World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா:
ஐக்கிய அமெரிக்கா
The CIA leak inquiry and the politics of criminality CIA இரகசிய வெளியீடு விசாரணையும் குற்றம் மலிந்த அரசியலும்By Bill Vann வெள்ளை மாளிகையில், செவ்வாயன்று நடந்த அமைச்சர் குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஜனாதிபதி புஷ், "யார் இரகசியமாக வெளியிட்டது என்பதை நாங்கள் கண்டுபிடித்து விடுவோமா எனக்கூற இயலாது" எனத்தெரிவித்தார். ஒரு இரகசிய CIA பணியாளர் பற்றிய அடையாளத்தை, அவருடைய கணவரை அரசியல் அளவில் அப்பட்டமாக தாக்கும் பதிலடிச் செயலாக, அம்பலப்படுத்திய தன் நிர்வாக அதிகாரிகளில் மூத்த உறுப்பினர் ஒருவரைப்பற்றிக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளும், நடைமுறைகளும், குற்றஞ்சார்ந்த சதித்தன்மையைக் கொண்டு விளங்குகின்றன. அதன் ஆக்கிரமிப்பு போர்கள், கொலைசெய்தலை ஆட்சிவழியில் ஒரு முறையான செயல் எனத்தழுவல், ஈராக் போருக்கான காரணத்திலிருந்து தன்னுடைய வரிக்கொள்கைகளின் சமூகப் பாதிப்பு வரை இடைவிடாமல் பொய்கூறல், ஆகியவை இதை மிகவும் தெளிவாக்கியுள்ளன. CIA இரகசிய வெளியீட்டைப்பற்றிய ஊழல் வளர்ந்துவிட்ட நிலையில், வெள்ளை மாளிகையின் நடவடிக்கை, இன்னும் தெளிவாக, முறையாக இயக்கப்படும் குற்றக் குடும்பத்தின் செயல்களுக்கு ஒப்பாக உள்ளது.இப்பொய் ஊழலின் தோற்றங்கள், ஈராக்கின்மீது போர்தொடுப்பதற்கு ஆதரவு திரட்டும் வகையில், நிர்வாகத்தால் பயன்படுத்தப்பட்ட திரிக்கப்பட்ட உளவுத்துறை தகவல் மற்றும் அப்பட்டமான பொய்கள், இவற்றில் கிடக்கின்றது. அமெரிக்க மக்களை ஒரு சட்டவிரோதமான போரை ஏற்க அச்சுறுத்தும் முயற்சியில், நிர்வாகம், ஈராக் அணு ஆயுதங்களை தயாரித்து, அவற்றை பயங்கரவாதிகளிடம் பயன்படுத்த கொடுக்கக்கூடிய நிலைக்கு நெருங்கிவிட்டதாக சித்தரித்துக்காட்ட முயன்றது. பிரிட்டிஷ் உளவுத்துறை, ஆபிரிக்க நாடான நைஜரிடம் மிகப்பெரிய அளவு யூரேனிய "மஞ்சள்-கட்டி" வாங்க, ஈராக் முயற்சிகள் செய்ததாகக் கூறுவதை, ஆதாரம் காட்டியமை இப் பொய்களில் ஒன்றாகும். இந்தக்கூற்றை, ஐ.நா.வின் ஆயுத ஆய்வாளர்களே புறக்கணித்து விட்டனர்; ஈராக்கிய சோதனைகளை பற்றிய "ஆதாரம்", முழுமையான அளவில் வெறும் பொய்யான பத்திரங்களை கொண்டிருக்கின்றன என அவர்கள் நிலைநாட்டினர். போரின் முக்கிய சிற்பிகளில் ஒருவராகிய, துணை ஜனாதிபதி ரிச்சார்ட் செனி கொடுத்த அழுத்தத்தின் விளைவாக, CIA அதன் தனி விசாரணை ஒன்றை நடத்த, பாக்தாத், நைஜர் இரண்டிலும் பணிபுரிந்திருந்த பழைய தூதர் ஜோசப் வில்சனை, ஆபிரிக்காவிற்கு விசாரித்துவர அனுப்பிவைத்தது. வில்சனும், CIA யினரும், குற்றச்சாட்டுக்கள் போலியானவை, என்ற முடிவிற்குத்தான் வந்தனர். இருந்தபோதிலும்கூட, இக்கூற்றை, 