World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு: ஈராக்Bombing in Irbil points to growing instability in northern Iraq இர்பில் குண்டுத் தாக்குதல் வட ஈராக்கில் வளரும் உறுதியற்ற நிலையைக் காட்டுகிறது By Peter Symonds கடந்த ஞாயிறன்று ஜனாதிபதி புஷ்ஷின் முக்கிய தொலைக்காட்சி உரையில் இருந்த பல பொய்கள் மற்றும் பாதி உண்மைகள் இவற்றில் ஒன்று வட ஈராக்கில் ஓரளவு அமைதி நிலவுகிறது என்பதாகும். எந்த நல்ல செய்தியின் ஒளிக் கதிரையாவது பற்றிக்கொள்ள ஆர்வத்துடன் இருக்கும் புஷ் தன் உரையில் "வட ஈராக் பொதுவாக உறுதித்தன்மையோடு இருப்பதோடு, சீரமைப்பிலும், சுய அரசாங்கத்திலும் முன்னேற்றம் கண்டுள்ளது'' என்றார். இரண்டு நாட்களுக்குப் பின்பு வடக்கு நகரமான இர்பிலில், அமெரிக்க உளவுத்துறை அலுவலகத்தின் வெளிச்சுவர் அருகே ஒரு கார்க் குண்டு வெடித்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், ஆறு அமெரிக்கர் உட்பட 40 பேர் காயமடைந்தனர். இந்தக் குண்டு வெடிப்பானது பொய்யான தோற்றத்தை நொறுக்கியதோடு மட்டுமல்லாமல், அமெரிக்க ஆக்கிரமிப்பால் இப்பிராந்தியத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ள ஆழமான பதட்டத்தையும் உயர்த்திக் காட்டியுள்ளது. நேரில் கண்டவர்களின் சாட்சியங்களின்படி, இத்தாக்குதலின்போது இறந்துபோன கார்ச்சாரதி, வண்டியை உள்ளே செலுத்த முயன்று தோற்றபின் குண்டை சுவரருகிலேயே வெடிக்க வைத்தார். 150 லிருந்நு 200 கிலோ வெடிமருந்து இக் குண்டு வெடிப்புக்கு பாவிக்கப்பட்டிருக்கலாமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இக் குண்டுவெடிப்பின் கடுமையானது அருகிலிருந்த சில வீடுகளையழித்து, மற்றும் பல வீடுகளின் முகப்புக்களைத் தகர்த்து அருகிலிருந்த வண்டிகளை எரித்த அளவு அதிகமாக இருந்தது. குண்டு வைக்கப்பட்ட காரின் ஒரு பகுதி சம்பவ இடத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. அமெரிக்க இராணுவம் உடனடியாக இவ்விடத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டதுடன், குர்திஷ் இராணுவத்தினரின் உதவியுடன் இப்பகுதி மூடப்பட்டது. இர்பிலில் அமெரிக்க இராணுவத்தின் செய்தித் தொடர்பாளரான மேஜர் ஜேம்ஸ் புல்லியன், செய்தி ஊடகத்திடம் தெரிவிக்கும்போது இரண்டு குழந்தைகளும், ஒரு வயதான பெண்மணியும் இத் தாக்குதலில் இறந்திருக்கக்கூடும் என்றார். ஆனால் எண்ணிக்கை கூடுதலாக இருக்கலாம். "இறந்தவர்களின் பல உடலுறுப்புக்கள் அவ்விடத்தில் கணக்கிலில்லாமல் சிதறிக் கிடந்தன" என்றும் இப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். வட ஈராக்கில் இந்த முறையான குண்டுத் தாக்குதல் இதுவே முதல் தடவையாகும். பிற இடங்களில், அமெரிக்க இராணுவத்தினர் வேறுவிதமான தாக்குதல்களுக்கு நாளொன்றுக்கு 15 தடவை உட்படுகின்றனர். இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கச் சார்புடைய இராணுவக் குழுக்களின் கட்டுப்பாட்டிலுள்ள வடபகுதியில் ஓரளவு அமைதி நிலவி வந்தது. ஆதலால் இது சில சங்கடமான கேள்விகளை எழுப்பியுள்ளது. அது, யார் இந்த உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் இர்பிலில் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதாகும். பென்டகனிடமிருந்து