World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

A highly political decision

Indian deputy prime minister exonerated over destruction of Ayodhya mosque

உயர் மட்ட அரசியல் முடிவு

அயோத்தி மசூதி அழிக்கப்பட்டது மீதான குற்றச்சாட்டிலிருந்து இந்திய துணைப் பிரதமர் விடுவிப்பு

By S. Ram and K. Ratnayake
20 October 2003

Back to screen version

இந்து பேரினவாத கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் வகுப்புவாத கலவரங்கள் தூண்டிவிடப்பட்ட பின்னர் பதினோரு ஆண்டுகள் கழித்து, இந்திய முதன்மை குற்றவாளிகளுள் ஒருவரும், துணைப்பிரதமரும் ஆளும் இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சியில்(BJP) ஒரு முக்கிய பிரமுகருமான லால் கிருஷ்ண அத்வானிக்கு எதிராக நீதிமன்றம் எஞ்சியுள்ள குற்றச்சாட்டுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது.

இந்திய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலியில் ஒரு சிறப்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் செப்டம்பர் 20 அன்று அனைத்து குற்றச்சாட்டுக்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. ஆனால் டிசம்பர்6, 1992ல் பாபர் மசூதியை அழித்த கும்பலை அணிதிரட்டியதில் அவரது பாத்திரத்திற்காக அத்வானி மீதான "கிரிமினல் சதித்திட்டம்" பற்றிய குறச்சாட்டுக்களை கைவிடுவதற்கு மே மாதத்தில் மத்திய சிபிஐ (குற்றப் புலனாய்வுக் கழகம்) -ஆல் இம் முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது. அத்வானிக்கு எதிராக குற்றச்சாட்டைக் கொண்டு வந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், மற்றும் அவர் பதில் சொல்ல வேண்டி இருந்திருந்ததாய் நீதிமன்றம் கண்டு ஏழு ஆண்டுகளுக்கு பின்னர், சிபிஐ மேற்கொண்டு வழக்கை நடத்த போதுமான ஆதாரம் இல்லை என கூறியது.

சதித்திட்டம் தீட்டியதான குற்றச்சாட்டை கைவிட்ட நிலையில், வழிபாட்டு இடத்தில் பல்வேறு வகுப்பினருக்கிடையில் கலவரத்தை விளைவித்தல், வகுப்பு வெறியை பரப்பல் மற்றும் தீய நோக்கத்தை உருவாக்குதல் ஆகிய எஞ்சிய குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பது மிகவும் கடினமாகும். சிபிஐ முடிவிலிருந்து வழிகாட்டும் அவரது குறிப்பை எடுத்துக்கொண்டு, சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி வி.கே.சிங், சந்தேகம் போதுமானதாக இல்லை என கூறி, அத்வானிக்கு எதிரான எஞ்சியுள்ள குற்றச்சாட்டுக்களையும் தூக்கி எறிந்தார். 130 பக்கங்கள் கொண்டதாக கூறப்படும் அவரது தீர்ப்பு வெளியிடப்படாது இருந்து வருகின்றது.

இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, மத்தியப்பிரதேச தலைமை அமைப்பாளர் உமாபாரதி மற்றும் உத்திரப் பிரதேச ஜனாதிபதி வினய் கட்டியார் உட்பட மூன்று பிஜேபி மூத்த தலைவர்கள் உட்பட ஏனைய ஏழுபேரும் கூட குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருக்கின்றனர். அக்டோபர் 10 அன்று அவர்கள் நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்ட அதேவேளை, ஏழுபேரும் அவர்கள் மீது குற்றங்களை (வழக்குகளை) தொடுப்பதற்கான சிறப்பு நீதிமன்றத்தின் ஆணைக்கு எதிராக ஏழுபேரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மனுச்செய்தனர் மற்றும் அடுத்த மாதம் வரை அதற்குத்தடை பெற்றுள்ளனர்.