2003 ஜனவரி மாத, அவரது வருடாந்த காங்கிரஸ் உரையில் கிட்டத்தட்ட, வில்சனின் பயணம் முடிந்து ஓராண்டு கடந்த பின்னர், புஷ் சேர்த்துக்கொண்டார்; நிர்வாகத்தின் அதிகாரிகளும், ஈராக் ஒரு அணு ஆயுத ஆபத்தைக்கொடுக்கும் என்பதற்கு, இதை ஒரு சாட்சியமாக குறிப்பிடவும் தொடங்கிவிட்டனர். New York Times உடைய, ஜூலை 6ம் தேதி கட்டுரை ஒன்றில், நைஜர் பற்றிய கூற்றின் விசாரணையை தெரிவித்து, முன்பே தயாரிக்கப்பட்ட போர்முயற்சிகளை மேற்கொள்ளுவதற்காக, நிர்வாகம், "ஈராக்கிய அச்சுறுத்தல் பற்றியதை மிகைப்படுத்த, உளவுத்துறை தகவலை திரித்துக் கூறுவதாக வில்சன் குற்றம் சாட்டினார். ஈராக்கின்மீது போர்தொடுக்க அடிப்படைக்காரணம் எனக்கூறப்பட்ட, பேரழிவு ஆயுதங்கள் குவிப்புபற்றி, கடுகளவு சான்றுகூட கண்டுபிடிக்கப்படாத நிலையில், வில்சனுடைய வெளியீடுகள், நிர்வாகத்தின் நம்பிக்கைத்தன்மைக்கு மற்றொரு தாக்குதலாயிற்று.இதற்குப்பதிலடியை, நிர்வாகம் மிக விரைவில் கொடுத்தது. ஒரு வாரத்திற்குள்ளேயே, வலதுசாரி எழுத்தாளராகிய றொபர்ட் நோவக், மூத்த நிர்வாக அதிகாரிகளை ஆதாரம் காட்டி, வில்சனுடைய மனைவி, வலரி பிளேம் (Valerie Plame) ஒரு CIA "பணியாளர்" என வெளிப்படுத்தி, ஒரு கட்டுரையை வெளியிட்டார். சிஐஏ உடைய ஒற்றர் சங்கேதக்குறிப்பில், "அதிகாரபூர்வமற்ற பிரிவு", என்ற முறையில், பிளேம் தூதரக அல்லது மற்ற அரசாங்க பாதுகாப்பின்றி பணிபுரியும் ஒருவராக இருந்தார். சக்தித்துறையில் வல்லுனர் எனக் காட்டிக்கொண்டு, பேரழிவு ஆயுதங்கள் பற்றித் தகவல் அறியும் பணி இவருக்கு ஒதுக்கப்பட்டது. இந்த பத்தி, முறையான செய்திகள் அளிக்கும் நோக்கம் கொண்டிராமல், பழிவாங்கும் நடவடிக்கைளில்தான் ஈடுபட்டது. அமெரிக்க உளவுத்துறை பார்வையில், இச்செயல் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு முக்கிய பணியாளரை அம்பலப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அப்பெண்மணி வேலைபுரிந்துவந்த நிறுவனம், மற்றும் "சொத்துக்கள்" எனப்படும், பல நாடுகளிலுள்ள தகவல் கொடுப்போர், தொடர்பாளர் ஆகியோருக்கும் பாதிப்பைக் கொடுக்கும். ஒரு CIA இரகசிய அதிகாரியை, வேண்டும் என்றே அடையாளம் காட்டிவிட்டால், 1982 கூட்டாட்சி அடையாளப் பாதுகாப்புச் சட்டத்தின்படி அது குற்றமாகக்கொள்ளப்பட்டு, 10 ஆண்டுகள்வரை, சிறைத் தண்டனை வழங்கப்படலாம். இந்த நிர்வாகம், பேரழிவு ஆயுதங்கள் பற்றிய ஆபத்து என்பதை தடுத்தல் என்ற பெயரில் பல்லாயிரக் கணக்கான ஈராக்கியர்களை கொன்றும் ஊனப்படுத்தியும், கிட்டத்தட்ட 320 அமெரிக்க துருப்புக்களின் இறப்பிற்கும் காரணமாக இருந்திருக்கிறது. அரசியல்முறையில் பழிவாங்குவதற்கான முயற்சியில்,இதே விஷயத்தில் ஒரு இரகசிய பணியிலிருப்பவருடைய, உத்தியோகத்தை