World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனிSchröder, Bush and the "Agenda 2010" ஷ்ரோடர், புஷ் மற்றும் "2010 செயற்பட்டியல்" By Peter Schwarz இன்னும் அவர்கள் நகர்கின்றனர் விறைத்து, நேராகவும் ஒல்லியாகவும் மெழுகுவர்த்திபோல், ஓர் உயரதிகாரியின் கைத்தடியை விழுங்கியதுபோல், பழைய பிரிட்ஸ் அறிவார், எப்படிச் சமாளிப்பதென. (Heinrich Heine, "Germany, A Winter's Tale") 19ம் நூற்றாண்டின் முற்பகுதி ஜேர்மனியின் மிகத்தாழ்வுற்ற நிலையைப்பற்றிய துல்லியமான ஹெய்னின் விவரிப்பு, தற்போதைய ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி (SPD), மற்றும் அரசாங்கத்தில் அதன் இளைய பங்குதாரரான பசுமைக் கட்சி (Green Party), இரண்டின் தன்மைகளையும் சுருக்கமாகக் கூறுகிறது. அண்மையில் பேர்லின் அரசாங்கம், அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷுடன் சமரசம் செய்து கொள்ளுதல் மற்றும் தன்னுடைய "2010 செயற்பட்டியல்" ஐ நடைமுறைப்படுத்துதல், என்ற இரண்டு பிரச்சினைகளிலும் ஆழ்ந்துள்ளது. இரண்டு விஷயங்களிலும், இரு இணைந்த கூறுபாடுகளை அது வெளிப்படுத்துகிறது; தம்மிலும் உயர்ந்த இடத்திலுள்ளோரிடம் தாழ்ந்து, பணிந்து நிற்றல், தம்மிலும் தாழ்ந்தோரைச் செருக்குடன் நடத்துதல். ஜேர்மனியின் அதிபர் ஹெகார்ட் ஷுரோடரும், (Gerhard Schroder) அவருடைய வெளிநாட்டு மந்திரி ஜொஸ்க்கா பிஷ்ஸ்சர் (Joschka Fischer) இருவரும் அமெரிக்க போர் பிரபுக்களிடம் காட்டிய முகஸ்துதி, தலைகீழ்முறையில், கூட்டாட்சி வரலாற்றிலேயே இல்லாத அளவு சமூக நலத்திட்டங்கள் மீது கடும் பின்விளைவுகள் கொண்டுள்ள தாக்குதல்களை செயல்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதைக் குறைகூறுவோரை ஆணவத்துடனும், இறுமாப்புடனும் நடத்துவதைத்தான் பிரதிபலிக்கிறது. நியூயோர்க் நகரத்தில், வால்டோர்ப் அஸ்டோரியா ஹோட்டல் 35வது மாடியில், செப்டம்பர் 24ம் தேதியன்று நடந்த நிகழ்ச்சிகளை வருணிக்க "கீழ்த்தரமானது" என்ற சொல் போதுமானது அல்ல. இவ்விடத்தில் அந்நேரத்தில்தான், கடந்த பலமாதங்களாக தம்மிடையே இருந்த கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, தங்கள் அயல்நாட்டு மந்திரிகள் புடைசூழ, புஷ்ஷும், ஷ்ரோடரும் சந்தித்தனர். Der Spiegel என்னும் வார ஏடு, என்ன நடந்தது என்பதை விவரமாகத் தெரிவித்துள்ளது. Der Spiegel உடைய அறிவிப்பின்படி, கூட்ட தொடக்கத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை, ஷ்ரோடருடைய மொழிபெயர்ப்பாளர் மூலம் தற்செயலாக