World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Letters from US troops exposed as Pentagon fraud

அமெரிக்கப் படைவீரர்களிடமிருந்து வந்த கடிதங்கள் பென்டகன் மோசடி என அம்பலம்

By Kate Randall
16 October 2003

Back to screen version

நாடெங்கிலும், ஈராக்கிலிருந்து பல்வேறு இராணுவத்தினர் கையெழுத்திட்ட, ஆனால் ஒரேமாதிரியான விதத்தில் எழுதப்பட்டுள்ள கடிதங்கள் உள்ளூர் செய்தித் தாள்களில் வெளிவந்துள்ளதாக கான்னெட் செய்திச்சேவை (GNS) சனிக்கிழமை தெரிவித்துள்ளது. ஈராக்கிய படைவீரர்களின் உற்சாக மனநிலை, போரினால் சிதைந்த ஈராக்கில் பொதுமக்களின் நிலைமை முன்னேறிவருவது பற்றியும், சிறப்பான முறையில் இக்கடிதங்களில் சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடிதங்களில் கையெழுத்திட்டுள்ள வீரர்கள், தாங்கள் அவ்வாறு எழுதவில்லை என்றும், கையெழுத்து இருந்தால் அது, வேறு எதற்காகவாவது போடப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

எந்தச் செய்தியாயினும், அது வெள்ளை மாளிகையின் கருத்தையொட்டி வெளியிடப்படவில்லை என்றால், அது செய்தி ஊடகத்தின் எதிர்முறைத் தகவலளித்தல் என்று கூறும் நிர்வாகம், அதற்கு ஈடு செய்யும் முறையில், அமெரிக்கா ஈராக்கில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதற்கு, ஆதரவை ஊக்கும் வகையில் கொண்டுள்ள முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மின்னல்முறைக் "கடிதம் வரைதல்" இருக்கலாமோ எனத் தோன்றுகிறது.

வியாழக்கிழமை, கென்டக்கியில் ஒரு நிதி திரட்டும் கூட்டத்தில், ஈராக்கிய நிலைமை பற்றி புஷ் வர்ணித்தார்: "நாம் பெரிய அளவு முன்னேற்றம் காண்கிறோம். செய்தித்தாள்களில் நீங்கள் என்ன படிக்கிறீர்கள் என்பது பற்றி எனக்கு அக்கறையில்லை." இந்த வாரம் வட்டார தொலைக்காட்சி நிலையங்களை ஈர்க்கும் முயற்சியில், வெள்ளைமாளிகை நிகழ்ச்சிகள் பற்றி வாடிக்கையாக தகவல் அளிக்காதவற்றிற்கு, அவை நல்லபடியாக தகவல்கள் கொடுக்கும் என்ற நம்பிக்கையில், தொடர்ச்சியான பிரத்தியேகப் பேட்டிகள் வழங்கப்பட்டன.

உள்நாட்டினுள், தொய்ந்து போய்விட்ட பொதுமக்கள் ஆதரவை எதிர்கொண்டு -- செப்டம்பர் 23ல் வெளியிட்ட ஒரு USA Today/CNN/Gallup கருத்துக்கணிப்பின்படி ஈராக்கிய நிலைமையில் போருக்குச் சென்றது உகந்ததுதான் என 50 சதவிகிதத்தினரே கூறியிருந்தனர் -- வெள்ளை மாளிகையும், இராணுவமும் இப்பொழுது போர் முயற்சிக்கு மறுவாழ்வு கொடுக்கும் வகையில் அப்பட்டமான கதைதிரிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர். கடந்த மாதம் நாடு முழுவதும் உள்ளூர் செய்தித் தாள்களில் வெளிவந்த வீரர்களின் கடிதங்கள்தாம் சமீபத்தில், கடந்த சிலவாரங்களில் ஈராக்கிலிருந்த வந்த "நல்ல செய்திகள்" எனப்பட்டாலும், அவை போலியும் மோசடியும் ஆகும்.

USA Today உடைய மூலநிறுவனமாகிய GNS, 503வது விமான-தரைப்படை பிரிவின் 2வது பட்டாலியனில் உள்ள இராணுவ வீரர்களின் கையெழுத்துக்களைக் கொண்ட ஒரேமாதிரியான 11 கடிதங்கள், பல செய்தித்தாள்களில் வெளிவந்ததைக் கண்டறிந்தது. இக்கடிதங்கள் பெரிய பெருநகர நாளேடுகளான Boston Globe போன்றவற்றிலும், Beckley (W.Va), Register-Herald, Tulare (Calif), Advance-Register போன்ற சிறிய வெளியீடுகளிலும் வந்திருந்தன.

