World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைLTTE joins government strikebreaking against Sri Lankan health workers தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை சுகாதார ஊழியர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் வேலைநிறுத்தத் தகர்ப்பு நடவடிக்கையுடன் இணைந்துகொண்டுள்ளது By Nanda Wickramasinghe தமிழீழ விடுதலைப் புலிகள், சுகாதார ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை நசுக்குவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிப்பதானது, அதன் வர்க்க சுபாவம் மற்றும் கொழும்புடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அதன் குறிக்கோளினதும் பெரும் பகுதியை அம்பலப்படுத்துகிறது. சுமார் 80,000 ஊழியர்கள், வரவுசெலவு வெட்டு மற்றும் தனியார்மயப்படுத்தலுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் வேண்டுகோள்களை அமுல்படுத்துவதற்கான ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியின் (ஐ.தே.மு) முயற்சிகளை நேரடியாக சவால் செய்யும் வகையில் செப்டம்பர் 17 முதல் காலவரையறை அற்ற வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தனர். அதிகரித்துவரும் விலைவாசி மற்றும் குறைந்த மட்ட ஊதியத்துக்கும் முகம் கொடுத்த மிகப் பெரும்பான்மையான சுகாதார ஊழியர்கள், நிலையான சம்பள உயர்வுக்கான பிரச்சாரத்துக்கு ஆதரவு வழங்கினர். எந்தவொரு சலுகையையும் வழங்க மறுத்த ஐ.தே.மு. அரசாங்கம், நோயாளர்களின் உயிர்களை ஆபத்துக்குள்ளாக்குவதாக அவர்களை குற்றம் சாட்டியது. அது இலங்கை சட்டத்தை சிறிதும் மதிக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் கடமைகளை மேற்கொள்வதற்காக ஆஸ்பத்திரிகளுக்கு ஆயுதப் படைகளை அனுப்பியது. சுகாதார அமைச்சு 1,600 தற்காலிக ஊழியர்களை வேலை நீக்கம் செய்ததோடு அவர்களை பதிலீடு செய்வதற்காக நூற்றுக்கணக்கான கருங்காலிகளை சேர்த்துக்கொண்டது. அதே சமயம் வேலை நிறுத்தக்காரர்களை தொந்தரவு செய்ய, பயமுறுத்த மற்றும் தடுத்து வைக்கவும் கூட பொலிசார் பயன்படுத்தப்பட்டனர். விடுதலைப் புலிகள், தொழிலாளர்களை பாதுகாக்க தீர்மானிக்காத அதே வேளை பகிரங்கமாக அரசாங்கத்தை ஆதரித்தனர். செப்டெம்பர் 23 அன்று, வட மாகாண நகரமான யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதலைப் புலி தலைவர்கள், பிரதான அரச நிறுவனமான யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரு கூட்டத்தை கூட்டி "மனிதாபிமான அடிப்படையில்" வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என தொழிலாளர்களுக்கு குறிப்பிட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் வாதமானது, அரசாங்கத்தினதும் மற்றும் பொது சுகாதார சேவையை கீழறுப்பது, நோயாளிகளுக்கு விளைவுகளை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள், பொய் ஆகியவற்றுக்கு பொறுப்பு அரசாங்கமும் அதன் கொள்கைகளுமேயாகும் என்பதை மூடி மறைப்பதற்காக சேவை செய்யும் கொழும்பு ஊடகங்களினதும் வாதத்துடன் துல்லியமாகப் பொருந்துகிறது. யாழ்ப்பாண வைத்தியசாலை ஊழியர்கள், முன்னர் இடம்பெற்ற வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையில் தலையீடு செய்யாத விடுதலைப் புலிகள் இந்த வேலை நிறுத்தத்தை எதிர்க்கத் தீர்மானித்தது ஏன் என்பதை கூறுமாறு கோரி விடுதலைப் புலி அலுவலர்களுடன் சூடான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில், ஆஸ்பத்திரிகளுக்கு இராணுவங்கள் அனுப்பக்கூடும் என விடுதலைப் புலிகள் விடுத்த எச்சரிக்கையை சவால் செய்த தொழிலாளர்கள் தொடர்ந்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்தார்கள். ஊடக அறிக்கைகளின் படி ஏனைய பிரதேசங்களிலும் இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாண பிராந்திய தலைவரான இளம்பரிதி, நகரின் பிரதான போதனா வைத்தியசாலைக்கு உடனடியாக வேலைக்குத் திரும்புமாறு பணித்ததோடு, வேலை நிறுத்தக்காரர்களுக்கு பதிலாக விடுதலைப் புலி காரியாளர்கள் பதிலீடு செய்யப்படுவார்கள் எனவும் எச்சரித்தார். வவுனியாவில் வேலை