அலட்சியமாக அழிப்பதும், சாதாரண விந்தையன்று. ஈராக்கிய எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுதலும், பாரசீக வளைகுடாப் பகுதியில் அமெரிக்க ஆதிக்கத்தை ஏற்படுத்துதலும் என்ற போருக்கு முற்றிலும் வேறான நோக்கங்கள்தான் இருந்தன என்பதை, இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நிக்சன் வெள்ளை மாளிகையில் சட்ட ஆலோசகராக இருந்து, வாட்டர்கேட் வழக்கில் நீதிக்குத்தடை செய்த குற்றத்திற்காக, ஒரு குறுகியகாலம் சிறையிலிருந்த ஜோன் டீன், பிளேம் விவகாரத்தில், நிர்வாகம் கையாண்ட உத்தியை "வெறுக்கத்தக்கது" என்றும் வாட்டர்கேட் காலகட்ட நடைமுறைகளைவிட மோசமானவை என்றும் கூறியுள்ளார். FindLaw வலைத் தளத்தில், ஆகஸ்ட் 15ம் தேதி வெளிவந்த கட்டுரையில்: "நிக்சன் வெள்ளை மாளிகையில், அவ்வளவு தீய, கேவலமான, அரசியல் தந்திர உத்திகளையும், நான் கண்டுவிட்டதாக நினைத்திருந்தேனானால், அது தவறு என்பது தெரிகிறது. தன்னுடைய விரோதிகளின் மனைவிகளைக் குறிவைத்து நிக்சன் ஒருபோதும் தாக்கியதில்லை." என அவர் குறிப்படுகிறார்.வில்சனுடைய குற்றம், அவர் பேசியதுதான்: அமெரிக்க மக்களுக்கு உண்மையின் ஒரு பகுதியைக் கூறினார், அதையொட்டி, புஷ்ஷும் அவருடைய கையாட்களும் கூறிய பொய்கள் பலவற்றுள் ஒன்றை அம்பலப்படுத்தினார். Mafia போலவே புஷ் நிர்வாகமும் omerta எனப்படும் மெளனவிரதத்தைக் கடைபிடிக்க வலியுறுத்துகிறது போலும். அதே கொள்கையைத்தான், இதுவும் நம்பியுள்ளது --காங்கிரசில் ஜனநாயகக் கட்சியினர் முதுகெலும்பின்றி நடப்பதையும் கருத்திற்கொண்டு-- கசிவிற்கு யார் காரணம் என்பதைப் பற்றிய உண்மையான விசாரணையை அமுக்கிவிடவேண்டும் எனச்செயல்படுகிறது. ஜனாதிபதி, செவ்வாயன்று; "மூத்த நிர்வாக அதிகாரியைக் கண்டு பிடிப்போமா எனத்தெரியாது. இது ஒரு பெரிய நிர்வாக அமைப்பு, பல மூத்த அதிகாரிகள் உள்ளனர். எனக்கு எந்த கணிப்பும் இல்லை." எனக் கூறினார். உண்மையில், நோவாக்கையும், மற்ற நிருபர்களையும், பிளேமை அடையாளம் காட்டக் கூப்பிட்ட வெள்ளை மாளிகை அதிகாரி யார் என்று வாஷிங்டனில் பலருக்கும் தெரியும்; அதிலும் உறுதியாக, நிர்வாகத்தில் முக்கியச் செல்வாக்குடைய உயரதிகாரிகள் பலருக்கும் தெரியும். இதில் புஷ் அடங்கியுள்ளார் என்று கூறுவதற்கில்லை, ஏனெனில் அரசாங்க விஷயங்கள் பலவற்றில் அவர் அறிவைப் பயன்படுத்துதல் என்பது குறைவேயாகும். "கசியவிட்டவர்" என கருதப்படுபவர், எப்படியும் தன்னிச்சையாகச் செயல்படவில்லை; நிர்வாகத்துடைய மிக உயர்ந்த அளவுகளில் வேண்டுமென்றே திட்டமிடுவோரின் ஒரு பகுதியாகத்தான் செயல்பட்டிருக்க வேண்டும். Newsweek-இல், அக்டோபர் 13ல் வெளிவந்த ஒரு கட்டுரையின்படி, புஷ்ஷின் மூத்த அரசியல் ஆலோசகரான கார்ல் ரோவ், அச்சில் வந்த