நிகழ்த்திய ஒரு செயலுக்கு, புஷ் நகைச்சுவையுடன் கூறிய எதிர்செயலினால், விரைவில் கரைந்து போயிற்று. மொழிபெயர்ப்பாளர் தற்செயலாக தன்னுடைய பேனாவை புஷ்ஷுடைய தொடையில் தவறிக் கீழேவிட்டபோது, இறுக்கமான சூழ்நிலையைச் சமாளிக்கும் வகையில், "இது ஒரு பேரழிவு ஆயுதத்தாக்கல்" என அவர் கூறினார். இதற்கு, ஷ்ரோடர் உடனே மனம் திறந்து தன்னுடைய நண்பர் "ஜோர்ஜ்" இடம் தன்னுடைய "2010 செயற்பட்டியலை" பரந்த அளவு மக்கள் எதிர்ப்பு, தன் கட்சிக்குள்ளேயே தடுப்பு இவற்றை மீறி நடைமுறைப்படுத்துவதில் கொண்டுள்ள கஷ்டங்களைக் கூறினார். "எனக்கு உங்கள் கஷ்டம் புரிகிறது, ஹெகார்ட் " என பரிவுணர்வுடன் ஜனாதிபதி விடையிறுத்தார்இந்தக் காட்சிதான் அடையாளமாகிறது. ஒரு சட்டவிரோதப் போரைத் தொடக்கிய, அப்பட்டமான பொய்களைக்கூறி அதை நியாயப்படுத்திய, தன்னுடைய செயலினாலேயே அழிவை எதிர்நோக்கியுள்ள- நிலையிலிருக்கும் ஒரு ஜனாதிபதி, பேரழிவு ஆயுதங்களைப்பற்றி மட்டமான நகைச்சுவை துணுக்குகளை கூறுகிறார். அவருடைய ஜேர்மனிய விருந்தாளிகளான ஒரு சமூக ஜனநாயகவாதி, ஒரு முக்கிய பசுமைக் கட்சிக்காரர், இருவரும் புகழில் மூழ்கி, தங்கள் நாட்டு உள்பிரச்சினைகளைப் பற்றி மனம் திறந்து அவருடன் பேசுகின்றனர். புஷ்ஷின் செயல் இதுவரை ஏற்கப்பட்டுள்ள தரங்களில் எப்படிப்பார்த்தாலும் குற்றஞ்சார்ந்தது என்றாலும், ஷ்ரோடரும், பிஷ்ஸ்சர் அமெரிக்க ஜனாதிபதியைத் தீவிரமாக எதிர்க்கும் நினைப்பையே கொள்ளவில்லை. சர்வதேச சட்டத்தையும், ஐ.நா.வையும் அலட்சியம் செய்துதான் அவர், ஈராக்கின்மீதான ஆக்கிரமிப்புப் போரைத் தொடர்ந்து, மிருகத்தனமான தாக்குதலினால் அந்நாட்டைப் பிடித்துக்கொண்டுள்ளார். அதிகாரபூர்வமாக போருக்கு காரணமாகக் கூறப்பட்ட ஈராக்கிய பேரழிவு ஆயுதங்களைப் பற்றிய கற்பனைக்கதை, அமெரிக்க, சர்வதேச மக்கள் கருத்தை தவறாக திசை திருப்பும் வகையில் நோக்கங்கொண்ட அப்பட்டமான புளுகு, என சில நாட்களுக்கு முன்பு அம்பலப்படுத்தப்பட்டது. "Ems Telegram" என, 1870ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைப் போருக்குத் தூண்டுவதற்காக, இகழ்வான தகவலை ஜேர்மனிய அதிபர் பிஸ்மார்க் தந்திரமாக வெளியிட்டதுபோல, பல கட்டற்ற பொய்களைப்போல, இந்தப்பொய்யும் வரலாற்றில் இடம் பெறும். ஜொஸ்க்கா பிஷ்ஸ்சர் இருவருடைய எதிர்ச்செயல்களையும் பற்றிச் சிந்திக்கும்போது, முன்னால் புஷ் ஜேர்மனியின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் கோபம் அளிக்கக்கூடிய வகையில் தலையிட்டிருந்தார் என்பதை