நிறுத்ததில் ஈடுபட்டிருப்பவர்களை வேலைக்குச் செல்ல நிர்ப்பந்திப்பதற்காக உள்ளூர் வைத்தியசாலைக்கு 20 விடுதலைப் புலி உறுப்பினர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக விடுதலைப் புலி தலைவர் பத்திரிகைகளுக்கு தெரிவித்தார். கிழக்குப் பிராந்தியமான மட்டக்களப்பிலும் இதே கட்டளைகள் வெளிப்படையாக பிறப்பிக்கப்பட்டுள்ளன. இங்கு குறைந்த பட்சம் ஒரு பிரதான ஆஸ்பத்திரியிலாவது தொழிலாளர்கள் மீண்டும் விடுதலைப் புலிகளை சவால் செய்திருந்தனர். விடுதலைப் புலிகளால் மறுதலிக்கப்படாத இந்த அறிக்கைகளை சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர்களும் உறுதிசெய்திருந்தனர். விடுதலைப் புலிகள் வைத்தியசாலைகளுக்குள் இலங்கை துருப்புக்களை அனுப்புவதை முன்கூட்டியே தவிர்க்க முனைந்ததாக பி.பி.சி.க்கு கூறிய சந்தர்ப்பவாத நவ சமசமாஜக் கட்சியின் (ந.ச.ச.க) தலைவரான விக்கிரமபாகு கருணாரத்ன, விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முயன்றார். ஆனால் அரசாங்கம் இராணுவத்தை வைத்தியசாலைகளுக்குள் அனுப்பியதற்கு விடுதலைப் புலிகள் எந்தவொரு கண்டனத்தையும் வெளியிடாததையடுத்து அவரது நியாயப்படுத்தல்கள் அம்பலமாயின. வேலை நிறுத்தம் தொடர்பான விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிபலிப்புகள் அது எப்போதும் கூறிவந்துள்ளது போல் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களது நலன்களை அன்றி முதலாளித்துவத்தின் நலன்களையே பாதுகாக்கின்றது என்பதை வெளிப்படுத்துகிறது. தமது அடிப்படை உரிமைகள் மற்றும் பொது நலன்களை காப்பதற்கான தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் தொழிலாளர் வர்க்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இயக்கத்தை எதிர்கொண்ட விடுதலைப் புலிகள், கொழும்பு அரசாங்கத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர். இரண்டு தசாப்தங்களாக தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு தனியான தமிழீழ அரசுக்காக ஒரு யுத்தத்தை முன்னெடுத்து வந்த விடுதலைப் புலிகள், இந்த வழியில் மாத்திரமே தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட முடியும் என வலியுறுத்தி வந்தனர். எவ்வாறெனினும், அதன் உண்மையான நிகழ்ச்சி நிரல் ஏகாதிபத்தியத்துடன் தனது சொந்த உறவை அபிவிருத்தி செய்துகொள்ளவும் தொழிலாள வர்க்கத்தை சுரண்டவும் தமிழ் முதலாளித்துவத்துக்கு ஒரு அடிப்படையை ஸ்தாபிப்பதாகவே இருந்து வந்துள்ளது. இது, விடுதலைப் புலிகள் அதிகாரப் பகிர்வை வெற்றிகொள்வதை குறிக்கோளாகக் கொண்டு, கொழும்பு அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவாத்தைகளில் ஈடுபடுவதற்கான உடன்பாட்டின் பேரில் உடனடியாக தமது தனியரசுக்கான கோரிக்கையை கைவிட்டபோது சந்தேகத்திற்கிடமின்றி மெய்ப்பிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளர் அன்டன் பாலசிங்கம் பேச்சுவார்தைகளின் ஆரம்பத்தில் தனது இயக்கத்தின் தகவமைவையிட்டு சமிக்கை காட்டினார். அவர் குறிப்பாக இலங்கை "ஒரு வெற்றிகரமான டைகர் பொருளாதார" நாடாக மாற வேண்டும் எனும் அரசாங்கத்தின் முன்னோக்கை ஆதரித்தார். இது சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தை அமுல்படுத்துவதற்கான கொழும்பின் முயற்சிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் இருந்து எந்தவகையிலும் குறைந்ததல்ல. இலங்கை வர்த்தகர்களில் ஆதிக்கம் வாய்ந்த பகுதியினர் வெளிநாட்டு முதலீட்டை உற்சாகப்படுத்தவும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை முன்னெடுக்கவும் மற்றும் மேலும் மேலும் பொறுமையிழந்துவரும் தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்புக்கு முகம் கொடுப்பதன் பேரில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும் யுத்தத்துக்கு முடிவு கட்டுமாறு வலியுறுத்தி வந்தனர். விடுதலைப் புலிகளைப் பொறுத்தளவில் இந்த கொள்கைகளுக்காக நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு மத்தியில் தமக்கென ஒரு பொலிஸ்கார