WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
As Bush lies, Iraq seethes against US occupation
புஷ் பொய்களைச் சொல்லுகையில், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஈராக் கொந்தளிக்கிறது.
By James Conachy
18 October 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
ஈராக்கில் நிலவுகின்ற உண்மையான சூழ்நிலைகள் குறித்து அமெரிக்க மக்களை ஏமாற்றுவதற்காக
புஷ் நிர்வாகம் ஒரு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
திங்களன்று "சூழ்நிலைமைகள் பற்றி தங்களுக்கு உண்மை கிடைக்கவில்லை என்ற உணர்வுடன்
அமெரிக்காவில் உள்ள மக்கள் இருப்பதாக" புஷ் அளித்த வரிசைக்கிரமமான பேட்டிகளில் வலியுறுத்தினார். டிரிப்யூன்
ஒலிபரப்பு நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் ஈராக்கில் உள்ள அமெரிக்க நிர்வாகி போல் பிரேம்மர், தனது பணிகளின்
"நல்ல முன்னேற்றம் கண்டு வருவதாக" "சுந்திர ஈராக்கை" நிலைநாட்டுவதை நோக்கி முன்னேறிக்கொண்டிருப்பதாகவும்
குறிப்பிட்டார். அக்டோபர்-11 வானொலி உரையில், அப்போது அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு காட்டப்பட்டுவரும் எதிர்ப்பை
அமுக்கி வாசித்தார் மற்றும் அவர், அமெரிக்கா ''பயங்கரவாதிகள் மற்றும் ஈராக் மக்களுக்கான சுதந்திரத்தை திட்டமிட்டே
மறுக்கும் சதாம் (ஹூசேன்) பதுங்கியிருக்கும் இடங்களைத் தேடுவதில் முனைப்புடன்" ஈடுபட்டுள்ளது என அறிவித்தார்.
ஈராக் "ஆயிரக்கணக்கான புதிய வர்த்தகங்கள்", ''பரபரப்பு மிக்க சந்தைகள்'' மற்றும் "பண்டகசாலை அலுமாரிகள்
பொருட்கள் நிறைந்து'' காணப்படுவதாக புஷ் குறிப்பிட்டார். அமெரிக்க உதவியோடு ''வர்த்தகத்திற்கு அவசியமான
சாலைகள், துறைமுகங்கள் மற்றும் ரயில்வேக்கள்'' கட்டப்பட்டு வருவதாகவும், ஈராக்கில் எண்ணெய் உற்பத்தி மீட்கப்பட்டு
விட்டதாகவும், ''அதன் பயன்கள் நேரடியாக ஈராக் மக்களுக்கு கிடைப்பதாகவும்'' புஷ் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் முழுவதிலும் புஷ் மற்றும் அவரது நிர்வாகத்தை சேர்ந்த உறுப்பினர்கள்
அத்தகைய பொய்களை திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்த அதேவேளை, உண்மை என்னவென்றால் பாக்தாத் வீழ்ச்சியடைந்து
ஆறு மாதங்களுக்கு பின்னர் அமெரிக்க படையெடுப்பால் ஈராக் மக்களுக்கு சொற்களில் விளக்க முடியாத அளவிற்கு துயரத்தை
உருவாகியிருக்கின்றது.
இந்த மாதம் ஐ.நா-வும் உலக வங்கியும் செய்துள்ள மதிப்பீடுகளின் படி ஈராக்
பொருளாதாரம் இந்த ஆண்டு 22 சதவீதம் சுருங்கிவிட்டது. 1980-ல் சராசரி ஈராக்கிய குடிமக்களது ஆண்டு
வருவாய் 3000 டாலருக்கு மேல் இருந்தது. அமெரிக்க ஆதரவுடன் ஹூசேன் ஈரானுடன் தொடுத்தபோர், 1991
வளைகுடாப்போர், மற்றும் அதற்குப் பின்னர் பத்தாண்டுகள் வரை ஐ.நா-சபை ஈராக் மீது விதித்த பொருளாதார
தடைகள் ஆகியவற்றின் விளைவாக 2001-ம் ஆண்டு வாக்கில் ஈராக்கில் ஆண்டு வருமானம் 1,020 டாலர்களாக
இறங்கியது. ஐ.நா-தற்போது மதிப்பிட்டுள்ளதைப் போல் இந்த ஆண்டும் இது அமெரிக்க படையெடுப்பால் 450 முதல்
610 டாலர்களாக குறைந்து விடும். 2004-ம் ஆண்டு இந்த நிலவரம் உயரும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.