அத்வானிக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் தள்ளுபடி செய்வதற்கான முடிவு உயர்மட்டத்திலான அரசியல் ரீதியிலான ஒன்றாகும். அது முழு இந்திய அரசியல் நிறுவனமும் அரசு எந்திரமும் பிஜேபி மற்றும் உலக இந்து பேராயம் (விஎச்பி) போன்ற அதன் நேசக் குழுக்களின் இந்து மேலாதிக்க செயற்பட்டியலுக்கு எந்த அளவு தங்களையே அனுசரித்துக் கொண்டிருக்கின்றன என்பதை விளக்கிக் காட்டுகிறது.

நீதிமன்ற முடிவிற்கு நிதிச்சந்தைகள் சாதகமாக பதிலிறுத்தன. பம்பாய் பங்கு குறியீட்டெண் 4215லிருந்து 4225க்கு 2சதவீதம் அதிகரித்தது. ஒரு காப்புப் பத்திரங்கள் பற்றிய ஒரு ஆய்வாளர் சந்தன் தேசாய் விளக்கியவாறு, "துணைப் பிரதமர் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டிருந்தால் அது முன்கூட்டியே தேர்தல் நடத்த இட்டுச்சென்றிருக்கக் கூடும் என்பதால் அங்கு ஒருவகை பதட்டம் இருந்தது."

பெரு வர்த்தகத்தினர் அத்வானியை பிஜேபி தலைமையிலான கூட்டரசாங்கத்தில் இயக்க மையமான நபராகக் கருதுகின்றனர் மற்றும் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயிக்கு அடுத்து வரக்கூடியவர் எனக் கருதுகின்றனர். அவர் வாஷிங்டனுடன் நெருக்கமான உறவை இறுக்குவதற்கு முக்கியமானவராக இருந்து வருகிறார். அந்த உறவு கார்ப்பொரேட் செல்வந்த தட்டின் அரசியல் மற்றும் பொருளாதார மூலோபாயத்தின் மைய கொள்கை திட்டமாக ஆகி இருக்கிறது.

1992ல், அத்வானியின் நடவடிக்கைகள் பரந்த அளவிலான கோபத்தை தூண்டியது. ஆனால் சமீபத்திய நீதிமன்ற முடிவுக்கு செய்தி ஊடக பதிலானது உறுதியானவகையில் ஊமையாகிப் போனது. உணர்வை பற்றிக்கொள்ளக் கூடிய அயோத்திப் பிரச்சினையுடன் தம்மைத் தூர நிறுத்திக் கொள்வதில் கவனமாக இருந்து வரும், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பிஜேபி-ன் பிரதான கூட்டாளிகள் விமர்சனம் எதையும் செய்யவில்லை.

அத்வானிக்கு எதிரான குற்றவியல் சதித்திட்டக் குற்றச்சாட்டை கைவிடும் சிபிஐ-ன் முடிவை அடுத்து, காங்கிரசும் ஏனைய எதிர் கட்சிகளும் இந்திய பாராளுமன்றத்தில் கூக்குரல் எழுப்பினர். ஆயினும், அதன் பின்னர் ஒருவரும் அம்முடிவை கண்டனம் செய்யவில்லை. காங்கிரஸ் வழக்கை மறுபரிசீலனை செய்யுமாறு வாஜ்பாயியை கேட்டுக் கொண்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட்-ன் தலைவர் பிரகாஷ் காரத் "இப்பிரச்சினையை முழு நீதிமன்றத்தீர்ப்புக்கு குறைந்த எதுவும் தீர்க்காது" என்று செயலற்ற விதத்தில் கருத்துரைத்தார்.

ஆளும் வட்டங்களில் மேலோங்கி நிற்கும் உணர்வை இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கத்தில் தொகுத்து குறிப்பிடப்பட்டதாவது: "ரேபரேலி தீர்ப்பு துணைப்பிரதமருக்கு சச்சரவிடும் வரலாற்றை பின்னால் தள்ளி விட்டு ரதயாத்திரையை காட்டிலும் (ஊர்வலம்) ஆளுகை வளைகோட்டின் வழியாக முன்னோக்கி செல்வதற்கு அருமையான மற்றும் மதிப்புவாய்ந்த (பெறுமதி மிக்க) வாய்ப்பை அளித்திருக்கிறது." வேறு வார்த்தைகளில் கூறினால், முழு விஷயமும் கைவிடப்பட வேண்டும் என்பதாகும்.