வேறு எந்த விவரங்களும் வெளிவரவில்லை. வாஷிங்டனிலுள்ள பாதுகாப்பு உளவுத்துறை நிறுவனம் "பாதுகாப்பு உளவுத்துறை அதிகாரிகள்" என்று காயம்பட்ட அமெரிக்கர்களில் நான்கு பேர் கடுமையான காயமுற்றனர் என்றும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் மோசூலுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர் என்றும் உறுதிப்படுத்தியது. இச்சம்பவத்தில் இரண்டு இராணுவத்தினர்கள் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். இந்த அலுவலகம் சிறப்பு குர்திஷ் இராணுவக் குழுக்களினாலும், சாதாரண உடையிலிருந்த அமெரிக்கப் படையினராலும் பாதுகாக்கப்பட்டது. உள்ளூர் ஈராக்கியர்களுக்கு அது அமெரிக்க உளவுத்துறையினரால் பயன்படுத்தப்பட்டது என்பது தெரியாததால், தமது குடியிருப்புப் பகுதியில் அது இயங்கியது பற்றி அவர்கள் கோபமடைந்தனர். நஜீப் அப்துல்லா என்ற பெட்ரோல் விற்பனை மேலாளர் செய்தி ஊடகத்திற்கு கூறும்போது "பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியில் அவர்கள் தளத்தை அமைத்தது என்பது கடவுளை நிந்திக்கிற செயலாகும்" என்றார். இப்பகுதியின் குர்திஷ் பாதுகாப்புத் துறைத் தலைவர் முப்ஸன் ஜமீல் என்பவர், சமீபத்தில்தான் அமெரிக்கப் படைகள் அங்கு வந்தனர் என்று கூறினார். "கடந்த 40 நாட்களாகத்தான் அமெரிக்கர்கள் இப்பகுதிக்கு வந்துள்ளனர். உண்மையில் நாங்கள் கவலைப்படுகிறோம். எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி எல்லையிலிருந்து நிறைய TNT வெடிமருந்துகள் வந்துள்ளதாகத் தெரிகிறது. ஈராக்கின் மற்றைய பகுதிகளைப்போலவே வடக்கையும் உறுதி குலைக்கச் சிலர் உள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம்" என்று குறிப்பிட்டார். இதுவரை எந்த அமைப்பும் குண்டு வெடிப்பிற்கு பொறுப்பேற்கவில்லை என்றாலும், விசாரணைகள் இப்பொழுதுதான் தொடங்கியுள்ளன. பெயரிடப்படாத குர்திஷ் அதிகாரிகள் உடனடியாக அன்சார் அல் இஸ்லாம் என்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் இயக்கத்தைக் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் குழு வசதியான பலிக்கடாவாகும். கடந்த பெப்ரவரி மாதத்தில், அமெரிக்க வெளியுறவு செயலர் கொலின் பவல், அல் கொய்தாவிற்கும் சதாம் ஹுசேனுக்கும் இடைத் தொடர்பாக இந்த அமைப்புத்தான் இருந்தது என்று கூறினார். அத்துடன் இந்த அமைப்பின் "இரசாயன ஆயுதங்களின் ஆலை" எனக் கூறி சில புகைப்படங்களையும் காண்பித்தார். அப்பொழுது நாடுகடத்தப்பட்டிருந்த அன்சாரின் தலைவர் முல்லா கிரெகர் (Mullah Krekar) அல்கொய்தாவுடன் உள்ள எந்தத் தொடர்பையும் மறுத்து, நீண்ட காலமாகத் தன் கட்சி ஹுசேன் ஆட்சியோடு விரோதம் கொண்டுள்ளதையும் வலியுறுத்தினார். அவருடைய படைக் குழுக்கள் வெளிநாட்டுச் செய்தியாளர் குழு ஒன்றை, பவலின் புகைப்படத்திலுள்ள கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று காட்டினர். ஆயுத தொழிற்சாலைக்கான சான்றுகள் ஏதும் அங்கு காணப்படவில்லை. அமெரிக்க சார்புடைய குர்திஷ் அமைப்புக்களான Patriotic Union of Kurdistan (PUK), மற்றும் Kurdistan Democratic Party (KDP) யிடமும்தான் இக்கதை அனேகமாகத் தோன்றியிருக்க வேண்டும். இவை இரண்டுமே அன்சார் அமைப்புடன் ஆயுதங்களினால் முரண்பட்ட வரலாற்றைக் கொண்டவை ஆகும். ஈராக்கியப் போரின் ஒரு பகுதியாக, அமெரிக்க இராணுவம் PUK உடன் இணைந்து அன்சார் அமைப்பின் ஹலாப்ஜா (Halabja Valley) பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள அரண்களுக்கெதிராக முழு அளவுத் தாக்குதலை மார்ச் மாதக் கடைசியில் நடத்தியது. இப்பகுதி முழுவதையும் குரூஸ் ஏவுகணைகளாலும் குண்டுகளாலும் நொறுக்கியபின், அமெரிக்கச் சிறப்புப்படைகள் ஆதரவுடன் 6000 PUK படைகள் ஈரானிய எல்லைப்பகுதியில் 600 - 800 அன்சார் படைகள் வசமிருந்த ஏராளமான சிறிய கிராமங்களைக் கைப்பற்றினர். ஈரானும் வாஷிங்டனைச் சமாதானப்படுத்துவதற்காக, அன்சார் படைகள் தனது எல்லையைக் கடக்காவண்ணம் இத் தாக்குதலுக்கு முன்பு மூடிவைத்தது. தப்பிய அன்சார் படைகள் மீண்டும் தங்களைச் சிறுகுழுவாக அமைத்துக் கொண்டு, இர்பில்மீது தாக்குதல் நடத்தியிருக்கக்கூடும். ஆனால் வாஷிங்டன் KDP, PUK அமைப்புகளுடன் சேர்ந்து நடத்திய சதிகள் வேறு விரோதிகளையும் ஏற்படுத்தியிருக்ககூடும். அன்சார் அமைப்புக்கு எதிரான தாக்குதல்கள் தொடங்கிய உடனேயே, அமெரிக்கா ஏராளமான சிறு ஏவுகணைகளை கார்மோல் நகரத்தின் மீது செலுத்தியது. இதனால் 46 பேர் கொல்லப்பட்டதுடன், மக்கள் அகதிகளாக வெள்ளம்போல் வெளியேறினர். இந்த நகரம் Kormala Islami Kurdistan என்னும் இஸ்லாமியப் படைகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இவர்களுடன் PUK தெளிவற்ற உடன்பாட்டைக் கொண்டிருந்தபோதும், அமெரிக்க ஆதரவுடன் PUK அன்சார் அமைப்புக்கு மட்டுமின்றி, வேறு தொல்லை கொடுக்கக்கூடிய குழுவிற்கும் ஓர் செய்தியைக் கொடுக்க இவ்வாய்ப்பைப் பயன்படுத்தியிருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது. ஈராக்கின் வடக்கு குர்திஷ் பகுதியானது PKK / KADEK என்ற, துருக்கியக் குர்திஷ் இயக்கத்தை சேர்ந்த 5000 படைகளுக்குப் புகலிடமாகவும் உள்ளது. இந்தக் குழு விரைவில் அமெரிக்காவின் கவனத்துக்கு வந்துள்ளது. வாஷிங்டனுக்கும், அங்காராவிற்குமிடையே 10000 துருக்கியத் துருப்புக்களை ஈராக்கிற்கு அனுப்புவது பற்றிய பேச்சுவார்த்தைகள் இப்பொழுது நடைபெற்று வருகின்றன. வாஷிங்டன் எப்படியாவது கூடுதலான படைகளை, குறிப்பாக இஸ்லாமிய நாடுகளான துருக்கி போன்றவற்றிலிருந்து தன்னுடைய நிலையை ஈராக்கில் அரசியல், இராணுவ அளவில் வலுப்படுத்திக்கொள்ள விரும்புகிறது. கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் திட்டமான ஈராக்கின் வடபகுதியை ஆக்கிரமித்துக் கொள்ள துருக்கியைத் தளமாகக் கொள்வதை, துருக்கிய பாராளுமன்றம் தடுத்துவிட்ட பிறகு, இப்பொழுது துருக்கிய இரணுவம் வாஷிங்டனின் உறவைச் சீரமைத்துக் கொள்ள ஆர்வம் காட்டியுள்ளது. ஆனால் அமெரிக்காவின் ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு துருக்கிய அரசாங்கத்தின் ஆதரவானது, தொடர்ந்தும் மக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகின்றது. அத்துடன் ஒரு நல்ல பேரத்தையும் எதிர்பார்க்கிறது. அதில் ஒரு பகுதியாக, வாஷிங்டன் ஏற்கனவே 8.5 பில்லியன் டொலர்களை கூடுதல் கடனாக வழங்கத் தயாராக உள்ளது. இதற்கு துருக்கி ஈராக்கில் இராணுவ உதவி அளிப்பதோடு