உழைக்கும் பருவத்தில் உள்ள ஈராக்கிய இளைஞர்களில் 70 சதவீதத்திற்கு மேற்பட்டோர் --சுமார் 12 மில்லியன்
பேர் வேலையில்லாது இருக்கின்றனர்.
Bechtel
Corp பொறியாளர்கள்
தந்துள்ள தகவலின்படி, பாக்தாத் நகருக்கு தேவைப்படும் மின்சாரத்தில் பாதிகூட கிடைப்பதில்லை. போருக்கு முன்பு
இருந்ததை விட இப்போது பாக்தாத்தில் கிடைக்கும் தண்ணீர் மேலும் 25 சதவீதம் மாசடைந்ததாக காணப்படுகின்றது.
பாக்தாத் நகர பகுதிகளில் சாக்கடை ஓடிக்கொண்டிருக்கின்றது. பழுதடைந்த சாக்கடை சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து
சாக்கடை தெருக்களில் வழிந்து டைகிரிஸ், யூப்ரடீஸ் நதிகளில் கலக்கின்றது. தொலைபேசி இணைப்புக்கள் செயல்படுவதில்லை,
நகரத்தில் பெரும்பான்மை இடங்கள் இன்னும் போர் அழிவு நிலையிலேயே போருக்கு பின்னர் சூறையாடப்பட்ட நிலையிலேயே
அப்படியே விடப்பட்டிருக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை நீடித்துக் கொண்டிருக்கின்றது. குற்றங்கள் பெருகிக்கொண்டு
இருக்கின்றன. அதனால் தனிமனிதர்களுக்கு பாதுகாப்பும் இல்லை, சாவு எண்ணிக்கை அதிகரித்தும் வருகின்றது.
ஆக்ஸ்பார்ம் என்ற உதவி அமைப்பு மதிப்பிட்டுள்ளபடி ஊட்டச்சத்து குறைபாடு இரட்டிப்பாகிவிட்டது.
எவ்வளவுதான் புஷ் நிர்வாகம் பிரச்சாரம் செய்தாலும் ஈராக் மக்களது எதிர்ப்பின்
பின்னால் இருக்கின்ற உண்மையை மறைத்துவிட முடியாது. தாங்கள் சந்திக்கும் பேரழிவிற்கு அமெரிக்கா தான் பொறுப்பு
என மிகச்சரியாக ஈராக் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். வாஷிங்டன் கூறுவது போல, முன்னாள் பாத்
கட்சிக்காரர்களோ அல்லது வெளிநாட்டு இஸ்லாமிய தீவிரவாதிகளோ அமெரிக்க துருப்புக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு
பிரதான பொறுப்பாக இருக்கிறார்களோ அல்லது இல்லையோ, ஈராக்கிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேற
வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகின்ற போராட்டம் விரிவான அடிப்படையில் ஆதரவு பெற்றிருக்கின்றது என்பது தெளிவாக
தெரிகின்றது. புஷ் நிர்வாகம் தனது வர்த்தக முத்திரை திமிர் மற்றும் முட்டாள் தனத்தினால் பாலஸ்தீன பாணியில்
இன்டிபதா கிளர்ச்சி எழுச்சியை தோற்றுவிக்கின்ற மட்டத்திற்கு தனது நடவடிக்கைகளை கொண்டு வந்துவிட்டது.
கடந்த இரண்டு வாரங்களில், பாக்தாத்தின் கிழக்கு பகுதியில் தொழிலாள வர்க்கம்
வாழுகின்ற, குடிசைப்பகுதிகள் நிறைந்திருக்கின்ற, பெரும்பாலும் ஷியட் முஸ்லீம்கள் நிறைந்தபகுதியில், நடைபெற்ற
சம்பவங்கள் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக கிளர்ச்சி உருவாகிக்கொண்டிருப்பதைக் கோடிட்டுக்
காட்டுகின்றன. இந்த நகரத்தை இப்போது "சாதர் நகரம்" என்று அழைக்கிறார்கள். இந்தப் பகுதிகளில் ஈராக்கிலேயே
பரம ஏழைகளும், பெருமளவில் ஒடுக்கப்பட்ட மக்களும் இருபது லட்சம் பேர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தப்பகுதியில்
உள்ள கடைகளில் ஜனாதிபதி புஷ் சொல்வதைப் போல் "சரக்குகள் நிறைந்த" வரிசைகளைக் காணோம். அப்படியே
இருந்தாலும் அவற்றை வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லை.
இந்தப் பகுதியில் ஷியட் மத குருவான முக்தாத அல் சதார் தீவிரவாதியாக
உருவாகிக்கொண்டு வருகிறார். 1999-ம் ஆண்டு சதாம் ஹூசேன் கொலைசெய்த ஷியட் மத குருவின் புதல்வர் இவர்.
இவர் படிப்படியாக அந்தப் பகுதியில் உண்மையான ஆதிக்கம் செலுத்துபவராக வளர்ந்து கொண்டு வருகிறார். அவர்
முப்பதுகளின் ஆரம்பத்தில் உள்ள இளைஞராக இருக்கிறார். ஈராக்கில் நிலவுகின்ற வறுமையையும் ஈராக் சிதைக்கப்பட்டிருப்பதையும்
அவர் மிகக்கடுமையாக கண்டனம் செய்து வருகிறதன் காரணமாகவும் அமெரிக்கர்கள் ஈராக்கிலிருந்து வெளியேற
வேண்டும் என்று கோருவதன் காரணமாகவும் சதரினுடைய அதிகாரம் நகர்புற ஏழைகளிடம் மிகப்பொதுவாக ஈராக்கில்
உள்ள பெரும்பான்மை மக்களிடம் வளர்ந்து கொண்டு வருகின்றது. அவரது கட்டுப்பாட்டில் 10,000 இராணுவப்
போராளிகள் உள்ளனர் அவர்கள் சாதர் நகரத்தில் பகிரங்கமாக துப்பாக்கிகள் மற்றும் இதர கனரக ஆயுதங்களைக்
கூட ஏந்திச்செல்கின்றனர்.
அமெரிக்க இராணுவம் இத்தகைய மக்கள் எதிர்ப்பை சமாளிக்கின்ற வகையில் விளைவைப்
பற்றிக் கவலைப்படாமல் ஒடுக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அக்டோபர் 6-ந்தேதியன்று அமெரிக்கத்
துருப்புக்கள் சாதரின் நெருங்கிய சகாவான மேயாத் அல் கஸ்ராஜியை கைது செய்துகாவலில் வைத்தன. அவரது
மசூதியில் ஆயுதங்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. இந்த நடவடிக்கை மூலம் அடுத்த
சில நாட்களில் பல்லாயிரக்கணக்கான ஷியைட் இளைஞர்கள் பாலத்கார முறையிலான ஆர்ப்பாட்டங்கள் நடத்துகின்ற
அளவிற்கு ஆத்திரமூட்டப்பட்டனர்.
சாதர் நகர காவல் நிலையம் ஒன்றின் நடவடிக்கைக்கு எதிராக அக்டோபர் 10-ந்தேதியன்று
தற்கொலை குண்டு வெடிப்பு நடைபெற்ற சில மணிநேரங்களில் சாதரின் தலைமை நிலையத்தை சுற்றி வளைப்பதற்கு அமெரிக்க
நிர்வாகம் துருப்புக்களை அனுப்பியது. அதன் நோக்கம் என்னவென்றால் ஷியா தலைவர் மீது பழிபோட்டு அவரை காவலில்
வைப்பதற்குத்தான். அந்த கட்டிடத்தில் நுழைந்த அமெரிக்க துருப்புக்களை சாதரின் பாதுகாவலர்கள் சமாளித்து
எதிர்த்தாக்குதல் நடத்தினர். அமெரிக்க போர் வீரர்களின் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று ஈராக் வட்டாரங்களை
மேற்கோள்காட்டி நியூயோர்க் டைம்ஸ் தகவல் தந்திருக்கின்றது. சாதரைக் காத்துகொண்டு நின்ற ஒரு ஷியா
போராளியை நோக்கி ஒரு அமெரிக்க சிப்பாய் சுட்டதும் மூன்று கவச வாகனங்களோடு வந்த அமெரிக்க துருப்புக்கள்
மீது கடுமையான தாக்குதல்கள் நடந்தன. அந்தத்தாக்குதலில் இரண்டு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதோடு நான்கு
பேர் காயம் அடைந்தனர். இரண்டு ஈராக்கியர்களும் கொல்லப்பட்டனர். வீடுகளின் உச்சிகளில் காவலுக்கு நின்ற நூற்றுக்கணக்கான
ஷியா இராணுவ வீரர்களை சமாளிக்க முடியாமல் அமெரிக்கத் துருப்புக்கள் விலகிக்கொண்டன. மேலும் ஷியா வீரர்கள்
சாலைத் தடைகளையும் உருவாக்கினர்.
மசூதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஒலி பெருக்கிகள் மூலம் ஷியட் மதபோதகர்கள் பொதுமக்களுக்கு
வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தனர். தலைக்கு மேல் பறந்து கொண்டிருக்கின்ற அமெரிக்க ஹெலிகாப்டர்கள் மீது
சுழல் எறிகுண்டு ஏவுகலன் (RPG)
கொண்டு தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துக்
கொண்டிருந்தனர்.
அதை தொடர்ந்து சில நாட்களில் சாதர் நகரில் அமெரிக்காவின் அதிகாரத்தை புறக்கணிக்கின்ற
பிரமாண்டமான பேரணி நடைபெற்றது. சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு ஷியைட் போராளிகளது இறுதிச் சடங்கில்
10,000-த்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நகரின் பிரதான தெருக்களில் அணி வகுப்பு நடந்தது. அமெரிக்காவிற்கு
எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி இறுதி ஊர்வலத்தில்
உரையாற்றிய சாதரின் ஆதரவாளரான ஒரு மதகுரு கீழகண்டவாறு உரையாற்றினார்: ''அமெரிக்கா தன்னை ஜனநாயகத்தின்
ஆதரவாளர் என்று கூறிக்கொள்கின்றது. ஆனால் அமெரிக்கா உலகிலேயே மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாகும்.
தனது பயங்கரவாதத்தாலும் அகந்தை போக்கினாலும் உலகை நடத்தி செல்கிறது.'' அந்த பகுதியில் அமெரிக்க
துருப்புக்கள் இருக்கக்கூடாது என்று இறுதி எச்சரிக்கைகள் விடப்பட்டன. அமெரிக்காவிற்கு ஆதரவான பொம்மை
ஆட்சிக்கு எதிராக தங்களது சொந்த "இடைக்கால அரசாங்கத்தை" அமைக்க எண்ணியிருப்பதாக சாதரை சுற்றியுள்ள
ஷியா மதகுருக்கள் அறிவிப்பு செய்திருக்கின்றனர்.
வியாழக்கிழமையன்று சாதர் நகருக்குள் அமெரிக்க டாங்கிகளும், துருப்புக்களும் அணிவகுத்து
வந்தன. சாதர் நகர சபைக் கட்டிடத்தை பிடித்துக்கொண்டுள்ள போராளி இராணுவத்தினரை வெளியேற்றுவதற்காக
அமெரிக்க துருப்புக்கள் அங்கு வந்தன. அடிப்படைவாத மத குருவின் ஆதரவாளர்கள் 12-க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்க நிர்வாக குழுவை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் அதிகாரி
AFP- நிருபருக்கு அளித்துள்ள பேட்டியில், ''சாதர் அல்லது அவரது
தொண்டர்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து சில கடுமையான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகின்றன.
இந்தக் குற்றச்சாட்டுகளை நாங்கள் மிகவும் கடுமையாக எடுத்துக்கொள்கிறோம். இந்த நாட்டில் நாங்கள் சட்டத்தின்
ஆட்சியை நிலை நாட்டுவோம்'' என்று குறிப்பிட்டார்.