நோவாக்கின் கதைக்கு, அது வெளிவந்தவுடனேயே ஆதரவு கொடுத்து, அதன் உண்மையை உறுதிப்படுத்தி, CIA அப் பணியாளரை தொடரும் எனவும், பிளேமை வெளிப்படுத்தி அடையாளம் காட்டுவது "நியாயமான வேட்டைதான்" எனவும் கூறியுள்ளார். மற்ற நிருபர்கள், செனியின் தலைமை அதிகாரியான I. Lewis Scooter Libby யையும், தேசிய பாதுகாப்புக் குழுவின் அதிகாரியான எலியட் அப்ராம்சையும் உட்குறிப்பாகப் புலப்படுத்தியுள்ளனர். உள்வட்டத்திற்குள்ளேயே இரகசியம் முடக்கப்பட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறப்பு குற்றவியல் வக்கீல் நியமிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் தள்ளுபடியாகிவிட்டன; அமெரிக்க தலைமை வழக்குரைஞரான ஜோன் ஆஷ்கிராப்ட்டின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. இவருக்கு வாட்டர்கேட் விவகாரத்தில் முன்னோடியாக விளங்கிய ஜோன் மிட்ஷலுடைய விசாரணையின் உயர்ந்த நெறியை, இந்த ஊழல் விசாரணையின் தன்மை கடந்து செல்லப்போவதில்லை. வெள்ளை மாளிகை அதிகாரிகள், அனைத்து சான்றுகள், ஆதாரங்கள், வருகைப்பதிவேடுகளையும், கொடுக்குமாறு உத்திரவிடப்பட்டுள்ளனர்; ஆனால் இவையனைத்துமே, ஜனாதிபதியை காக்கும் பொறுப்புடைய அதே வெள்ளை மாளிகை வக்கீல்களால், பரிசீலனைக்கும், மாற்றத்திற்கும் உட்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர், ஸ்கொட் மக்கிளெலென், வழக்கறிஞர்கள் "தொடர்பற்றவை அல்லது தேவையற்றவை" எனக் கருதுபவை பொறுக்கி எடுக்கப்படும் என்றார். வெள்ளை மாளிகை, நிர்வாக உரிமை என்ற பெயரில் கோரப்படும் சில ஆவணங்களை கொடுக்காமல் இருக்குமா எனக்கேட்கப்பட்டதற்கு, "அத்தகைய விஷயங்களை பற்றிப் பேசுவதற்கு காலம் கனியவில்லை" என்றார். கசிவிற்குப் பொறுப்பானவர்கள் ஒருவேளை கண்டுபிடிக்கமுடியாமலேயே போய்விடலாம் என புஷ் கூறும்போது, அது ஏதோ ஆதார நம்பிக்கையைக்கொண்டுள்ள பேரில்தான். இது மற்றும் ஒரு முடிவுகாணப்படாத குற்றமாக, சான்றுகள் நிர்வாகத்தாலேயே மறைக்கப்பட்டு விடும். CIA பணியாளர் பெயரை வெளியிட்டது யார் என பொதுமக்கள் அறியாமலேயே போகக்கூடியது போலவே, 2001, செப்டம்பர்11 அன்று பயங்கரவாதிகள் நியூயோர்க், வாஷிங்டன் நகரங்களை தாக்குவதற்கு வழிவகுத்த அந்த சதித்திட்டம் அரசாங்கத்திற்கு எந்த அளவு முன்கூட்டியே தெரிந்த தகவல் என்பது பற்றியும், பொதுமக்களுக்கு இன்னமும் கூறப்படவில்லை. காங்கிரசின் ஆய்வாளர்கள், மற்றும் புஷ்ஷினாலேயே நியமிக்கப்பட்ட தனிக்குழுவினர் ஆகியோருடைய முயற்சிகள் தொடர்ந்து வெள்ளை மாளிகையால், அவர்கள் கேட்கும் ஆவணங்கள், சான்றுகள் ஆகியவை, "தேசியப்பாதுகாப்பு", நிர்வாக உரிமை என்றெல்லாம் கூறி, கொடுக்கப்படாமல் தடுக்கப்பட்டுவிட்டன.அது போலவே, 2001 இலையுதிர்காலத்தில் அமெரிக்க அஞ்சல்துறை பணியாளர்கள், மற்றும் பலருடைய உயிரைக் காவு கொண்ட ஆந்த்ராக்ஸ் கடித தாக்குதல்களுக்கு காரணம் யார் என்பதையும் மக்கள் அறிந்து கொள்ளாமலேயே போகநேரிடலாம். அமெரிக்க உயிரியல் போர்முறைச் சோதனை கூடத்துடன் தொடர்பு கொள்ளக்கூடியோர்தான் இவ்வாறு செய்திருக்க முடியும், அவர்கள் வலதுசாரி அரசியல்கொள்கையினால் தூண்டப்பட்டவர்கள் என்பதற்கு தக்க சான்றுகள் உள்ளன. ஆயினும்கூட, சந்தேகத்திற்குரியவர்கள் என்று இச்சிறிய வட்டத்திலுள்ளவர் யார்மீதும் குற்றம் சாட்டப்படவில்லை. துணை ஜனாதிபதியும், முன்பு ஹாலிபர்ட்டனுடைய தலைமை நிறைவேற்று அதிகாரியுமாக இருந்தவருமான செனியை, அவருடைய "சக்தி பணிப்படை" (Energy Task Force) க்காக யார் சந்தித்தார்கள், என்ன பேசினார்கள் என்பதும் நிர்வாகம் வெற்றி பெற்றால், எவரும் அறியப்போவதில்லை. இந்த மூடிய கதவுகளுக்கு பின்னால் நிகழ்ந்த கூட்டங்கள் பற்றிய குறிப்புக்கள் பற்றி நிர்வாகம் தொடர்ந்து விவரம் தர மறுத்துள்ளது. 2001 முற்பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டங்களில், பெரும் சக்தி தொழில்துறை நிர்வாகிகளும், சலுகைகோருவோரும் இருந்தனர் எனத்தெரிகிறது; பேசப்பட்ட விஷயங்களில் ஈராக்கிய எண்ணெய் வளத்தை பயன்படுத்திக் கொள்வதற்கான திறன் பற்றியதும் அடங்கி இருந்ததாகத் தெரிகிறது. எனவே, தற்போதைய CIA கசிவுபற்றிய சர்ச்சையானது, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருடப்பட்ட ஒரு தேர்தல் மூலம் ஆட்சியில் இருத்தப்பட்ட தற்போதைய நிர்வாக முறைபற்றிய செயல்பாடுபற்றி மூடிமறைக்கும் ஒரு பரந்த வடிவமைப்பின் ஒரு பகுதியே ஆகும். இது ஒரு குற்றவியல் கும்பலின் அரசாங்கம். பெரும்பாலான உழைக்கும் மக்களின் இழப்பில் தங்களை கொழுக்க வைத்துக்கொண்டு வாழும் குற்றமிழைக்கும் சமூக தட்டின் நலன்களை பண மோசடி, திருட்டு முறைகளினால் காக்கும் அமைப்பு. சர்வதேச அரங்கில், அடர்ந்த காடுகளில் உள்ள சட்டத்தைத்தான் இது மதிக்கிறது, எந்த நாட்டையும் கொள்ளையடிப்பதற்காக படையெடுத்து, ஆக்கிரமிப்பு செய்யும் உரிமையை தானே எடுத்துக்கொண்டுள்ளது. உள்நாட்டில், ஜனநாயக உரிமைகளை வெளிப்படையான இகழ்வுடன் நடத்துகிறது; பெரும்பாலான அமெரிக்க மக்களுடைய சமூக நலன்களையும் அவ்வாறேதான் மதிக்கிறது. பிளேம்-வில்சன் விவகாரம், அரசு அமைப்பிற்குள்ளேயே இவ்வழிமுறைகள் ஒரு பேரழிவிற்கு கொண்டு சென்றுவிடுமோ என்பது பற்றி பெருகிவரும் கவலைகளின் வெளிப்பாடுதான். ஆயினும்கூட, ஈராக்கில் போருக்கு ஆதரவை கொடுத்துவிட்டு, பிற்போக்கான சமுக திட்டங்களுக்கும் துணை நின்றதால், ஒரு CIAபணியாளர் அம்பலப்படுத்தப்பட்டது பற்றிய குற்றம் பற்றி ஜனநாயகக்கட்சி புஷ்ஷினை தீவிரமாகத் தட்டிக்கேட்க முடியாமல் போயுள்ளது. |