அத்வானியின் பாத்திரம்

ஆயினும், அத்வானியும் சரி பிஜேபியும் சரி இப்பிரச்சினையை கைவிடுவது தொடர்பாய் சிறிதளவு விருப்பத்தைக் கூட காட்டியிருக்கவில்லை. 1992ல் பாபர் மசூதி அழிப்பு பிஜேபி ஆட்சிக்கு உயர்ந்ததில் முக்கிய பாத்திரம் வகித்தது. சீரழிந்து வரும் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கு முஸ்லிம்களை பலிக்கடாக்களாக்கும் ஒரு வகுப்புவாத செயல்பட்டியலின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியை நோக்கிய பரந்த அளவிலான குரோதத்தை சாதகமாக ஆக்கிக் கொள்ளும் கட்சியின் திறனை அது விளக்கிக் காட்டியது.

அத்வானியின் பாத்திரத்தை அமுக்குவதற்கு செய்தி ஊடகத்தின் திட்டமிட்ட முயற்சிகள் இருப்பினும், அவர் தான் பாபர் மசூதியை நிர்மூலமாக்கிய பிரச்சாரத்தில் மையமாக இருந்தார். இக்கட்டிடம் "முஸ்லிம் வென்று கைப்பற்றலின்" அடையாளம் அழிக்கப்பட வேண்டும் என்ற இந்தி மேலாதிக்கவாதிகளின் இலக்காக நீண்டகாலமாக இருந்து வந்திருக்கிறது. 1528ல் மசூதியைக் கட்டும் பொருட்டு முஸ்லிம் பேரரசர் பாபரின் கீழ் ஒரு இந்துக் கோவில் இடித்துத் தள்ளப்பட்டது என அவர்கள் கூறுகின்றார்கள்.

1984ல், அப்போதைய பிஜேபி தலைவரான அத்வானி ராமர் பிறந்த இடத்தை "விடுவிப்பதற்கான" குழுவின் தலைமையை ஏற்றார். அடுத்த எட்டு ஆண்டுகளில், இப்பிரச்சினை இந்துவாத மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் பிஜேபி-ன் இந்துத்துவ செயல் பட்டியலின் ஒரு மைய தனிச்சிறப்புக் கூறாய் ஆனது. காங்கிரசுடனான பரந்த மக்களின் அதிருப்தியை பயன்படுத்திக் கொள்வதன் மூலம், பிஜேபி ஆனது மக்களவையில் (இந்தியப் பாராளுமன்றத்தின் கீழ் சபையில்) அதன் பிரதிநித்துவத்தை 1984ல் இரண்டாக இருந்ததிலிருந்து 1989ல் 86 ஆகவும் 1991ல் 118 ஆகவும் பெருக்க முடிந்தது.

1990ல், அத்வானி வட மற்றும் மத்திய இந்தியா முழுவதும் 10,000 கிலோமீட்டர் ரத யாத்திரையை (ரத ஊர்வலம்) தொடங்கினார், அது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதன் ஆரம்பத்தின் அறிவிக்கப்பட்ட நோக்கமாக இருந்தது. நீண்ட பிரச்சாரத்தின்போது, தாழ்ந்த சாதியினருக்கு பல்கலைக் கழக இடங்கள், அரசாங்க வேலைகள் மற்றும் ஏனைய பதவிகள் வழங்குவதற்கான இட ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்துவதற்கான ஜனதாதள கூட்டணி அரசாங்கத்தின் முடிவுக்கு மேல்சாதியினர் மத்தியிலான அதிருப்தியை அத்வானி பற்றிக் கொண்டார்.

இவ் ஊர்வலமானது 1991ல் முதல் தடவையாக ஒரு மாநில அளவில் பிஜேபி ஆட்சியை கைப்பற்றி இருந்த உத்திரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தியாவில் டிசம்பர் 1992-ல் உச்சக் கட்டத்தை அடைந்தது. பிஜேபி முதலமைச்சர் கல்யாண் சிங் இந்து தீவிரவாதிகள் கொண்ட பெரும் கும்பலை அயோத்திக்குள் அனுமதித்தார் மற்றும் பாபர் மசூதிக்கு அருகில் ஒன்றுதிரள அனுமதித்தார். மசூதியின் மீது தாக்குதலின் சாத்தியம் பற்றி கவலைகள் எழுப்பப்பட்டபோது, யாத்திரையின் தலைவர்கள் தங்களின் நடவடிக்கைகள் ஒரு அடையாள வகைப்பட்டதாகவே இருக்கும் என்று வலியுறுத்தினர்.

ஆனால் அத்தவானி மசூதியை அழிப்பதில் நோக்கங்கொண்டிருந்த அப்பகுதியல் நின்றிருந்த பிஜேபி மற்றும் விஎச்பி தலைவர்கள் மத்தியில் இருந்தார். அந்நேரம் India Today இதழ் டிசம்பர் 2 அன்று அத்வானி, கர சேவை (கோவிலைக் கட்டல்) "செங்கற்கள் மற்றும் மண்வாரிகளுடன் சரீரரீதியாக" இருக்கும் மற்றும் அது "பஜனைகள் மற்றும் கீர்த்தனைகள் பாடுவதுடன் மட்டும் மட்டுப்படுத்தப் படாது" என்று கூறியதாக மேற்கோள் காட்டியது.

டிசம்பர்6 அன்று, குறைந்த பட்சம் 60,000 இந்து தீவிரவாதிகள் மசூதியைச் சுற்றிலும் திரண்டிருந்தனர், பலர் குந்தாலிகள், சுத்தியல்கள், மண்வாரிகள், இரும்புக் கம்பிகள், கடப்பாரைகள் மற்றும் கொளுவும் கொக்கிகள் ஆகியவற்றை வைத்திருந்தனர். அத்வானி ஏனைய பிஜேபி தலைவர்களுடன் சேர்ந்து, சிறப்பு மேடையில் வீற்றிருக்க, கும்பலானது மசூதியின் மைதானத்திற்குள் புகுந்து மசூதியை இடித்துத் தள்ள ஆரம்பித்தது.

முன்னாள் பிபிசி செய்தியாளர் ருச்சிரா குப்தா நேரில் பார்த்த சாட்சியாக இருந்து என்ன நடந்த்து என்பதை ஆராயும் நீதி விசாரணைக்கு சாட்சியம் அளித்தார். அப்பெண் அத்வானி எந்தவித ஆட்சேபனையையும் எழுப்பவில்லை என்றார். அக்கட்டிடம் உடைந்து போவதாய் காணத்தொடங்கிய பொழுது மட்டுமே அவர் மோட்டின் உச்சியில் நின்று கொண்டிருந்தவர்களை கீழே குதிக்குமாறு கூக்குரலிட்டார்.

இந்த இடிப்பை "வரலாற்றுத் தன்மை கொண்டது" எனத்வானி பெருமையாகக் கூறியதை குப்தா மேற்கோள் காட்டினார். அவர் விசாரணைக் குழுவிடம் அத்வானி தனது ஆதரவாளர்களுக்கு போலீசார் மசூதியை அடைந்துவிடாமல் தடுப்பதற்கு சாலையை அடைக்குமாறு ஆலோசனை கூறினார். பத்திரிகையாளர்கள் அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது பற்றி புகார் செய்ய அவரை அணுகியபோது அத்வானி அவரை அலட்சியம் செய்தார் என்று குறிப்பிட்டார்.

தேசிய துணை இராணுவப் படைப்பிரிவிலிருந்து ஆயுதம் தாங்கிய தட்டினர் உட்பட சுமார் 25,000 போலீசார் அந்நாளில் நின்றிருந்தனர் ஆனால் இடித்தல் இடம்பெறுகையில் செயலின்றி நின்று கொண்டிருந்தனர். போலீஸ் கொமாண்டர்கள், எந்தவிதத் தலையீடும் ஒரு இரத்தக் குளியலுக்கு வழிவகுக்கும் - இந்த அக்கறை ஏனைய சூழ்நிலைமைகளில் அவர்கள் காட்டியிருக்கவில்லை என்று கூறுவதன் மூலம் தங்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தினர்.