வியாழக்கிழமை நள்ளிரவில் மத்திய ஈராக் நகரான கர்பலாவில் அமெரிக்க ரோந்து
படைக்கும் மற்றொரு ஷியா மத போதகரின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஒரு மசூதி அருகில் துப்பாக்கி சண்டை
நடைபெற்றது. அதில் மூன்று அமெரிக்க இராணுவத்தினரும் இரண்டு ஈராக் போலீசாரும் குறைந்த பட்சம் ஐந்து உள்ளூர்
ஷியா போராளி இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் ஏழு அமெரிக்க இராணுவத்தினர் காயம்
அடைந்தனர். தங்களது படை வீரர்கள் மீது அவர்கள் தரப்பிலிருந்து எந்தவிதமான ஆத்திரமூட்டும் நடவடிக்கையும்
இல்லாமல் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவ தலைமை குறிப்பிட்டது. ஷியா மத போதகரான
முஹம்மது அல் ஹஸ்ஸானி, அமெரிக்க ரோந்து படையினர் மசூதிக்கு காவல் புரிந்து கொண்டிருந்த ஆயுதம் தாங்கிய காவலர்கள்
மீது சுட்டதாக தெரிவித்தார்.
சாதர் நகரத்தில் அமெரிக்க இராணுவம் டாங்கிகளையும் கவச வாகனங்களையும்
துப்பாக்கியால் சுடும் வீரர்களையும் அனுப்பியது. பல்லாயிரக்கணக்கானோர் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு திரண்டனர்.
அப்போது அவர்கள், "வேண்டாம், வேண்டாம் அமெரிக்கா" என்று முழக்கம் எழுப்பினர். கர்பலாவில், வெள்ளிக்கிழமையன்று,
அமெரிக்க கவச வாகனம் ஒன்றில் இருந்து நெரிசல் மிக்க தெருவில் சுட்டனர், ஷியா போராளி இராணுவத்தினர் வீட்டு
மாடிகளின் உச்சிகளில் அமர்ந்திருந்ததால் அமெரிக்க படைவீரர்களும் துப்பாக்கி ஏந்தி தயாராக இருந்தனர். நேரடியாக
மோதல் ஏற்பட்டிருக்குமானால் அமெரிக்கர்கள் தரப்பிலும், ஈராக்கியர்கள் தரப்பிலும் பலியானோர் எண்ணிக்கை
அதிகரித்திருக்கக்கூடும்.
பாக்தாத்தின் சுன்னி முஸ்லிம் மாவட்டங்களிலிருந்து சதாம் ஹூசேனின் சொந்த நகரான
டிக்கிரிக் வரையுள்ள "சுன்னி முக்கோணம்" என்றழைக்கப்படும் பகுதிகளில் ஏற்கனவே ஒரு நாளைக்கு 12-பேர் வீதம்
அமெரிக்க படைகள் பலியாகிவருகின்றது. இந்த மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில் அந்த பகுதியில் 14-அமெரிக்க
இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்த பட்சம் 24-பேர் காயம் அடைந்தனர். ஈராக்கிய துப்பாக்கி
தொழிற்சாலைகளில் இருந்து கழித்துக்கட்டப்படும் உலோக சிதறல்களில் இருந்து, கை வெடிகுண்டு தயாரிக்கப்பட்டு,
அவற்றை வெகுதூரத்தில் இருந்து அமெரிக்க வாகனங்கள் கடக்கும் போது வெடிக்க வைத்தார்கள். ஒப்பீட்டளவில்
நவீனமல்லாத "திடீரென்று தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களால்" பெரும்பாலான பாதிப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஸ்பெயின் நாட்டு இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர் அவரது பாக்தாத் இல்லத்திற்கு
வெளியில் சுட்டுக்கொல்லப்பட்டது ஏனைய எதிர்ப்புக்களுள் உள்ளடங்கும். பாக்தாத் எல்லையை ஒட்டியுள்ள தியாலா
மாகாண கவர்னராக அமெரிக்காவினால் நியமிக்கப்பட்டிருப்பவரையும் மற்றும் அமெரிக்கா நியமித்துள்ள ஈராக்கிய
