World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : துருக்கி Turkey sends troops to Iraq ஈராக்கிற்கு துருக்கி துருப்புக்களை அனுப்புகிறது By Justus Leicht அக்டோபர் 7-ந் தேதியன்று துருக்கி நாடாளுமன்றம் ஈராக்கிற்கு தனது துருப்புக்களை அனுப்புவதற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டது. துருப்புக்களை அனுப்ப வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக ஆளுகின்ற மிதவாத இஸ்லாமிய AKP கட்சியின் (நீதி மற்றும் முன்னேற்றக் கட்சி) 358 உறுப்பினர்கள் வாக்களித்தனர், எதிர்கட்சியான CHP கட்சியின் (மக்கள் குடியரசுக் கட்சி) 183 பேர் எதிராக வாக்களித்தனர். நாடாளுமன்ற முடிவு துருக்கி அரசாங்க தலைவர் தாயிப் எர்டோகனுக்கு அமெரிக்காவுடன், துருக்கி துருப்புக்கள் ஈராக்கில் தலையிடுவதற்கான காலம், அளவு மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக பேணுவதற்கு சுதந்திரமாய் விட்டிருக்கிறது. ஓராண்டிற்கு துருக்கி தனது 10,000 துருப்புக்களை மத்திய ஈராக்கிற்கு அனுப்பும் என ஊகிக்கப்படுகிறது. இரண்டு ஆக்கிரமிப்பு அரசுகளான அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு அடுத்து துருக்கி தான் ஈராக்கிற்கு மிகப்பெரும் அளவில் துருப்புக்களை அனுப்பிய நாடாகும். முஸ்லீம்கள் நிறைந்துள்ள ஒரு நாட்டிலிருந்து ஈராக்கிற்கு அனுப்பப்படும் முதலாவது படைப் பிரிவாகவும் கூட இது அமையும். ஈராக்கிற்கு துருப்புக்களை அனுப்ப வேண்டுமென்ற முடிவு தோல்வி அடைவதற்கு எர்டோகனின் சொந்த நாடாளுமன்ற குழுவிற்குள்ளேயே எதிர்ப்பு வரும் என்ற அனுமானம் ஆதாரமற்றது. இதற்கு --முன்னர் மார்ச் 1-ல் இதே போன்ற வாக்கெடுப்பில் நடந்தது போல-- பொய்யாயிற்று. மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பில் துருக்கி எல்லைக்குள் ஈராக் மீது படையெடுப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்கு அமெரிக்க துருப்புக்கள் தங்கியிருப்பதற்கு சுமார் -100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர். அந்த நேரத்தில் அது அரசாங்கத்திற்கு பின்னடைவாகத்தான் இருந்தது மற்றும் துருக்கிக்கும் வாஷிங்டனுக்கும் இடையே நிலவிய உறவுகள் சீர்குலைந்தன. தற்போது நடைபெற்ற வாக்கெடுப்பிற்கு முன்னர் ஆளுங்கட்சி அணிக்குள்ளேயே எதிர்ப்புக்கள் உருவாகும் என்பதற்கான சமிக்கைகள் மீண்டும் தோன்றின. நாடாளுமன்ற வெளிவிவகார கொள்கை குழுவின் தலைவர் Mehmet Dulger ஈராக் மக்களது எதிர்ப்பால் அமெரிக்கப் போர் வீரர்களுக்கு பதிலாக துருக்கி துருப்புக்கள் மடிய வேண்டும் என்று தான் அமெரிக்கா விரும்புவதாக கருத்து தெரிவித்தனர். இது தவிர துருக்கியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் துருக்கி மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஈராக்கிற்கு துருப்புக்களை அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கருத்து வேறுபாடுகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை தன்பக்கம் ஈர்ப்பதற்கு பிரதமர் எர்டோகன் அசைக்க