பாபர் மசூதி அழிப்பு உடனடியாக இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் வகுப்புவாத உணர்வுகளை தீமூட்டி விட்டது. இந்தியாவில் பெரும்பாலும் 3,000 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர், ஆயிரக் கணக்கானோர் காயமடைந்தனர் மற்றும் நாலாயிரக் கணக்கானோர் வீடிழந்தனர். இந்து எதிர்ப்பு கும்பல் பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், மற்றும் பங்களாதேஷில் வீதிகளில் இறங்கினர், பலர் இறப்பதற்கும் காயமடைவதற்கும் வழிவகுத்தது.

சட்டரீதியான குற்றச்சாட்டுக்கள்

ஓயாது மாறும் கிளர்ச்சி நிலைமையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், நரசிம்மராவின் இந்திய அரசாங்கம் உத்திரப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியைத் திணித்தது மற்றும் விஎச்பி மற்றும் அதன் நேச இந்து பேரினவாத அமைப்புக்களை தடைசெய்தது. மசூதி அழிப்புக்கு வாய்ப்பு வசதிக்கு உதவி செய்த நிலையில், பிஜேபி முதலமைச்சர் சிங் பதவி நீக்குவதற்கு காத்திருப்பதை காட்டிலும் ராஜினாமா செய்தார்.

நீண்ட காலதாமதத்திற்குப் பிறகு, சிபிஐ ஆனது 1993ல் ஊர்வலத்தின் அத்வானியையும் ஏனைய தலைவர்களையும் குற்றம் சாட்டியது. குற்றப்பத்திரிக்கை அத்வானியின் பேச்சை மேற்கோள் காட்டியது, அதில் அத்தியாவசியமான அத்தகைய எதிர்ப்புக்கான கடைசி நேரமாக அந்நாள் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துவதற்கு அங்கு திரண்டிருந்த கும்பலுக்கு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார். போலீசாரின்படி, அத்வானி முதலமைச்சர் சிங்கை ராஜினாமா செய்ய வேண்டாம் எனக் கேட்டிருந்தார், அதன் மூலம் அரசு எந்திரத்தின் மீதான நேரடிக் கட்டுப்பாட்டை இழக்கும், அக்கட்டிடம் முற்றிலும் இடித்து அழிக்கப்படும் வரைக்கும் ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

ஆயினும், கடந்த பத்தாண்டுகளாக, இவ்வழக்கு சட்ட சச்சரவு சேற்றில் சிக்கிக் கொண்டுள்ளது. எடுத்த எடுப்பிலிருந்தே அரசியல் அழுத்தங்கள் சம்பந்தப்பட்டிருந்தன என்பது தெளிவாக இருந்தது. டிசம்பர் 1993ல் ஒரு மூத்த சிபிஐ அதிகாரி Frontline இதழிடம், விசாரணையாளர்கள் "எவ்வளவு காலம் இது இழுபடும் என்று அறியார்..... இதில் சம்பந்தப்பட்டுள்ள அரசியல் காரணிகளை எடுத்துக் கொண்டால் அதற்கு நீண்ட காலம் எடுக்கும்... வழக்கு மேற்செல்கையில் முன்கூட்டிப் பார்க்க முடியாத எல்லா வகை அரசியல் காரணிகளும் வரக் கூடும்" என்றார்.