நிர்வாக குழு உறுப்பினர் ஒருவரையும் கொலை செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
பாக்தாத் நகரில் தற்கொலை குண்டு வெடிப்பவர்கள் ஈராக்கின் மிகத்தீவிரமான பாதிக்கப்பட்ட
தரப்பினரை சேர்ந்தவர்களாக இருப்பதால் மிகப் பெருமளவிற்கு தற்போது பீதி நிலவுகின்றது. அக்டோபர் 9-முதல்
14-வரையிலான ஐந்துநாட்களில் தற்கொலை குண்டு வெடிப்பவர்கள் சாதர் நகர காவல் நிலையத்திலும்,
CIA--யின் பாக்தாத் ஹோட்டல் தலைமையகத்திலும் மற்றும் துருக்கி
தூதரகத்திலும் வெடிபொருள் நிரப்பிய வாகனங்களை வெடித்திருக்கின்றனர். இதேபோன்று கார்கள் மூலம் குண்டு
வெடிப்பு நடத்துகின்ற பல்வேறு முயற்சிகள் முறியடிக்கப்பட்டு உள்ளதாக ''நியூயோர்க் டைம்ஸ்'' உறுதி செய்ய
முடியாத தகவல்களை தந்திருக்கின்றது. அக்டோபர் 16-ந் தேதி அத்தகைய தற்கொலை குண்டு வெடிப்பாளர்கள் இரண்டு
பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் ஈராக் நிதியமைச்சகத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்றார். மற்றொருவர்
குண்டு நிரப்பிய காரை இர்பில் பகுதியில் உள்ள போலீஸ் தலைமையகத்தின் மீது மோதி வெடிப்பதற்கு முயன்றார்.
சுன்னி முக்கோணம் பகுதிகளுக்கு அப்பால் இருக்கும் கிர்குக் நகரில், அந்தப் பகுதிகள்
தங்களது கட்டுப்பாட்டில் இருந்து வருவதாக அமெரிக்க இராணுவம் கூறிவருகின்றது. ஆனால் அமெரிக்க போர் வீரர்
ஒருவர் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு பேட்டியளித்த போது இந்த மாதம் "அதிகம் இடைவிடாது"
தாக்குதல்கள் நடைபெற்று கொண்டிருப்பதாக கூறியுள்ளார். அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறையில் பீரங்கி
தாக்குதல் நடைபெற்றுள்ளது. விமான நிலையங்களில் பெரும்பாலான இரவுகளில் காவல் புரிந்து வரும் அமெரிக்க
துருப்புக்களை நோக்கி ஈராக்கியர்கள் சுட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதனைச்சாவடியில்
நடைபெற்ற பல்வேறு தாக்குல்களில் ஈராக்கிய போலீசார் கொல்லப்பட்டிருக்கின்றனர். அமெரிக்காவுடன் ஒத்துழைத்து
வரும் ஷியா அமைப்பான இஸ்லாமிய புரட்சிக்கான உயர் சபையின்
(SCIR)- உள்ளூர்
அலுவலகத்தின் மீது அக்டோபர் 7-ந் தேதி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
தெற்கு பகுதியில் உள்ள பாஸ்ராவின் ஷியட் மண்டலத்தில், பிரிட்டிஷ் துருப்புக்களுக்கு எதிராகவும்
தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. பாஸ்ரா நகரில் இராணுவ தலைமையகங்கள் மீது அக்டோபர் 8-ந் தேதி
பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டதில் மூன்று சிப்பாய்கள் பலியாயினர். சட்அல் அரப் ஆற்றுவழி பாதையில் படகுகள்
மூலம் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த பிரிட்டனின் கடற்படை வீரர் ஒருவர், பிளை மவுத் ஹெரால்ட் பத்திரிகைக்கு
அளித்துள்ள பேட்டியில், ''ஆற்றுப்பகுதியில் எல்லாக் காலங்களிலுமே துப்பாக்கி சுடுகின்ற வேட்டுச் சத்தம்
கேட்டுக்கொண்டே இருக்கின்றது. போர்காலத்தில் இருந்ததை விட தற்போது ஆபத்து அதிகமாக உள்ளது'' என குறிப்பிட்டிருக்கிறார்.
நிலவரம் குறித்து பேட்டியளித்த ஓர் அதிகாரி தற்போது "மிகக்கடுமையான சூழ்நிலை" நிலவுவதாகவும், தனது கடற்படை
வீரர்களுக்கு "தொடர்ந்த அச்சுறுத்தல்" வந்துகொண்டிருப்பதாகவும், நிரந்தரமாக "மிகுந்த விழிப்புணர்வோடு நடமாட
வேண்டியிருப்பதாகவும்" குறிப்பிட்டிருக்கிறார். தாங்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் உள்ளதாக இந்த மாத தொடக்கத்தில்
ஈராக் இராணுவத்தை சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் பாக்தாத், பாஸ்ரா மற்றும் கிர்குக் நகரங்களில் ஆர்ப்பாட்டம்
நடத்தினர். பாஸ்ரா நகரில் ஆர்ப்பாட்டம் செய்த இரண்டு பேரை பிரிட்டிஷ் துருப்புக்கள் சுட்டுக்கொன்றனர்.
அமெரிக்க இராணுவம் சீர்குலைந்து வரும் நிலவரத்தை சமாளிக்கின்ற வகையில் தனது பயங்கர
நடவடிக்கைகளை மேலும் முடுக்கி விட்டிருகின்றது. இரவு நேரத்தில் திடீர் சோதனைகளை நடத்துவதோடு சாலைத்தடைகளை
உருவாக்குகிறது, "கூட்டணி படைகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக" செயல்படுபவர்களை பெரும் அளவிற்கு கைது செய்து
காவலில் வைத்திருக்கின்றது. அமெரிக்கா நடத்தி வருகின்ற கைதிகள் முகாம்களில் தற்போது 5,500-ஈராக் அரசியல்
கைதிகள் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் 13,000-பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக
அமெரிக்க இராணுவம் ஒப்புக்கொண்டிருக்கின்றது. மேலும் 10,000-மக்கள் ஈராக் போலீஸ் நிலையங்களில் காவலில்
வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்றது. ஈராக்கிய கிராம மக்களுக்கு எதிராக அமெரிக்க படைகள் மேற்கொண்டுள்ள
நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கிராமப் புறங்களில் வீடுகளும், விளைந்த பயிர்களும் அழிக்கப்படுவது சர்வதேச
அளவில் தற்போது பத்திரிகை செய்திகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அமெரிக்க துருப்புக்களால் எத்தனை ஈராக்கிய சிவிலியன்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்
என்பது தெளிவாகத் தெரியவில்லை ஏனென்றால் அமெரிக்க இராணுவத்திடம் அத்தகைய கணக்கு இல்லை. ஒவ்வொரு
மாதமும் 100-க்கணக்கான ஈராக்கிய சிவிலியன்கள் கொல்லப்படுவதாக நேரில் கண்டவர்கள் மற்றும் சந்தர்ப்ப சாட்சிகள்
தெரிவிக்கின்றன. பாக்தாத் நகர மத்திய சவக்கிடங்கில் ஜூலை மாதம் 751-சாவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவர்களில் 70-சதவிகிதம் பேர் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானவர்கள். சென்ற ஆண்டு ஜூலை மாதம் இதே பிணவறையில்
237-சாவுகள் மட்டும் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 21-பேர் துப்பாக்கி குண்டு காயங்களுக்கு பலியானவர்கள்.
தற்போது அமெரிக்கத் துருப்புக்கள் சுடுவதன் மூலம் பலியாகும் மக்களது எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுவருவதற்கு
முக்கிய காரணம், குடியிருப்பு பகுதிகளில் எந்தவிதமான முறையும் இல்லாமல் கண்டபடி அமெரிக்க துருப்புக்கள் சுடுவதால்
தெருவில் நிற்கின்ற சிவிலியன்களும் குண்டு காயம் பட்டு மடிகின்றனர். சோதனைச் சாவடிகளில் அமெரிக்க அதிகாரிகள்
விரும்புகின்ற வேகத்திற்கு ஏற்ப வாகனங்களை நிறுத்த மறுக்கின்ற ஈராக்கியர்களும் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.
ஈராக்கிற்கு பணியாற்ற தயாராகிக் கொண்டிருக்கின்ற அமெரிக்க துருப்புக்களுக்கு பென்டகன்
தந்துவரும் பயிற்சியின் போக்கு புஷ் நிர்வாகத்தின் கூற்றுக்களை தெளிவாக மறுத்துரைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.
