WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
மத்திய கிழக்கு
Israel arms subs with nuclear weapons: an escalation of US-backed
militarism
இஸ்ரேல் தன் நீர்மூழ்கிக்கப்பல்களை அணு ஆயுத ஏவல்களுக்குத் தயாரிப்பு:
அமெரிக்கா ஆதரவு இராணுவவாதத்தின் வெடிப்பு
By Joseph Kay
14 October 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
ஞாயிறன்று லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸில் வந்துள்ள அறிவிப்பில் மூன்று நீர்மூழ்கி கப்பல்களை
அணு ஆயுதம் பொருத்தப்பட்ட க்ரூஸ் ஏவுகணைகளைச் செலுத்தும் திறனுடையதாகச் செய்யும் முயற்சியில் இஸ்ரேல் வெற்றிபெற்றுள்ளதாக
உறுதி செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலின் அணு ஆயுதத் திட்டத்தில் இது ஒரு பெரிய முன்னேற்றமாகும். ஏனெனில் இப்பொழுது
கூடுதலான நீண்டதூர இலக்குகளைத் தாக்கும் திறமை அதற்குக்கிடைத்துள்ளது. சிரியா, ஈரான், பாலஸ்தீனம் ஆகியவற்றின்மீது
இஸ்ரேலிய ஆத்திரமூட்டல்கள் கடுமையாய் அதிகரித்துள்ளதற்கு மத்தியில், அப்பகுதி முழுவதும் உறுதியற்ற நிலையை ஏற்படுத்துதற்கான
அச்சுறத்தலை கொண்டுள்ள நிலையில் இந்த வெளிப்பாடு வந்துள்ளது. இவ் ஆத்திரமூட்டல்கள், இஸ்ரேலுடைய ஆயுதத்திட்டங்கள்
போலவே, அதன் முக்கிய புரவலராகிய அமெரிக்காவின் முழு ஆதரவையும் கொண்டுள்ளது.
டைம்ஸினால் பேட்டி காணப்பட்ட வாஷிங்டனில் உள்ள பெயரிடப்படாத உயர்மட்ட
அதிகாரிகள் கூறியுள்ளபடி, இஸ்ரேல் அமெரிக்கா அளித்த ஹார்பூன் ஏவுகணைகளில் பலவற்றை அணு ஆயுதங்களை
செலுத்தும் திறனுடையதாக மாற்றங்கள் செய்திருக்கிறது. முன்பு மரபு வழித்தாக்குதலுக்கு வடிவமைக்கப்பட்டிருந்த இந்த
ஏவுகணைகள் இப்பொழுது 1999 மற்றும் 2000-ம் ஆண்டுகளில் ஜேர்மனியிடமிருந்து வாங்கியுள்ள மூன்று டீசல் சக்தியால்
இயக்கப்படும் நீர்மூழ்கி கப்பல்களில் இருத்தப்படும்.
நீர்மூழ்கி கப்பல்களின் இயங்கும் திறன் நாட்டின் அணு ஆயுதங்களை ஏவுகணை தாக்குதலுக்கு
புக வழி அளிக்காதவாறு செய்யும் என்பதால், இக்கூடுதலான அணுவாயுதத்திறன் இஸ்ரேல் மத்தியகிழக்கிலும் அதற்கு அப்பாலும்
காட்டும் அச்சுறுத்தலை அதிகரிக்கும். இஸ்ரேல் இப்பொழுது அணு ஆயுதங்களை தரை, கடல் மற்றும் ஆகாய மார்க்கமாக
ஏவும் திறனை பெற்றிருக்கிறது.
மேலும் அமெரிக்கர்களின் அறிவிப்பு உண்மைதான் என பெயரிடப்படாத உயர்மட்ட இஸ்ரேலிய
அதிகாரியும் உறுதிசெய்துள்ளார் என்று டைம்சின் அறிவிப்பு கூறுகிறது. ஓராண்டிற்கும் மேலாகவே இந்த நீர்மூழ்கிக்கப்பல்களை
அணுவாயுத தாக்குதல்கள் நடத்த மாற்றும் முயற்சிகளில் இஸ்ரேல் ஈடுபட்டுவருகிறது எனத்தெரிந்தாலும் அதில் வெற்றி
பெற்றுவிட்டது என்பதை முதன்முதலில் நேரடியாக உறுதிசெய்வது டைம்ஸில் வந்துள்ள கட்டுரைதான்.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஒன்றுதான் அணு ஆயுதங்களை கொண்ட நாடாகும்.
மதிப்பீடுகளின்படி இது கொண்டுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 200 ஆகிறது. இது அதனை உலகத்திலேயே ஐந்தாவது
அணு ஆயுத வல்லரசாக ஆக்கி இருக்கிறது.