சர்வதேச நாணய நிதியத்தின் சீரமைப்புத் திட்டங்களையும் பதிலுக்கு ஏற்கவேண்டும். ஆனால் துருக்கிய அரசாங்கம் வேறு நிபந்தனைகளையும் வைத்துள்ளது. குறிப்பாக, வட ஈராக்கில் உள்ள PKK / KADEK தளங்களை அமெரிக்கா மூடுவதற்கு உதவிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. கடந்த மாதம் துருக்கியப் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட பொதுமன்னிப்புச் சட்டத்தின்படி ஆயுதங்களை ஒப்படைக்காதவர்களின், ஆயுதங்களைப் பறிமுதல் செய்துவிடுவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. சமீபத்தில் இர்பிலில் நிறுவப்பட்டுள்ள இராணுவ உளவுத்துறையினுடைய பணிகளில் ஒன்றாக PKK / KADEK அமைப்புக்களோடு பேரம் பேசும் திட்டங்களைத் தயாரித்தலாக இருந்திருக்கும் என்று அனுமானித்தால் அது பிழையாகாது. ஐ.நா பாதுகாப்புக் குழுவின் தீர்மானத்தையொட்டித்தான், துருக்கியப் படைகள் அனுப்புவது பற்றி முடிவெடுக்க முடியும் என்றாலும், இத்திட்டங்கள் முன்னேற்ற நிலையில் உள்ளன. துருக்கியின் வெளிநாட்டு அமைச்சரான அப்துல்லா குல், அரசாங்கம் படைகளை அனுப்ப விரும்புவதாகவும், இராணுவத் தயாரிப்புக்கள் இம்மாத இறுதிக்குள் தயாராகிவிடும் என்றும் செவ்வாயன்று குறிப்பிட்டார். அமெரிக்க செயலகத்துறை, பென்டகன் மற்றும் CIA அதிகாரிகள், இந்த விவரங்களைப்பற்றி விவாதிக்க அடுத்த வாரம் கூட இருக்கின்றனர். எப்படி இருந்தபோதிலும், பதில் துருப்புக்கள் எப்படியும் தேவை என்ற கட்டாயத்திலுள்ள வாஷிங்டன், வட ஈராக்கிலுள்ள ஓரளவு உறுதித் தன்மையையும் குறைக்கும் முயற்சியிலுள்ளது. குர்திஷ் பகுதியில் இல்லாவிட்டாலும் மற்ற பகுதிகளில் துருக்கியப்படைகள் வந்தால் PKK / KADEK மட்டுமல்லாமல், வாஷிங்டன் ஆதரவுக் குழுக்களின் மத்தியிலேயும் எதிர்பைத் தூண்டிவிடும். அமெரிக்காவினால் நியமிக்கப்பட்டுள்ள அரசியல் அடியாட்கள் நிறைந்த ஈராக்கிய ஆட்சிக் குழுவிற்குள்ளேயே வெளிப்படையான பிளவு இப்பிரச்சனையால் ஏற்கனவே தோன்றியுள்ளது. அமெரிக்காவின் நெருங்கிய நண்பரான, இப்பொழுதைய இடைக்காலத் தலைவரான அகமத் சலாபி, இத்திட்டத்திற்கு 10,000 துருக்கியர்களுக்கு மிகாமல் குர்திஷ் பகுதிகளைத்தவிர மற்ற இடங்களில் நிறுத்தினால், ஆதரவு தருவதாகக் கூறியுள்ளார். இதையொட்டி சலாபிக்கு துருக்கிக்கு வருகைபுரிய உளமார்ந்த அழைப்பு தரப்பட்டுள்ளது. ஆனால் மறுபுறத்தில், ஒரு மூத்த KDP தலைவரான வெளிநாட்டு மந்திரி ஹோஷ்யார் ஜேபரி வெளிப்படையாகவே ஈராக்கிற்குள் அண்டை நாடுகளிலிருந்து படைகள் நுழைவதை எதிர்த்துள்ளார். துருக்கியப் படைகள் நாட்டின் மேற்குப் பகுதிகளில் நிறுத்தப்படும் திட்டம் பற்றிக் குறிப்பிடுகையில், வட ஈராக்கிலுள்ள குர்திஷ் பகுதிகள் ஊடாகத்தான் துருக்கியப் படைகளுக்கான பொருட்களை கொண்டு சென்றாக வேண்டிய நிலைமையைச் சுட்டிக் காட்டினார். இர்பிலில் இந்த வாரம் அமெரிக்க உளவுத்துறைக் கட்டிடத்தின் மீது தாக்குதலை யார் நடத்தியிருந்தாலும், இப்பகுதியில் சந்தேகத்திற்கிடமின்றி உள்ள அழுத்தங்களின், ஆத்திரங்களின் அடையாளமே இந்தக் குண்டு வெடிப்பாகும். இது ஆயத முரண்பாடாக வளர்ந்து, குறிப்பாக அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளை இலக்கு கொள்ளும். |