ஈராக்கில் பணியாற்ற செல்லுகின்ற அனைவரும் அந்நாட்டு மக்களைக் கண்டு அஞ்சி நடந்து கொள்ளுமாறு பயிற்சியின்
போது கூறுகிறார்கள். இப்படி சிப்பாயகளைக் கொண்ட ஒரு குழுவுக்கு அமெரிக்க இராணுவ பயிற்சியாளர் ஒருவர்
எந்த அளவிற்கு மனோதத்துவ ரீதியில் பயிற்சியளித்து கொண்டுவருகிறார் என்பதை
SVS- ஆஸ்திரேலிய தொலைக்காட்சி வீடியோவில் படம்பிடித்திருக்கிறது.
''ஷியட்டுக்கள் வாழுகின்ற பகுதிகளில் எந்தவிதமான தகராறும் இல்லை என்பதால்,
உங்களது முதுகில் தட்டி அவர்கள் பாராட்டி கொக்கோ கோலா தருவார்கள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.
அவர்கள் அமெரிக்கா சிறப்பாக பணியாற்றியதாக பாராட்டமாட்டார்கள். நீங்கள் இறை நம்பிக்கையில்லாதவர்கள்
என்பதால் அவர்கள் உங்களை விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு நீங்கள் இறை மறுப்பாளர்கள் தான், அதுதான்
உண்மையும் கூட. இதை நீங்கள் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் வெள்ளையரா? கருப்பரா? அல்லது தாய்லாந்துக்காரரா?
என்பதை பற்றி கவலைப்பட மாட்டார்கள். நீங்கள் இஸ்லாமியர் அல்ல, இஸ்லாமியராக நீங்கள் இருந்தாலும் அவர்கள்
ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நீங்கள் அமெரிக்கர்கள் எனவே உங்களுக்கு நெருக்கடி கொடுக்கத்தான் செய்வார்கள்
அதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.......
''அந்த மக்கள் இத்தகைய மனப்போக்கு உள்ளவர்கள் தான் என்பதை
நினைவில் வைத்துகொள்வது அவசியம் அவர்கள் குறுகிய நோக்கம் கொண்டவர்கள். அவர்கள் மேலை நாடுகளை
நம்பவில்லை. இந்த மனப்போக்கு அவர்களுக்கு சிலுவை யுத்த (போர்) காலத்திலிருந்து உருவாகியிருக்கின்றது. இஸ்லாத்தை
ஒழித்துக்கட்டுவதற்காகத்தான் நாம் அங்கு இருக்கிறோம் என நினைக்கிறார்கள். அவர்களது எண்ணெய் வளம்
முழுவதையும் நாம் விரும்புகிறோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது உண்மையல்லவென்றால்; வேறு எதற்காக
அமெரிக்கர்களாகிய நாம் அங்கிருக்கிறோம் என அவர்கள் கேட்கிறார்கள், இது தான் அவர்களது மனப்போக்கு''
இவ்வாறு SVS-
தொலைக்காட்சி 2003-செப்டம்பர் 24-அன்று பதிவு செய்துள்ள வீடியோ நாடாக்களில் விவரிக்கப்பட்டிருக்கின்றது.
(SBS Television, Dateline,
September 24, 2003, "Trouble on the Homefront", transcript available at:
http://www.sbs.com.au/dateline/index.php3?daysum=2003-09-24)
இத்தகைய இனவாத அடிப்படையிலான கருத்துருக்களை அமெரிக்கா முன்னிலைப்படுத்துவது,
ஈராக் மக்களை மனித நேயமற்றவர்களாக சித்தரிப்பதற்குத்தான் மற்றும் புஷ் நிர்வாகம் அமெரிக்க துருப்புக்களுக்கு
தந்திருக்கின்ற கிரிமினல் குற்ற பணிகளுக்கு -தற்போது 24-மில்லியன் மக்கள் மீது நடத்தப்பட்டுவரும் மிகப்பெரும் அளவிலான
ஒட்டுமொத்த ஒடுக்குமுறைகளுக்கு சப்பைக்கட்டு கட்டுவதற்குத்தான்.
Top of page
|