1950-களிலேயே அப்பொழுது அதன் நெருங்கிய நட்பு நாடாக இருந்த பிரான்சின்
உதவியுடன் இஸ்ரேலின் அணுஆயுத திட்டம் தொடங்கியது. இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் உள்ளன என்பது பற்றி
1960-களின் கடைசிப் பகுதியிலேயே அமெரிக்க உளவுத்துறைக்கு தெரியும். இதைப்பற்றி குறை ஏதும் கூறாமல்
அணுவாயுதங்களை செலுத்தும் திறன் பெற்ற F-15, F-16-
போர்விமானங்களை இஸ்ரேலுக்கு கொடுத்து அதன் வளர்ச்சிக்கு அமெரிக்கா உதவியுள்ளது. இஸ்ரேலிய இராணுவத்திற்கு
பிரம்மாண்டமான முறையில் அமெரிக்கா நிதி உதவி அளிப்பதில் இது ஒரு சிறிய பகுதியே ஆகும்.
''பிரிட்டனிலும், பிரான்சிலும் அணு ஆயுதத்திறமையை பொறுத்துக்கொள்ளும் அதே காரணத்திற்காகத்தான்
இஸ்ரேலின் அணு ஆயுதத்திட்டத்தையும் பொறுத்துக்கொள்கிறோம். இஸ்ரேலை ஓர் அச்சுறுத்தும் நாடாக நாங்கள் கருதவில்லை"
என ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி கூறியதை டைம்ஸ் மேற்கோள் காட்டுகிறது. வேறுவிதமாகக் கூறினால்,
இஸ்ரேல் அமெரிக்காவின் நட்புநாடு என்பதால். அதற்கு என்ன அணு ஆயுதத் திறனை வளர்த்துக் கொள்ள
விரும்பினாலும், அதன் அண்டை நாடுகளை தாக்குவதற்கு பயன்படுத்தக்கூடிய அணு ஆயுதத்திறனை வளர்த்துக்
கொள்ளலாம்.
ஒரு அணுஆயுத வல்லரசு என்ற இஸ்ரேலின் தகுதி பற்றி பொதுவாக எல்லாரும் அறிந்துள்ள
போதும்கூட, அந்நாடானது ''அணு ஆயுதம் பற்றிய தெளிவின்மை'' என்ற அதன் கொள்கையை பேணிக்கொண்டு, அதனுடைய
திறனை வெளிப்படையாக அறிவிக்க மறுத்துள்ளது. அதன் திட்டத்தை பற்றி கடுமையான இரகசியத்தையே அது செயல்படுத்தி
வருகிறது.
1986-ம் ஆண்டு லண்டன் இதழான சண்டே டைம்ஸிற்கு இஸ்ரேலின்
Dinmona அணுஉலை வளர்ச்சி திட்டத்தைப்பற்றி வெளியிட்டதாக
பழைய அணுசக்தி தொழில்நுட்ப வல்லுனர் Mordechai Vanunu
விற்கு 18 ஆண்டுகால சிறைதண்டனை கொடுக்கப்பட்டது. செய்தி ஊடகக்குறிப்புக்கள் இராணுவத்தால் வாடிக்கையாக
தணிக்கை செய்யப்படுவதுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் அணுசக்தி திட்டத்தைப்பற்றி விவாதித்தாலும் அது உடனே
அமுக்கிவைக்கப்படுகிறது.
அமெரிக்க இஸ்ரேலிய அரசாங்கங்கள் அவற்றின் பங்கில், இஸ்ரேலின் அண்டைநாட்டுக்காரர்கள்
மீது அழுத்தத்தை அதிகப்படுத்தும் முயற்சியுடன் இச்செய்தி வெளிப்பாட்டின் நேரம் பிணைந்துள்ளது. டைம்ஸ்
படி, அமெரிக்க அதிகாரிகள் ''அப்பகுதியில் மிகுந்த அளவு பதட்டங்கள் உள்ளபோது இஸ்ரேலின் விரோதிகள் எச்சரிக்கப்பட
வேண்டும் என்பதற்காகத்தான் இதை வெளியிட்டனர்''. குறிப்பாக ஈரான், சிரியா ஆகியவை இஸ்ரேலைப் போலவே
வலியத்தாக்கும் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டால் முழு அழிவை சந்திக்க நேரிடும் என்ற
அச்சுறுத்தல்தான் இதன் அர்த்தப்படுத்தலாக இருக்கிறது.
ஈரானைத் தாக்கத் திட்டங்கள் தயாரிக்குமாறு இஸ்ரேலிய உளவுத்துறை அமைப்பு
மொசாட் இரண்டு மாதங்களுக்கு முன் உத்தரவைப் பெற்றது என்று சமீபத்திய ஜேர்மன் இதழான
Der Spiegel அறிவித்துள்ளது. ஈரான் அணுவாயுதத்திட்டத்தை அபிவிருத்தி செய்கிறது என்ற சந்தேகமிருந்தால்
''தடுக்க முடியாத தாக்குதலை'' சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் பலமுறை அச்சுறுத்தியுள்ளது. தன்னுடைய
பங்கிற்கு தெஹ்ரான் இஸ்ரேல் தனது அணுவாயுத வசதிகளை தாக்கினால் குறிப்பிடவிரும்பாத சில தற்காப்பு நடவடிக்கைகளைத்தான்
மேற்கொள்ள நேரிடும் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளது.
ஈரான் தன்னுடைய அணுசக்தி வசதிகளை கட்டிஅமைப்பதில் அழுத்தம் காட்டும் வகையில்
இந்த அச்சுறுத்தல்கள் வாஷிங்டனின் முறையான பிரச்சாரத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. ரஷ்ய உதவியுடன்
அமைக்கப்படும் இத்திட்டம் அணு ஆயுதத்திட்டத்தின் ஒரு பகுதியே என்று ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா
பலமுறை கூறியுள்ளது. ஈரான் அணு சக்தி திட்டம் மின்விசை உற்பத்திக்கு மட்டுமே என்று வலியுறுத்தி வருகிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவின் அழுத்தத்தின் கீழ் ஐ.நா-வும் ஈரான்
தன்னுடைய அணுசக்தி வசதிகளை சர்வதேச ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளது. தன்னிடத்தில் அணு ஆயுத
உற்பத்தித்திட்டம் இல்லை என்பதை எப்படியாவது அக்டோபர் 31-க்குள் நிரூபிக்க வேண்டும் என ஐ.நா வின் சர்வதேச
அணுசக்தி முகவாண்மை கெடுவிதித்துள்ளது. ஈராக் தன்னிடத்தில் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்
என வலியுறுத்தியதைத்தான் இத்தகைய கோரிக்கை இணையானதாகக் காட்டுகிறது. இல்லாததை நிரூபியென வற்புறுத்தும்
கோரிக்கைகளைப் பூர்த்தி செய்வது இயல்பாக முடியாத செயலாகும். கொடுக்கப்பட்ட சான்றுகள் திருப்திகரமாக
இல்லை என்று அமெரிக்கா எப்பொழுதும் கூறிவிட முடியும்.
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (Nuclear
Nonproliferation Treaty) கையெழுத்து இடுமாறும் கூட ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
இது ஐ.நா ஆய்வுக் குழுவுக்கு அந்நாட்டில் தடையின்றி விரும்பும் இடமெல்லாம் சென்று பார்க்க வசதிவழங்கும். இராணுவ
நடவடிக்கை எடுப்பதற்கான தனது சாக்குப்போக்குகளாக புஷ் நிர்வாகம் உற்பத்தி செய்த இதேபோன்ற கோரிக்கைகளைத்தான்
வாஷிங்டன் ஈராக்கின் மீது வைத்தது.
ஈரானின் அணு சக்தித் திட்டம் பற்றி ஐ.நா கடுமையாக குறைகூறியிருந்தாலும் இஸ்ரேலுடைய
விரிவடைந்தே போகும் அணு ஆயுதக்குவிப்பு பற்றி முழு மெளனத்தைத்தான் சாதிக்கிறது. ஈரான் மற்றும் பெரும்பாலான
பெரிய அரபு நாடுகள் போலன்றி இஸ்ரேல் அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் முக்கிய பகுதியில் கையெழுத்திட
மறுத்துள்ளது என்ற உண்மை, ஐ.நாவின் இந்த இரட்டைவேட பாசாங்கை உயர்த்திக் காட்டுகிறது.
இந்த வெளிப்படையான இரட்டைவேடம் அநேக அரபு நாடுகளை கடந்த மாதம் ஐ.நாவிற்கு
ஒரு புகார் தெரிவிக்க தூண்டியது. சிரியாவின் வெளியுறவு அமைச்சர் பரூக் அல்-ஷாரா, ''சிலர் சில அரபுநாடுகள்
மற்றும் இஸ்லாமிய நாடுகள் மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தத்தயாராக உள்ளனர், ஆனால் அதே நேரத்தில்
அணு, இரசாயன மற்றும் உயிரியல் பேரழிவு ஆயுதக்குவிப்பு கொண்ட இஸ்ரேலைப் பற்றி கவலைப்படவில்லை என்பது
வருந்தத்தக்கது'' என்று ஐ.நா-விடம் கூறினார்.
ஈரான் போலவே சிரியாவிற்கும் கவலை கொள்ளக்காரணம் இருக்கிறது. இஸ்ரேல் சிரியாவின்
நிலப் பரப்பில் உள்ளே சென்று குண்டுவீசி இலக்கைத்தாக்கியதன் பின் ஒரு வாரத்திற்குள் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற இஸ்லாமிய பாலஸ்தீனிய இயக்கங்களுக்கு சிரியா ஆதரவு தருவதாக இஸ்ரேல்
குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவும் இக்குற்றச்சாட்டுக்களை எதிரொலித்துள்ளது. அதே சமயம் சிரியா, எல்லையைத்தாண்டி
ஈராக்கில் நுழைந்து, அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களுக்கு உதவுவதாகவும் அமெரிக்கா கூறுகிறது. கடந்த
புதன்கிழமையன்று, புஷ் நிர்வாகத்திற்கு ஆதரவாக அமெரிக்க சட்டமன்றக்குழு ஒன்று சிரியாவின் பயங்கரவாத ஆதரவு
என்று கூறப்படுவதற்கு பதில் நடவடிக்கையாக சிரியா மீது இராஜதந்திர மற்றும் பொருளாதார தடைகள் கொண்டுவரக்
கோரும் நடவடிக்கையை இயற்றியது.
சிரியாவிற்கும் ஈரானிற்கும் எதிராக இஸ்ரேலிய அமெரிக்க அச்சுறுத்தலும் அதிகரித்திருக்கின்ற
அதேவேளை, காசா மற்றும் எகிப்தின் எல்லையோரத்தில் ரபா நகர அகதிகள் முகாமொன்றில் இஸ்ரேலிய ஊடுருவல்
உட்பட, இஸ்ரேலின் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. ஆயுதக்கடத்தலுக்கு சுரங்கப்பாதைகள் என்று கூறப்படுவதை அழிப்பது
என்ற பெயரில் மூன்று நாட்கள் நடவடிக்கைகள் எடுத்த பின்னர் இஸ்ரேலியப்படைகள் ஞயிறன்றுதான் ஓய்ந்தன. இத்தாக்குதலில்
இரு குழந்தைகள் உட்பட எட்டு பாலஸ்தீனியர்கள் இறந்து போயினர்; டஜன் கணக்கில் காயமடைந்தனர். 120 வீடுகள்
தகர்க்கப்பட்டு 1500 பேருக்கு மேல் வீடிழந்ததாக ஐ.நா மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. வீட்டைத்தகர்க்கும் இந்த
மிருகத்தனமான தாக்குதல் பாலஸ்தீனியரை அப்பகுதியிலிருந்தே முழுமையாக வெளியேற்றும் திட்டத்திற்கு வழிவகை செய்கிறது.
இந்த செயற்பாடுகள் அனைத்துமே இஸ்ரேல் மற்றொரு பெரிய போருக்கு மத்திய கிழக்கில்
வழி செய்து கொண்டிருப்பதைத்தான் காட்டுகின்றன. விரிவாக்கக் கொள்கையை பின்பற்ற ஷரோன் அரசாங்கம்
முடிவெடுத்து விட்டது; இது சமீபத்திய துறைமுக தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் உள்நாட்டு நெருக்கடிகள் உயர்த்தப்பட்டதை
திசைதிருப்பும் வகையையும் ஓர் அங்கமாக கொண்டுள்ளது. இஸ்ரேலுடைய ஆக்கிரமிப்பு முரட்டுத்தனத்திற்கு அமெரிக்காவின்
முழு ஆதரவு கிடைக்கிறது. ஷரோன் ஆட்சியை போன்றே புஷ் நிர்வாகமும் ஈராக்கிய ஆக்கிரமிப்பால் தொடர்ந்து
பெருகும் உள்நாட்டு நெருக்கடியை எதிர்கொள்கிறது. அந்நெருக்கடியை சமாளிக்க மற்றொரு போரை தொடக்க இஸ்ரேல்
முன்னணிப்படையாக நிற்க அமெரிக்கா தயாராகி வருகிறது.
மிகப்பெரிய அளவில் விரிவடைந்து வரும் இஸ்ரேலின் அணுசக்தித்திறன் -அமெரிக்கா பற்றி
குறிப்பிடத் தேவையில்லை- இஸ்ரேலும் அதன் முக்கிய ஆதரவு நாட்டினதும் ஆத்திரமூட்டும் தன்மையுடைய இராணுவ நோக்கினால்
முன்வைக்கப்படும் பேரழிவு அபாயங்களைத்தான் வெளிச்சம் பாய்ச்சி காட்டுகின்றன.
Top of page
|