1997 செப்டம்பரில் சிறப்பு மாஜிஸ்டிரேட், ஜே.பி.சிறிவத்சவா முதல் தோற்றத்திலேயே அத்வானி பதில் செல்ல வேண்டி இருந்ததைக் கண்டார். "குற்றம் சாட்டப்பட்டவர் சில நடவடிக்கைகளில் திருப்திப்படுத்தி இருக்கிறார், 1990 செப்டம்பரில் சோம்நாத்திலிருந்து அயோத்தி வரையில் லால் கிருஷ்ண அத்வானியால் நடத்தப்பட்ட ரத யாத்திரையில் அவர் இந்து மதக் குழுக்கள் அல்லது அரசியல் கட்சிகளின் பல்வேறு தலைவர்களை தொடர்பு கொண்டிருக்கிறார், அதில் அவரது முக்கிய விஷயமாக சர்ச்சைக்குரிய ராமர் பிறந்த இடம் / பாபர் மசூதி பற்றி உணர்வு இருந்தது" என்று அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் இருந்து இவ்வழக்கு ஆறு ஆண்டுகளாக இழுபட்டது. அங்கு சட்ட நுணுக்கங்கள் இருந்திருக்கின்ற போதும், தாமதத்திற்கான பிரதான காரணம் அரசியலாக இருக்கிறது. பிஜேபி 1998 தேர்தல்களில் தேசிய ரீதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது மற்றும் முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் தொடங்கப்பட்ட பொருளாதார மறு சீரமைப்புத் திட்டங்களை ஆழப்படுத்துவதில் ஒரு கருவியாக இருந்து வந்திருக்கிறது. அதன் விளைவாக அத்வானி மற்றும் ஏனைய பிஜேபி தலைவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எளிதில் கைவிடப்பட வேண்டும் என ஆளும் வட்டங்களில் இருந்து அழுத்தம் இருந்து வருகின்றது.

அதேவேளை, அயோத்தி மசூதி இடிப்பு, மற்றும் அதில் அத்வானியின் பங்கு, தொடர்ந்து உடனுக்குடன் விளைவுகளைக் காட்டக்கூடிய பிரச்சினையாய் இருக்கும். குற்றச்சாட்டுக்களை சாதாரணமாய் கைவிடுவதற்கு ஒரு வழிமுறையை காண்பதற்கு நீதிமன்றத்திற்கும் போலீசுக்கும் பத்தாண்டுகளுக்கும் மேல் காலம் பிடித்திருக்கிறது. செய்தி ஊடகத்திலும் எதிர்க்கட்சிகள் மத்தியிலும் எந்தவித குறிப்பிட்ட எதிர்ப்பும் இல்லாதது இந்த நடைமுறை நிகழ்வதற்கு துணைநின்று ஊக்குவித்திருக்கிறது.

நீண்ட சட்ட நடைமுறைளால் தண்டித்து திருத்தப்படுவதிலிருந்து அப்பால், அத்வானி தவறுக்கு காரணம் காட்டாமல் விடப்பட்டார். அயோத்தி மசூதி அழிப்பில் எந்த சம்பந்தமும் தனக்கில்லை என்று மறுத்ததுடன், அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்றுகூறியதன் மூலம் அவர் மேலும் வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டி விட்டார். "ராமரின் பிறந்த இடத்தில் ஒரு சிறப்பு மிக்க கோவிலைக் கட்டினால், அது இந்திய மக்கள் மத்தியில் அரசியல் ஐக்கியத்தையும் பரஸ்பர நல்லெண்ணத்தையும் கொண்டு வரும்" என சிடுமூஞ்சித்தனத்துடன் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பிஜேபி-ன் செல்வாக்கு அதன் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் வளர்ந்து வரும் சமூக இடைவெளிக்கு வழிவகுத்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, தொடர்ந்த மாநிலத் தேர்தல்களில் தோல்வி அடைந்திருக்கிறது மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேசிய தேர்தல்களிலும் தோல்வி அடையும் சாத்தியம் பற்றி அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அத்வானிக்கு மிக நெருக்கமாக உள்ள, பிஜேபி-ன் கடுங்கோட்பாட்டாளர் பகுதிகள், கட்சியின் பதிவுச்சான்றிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்கு ஒரு வழிமுறையாக வகுப்புவாத பதட்டங்களைத் தட்டி எழுப்புவதை பகிரங்கமாகவே ஆதரித்து வருகின்றனர்.

அயோத்தி மசூதி அழிப்பு தொடர்பாக அத்வானிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைக் கைவிடுவதற்கான நீதிமன்றத்தின் முடிவு அத்தகைய வழிமுறைகளை மீண்டும் வகைப்படுத்த பிஜேபியை ஊக்கப்படுத்த மட்டுமே செய்யும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved