக்கும் போக்கை மேலெழுந்தவாரியாகத்தான் அரசியல் அமைப்பு பற்றிய முரண்பாடுகளோடு தொடர்பாக காணமுடியும். இவற்றிற்குப் பின்னணியில் ஆழந்த சமூக நெருக்கடிகள் மறைந்துள்ளன. அவை ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை தொடர்ந்து இது இன்னமும் கூடுதலாகும்.

புறூஸ்ஸல்ஸ் அமைப்புகள் நெடுங்காலமாகவே நாடுகடந்த நிறுவனங்களுக்கும், நிதி அமைப்புகளுக்கும் பணிபுரிந்து வந்துள்ளன. ஜனநாயக நெறிகளுக்குட்படாத அனாமதேய அதிகார அமைப்பு, மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியும், சமுதாய நலன்கள் மீதான செலவினங்களை குறைக்க ஆலோசனை கூறியும், உழைக்கும் நிலைமைகள் கட்டுப்பாட்டிலிருந்து அகற்றப்படவேண்டும் எனக்கூறும் சட்டதிட்டங்களை செயல்படுத்திவருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் முன்னைய விரிவாக்கத்தில் மோசமான சமூக சீரழிவுகளை பிராந்திய, விவசாய, மற்ற நிதியங்கள் மூலம் தடுக்கமுடிந்தது என்றால், இப்பொழுதைய கிழக்கு விரிவாக்கலில் ஐரோப்பிய ஒன்றியம் அம்முறையில் நடப்பது கடினமாக உள்ளது. நிதி கட்டுப்பாடுகளையும், சந்தை தாராளாமயமாக்கப்படுதலையும் வற்புறுத்துதலானது பிற்பட்ட விவசாய முறையை அல்லது பழைய இயந்திர தொழில்நுட்ப முறை ஆலைகளை நம்பியுள்ள மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கும். வேலையின்மையும், குறைவூதியங்களும் கிழக்கில் பெருகி அதையொட்டி மேற்கில் வாழுபவர்களினது வாழ்க்கை தரத்தையும் கீழ்நோக்கி கொண்டு வரும்.

அநேகமாக சகல சமூக ஜனநாயக மற்றும் முன்னாள் ஸ்ராலினிச கட்சிகளும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு தருவதாலும், சமுக நலத்திட்டங்களில் வெற்றிகரமாக குறைப்பதும், வலதுசாரி மற்றும் தேசிய சக்திகளும் பெருகிவரும் எதிர்ப்புநிலையை தமக்கு சாதகமாக சுரண்ட முடியும். ஆனால் அவற்றின் தேசியவாதம் ஒரு முட்டுச்சந்தியையே சென்றடையும். ஐரோப்பாவை பால்க்கன் மயமாக்கல் (துண்டாடுதல்) பொருளாதார சரிவிற்கும் மற்றும் இறுதியில் போர் என பேரழிவையுமே ஏற்படுத்தும்.

ஒரு முற்போக்கான ஐரோப்பிய ஒன்றிணைப்பு சமுக நலத்திட்ட செலவுகளில் குறைப்புக்களை எதிர்த்து போராடவும், ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கும், போருக்கு எதிராகப்போராடவும் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் என்ற பதாகையின் கீழ் ஐரோப்பிய தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் கீழ்மட்டத்திலிருந்து உருவாகும் ஒரு இயக்கத்தால் மட்டும்தான் முடியும்.

See Also:

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு தயக்கத்துடன் வாக்களித்த பால்டிக் அரசுகள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் போலந்தின் நுழைவிற்கு நாட்கள் நெருங்குகின்றன

Top of page