இக்கடிதங்களின் சில பகுதிகள் கூறுவதாவது: "மலைநகரமான பஷூரில், முதல் சில வாரங்கள் குளிரிலும், ஈரத்திலும் கழித்தபின்பு, எங்கள் படைப்பிரிவின் நிலைமையே மிகப்பெரிய மாற்றங்களைக் காண்கிறது. ஏப்ரல் 10ம் தேதி எங்கள் பிரிவு தெற்கே எண்ணெய்வளம் கொழிக்கும் கிர்க்குக்கை தாக்கியது; அதன்பின் இந்நகரம் வீட்டிற்கப்பால் எமது வீடாக விளங்குவதோடு, எங்கள் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிகளுக்கும் குவிமையமாக இருக்கிறது. கிர்குக் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்டுள்ள வெப்பமான, புழுதிபடிந்த நகரமாகும். நகரத்தில் பெரும்பாலான மக்கள் நாங்கள் இருப்பதைத் திறந்த கைகளுடன் வரவேற்றுள்ளனர்."

கடிதம் மேலும் கூறுகிறது: "மக்களுடைய வாழ்க்கையின் தன்மையும், பாதுகாப்பும் மிகப்பெரிய அளவில் மீட்கப்பட்டுவிட்டன; அத்தகைய நிலை ஏற்படத்தான் நாங்கள் பெருமளவு பாடுபட்டோம். கிர்குக் தெருக்களில் இன்று, எமது வீரர்களின் முயற்சிகளின் பலாபலன்கள் தெளிவாகத் தெரிகின்றன. தெருக்களில் குப்பை கூளங்கள் குறைந்து விட்டன, பலமக்களும் சந்தைகளிலும் கடைகளிலும் கூடுதலாக உள்ளனர், குழந்தைகள் பள்ளிகளுக்குத் திரும்பத் தொடங்கிவிட்டன. ஒரு இராணுவப் பிரிவாகவும், அமெரிக்க வீரர்களாகவும், கிர்குக் மக்களுடைய வாழ்க்கை மேன்மைடைய, நாங்கள் செய்துகொண்டிருக்கும் பணிக்கு இவை சான்றாகும். ஈராக்கில் நான் மேற்கொண்டுள்ள பணியில், பெருமிதம் அடைகிறேன், வாசகர்களாகிய நீங்களும் பெருமிதம் கொள்வீர்கள் என நம்புகிறேன்."

உண்மையில், கடந்த வாரங்களில் ஈராக்கியர்களின் வேலையின்மை, தாழ்ந்த நிலைகள், அமெரிக்க படைகளின் அடக்குமுறை ஆகியவற்றை எதிர்த்து சீற்றத்துடன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட இடமாக வடக்குப்புற நகரமான கிர்குக் இருந்து வந்திருக்கிறது. இந்நகரத்திலும், ஈராக் முழுவதிலும் எறிகுண்டுகள், வழிதாக்குதல்கள், தொலை இயக்கி குண்டுவெடிப்புக்கள், தற்கொலை கார் குண்டுகள் ஆகியவற்றால், அமெரிக்க வீரர்கள் தாக்கப்படுவது இங்கு வாடிக்கையான நிகழ்வுகளாகும்.

குறைந்தது 19 அமெரிக்க வீரர்களாவது, இம்மாதம் கொலையுண்டுள்ளனர்; அக்டோபர் 13ம் தேதி மட்டும் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். போர் மூண்டதிலிருந்து 387 பேர் மாண்டுள்ளனர்; அதில் மே1ம் தேதி "பெரிய சண்டை" முடிந்துவிட்டதாக புஷ் அறிவித்தபின் 216 வீரர்கள் மாண்டனர். இந்த போலிக் கடிதமெழுதும் பிரச்சாரத்தால், புஷ்ஷின் இராணுவ கொள்கையின் விளைவினால் அன்றாடம் இறப்பை எதிர்நோக்கும், ஆடவரும் பெண்டிரும், நிர்வாகத்தின் பிரச்சாரத்தை வலுப்படுத்துவதற்காக இகழ்ச்சியுடன் பயன்படுத்தப்படுகின்றனர்.