சிறப்பிடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் வேலைநிறுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளை அது ஆதரிப்பதன் உண்மையான அர்த்தம் இதுவேயாகும். சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் தாம் ஒரு சார்ந்திருக்கக் கூடிய, நம்பத்தகுந்த கூட்டாளி என்ற திருத்தமான செய்தியை பெரு வர்த்தகர்கள் மற்றும் பெரும் வல்லரசுகளுக்கு அனுப்ப தற்போதைய நிலைமையை விடுதலைப் புலிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகள், தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான பழிவாங்கல் வன்முறைகளின் பின்னால் அணிதிரளமாட்டார்கள் அல்லது நேரடியாக நடைமுறைப்படுத்தமாட்டார்கள் என்ற எந்தவொரு மாயையும் இருக்குமானால் அதை உடனடியாக அகற்றிக்கொள்ள வேண்டும். உள்நாட்டு யுத்தத்தின் போது இனவாத உணர்வை துண்டிவிடுவதன் பேரில் அது கொழும்பு அரசாங்கத்தின் குற்றச் செயல்களுக்காக சிங்களத் தொழிலாளர்கள், கிராமத்தவர்கள் மற்றும் ஏழைகளைக் குற்றம்சாட்டி வந்ததோடு, தாக்குதல்களுக்காக வேண்டுமென்றே அவர்களை இலக்குவைத்தது. 1996ல் விடுதலைப் புலிகள் கொழும்பில் உள்ள மத்திய வங்கி கட்டிடத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தியபோது 100 அப்பாவி வங்கி ஊழியர்கள் கொல்லப்பட்டதோடு 1,400 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். ஒரு வருடத்திற்கு முன்னர், விடுதலைப் புலிகளின் அலுவலர்கள், வட தீவான ஊர்காவற்துறையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) கருவியாக இருந்து ஸ்தாபித்த உள்ளூர் மீனவர்கள் தொழிற்சங்கம் விடுதலைப் புலிகளின் அலுவலகக் கட்டிடத்திற்கு நிதி வழங்க மறுத்ததை அடுத்து சோ.ச.க உறுப்பினர்களுக்கு எதிராக மரண அச்சுறுத்தல்களை விடுத்தது. அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து சோ.ச.க. உறுப்பினரான நாகராஜா கோடீஸ்வரன் காரணமின்றி கத்திகுத்துக்கு ஆளானதோடு "எல்லா மக்களும் அவர்களையும் அவர்களின் கட்சி நடவடிக்கைகளையும் துடைத்துக்கட்ட வேண்டும்" என அழைப்புவிடுக்கும் சுவரொட்டியும் ஒட்டப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள், சோ.ச.க அங்கத்தவர்களை மட்டுமல்லாது தமது சொந்த சுயாதீன வர்க்க நலன்களுக்காக தமிழ் தொழிலாளர்கள் முன்னெடுக்கும் போராட்டத்தையும் நசுக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது என சோ.ச.க. எச்சரிக்கின்றது. சோ.ச.க. மீதான தாக்குதலானது கொழும்பு அரசாங்கத்துடனான அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையின் கீழ் விடுதலைப் புலிகள் இட்டுநிரப்ப தயாராகிக் கொண்டிருக்கும் பாத்திரம் சம்பந்தமான தெளிவான அறிகுறியாகும். இந்த எச்சரிக்கைகள் சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அழுத்தமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தமானது தமது போராட்டத்தை இனம், மொழி மற்றும் மத வழிமுறைகளுக்கு அப்பால் ஐக்கியப்படுத்துவதற்கான இலங்கைத் தொழிலாளர்களின் --தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்-- அடிப்படை அமைப்பியல் முயற்சிகளை தானாகவே வெளிப்படுத்தியுள்ளது. எல்லாவிதமான இனவாத அரசியலுக்கும் எதிராக, தொழிலாள வர்க்கம் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கான மெய்யான முன்னேற்றகரமான தீர்வை நோக்கித் திரும்புதல் வேண்டும். இது சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்வதையும் அதைக் கட்டியெழுப்புவதையும் தவிர்க்கவியலாதவாறு வலியுறுத்துகின்றது. கொள்கை மாறாது யுத்தத்தை எதிர்க்கும், விடுதலைப் புலிகளின் தனியான தமிழீழத்துக்கான அழைப்பை நிராகரிக்கும் அதே சமயம், வடக்கு கிழக்கில் இருந்து இலங்கை துருப்புக்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் வெளியேற்றக் கோரும் ஒரே ஒரு கட்சி சோசலிச சமத்துவக் கட்சியேயாகும். ஸ்ரீலங்கா, ஈழம் ஐக்கிய சோசலிசக் குடியரசு ஒன்றியத்தை ஸ்தாபிப்பதன் பேரில் இந்தியத் துணைக்கண்டம் மற்றும் அனைத்துலகிலும் உள்ள தொழிலாளர்களுடன் இலங்கைத் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த சோ.ச.க. போராடுகிறது. |