முடியாத வாதங்களை முன்வைக்க முடிந்தது. எர்டோகன் பொதுமக்களைத் தவிர்த்து ஈராக் மீதான தலையீட்டின் மீது நாடாளுமன்ற விவாதத்திற்கு அனுமதி வழங்கியபோதிலும், CHP- ன் படி, "துருக்கி மக்கள் பற்றிய அச்சத்தின்" காரணமாக -துருக்கி அரசாங்கம் தனது கூலிப்படை சேவை செய்வதற்காக அமெரிக்கா பண உதவி தரும் என்று எதிர்பார்க்கின்றது என்பது எல்லோரும் அறிந்த விஷயமாகும். அமெரிக்க காங்கிரஸ் துருக்கிக்கு 8.5 பில்லியன் டாலர்கள் கடன் வழங்க இசைவு தெரிவித்திருக்கின்றது. இந்த நிபந்தனை ஈராக்கில் அமெரிக்காவுக்கு ஆதரவாக துருக்கி கட்டுப்பட வேண்டும் என்பதாகும். ஒரு புதிப்பிக்கப்பட்ட நாணயப் பொறிவை மற்றும் ஒட்டுமொத்தமாகப் பொருளாதாரப் பொறிவைத் தவிர்க்க துருக்கிக்கு இந்த கடன் மிக அவசரமான தேவையாகும். 2001-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார சிதைவினால் துருக்கி மக்கட் தொகையின் பரந்த தட்டினர் பாதிக்கப்பட்டனர். தற்போதைய அரசாங்கத்திற்கான ஆதரவு அண்மையில் ஓரளவிற்கு பொருளாதாரம் ஸ்திரமான நிலைக்கு வந்திருக்கின்றது என்ற உண்மையை பெரும் அளவில் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இது தவிர துருக்கிக்கு அமெரிக்கர்கள் ஒரு உறுதி மொழி வழங்கியிருக்கின்றனர். குர்து தொழிலாளர் கட்சியை (PKK/KADEK) சேர்ந்த 5,000- உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. இவர்கள் பெரும்பாலும் வடக்கு ஈராக்கில் செயல்பட்டு வருகின்றனர். துருக்கி இராணுவத் தலைமை பகிரங்கமாக ஈராக்கில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி கிளர்ச்சி செய்து வந்தது. அவர்கள் விதித்த நிபந்தனை என்னவென்றால் ஈராக்கில் உள்ள குர்துகளுக்கு எதிராக ஒடுக்குமுறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதுதான். துருக்கி இராணுவப் படைத் தளபதிகளின் தலைவர் ஹில்மி ஓஸ்காக் முழு நடைமுறையையும் லொட்டோ விளையாட்டிற்கு ஒப்பிட்டார். ஆபத்தை எதிர் கொள்வதற்கு நீங்கள் தயாராக இல்லாவிட்டால் எந்தவிதமான வெற்றியையும் பெறமுடியாது என்றார். துருக்கி நாட்டிற்கு எதிராக PKK/KADEK நடத்தி வந்த கொரில்லா போர் கைவிடப்பட்டு அந்த கொரில்லாக்கள் வடக்கு ஈராக் பகுதிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பின்வாங்கி சென்றிருக்கின்றனர். அவர்களது தலைவர் அப்துல்லா ஒஷ்லான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் பின்வாங்கி விட்டனர். இதற்கிடையில் அவ்வியக்கமானது தங்களது ஆயுதங்களை ஒப்படைக்கவும், துருக்கி நாட்டிற்கு விசுவாசமாக நடந்து கொள்வதாகவும் உறுதியளித்து அதற்கு பதிலாக பொது மன்னிப்பு வழங்குமாறும் குர்துகளுக்கு கலாச்சார உரிமைகள் தருமாறும் கோரியது. அது போன்ற நிபந்தனைகள் பற்றி பேச்சு நடத்த துருக்கி மறுத்து விட்டது. PKK மற்றும் அதன் வழி வந்த KADEK அமைப்புக்களை பயங்கரவாத அமைப்புக்கள் என்று அமெரிக்கா அதிகாரபூர்வமாக பிரகடனம் செய்திருக்கின்றது. என்றாலும் இதுவரை அமெரிக்கா ஈராக்கில் உள்ள அவர்களது தளங்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு முதலாவது காரணம் PKK / KADEK அமைப்புக்கள் இந்த மண்டலத்தில் அமெரிக்காவின் அபிலாசைகளுக்கு ஓர் அச்சுறுத்தலாக என்றைக்குமே செயல்பட்டதில்லை. எந்த ஆக்கிரமிப்பு அரசோடும் ஒத்துழைப்பதற்கான அதன் தயார்நிலையை வெளிப்படுத்துவதற்கு கிடைக்கும் எந்த சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி இருக்கிறது. இந்த அமைப்பின் தலைவர்கள் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்துக்கொண்டதை மத்திய கிழக்கு முழுவதிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் முதல்கட்ட நடவடிக்கை என்று வர்ணித்துள்ளன! இரண்டாவதாக, அமெரிக்க இராணுவம் உறுதி மிக்க ஈராக் எதிர்ப்பினால் சூழப்பட்டு நெருக்கடியில் இருக்கும்போது புதியதொரு போர் முனையை தொடக்குவதில் ஆர்வம் இல்லாமல் உள்ளது.தற்போது அமெரிக்காவிற்கும் துருக்கிக்கும் இடையே ஒரு பேரம் உருவாக்கப்பட்டுவிட்டதன் அடையாளங்கள் தென்படுகின்றன. பல நாட்கள் இரண்டு அரசாங்க பிரதிநிதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற பின்னர், PKK அமைப்பினால் உருவாகும் "அச்சுறுத்தலை" "ஒழித்துக்கட்டுவதற்கு", இருதரப்பிற்கும் இடையே ''செயல்திட்டம்'' ஒன்று உருவாக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பவல் வார்த்தைகளில் வெளிப்பட்டது. அமெரிக்க அரசாங்கத்தின் ஒளிபரப்பு சேவையான வொய்ஸ் ஆஃப் அமெரிக்கா (VOA), தேவைப்பட்டால் இந்த வகையில் இராணுவமும் பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டது. துருக்கி அரசாங்க வட்டாரங்களுக்கு மிக நெருக்கமான செய்தி பத்திரிகையான Zaman, செப்டம்பர் மாதம் ஒரு தகவலை வெளியிட்டிருந்தது. நவம்பர் மாத தொடக்கத்திலிருந்து ஈராக்கிற்குள் உள்ள PKK- முகாம்கள் மீது அமெரிக்கப்போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல்களை நடத்தும் என்றும் துருக்கி எல்லைக்குள் புக முயலும் கொரில்லாக்களை துருக்கியின் துருப்புக்கள் தடுத்து நிறுத்தும் என்றும் அந்த பத்திரிகை தகவல் தந்திருந்தது. தற்போது அத்தகைய இராணுவ நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதும் என்ன அதில் உள்ளடங்கும் என்பதும் தெளிவாகவில்லை. ஒன்று தெளிவாகத் தெரிகிறது. எந்த நடவடிக்கை இப்போது எடுக்கப்பட்டாலும் இன்னும் தீர்வு காணப்படாத குர்து இன மோதல்களை சுற்றியுள்ள பதட்டங்கள் மீண்டும் கிளர்ந்து எழக்கூடும் என்பதுதான் இப்போதுள்ள தெளிவான நிலையாகும். ஏற்கனவே PKK தலைவர்கள் ஒன்றைத் தெளிவாக கோடிட்டுக் காட்டியுள்ளனர். தங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு நடமாடுவதற்கே சிக்கல் ஏற்படுமானால் துருக்கிக்கு மேற்குப் பகுதியில் உள்ள பொதுமக்களது குடியிருப்புக்களில் தாக்குதல்கள் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்று கூறியுள்ளனர். ஈராக்கில் துருக்கி தலையிடவேண்டும் என்று அமெரிக்கா தனது நிர்பந்தங்களை அதிகரித்து வந்தாலும் அத்தகைய முயற்சியை ஈராக்கில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக இரண்டு குர்து இன கட்சிகளான KDP மற்றும் PUK ஆகியவை துருக்கி தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த இரண்டு அமைப்புகளுமே ஈராக்கின் இடைக்கால அமெரிக்க பொம்மை நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ளன. அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதை அதிக விசுவாசத்தோடு இந்த இரண்டு அமைப்புக்களும் ஆதரித்து வருகின்றன. வடக்கு ஈராக்கில் KDP மற்றும் PUK ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு நிலவரம் ஸ்திரமாக உள்ளது. ஈராக்கின் இதர பகுதிகளில் கடும் முரண்பாடு நிலவுகின்றது. இந்த நிலைமைகள் விரைவில், எவ்வாறாயினும், துருக்கி படைகள் தலையிடுமானால் உடனடியாக மாறிவிடக்கூடும். துருக்கி சிறுபான்மையினர் உரிமையை வடக்கு ஈராக்கில் பாதுகாத்து நிற்பதாக துருக்கி காட்டிக் கொண்டு வருகின்றது. ஈராக்கின் வடக்கு பகுதியில் குர்து இனத்தவருக்கு சுதந்திரமான தனிநாடு உருவாவதை தேவைப்பட்டால் இராணுவத்தை பயன்படுத்தி தடுப்பதாக துருக்கி திரும்ப திரும்ப அச்சுறுத்தி வருகின்றது. தற்போது துருக்கி படைகள் சுன்னி இனத்தவர் அதிகம் வாழுகின்ற மத்திய ஈராக் பகுதிக்குத்தான் அனுப்பப்படுகின்றன. ஆனால், மேலும் துருப்புக்கள் வருவதற்கும் படைகளுக்கு வேண்டிய தளவாடங்களுக்கும் வழிதிறக்கும் பொருட்டு ஓரளவிற்கு வடக்கு நோக்கி துருக்கி படைகள் பரவலாக செல்லக்கூடும். ஈராக்கின் இடைமருவு நிர்வாகக் குழுவில் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றி வருபவர் KDP கட்சியைச் சேர்ந்த Hoshyar Zabari, அவர் துருக்கி துருப்புக்கள் எந்த வகையிலும் ஈராக்கில் தலையிடக்கூடாது என்று வலியுறுத்தி வருகிறார். நிர்வாகக்குழுவின் தலைவரும் பென்டகனின் கூட்டாளியுமான அஹமது சலாபியும் துருக்கி படைகள் அனுப்பப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ''வெளிநாட்டு துருப்புக்கள் சில தான் தேவையே தவிர பெருமளவிற்கு தேவையில்லை'' என அவர் அறிக்கை விடுத்தார். இதை சாதாரண மொழியில் விளக்குவதென்றால் ஈராக் மக்கள் துருக்கி இராணுவத்தை தங்கள் நாட்டில் சிக்கிக்கொண்டிருக்கும் அமெரிக்க-பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு படைகளை மீட்பதற்காகவே அனுப்பப்படுகின்றன என்று கருதுகின்றனர். ஈராக் மக்களது மதிப்பீடு சரியானதுதான். ஏனென்றால் ஈராக் மக்களில் பலர் பழைய துருக்கி ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் பாரம்பரியங்களை மறந்துவிடவில்லை. ஒட்டோமான் சாம்ராஜ்ஜிய சுல்தான் நவீன ஈராக்கை முதலாவது உலப்போர் தொடங்குவது வரை தனது காலடியில் போட்டு நசுக்கிக் கொண்டிருந்தார் என்பதை ஈராக்கிலிருந்தவர்கள் இன்னமும் நினைவில் நிறுத்திக் கொண்டுதான் இருப்பர். இத்தகைய அச்சங்களை மேலும் அதிகரிக்கின்ற வகையில், துருக்கி நாட்டின் வெளியுறவு அமைச்சர் அண்மையில் ஈராக்கிற்கு தனது துருப்புக்களை அனுப்புவதை நியாயப்படுத்தி பேசும்போது ''பல நூற்றாண்டுகளாக நாங்கள் இந்த பிராந்தியத்தை ஆண்டிருக்கின்றோம்'' என்று குறிப்பிட்டார். |