மனத்தில் கொள்ளவேண்டும். ஈராக்கியப் போருக்கு, ஜேர்மனிய அரசாங்கம் எதிர்ப்புக்கள் தெரிவித்திருந்ததையடுத்து, புஷ் வெளிப்படையாகவே அந்த நாட்டின் கன்சர்வேட்டிவ் எதிர்க்கட்சியோடு குலாவினார் என்பதும், பேர்லினில் அரசாங்க மாற்றத்திற்கு வேலைசெய்தார் என்பதும், ஐரோப்பிய ஒன்றியத்தைப் பிரிக்க முயன்றார் என்பதும் நடந்த விஷயங்களாகும். இப்பொழுது புஷ் ஒரு நெருக்கடியில் திணறுகிறார். அமெரிக்க தலைமையிலான ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு வளர்ந்துள்ளது, போர்ச்செலவுகள் மாபெருமளவில் உயர்ந்துவிட்டன, மற்றும் அவர் உள்நாட்டில் எதிர்ப்பாளர்களிடமிருந்து அதிகமான அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளார். ஷ்ரோடரும், பிஷ்ஸ்சரும் செல்ல நாய்க்குட்டிகள்போல் வாலாட்டிக்கொண்டு, எஜமானருடன் பிரியமாக உராய்ந்த வண்ணம், இவ்வழியில் தேவைப்படும் ஆதரவை புஷ்ஷிற்கு கொடுக்கின்றனர். அத்தகைய ஆதரவு உள்நாட்டில் எதிர்க்கட்சிக்கு எதிராக வலதுசாரி குடியரசு கட்சியை ஆதரிப்பது போலாகும். அமெரிக்காவில் புஷ்ஷும் அவருடைய உட்குழுவும் தொடர்ந்து ஆதரவை இழந்துவரும் நிலையில், அக்குழு ஷ்ரோடரையும் பிஷரையும் நம்பலாம் என்றுள்ளது. அத்தகைய நிலைப்பாட்டை பார்த்து, அதன் அபத்தத்தன்மையை புரிந்துகொள்ள ஒருவர் சோசலிஸ்டாக இருக்க வேண்டியதில்லை. Suddeutsche Zeitungக் க்கு எழுதிய சிறப்புக்கட்டுரை ஒன்றில், நோபல் பரிசு பெற்றவரும், முன்னாள் உலகவங்கி துணைத்தலைவரும், அமெரிக்க பொருளாதார வல்லுநருமான Joseph E.Stiglitz, புஷ் நிர்வாகம் சமாதனமுறையைக் கையாண்டு ஐ.நா. வுடன் நெருக்கமாக ஒத்துழைக்கும் என்ற நம்பிக்கைக்கு எதிராக சமீபத்தில் எச்சரித்துள்ளார்:" வரலாறு ஏதேனும் கூறுகிறதென்றால், எவர் பிறரால் சாடப்பட்டு, விரட்டப்படத் தங்களை அனுமதித்துக் கொள்கிறார்களோ, அவர்கள் அதேநிலையைத்தான் பின்னரும் கையாள்வர் என்பதுதான். வாய்ப்பு வரும்பொழுது, மீண்டும் ஐ நா. வை பொருட்படுத்தாமல், அமெரிக்கா தன்னுடைய அக்கறைகளை கருத்தில் கொண்டுதான் செயல்படும்." ஷ்ரோடரும், பிஷ்ஸ்சரும் நடந்துகொள்ளும் முறையில் இந்த தன்னையழித்துக்கொள்ளும் தன்மைதான் உள்ளது. ஜேர்மனிய அரசாங்கத்திடம் விரோதப்போக்கை மறைத்துக்கொள்ளாத, வாய்ப்புக்கிடைத்தால் மீண்டும் விரோதப்போக்கைத்தான் கடைப்பிடிக்கும் என்றுள்ள ஒரு நிர்வாகத்தை, அவர்கள் ஆதரிக்கிறார்கள். இத்தகைய நடத்தை எப்படி விளக்கப்பட இருக்கிறது? இதற்குவிடை ஜேர்மனியின் உள்நாட்டுக்கொள்கையில் உள்ளது. இத்துறையிலும் ஷ்ரோடரும், பிஷ்ஸ்சரும் மிகுந்த வலதுசாரி சக்திகளை வலுப்படுத்தும் பாதையில், தங்கள் கட்சியையே அழிக்கும் பாதையில் செல்கின்றனர். தங்கள் "2010 செயற்பட்டியலை" பெரும் மக்கள் எதிர்ப்பிற்கிடையே திணிப்பதில் ஆர்வமுடையவர்களாக உள்ளனர்-- இம்மக்கள் எதிர்ப்பிற்கும் கையளவு SPD உறுப்பினர்கள்தாம் அரைமனத்துடன் ஆதரவு தரும் சிதைந்த நிலையை பிரதிபலிக்கிறது. இக்கொள்கைகளின் விளைவால், இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து SPD கூட்டம் கூட்டமாக உறுப்பினர்களை இழந்து வருகிறது; அல்லது கிட்டத்தட்ட 30,000 பேர்கள் அல்லது 5சதவீத உறுப்பினர்கள் கட்சியைவிட்டு நீங்கியுள்ளனர்-- இது வாக்காளர் ஆதரவில் பேரழிவு தரும் சரிவாகும். இந்தப் போக்கு பவேரியாவில் அண்மைய தேர்தலில் திடீர் என நிரூபிக்கப்பட்டது. அங்கு SPD 20 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றது, கிறீஸ்தவ சமூக யூனியன் (CSU) 60 சதவீதம் பெற்றது. இடதுசாரி மாற்று இல்லாத சூழ்நிலையில், பழமைவாத CSU, SPDயின் பால் மக்கள் கொண்டுள்ள பரந்த அதிருப்தியை பயன்படுத்தியது. அதனுடைய "2010 செயற்பட்டியல்" மீது யார் குறைகூறினாலும், SPD தலைமை வெறித்தனமாக எதிர்த்து நடக்கிறது -- கட்சியில் எதிர்ப்போரை, கட்சியைவிட்டு வெளியேற்றி, அதேநேரத்தில் கன்சர்வேடிவ் எதிர்க்கட்சியுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுவதன்மூலம், அதை வலுப்படுத்துகிறது. குறிப்பாக, சமீபத்தில் North Rhine Westphalia வினுடைய SPD பிரதம மந்திரி பீர் ஸ்டீன்ப்ருக், ஹெசன் மாநிலத்தினுடைய CDU (கிறிஸ்தவ ஜனநாயக முன்னணி) பிரதம மந்திரி ரோலண்ட் கொச் இருவரும் கொண்டுள்ள உடன்பாடு, அவர்களுடைய தீவிரமான குறைப்புக்கள், CDU விற்குள்ளேயே தீவிர வலதுசாரிக்கு கொடுக்கப்படும் நேரடி ஆதரவாக உள்ளது. SPD இத்தன்மையில் வருங்கால அதிபராக கொச்சிற்கு வழியமைத்து தருகிறது. இத்தகைய அழித்தல்முறை நடத்தையை புரிந்து கொள்ள, சமூக ஜனநாயகக் கட்சியின், வரலாற்றையும், மரபுகளையும், சுருக்கமாக ஆய்வுசெய்தல் அவசியமாகிறது. கட்சி தன்னுடைய திட்டத்தையே தூக்கி எறிந்துவிட்டு, முதல் உலகப்போரில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தை ஆதரித்த 1914 வரலாற்று காட்டிக் கொடுப்பிலிருந்தே, SPD அடிப்படையில், மக்கள் எதிர்ப்பிற்கெதிராக முதலாளித்துவ ஒழுங்கை ஆதரிக்கும் அடிப்படைக் கோட்டில்தான் நடந்துகொண்டிருக்கிறது -- இத்தகைய வழிமுறை வலதுசாரியை ஊக்குவிக்க வேலைசெய்த போதிலும், இறுதியில் SPD யின் இருப்புக்கே அச்சுறுத்துகின்றது. தொடர்ச்சியாக, மேலிருந்து வரும் அழுத்தத்திற்கு இடம் அளிப்பதையே நோக்கமாகக் கொண்டு, கீழிருந்து வரும் அழுத்தத்தை வன்முறையில் சாடியும், தகர்த்தும், அதைப் பொருட்படுத்தாமலும் கட்சி செயல்பட்டு வருகிறது. "எவராவது வேட்டை நாயின் பங்கைச் செய்தே தீரவேண்டும்" என்ற சொற்களுடன் 1918-19ல் புரட்சிகர தொழிலாளரின் எழுச்சியை நசுக்கிய Gustav Noske முதல் Friedrich Ebert, வைமர் குடியரசுக் காலத்தில் முதலாளித்துவ வலதுசாரியுடன் இணைந்து செயல்பட்டதுவரை ஒரு நேரடிக்கோடு தொடர்ந்திருந்தது. இரண்டாம் உலகப் போருக்குமுன் அதிபராக இருந்த கடைசி சமூக ஜனநாயகவாதி ஹெர்மன் முல்லெர், வேலையின்மை உதவித்தொகையில் கடுமையான குறைப்புக்களைச் செயல்படுத்த முடியாமல் 1930ல் பதவியை ராஜிநாமா செய்தார். 1930க்குப் பிறகு, SPD மைய வலதுசாரி அரசியல்வாதி புரூனிங்கின் நெருக்கடிகால அரசாங்கத்தை ஆதரித்தது; 1932ல் ஹிண்டன்பேர்க்கை அரச தலைவராக வாக்களிக்க அழைப்பு விடுத்தது. அதே ஆண்டு, பிரஷ்யாவில் சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டபோது, நிபந்தனையின்றி சரணடைந்தது. பிரஷ்ய நிகழ்வுகள் நாஜி நலன்களை முன்னெடுப்பதில் முக்கியமானவையாக இருந்தன; ஏனெனில் நாஜிக்கள் பிரஷ்ய போலீசைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஓராண்டிற்குப் பின்னர், 1933ல் சமூக ஜனநாயகக் கட்சியின் விருப்பமான தலைவர் ஹிண்டன்பேர்க், ஹிட்லரை அரசு அதிபராக நியமித்தார். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், பொருளாதார மீட்சியானது SPD ஐ முதலாளித்துவ ஒழுங்கை சமுக சீர்திருத்தங்களின் இயங்குமுறைகள் மூலம் ஆதரிக்க வைத்தது. ஆயினும், 1970களின் இடைப்பகுதிகளில் இது மாறியது. 1982ல் SPD அதிபர் ஹெல்முட் சிமித், கடுமையான வரவுசெலவுத் திட்ட குறைப்புக் கொள்கையால், அவருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே பிளவு ஏற்பட்டதையடுத்து, பதவியை இழந்தார். ஹெல்முட் கோல் தலைமையிலான பழமைவாத அரசாங்கம், சிமித்திற்கு பதிலாக பதவிக்கு வந்தது; ஜேர்மன் சமுக அமைப்பின் மீதான அதன் சொந்த தாக்குதலாலேயே அதுவும் 1998ல் பதவியிழந்தது. பதவியை மீண்டும் கைப்பற்றிய பின்னர், சமூக ஜனநாயகக் கட்சி கூடுதலாக வலதுபுறம் நகரத்தலைப்பட்டு, இப்பொழுது மக்கள் ஆதரவை பெருமளவில் இழந்து நிற்கிறது. கட்சியின்மீது அழுத்தம் தீவிரமாகும்போது SPD, அரசியல் பிற்போக்கு சக்திகளுடன், உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ, அதிகரித்த அளவில் அணைத்து நிற்கும். |