Pfe.Nick Deaconson, மேற்கு வர்ஜீனியாவைச் சேர்ந்தவர், Register-Herald ல் கடிதத்தைப் பார்த்த பிறகு, அவர் தந்தையார் தொலைபேசியில் தொடர்புகொண்டு இவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வரை, கடிதத்தைப்பற்றி ஏதும் தெரியாது என GNS க்கு கூறினார். அவருடைய தந்தையார், டிமோதி டீகன்சன், "அவனை கூப்பிட்டு மிக நல்ல கடிதம் எழுதி இருக்கிறாய் என்றவுடன், என்ன கடிதம் என அவன் வினவினான்" என்று தெரிவிக்கிறார்.

சார்ஜன்ட் கிறிஸ்டோபர் ஷெல்டன், கடிதங்களை தன் பிளட்டூன் வீரர்களுக்கு வழங்கி, அவர்களுக்கு உடன்பாடு இருந்தால் அதில் கையெழுத்திடலாமெனக் கூறியதாகத் தெரிவித்தார். அதன்பின், அவர்களால் தங்கள் உள்ளூர் நாளேடுகளின் பெயர் விவரங்கள் கேட்டறியப்பட்டது என்றார்.

சார்ஜன்ட் டோட் ஆலிவர் GNSA இடம் கூறினார்: "எவரோ, வழியில் நாடெங்கிலும் உள்ள பல செய்திப் பத்திரிகை ஆசிரியர்களுக்கு இதை அனுப்பிவைக்கலாமே என்று, அவ்வாறு செய்திருக்கவேண்டும்." தன்னிடத்தில் ஒரு வீரர் அதை எழுதியதாக கூறினாரே ஒழிய, யார் அந்த வீரர் எனத் தெரிவிக்கவில்லை என்றார்.

மேற்கு வர்ஜீனியாவிலுள்ள போகாவை சேர்ந்த சார்ஜன்ட் ஷான் க்ரஸ்ஸர், ஈராக்கில் தான் பெற்ற இராணுவ அனுபவத்தைப்பற்றி ஒரு இராணுவ செய்தித் தொடர்பாளரிடம் பேசியதாகவும், அத்தகவல் தன்னுடைய உள்ளூர் நாளேட்டிற்காக செய்திவெளியீடாக வரும் என நினைத்ததாகவும் கூறினார். கடிதத்தின் பொருளை ஏற்றபோதிலும்கூட, தான் அதில் கையெழுத்திடவில்லை என்றும் "ஒரு தேர்வில் காப்பியடித்ததைப் போல உணர்வும், எல்லோருக்கும் ஒரே மதிப்பெண் கொடுக்கப்பட்டது போலவும் தோன்றுகிறது" என க்ரஸ்ஸர் தெரிவித்தார்.

2வது பட்டாலியனைச் சேர்ந்த யாரோ ஒருவரால் அவை விநியோகிக்கப்பட்டிருந்த போதிலும், இந்தக் கட்டத்தில் யார் இக்கடிதத்தை எழுதியது மற்றும் பல பிரதிகளாய் அனுப்ப ஒழுங்கு செய்தது எனத் தெரியவில்லை. பென்டகன் செய்தித்தொடர்பு பெண்மணி, Lt.Col.Cindy Scott-Johnson, தான் அறிந்தவரையில் பென்டகன் இதைப்பற்றி ஆட்சேபனை கூறவில்லை என்றும், உண்மையில் அமெரிக்க இராணுவத்தின் "உள்ளுர்ச் செய்தி வெளியீட்டுத் திட்டத்துடன்" பொருந்தும் வண்ணம் அவை இருந்தன என்றார்.

இந்தப் போலிக் கடிதம்-வரைதல் நிகழ்வு, உள்நாட்டிலும் இராணுவத்தின் அணிகளுக்குள்ளேயும் வளர்ந்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்கையில், ஏற்ற இறக்க வாசகமாய் புஷ் நிர்வாகம் தன்னுடைய குற்றஞ்சார்ந்த போர்க்கொள்கைக்கு ஆதரவாக பொய்கள், ஏமாற்றுதல் முறைகளை, நிறுத்தாமல் மேற்கொண்டுள்ளதற்கு அடையாளமாக உள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved