World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்காIs the US plotting to murder Venezuela's president? வெனிசூலா ஜனாதிபதியை கொலை செய்வதற்கு அமெரிக்கா சதித்திட்டம் தீட்டுகிறதா? By Bill Vann வெனிசூலா ஜனாதிபதி ஹூகோ சாவேஸ் சென்ற மாதம் ஐ.நா- பொதுச்சபை ஆரம்ப மாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்த பயணத்தை, தனது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை இருப்பதால் ரத்து செய்வதாக அறிவித்தார். அமெரிக்காவின் CIA- ஆதரவுடன் ஒரு சதித்திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் வெனிசூலாவின் கார்க்காஸ் நகரத்திலிருந்து நியூயோர்க் நகருக்கு புறப்படும் அவரது விமானத்தில் நாசவேலை செய்ய திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகவும் வெனிசூலா அரசாங்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க மண்ணில் வெனிசூலா அரசாங்கத்திற்கு எதிரான பயங்கரவாதிகள் இராணுவப்பயிற்சி நடத்திக்கொண்டு வருவது தொடர்பாக அவரும் மற்ற தலைவர்களும் கவலை தெரிவித்திருந்தனர். அமெரிக்க ஊடகங்கள் வெனிசூலா ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை சிறப்பித்து குறிப்பிடவில்லை. அப்படியே குறிப்பிடவேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் அவரது குற்றச்சாட்டுக்கள் சாவேஸின் ஸ்திரமின்மையின் அறிகுறி அல்லது சித்தப்பிரமையினால் வருபவை என தள்ளி விடுகிறார்கள். சாவேஸின் கவலைகள் மிதமிஞ்சியவையல்ல. வெனிசூலாவின் வரலாற்றிலேயே அடுத்தடுத்த இரண்டு பொதுத் தேர்தலில் மிகப்பெரும் அளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள அவர், புஷ் நிர்வாகத்தின் அப்பட்டமான ஆதரவு பெற்ற 2002, ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் தோல்வியால் தான் இன்று அவர் தொடர்ந்து பதவியில் இருக்கிறார். AFL-CIO- தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அதன் சர்வதேச முன்னணி அரங்கான சர்வதேச தொழிலாளர் ஐக்கியத்திற்கான அமெரிக்க மையத்தின் மூலம் அமெரிக்க அரசாங்கத்தின் பணம் சென்றது உட்பட, இந்த ஆட்சி கவிழ்ப்பு திட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அமெரிக்கா நிதி உதவிகளைப் பெற்றிருந்தனர். இராணுவம்- வர்த்தகர் ஆட்சி அதிகாரத்தை வைத்திருந்த சாவேஸை அவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும் வேளையில் வெனிசுலா கடற்கரையின் தீவுப் பகுதியில் இரண்டு நாட்கள் தனிக்காவலில் வைத்தது. வாஷிங்டன் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை ஆதரித்தது. காரகாசில் வீதிகளில் பொதுமக்கள் திரண்டு ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிராக கிளர்ச்சி செய்வதைத் தொடர்ந்து புதிய ஆளும் இராணுவக்குழு நிலை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இராத நிலைக்கு பின்னர் பின்வாங்கியது. இந்த ஆட்சி கவிழ்ப்பிற்கு திட்டமிட்டவர்கள் அமெரிக்க வெளியுறவுத் துறையிலும் பென்டகனிலும் அவர் முக்கியமான பதவிகளில் இருக்கும், கியூபாவில் இருந்து வெளியேறிய வலதுசாரிகள் மற்றும் நிகாரகுவாவில் CIA- ஆதரவுபெற்ற "கான்ட்ரா" போரில் பங்கு கொண்ட முன்னாள் போர் வீரர்கள் கொண்ட குழுவோடு அடிக்கடி ஆலோசனைகள் நடத்தியிருப்பது வெளிப்பட்ட பின்னர், இந்த தனிநபர்கள் அரசாங்கத்தை தூக்கி எறிவதில் வெனிசூலா இராணுவம் மற்றும் வர்த்தக நிறுவனங்களோடு பேசுவதற்கு மட்டுமே முயன்றார்கள் என்று புஷ் நிர்வாகம் நம்ப முடியாத சமாதானத்தை கூறியது. ஆயினும், எவரும் நடைபெறவிருக்கும் ஆட்சிக்கவிழ்ப்பு சதி குறித்து சாவேஸுக்கு எச்சரிக்கை செய்ய நினைக்கவில்லை. ஆட்சி கவிழ்ப்பு சதி முயற்சி தோல்வியடைந்த பின்னர், டிசம்பரிலும் ஜனவரி மாதத்திலும் அரசாங்கத்தை இறக்குவதற்காக எதிர்கட்சி தலைவர்களின் ஆதரவோடு 64-நாட்கள் எண்ணெய் தயாரிப்பு வேலை நிறுத்தம் நடைபெற்றது உட்பட, வெனிசூலாவில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதற்காக இடைவிடாது பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், அமெரிக்க அதிகாரிகள், சாவேஸை கண்டிக்கும் வகையில் திரும்பத் திரும்ப அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றனர். ''உள் நாட்டில் அவர் எடுக்கின்ற சில அரசியல் நடவடிக்கைகளும் அவரது பொருளாதார பக்கத்தில் அவரது கொள்கைகளும் ஒப்பீட்டளவில் செல்வ வளம் உள்ள வெனிசூலா நாட்டை சீரழித்து விட்டது என நான் நினைக்கிறேன்'' என்று லத்தீன் அமெரிக்க நாடுகள் தொடர்பான அமெரிக்க அரசுத்துறையின் உயர் அதிகாரி ரோஜர் நோரிகா அண்மையில் அறிவித்தார். எண்ணெய் வேலைநிறுத்தம் குறித்தோ அல்லது அதற்கு வாஷிங்டன் மறைமுகமாக ஆதரவு தந்தது தொடர்பாகவோ அல்லது யூலையில் அமெரிக்க ஏற்றுமதி இறக்குமதி வங்கி வெனிசூலாவிற்கு வழங்கும் எல்லா கடன்களையும் ரத்து செய்வதற்கு வாஷிங்டன் முடிவு செய்தது பற்றியோ அவர் தனது அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை. அதே நேரத்தில், சாவேஸை பதவியிலிருந்து நீக்குவதை நோக்கமாகக்கொண்ட திருப்பி அழைத்தல் தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் விடுத்திருந்த கோரிக்கைக்கு புஷ் நிர்வாகம் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தது. வெனிசூலாவின் உள்நாட்டு விவகாரங்களில் அப்பட்டமாக தலையிடுகின்ற வகையில், அமெரிக்க தூதரான சார்லஸ் ஷாபிரோ அந்நாட்டின் புதிய தேர்தல் கமிஷன் முன் சென்ற மாதம் ஆஜராகி, எதிர்க்கட்சியின் திருப்பி அழைத்தலுக்கான தேர்தலை ஏற்பதா இல்லையா என்பதை முடிவு செய்வது உட்பட அமெரிக்காவின் உதவி அதற்கு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார். CIA - ஆதரவு நாசவேலை மற்றும் படுகொலைகளில் ஷாபிரோ புதியவரல்ல. அவரது ராஜதந்திரப் பணி 1980-களில் எல் சல்வடோரை மையப்படுத்தி இருந்தது. 1983-முதல் 1985-வரை அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரியாக சல்வடோரன் இல் பணியாற்றி வந்தார். 1985-முதல் 1988-வரை சான் சல்வடோரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அரசியல் பிரிவு கான்சுலர் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார். இந்த பதவி பொதுவாக ஒரு குறிப்பிட்ட நாட்டில் CIA- யின் தலைமை அதிகாரிக்கு முகமூடியாக வழங்கப்படுகின்ற பதவியாகும்.இந்த காலகட்டம் சால்வடோர் நாட்டில் உள்நாட்டுப் போர் மிகத் தீவிரமாக நடைபெற்ற மற்றும் ஒட்டுமொத்த படுகொலைகள் மற்றும் சதிப்படுகொலைகள் இராணுவ ஆதரவு கொலைப்படையால் நடத்தப்பட்ட காலம் ஆகும். பக்கத்து நாடான நிகரகுவாவில் அதன் சட்ட விரோதமான "கான்ட்ரா" போருக்கான நடவடிக்கைகளுக்கு எல் சல்வடோரை அமெரிக்கா ஒரு தளமாக பயன்படுத்திய காலமும் ஆகும். இறுதியாக, வெனிசூலா முறைகாண் ஆயம் (panel), எதிர்க்கட்சியினர் திரட்டிய பெரும்பாலான கையெழுத்துக்கள் சட்ட விரோதமாக சேகரிக்கப்பட்டது என்று தீர்ப்பளித்து திருப்பி அழைத்தல் தேர்தலுக்கு புதிய கால அட்டவணையை அறிவித்தது. ''ஐந்தாவது குடியரசு இயக்கத்தில்'' உள்ள சாவேஸின் ஆதரவாளர்கள், ஜனாதிபதியை வெளியேற்ற முயற்சிக்கும் எதிர்கட்சிக்காரர்கள் கவர்னர்களாக மேயர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக பணியாற்றி வருகின்ற பகுதிகளிலும் தொகுதிகளிலும் திருப்பி அழைத்தல் தேர்தல் நடத்தப்படுவதற்கு மனுச்செய்யப்போவதாக குறிப்பிட்டனர். அடுத்த பெப்ரவரி மாதம் தான் திருப்பி அழைத்தல் தேர்தல் நடத்துவது தொடர்பான பொது வாக்கெடுப்பு நடத்த முடியும். மிராபுலோர்ஸ் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே ஒரு குண்டு வெடித்தது மற்றும் கொலம்பியா நாட்டு தூதரகத்தின் மீது தாக்குதல் நடந்தது உட்பட, அண்மை வாரங்களில் காராகஸில் வரிசைக்கிரமமாக பயங்கரவாத குண்டு வீச்சு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. மிக அண்மைக்காலத்தில், அரசாங்கத்தின் தொலைத் தகவல் தொடர்பு நெறிமுறை முகவாண்மை, CONATEL தலைமை அலுவலக கட்டிடங்கள் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசினர், அது எதிர்கட்சி கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சி வலைப்பின்னலான குளோபோவிஷன் பயன்படுத்தி வந்த சட்ட விரோதமான ஒலி, ஒளிபரப்பு சாதனங்களை பறிமுதல் செய்ததற்கு பதிலடியாக நடத்தப்பட்டிருக்கின்றது. இதற்கிடையில், 2002-ஏப்ரலில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் நேரடியாக பங்கு எடுத்துக்கொண்டவர்கள் உட்பட வெனிசூலா அரசாங்கத்திற்கு எதிரான சக்திகள் அமெரிக்க மண்ணில் பயங்கரவாத தந்திரோபாயங்களில் பகிரங்கமாக பயிற்சி பெற்று வருவதாக வெனிசூலா அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. ஜனவரி மாதம் Wall Street Journal - ல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை, புளோரிடாவில் 2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பில் ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்த வெனிசுலா அதிகாரிகளுள் ஒருவரான கேப்டன் Luis Eduardo Garcia நடவடிக்கைகளை விவரித்திருந்தது. வெனிசூலா தேசபக்தி குழுவை நடத்திவரும், கார்சியா, F-4 காமான்டோக்கள் மற்றும் கியூபாவிற்கு எதிராக தாக்குதல்களை நடத்தி இருக்கும் புலம்பெயர்ந்த கியூப விரோத குழு உடன் இணைத்து "இராணுவ -குடிமக்கள்" கூட்டை உருவாக்கி இருக்கின்றார். Journal குறிப்பிடுவதாவது: "Everglades- க்கு அருகில் சுடுதொலைவில், தற்போது F-4 கமான்டோக்கள் 50 பேருக்கு பயிற்சியளித்து வருவதாக கேப்டன் கார்சியா கூறியுள்ளார். இவர்களில் 30 பேர் கியூப- அமெரிக்கர்கள், மற்றவர்கள் வெனிசூலா நாட்டைச் சேர்நதவர்கள். ''நாங்கள் போருக்கு தயாராகி வருகிறோம்'' என்று அவர் கூறினார்.El Nuevo Herald உட்பட, புளோரிடாவைச் சேர்ந்த பத்திரிகைகள் இராணுவ பயிற்சி முகாம் பற்றி இதே போன்ற செய்திகளை வெளியிட்டுள்ளன.சாவேஸ் சென்ற மாதம் அமெரிக்க தூதர் ஷாப்பிரோ உடன் ஒரு சந்திப்பில் முகாம் இருப்பது பற்றி நேரடியாகவே எதிர்ப்பைத் தெரிவித்தார். செப்டம்பரில் சாவேஸ் ஆற்றிய உரையில் புஷ் நிர்வாகத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனப்படுவதன் பாசாங்கை கண்டித்திருக்கிறார். ''அமெரிக்காவில் வெனிசூலாவிற்கு எதிராக சதி செய்து கொண்டிருக்கிறார்கள்'' என்றார் அவர். ''வெனிசூலாவிற்கு எதிராக பயங்கரவாதிகளுக்கு பயிற்சி தருகிறார்கள். அமெரிக்க அரசாங்கத்திற்கு வைத்தாக வேண்டிய கோரிக்கை அது, ஏனெனில் அவர்கள் சர்வதேச சட்டப்படி கோரிக்கை செயல்படக் கடமைப்பட்டவர்கள். அவர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் புரிவதாக சொல்லிக்கொள்வது உண்மையாக இருக்குமானால், தங்களது சொந்த எல்லைப்பகுதிகளில் வெனிசூலாவை அச்சுறுத்துகின்ற வகையில் செயல்படுகின்ற பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தாக வேண்டும்'' என்று குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த வெனிசூலாவின் அமெரிக்க தூதர் ஷாப்பிரோ அமெரிக்க மண்ணில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பது "ஒரு குற்றச்செயல் என்று அவசியம் வர்ணிப்பதற்கு உரியதல்ல" என்று பதிலளித்திருக்கிறார். அமெரிக்க அரசாங்கம் "தகவல்களை முழுமையாக திரட்டி வருகின்றது மற்றும் நாங்கள் எல்லா சட்ட நடைமுறைகளையும் பின்பற்றியாக வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார். கேப்டன் கார்சியாவின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான முதலாவது செய்தி அறிக்கைகள் ஓராண்டிற்கு முன்னர் மியாமி பத்திரிகைகளில் முழுமையாக வெளியிடப்பட்டன. புளோரிடாவை வெனிசூலா பயங்கரவாதிகளுக்கு புகலிடம் தந்துள்ள புஷ் நிர்வாகம், வெனிசூலா நாடு பயங்கரவாதிகளின் சொர்க்கம் என்று முத்திரை குத்துவதற்கு கெடுநோக்குடைய பிரச்சாரத்தை நடத்தி வருகின்றது. இத்தகைய தவறான பிரச்சார இயக்கத்தின் வெளிப்பாடு, அக்டோபர்-6-ந் தேதியிட்ட அமெரிக்க நியூஸ் அன்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் (US News & World Report) பத்திரிகையில், ''வீட்டிற்கு அருகிலேயே பயங்கரவாதம்'' என்ற பீதியூட்டும் தலைப்பில் வெளியாகி இருந்தது. சாவேஸ் பயங்கரவாதத்துடன் கொஞ்சி குலாவுகிறார். வாஷிங்டன் அதிகரித்த எச்சரிக்கையுடன் கவனித்துக் கொண்டு வருகின்றது'' என்று அந்தப் பத்திரிகை, பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க புலனாய்வு மற்றும் அரசாங்க செய்தி மூலங்களை ஆதாரம் காட்டிக் கூறியுள்ளது, கிட்டத்தட்ட அந்தக் கட்டுரை முழுவதிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்தான் இடம் பெற்றுள்ளன. இத்தகைய பரபரப்பான கூற்றுக்களுக்கு அடிப்படை என்னவென்று பார்த்தால் வெனிசூலா நாட்டில் அரபு சிறுபான்மையினர் மற்றும் நூறாயிரக்கணக்கான கொலம்பிய நாட்டு அகதிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வெனிசூலா அரசாங்கம் இவர்களுக்கு அடையாள அட்டைகள் முதலிய எல்லா ஆவணங்களையும் வழங்கியுள்ள- இந்தக் கட்டுரையில் அவர்களது தாய்நாட்டை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாதிகளுடன் இணைத்து மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ள - இவர்கள் எல்லாம் பயங்கரவாதத்திற்கான ஆதரவு என முத்திரை குத்தப்படுகிறது. ''வெனிசூலாவிற்கும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கும் இடையே சந்தேகத்திற்குரிய தொடர்புகள் பெருகிக்கொண்டே போகின்றன" என்று அந்தக் கட்டுரை சுட்டி காட்டுகின்றது. அதற்கு ஆதாரமாக அரபு வம்சா வழி வெனிசூலா பிரஜை ஒருவர் அமெரிக்காவிலிருந்து 2002-மார்ச் மாதம் நாடுகடத்தப்பட்டதை சுட்டிக்காட்டுகிறது. இந்த தனிநபரை கண்டு பிடித்து அவரிடம் மேலும் விசாரணை நடத்துவதற்கு அமெரிக்கா முயன்றபோது "தங்கள் நாட்டில் அந்த தனிமனிதர் இல்லை என்று வெனிசூலா அதிகாரிகள் கூறிவிட்டதாக" அந்தக் கட்டுரை குறிப்பிடுகின்றது. வெனிசூலா அதிகாரிகள் அந்த மனிதர் நடமாடும் இடத்தை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என அந்த கட்டுரை விளக்கவில்லை. அதைவிட தங்களது விசாரணைக்கு உட்பட்ட ஒருவரை அந்த விசாரணை முடிவிற்குள் அமெரிக்க அதிகாரிகள் எப்படி விடுதலை செய்து நாடு கடத்தினார்கள் என்பதையும் அந்தக் கட்டுரை விளக்கவில்லை. "சாவேஸின் வெனிசூலாவில் நடப்பதை பார்க்கும் போது, சில அமெரிக்க அதிகாரிகள் பயங்கரவாதத்தை பிரதானமாய் மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்சனை என்று மட்டுமே பார்ப்பதாகவும், அமெரிக்கா தனது தெற்கு முனையில் பாதுகாப்பு அளிப்பதற்கு கவனம் செலுத்தவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளனர்" என்பதாக அந்தக் கட்டுரை முடிக்கப்படுகிறது. இதனுடைய பொருள் என்னவென்றால் "பயங்கரவாதம்" என்ற சாக்குப்போக்கை கூறி இந்த முறை இலத்தீன் அமெரிக்க நாட்டில் வாஷிங்டன் தனது சூறையாடும்போரை தொடக்க வேண்டும் என்பதுதான். சாவேஸின் மக்களை கவர்ந்து ஈர்க்கின்ற வகையில் பேசுகின்ற வல்லமை மற்றும் ஈராக் மீது அந்த தரப்பிலிருந்து எந்தவிதமான ஆத்திரமூட்டலும் இல்லாமல் புஷ் நிர்வாகம் போர் தொடுத்ததை மிகக்கடுமையாக அவர் கண்டனம் செய்தது வாஷிங்டனின் பகையை சம்பாதித்துள்ளது. அது மட்டுமல்ல அவர் காஸ்ட்ரோவின் கியூபாவுடன் நட்புறவை நிலைநாட்டி வருகிறார். ஆக இறுதியாக பார்க்கும் போது அவரது அரசாங்கதிற்கு எதிராக அமெரிக்கா இடைவிடாது இயக்கம் நடத்திக்கொண்டிருப்பதற்கான அடிப்படை மூலகாரணங்கள் ஈராக்கிற்கு எதிரான போருக்கான அடிப்படைபோன்றது தான். வெனிசூலா நாடு உலகிலேயே எண்ணெய் ஏற்றுமதி செய்கின்ற ஐந்தாவது மிகப்பெரிய நாடாகும். அங்கும் பக்கத்து கொலம்பியா நாட்டிலும் கிடைக்கின்ற மூலோபாய எண்ணெய் வள ஆதாரத்தின் மீது சர்ச்சைக்கிடமில்லாத தனது மேலாதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்ள அமெரிக்க ஆளும் செல்வந்தத் தட்டு தீர்மானகரமாக இருக்கின்றது. வெனிசூலா நாட்டிலுள்ள பெட்ரோலிய எண்ணெய் வளத்தால் மட்டும் வாஷிங்டன் கவலைப்படவில்லை. வெனிசூலாவின் சாவேசு அரசாங்கம் சர்வதேச பெட்ரோலிய சந்தைகளில் நடந்து கொள்கின்ற முறையும் கூட வாஷிங்டனுக்கு கவலை தருகின்றது. வெனிசூலா பெட்ரோலிய விலையை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றது. அண்மையில் நடைபெற்ற எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (OPEC) மாநாட்டில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள ஈராக் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இடம் பெற முடியாமல் தடுத்துவிட்டதன் மூலம் அண்மையில் அமெரிக்க நிர்வாகத்திடம் மோதலுற்றது. இதர லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் வெனிசூலா இருதரப்பு பெட்ரோலிய பேரங்களை செய்து கொள்வதையும் ஏனைய நடவடிக்கைகளில் டாலருக்குப் பதிலாக யூரோக்களை பயன்படுத்த உடன்பாடு செய்து கொண்டதையும் அமெரிக்கா எதிர்க்கின்றது. சாவேஸ் அமெரிக்காவின் கொலை முயற்சி பற்றி கவலை கொண்டிருக்கிறார் என்பதை மதிப்பீடு செய்யும் போது, வாஷிங்டனின் சர்வதேச நடவடிக்கையையும் நிச்சயமாக ஆராய வேண்டும். ஈராக் போருக்கான ஆயத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் ஓராண்டிற்கு முன்னர் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது ஈராக் பிரச்சனையை "ஒரே துப்பாக்கி ரவை யால்" தீர்த்துவிடலாம் என்று குறிப்பிட்டிருந்தார். இது CIA- கொலைத் திட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டதை எடுத்துக்காட்டுகின்ற அறிவிப்பாகும். ஏமன் நாட்டிலும் ஆப்கனிஸ்தானிலும் அத்தகைய அரசியல் கொலைகள் நடைபெற்றன. அதன் இலக்குகள் "சந்தேகப்படும் பயங்கரவாதிகள்" என்று விளக்கம் கூறப்பட்டது. ஈராக்கில், சட்டவிரோதமாக படையெடுப்பு நடத்தி அந்த நாட்டை பிடித்துக்கொண்ட பின்னர், புஷ் நிர்வாகம் ஈராக்கின் பதவி இழந்த ஜனாதிபதி சதாம் ஹூசேனை கொலைசெய்ய வேண்டும் என்று திரும்பத் திரும்ப கூறிவந்தது. சென்ற ஜூலை மாதம் அவரது இரண்டு புதல்வர்களை புஷ் நிர்வாகம் கொலை செய்தது. அவர்களின் சடலங்களை பற்றிய அந்தக் கொடூரமான புகைப்படங்களை சர்வதேச அளவில் ஒளிபரப்ப ஒழுங்கு செய்தது. இதற்கிடையில், புஷ் நிர்வாகம் பாலஸ்தீன போராளிகளையும், தலைவர்களையும் "குறிவைத்து கொலை செய்யும்" இஸ்ரேலின் கொள்கைளை ஆதரித்து வருகின்றது. பாலஸ்தீனிய நிர்வாகத்தின் ஜனாதிபதியான யாசிர் அரஃபாத்தை கொன்றுவிடுவதாக ஷரோன் ஆட்சி அச்சுறுத்தியிருப்பதை கண்டிக்கும் வகையில் ஐ.நா பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா தனது ரத்து அதிகாரம் மூலம் அண்மையில் தள்ளுபடி செய்தது. புஷ் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள சக்திகள் வெனிசூலாவில் ''ஆட்சி மாற்றம்'' நடைபெறுவதற்கு கொலையையும் ஒரு வழியாக தேர்ந்தெடுக்காலம் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. அமெரிக்க அரசாங்கம் தனது நோக்கங்களை அடைவதற்கு மிகக்கீழான கிரிமினல் நடவடிக்கைகளை கூட மேற்கொள்வதற்கு தயாராகயிருக்கின்றது என்பது ஈராக் மற்றும் இதர இடங்களிலும் அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. |